in

கேள்வியின் நாயகனே ..?-11&12

 அத்தியாயம் 11

                            வேலூர் , மெடிகல் காலேஜ் .

         “என்  இதயராகம் நீ; இனிக்கும் தேன் நீ

            கோடைமழை நீ; கோயில் மணியோசை நீ

            பனிமலர்ச்சோலை நீ; பவளமல்லி நீ

            வருடும் தென்றல் நீ; வண்ணநிலவு நீ

            வானவில் நீ; வான்முகில் நீ

            சுட்டும் விழிச்சுடர் நீ; சுடாத சூரியன் நீ

           என்னுயிர் நீ; உன்னுயிர் நான் என்றவனே

            உன் உயிரின் உயிரை அறிவாயோ..?”

    

    கல்லூரியில் முதல் செமஸ்டர் தேர்வுகள் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. தினமும் லைப்ரரியில் சென்று  ஒரு மணி நேரம் செலவழித்து தனக்கு வேண்டிய பாடங்களின் குறிப்புகளை எடுத்து கொண்டு வந்து படிப்பது யாழினியின் பழக்கமாய் இருந்தது. சுதாவும் அவளோடு லைப்ரரிக்கு வந்து விடுவாள். எக்சாம்க்கு இடையில் லீவ் இருந்தது அவர்களுக்கு வசதியாய் போயிற்று. அன்று வழக்கம் போல் லைப்ரரியில்  இருந்தபோது, கொஞ்சம் தள்ளி இன்னொரு மேஜையில் வெங்கட்டும், கோபாலும் இருந்து ஏதோ ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டு இருந்தனர். அது லைப்ரரி என்பதால் போய் பேசுவதற்கு யாழினிக்கு யோசனையாய் இருந்தது. அவர்கள் கிளம்பும் போது போய் பேசிக் கொள்ளலாம்  என்று தொடர்ந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவர்கள் கிளம்பியவுடன் சுதாவிடம் “ஏய், கிளம்பு வா போகலாம்..” என்று கிளப்பிக் கொண்டு, வெங்கட்டை பின் தொடர்ந்தாள். அவனை எப்படி அழைப்பது என்று முதலில் புரியவில்லை.  அண்ணா என்று அழைப்பது அவளுக்கு பிடித்தமில்லை. சரி என்ன நினைத்தாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று தைரியமாய் “மிஸ்டர். வெங்கட்”  என்று அழைத்தாள்.

தன்னை யார் அழைப்பது என்று திரும்பி பார்த்தவன், இவளைப் பார்த்ததும் அதிசயித்தான். பொதுவாக பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் பைனல் இயர் ஸ்டூடண்ட்சை  பெயர் சொல்லி அழைப்பது என்பது , அரிது. சீனியர்ஸ் ஏதாவது சொல்வார்கள் என்று பயந்து கொண்டு யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள்.

ஆனால் இவள் அழைத்ததும் அவள் தைரியத்தை உள்ளூர மெச்சிக் கொண்டான். “என்ன?’ என்பது போல் இவன் நிற்கவும், அருகில் வந்தவள் “சாரி, உங்களை எப்படி கூப்பிடறதுன்னு தெரியலை, அதான்.” என்று இழுத்தாள்.  “இட்ஸ் ஓ.கே. என்ன விஷயம்.?” என்றான்.

“நீங்க இந்த வருஷம் ப்ரீ சர்வீஸ் கேம்ப் எப்போ நடத்துவீங்க…?”

“ஏன்..? அது அநேகமாக இந்த எக்ஸாம்  முடிந்து அடுத்த செமஸ்டர் ஆரம்பத்தில் இருக்கலாம். எதுக்கு கேட்கிறீங்க ?”

“அதுல நாங்களும் கலந்துக்கலாமா.?”

“இது வரைக்கும் பர்ஸ்ட் இயர் அதுல கலந்து கிட்டது இல்ல..! ஏன்னா  அவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ்  ரொம்ப இருக்காது. அதனால தேர்ட் அன்ட் போர்த் இயர் ஸ்டூடன்ட்ஸ் அப்புறம் ஹவுஸ் சர்ஜன் படிக்கிறவங்க, இவங்க எல்லோரும் இரண்டு டாக்டர்ஸ் கீழே, கொஞ்ச பிரிவாக  வொர்க் பண்ணுவோம். இது தான் இப்போ வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு…!” என்றான்.

“இல்ல நாங்க வாலேன்டியர் ஆக வர விரும்பினா..?” யாழினி கேட்டாள்.

“வந்து அங்க என்ன பண்ணுவீங்க ? உங்களுக்கு எந்த மாதிரி அங்க என்ன வொர்க் இருக்கும்..?” என்று கேட்டான்.

“நீங்க இந்த வருஷம் போகிற கிராமம், பீப்பில் ஸ்டிரன்த் எல்லாம் சொல்லுங்க. நாங்க உங்களுக்கு எப்படி உதவலாம்னு நான் யோசிக்கிறேன் …!” என்றாள்.

“ஓ.கே, சொல்றேன். எக்ஸாமுக்கு பிரிபேர் பண்ண லைப்ரரி  வந்தீங்களா …?”

“ஆமாம், எல்லா புக்சும் நான் வாங்கலை. ஒண்ணு இரண்டுதான் வாங்கி இருக்கேன். அதான் நோட்ஸ் எடுத்திட்டு போகலாம்னு வந்தோம். எல்லா புக்சும் வாங்கினா அண்ணாவுக்கு வீண் செலவுதான்.! வெள்ளையாய், தன் நிலையை சொன்னாள். அப்போது தான் அவளை அவன் நன்கு கவனித்தான்.

சாதாரண  சுடிதார், காட்டன் என்றால் கசங்கி அசிங்கமாகி விடும் என்று கவனமாய் , காட்டன் மிக்ஸ் கலந்த ஏதோ ஒரு வகை மெடீரியலில் சுடிதார்  கைகள் காதுகளில் சாதாரண அணிகலன்கள், அது தங்கம் இல்லை என்று அவனுக்கு நன்கு தெரிந்தது. ஆனால் எல்லாவற்றையும், மறைத்தது அவளின் வசீகரம்.

