in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 26

ப்ரித்திகா , “இதுக்கே இப்படி ஷாக் ஆகிட்டா எப்படி! இது வெறும் ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் சும்மா அதிரும்ல” என்று சிரிப்புடன் கூறவும், ப்ரதீபன் என்ற சிலைக்கு உயிர் வந்தது.

“நீயா எதையாவது கற்பனை செய்தா நான் அதுக்கு பொறுப்பில்லை” என்றதும் அவள் அவன் முகத்தை சற்றே உற்று பார்த்தாள்.

அவன் எரிச்சலுடன், “என்ன?” என்றான். 

“இல்லை.. உன் மீசையில மண் ஒட்டியிருக்கானு பார்த்தேன்.. சரி வா கிளம்பலாம்” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் வாயிலை நோக்கி நடக்க, அவன் தலையை உலுக்கிக் கொண்டு அவள் பின் சென்றான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான். கடையை பார்த்தவள், “ஓ ராம் அண்ணாவுக்கு சாப்பிட வாங்க போறியா! சுப்பர்” என்றாள். 

“நான் எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு வாங்க போறேன்” என்று அவன் சொன்னதும், ‘எங்க’ என்ற வார்த்தையினால் அரை நொடி மனம் வருந்தினாலும் அவனது நோக்கம் புரியவும் அவள் புன்னகையுடன் தோள் குலுக்கினாள். அவன் எரிச்சலுடன் திரும்பிக் கொண்டான்.

கடைக்கு சென்ற சில நொடிகளில் அவன், “என்ன ஜுஸ் வாங்கட்டும்?” என்று வினவ,

அவள் புன்னகையுடன், “உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள். 

அவன் முறைப்புடன், “பொதுவா சொல்லு” என்றான். 

அவளோ, “எனக்கு அதெல்லாம் தெரியாது” என்று அசட்டையாக கூறினாள்.

கோபமும் எரிச்சலும் இயலாமையும் போட்டிப்போட அவன் பல்லை கடித்துக் கொண்டு, “நானே பார்த்துக்கிறேன்” என்று கூற,

அவள், “அதை தான் நானும் சொன்னேன்” என்றாள். 

“கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இரு” 

“நீ தானே கேள்வி கேட்ட?” 

“தெரியாமல் கேட்டுட்டேன்” என்றதும் அவள் அமைதியாக இருந்தாலும் அவளது கண்கள் புன்னகை செய்தது.

அவன் மில்க் ஸ்வீட், சமோசா மற்றும் ஃபண்ட்டா(Fanta) வாங்கினான். இருவரும் வீட்டிற்கு சென்ற ஐந்து நிமிடங்களில் ஸ்ரீராம் வந்தான்.

ப்ரதீபன் புன்னகையுடன், “வாங்க மாப்பிள்ளை” என்று கூற, புன்னகையுடன் உள்ளே வந்த ஸ்ரீராம் ப்ரதீபனுடன் கை குலுக்கியபடி, “மாப்பிள்ளை வேண்டாமே.. ராம் இல்லை ஸ்ரீராம்னு கூப்பிடுங்க.. இந்த வாங்க போங்க கூட வேண்டாம்..” என்றான். 

“இல்லை அது சரி வராது” 

“உங்களை விட வயசு கம்மி தானே!” 

“வயசு கம்மியா இருக்கலாம் ஆனா உங்க உறவு மரியாதை தர வேண்டிய உறவாச்சே!” 

“நாம பிரெண்ட்லியா பழகலாமே” 

“பன்மையில் பேசினா பிரெண்ட்லியா பழக முடியாதுனு யாரு சொன்னது!” 

ஸ்ரீராம் ப்ரித்திகாவை பார்த்து, “நீயாவது சொல்லு” என்று கூற,

அவள் புன்னகையுடன் கண்களை உருட்டியபடி, “நான் சொன்னா உனக்கு மரியாதை வேற விதமா கிடைக்கும்” என்று கூற, ஸ்ரீராம் புரியாமல் அவளை பார்க்க ப்ரதீபன் அவளை முறைத்தான்.

