in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 34

 

வெள்ளிக்கிழமை நேர்காணல் நடந்துக் கொண்டிருந்தது. முதல் இரண்டு நிலைகள் முடிந்திருந்தன.

அப்பொழுது ப்ரதீபனை கைபேசியில் கண்ணன் அழைத்தான். அழைப்பை எடுத்த ப்ரதீபன், “என்ன டா?” என்றான். 

“ஒரு சின்ன பிரச்சனை” 

“நான் இப்போ தான் சென்டர் வந்தேன்.. பைனல் ரவுண்டு ரூமில் தான் இருக்கிறேன்.. இங்கே வா” 

“சரி” என்று அழைப்பைத் துண்டித்தவன் அடுத்த நிமிடம் ப்ரதீபன் இருந்த அறையில் இருந்தான்.

ப்ரதீபன், “என்ன பிரச்சனை?” என்று கேட்டான். 

“திவாகர்னு ஒரு பையன் ரெண்டு ரவுண்டு கிளியர் பண்ணிட்டான்.. டெக்னிகலி ஸ்டராங் தான் ஆனா ஒரு அரியர் இருக்குது.. அதை கவனிக்காம அலோவ் பண்ணியிருக்காங்க.. இப்போ ரிசல்ட் வேற அனௌன்ஸ் பண்ணிட்டாங்க” 

“யாரோட கவனக்குறைவு இது?” 

“விமல்” 

“அவனை கூப்பிடு” 

கண்ணன் அலைபேசியில் விமலை அழைத்தான். சிறு பயத்துடன் உள்ளே வந்த விமல், “குட் அஃப்டர் நூன் சார்” என்றான். 

“உங்களுக்கு குட் அஃப்டர் நூன் போல தெரியலையே!” 

“சார்.. அது வந்து” என்று அவன் தந்தியடிக்க,

ப்ரதீபன் கடுமையான குரலில், “உங்களுக்கு தெரிந்த பையனா?” என்று கேட்டான். 

“அது.. வந்து.. சார்” என்று மீண்டும் தந்தியடித்தவன் ப்ரதீபன் பார்த்த பார்வையில், “சாரி சார்” என்றபடி தலை குனிந்தான்.

கண்ணன் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ப்ரதீபனின் விசாரணையை சிறு பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஸோ உங்களுக்கு தெரிந்த பையன்” 

விமல் வரவழைத்த தைரியத்துடன், “என் பிரெண்டோட தம்பி சார்.. உண்மையிலேயே அவன் ரொம்ப திறமைசாலி சார்.. ப்ராஜெக்ட் கூட அவனே தான் பண்ணான்.. ஆனா மதமெடிக்ஸ் கொஞ்சம் வீக்.. செவன்த் செம் எலேக்டிவ்வா எடுத்த பேப்பர்.. இந்த முறை நிச்சயம் கிளியர் பண்ணிருவான் சார்.. ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்க சார்” என்று கெஞ்சினான். 

“இதை நீங்க எப்போ சொல்லியிருக்கணும்?” 

“சாரி சார்” என்றவன் மீண்டும் தலை குனிந்தான்.

“இன்னொரு முறை இப்படி நடந்தா உங்களுக்கு இங்கே வேலை இல்லை.. இன்னும் அரை மணி நேரத்தில் நீங்க நம்ம ஆபீஸ்ஸில் இருக்கணும்” 

“ஓகே சார்.. திவாகர்” என்று இழுத்தவன் ப்ரதீபனின் பார்வையில் வாயை மூடிக் கொண்டு வெளியேறினான்.

கண்ணன், “என்ன பண்றது?” என்று கேட்டான். 

“ப்ரோசீட் பண்ணு.. டெக்னிகலி ரொம்ப ஸ்டராங்னு உனக்கும் யோகிக்கும் தோணுச்சுனா மட்டும் என் கிட்ட அனுப்புங்க” 

“ஹ்ம்ம்.. சரி டா” என்று கண்ணன் இழுக்கவும், ப்ரதீபன், “என்ன டா?” 

“இல்லை.. ஒருவேளை எங்களுக்கு திருப்பதியா இல்லைனா?” 