நல்ல   எலுமிச்சை கலரில், கருத்த நீண்ட முடியுடன், பேசும் விழிகளும், நல்ல திருத்தமான புருவமும், ரோஜாவை ஒத்த கலரில் சதைப் பற்றான உதடுகளும், மாசு மருவற்ற முகமும், கூர்மையான மூக்கும், அதில் ஜொலித்த ஒற்றைக் கல் மூக்குத்தியும்  அவளை ஒரு  பணக்காரத் தோற்றத்தில் காட்டியது. எத்தனையோ பணக்கார பெண்கள் வைரத்தாலும், தங்கத்தாலும் அலங்காரம் செய்து கொண்டாலும், அது அவர்களுக்கு களை கொடுக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே எளிய அலங்காரம் கூட ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும் என்பது அவள் வரையில்  உண்மையாய் இருந்தது.

அவளும் தன்னைப் போல படிக்க வைக்க செலவு செய்யும் அளவுக்கு வசதி  இல்லாத குடும்பத்தை சேர்ந்தவள் என்ற ஒரு எண்ணமே, அவளிடம் “உங்களுக்கு வேண்டும் என்றால் என்னுடைய பழைய நோட்ஸ் எல்லாம், தேடி எடுத்து தருகிறேன். இந்த செமஸ்டருக்கு முடியாது. ஆனால் அடுத்த செமஸ்டருக்கு உள்ளது தருகிறேன்..!” என்றான்.

“ஓ.கே தாங்க்யூ..” என்றவள் ஒரு புன்முறுவலுடன் தலை அசைத்து விடை பெற்றாள். அவள் செல்வதையே சற்று நேரம் பார்த்தவனை கோபாலின் அழைப்பு இந்த உலகத்திற்கு இழுத்து வந்தது. “என்னடா பாசமழை ஓவரா இருக்கு…”

“டேய், அதெல்லாம் ஒண்ணும் இல்லை, அந்தப் பெண்ணுக்கும் புக் வாங்க வசதி இல்லை என்றதும், எனக்கு எங்க வீட்டு நிலமைதாண்டா நினைவுக்கு வந்தது. எனக்கும் பீஸ் கட்டி படிக்க வைக்க, எங்க அப்பா இன்னொருத்தர் கிட்ட தாண்டா கையேந்தி நிக்கிறார். அதனாலதான் நான் எல்லா புக்கும் வாங்கணும்னு எங்க அப்பாகிட்ட சொல்றது இல்லை. அது நினைவுக்கு வந்தது. அதான் உதவி செய்யறேன்னு சொன்னேன்…!”  என்றவன் நண்பனுடன் ஹாஸ்டலை நோக்கி நடந்தான்.

அந்த செமஸ்டரில்  பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்சில், காலேஜ் பர்ஸ்ட் என்ற பெயர் எடுத்தது யாழினிதான். அவள் பிரண்ட்ஸ் எல்லோரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவள் அண்ணனிடம் போன் பண்ணி இந்த விஷயத்தை சொன்னாள். அதுக்கு “என் தங்கை பர்ஸ்ட் வரலைன்னா  தான்,  எனக்கு சந்தேகம் வரும். அவதான் பர்ஸ்ட் என்கிறதுல எனக்கு எப்போதும் சந்தேகமே கிடையாதும்மா..” என்று சேகர் தங்கையைப் புகழ்ந்தான்.

“உனக்கு எப்போதுமே உன் தங்கைன்னா உசத்திதான் அண்ணா. அதுக்காக டாக்டர் படிப்பு என்கிறது ஈசி கிடையாது. நல்ல கவனமா படிக்கலைன்னா வேற யாரும் பர்ஸ்ட் வருவதற்கு வாய்ப்பு இருக்குண்ணா …!” என்றாள்  அண்ணனிடம்.

“அந்த வாய்ப்பை நீ யாருக்கும் கொடுக்கவே கூடாதும்மா. நீ டிஸ்டிங்ல பாஸ் பண்ணனும். மெரிட்ல பி.ஜி பண்ணனும். அதுவும் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் படிப்பு படிக்கணும். யாழினி கார்டியாலிஜிஸ்ட், இது என்னோட கனவும்மா…!”  என்றான் சேகர்.

“கண்டிப்பா நிறைவேத்துவேன். நீங்க எனக்கு பக்க பலமா இருக்கும் போது  இந்த யாழினி அண்ணனோட கனவை கண்டிப்பா நிறைவேத்துவா.!” உறுதியளித்தாள்.

அடுத்து வந்த சில நாட்கள் காலேஜ் போவதும், ஹாஸ்டல், லைப்ரரி  என்று கழிந்தது. அப்படி ஒரு நாள் லைப்ரரிக்கு போனதும் அங்கு படித்துக் கொண்டு இருந்த  வெங்கட், அவளிடம் வந்து, லைப்ரரி வேலை முடிந்ததும் வெளியில் தன்னை பார்த்து விட்டு போகுமாறு சொல்லி சென்றான். நோட்ஸ் எடுத்து முடித்ததும், சுதாவிடம் வந்து “சுதா, வெங்கட் வெளியில நிக்கிறார், நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன். அப்புறம் போகலாம்..!” என்று சொல்லி விட்டு வெளியில் வந்து வெங்கட்டை தேடினாள். சற்று தொலைவில் ஒரு மரத்தடியில் கிடந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து ஏதோ ஒரு புக்கை படித்துக் கொண்டிருந்த வெங்கட்டை நோக்கி சென்றாள்.

நல்ல உயரமும், உடைத்த கோதுமை நிறத்தில், நல்ல முகதீர்க்கமும், கண்களும், கட்டான உடலமைப்பும் அவனை ஒரு கம்பீரமான வாலிபனாக காட்டியது. அதை விட அவனுக்குள்  இருந்த கனவும், அதை செயலாற்ற அவன் தேர்ந்தெடுத்த வழிமுறைகளும், மற்றவர்களிடத்தில் அவன் காட்டிய நல்லிணக்கமும், அவனை ஒரு முழுமையான ஆண்மகனாக காட்டியது. அவன் அருகில் சென்றவள், “ம்ம்ஹூம் “ என்று செறுமினாள்.

