in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 31

 

சிறிது நேரம் யோசித்த ஸ்ரீதர் ஸ்ரீராமை அழைத்தான்.

ஸ்ரீராம், “என்ன டா இந்த நேரத்தில்?” என்று கேட்டான். 

“கொஞ்ச நேரதுக்கு முன்னாடி அம்மா போன் பண்ணா” 

“என்ன?” 

“உனக்கு சஹானாவை பிடிச்சிருக்கானு கேட்டா” 

“நீ என்ன சொன்ன?” 

“ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன்” 

“நான் எப்போ அப்படி சொன்னேன்?” 

“ரொம்ப ஸீன் போடாதடா” என்றதும், சிரித்த ஸ்ரீராம், “சரி சரி.. அதுக்கு அம்மா என்ன சொன்னாங்க?” என்று கேட்டான். 

“ஏன் கேட்கிறனு கேட்டதுக்கு சும்மா தான்னு சொன்னா ஆனா அம்மா வாயிஸ் சரியில்லையோனு எனக்கு டவுட்” 

“என்னடா சொல்ற?” 

“ஹ்ம்ம்.. எனக்கு சரியா தெரியலை ஆனா அம்மா மனசுல எதையோ யோசிச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்குது” 

“..” 

“என்ன அமைதியாகிட்ட?” 

“சரி நான் பார்த்துக்கிறேன்.. நீ கவலைப் படாம வேலையைப் பாரு” 

“எனக்கென்ன கவலை?” 

“கவலை இல்லாம தான் சார் எனக்கு போன் பண்ணீங்களோ!!” 

“ரைட் விடு.. பை” என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.

 

ஸ்ரீராம் ராகவனை அழைத்தான். அவர் அழைப்பை எடுத்ததும், “அப்பா பிஸியா இருக்கீங்களா?” என்று கேட்டான். 

“இல்லை.. சொல்லு” 

ஸ்ரீதருடன் பேசியதை கூறியவன், “எதுவும் பிரச்சனையா பா?” என்று வினவினான். 

ராகவன் லலிதா கூறியதை சுருக்கமாக கூறினார் ஆனால் லலிதா திருமணத்தை நிறுத்தலாமா என்று கேட்டதை மட்டும் சொல்லவில்லை. சில நொடிகள் அமைதியாக இருந்த ஸ்ரீராம், “அப்பா அம்மா மனநிலை இப்போ எப்படி இருக்குது?” என்று கேட்டான். 

“ஏன்?” 

“அம்மா குழம்பிட்டு மட்டும் தான் இருக்காங்களா இல்லை அதுக்கும் மேல ஏதாவது சொன்னாங்களா?” 

“அப்படி எல்லாம் இல்லை” என்று அவரது குரல் சிறிது குறைந்து ஒலித்தது.

“அப்பா.. அன்னைக்கு நீங்க ‘கல்யாணத்துக்கு சம்மதமா இல்லை சஹானாவை கல்யாணம் செய்துக்க சம்மதமானு கேட்டீங்க.. அது எந்த அர்த்தத்தில் கேட்டீங்கன்னு எனக்கு தெரியாது ஆனா அதுக்கு இப்போ பதில் சொல்றேன்.. நீங்க பார்த்த பெண் சஹானா-ங்கிறதால மட்டுமே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.. எஸ்.. அம் இன் லவ் வித் ஹர்.. 

இதை உங்க கிட்ட தான் முதல்ல சொல்றேன் ஆனா நான் சொல்லாமலேயே இதை கண்டுபிடிச்ச ப்ரித்தி எங்க ரெண்டு பேருக்கும் முடிச்சு போட்டிருக்கா.. எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தால் அது சஹானா கூட தான் ஆனா எனக்கு அம்மாவும் ரொம்ப முக்கியம் பா.. அம்மா மனசு நோகாம இதை எப்படி சரி செய்றதுனு பார்க்கலாம்.. இப்போ சொல்லுங்க அம்மா மனநிலை இப்போ எப்படி இருக்குது?” 

“சஹானாவும் உன்னை விரும்புறாளா?” 

“இல்லை ஆனா கூடிய சீக்கிரம் விரும்ப ஆரம்பிச்சிடுவா” 

“எதை வச்சு சொல்ற?” 

அவன் மெல்லிய புன்னகையுடன், “நான் உங்க பையன் பா” என்றதும் அவரும் புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” என்றார்.