பிறகு சிறு புன்னகையுடன், “சும்மா சொன்னேன்.. என்னை இதில் இழுக்காத! நீயாச்சு உன் மச்சனாச்சு” என்றதும் ஸ்ரீராம் புன்னகைக்கவும் ப்ரதீபன் இயல்பிற்கு திரும்பினான்.

ப்ரதீபன் மெல்ல, “சாரி மாப்பிள்ளை.. அப்போ போனில் வேறு ஒரு..” என்று தயக்கத்துடன் பேச, அவனது பேச்சை இடையிட்ட ஸ்ரீராம், 

“நான் தப்பாகவே எடுத்துக்கலை.. சொல்ல போனால் அப்படி உரிமையா பேசுங்கனு தான் சொல்றேன்” 

“இல்லை.. அது..” 

“விடுங்க.. ஏதோ டென்ஷனில் பேசிட்டீங்க” என்றபோது ப்ரித்திகா ப்ரதீபன் வாங்கியதை இரு தட்டுக்களில் எடுத்து வந்தாள்.

அவள் கொண்டு வந்த உணவு பொருட்களை பார்த்த ஸ்ரீராம் ஆச்சரியத்துடன் அவளை பார்க்க, அவள் கண்ஜாடையில் ப்ரதீபனை காட்டினாள். அவன் அமைதியாக ஒரு தட்டை வாங்கியதும் ப்ரதீபனிடம் மற்றொரு தட்டை நீட்டினாள். அதை அவன் வாங்கியபடி, “உனக்கும் எடுத்துட்டு வா” என்றான்.

அவள் பதில் கூறும் முன் ஸ்ரீராம், “இப்போ தான் சாப்டுட்டு வரேன்.. நீ இதில் ஷேர் பண்ணிக்கோ” என்றவன் இனிப்பில் சிறு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை அவளிடம் நீட்டினான்.

ப்ரதீபன் அவளது பதிலிற்காக அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவனது மனவோட்டத்தை புரிந்தக் கொண்டவள் சிறு புன்னகையுடன் ஸ்ரீராமிடம், “இல்லை நீ சாப்பிடு.. நான் வேற எடுத்துக்கிறேன்” என்றதும் ப்ரதீபனது முகம் மலர, ஸ்ரீராமோ அவளை முறைத்தான். அவனது முறைப்பிற்கான காரணம் அவனுக்கு மில்க் ஸ்வீட் மற்றும் சமோசா பிடிக்காது. அதை அறிந்திருந்தும் தனது தட்டை வாங்க மறுத்தவளை செல்லமாக முறைத்தான்.

சிரித்து சமாளித்த ப்ரித்திகா தனக்கு ஒரு தட்டில் எடுத்து வந்து அமர்ந்தாள். ஸ்ரீராம் கஷ்டப்பட்டு தட்டில் இருந்ததை காலி செய்த போது ப்ரதீபனின் கண் அசைவில் எழுந்து சென்ற ப்ரித்திகா குளிர்பானத்தை எடுத்து வந்தாள். அவள் குறுஞ்சிரிப்புடன் அதை தமையனிடம் கொடுக்க அவன் அவளை முறைத்தான். இந்த முறையும் முறைத்ததிற்கான காரணம் அதே தான், அவனுக்கு அந்த குளிர்பானம் பிடிக்காது.

இந்த முறை அவன் வெளிப்படையாகவே அதை சொல்லிவிட்டான்.

ஸ்ரீராம், “தண்ணி மட்டும் போதும்.. நான் ஏரேட்டட் ஜூஸ் குடிப்பதில்லை” என்றதும் ப்ரதீபன் அவளை முறைத்தான்.

ஸ்ரீராம் மெல்லிய புன்னகையுடன், “எனக்கு பிடிக்கும்னு சொன்னாளா?” என்று வினவியதும்,

சட்டென்று முகத்தை இயல்பிற்கு கொண்டு வந்த ப்ரதீபன், “இல்லை.. பிடிக்காதுன்னு சொல்லாம அமைதியா இருந்துட்டா” என்று முடித்தபோது குற்றம்சாட்டும் பார்வையுடன் அவன் அவளை பார்த்தான்.