நிமிர்ந்த வெங்கட் அவளைப் பார்த்ததும் “இந்த நோட்ஸ் கொடுக்கத்தான் உங்களை வரச் சொன்னேன்..! என்று கூறி கத்தை பேப்பர்களை கையில் கொடுத்தான், உடனே தன் வேலை முடிந்தது என்பது போல் கிளம்பிய அவனிடம் ,  “ஒன் மினிட், இது எந்த, எந்த சப்ஜெக்ட் . எனக்கு சொல்லிட்டு போங்க ..” என்று கேட்டாள். ஒரு நிமிடம் அவளை தீர்க்கமாய் பார்த்தவன் “நீங்க ரூமில் போய் பார்த்தாலே புரியுமே. வீணா இங்க உட்கார்ந்து மற்றவங்க பார்வைக்கு ஏன் வம்பாக மாற வேண்டும்..! என்று கேட்டான்.

“ம்ம் சரி” என்று அரை மனதாக,   தலை அசைத்தவள் அவனிடம் மறுபடியும், “நீங்க போடுகிற கேம்பில் நாங்க வந்து, அங்க உள்ள லேடிஸ்க்கு சுத்தம், அவங்களோட மாதந்திர பிரச்சினைகள், கருத்தடை, குழந்தை வளர்ப்பு, மற்றும் கான்சர் இது பத்தி எல்லாம் விழிப்புணர்வு கொடுக்கவா.? இது பத்தி ஒரு லெக்சர் கொடுக்கலாம். அது அவங்களுக்கு புரியிற மாதிரி தமிழில் தயாரித்து நான் கொண்டு வரேன். நீங்க பார்த்துட்டு ஓ.கே  சொல்லுங்க..! என்று கேட்டாள். அவனுக்கும் அது சரியாய் இருக்கவே, “ஓ.கே நீங்க பிரிபேர் பண்ணிட்டு வாங்க…! நான் பார்த்துட்டு, மத்த  மெம்பர்ஸ் கிட்டேயும் கேட்டுட்டு  சொல்றேன்…! என்றான்.

“ஒன் ஸ்மால் ரிக்வெஸ்ட்.” என்று யாழினி நிறுத்தவும், அவன் தன் கண்ணாலேயே என்ன  என்று வினவினான். “நான் உங்களை விட சின்னவதானே, என்னை நீங்க வா, போ , அப்படியே சொல்லுங்க.!” என்றாள் .

சற்று யோசித்தவன், சரி என்பது போல் தலை அசைத்து விட்டு, நடந்தான். அவன் போவதையே சற்று நேரம் பார்த்து இருந்தவள், தன் அருகில் நிழலாடவும் திரும்பினாள். அருகில் சுதா நின்று கொண்டு இருந்தாள். “என்னடி, என்ன விசயமாய் வெங்கட் சாரை நீ மீட் பண்ண வந்தே…?”

“அவர் தன்னோட பழைய நோட்ஸ் எல்லாம் எனக்கு கொடுத்திட்டு போறார்.  அதை வாங்கத்தான் நான் இங்க வந்தேன். அப்புறம் கேம்பில் நாம கலந்துக்கலாமா, என்று கேட்டு இருக்கேன்..”

“உனக்கு எதுக்கடி இந்த வேண்டாத வேலை. வந்தோமா, படிச்சோமா போய் ஒண்ணு பெரிய ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கணும். அல்லது ஒரு கிளினிக் தனியா போட்டு பணம் சம்பாதிக்கணும். இதை விட்டுட்டு படிக்கிற காலத்துலேயே இந்த வேலை எல்லாம் உனக்கு எதுக்கு…?” என்றவளை வினோதமாய் பார்த்தாள் யாழினி.

“நீ சொல்றதுல, எதுவும் தப்பு இல்லை. அது உன்னோட ஆம்பிசன். அதை நான் தப்பு சொல்ல மாட்டேன். ஆனால் என்னோட ஆம்பிசன் வேற. முதல்ல என்னை இப்படி இருன்னு யாரும் கட்டாயப் படுத்தலை. என்னைப் பொறுத்தவரை மனதுக்கு நிறைவான செயலை செய்யணும். எனக்கு பணம் சம்பாதிக்கிறதைப் பத்தி பெரிய கனவு எதுவும் இல்லை. ஆனால் இந்தப் படிப்பு மேல ஒரு கனவு இருக்கு. எனக்கு படிப்பு நல்லா  வருது. அந்தப் படிப்பினால ஏதாவது மத்தவங்களுக்கு செய்ய முடியுமான்னு நான் பார்க்கிறேன். உலகத்துல உள்ள எல்லா படிப்பும் நல்ல படிப்புதான். ஆனால்  டாக்டர் படிப்புக்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு.

ஒரு மனிதனை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றுகிற திறமை டாக்டருக்குத்தான் உண்டு. அந்தப் திறமைக்குத்தான் நம்மை மற்றவங்க தெய்வமாகக் கொண்டாடுறாங்க. அப்படிப் பட்ட படிப்பை படிச்ச நாம, அந்தப் படிப்புக்கு ஏதாவது மரியாதை கொடுக்கணும்னா, அதை மற்றவருக்கு தானமா கொடுக்கணும். ஆனால்  படிப்பை தானமா கொடுக்க முடியாது. அது அவங்களுக்கு வரணும். ஆனால் அதனால் கிடைத்த திறமையை தானமா கொடுக்கலாம் இல்லையா. மாதத்துல ஒரு நாள் நான் வசதி இல்லாதவங்களுக்கு என் திறமையை தானமாக அளிக்க விரும்புகிறேன். இது என்னோட ஆத்ம திருப்திக்காக நான் செய்யப் போகிற ஒரு விஷயம். அவ்வளவுதான்…!” என்றாள்.

“எல்லாம் சரி, இதுக்கு நாளைக்கு உனக்கு வரப் போகிற ஹஸ்பண்ட் ஒத்துக்கணுமே…!” என்று சுதா கேட்டாள்.

“ஓத்துக்கிறது என்ன, அவரும் என்னோட சேர்ந்து இந்த தானத்தை பண்ணனும். அப்படிப்பட்ட ஒருத்தரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்..” என்றாள் தீர்மானமாக. இருவரும் பேசிக்கொண்டே ஹாஸ்டலை நோக்கி நடந்தனர். வாய் சுதவிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், மனம் வெங்கட்டை பற்றி எண்ணிக் கொண்டு இருந்தது.  தன்னுடன் உட்கார்ந்து பேசக் கூட அவன் யோசித்த விதம் அவளுக்கு அவன் மேல் மதிப்பு பெருகியது. மற்ற வாலிபப் பையன்கள் மாதிரி எப்போதும், கேலி கிண்டல் எதுவும் இல்லாமல், விளையாட்டுத்தனம்  இல்லாமல் இப்பவே வாழ்க்கையை மெச்சூர்ட் ஆக பார்க்கும் விதம் அவனிடம் இருப்பதை அவள் அறிந்து கொண்டாள். அதற்கு அவன் குடும்பச் சூழலும் காரணமாய் இருக்கலாம் என்று அனுமானித்தாள்.