“தேங்க்ஸ் பா.. இப்போ அம்மா பத்தி சொல்லுங்க” 

“ஹ்ம்ம்.. கொஞ்சம் பயந்து போய் தான் இருக்கிறா.. ஸ்ரீ கிட்ட பேசுற அளவுக்கு போவானு நினைக்கலை.. நான் அந்த லேடி பத்தி விசாரிக்கிறேன்” 

“நான் ப்ரித்தி கிட்ட கேட்கிறேன்” 

“அவ்ளோ தூரம் கொண்டு போகனுமா?” 

“வேற எப்படி விசாரிக்கிறது? ப்ரித்தினா பிரச்சனை இருக்காது.. பெரியவங்க கிட்ட விஷயம் போகாம எப்படியாவது விசாரிச்சு சொல்லிடுவா” 

“சரி.. நீ அவகிட்ட பேசிட்டு சொல்லு.. அவளால முடியலைனா சேகர் கிட்ட பேசுறேன்” 

“போலீஸ் வரை போகனுமா?” 

“கடைசி ஆப்ஷன் தான் அது.. சேகர் அன்-அபிஷியலா பண்ணுவான்.. அதுவும் உனக்காக தான்.. இது சாதாரண சம்பந்தம்-னா அம்மா மனசுல நெருடல் வந்ததும் வேண்டாம்னு முடிவு எடுத்திருப்பேன்.. சித்தப்பாவோட அக்கா பொண்ணுனு தான் பொறுமையா இருக்கணும்னு நினைச்சேன்.. இப்போ நீ சஹானாவை காதலிக்கும் போது அவளோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் இல்லையா?!” 

“ஹ்ம்ம்.. சரி பா.. நான் ப்ரித்தி கிட்ட பேசிட்டு சொல்றேன்” 

“எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம்.. கவலைப்படாத.. அம்மாவை நான் பார்த்துக்கிறேன்” 

“சரி பா தேங்க்ஸ்” என்றபடி அழைப்பை துண்டித்தவன் ப்ரித்திகாவை அழைத்தான்.

அவள் அழைப்பை எடுத்து, “நீயெல்லாம் என் அண்ணன்னு வெளியே சொல்லிடாதே” என்றாள். 

“ஏன்?” 

“கல்யாணம் முடிவாகி ஒரு வாரம் முடியப் போகுது இன்னும் நீ சஹு கூட போன்ல பேச ஆரம்பிக்கலை” 

“ஒரு வாரம் இல்லை நாலு நாள் தான் முடிஞ்சிருக்குது” 

“கணக்கில் புலியா இருந்து என்ன பிரயோஜனம்! கனக்கு பண்றதில் புலியா இல்லையே!” 

“நிச்சம் முடியட்டும்னு நினைச்சேன்” 

“நீ இருக்க பாரு!” 

“சரி அதை விடு.. ஒரு முக்கியமான விஷயம் பேச தான் போன் பண்ணேன்” 

“என்ன?” 

“சின்ன பிரச்சனை” 

“என்னாச்சு?” 

ஸ்ரீராம் விஷயத்தை சுருக்கமாக கூறவும் அவள், “எந்த தெருனு சொன்ன?” என்று கேட்டாள். 

அவன் தெரு பெயரை மீண்டும் கூறினான்.

“கொஞ்ச நாள் முன்னாடி சஹு அவ பிரெண்டை காப்பாத்தினதை பத்தி சொன்னேனே! ஞாபகம் இருக்கா?” 

“மறக்க முடியுமா! அதனால தானே மேடம் என் கண்ணில் பட்டாங்க!” 

லேசாக சிரித்த ப்ரித்திகா, “ஹ்ம்ம்.. அவ பேரு பாலகுமாரி.. அவ மாமனார் வீடு அந்த தெருவில் தான் இருக்குது.. ரெண்டுத்துக்கும் சம்பந்தம் இருக்குதானு தெரியலை.. அந்த லேடி பேரு மல்லிகானு தானே சொன்ன!” என்றாள். 

“ஆமா” 

“ஹ்ம்ம்.. அந்த மல்லிகா பாலா மாமியார் அல்லது நாத்தனாரா இருக்க வாய்ப்பு இருக்குது.. உறுதியா சொல்ல முடியாது.. விசாரிச்சிட்டு சொல்றேன்” 

“எப்படி விசாரிப்ப? பெரியவங்களுக்கு விஷயம் போகக் கூடாது” 

“அது வந்து ணா” என்று அவள் சிறிது தயங்க அவன், “என்ன?” என்றான். 

“லிங்கா கிட்ட மட்டும் சொல்லட்டுமா?” 

அவளது உணர்வுகளை புரிந்துக் கொண்டவன், “ஒண்ணு அந்த எக்ஸ்ட்ரீம் இல்லை இந்த எக்ஸ்ட்ரீம்னு இருக்கக் கூடாது” என்றான். 