“இல்லைனா விட்டுருங்க” 

“அதான்.. இப்போ செகண்ட் ரவுண்டில் இவனை எடுத்ததால் தகுதி இருக்கிற ஒருவர் வேலையை மிஸ் பண்ற மாதிரி தானே?” 

“எப்படியும் இவனை விட டெக்னிகலி கொஞ்சம் வீக் தானே! அப்போ எப்படி அந்த நபர் தகுதியான ஆளா இருக்க முடியும்? என்னை பொறுத்தவரை அரியர் பெரிய விஷயமே இல்லை.. சில பசங்க டெக்னிகலி ஸ்டராங்கா இருப்பாங்க ஆனா மத்த பேப்பரில் சொதப்புவாங்க.. இப்போ இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பா தீவிரமா வேலை செய்வான்” 

“அது சரி தான்.. பைனல் ரிசல்ட் வரலை.. ஒருவேளை அவன் இந்த முறையும் கிளியர் பண்ணலைனா?” 

“சரி ஆல்-கிளியர் பண்ணதில் யாராவது பைனல் செம்-ல அரியர் வைச்சா என்ன செய்ய முடியும்?” 

ஒரு நொடி பதில் சொல்வதறியாது முழித்த கண்ணன், “அப்போ ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் இண்டர்வியூ வச்சிருக்கலாமோ?” என்றான். 

“நமக்கு இப்போ தானே ஆள் தேவைப்படுது!” 

“அதுவும் சரி தான்” 

“ரொம்ப யோசிக்காத! பெரிய கம்பெனியெல்லாம் செவன்த் செம்லேயே இண்டர்வியூ வைக்கிறாங்க.. ஆனா அவங்க ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் வேலைக்கு கூப்பிடுவாங்க நாம இப்பவே கூப்பிடுறோம்.. பரவாயில்லை பார்த்துக்கலாம்.. ப்ரீயா விடு.. ஒருவேளை அவன் கிளியர் பண்ணலைனா ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுப்போம்.. நிச்சயம் கிளியர் பண்ணிடுவான்.. அப்படியும் பண்ணலைனா வேலை நீக்கம் செய்துக்கலாம்.. அவனை வேலைக்கு எடுத்தால் அவனுக்கு ஆஃப்ர் லெட்டர் கொடுக்கும் போது இதையும் சேர்த்து மென்ஷன் பண்ணிறலாம்” 

“ஹ்ம்ம்.. சரி டா” என்றவன், “சுரேஷ் இன்னும் வரலையா?” என்று கேட்டான். 

“சாப்டுட்டு வரேன்னு இப்போ தான் போன் பண்ணி சொன்னார்.. நீயும் யோகியும் சாப்டாச்சு தானே?” 

“சாப்டாச்சு.. நீ?” 

“கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்” 

கண்ணன் முறைக்கவும், “நிச்சயம் சாப்பிடுறேன்டா.. காலையில லேட்டா தான் சாப்பிட்டேன்” என்றான். 

“என்னவோ பண்ணித்தொலை.. சொன்னா கேட்கவா போற!” என்றபடி அவன் கிளம்பவும் ப்ரதீபன், “கண்ணா” என்று அழைத்தான்.

கண்ணன் திரும்பவும், “செகண்ட் ரவுண்டு ரிசல்ட் கொண்டு வா” என்றான். 

கண்ணன் புன்னகையுடன், “அதெல்லாம் உன் ஆள் செலக்ட் ஆகிட்டா” என்றான்.

“அவ என்னோட மாமா பொண்ணு மட்டும் தான்.. அவளுக்கு வேலையே கிடைச்சிடும்னு எனக்கு தெரியும்.. நான் அதுக்காக கேட்கலை..” 

“அவ்வளவு திறமைசாலியா?” 

“அவ திறமையை நீயே தெரிஞ்சுக்கோ.. இப்போ ரிசல்ட் கொண்டு வா.. கூடவே அவங்க ரெஸ்ஸுமும் கொண்டு வா” 

“சரி” என்று கூறி சென்றான். மூன்றாம் நிலைக்கு தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ப்ரதீபனிடம் கொடுத்துவிட்டு நேர்காணல் நடத்துவதற்கான அறைக்கு சென்ற கண்ணன் யோகேஷிடம் திவாகர் பற்றி கூறினான்.