ஏனெனில் தன்னுடைய குடும்ப  நிலைமையும் அவள் அறிந்து இருந்ததால் மற்ற பெண்களுக்கும் அவளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.  கஷ்டப்படுகிற  குடும்பத்தை சேர்ந்த எல்லா பிள்ளைகளுக்கும் எல்லா பொறுப்பும் வருவது இல்லை. ஆனால் அதை உணரும் விதமாக வளர்க்கப்படுகிற குழந்தைகள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த ஒற்றுமை இருவருக்கும் இருந்தது.

அதே நேரம் வெங்கட்டும் படுத்துக் கொண்டு யாழினியைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டு இருந்தான். அவன் இது வரை எந்தப் பெண்ணிடமும்  ஒரு நிமிடம் நின்று பேச மாட்டான். பேசக் கூடாது என்றில்லை. அவன் மனதை சில முக்கியமான விசயங்கள் அழுத்திக் கொண்டு இருந்தன. அதன் பொறுப்பு அவனுக்கு இருந்தது. அந்தப் பொறுப்பில் இருந்து தான் விலகி விடாமல் இருக்க வேண்டும் என்பதால் எந்த ஒரு பொழுது போக்கும் தன்னுடைய நிலையை மாற்றி விடக் கூடாது என்று கவனமாய் இருந்தான். நண்பர்களிடத்தில் கூட அவன் தன்னுடய எந்தக் கஷ்டத்தையும் பகிர்ந்து கொண்டது இல்லை.

தன் படிப்பும், அதில் தான் ஜெயிப்பதும்தான் தன் வாழ்க்கையை மாற்றும் மந்திரக்கோல்  என்பதை தெளிவாக அறிந்து வைத்து இருந்தான். தன் படிப்புக்கு இடைஞ்சலாக வரும் எந்த வித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பது அவன் குறிக்கோளாய் இருந்தது. ஆனால் இந்த சில நாட்களாக தன் இயல்பை யாழினியின் பொருட்டு மாற்றிக் கொள்கிறோமோ என்ற கேள்வி அவன் மனதில் எழுந்து விட்டிருந்தது.

ஆனால் இன்னொரு மனது, அவளும் நம்மைப் போல் கஷ்டப்படுகிற  குடும்பத்தை சேர்ந்த இன்னொரு ஜீவன், அந்த வகையில் நான் உதவியது ஒன்றும் தவறு இல்லை, என்று வாதிட்டது. இப்படி இரண்டு விதமான மனநிலையில் தன்னை மறந்து அமர்ந்து இருந்தவனை, பிரபாகர் உலுக்கினான். “என்னடா, என்ன யோசனை, வா டின்னர் டைம் ஆயிட்டுது, சாப்பிட்டுட்டு வந்து படிக்கலாம்…!” என்று இழுத்துக் கொண்டு நடந்தான்.

“டேய், உனக்கு விஷயம் தெரியுமா..? பர்ஸ்ட் இயர்ல அந்த யாழினிப் பொண்ணுதான் காலேஜ் பர்ஸ்ட். நைன்டிபைவ் பெர்சென்ட்டேஜ்…” என்றான்.

“அப்படியா..?” என்று தெரியாதவன் போல் வினவியவனை கோபால் முறைத்தான். ஏனென்றால் கோபாலுக்கு விஷயத்தை சொன்னவனே வெங்கட்தான். இது தெரியாத பிரபாகர் வெங்கட்டிடம் “டேய் நீதான் அந்தப் பொண்ணுகிட்ட பேசுவேல்ல, அப்ப அந்தப் பொண்ணு உங்கிட்ட  விஷயத்தை சொல்லி இருக்கணுமே..” என்று கேட்டான்.

“இல்லை, நான் அவகிட்ட பேசலை…” என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தான். இதைக் கேட்ட கோபால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு  அவனை ‘ஆ’ வென்று பார்க்க, “என்னடா , என்னைப் பார்த்துகிட்டு இருக்கே, சாப்பிடு…” என்று அவனை அதட்டினான்.

‘என்னா நடிப்பு..? அடடா சிவாஜில்லாம் பிச்சை வாங்கணும் போல் இருக்கே.!’ என்று மனதுக்குள்ளே அவனுக்கு வாழ்த்து சொன்னவன், அவனிடம் “இல்லை நீ எந்தப் பொண்ணுகிட்ட பேசி இருக்கே, இது தெரியாம அவன் உன்னை கேட்கிறானே, என்று பார்த்தேண்டா…” என்றான்.

அவன் நையாண்டியை புரிந்து கொண்ட வெங்கட் “இனியும் அப்படித்தான். அப்புறம் இன்னொரு விஷயம், “ப்ரீ கேம்ப்க்கு பெர்மிசன் கிடைச்சிட்டுது. தேர்ட் இயர், போர்த் இயர் ஸ்டூடன்ட்ஸ் கிட்ட சொல்லி நேம்  லிஸ்ட் எடுக்கச் சொல்லு. அது போக செகண்ட் இயர் பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ் கிட்ட வில்லிங்னஸ் கேளுங்க. இந்தப் பொறுப்பை  நீ பார்த்துக்கோ , நான் பிரபாகர் கூட சேர்ந்து மற்ற வேலை என்ன உண்டோ அதை பார்க்கிறேன் …” என்று கூறினான்.

சர்குலர் கிடைத்த இரண்டு நாளிலேய , யாழினி தன் பிரண்ட் சுதாவுடன், வெங்கட்டை தேடி அவன் கிளாசுக்கே  வந்தாள். அப்போதுதான்  லாஸ்ட் பீரியட் முடிந்து லெக்சரர் வெளியே சென்று இருந்தார். அவள் வெளியே நிற்பதை பார்த்த கோபால், வெங்கட்டிடம் மெதுவாக யாரும் அறியாமல் “ டேய், யாழினி “ என்றான்.

