in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 25

 

ப்ரதீபன், “எதுக்கு வந்திருக்க?” என்று கேட்டான். 

“நல்ல வரவேற்பு” 

“பேச்சை மாத்தாத.. கேட்டதுக்கு பதிலைச் சொல்லு” 

“நீ மட்டும் நான் கேட்கிறதுக்கு எல்லாம் பதிலை சொல்லிடுற!” 

“ச்ச்.. இப்போ என்ன தான் வேணும் உனக்கு?” 

“என்னவோ கேட்ட உடனே கொடுக்கிற மாதிரி!” 

“ப்ரித்திகா” என்று அவன் இழுத்து பிடித்த பொறுமையுடன் அழைக்கவும்,

அவள் தீர்க்கமான பார்வையுடன், “நேத்து ஏன் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருந்த?” என்று கேட்டாள். 

“கிளையன்ட் மீட்டிங்..” 

“பொய் சொல்லாத” 

“நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்” என்றபடி அவன் தோள் குலுக்கவும், “ப்ரதீப்” என்று இப்பொழுது பொறுமை இழப்பது ப்ரித்திகாவின் முறை ஆயிற்று.

அவன் அலட்டிக் கொள்ளாமல், “என்ன?” என்று வினவினான்.

மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவள், “பைக்ல ஒரு ரைட் போலாமா?” என்று வினவியதும், அவன் அவளை விநோதமாக பார்த்தான்.

அவள், “என்ன?” என்றாள். 

“இன்னைக்கு நீ ஒரு புரியாத புதிரா தான் இருக்கிற” 

“நானாவது இன்னைக்கு ஒரு நாள் தான் இப்படி இருக்கிறேன்” 

“சரி.. அது ஏன்?” 

“சொல்றேன்.. இப்போ பைக்ல ரைட் போலாமா?” 

“வேண்..” என்று அவன் முடிக்கும் முன், 

“ப்ளீஸ் ப்ளீஸ் வேண்டாம்னு சொல்லாத” என்று அவள் கெஞ்சவும், அவன் அமைதியானான்.

அவள் தலையை சரித்து புன்னகையுடன், “என்ன போலாமா?” என்று கேட்டு கண் சிமிட்டவும் அவன் ஒரு நொடி தன்னை மறந்தான் ஆனால் அடுத்த நொடியே சுதாரித்துவிட்டான்.

ஆசை கொண்ட மனதை அடக்கியவன், “என் வண்டியில் பொண்ணுங்களை ஏத்துறது இல்லை” என்றான். 

‘யம்மு சஹுவுக்கும் இதையே தான் சொல்வியா!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் அவனிடம் “எனக்காக உன் கொள்கையை கொஞ்சமே கொஞ்சம் மாத்தக் கூடாதா?” என்று சிறு கெஞ்சலுடன் கேட்டாள். 

அவன் மறுப்பாக தலை அசைக்கவும், அவள் அவன் அருகே சென்று அவனது இரு கன்னத்தை இரு கைகளால் கிள்ளுவதுபோல் பற்றி அவன் முகத்தை லேசாக இரு புறமும் மாற்றி மாற்றி  திருப்பியபடி, “என் செல்ல அத்தான்ல.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ஒரே ஒரு ரைட் போலாம்.. நான் கேப்(Gap) விட்டு சமத்தா உட்கார்ந்து வருவேணாம்.. ப்ளீஸ் ப்ளீஸ் ஓகே சொல்லு” என்று கொஞ்சவும் அவன் மனம் அவனது அனுமதியின்றி அவள் புறம் சாய்ந்தது.

அவளது இந்த தொடுகையும், ‘அத்தான்’ என்ற அழைப்பையும், கொஞ்சலையும் சற்றும் எதிர் பார்க்காதவன் முற்றிலும் பேச்சிழந்தான். 

சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவள் அவன் கண்களை நோக்கி புருவம் உயர்த்தி, “என்ன?” என்று வினவினாள்.