 

சிறிது நேரம் கழித்து யோகேஷும் கண்ணனும் நேர்காணலை தொடங்கினர். 

கண்ணன் வேண்டுமென்றே ப்ரித்திகாவை கடைசியாக அழைத்தான்.

உள்ளே வந்த ப்ரித்திகா புன்னகையுடன், “குட் அஃப்டர் நூன் சார்” என்று பொதுவாக கூறினாலும் ‘சார்’ என்றபோது அவளது பார்வை யோகேஷிடம் இருந்தது.

அவளது எண்ணத்தை புரிந்துக் கொண்ட கண்ணன் அவளை பல கேள்விகள் கேட்டு திணறடிக்க முயல அவளோ அவனது அணைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறினாள். இருபது நிமிடங்கள் நிகழ்ந்த அந்த நேர்காணலின் முடிவில் கண்ணன் ப்ரித்திகா இருவருமே மற்றவரின் திறமையை கண்டு ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தனர்.

சில நொடிகள் மௌனத்தில் கழிய கண்ணன் யோகேஷ் பக்கம் திரும்பி, “நீ கேளு” என்றான்.

யோகேஷ், “அம் ஸடிஸ்பைட் வித் ஹர் அன்சர்ஸ்” என்று முடித்துவிட்டான். 

கண்ணன் முறைப்புடன், “ப்ரதீப் என்ன சொன்னான்னு மறந்துட்டியா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

யோகேஷும் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “நான் கேட்க ஏதாவது கேள்வியை விட்டு வச்சிரிக்கியா?” என்று வினவினான்.

பிறகு ப்ரித்திகா பக்கம் திரும்பியவன் புன்னகையுடன், “யூ மே கோ” என்றான்.

யோகேஷை பார்த்து புன்னகையுடன், “தன்க்யூ சார்” என்றபடி எழுந்தவள் கண்ணனை பார்த்து, “ஒரு டவுட் கேட்கலாமா?” என்று வினவினாள்.

கண்ணன் அலட்சிய பார்வையுடன், “கேளு” என்றான்.

அவள் நேர்பார்வையுடன், “இத்தனை கேள்விகள் எல்லோருக்குமா இல்லை எனக்கு மட்டுமா?” என்று கேட்டாள். 

கண்ணனும் நேர்பார்வையுடன், “இந்த கம்பனியில் நானும் ஒரு எம்.டி என்ற முறையில் உன்னோட கேள்விக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை இருந்தாலும் சொல்றேன்.. உனக்கு மட்டும் தான் இத்தனை கேள்வி கேட்டேன்” என்றான். 

அவள் புன்னகையுடன், “தேங்க்ஸ் எம்.டி சார்” என்று ‘எம்.டி சார்’ என்ற வார்த்தைகளை அழுத்தத்துடன் கூறி வெளியே சென்றாள். 

கண்ணன் ஆச்சரியத்துடன் அவள் செல்வதை பார்த்தான்.

யோகேஷ் சிறு கவலையுடன், “என்ன இருந்தாலும் அவ நம் நண்பனின் மனைவியாக போறவள்.. ஏன்டா வெறுப்பை வளர்த்துக்கிற?” என்றான். 

“வெறுப்பெல்லாம் இல்லை டா.. போக போக சரியாகிடும்..” என்றவன், “ஆனா இவளை புரிஞ்சுக்கவே முடியலைடா” என்றான். 

“அது ப்ரதீப் கவலை.. நீ ராதாவை புரிஞ்சுகிட்டா போதும்” 

“அதுக்கு அவளே ஒரு டிக்சனரி போட்டா தான் உண்டு” என்றவன், “இருந்தாலும் எப்படிடா சட்டுன்னு என்னை எம்.டி சார்னு சொல்லிட்டு போனா?” என்று கேட்டான். 

“அதில் உனக்கு சந்தோஷமா வருத்தமா?” 

“ரெண்டும் இல்லை.. குழப்பம் தான்” 

யோகேஷ் புன்னகையுடன், “அடுத்த முறை அவளை பார்க்கும் போது உன் குழப்பத்தை தெளிவு படுத்திக்கோ” என்றான். 

“பதில் சொல்லுவாங்கற!” 

“அவ என்ன ப்ரதீப்பா!” 