“அவன் ஒண்ணும் உனக்கு பிடிக்குமானு கேட்கலை” என்று அவள் தமையனிடம் கூற,

ப்ரதீபன் அவளிடம், “என்ன வாங்கனு கேட்டேனா இல்லையா?” என்ரான். 

அவள் அலட்டிக் கொள்ளாமல், “உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு என்ன வாங்கனு தானே கேட்ட! அதான் உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்” என்றாள். 

ப்ரதீபன் கடுமையாக முறைக்க, வாய்விட்டு சிரித்த ஸ்ரீராம், “ஆக மொத்தத்தில் உங்க சண்டையில் மாட்டிகிட்டது நான்” என்றான். 

ப்ரதீபன் மீண்டும் சட்டென்று முகத்தை இயல்பிற்கு கொண்டு வந்து, “அப்படி இல்லை மாப்பிள்ளை..” என்று ஆரம்பிக்க,

ஸ்ரீராம் புன்னகையுடன், “இட்ஸ் ஆல் இன் தி கேம்.. விடுங்க.. பன்மையை தான் விட மாட்டேன்னு சொல்லிட்டீங்க.. அட்லீஸ்ட் இந்த மாப்பிள்ளையை விடுங்க.. தயவு செய்து பெயர் சொல்லி கூப்பிடுங்க.. வேணும்னா பெயர் சொல்லும் போது மட்டும் ப்ரித்தியோட அண்ணன்னு நினைச்சுக்கோங்க” என்றதும் ப்ரித்திகா வாய்விட்டு சிரித்தாள்.

ஸ்ரீராம் என்ன என்பது போல் பார்க்க, அவள், “எங்க சண்டையே நீ அவங்க வீட்டு மாப்பிள்ளையா என் அண்ணனா என்பது தான்.. சரி இப்போ நீயே சொல்லு.. நீ அவங்க வீட்டு மாப்பிள்ளையா என் அண்ணனா?” என்று கேட்டாள். 

ஸ்ரீராம் ஒரு நொடி தடுமாற, ப்ரதீபன் கடுமையான குரலில், “ப்ரித்தி எப்போதும் விளையாட்டுதனத்துடன் இருக்காத” என்று கூறினான்.

அவள், “இது எனக்கும் என் அண்ணனுக்கும் நடப்பது.. நீ ஏன் எங்களுக்கு நடுவில் வர?” என்று வேண்டுமென்றே அழுத்தம் திருத்தத்துடன் வினவவும் அவனுக்கு கடும் கோபம் வந்தது.

அவன் கோபத்தை கட்டு படுத்திய குரலில் ஸ்ரீராமிடம், “ஒரு நிமிஷம் வந்துறேன்” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

ஸ்ரீராம், “ஏன் அவரை..” என்று ஆரம்பிக்க, 

“இது எனக்கும் அவனுக்கும் நடப்பது.. நீ அதில் நடுவில் வராத!” என்றாள்.

அவன் புன்னகையுடன், “இதை அவர் இருக்கும் போது சொல்ல வேண்டியது தானே!” என்றான். 

“அவன் இருக்கும் போது நீ கேள்வி கேட்கலையே!” என்று அவளும் புன்னகையுடன் கூறினாள்.

“அவர் இருக்கும் போது கேட்டிருந்தால் இதே பதிலை சொல்லி இருப்பியா?” 

“நிச்சயமா” என்று சொன்னவள் ஒரு நொடி இடைவெளி விட்டு, “ஆனா உனக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லியிருப்பேன்” என்று கூறி கண்சிமிட்டினாள்.

அவன் சிறு யோசனையுடன், “உங்களுக்குள் என்னால் எதுவும் சண்டையா?” என்று கேட்டான். 

அவள் விரிந்த புன்னகையுடன், “அதெல்லாம் இல்லை” என்றாள். 

“நிஜமா?” 

“நிஜமா தான்” 

“ஆனா அவரை பார்த்தா ஏதோ சரியில்லாத மாதிரி தெரியுதே!” 