அந்த நொடியில் அவன் சுதாரித்தாலும் மறுப்பு சொல்ல மனமின்றி, “ஒரே ஒரு சின்ன ரைட் தான்” என்றதும், அவள் சிறு குழந்தையின் உறச்சகத்துடன் துள்ளி குதித்து, “தன்க் யூ” என்று கத்தினாள்.

 

அவன் தன் அறைக்கு சென்று வண்டி சாவியை எடுத்த போது மனதினுள், ‘எதுக்கு வந்திருக்கானு தெரியலை.. இப்பவே கண்ண கட்டுதே! எப்படி சமாளிக்கப் போறேனோ! சீக்கிரம் கிளப்பி விடனும்’ என்று நினைத்துக் கொண்டான்.

வெளியே சென்ற போது மழை மிக லேசாக தூறவும், அதை காரணம் காட்டி அவன் மறுப்பு சொல்ல நினைக்க, அவளோ உற்சாகத்துடன் கை தட்டி, “வாவ்.. என் லைப்ல இந்த ரைடை மறக்கவே மாட்டேன்.. இப்படி லேசான தூறலோட ஒரு பைக் ரைட் போகணும்னு நீண்ட நாள் ஆசை.. செமல!!!” என்று அவனிடம் வினவவும் அவன் உதட்டோர மெல்லிய புன்னகையுடன் வண்டியில் ஏறினான்.

அவன் ஹெல்மெட் மாட்ட போக அவள், “பக்கத்தில் தானே! போலீஸ் பிடிப்பாங்களா?” என்று கேட்டாள். 

“இல்லை மழை..” 

“ச்ச்.. மழையை என்ஜாய் பண்ணு” என்றபடி ஹெல்மெட்டை பிடுங்கியவள், “இங்கேயே வைக்கவா இல்லை வீட்டுக்குள்ள வைக்கணுமா?” என்று கேட்டாள். 

“கதவு பக்கத்தில் வச்சுட்டு வா.. பிரச்சனை இல்லை” 

அவள் அதை வைத்துவிட்டு வந்த போது அவன் வண்டியை வெளியே எடுத்து தயாராக இருந்தான்.

அவள் உற்சாகத்துடன், “ஏறட்டுமா?” என்று கேட்டாள். 

“ஹ்ம்ம்” 

அவள் இருபுறம் கால்களை போட்டு ஏறி அமர்ந்ததும் கைபேசியை எடுத்து, “ஒரே ஒரு செல்பி ப்ளீஸ்” என்றாள். 

“இது தான் இடத்தை கொடுத்தால் மடத்தை கேட்பது” 

“ரொம்ப பண்ணாத.. ஒரே ஒரு போட்டோ தானே” 

“எனக்கு இதெல்லாம் பிடிக்காது” 

“பழகிக்கோ” 

“என்ன தேவைக்கு?” 

“என் தேவைக்கு” என்று சிரிப்புடன் தலை சரித்து சொன்னவளின் கை புகைப்படம் எடுத்திருந்தது. அவள் எடுத்த பிறகே அதை கவனித்தவன் அவளை சிறு கோபத்துடன் திட்ட வாய் திறக்க போகையில் அவன் முகத்திற்கு முன் கைபேசியை நீட்டி, “பார்.. எவ்ளோ சூப்பரா இருக்குது” என்றாள்.

மீண்டும் அவன் பேச்சிழந்தான். அந்த புகைப்படம் மிக அழகாக இருந்தது. இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்க, அவள் முகத்தில் குறும்பும் உற்சாகமும் போட்டிபோட, அவன் முகம் இயல்பாக இருந்தது.

அவள், “என்ன பேச்சை காணும்?” என்றாள். 

அவன் அமைதியாக அவளை பார்த்தான். அவன் வாய் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை தான் ஆனால் மனமோ ‘நீ என்னை மாற்றுகிறாய்’ என்று கூறியது.

