in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 32

 

மல்லிகாவின் செயலை பற்றி ஈஸ்வரன் மூலம் அறிந்த போது நமசிவாயம், ‘சாக்கடையில கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் தெளிக்கும்.. விடுங்க.. திரும்ப இதை மாதிரி செஞ்சா பார்த்துக்கலாம்’ என்று கூறிவிட்டார்.

மல்லிகாவும் அதன் பிறகு பெரிதாக எதுவும் செய்யாததால் பிரச்சனையின்றி போனது. இந்த சம்பவத்தினால் நமசிவாயம் மற்றும் யமுனாவிற்கு ராகவன் குடும்பத்தினர் மீது மரியாதை கூடியது. இது தான் தீமையில் நன்மை என்பதோ!!!

ப்ரித்திகா ஒரு யோசனையுடன் ஈஸ்வரனிடம் போய் நின்றாள். அவரும் மேகலாவும் அரை மனதுடன் சரி என்று சொன்னதும் நமசிவாயம் மற்றும் யமுனாவிடம் சென்றாள். அவர்களும் இவளுக்கு சம்மதம் சொன்னதும், தேர்வுகள் முடிந்ததும் தனது திட்டத்தை செயல் படுத்தும் எண்ணத்துடன் காத்திருக்கிறாள். ஆனால் அவளது திட்டத்தில் ப்ரதீபன் சிக்குவானா இல்லை இவளை திணறடிப்பானா!!! பொறுத்திருந்து பார்ப்போம்..

இதற்கிடையில் ஸ்ரீராம் சஹானாவை பார்க்க நமசிவாயம் வீட்டிற்கு சென்றான். அவனது வரவை பற்றி அறிந்த சஹானா படபடக்கும் இதயத்துடனும் ஒருவித எதிர்பார்ப்புடனும் காத்திருந்தாள்.

ஸ்ரீராம் வருவதற்கு அரைமணி நேரம் முன்னதாக ப்ரித்திகா நமசிவாயம் வீட்டிற்கு சென்றாள். வெளி அறையில் அமர்ந்திருந்த நமசிவாயம், “என்ன மருமகளே என் மகன் என்ன சொல்றான்?” என்றதும் ஒரு நொடி பேச்சிழந்தாள்.

அவர் மென்னகையுடன், “என்ன?” என்றதும் அவளுக்கு தான் காண்பது கனவோ என்று தோன்றிவிட்டது. அவள் தன் கையை கிள்ளிக் கொள்ளவும் அவர், “என்ன கனவில்லைன்னு தெரிஞ்சிருச்சா?” என்றார். 

“ஹா! என்ன கேட்டீங்க மாமா?” என்று கேட்டவள் ஒருவாறு சுதாரித்து, “உங்க மகன் என் கூட பேசுறதில்லை.. அவன் உங்க மகனாவே இருக்க நினைக்கிறான்” என்றாள். 

“அதை முறியடிக்க தான் ஒரு திட்டம் போட்டு வச்சிருக்கியே!” 

“அது எந்தளவுக்கு சரி வரும்னு தெரியலை” 

“பேசுறது ப்ரித்திகாவா!” 

“என்ன பண்றது! நான் போராடுறது உங்க மகனுடனாயிற்றே!” என்றவள் அவர் பதில் கூறும் முன் உள்ளே ஓடிவிட்டாள்.

 

சஹானா அறைக்கு சென்றவள் அவளது மோன நிலையை கண்டு புன்னகையுடன் யமுனாவை பார்க்க சென்றாள்.

சமையலறையில் யமுனா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கவும் ப்ரித்திகா, “ரிலாக்ஸ் யம்மு டார்லிங்” என்றதும் புன்னகையுடன் திரும்பிய யமுனா, “வா டா.. இப்போ தான் வரியா? வந்த சத்தமே கேட்கலையே!” என்றார். 

“வாசல்ல ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் இருப்பதால கேட்டிருக்காது” என்று கூறி இவள் கண் சிமிட்டவும்,

அவர் புன்னகையுடன், “அம்மா வரலையா?” என்று கேட்டார். 