“உன்னால் எங்களுக்குள் சண்டை இல்லை.. என்னால் உங்களுக்குள் சண்டை வராம இருந்தால் சரி” என்று அவள் கூறவும், அவன் அவளை யோசனையுடன் பார்த்தான்.

அவள், “கவலைப் படாத உன்னை அவன் தங்கைக்கு வேண்டாம்னு சொல்லிட மாட்டான்” என்றாள். 

ஸ்ரீராம் புன்னகையுடன், “அவரை நீ சொல்ல விடமாட்டனு தெரியுமே! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. தங்கை உடையான் எதற்கும் அஞ்சான்” என்றான்.

அவன் கூறிய இரண்டாவது வாக்கியத்தை கேட்டபடி வந்த ப்ரதீபன் அவனையே பார்க்கவும், அவன், “என்ன பாஸ் நான் சொல்றது சரி தானே?” என்றான். 

“ஹ்ம்ம்..” என்றவன் ஒரு நொடி இடைவெளிவிட்டு, “நீங்களும் ப்ரித்தியும் ரொம்ப க்ளோஸ் போல!” என்றான். 

ஸ்ரீராம் புன்னகையுடன், “ஹ்ம்ம்.. உங்களையும் சஹானாவையும் போல” என்றதும் ப்ரதீபன் பதில் சொல்வதறியாது அமைதியாக இருந்தான்.  

ப்ரித்திகா, “சரி நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு.. தப்பிக்க முடியாது..” என்றாள். 

“ரெண்டும் தான்” 

“செல்லாது செல்லாது.. சரியான பதில் வேணும்.. நீ யார்? அவங்க வீட்டு மாப்பிள்ளையா? என் அண்ணனா?” 

ஸ்ரீராம் தீர்க்கமான குரலில், “அவங்க வீடுனு ஏன் பிரித்து பேசுற? நீ அந்த வீட்டை சேர்ந்தவள் தானே! (ப்ரதீபன் சிறு அதிர்வுடன் அவனை பார்க்க ஸ்ரீராம் தொடர்ந்தான்) உன் அத்தை வீடு உன் வீடு போல தானே! இப்போ நானும் அதில் ஐக்கியமாகுறேன்.. நீ நான் எல்லோரும் ஒரே வீட்டின் அங்கம் தானே!” 

“அது சரி தான்.. நீ..” 

“விடமாட்டியே! இப்போதைக்கு உன் அண்ணன் அப்புறம் சஹானா கணவன்” 

“சூப்பர் அண்ணா.. சஹுவை கொண்டு வந்து என்னை ஆஃப் பண்ணிட்ட.. கவலைப் படாத.. சஹு வந்த பிறகு நான் உரிமை கொண்டாட மாட்டேன்.. சஹுக்கு அப்புறம் தான் நான்” 

ஸ்ரீராம் புன்னகையுடன், “நான் ஏன் கவலைப் படப்போறேன்! எனக்கு என் தங்கை பற்றியும் தெரியும் என் சனா பற்றியும் தெரியும்” என்றான். 

“இன்னொரு கேள்வி கேட்கலாமா?” 

“என்ன?” 

“நீ ‘என் மனைவிக்கு பிறகு தான் என் தங்கை’னு சொல்லிட்ட.. ஒருவேளை சஹு ‘என் அண்ணனுக்கு பிறகு தான் என் கணவன்’னு சொல்லிட்டா என்ன செய்வ?” 

“ப்ரித்திகா” என்று ப்ரதீபன் குரலை சற்று உயர்த்தி கடுமையான குரலில் அழைத்து, “எதில் விளையாடுறதுனு இல்லையா?” என்றான். 

அவள் பதில் சொல்லும் முன் ஸ்ரீராம் தெளிவான குரலில், “அவ விளையாடலை ப்ரதீபன்..” என்றதும், ப்ரதீபன் சிறு ஆச்சரியத்துடன் அவனை பார்க்க, ப்ரித்திகா அமைதியாக இருந்தாள்.