அவனது மனம் அவளது அருகாமையை அணுஅணுவாய் ரசிக்க மூளையோ ‘இது தவறு’ என்று எச்சரிக்கை செய்தது. மனம் ‘இருக்கும் வரை அனுபவிக்கிறேன்’ என்று கூற, மூளையோ ‘அவள் உன்னுடையவள் இல்லை’ என்று எடுத்துரைத்த நொடியில் அவன் முகம் இறுகியது. சட்டென்று திரும்பி வண்டியை கிளப்பினான்.

அவனது இந்த செய்கையை சற்றும் எதிர்பாராதவள் வண்டி கிளம்பிய வேகத்தில் தடுமாறி அவன் மீது லேசாக மோதி விலகியவள் பிடிமானத்திற்காக அவன் தோளில் கையை வைத்தாள்.  

அவன் சட்டென்று வண்டியை நிறுத்தி திரும்பி அவளை முறைத்தபடி, “இது தான் நீ கேப் விட்டு உட்காரும் லட்சனமா?” என்றான். 

அவள் சட்டென்று கையை எடுத்தபடி மெல்லிய குரலில், “சாரி.. திடீர்ன்னு ஸ்டார்ட் பண்ணவும் தடுமாறியதால் இடிச்சுட்டேன்” என்றாள்.

அவனது கோபத்தை முதல் முறையாக நேரில் பார்க்கவும், அவள் சற்று அமைதியானாள். முன்பு அவன் நீளிமாவின் துரோகத்தில் வருந்திய அந்த பத்து நாட்களில் அவன் அவளிடம் கோபத்தை காட்டினான் தான் ஆனால் அப்பொழுது அது ஒரு எல்லை கோட்டில் இருந்தது மேலும் அவளும் சின்ன பெண் என்பதோடு அவனை சரி செய்யும் குறிக்கோள் மட்டுமே அவளிடம் இருந்ததால் அது அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. இப்பொழுது இருவரின் மனநிலையும் மாறியிருந்தது.

அவன் தனது இயலாமையை கோபமாக வெளியிட்டான். காதல் வந்த பிறகு நேரில் சந்தித்த முதல் கோபம் என்பதோடு அவன் தனது தொடுகையில் தான் அதிகம் கோபம் கொண்டான் என்பதும் சேர்ந்துக்கொள்ள அவள் சிறிது அமைதியானாள்.

அவளது இறங்கிய குரலில் அவனது கோபம் மட்டுப்பட்டது. எப்பொழுதும் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவன் அவளது வருகையில் மனம் தடுமாறுவதோடு அவளையும் காய படுத்துகிறோமோ என்ற எண்ணம் தோன்றவும் தன் மீதே கோபம் கொண்டான்.

சில நொடிகள் மௌனத்தில் கழிய அவள் மெல்லிய குரலில், “நான் தான் சாரி சொல்லி தள்ளி உட்கார்ந்துட்டேனே! கொஞ்சம் சிரியேன்” என்றாள்.   

அவளது குரல் இப்பொழுதும் மெலிதாக ஒலிக்கவும் அவளை இயல்பாக்கும் பொருட்டு தன்னைத் தானே கட்டுபடுத்திக் கொண்டு, “கொஞ்சம்னா எப்படி! இது போதுமா?” என்று அவன் மிக லேசாக சிரிக்கவும் அவள் விரிந்த புன்னகையுடன், “ப்ரதீப் இஸ் பக்” என்றாள்.

அவனும் புன்னகையுடன், “ப்ரித்தி இஸ் ஆல்ஸோ பக்” என்றான்.

“நீ எப்போதும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்.. அது தான் என் ஆசை” என்று சிறிது உணர்ச்சி பூர்வமாக கூற, அவன் ஒரு நொடி அவளது விழிகளை ஆழமாக பார்த்தான் பிறகு தலையை உலுக்கிக் கொண்டு, “எப்போதும் சிரிச்சிட்டே இருந்தா அதுக்கு அர்த்தம் வேறு! அப்படி ஒரு பெயரை நான் வாங்குறது தான் உன் ஆசையா?” என்றான். 