“ப்ரதீப்பை ஆட்டி படைப்பவள்” 

“அதில் உனக்கு வருத்தமா?” 

“நிச்சயம் சந்தோசம் தான்.. அதுக்கு இரண்டு காரணங்கள்.. ஒண்ணு நம்மால் முடியாததை அவ செய்றா.. இன்னொன்னு அவனும் நம்மை மாதிரி சந்தோஷமா குடும்பம் நடத்தினா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” 

புன்னகைத்த யோகேஷ், “பார்க்கலாம்.. சரி வா.. வேலையை முடிப்போம்.. இல்லை நம்மளை வறுத்து எடுத்திருவான்” என்றான். 

இருவரும் ஆலோசித்து எட்டு பேரை தேர்ந்தெடுத்தனர். அதில் ப்ரித்திகாவும் திவாகரும் இருந்தனர்.

 

சிறிது நேரம் கழித்து ப்ரதீபனும் சுரேஷும் நேர்காணலை தொடங்கினர். நான்காவது நபராக ப்ரித்திகா உள்ளே வந்தாள். புன்னகையுடன் இருவருக்கும் “குட் அஃப்டர் நூன் சார்” என்று கூறிய போது ப்ரதீபன் தலையசைப்பை மட்டும் பதிலாக தந்தான்.

சில தொழில்நுட்ப கேள்விகளை கேட்ட சுரேஷ்,  “வெல் மிஸ் ப்ரித்திகா.. இன்னைக்கு வந்திருக்கிறவங்களில் நீங்க மட்டுமே வெளியூரில் இருந்து வந்திருக்கிறீங்க! மத்தவங்க பெங்களுரை சேர்ந்தவங்க.. உங்களுக்கு இந்த இண்டர்வியூ பத்தி எப்படி தெரிய வந்தது?” என்று கேட்டார். 

“எனக்கு தெரிந்தவர் மூலம் இண்டர்வியூ பத்தி தெரிந்தது” 

“பெங்களூரை தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் எதுவும் இருக்குதா?” 

ப்ரதீபனை ஒரு நொடி பாத்தவள், “என் அண்ணன் இங்கே இருக்கிறான்.. அதனால பெங்களூரை தேர்ந்தெடுத்தேன்” என்றாள். 

சுரேஷ் கேள்வியை கேட்க வாய் திறக்கும் முன் ப்ரதீபன், “உங்க அண்ணன் கம்பெனியில் வேலைக்கு முயற்சி செய்யலையா?” என்று கேட்டான். 

“இல்லை” 

“ஏன்?” 

“ஏற்கனவே வளர்ந்த கம்பெனியில் பத்தோட பதினொன்னா ஏதோ வேலை செய்வதை விட வளர்ந்து வரும் கம்பெனியில் என் திறமையை கொண்டு கம்பெனியின் வளர்ச்சியில் பங்கேற்க விரும்புறேன்” 

“இந்த கம்பெனியை விட அது பெட்டர்னு சொல்றீங்களா?

“இனிப்பான பொய்யை விட கசப்பான உண்மை மேல்.. இப்போ வேணா அந்த கம்பெனி பெரிதாக இருக்கலாம் ஆனா வெகு சில காலத்தில் நிச்சயம் நம் கம்பெனி அதை விட பெரிய கம்பெனியா வளர்ந்திடும்” 

அவளது பதில்லை கேட்டு சுரேஷ், “குட்” என்று கூற, ப்ரதீபனோ இதழோரம் அரும்பிய மெல்லிய புன்னகையை மறைத்து அடுத்த கேள்வியை கேட்டான்,

“இவ்வளவு நல்ல மதிப்பெண் வச்சிருக்கிற உங்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கலையா?” 

“XXX கம்பெனியில் கிடைத்தது” என்ற அவளது பதிலில் சுரேஷ் அவளை சிறு ஆச்சரியத்துடன் பார்த்தான்.

ப்ரதீபன், “அப்புறம் ஏன் இங்கே வேலைக்கு வரணும் நினைக்கிறீங்க? அங்கே அழைக்கும் வரை இங்கே வேலை பார்க்கும் எண்ணமா?” என்று கேட்டான். 

ஒரே ஒரு நொடி தாமதித்தவள் நிமிர்வுடன், “இல்லை” என்றாள். 