ஸ்ரீராம் தொடர்ந்து பேசினான், “என் யூகம் சரியா இருந்தா, அவ உங்களுக்கு எதையோ உணர்த்தவோ, புரிய வைக்கவோ இதை கேட்டிருக்க வேண்டும்” என்றபடி அவளை பார்த்தான். அவள் புன்னகையுடன் தமையனை பார்த்தாள். அந்த புன்னகையே அவன் கூறியது உண்மை என்று பறைசாற்றியது.

ப்ரதீபன் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தான். உடன் பிறவாத இருவருக்குள்ளும் என்ன ஒரு புரிதல் என்று பிரம்மிப்பாக கூட இருந்தது அவனுக்கு. தான் தன் தங்கையை இந்தளவிற்கு புரிந்து வைத்திருக்கிறோமா! என்ற சந்தேகமும் எழுந்தது.

ஸ்ரீராம் ப்ரதீபனை ஒரு நொடி பார்த்துவிட்டு அவளிடம், “இப்போ இருக்கும் சஹானா ஒருவேளை அப்படி சொல்லலாம் ஆனா என் சனா அப்படி சொல்ல மாட்டா” என்றான்.  

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?” 

“எந்த ஒரு பொண்ணும் காதல் கணவனை விட பாசமான அண்ணனுக்கு தான் முதலிடம்னு சொல்ல மாட்டா” என்றதும் ப்ரித்திகா சட்டென்று ப்ரதீபனை பார்க்க, ஸ்ரீராமிற்கு அந்த கேள்விக்கான காரணம் புரிவது போல் இருந்தது.

ப்ரதீபனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நொடி அவனது மனம் அவளுக்காக உருக தான் செய்தது ஆனால் அடுத்த நொடியே தன்னை கட்டு படுத்திக் கொண்டு பார்வையை திருப்பவும், அவள் மெல்லிய புன்னகையுடன் தமையனை பார்த்து, “காதல் கணவன்!!!!” என்று கேள்வியாக கேட்டு புருவம் உயர்த்தினாள்.

அவன் மெல்லிய புன்னகையுடன், “இந்த கேள்வியை உன் அத்தை மகளிடம் எங்க கல்யாணத்தன்னைக்கு கேளு” என்றான்.

ப்ரித்திகா விரிந்த புன்னகையுடன், “நிச்சயம் கேட்கிறேன்.. ஆல் தி பெஸ்ட்” என்று கூறி கட்டை விரலை உயர்த்தி காண்பித்தாள். 

“தேங்க்ஸ்” என்றவன் “சரி கிளம்பலாமா?” என்றான். 

“ஹ்ம்ம்.. நீ போய் வண்டியை எடு.. நான் இவன் கூட பேசிட்டு வரேன்” என்றதும்,

ஸ்ரீராம், “ஓகே ப்ரதீபன் பார்க்கலாம்.. பை” என்றுவிட்டு வெளியே சென்றான். 

ப்ரதீபன், “இன்னைக்கு நீ செய்த எதுவும் எனக்கு பிடிக்கலை” என்று இறுகிய குரலில் கூறினான். 

“நான் போனதுக்கு அப்புறம் அமைதியா யோசிச்சா எல்லாம் பிடிச்சதா தோணும்” 

“நிச்சயம் இல்லை” 

“கிளம்பும் போது விவாதம் வேண்டாமே! கொஞ்சம் சிரிச்ச முகத்துடன் வழியனுப்பேன்” 

“ஸ்விட்ச் போட்ட மாதிரி என்னால சிரிக்க முடியாது.. அதுவா வரணும்” 

“ப்ளீஸ் தீபன்” என்றதும் அவனது கண்கள் விரிந்தது.

“என்ன?” 

“என்ன சொல்லி கூப்பிட்ட?” 

அவள் மெல்லிய புன்னகையுடன் மெல்லிய குரலில், “தீபன்.. பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள். 

“ஹ்ம்ம்” என்றவன், “நீ கூப்பிட்டதை சொன்னேன்” என்று அவசரமாக சேர்த்து சொல்ல,

அவள் வாய்விட்டு சிரித்தபடி, “நிஜமாவே நானும் அதை தான் கேட்டேன்.. நீ தான் என்னை பிடிக்கும் ஆனா காதல் இல்லைனு முன்னாடியே சொல்லிட்டியே! அப்புறம் என்ன பயம்?” என்றாள்.