“இன்னுமா உனக்கு அந்த பெயர் கிடைக்கலை?” 

“இது தான் சொந்த காசில் சூன்யம் வச்சிக்கிறது” 

“இங்கே சொந்த காசில் இல்லை பாஸ் சொந்த வார்த்தையில்” 

“எதில் பொருத்தம் இருக்குதோ இல்லையோ இப்படி கடிப்பதில் உனக்கும் ப்ரகாஷிற்கும் பொருத்தம் சூப்பர்” என்றதும் அவளது சிரிப்பு மறைந்தது.

அவன் அவளை யோசனையுடன் பார்த்தான். அந்த ஒரு நொடியில் பல விதமாக குழம்பினான். ‘ஏன் சிரிப்பு சட்டுன்னு மறைஞ்சிருச்சு? அம்மா இவ ப்ரகாஷை விரும்புற மாதிரி தானே சொன்னாங்க! நேத்து கல்யாணம் உறுதி ஆகியிருக்குது இன்னைக்கு காலையில எதுக்கு வந்திருக்கா? அத்தையும் மாமாவும் எப்படி இவளை விட்டாங்க? நம்ம வீட்டு சாவி வேற இவகிட்ட இருக்குது! அம்மா அப்பா எப்படி இவகிட்ட கொடுத்தாங்க? என்ன தான் நடக்குது?’ என்று பலவாறு குழம்பினான்.

ஒரு நொடி அமைதியாக இருந்தவள் சுதாரித்து, “ரைட் போலாம்னு சொல்லிட்டு கிளம்பாம மழை வரும் வரை இப்படி கதை பேசிட்டே இருந்து என்னை ஏமாத்துற திட்டமா!” என்றாள். 

“ஏ! இது கூட நல்ல யோசனையா இருக்குதே!” 

“சொந்த வார்த்தையில் சூன்யம் வைப்பதில் உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்குது போல!” என்று அவள் மெல்லிய புன்னகையுடன் கூற, ஒரு நொடி மௌனமாவது அவனது முறையாயிற்று.

அவனது மாற்றத்தை கவனித்தவள் அதை கவனிக்காதது போல், “சரி சரி.. கிளம்பு” என்று விரட்டினாள்.

 

அவன் அமைதியாக வண்டியை கிளப்பினான். முதலில் சில நொடிகள் இருவரையும் மௌனமே ஆட்சி செய்தது. அவன் குழப்பத்தில் மெளனமாக இருக்க, அவள் அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது என்று மெளனமாக இருந்தாள்.

ஆனால் மௌனம் நீடித்தது சில நொடிகள் மட்டுமே. அந்த மௌனத்தை கலைத்தது ப்ரித்திகா தான். அந்த மழை சாரலில் தன்னவனுடன் செல்லும் முதல் சவாரியை அணுஅணுவாக ரசித்தவள் தன்னவனையும் ரசிக்க வைத்தாள்.

ஆம் ப்ரதீபனையும் ரசிக்க வைத்தாள். ‘சாலையோர பூக்களை பார்.. அந்த குழந்தையை பார்.. இந்த குட்டி பையனின் பார்வையை பார்.. அதை பார்.. இதை பார்..’ என்று பல ரசனைகளை வெளிபடுத்தியவள் அதை அவனுள் புகுத்தவும் செய்தாள். அவனும் மனதின் குழப்பங்களை ஓரமாக ஒதுக்கிவிட்டு அவள் கூறியதை ரசிப்பதோடு அவளையும் சேர்த்து ரசித்தான்.

இரண்டு கிலோமீட்டர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மழை தூறல் நின்றிருந்தது. வழியில் இருந்த பூங்காவை பார்த்ததும் அவள் அவசரமாக, “வண்டியை நிறுத்து.. பார்க் போயிட்டு வீட்டுக்கு போலாம்” என்றாள். 