“அதான் சொன்னாங்களே! அண்ணா சஹுவை பார்க்க வரான்.. எதுக்கு கூட்டம் சேர்த்துகிட்டு.. ஜஸ்ட் ரிலாக்ஸ் டார்லிங்” என்றவள், “ஆமா இன்னைக்கு உங்க டார்லிங்கு என்னாச்சு?” என்று வினவினாள். 

“ஏன்?” 

“ஒரே புன்னகை தேசமா இருக்காங்க.. என்னை மருமகளேனு வரவேற்கிறாங்க” 

“நீ அவங்க மருமக தானே!” 

“அது சரி தான்.. இருந்தாலும்.. நேற்று இல்லாத மாற்றம் என்னது!” என்று அவள் பாடவும்,

யமுனா சிரிப்புடன், “எப்பொழுதும் போல தான் இருக்காங்க” என்றார். 

“அப்போ எங்களுக்கு எல்லாம் அக்னி மன்னனா இருக்கும் மாமா உங்களுக்கு மட்டும் எப்போதுமே புன்னகை மன்னனா!” என்று கேட்டு கண் சிமிட்டவும்,

யமுனா, “வாலு” என்று புன்னகையுடன் கூறியபோது அவரது புன்னகையில் சிறிது வெட்கம் கலந்திருந்தது.

ப்ரித்திகா, “இந்த புன்னகை என்ன விலை? மாமாவின் இதயம் தான் அந்த விலை” என்று தன் இஷ்டத்திற்கு பாடவும், அவரது வெட்கம் மேலும் கூடியது.

தன்னை கட்டுபடுத்திக் கொண்டு, “போதும்.. போதும்.. மாப்பிள்ளை வந்திரப் போறாங்க.. இந்த மிளகாயை நறுக்கி கொடு” என்று பேச்சை மாற்றினார்.

இருந்தாலும் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி பஜ்ஜி மிளகாயை எடுத்தவள், “அண்ணாக்கு இது ரொம்ப பிடிக்கும்” என்றாள். 

“நீ ஒரு தடவ சொல்லியிருக்க” 

“ஓ” 

“உன் எக்ஸாம் நாளைக்கு தானே முடியுது” 

“எஸ்” என்றவள் கண்கள் மின்ன, “நாளைக்கு மதியத்தில் இருந்து என் மைன்ட் ஸ்டடீஸ் என்ற ஃப்ளைட் மோடில் இருந்து லவ் மோடிற்கு மாறிடும்” என்றாள். 

“ஹ்ம்ம்.. பார்த்து நடந்துக்கோ டா.. மேகலா நான் சொன்னதும் தான் முழு மனதுடன் சரி சொல்லியிருக்கா” 

“ஹ்ம்ம்.. டோன்ட் வொர்ரி.. சரி நான் போய் சஹுவை பார்க்கிறேன்” 

“அவளை பார்க்காமலா இங்க வந்த?” 

“பார்த்தேன் ஆனா அவ என்னை பார்க்கலை.. மேடம் இந்த உலகத்திலேயே இல்லை” என்றவள் சஹானா அறைக்கு சென்றாள்.

 

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே” என்ற ப்ரித்திகாவின் பாடலை கேட்டு சுயுணர்வை பெற்ற சஹானா வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

“என்ன மேடம் செம டென்ஷன்ல இருப்பனு நினைச்சேன்” 

“எதுக்கு டென்ஷன்?” 

“ஹ்ம்ம்.. நீ தேறிட்ட!” என்று ப்ரித்திகா சொல்லி முடிக்கும் முன் சஹானா, “ஆனாலும் கொஞ்சம் டென்ஷனா தான் இருக்குது” என்றாள்.

“அதானே பார்த்தேன்” 

“இந்த டிரெஸ் நல்லா இருக்கா?” 

“ட்ரெஸ்ஸும் அழகா இருக்குது நீயும் அழகா இருக்குற” 

“உன் அண்ணாக்கு எந்த கலர் ரொம்ப பிடிக்கும்?” 

“அதை அவனிடம் கேள்” 

சஹானா செல்லமாக முறைக்கவும், ப்ரித்திகா, “இப்போதைக்கு நீ எந்த கலரில் டிரெஸ் போட்டாலும் அவனுக்கு பிடிக்கும்” என்றாள். 