“என்ன?” 

“முன்னாடி எதுவுமே சொல்லாம இருந்த, இப்போ எல்லாத்தையுமே சொல்லணும்னு நினைக்கிற! அதை சொல்றேன்” 

“சரி விடு.. அதான் பெரிப்ஸ்க்கு(பெரியப்பா) விஷயம் தெரியும்னு சொல்றியே! பார்த்துக்கலாம்.. தேவைபட்டா பெரிப்ஸ் கிட்ட கேட்டுட்டு லிங்கா கிட்ட சொல்றேன்” 

“ஹ்ம்ம்.. குட் கேர்ள்.. சரி எப்படி விசாரிப்பனு கேட்டேனே” 

“என் கிட்ட பாலா நம்பர் இருக்குது” 

“சரி இப்போவே பேசிட்டு சொல்லு..” 

“சரி” என்றபடி அழைப்பை துண்டித்தவள் பாலகுமாரியிடம் எப்படி பேசுவது என்று யோசித்துவிட்டு அவளை அழைத்தாள்.

 

பாலகுமாரி, “ஹலோ” என்றதும், 

“ஹலோ.. நான் ப்ரித்திகா.. சஹானா மாமா பொண்ணு.. நியாபகம் இருக்குதா?” என்று பேச்சை ஆரம்பித்தாள். 

“ஹ்ம்ம்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க? சஹானா எப்படி இருக்கா?” 

“நாங்க நல்லா இருக்கிறோம்.. நீங்க எப்படி இருக்கிறீங்க?” 

“நல்லா இருக்கிறேன்” 

“புது இடம் புது வேலை பிடிச்சிருக்குதா?” 

“பிடிச்சிருக்குது” 

“சந்தோஷமா இருக்கிறீங்களா?” 

“என் கணவரோட பிரிவினால வருத்தம் இருக்குது தான் ஆனா மனசுல ஒரு வித நிம்மதியோட இருக்கிறேன்” 

“உங்க கணவர் மனம் மாறலாம்.. மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது” 

“சிலருக்கு அது பொருந்தாது.. சரி விடுங்க.. நீங்க எதுக்கு போன் பண்ணீங்கனு சொல்லவே இல்லையே!” 

“சும்மா தான் பண்ணேன்.. என் பிரெண்ட் ராஜியின் அப்பா தானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணது” 

“ஹ்ம்ம்.. நியாபகம் இருக்குது” 

“காலையில அங்கிளை பார்த்தேன்.. நீங்க எப்படி இருக்கீங்கனு கேட்டாங்க.. அதான் பேசலாம்னு போன் பண்ணேன்” 

“ஓ! தன்க் யூ” 

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்?” 

“நம்மளை பத்தி யோசிக்க கூட ஆள் இருக்கிறாங்க-ங்கிற பீல் எனக்கு பெருசு தான்” என்றதும் ப்ரித்திகாவின் மனதினுள் சிறு குற்ற உணர்ச்சி எழுந்தது.

இனி இவளிடம் அடிக்கடி பேச வேண்டும்.. சஹு கிட்டயும் சொல்லணும்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள், “உங்களுக்கு நாங்க எப்போதும் இருக்கிறோம்” என்றாள். 

“தேங்க்ஸ் அகேன்”      

 “அதுக்கு அப்புறம் அவங்க யாரும் உங்களை வந்து தொந்தரவு செய்யலையே!” 

“ஹ்ம்ம்.. இந்த சண்டே அந்த மல்லிகாவை பார்த்தேன்..” 

ஆஹா! இது தான் பழம் நழுவி பாலில் விழுறதா’ என்று மனதினுள் மகிழ்ந்தவள், “மல்லிகா யாரு?” என்று கேட்டாள். 

“அதான் என் நாத்தனார்” 

“ஓ! ஏதும் பிரச்சனை பண்ணாங்களா?” 

“சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது.. கேவலமா பேசுச்சு.. விடுங்க” 

“நீங்க தனியாவா இருந்தீங்க?” 

“இல்லை.. எனக்கு வேலை கொடுத்த மேடம் கூட XXX ஹோட்டல் போயிருந்தேன்.. அப்போ தான் ஒரே கத்து.. மேடம் தான் அவ வாயை அடைச்சாங்க.. அப்புறம் எனக்கும் தைரியம் சொன்னாங்க.. இனி அவங்களை எல்லாம் பார்த்தா பயப்படாம பதிலுக்கு பதில் பேசணும்னு சொன்னாங்க” 

“அதானே! நீங்க ஏன் பயப்படனும்?” என்றவள் “ஹே! எந்த ஹோட்டல்னு சொன்னீங்க?” என்று கேட்டாள். 