பிறகு, “இன்னைக்கு முழுவதும் என் ப்ளீஸ்க்கு மதிப்பு உண்டுனு சொன்னியே” என்றாள். 

“நீயா தான் சொல்லிக்கிட்ட” 

“சரி எனக்காக இப்போ சிரிப்பியா மாட்டியா?” 

“சும்மா சிரி சிரினு சொன்னா எப்படி! ஏதாவது ஜோக் சொல்லு” 

“நீ ரொம்ப அழகா இருக்க” 

“இது ஜோக்கா?” என்று அவன் செல்லமாக முறைக்க,

அவள் குறுஞ்சிரிப்புடன், “பின்ன இல்லையா!” என்றாள். 

அவன் உதட்டோரம் மெல்லிய புன்னகை அரும்ப, அவள் உற்சாகத்துடன், “எஸ்.. அப்படி தான்.. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் முயற்சி பண்ணா போதும்” என்று கூற,

அவன் தனது நெற்றியில் தட்டியபடி, “உன்னை” என்றபோது உண்மையில் அவன் இதழ்கள் மலர்ந்திருந்தது.

அவள், “தீபு கண்ணா.. நேத்து உன்னை ரொம்ப டென்ஷன் படுத்தி கஷ்ட படுத்தியதுக்கு ரொம்ப சாரி.. எனக்கு வேறு வழி தெரியலை..” என்றவள் லேசாக கலங்கிய விழிகளுடன், “அடித்ததுக்கு ரொம்ப ரொம்ப சாரி.. இனி எக்காரணம் கொண்டும் குடிக்கக் கூடாது.. அப்படி நீ குடித்தால் அது என்னை கொன்னதுக்கு சமம்” என்றதும், அவன் அவசரமாக அவளது வாயை மூடி முறைத்தான்.

அவன் கையை விலக்கியவள், “இனி குடிக்க மாட்ட தானே!” என்றதும், அவன் அமைதியாக ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்ட, அவள் புன்னகையுடன், “நான் கேட்டதுக்கு இல்லைனு சொல்றியா குடிக்க மாட்டேன்னு சொல்றியா?” என்று கேட்டாள். 

அவனும் மெல்லிய புன்னகையுடன் அவள் தலையை லேசாக தட்டி, “சத்தியமா குடிக்க மாட்டேன்.. போதுமா!!! இதுக்காக லூசு மாதிரி ஏதாவது பேசாத” என்றான். 

“தேங்க்ஸ்” 

“எதுக்கு லூசுனு சொன்னதுக்கா?” 

“அதை ஒரு லூசு சொல்கிறதே ஆச்சரியகுறி!” 

“எப்பா தாங்கலை” என்றபடி அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள்.

மெல்ல அவன் அருகில் சென்று அவனது இடது கன்னத்தில் மயில் இறகால் வருடுவது போல் மென்மையாக தனது வலது கரத்தை வைத்தவள் அவனது கண்களை நோக்கி, “எப்போதும் இப்படி சிரித்த முகத்துடன் இயல்பா இரு.. பெரியவங்க எனக்காக சிலது செய்தாலும் யாரும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டாங்க.. நிச்சயம் நம்ம கல்யாணம் நடக்கும் ஆனா அது நீ முழு மனசுடன் சந்தோஷமா என் காதலையும் என்னையும் ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் நடக்குமே தவிர யாருடைய கட்டாயத்தாலும் நிச்சயம் இருக்காது” என்றாள். 

மீண்டும் சில நொடிகள் மௌனமே ஆட்சி செய்தது. அவன் அவளது மென்மையான தொடுகையிலும் அன்பிலும் கரைந்துக் கொண்டிருந்தான். இருவரது பார்வையும் ஒன்றோடொன்று கலந்திருந்தது. சுவர் கடிகாரத்தின் ஒலியில் நடப்பிற்கு திரும்பியதும் அவன் சற்று விலகி நின்றான்.

அவள், “ரொம்ப சென்டிமென்ட்டா பேசிட்டேனோ!!” என்றாள். 