“அது என்ன இப்போதைக்கு?” 

“அது அப்படி தான்” 

“என்னடி சொல்ற!” 

“அது.. வந்து சஹு பேபி..” 

“பேபி சொல்லாத” 

“ஹா.. ஹா.. ஹா.. அப்போ கேட்டுக்கோ விளக்கத்தை.. இப்போதைக்கு நீ எந்த கலரில் டிரெஸ் போட்டாலும் பிடிக்கும்.. கல்யாணத்துக்கு அப்புறம் நீ டிரெஸ் போடாம இருந்தால் ரொம்ப பிடிக்கும்” என்று கூறி கண்சிமிட்டவும்,

சஹானா, “சீ.. இப்படி பேசாதேனு சொன்னா கேட்கிறியா!” என்றாள். 

“அய்யோடா! நீ பேபி தான் சஹு பேபி.. ஆனா இப்போ சீ சொல்றவ இதுல Phd வாங்கினதுக்கு அப்புறம் எப்படி பேசுறேன்னு பார்க்கிறேன்” 

“பேசுறதை கேட்க தான் முடியும்” 

“பேச்சை மாத்துறீங்களாக்கும்! இருந்தாலும் உன் மொக்கை தாங்கலை” 

அப்பொழுது ஸ்ரீராம் வரவும், சஹானாவை ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பிறகு ஸ்ரீராமிற்கு சஹானா காபி மற்றும் சிற்றூண்டியை கொடுத்தாள். அதை புன்னகையுடன் பெற்றுக் கொண்டவன் அதை உண்டபடியே ப்ரித்திகாவை பார்த்து ஏதோ செய்கை செய்தான்.

அதை புரிந்துக் கொண்ட நமசிவாயம், “சாப்டுட்டு நீங்களும் சஹானாவும் வேணும்னா மொட்டை மாடிக்கு போய் பேசுங்களேன்” என்றார். 

“இல்லை பரவாயில்லை” என்று அவன் சிறிது அசடு வழிய,

ப்ரித்திகா அவனை செல்லமாக முறைக்க, நமசிவாயம், “பரவாயில்லை மாப்பிள்ளை” என்றதும் அவன் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினான்.

அவன் உண்ட பிறகு நமசிவாயம், “சஹானா மாப்பிள்ளையை மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போ” என்றதும் அவள் கண்களால் அவனை அழைத்துவிட்டு முன்னே சென்றாள்.

சஹானா பின்னால் சென்றவனது காதில், “ப்ரீ ஷோ காட்டிறாத” என்று ப்ரித்திகா முணுமுணுக்கவும், அவன் சிரித்துவிட்டு சென்றான்.

படிக்கட்டில் ஏறும் முன் அவன், “ஒரு நிமிஷம்” என்று சஹானாவிடம் கூறிவிட்டு வெளியே சென்று காரில் இருந்து ஒரு சிப்பத்தை(Parcel) எடுத்து வந்தான். பிறகு, “இப்போ போகலாம்” என்றான்.

மொட்டை மாடியில் மரத்தின் நிழலின் இருந்த மூன்று பேர் அமரக்கூடிய சிமின்ட் இருக்கையை காட்டி, “இங்கே உட்காரலாமா?” என்று கேட்டான்.

அவள், “ம்” என்றபடி அமர்ந்ததும், சிறு இடைவெளி விட்டு அவன் அமர்ந்தான். முதல் முறையாக அவன் அருகில் அமர்வது அவளுள் எதுவோ செய்தது. அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவளது மௌனத்தை ரசித்தபடி அவன் அந்த சிப்பத்தை நீட்டி, “சின்ன கிப்ட்” என்றான்.

மென்குரலில், “தேங்க்ஸ்” என்றபடி வாங்கியவளின் பார்வை அவன் பார்வையை சந்திக்கவில்லை.