திரும்பி பார்க்காமலே அவளை உணர்ந்தவன், கோபாலிடம் “நீயே அவள் கிட்ட பேசி அனுப்பிடு, எனக்கு ப்ரின்சி ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு …” என்று கூறி விட்டு பிரபாகரை இழுத்துக் கொண்டு இன்னொரு வாயில் வழியாக வெளியேறினான். அவளிடம் வந்த கோபால் “என்ன விஷயம் …?” என்று கேட்க  “நான் கேம்ப்ல  ஒரு பேப்பர் பிரசன்ட் பண்ண ரெடி பண்ணிட்டு வந்து இருக்கேன். அது உங்க பிரண்ட் கிட்ட கொடுக்கணும்…” என்றாள். 

“அவன் ப்ரின்சியை பார்க்கப் போயிருக்கான், என்கிட்ட கொடுத்துட்டுப் போங்க, நான் கொடுத்திடறேன்..” என்று வாங்கி வைத்துக் கொண்டான்.   

                    அத்தியாயம் 12

                வேலூர் , மெடிகல் காலேஜ் .

  

     “உன் ஓரவிழிப் பார்வையில் ஓராயிரம் சேதிகள்

          உதட்டோரச் சிரிப்பில்  சிந்திய முத்துக்கள்

          செவ்விதள்களில் துளிர்த்த தேன்துளிகள்

          கூந்தலில் நுகர்ந்த பூவின் வாசனை

          என் மனதின் உறைந்து போன கணங்கள்

          கனவுகளின் ஊர்வலத்தில் என்னுள்ளே,

          நனவுகளில் நீ எங்கே என் சகியே ?”

அலறி (அல்லேறி) கிராமத்தில் மெடிக்கல் காலேஜின் கேம்ப் இரண்டு நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு , சுமார் எண்பது மாணவர்கள் அந்த கிராமத்திற்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு உதவியாக அங்கு வேலை பார்க்கும் இரண்டு லெக்சரர்களும் உடன் வந்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அங்கிருந்த ஸ்கூல் ஒன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  

இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து அங்குள்ள கிராமத்து இளைஞர்களை சேர்த்துக் கொண்டு, அவர்கள் கிராமத்தை சுத்தப் படுத்தினர். ஹவுஸ் சர்ஜன் மாணவர்கள் அவர்களுடைய காலேஜ் புரபசர்களுடன் சேர்ந்து இரண்டு பிரிவாக, பிரிந்து கிராமத்தில் உள்ள  அனைவருக்கும், இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் கட்டாயமாக  மருத்துவமனை வந்தால் தான் நோய் தீரும் என்று உள்ளவர்களுக்கு, லெட்டர் கொடுத்து, அவர்களுடய ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்னனர்.

முதல் வருடத்தில் இருந்து யாழினியும், சுதாவும், இரண்டாம் வருடத்தில்  வேறு இரண்டு பெண்களும்  வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள பெண்களை நேரில் சந்தித்து, சிறு சிறு குழுக்களாக அமர வைத்து, பெண்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர எந்த மாதிரி வழிமுறைகள் உள்ளது என்று விளக்கி சொன்னார்கள். அதில் தங்களின் சந்தேகத்தை கேட்ட பெண்களை நல்ல விதமாக பேசி மருத்துவப் பரிசோதனைக்கு, அனுப்பி வைத்தனர். யாழினிக்கு அங்குள்ள மக்களிடம் பேசிய போது மனது கனத்து போயிற்று. அவர்களுக்கு தங்களை தேக நலனைப் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கூட இல்லை என்பதை அவர்களிடம் பேசிய போது  அறிந்து கொண்டாள்.

ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்களை, அவர்களை உடல் நலனைக் கூட கருதாமல் உழைக்கும் பெண்களுக்கு, உடல்நிலையை பாதுகாக்கக்கூட சொல்லித் தரப்படவில்லை என்பது அவளுக்கு வருத்தமாய் இருந்தது. ஆணின் சுயநலத்தால் இங்கு சீரழிவது பெண்கள்தான் என்று கண்டு கொண்டாள்.

அவள்  பேசியபோது அங்கு இருந்த பெண்களுக்கு நிறைய பேருக்கு கருப்பையில், கட்டி, ஒழுங்கற்ற மாதந்திர தொந்தரவு, மற்றும் செர்விகல் கேன்சரின் அறிகுறி, உள்ள எல்லாப் பெண்களையும் தனித்தனியாய் பேசி அவர்களின் கேம்பில் செக் பண்ண வைத்து, அவர்களை தங்கள் ஹாஸ்பிடல் வந்து ட்ரீட்மென்ட் எடுப்பதற்கு வருமாறு கூறினாள்.

வெங்கட் அவளின் நடவடிக்கைகளை, எல்லா வேலையும் செய்யும் போது பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் தான் அங்கிருந்த அனைவருக்கும் சாப்பாடு முதல், மற்ற தேவையான அனைத்து உதவிகளையும், பெரிய கம்பெனிகளிடம்  ஸ்பான்ஸர்ஷிப் பெற்று செய்து கொண்டு இருந்தான்.

மதிய லஞ்ச் எல்லோருக்கும்  வேலூரில் ஒரு ஹோட்டலில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரிவுகளாக வந்து அனைவரும் வந்து சாப்பிட்டு சென்றனர். அங்கும் சில வாலேன்டியர்ஸ் சிலர், வருபவர்களுக்கு உணவு பரிமாறினர். யாழினியும் அவள் கூட இருந்தவர்களும் சாப்பிட அங்கு வந்தனர். அப்போது அவள் வெங்கட்  அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.

சாப்பாடு தட்டை எடுத்துக் கொண்டே அவனிடம் சென்று, அவனிடம்  “தேங்க்ஸ்..” என்றாள். “எதுக்கு” என்பது போல் பார்த்தவனிடம்,  “நாங்கதானே முதல்ல இந்தக் கேம்ப்ல கலந்துக்கிற பாஸ்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ்,  அதுக்குத்தான்…”

“இதுல நான் ஒண்ணும் பண்ணலை. பொதுவா பாஸ்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ்க்கு இதில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இருக்காது. அதனாலே நாங்க அவங்களை கம்பெல் பண்ணறது இல்லை. ஆனால் நீங்களா வரேன் சொல்றப்ப உங்க உதவியும் எங்களுக்கு தேவை தானே..? அப்படிப் பார்த்தால் நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்..”