“விளையாடாத ப்ரித்தி.. நான் ஆபீஸ் போகணும்” 

“ஒரு பத்து நிமிஷம் தான்” 

“ச்ச்” 

“ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சத் தொடங்க, அவன், “சரி.. கெஞ்ச ஆரம்பிக்காதே” என்றான். 

“ஏ! இது நல்லா இருக்குதே! ப்ளீஸ்னு கெஞ்சினா ஓகே சொல்லிடுவியா?” 

“எல்லா நேரத்திலும் இது நடக்காது.. எல்லோருக்கும் இந்த சலுகை கிடையாது” 

அவன் கூறியதில் முதல் பாதியை கண்டுகொள்ளாதவள், “ஓ!! எல்லோருக்கும் கிடையதுனா நான் ஸ்பெஷல்!!!” என்றாள். 

“அதில் என்ன சந்தேகம்! நீ என் நெருங்கிய தோழி” என்றபடி அவன் வண்டியை பூங்காவின் முன் நிறுத்தினான். 

“அப்படியா?” என்றபடி அவள் இறங்கினாள்.

“அதில் என்ன சந்தேகம் உனக்கு?” என்றபடி அவனும் இறங்கினான்.

“பார்க்கலாம்” என்றபடி அவள் முன்னால் நடக்க, “ஏன்?” என்றபடி அவனும் நடந்தான்.

இருவரும் பூங்காவில் இருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.

அவள், “அவ் டூ யூ பீல் நொவ்?” என்று கேட்டாள். 

“புரியலை?” 

“இப்போ போன பைக் ரைட் பத்தி கேட்கிறேன்” 

அவன் முகம் மென்மையானது. மெல்லிய புன்னகையுடன், “புதுமையான அனுபவம்.. ரொம்ப அழகா இருந்தது.. நீ சொன்ன மாதிரி என்னாலயும் இந்த ரைடை வாழ்க்கையில் மறக்க முடியாது” என்று இதயத்தில் இருந்து அவன் கூறவும் அவள் முகம் மலர்ந்தது.

அவள் புன்னகையுடன் அவனது விழிகளை பார்த்தபடி, “தேங்க்ஸ்.. நீ இப்படி உள்ளத்தில் இருப்பதை உள்ளது உள்ளபடி மறைக்காமல் சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டா நமக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துடும்” என்றாள். 

அவன் முகத்தில் இருந்த மென்மை மறைந்தது. அவள் விழிகளை தீர்க்கமாக பார்த்தவன், “நமக்குள் என்ன கண்ணாமூச்சி ஆட்டம்?” என்று வினவினான். 

அவளும் தீர்க்கமான பார்வையுடன், “இல்லைனு சொல்றியா?” என்று வினவினாள். 

“ப்ரித்தி என்ன சொல்லணுமோ நேரிடையா சொல்லு” 

“நீயும் நேரிடையா பதில் சொல்லுவியா?” 

“அது நீ கேட்கும் கேள்வியை பொருத்து” 

“இதை தான் கண்ணாமூச்சி ஆட்டம்னு சொன்னேன்” 

“புரியலை” 

கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டவள், “சரி.. எப்போதும் போல நானே விட்டு கொடுக்கிறேன்.. நான் ஏன் எதுக்கு இங்கே வந்திருக்கிறேன்னு தெரியுமா?” என்று கேட்டாள். 

“அதை தானே நீ வந்ததுல இருந்து கேட்கிறேன்” 

“நீ முன்னாடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வந்திருக்கிறேன்” 

அவன் யோசனையுடன், “என்ன கேள்வி?” என்றான். 

“நான் யாரை காதலிக்கிறேன்னு கேட்டியே” 

“அதை சொல்ல நேரில் வந்தியா?” 

“ஹ்ம்ம்” 

“எனக்கு இன்னும் புரியலை.. மூளைக்குள் நிறைய கேள்விகள் இருக்குது” 

“தெரியும்” 

“என்ன தெரியும்?” 