“பிரிச்சு பாரு” 

“நான் அப்புறம் பார்க்கிறேன்” 

“அதை முகத்தை பார்த்து கூட சொல்லலாம்” என்றதும், அவள் அவன் முகத்தை பார்த்தாள் ஆனால் அடுத்த நொடியே அவள் பார்வையை தாழ்த்தவும், அவன், “என் முகம் பார்க்கும்படியா இல்லையா?” என்று கேட்டான். 

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நித்தியை சொன்னீங்க! நீங்க நிறைய கதை புக் படிப்பீங்களா?” என்றாள். 

அவன் கண்கள் மின்ன, “ஏன்?” என்று வினவ, 

“அதில் தான் ஹீரோயினை முகம் பார்க்க வைக்க ஹீரோ இப்படி பேசுவான்” என்றாள். 

“ஓ! அது எனக்கு தெரியாது ஆனா நான் அப்படி சொன்னதுக்கு காரணம் நீ சொன்னது தான்” 

“ஓ” 

“இப்போ இதை வாங்கிப்பனு நினைக்கிறேன்” என்றபடி முன்பு அவளுக்கு வாங்கிய கைகடிகாரத்தை கொடுத்தான்.

அவள் சிறு தயக்கத்துடன் வாங்கவும் அவன், “இது உனக்காக வாங்கியது தான்” என்றான். 

அவள் சிறு யோசனையுடன், “இது அன்னைக்கு கொடுத்தது தானே?” என்று கேட்டாள். 

“அதே தான்” 

“ஆனா நீங்க நித்திக்காக வாங்கியதா தானே சொன்னீங்க!” 

“ஆமா ஆனா உனக்காக வாங்கியது தான்” 

அவள் ஆச்சரியத்துடன் பார்க்கவும், அவன் புன்னகையுடன், “நான் முதல் முதல்ல உன்னை எப்போ பார்த்தேன்னு நினைக்கிற?” என்றான். 

“உங்க வீட்டில்” 

“ஹ்ம்ம்.. நம்ம வீட்டில் தான் பார்த்தேன் ஆனா எப்போ தெரியுமா?” 

அவன் ‘நம்ம வீட்டில்’ என்று திருத்தியதில் அவளுள் ஒரு உரிமை கலந்த பிணைப்பு வந்தது. மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

அவள் சிறு யோசனையும் ஆர்வமுமாக, “எப்போ?” என்று கேட்டாள். 

“நம்ம வீட்டு தோட்டத்துல குயிலோட நீ பேசிட்டு இருந்தப்ப தான் முதல்ல பார்த்தேன்.. அதை பார்க்க கவிதை மாதிரி இருந்தது.. ஸ்ரீ உன் மேல தண்ணியை கொட்டியதும் நீ கோபப்படுவனு நினைச்சேன்.. ஆனா நீ கோபத்தை கூட மென்மையா வெளிபடுத்திய அந்த நொடியில் காதல் விதை என் இதயத்தில் புதைக்கப்பட்டது(அவள் கண்கள் ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியில் விரிந்தது.. அவன் அதை ரசித்தபடி விரிந்த புன்னகையுடன் தொடர்ந்தான்)

அது இப்போ செடியா வளர்ந்திருக்குது.. நம்ம கல்யாணத்துக்குள்ள மரமா வளர்ந்துரும்..” என்றவன் ஒரு சிகப்பு ரோஜாவையும் ‘மில்கி பார்’ சாக்லேட்டையும் கொடுத்து, “சனா பேபி ஐ லவ் யூ” என்றான்.

அவள் மகிழ்ச்சியில் பேச்சிழந்தாள். அவன் தன்னுள் காதல் மலர்ந்ததை விவரித்து கூறிய விதத்தில் அவளையும் அறியாமல் அவளுள் காதல் விதைக்கப்பட்டது.

அவன் கொடுத்ததை வாங்கியவள், “தேங்க்ஸ்” என்றாள்.

“நான் சொன்னதுக்கு ஒண்ணும் சொல்லலை!” 

“எனக்கு.. உங்களுக்கு என்னை இவ்வளவு பிடிக்கும்-ங்கிறது எனக்கு இன்ப அதிர்ச்சியா இருக்குது.. எப்படி சொல்றதுன்னு தெரியலை.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது.. தேங்க்ஸ்”

“காதலை சொன்னா தேங்க்ஸ் சொல்லும் முதல் ஆள் நீயா தான் இருப்ப” 

அவள் செல்லமாக முறைக்கவும், அவன் சிரிப்புடன், “உண்மையை தானே சொல்றேன்” என்றான். 