“XXX.. ஏன்?” 

“இந்த சண்டே-யா போனீங்க?” 

“ஆமா!” 

“நானும் சண்டே அந்த ஹோட்டல் போனேன் அதான் கேட்டேன்” 

“ஓ! பார்க்கவே இல்லையே!” 

“ஹ்ம்ம்.. நானும் அதான் நினைச்சேன்.. சரி.. படிக்கிறப்ப நீங்க சிறுகதை கவிதைலாம் எழுதுவீங்களாமே!” 

“ஹ்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்” 

“அப்படியா! இப்போ உங்களுக்கு ஒரு எழுவது வயது இருக்குமா?” 

“என்ன!” 

“பின்ன என்னங்க! அதெல்லாம் ஒரு காலம்னு பாட்டி மாதிரி சொல்றீங்க?” என்றதும் பாலகுமாரி மெலிதாக சிரித்தாள்.

“நல்ல பேசுறீங்க” 

“அப்போ என்னிடம் கைவசம் ஒரு தொழில் இருக்குதுன்னு சொல்றீங்க” 

“என்ன தொழில்?” 

“கௌன்சிலிங் தொழில்” 

“ஹ்ம்ம்.. அப்படியும் சொல்லலாம்”       

 “சரி.. நீங்க ஏன் இப்போ கதை எழுதக் கூடாது?” 

“ச்ச்.. அதெல்லாம் விட்டு போச்சுங்க!” 

“ஏன் அப்படி சொல்றீங்க! முயற்சி செய்து பாருங்க” 

“இன்ட்ரெஸ்ட் இல்லைங்க” 

“மனமிருந்தால் மார்க்கபந்து.. சாரி.. மனமிருந்தால் மார்க்கம் உண்டு” 

வாய்விட்டு சிரித்த பாலகுமாரி, “நீங்க முதல்ல சொன்னது வசூல் ராஜா படத்துல வரது தானே?” என்றாள். 

“ஹ்ம்ம்.. என் பிரெண்ட்ஸ் கூட பேசுற ப்ளோல பேசிட்டேன்.. பட் நீங்க கரெக்ட்டா கேட்ச் பண்ணிட்டீங்க.. சரி நான் சொன்னதை பத்தி யோசிங்க.. உங்க கதையை கூட எழுதலாம்.. மத்தவங்களுக்கு ஒரு விழிப்புணர்வை போல் எழுதலாமே! அதுக்காக கதை முழுவதும் சோகமோ அட்வைஸ்ஸோ இருக்கணும்னு இல்லை” 

“ஹ்ம்ம்.. புரியுதுங்க.. முயற்சி பண்றேன்..” 

“ஹ்ம்ம்.. ‘அன் ஐடில் ப்ரைன் இஸ் வொர்க்-ஷாப் ஆஃப் டெவில்’.. மனதையோ மூளையையோ தேவை இல்லாததை  யோசிக்க விடாமல் இப்படி திசை திருப்புங்க” 

“ஹ்ம்ம்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”  

 “இன்று முதல் நீங்க ‘தேங்க்ஸ் மன்னி’ என்று அழைக்கபடுவீர்கள்” என்றதும் மீண்டும் வாய்விட்டு சிரித்த பாலகுமாரி, “நிஜமாவே ஏதோ ஒரு மஜிக் உங்க கிட்ட இருக்குது.. ரொம்ப நாள் இல்லை ரொம்ப மாசம் கழிச்சு இப்படி சிரிக்கிறேன்..” 

“நோ தேங்க்ஸ்” 

“சரி சொல்லலை.. ஓகே கொஞ்சம் வேலை இருக்குது.. நான் அப்புறம் பேசட்டுமா?” 

“ஓ சாரி.. பை” என்றபடி அழைப்பை துண்டித்தவள் ஸ்ரீராமை அழைத்தாள்.

முதல் அழைப்பிலேயே எடுத்தவன், “யாருன்னு தெரிஞ்சுதா?” என்று தான் கேட்டான். 

“ஹ்ம்ம்.. என்னோட சந்தேகம் சரி தான்.. மல்லிகா பாலா நாத்தனார் தான்.. நீ பெரிப்ஸ்ஸ காண்-காள் போடு” 

“சரி” என்றவன் தந்தையை அழைத்து விஷயத்தை கூறினான். ப்ரித்திகாவும் அழைப்பில் சேர்ந்ததும் அவள் பாலகுமாரியிடம் மல்லிகா பற்றி பேசியதை சுருக்கமாக கூறினாள்.