“அப்புறம் ஒரு விஷயம், உங்க கிட்ட சொல்லணும்…!”

“என்ன விஷயம்…?”

இங்க உள்ள பெண்கள் பத்திதான். ஆனால் எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஆனால் சொல்லாமலும் இருக்க முடியாது.

“அப்ப சொல்லு…” அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவனை தேடி வேறு சிலர் வந்து விடவே, அவள் நகர்ந்து விட்டாள். அன்று முழுவதும் அவர்கள் அனைவரும் அங்குள்ள கிராமத்து மக்களுக்கு தேவையான உதவிகள் செய்தனர்.  இரவு  டின்னர் முடித்ததும் எல்லோரும் காற்றுக்காக ஸ்கூலில் உள்ள ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். வழக்கம் போல ஒருவன், “ஏய், எல்லோரும் அவங்க அவங்க  திறமையைக் காட்டலாமே…” என்று சொல்ல, எல்லோருக்கும் ஒரே உற்சாகம்.

ஆங்காங்கு இருந்த அனைவரையும், ஒருவன் “ஹாய் பிரண்ட்ஸ் எல்லோரும் இங்க வாங்கப்பா, நாம கொஞ்ச நேரம் இங்க எல்லோரது கச்சேரியையும் ரசிக்கலாம்..” என்று அழைத்தான். அடுத்த பத்து  நிமிடத்தில் அங்கு எல்லோரும் அவரவர்க்கு தெரிந்த விசயத்தை செய்து காட்டினர். அதிலும் ஒருவரை  ஒருவர் வாரிக் கொண்டு ஒரே கலாட்டாவாக இருந்தது. அதிலு சீனியர் மாணவர்கள் இருவர் காமெடி பண்ணுகிறோம் என்று அடித்த லூட்டி பார்த்து, அங்குள்ள அனைவருக்கும் சிரித்து, சிரித்து  வயிறே புண்ணாகி விட்டது. இவை எல்லாவற்றையும், வெங்கட்டும் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

“டேய், எல்லாரும் அவங்க திறமையை காட்டினால்  போதுமா ,நம்ம சேர்மனும் அவங்க திறமையை காட்டட்டும், வாங்க தலைவரே..” என்று வெங்கட்டை இழுத்து விட்டான்.

“யப்பா, நல்லா இருப்பீங்க, என்னை விட்ருங்க, எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம். நான் எல்லாம் ரசிக்கத்தான் லாயக்கு. எனக்கு பாடவும் வரது, ஆடவும் வராது…” வெங்கட் கெஞ்சினான்.  ஒரு மனதாய் அவனை விட்டவர்கள் பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்சை பிடித்துக் கொண்டனர். வந்த ஐந்து பேரில் ஒருத்தி பாடினாள். மற்றவர்கள் கடி ஜோக் சொன்னனர். கடைசியாக யாழினி முறை வந்தது. “யாழினி,  உங்களுக்கு தெரிஞ்சதை பண்ணுங்க…” அவளிடம் கேட்டனர்.

“என்ன செய்வது ,என்று யோசித்தவள், தன் அத்தை தனக்கு அடிக்கடி பாடி தூங்க வைக்கும் பாடலை பாடினாள்.

  பெண்ணாக பிறந்தவளுக்கு கண்ணுறக்கம் இரண்டு முறை

  பிறப்பில் ஒரு தூக்கம், இறப்பில் மறு தூக்கம்.

  இப்போது விட்டு விட்டால், எப்போதும் தூக்கம் இல்லை.

  என்னரிய  கண்மணியே  கண்ணுறங்கு, கண்ணுறங்கு.

  காலமிது, காலமிது  கண்ணுறங்கு மகளே

  காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே

  தூக்கமில்லை மகளே ,

 நாலு வயதான பின்னே, பள்ளி விளையாடல்

 நாள் முழுதும் பாட சொல்லும் தெள்ளு தமிழ் பாடல் …

என்ற நாலு வரிகளை பாடினாள் . அவள் குரல் மிக இனிமையாய் இருந்தது.  தொடர்ந்து பாட சொல்லி எல்லோரும் கேட்டனர். அவள் எனக்கு அந்தப் பாடலின் முழு வரிகளும் தெரியாது. என் அத்தை பாடி இது மட்டும்  கேட்டு இருக்கிறேன், அவ்வளவுதான்…” என்று தப்பித்துக் கொண்டாள். அவள் குரலினிமையை  விட அந்தப் பாடலில் உள்ள வரிகளைப் பாடியபோது அவளின் கண்களில் தெரிந்த வலியை, வெங்கட்  பார்த்துக் கொண்டு இருந்தான்.  அவனுக்கு என்னவோ இது சாதாரண பாடலாகத் தெரியவில்லை. அவளுக்கு மனதை உறுத்திக் கொண்டு  இருந்த ஒரு விசயத்தைதான் இப்படி பாடலாக பாடி இருக்கிறாள் என்று தோன்றியது.  அப்போது தான் அவள் மதியம் ஒரு விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்து  கொண்டான்.

எல்லோரும் கலைந்து சென்றனர். அவரவருக்கு என்று ஒதுக்கிய இடங்களுக்கு  தூங்க சென்றனர். வெங்கட் எழுந்தவன், கோபாலிடம் “நீ போடா, நான் இதோ வருகிறேன்..” என்று சொல்லி விட்டு சற்று தள்ளி சென்று கொண்டு இருந்த யாழினியிடம் வந்தான்.

“யாழினி, ஒரு நிமிடம், இன்னைக்கு நீங்க யார் யாரைப் பார்த்தீங்க, அந்த ரிப்போர்ட் எடுத்துட்டு, செவன்த் கிளாஸ் ரூம் வர முடியுமா,  அந்த ரிப்போர்ட் எனக்கு தேவைப் படுது…” என்றான்.

“கையோடு நோட் பண்ணி வைத்திருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு வெங்கட் சொன்ன கிளாஸ் ரூமுக்கு சென்றாள். அவன் அந்த ரூமுக்கு வெளியிலேயே, செல்போனில் பேசியபடி நின்றான்.