“நீங்க சொன்னதும் உடனே சும்மா நீங்க சொன்னதை திருப்பி சொல்ல முடியாது.. அதை உணர்வுபூர்வமா சொல்லணும்..” 

“ஹ்ம்ம்.. எப்போ சொல்லுவ?” 

“நீங்க சொன்ன மாதிரி எனக்குள்ள அந்த விதை செடியாகி மரமாகட்டும்” 

“அப்போ விதையை விதைச்சிட்டேன்?” என்று கேட்டு கண்சிமிட்டவும் அவள் பேச்சிழந்து தன்னையும் அறியாமல் ஆம் என்பது போல் தலையை ஆட்ட, மெலிதாக விசிலடித்தான்.

அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள். சில நொடிகள் அவளது வெட்கத்தை ரசித்தவன், “நான் சனானு கூப்பிட்டது பிடிச்சிருக்கா?” என்று கேட்டான். 

“ஹ்ம்ம்” 

“என்னை பார்த்து பதில் சொல்லு” 

மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் மெல்லிய குரலில், “பிடிச்சிருக்குது” என்றாள். 

“என்னையா? நான் கூப்பிட்டதா?” 

அவள் புன்னகையுடன், “ரெண்டும் தான்” என்றாள். 

“தேங்க்ஸ்” என்றவன் “சாக்லேட் சாப்பிடலையா?” என்று கேட்டான். 

“ஹ்ம்ம்.. எனக்கு இந்த சாக்லேட் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” 

“பேபிக்கு பால் தானே பிடிக்கும்” என்றவனது கண்கள் அவளை வம்பிழுக்கும் குறும்புடன் சிரித்தது. 

அவள் செல்ல முறைப்புடன், “ப்ரித்தி எதுவும் சொன்னாளா?” என்று கேட்டாள். 

“ஹ்ம்ம்.. சில விஷயங்களில் நீ பேபினு சொன்னா” 

“நான் ஒண்ணும் பேபி இல்லை” 

“அப்போ நான் இப்போ உன்னை கிஸ் பண்ணா ஒண்ணும் சொல்ல மாட்ட!” என்று அவன் குறும்புடன் கூறவும், அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

அவன் சிரிப்புடன், “சும்மா தான் சொன்னேன்.. பயப்படாம சாக்லேட் சாப்பிடு” என்றான். 

அவள் உதட்டை சுழித்துவிட்டு சாக்லேட் உரையை பிரித்து பாதி சாக்லெட்டை அவனிடம் கொடுத்து மீதியை உண்டாள்.

அவன், “கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி கொடுத்தா ஏற்றுக் கொள்ளப்படாது” என்றான். 

“என்ன?” 

“இப்படி கையால் சாக்லெட் தந்தா வாங்க மாட்டேன்னு சொல்றேன்” 

“பின்ன எப்படி தரதாம்?” 

“நீ தான் பேபி இல்லையே அப்போ நீயே கண்டுபிடி” 

சில நொடிகள் யோசித்தவளின் கன்னத்தில் தாமரை மொட்டு மலரவும் அவன்  புன்னகையுடன், “புரிஞ்சிருச்சு போல!” என்றான்.

அந்த சிரிப்பில் அவளது இதயம் முழுவதுமாக அவனிடம் சரணடைவதை உணர்ந்தாள்.

அவள் மெல்லிய குரலில், “நீங்க ரொம்ப அமைதின்னு நினைச்சேன்” என்றாள். 

“நான் அமைதி தான் ஆனா சாமியார் இல்லை” 

“மயக்கும் கண்ணனை மாதிரி காதல் மன்னனோ?” 

“மாயக் கண்ணன் தான் காதல் மன்னனாக இருக்கனுமா! தன் இதயத்தில் உதித்த மொத்த காதலையும் சீதையிடம் மட்டும் கொட்டிய ராமர் கூட காதல் மன்னன் தான்..” 