“ஒரு நொடி தான் என்றாலும் உங்க தாமதம் உங்க பதில் பொய்னு சொல்லுது” 

“நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே?” 

“வேலை கிடைக்க பொய் சொல்லியிருக்கலாம்” 

“அப்படி நினைத்திருந்தால் XXX கம்பெனியில் கிடைத்த வேலையை பத்தி சொல்லியிருக்கவே மாட்டேனே!” 

அவளது பதிலை மனதினுள் பாராட்டியவன் வெளியே தீவிரமான முகபாவத்துடன், “உங்க தாமதத்துக்கான காரணம்?” என்று கேட்டான். 

“இங்கே வேலையும் என்விறான்மென்ட்டும் பிடிக்காம போனால் அங்கே போக எண்ணலாம்” 

“அங்கே மட்டும் உங்களுக்கு பிடித்த வேலையும் என்விறான்மென்ட்டும் இருக்கும்னு உறுதியா சொல்ல முடியுமா?” 

“முடியாது தான்” 

“அப்போ அங்கிருந்து வேற கம்பெனிக்கு போவீங்களா? அப்போ நிலையா ஒரு இடத்தில் வேலையில் இருக்க மாட்டீங்க போல!” 

“எண்ணத்தை சட்டுன்னு மாத்திக்கிறவ நான் இல்லை சார்.. என் முடிவில் உறுதியா இருப்பேன்” என்று அவள் இருபொருள் பட கூறவும்,

சுரேஷ் அறியாமல் அவளை முறைத்தவன், “உங்க பதில்கள் முன்னுக்கு பின் முரணா இருக்குதே!” என்றான். 

“அது.. சாரி சார் தெரியாம சொல்லிட்டேன்.. இங்கே ஒருவேளை வேலையோ என்விறான்மென்ட்டோ எனக்கு ஒத்து வராதது போல் இருந்தால் அதை எனக்கு ஏத்தபடியோ இல்லை அதற்கேற்றபடி என்னையோ மாத்திக்கிறேன்” 

“அப்போ உங்க எண்ணத்தை மாத்திப்பீங்க?” என்று இப்பொழுது அவன் இருபொருள் பட கேள்வியை எழுப்பினான்.

அவள் மெல்லிய புன்னகையுடன், “அப்படி இல்லை.. என் எண்ணத்தை உறுதியா கடைபிடிக்கிறதுக்கு தேவையானதை செய்வேன்.. அதாவது இங்கே வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்.. ஸோ அதுக்கு தகுந்தார் போல வேலையையோ சுற்றுபுறத்தையோ எனக்கு ஏற்றார் போல் மாத்திக்குவேன் இல்லை அதற்கேற்றார் போல் என்னை சிறிது மாத்திப்பேன்” 

“ஸோ.. இங்கே தொடர்ந்து வேலை செய்வீங்க?” 

அவள் புன்னகையுடன், “நிச்சயமாக” என்றாள். 

“சரி.. வெளியே கொஞ்சம் வேய்ட் பண்ணுங்க”

“தன்க்யூ சார்” என்றுபடி எழுந்தவள் வெளியே சென்றாள்.

 

“என்ன நினைக்கிறீங்க சுரேஷ்?” 

“ஹ்ம்ம்.. ஸ்மார்ட் அண்ட் ஸ்ட்ரெய்ட் பார்வட்.. செலக்ட் பண்ணலாம்.. நீங்க என்ன நினைக்கிறீங்க?” 

“எல்லா நேரத்திலும் இந்த ஸ்ட்ரெய்ட் பார்வட் குணம் சரிப்படாது.. இங்கேயே நிலையா வேலையில் இருப்பாங்கனு சொல்ல முடியாது” 

“யாரை தான் சார் தொடர்ந்து இங்கேயே இருப்பாங்கனு உறுதியா சொல்ல முடியும்! ஷி ஸ் டெக்னிகலி ஸ்டராங்” 

“ஹ்ம்ம்..” என்று இரண்டு நொடிகள் யோசிப்பது போல் அவன் பாவனை செய்யவும் சுரேஷ், “பாண்ட் போட போறோம் அப்புறம் என்ன சார்?” என்றார். 