“ம்ம், அவளை நல்ல பார்த்துக்கோங்க அம்மா, இந்த வருஷம் என் படிப்பு முடிஞ்சிடும்.  அடுத்த வருஷம்  எனக்கு கொஞ்சம் ஸ்டைபண்ட் கிடைக்கும். அப்போ ஏதாவது வழி பார்க்கலாம் அம்மா. சரிம்மா, கவலைப் படாமல்  தூங்குங்க.! என்று கூறி விட்டு, நிமிர்ந்தவனின் கண்களில் யாழினி நிற்பது தெரிந்தது. அங்கேயே உள்ள படிகளில்  உட்கார்ந்தவன், சற்று தள்ளி அவளை உட்காருமாறு சைகை செய்தான்.

ஒரு நிமிடம் இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் நிலவியது. அதைக் கலைத்து வெங்கட் அவளிடம் “உங்க பாட்டு நல்லா  இருந்தது. உங்களுக்கு ஸ்வீட் வாய்ஸ்..” என்றான்.

அவள் முகம் மலர்ந்தது. “தேங்க்ஸ்..” என்றவள், “இந்தாங்க நீங்க கேட்ட விபரம்…”  என்று ஒரு பேப்பரை நீட்டினாள்.

அதை வாங்காமல் அவளை உற்றுப் பார்த்தவன் “உனக்கு அந்தப் பாட்டு முழுவதும் தெரியும் தானே…?” என்று கேட்டான். அவள் ஒரு நிமிடம் திகைத்து விழித்து, பின்னர் அவன் கேட்டதற்கு ஆமாம் என்று தலை ஆட்டினாள்.

“பின்ன ஏன் முழுதாகப் பாடலை …?”

“அந்தப் பாடலை புரிந்து கொள்ளும் அளவிற்கு எல்லோருக்கும் பக்குவம் இருக்குமா என்று தோன்றி விட்டது. அதனாலே நிறுத்தி விட்டேன்…”

“அப்போ வேற பாடி இருக்க வேண்டியது தானே…!”

“அவங்க எல்லோரும் கேட்டதும், எனக்கு என்னவோ இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வந்தது. பாடத் தொடங்கிய பின்பு தான், இந்தப் பாட்டோட அருமை எந்த அளவுக்கு புரியும்னு சந்தேகம் வந்தது. அதான், நிறையப் பேருக்கு பெண்கள் என்றாலே இளக்காரம் தான். அதிலும் இந்தப் பாட்டு அவர்கள் பிறந்ததுலே இருந்து சாகிற வரைக்கு உள்ள கஷ்டத்தை சொல்லுது. தேவை இல்லாம ஏன் ஒரு கான்ட்ராவர்சியை கிளப்புவானேன் …” அதான் நிறுத்திட்டேன்.

“சரி இப்ப சொல்லு, மதியம் என்கிட்ட என்னவோ சொல்லணும்னு சொன்னியே..! என்றான்.

“இப்பவா..” என்று தயங்கினாள்.

“ஆமாம், நீதான் இங்குள்ள பெண்களுக்கு பிரச்சினைன்ன..? அதைக் கேட்டால்  இந்த தயங்கு தயங்குற…!” என்றான்.

அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு சற்று யோசித்தாள். ‘சரி சொல்லி விடுவோம்’ என்று தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டு “இங்க நிறைய பேர் லாரி, மற்றும் லான்ங்ல போற ட்ரைவரா வொர்க் பண்ணறாங்க..!”

“ஆமாம், அதுக்கு என்ன..? அப்படித்தான் இங்க வந்தவங்க தங்கள் வேலையை பற்றி கூறி இருக்காங்க.

குறிப்பா அந்த மாதிரி வேலை பார்க்கிறவங்க வொய்ப் எல்லாரையும் நான் நாளைக்கு கண்டிப்பா செக் அப்  வரணும்னு சொல்லி இருக்கேன்.

“சரி, அதுக்கென்ன இப்போ..? வந்தா செக் பண்ணி அனுப்புவாங்க.

“அவங்களை செக் பண்ண, ஒரு கைனகாலஜிஸ்ட் லேடி  டாக்டர் இருந்தா நல்லா  இருக்கும். அவங்க  பிரச்சினைக்கு எல்லாம் காரணம் அவங்க ஹஸ்பண்ட்தான். அவங்களுக்கு நீங்க யாரையாவது விட்டு கொஞ்சம் அட்வைஸ் பண்ணினா நல்லது..”

“வொய்ப் ஹெல்த் பத்தி  அவங்க ஹஸ்பண்டுக்கு  தெரிவிக்கத்தான் வேணும். அதுக்கு எதுக்கு அட்வைஸ். கொஞ்சம் புரியும்படியா சொல்றியா …?” என்று எரிச்சலோடு வினவினான்.

‘இப்படி ஒரு மாக்கானா இருக்கானே’ என்று மனதுக்குள்ளே தாளித்தவள் “ஹலோ, அவங்க எல்லோரும் வேலைக்கு செல்லும்போது, வேலையை மட்டும் பார்க்காமல், பாலியல் தொழில் பண்ணறவங்க கிட்ட போயிட்டு வந்து, இந்தப் பெண்களுக்கு அதனாலே செர்விகல் கான்சர் வந்து இருக்குமோன்னு நான் சந்தேகப் படறேன். அவங்க சொன்ன அறிகுறி எல்லாம் அப்படித்தான் தெரியுது. ஆண்களுக்கு என்ன, வெளியில போனா அவனவனுக்கு வீடுன்னு ஒண்ணு மறந்து போய் ஆட்டம் போட வேண்டியது. அதோட விடறாங்களா, வந்து இந்தப் பெண்களையும் விட்டு வைக்கிறது இல்லை. ச்ச.. என்ன ஜென்மன்களோ. அதான் கவர்ன்மெண்ட்ல கூவி, கூவி விக்கிறான்களே அதை வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே. இதைத் தான் அவனுகளுக்கு அட்வைஸ் பண்ண சொன்னேன், போதுமா..!” என்று பொரிந்தாள்.

ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப் போய் விட்டான் வெங்கட். அவளோட வயதுக்கு இது அதிகம் என்று தோன்றியது. இப்போதுதான் ப்ளஸ்டூ  முடித்து விட்டு வந்து காலேஜில் சேர்ந்து இருக்கிறாள். அதற்குள் இத்தனை விபரங்களா..? கடவுளே, என்று தோன்றியது.  அழுத்தமாய் நின்று இருந்தவளை பார்த்தபோது அவள் மனம் ஏன்  இத்தனை வேதனை அடைந்து இருந்தது என்று புரிந்தது. எல்லாவற்றையும் விட அவளுடைய சமுதாய அக்கறை அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அவள் கோபத்தை தணிப்பதற்காக “ஏய், கூல், கூல் நீ ரொம்ப சின்னப் பொண்ணு.  இதப் பத்தி ரொம்ப யோசிக்காதே. நான் பார்த்துக்கிறேன்…” என்றான்.

“நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்லை . எனக்கும் எல்லாம் தெரியும் …” வீம்புக்காகச் சொன்னவள், அதன் அர்த்தத்தை உணர்ந்து முகம் சிவக்க தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவனுக்கு என்னவோ யாரிடத்திலும் தோன்றாத உணர்வு அவளிடத்தில் தோன்றியது. அது தந்த நினைவில் அவளிடம் “என்ன தெரியும் சொல்லேன்…!”   அவளை கூர்மையாய் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவன் பார்வையிலே அவள் முகம் செவ்வானமாய் சிவந்து போயிற்று.  அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக, “இந்தாங்க அந்த பேப்பர்..” என்று அவனிடம் கொடுத்து விட்டு சிட்டாகப் பறந்து விட்டாள்.

அவள் சென்றதும் உடனே எழுந்து செல்லாமல் அங்கேயே உட்கார்ந்து இருந்தான். அவள் சென்ற பிறகும் அவள் விட்டுச் சென்ற அதிர்வலைகளில் திளைத்து இருந்தான். ‘ரொம்ப சின்ன பொண்ணு..’ என்று நினைவில் ஓடியது. ‘நீ என்ன பெரிய ஆளா’ என்றும் ஒரு நினைப்பு ஓடியது. அவளை விட நாலு வருடம் பெரியவன், அவ்வளவுதானே, என்று நினைத்துக் கொண்டவன் அவள் நினைவு அவள் பக்கம் தன்னை இழுப்பதை புரிந்து கொண்டான். தன்னைப் போலவே சமுதாய அக்கறை கொண்ட ஒருத்தியை சந்தித்த சந்தோசம் அவனுக்கு. அவனைக் காணமல், தேடிக் கொண்டு வந்த கோபால் அவனை படிகளில் பார்த்து விட்டு “என்னடா  இங்க இருக்கே..?” என்றான்.

“இல்லடா, யாழினி வந்து அவ இன்னிக்கு பார்த்தவங்க கேஸ் ஹிஸ்டரி சொல்லிட்டு இருந்தா. உள்ள உட்கார்ந்து பேசினால், தூங்கப் போறவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமேன்னு இங்க உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.” என்றவன்  அவள் சொல்லியதை மறைமுகமாய் சொல்லி விட்டு நாளைக்கு யாரவது லேடி டாக்டர் அரேஞ்ச்  பண்ண முடியுமான்னு,  பார்க்கணும்டா..” என்றான்.

“என்னடா, அது மட்டும்தானா..!” என்று  இழுத்தவனிடம், “டேய், அடங்குடா, ரொம்ப சின்னப் பொண்ணு அவ, அவளைப் போய். சும்மா இருடா. எனக்கு அவளோட சோசியல் அவேர்நெஸ் ரொம்ப பிடிச்சு இருக்கு . அதனாலே கொஞ்சம் பேசினேன். அதுக்காக இப்படி பேசுவியா என்ன..?” என்று கூறி விட்டு எழுந்து சென்றான்.

மறுநாள் அவள் கூறியது போல் ஒரு லேடி டாக்டர் ஏற்பாடு பண்ணி, அவள் கூட்டி வந்த பெண்கள் எல்லோரையும் செக்கப் பண்ண வைத்தான். அதில் நிறைய பேருக்கு இந்தப் பாதிப்புதான் என்று கூறி அவர்களுக்கு முறையான சிகிச்சைக்கு வேலூரில் உள்ள ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லி அந்த டாக்டர் பரிந்துரை செய்தார். யாழினி தன் பங்குக்கு அவர்களுக்கு, நோயைப் பற்றி கூறி அதற்கு சிகிச்சை உண்டு என்று கூறி, அவர்கள் பயத்தை போக்கி கண்டிப்பாக ஹாஸ்பிடலுக்கு காட்ட வரவேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.

பின்னர் வெங்கட்டிடம் வந்து புலம்பி விட்டாள். “பாவம் எல்லாருக்கும் பிள்ளைங்க இருக்குது.  ஆனால் இந்த ஆண்களுக்கு பொண்டாட்டி பிள்ளைங்கள பற்றி அக்கறையே  இல்லை. ஆனால் அந்தப் பெண்கள் ஹாஸ்பிடல் வாங்கன்னா கூட “படிக்கிற பிள்ளைங்க இருக்காங்க, அவங்களைப் பார்க்கணுமே தாயி, அப்படின்கிறாங்க, அவனுங்க எல்லாம் என்ன மனுசனுக..” என்று பொருமித் தள்ளி விட்டாள்.

“ஏய் விடு, முதல்ல டாக்டர் அப்படின்னா நோய், மரணம் எல்லாம் ஜீரணிக்கத் தெரியணும்.  இதுக்கே இப்படி புலம்பினா, நீ எப்படி டாக்டருக்கு படிக்கப் போறே…?”

“டாக்டருக்கு படிக்கணும்னா நீங்க சொல்றது கரெக்ட் தான், அதுக்காக மனுஷத் தன்மை இல்லாம  இருக்கணும்னு அவசியம் இல்லை. முதல்ல டாக்டருக்குத்தான் மனுஷத் தன்மை நிறைய இருக்கணும், இல்லைன்னா அவங்களாலே மக்களுக்கு உண்மையான மருத்துவம் கிடைக்காது…” என்றாள். “மேலும் நான் டாக்டருக்கு படிச்சிட்டு என் வாழ்க்கைக்கு சம்பாதிப்பேன். ஆனால் என் மன திருப்திக்கு மாசத்துல ஒருநாள்  கண்டிப்பா இலவச மருத்துவம் பண்ணுவேன். இது என்னோட லட்சியம்..” என்றவளை பிரமிப்புடன் பார்த்தான். இத்தனை சின்ன வயதில் எத்தனை உயர்ந்த எண்ணம், என்று மனதில் தோன்றியது.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 34

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 35