அவள் புன்னகை ததும்பிய அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கவும் அவன், “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.

“ஒன்றுமில்லை” 

“இல்லையே! உன்னோட கண் வேற எதுவோ சொல்லுதே!” 

“என்ன சொல்லுது?” 

“அதை நீ தான் சொல்லணும்” 

“குணத்தில் நீங்க ராமரா இருந்தாலும் உங்க சிரிப்பு மயக்கும் மாயக் கண்ணனை மாதிரி இருக்குதுன்னு நினைச்சேன்” 

“இந்த ராமின் சிரிப்பில் இந்த மங்கை மயகிட்டாளா?” 

அவள் புன்னகைக்கவும், அவன், “என்ன?” என்றான். 

“அது உங்களுக்கு இன்னுமா தெரியலை?” 

“பார்டா!” 

“எதை பார்க்க?” 

அவன் புன்னகையுடன் பரிசை சுட்டி காட்டி, “இதை பாரு” என்றான். 

“அப்புறம் பார்க்கிறேனே!” 

“உன்னோட ரியாக்சனை நான் பார்க்கணும்” 

“சரி” என்றபடி பிரித்தவளின் விழிகள் ஆச்சரியம் மற்றும் சந்தோஷத்தில் விரிந்தது.

அது ஒரு பாண்டா கரடி. சிரிப்புடன், “ரொம்ப அழகா இருக்கு” என்றவள், “இதோட கை ஏன் நீளமா இருக்குது?” என்று கேட்டாள். 

“அக்சுவளி இது ஜோடி பாண்டா.. ரெண்டும் ஹக் பண்ணிட்டு இருக்கும்..” 

“ஏன் பிரிச்சிட்டீங்க?” என்று அவள் சிறிது சோகத்துடன் கேட்கவும்,

அவன், “என்கிட்ட இருக்கும் பாண்டா பேரு சனா.. இந்த பாண்டா பேரு ஸ்ரீராம்” என்று கூறவும் அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

அவன், “கல்யாணம் வரை இதை கட்டிபிடிச்சுட்டு தூங்கு, கல்யாணத்துக்கு அப்புறம் அசலை கட்டிபிடிச்சுகோ” என்று குறும்புடன் கூறவும் அவளின் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

அவள், “நாம கீழ போகலாமா?” என்றபடி எழவும், அவள் முகத்தை பார்த்தவன், “சரி” என்று எழுந்து கொண்டான்.

படிகளில் இறங்கும் போது அவளது காதில், “இப்பவே கட்டி பிடிச்சுக்குவேன்னு பயந்துட்டியா?” என்று கேட்கவும், அவள் அதிர்ச்சியுடன் திரும்பும் போது கால் இடறி கீழே விழ போக, அவன் சட்டென்று அவளது இடையை தாங்கி பிடித்தான்.

அவள் வயிற்றினுள் பல பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்ந்தாள். அவள் சிறு பயத்துடன் அவனை பார்க்கவும், அவள் கன்னத்தில் இதழ் பதிக்க துடித்த மனதை அடக்கியவன் மென்னகையுடன், “ரிலாக்ஸ்” என்றபடி கையை எடுத்தான். 

அதன் பிறகே அவளது சுவாசம் சீரானது. மெல்ல கீழே இறங்கிச்] சென்றாள். அவளை தொடர்ந்து அவனும் சென்றான்.

பெரியவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, கண்களிலேயே தன்னவளிடம் விடை பெற்று சென்றான். அடுத்த நாள் தேர்வு இருப்பதால் ப்ரித்திகாவும் அவனுடன் கிளம்பினாள்.

அன்றைய இரவில் சஹானா தூக்கத்தை துறந்தாள். அவளது சிந்தனை முழுவதும் ஸ்ரீராமுடன் கழித்த நிமிடங்களே நிறைந்திருந்தது. முத்தம் கொடுக்காமல் முத்தத்தின் கிளர்ச்சியை அவளுள் விதைத்திருந்தான் அந்த மாய கண்ணன். 

தேடல் தொடரும்…

அடுத்த பதிவு மாலை 10.30 மணிக்கு

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 31

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 33