ராகவன், “அப்போ அன்னைக்கு ஹோட்டல்ல நாங்க பேசினதை அந்த லேடி கேட்டிருக்கணும்” 

“அதே தான்” 

“சரி லல்லி கிட்ட நான் பேசுறேன்” 

“நான் பாலா கூட பேசியதை ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்” 

“எதுக்கு?” 

“பெரிம்ஸ்..” என்று அவள் ஆரம்பிக்க, 

“நீ சொன்னா அவ நம்ப மாட்டாளா என்ன!” என்றார். 

“அப்படி இல்லை.. நூறு சதவிதம் மனம் தெளிவாகுமேனு.. தப்பா சொல்லியிருந்தா சாரி பெரிப்ஸ்” 

“ஹ்ம்ம்.. நீ சொல்றதும் சரி தான்.. நான் இப்போ வீட்டுக்கு போய் பேசுறேன்.. நீ சாயுங்காலம் வீட்டுக்கு வா” 

“ஹ்ம்ம்.. சரி” என்றவள், “ஓய் அண்ணா! லைனில் இருக்கியா?” என்றாள். 

“ஹ்ம்ம்.. இருக்கிறேன்” 

“என்ன சத்தத்தை காணும்?” 

“அவன் டூயட் பாடிட்டு இருந்திருப்பான்” என்று ராகவன் கூற, 

“அப்பா நீங்களுமா?” என்று ஸ்ரீராமும், “ஹ்ம்ம்.. உங்க மகன் உங்களை மாதிரி இல்லை பெரிப்ஸ்” என்று ப்ரித்திகாவும் ஒரே நேரத்தில் கூறினர். 

“ஏன்? எதை வைச்சு என்னை மாதிரி இல்லைன்னு சொல்ற?” 

“நீங்களா இருந்தால் இன்னேரம் கனவிலா டூயட் பாடிட்டு இருப்பீங்க! நேரில் பாடிட்டு இருக்க மாட்டீங்க?” 

வாய்விட்டு சிரித்த ராகவன், “அவன் அவனோட அம்மா மாதிரி” என்று ரசித்து கூறியதில் அவரது காதல் வெளிப்பட்டது.

ப்ரித்திகா, “நீங்க பேசாம ஒரு கிளாஸ் ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள். 

“யாருக்கு ப்ரதீபனுக்கா?” 

“இது கூட நல்லா இருக்குதே! அவனை உங்களிடம் தான் கொண்டு வந்து விடனும்..” 

“கிளாஸ் எடுத்துட்டா போச்சு” 

“ஓகே பை பெரிப்ஸ்.. பை அண்ணா” என்றபடி அழைப்பைத் துண்டித்தாள்.

 

வீட்டிற்கு சென்ற ராகவன் லலிதாவிடம் நடந்தவற்றை சுருக்கமாக கூறினார்.

லலிதா, “எனக்கு தெரியாம இவ்வளவு நடந்திருக்குதா?” என்றார். 

“உனக்கு தெரியாமனு இல்லை.. உன் மனம் நோக கூடாதுன்னு இவ்வளவு நடந்திருக்குது” 

“அது.. நான்..” என்று அவர் சிறிது தடுமாற,

அவரது தோளை சுற்றி கை போட்ட ராகவன், “விடு.. உன்னை யாரும் தப்பா நினைக்கலை.. இதில் வெளிப்பட்டது ராம் மேல நீ வச்சிருக்கும் பாசம்.. அதே மாதிரி ராம் உன் மேல வச்சிருக்கிற பாசத்தையும் புரிஞ்சிருப்ப.. அவனுக்கு சஹானாவை ரொம்ப பிடிச்சிருக்குது.. கல்யாணம்னு ஒண்ணு நடந்தால் அவளுடன் தான் ஆனா அம்மாவும் எனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்றான்.. இந்த காலத்தில் இப்படி ஒரு பையன் கிடைப்பது அபூர்வம்” என்றார். 

“ஹ்ம்ம்.. புரியுதுங்க” 

“இப்போ தெளிவாகிட்டியா?” 

“ஹ்ம்ம்” என்று அவர் புன்னகையுடன் கூறவும், ராகவனும் புன்னகைத்தார்.

இருவரும் ஸ்ரீராமிடம் பேசிவிட்டு ப்ரித்திகாவிடமும் பேசினர்.

நிம்மதி மூச்சை வெளியிட்ட ஸ்ரீராம் தன்னவளின் நினைவுகளில் மூழ்கினான். 

தேடல் தொடரும்…

அடுத்த பதிவு மாலை 6.30 மணிக்கு

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

உன்னில் சரணடைந்தேன்… 10

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 32