அவன் அமைதியாக இருக்கவும், அவள் அவனை நெருங்கி, “திரும்ப பார்க்கும் வரை இந்த ரெண்டையும் மறக்காத! ஒண்ணு பொய்யா முறுக்கிக்கிட்டதுக்கு இன்னொன்னு அரிதா கண்ணும் கண்ணும் நோக்கியானு லுக் விட்டதுக்கு”  என்றவள் அவன் சுதாரிக்கும் முன் அவனது வலது கன்னைதில் முதலில் கடித்து அவன் அலறி முடிக்கும் முன் அழுத்தமாக முத்தம் ஒன்றை கொடுத்து, “திபு அத்தான் ஐ லவ் யூ ஸோ மச்” என்றுவிட்டு சிட்டாக பறந்து வெளியே சென்றிருந்தாள்.

 

முகத்தில் பூரிப்புடன் வந்து, “கிளம்பலாமா?” என்று கேட்ட தங்கையை பார்த்து ஸ்ரீராம் புன்னகையுடன், “என்ன தௌஸண்டு வாட்ஸ் பல்ப் எரியுது?” என்று கேட்டான். 

“ஒன்றுமில்லை.. நீ வண்டியை எடு” 

“ப்ரதீபன் எங்கே?” 

“அவனுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு வந்திருக்கேன்.. அவன் வந்து என்னை அடிக்கிறதுக்கு முன்னாடி வண்டியை கிளப்பு” 

“அடப்பாவி! என்ன பண்ணிட்டு வந்த?” 

“ஹா ஹா ஹா காதலில் இதெல்லாம் சாதாரணமப்பா!” 

“நான் போய் சொல்லிட்டு வரட்டுமா?” என்று கேட்ட போது ப்ரதீபனே வெளியே வந்தான்.

முதலில் அதிர்ச்சியில் நின்றிருந்தவன் அவள் வெளியே சென்ற பிறகே சுய உணர்வை பெற்றான். அவளது கூற்றையும் செயலையும் நினைத்துப் பார்த்தவனின் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்தது. பிறகு தன்னை தானே நொந்துக் கொண்டு பெருமூச்சொன்றை வெளியிட்டுவிட்டு வெளியே வந்தான்.                                                                                  

ஸ்ரீராம், “வரோம்” என்று கூற, அவன் அவளை பார்ப்பதை தவிர்த்து, “சரி மாப்பிள்ளை” என்றவன் ஸ்ரீராமின் கண்டன பார்வையில் விழித்தான்.

ப்ரித்திகா, “நீ பெயரை சொல்லாம மாப்பிள்ளைனு சொன்னதும் சாருக்கு கோபமாம்” என்றாள். 

இப்பொழுதும் அவன் அவளை பார்க்காமல் மெல்லிய புன்னகையுடன் ஸ்ரீராமிடம், “சரி போயிட்டு வாங்க ராம்” என்றதும் ஸ்ரீராம் புன்னகையுடன் தலை அசைத்துவிட்டு வண்டியில் ஏறினான். அவளும் வண்டியில் ஏறினாள்.

அவள் தன்னுடன் வந்தது போல் அல்லாமல் இப்பொழுது ஒரு பக்கமாக அமர்ந்திருக்கவும் அவனுள் சிறு மகிழ்ச்சி தோன்றியது.

‘வேணும்னு பார்க்காமல் கடுப்படிக்கிறான்.. திருட்டு ராஸ்கல்.. உன்னை வழிக்கு கொண்டு வர எனக்கா தெரியாது!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் இவனை கண்டுக் கொள்ளாமல், “கிளம்பலாம்” என்றாள்.

அவள் தன்னை பார்க்கவில்லை என்றதும் அவளை பார்த்தான். வண்டியின் கண்ணாடியில் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் வண்டி கிளம்பிய நொடியில் சட்டென்று திரும்பி பார்த்து புன்னகையுடன் பறக்கும் முத்தம் ஒன்றை தந்தாள். ப்ரதீபன் மீண்டும் பேச்சிழந்து நிற்க, அவள் விரிந்த புன்னகையுடன் கையசைத்தாள். 

தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 25

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 27