“சரி.. செலக்ட் பண்ணிடலாம்” என்று அரை மனதுடன் சொல்வது போல் கூறினான்.

அடுத்து திவாகர் உள்ளே வந்தான். அவனை சில தொழில்நுட்ப கேள்விகளை கேட்ட பிறகு கண்ணனிடம் கூறியது போல் சில நிபந்தனைகளுடன் தேர்வு செய்தான். 

இறுதியாக தேர்வு செய்தவர்களில் மூன்று பசங்களும் இரண்டு பொண்ணுங்களும் இருந்தனர். திங்கட்கிழமையில் இருந்து வேலைக்கு வர சொன்னான்.

 

அனைவரும் கிளம்பிய பின் நண்பர்கள் மூவர் மட்டும் இருந்த போது கண்ணன், “நீ சொன்ன மாதிரி உன் ஆள் திறமைசாலி தான்” என்றான். 

“அவ என் மாமா பொண்ணு மட்டும் தான்” 

“அவ அப்படி சொல்லலையே!” 

“கடைசி வரை அவ மட்டுமே சொல்லிட்டு இருக்க வேண்டியது தான்” 

“அப்போ உன்னை அவளோட ஆள்னு சொல்லவா?” 

ப்ரதீபன் முறைக்கவும், “உண்மையை சொல்லு.. நான் சொன்னதை கேட்டு உள்ளுக்குள் ஜிவ்வுன்னு இல்லை?” என்றான். 

“ஒரு மண்ணும் இல்லை.. எரிச்சலை கிளப்பாம நீ வீட்டுக்கு கிளம்பு” 

“ஒரு மண்ணும் இல்லைனா அவளுக்காக ஏன் இந்த இண்டர்வியூ? அவளை ஏன் வேலைக்கு எடுத்த?” 

“அது என் அப்பாக்காக செய்தது” 

“அப்படி சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்க பார்க்கிற” 

“என்னடா இன்னைக்கு ரொம்ப பேசுற?” 

“உன் ஆளை இண்டர்வியூ பண்ணதில் அவளோட தைரியம் கொஞ்சம் என் கிட்ட வந்து ஒட்டிகிச்சு போல!” 

“உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறன்.. வாயை மூடிட்டு ஓடிடு” 

“உன் ஆளை பற்றிய சிந்தனையில் தனிமையில் இனிமை காண போறீங்களோ?”

ப்ரதீபன் வேகமாக எழுவும், அவசரமாக எழுந்து கதவருகே சென்ற கண்ணன், “டேய்.. பேச்சு பேச்சா இருக்கணும்” என்றான். 

“அது உன் பேச்சை பொருத்து” 

“சரி சரி நான் கிளம்புறேன்” என்றபடி அவன் அவசரமாக ஓடினான்.

யோகேஷ் பக்கம் திரும்பியவன், “அடுத்து நீ என்ன சொல்லப் போற?” என்றான். 

“ஆல் தி பெஸ்ட்.. இது ப்ரித்திகாவை சமாளிக்க சொல்லலை.. ஏதோ ஒரு தடையை உனக்கு நீயே போட்டிருக்க.. உன் மனதுடன் போராடி நல்லவிதமா வெற்றி பெற தான் இந்த ஆல் தி பெஸ்ட்” என்று மெல்லிய புன்னகையுடன் கூறியவன் அவனது தோளை தட்டிவிட்டு கிளம்பினான்.

யோகேஷ் சொன்னது போல் ப்ரதீபன் தன் மனதுடன் போராடத் தொடங்கினான். ஒரு மனம் ப்ரித்திகாவின் காதலை மறுக்க சொல்ல, காதல் கொண்ட மனமோ அவளுடன் காதலுடன் இனிதாக வாழ்ந்தால் தான் என்ன என்று வாதிட்டது.

இறுதியாக அவளது காதலை நிராகரிக்கும் முடிவை எடுத்தவன் வீட்டிற்கு கிளம்பினான். அவன் வீட்டிலோ அவனது முடிவை தகர்க்கும் முடிவுடன் ப்ரித்திகா காத்திருந்தாள். 

தேடல் தொடரும்…

அடுத்த பதிவு மதியம் 2.30 மணிக்கு.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 33

கேள்வியின் நாயகனே ..?-11&12