“நேத்து எங்க வீட்டில் என்ன நடந்ததுன்னு தெரியுமா?” 

“ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்லணும், மறு கேள்வி கேட்கக் கூடாது” 

“அதை நீ சொல்றியா? சரி விடு ஒருத்தரை ஒருத்தர் சொல்லிட்டு இருந்தா இதுக்கு முடிவு வராது” 

அவன் அமைதியாக பார்க்கவும் அவள், “என்ன?” என்றாள். 

“முடிவு முடிவுனு சொல்லிட்டே இருக்கிற.. என்ன முடிவு?” 

“சொல்றேன்.. நீ முதலில் நேத்து எங்க வீட்டில் என்ன நடந்ததுன்னு தெரியுமானு சொல்லு” என்றவள் “ப்ளீஸ்” என்று சேர்த்து சொல்லவும்,

அவன் மெல்லிய புன்னகையுடன், “எப்போதும் இந்த ப்ளீஸ் சலுகை பெறாதுனு சொன்னேனே” என்றான். 

“இன்னைக்கு ஒரு நாள் அதுக்கு சலுகை உண்டு” 

“அதை நான் சொல்லணும்” 

“இப்போ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா முடியாதா?” 

“முடியாதுனு சொன்னா என்ன செய்வ?” 

“நீ அழுற வரை கெஞ்சுவேன்” 

“எல்லோரும் கெஞ்சும் போது அழுவாங்க! நீ கெஞ்சியே என்னை அழ வைப்பேன்னு சொல்ற! இது என்ன புதுசா இருக்குது?” 

“அது அப்படி தான்.. இப்போ பதிலை சொல்லப் போறியா இல்லையா?” 

“சரி சொல்றேன்..” என்றவன் உணர்ச்சியற்ற குரலில், “உனக்கும் ப்ரகாஷிற்கு திருமணம் உறுதியாச்சு” என்றான். 

“அப்படி யாரு உன்கிட்ட சொன்னது?” 

“அம்மாவும் ப்ரகாஷும்” 

“அப்படியா?” 

“ஆமா.. ஏன் கேட்கிற? விளையாடாம விஷயத்தை சொல்லு” 

“சரி நீ இப்போ ரெண்டு பேருக்கும் போன் பண்ணி அழுத்தம் திருத்தமா அந்த கேள்வியை கேளு” 

அவன் அவளையே பார்க்கவும், “கேளு சொல்றேன்ல.. உன் மூளையில் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாம இன்னைக்கு நான் பெங்களூர் விட்டு கிளம்ப போறதில்லை.. ரெண்டு பேர்கிட்டயும் பேசு” என்றவளின் குரலில் இருந்த உறுதி அவனை மறுபேச்சின்றி கைபேசியை எடுக்க வைத்தது.

அவன் முதலில் அன்னையை அழைத்தான்.

யமுனா, “ஹலோ.. எப்படி இருக்கிற ப்ரதீப்? ப்ரித்தி வந்துட்டாளா? போனே பண்ணலை” என்றார். 

“அவ வரதை ஏன் நேத்து நைட் சொல்லலை?” 

“அது ப்ரித்தி தான் சர்ப்ரைஸ்னு சொல்ல வேணாம்னு சொன்னா..” 

“சரி அதை விடுங்க.. நேத்து யாருக்கு கல்யாணம் உறுதியாச்சு?” 

“ப்ரகாஷுக்கு” 

“புத்திசாலித்தனமா பதில் சொல்றதா நினைப்பா! ப்ராகாஷுக்கு யார் கூட கல்யாணம் உறுதியாச்சு?” என்று அவன் கேட்கவும் யமுனா திணறினார். ப்ரித்திகா என்ன சொல்லியிருக்கிறாள் என்று தெரியாமல் என்ன சொல்வது என்று குழம்பினார்.

அவன் மீண்டும், “அம்மா பதில் சொல்லுங்க” என்று குரலை உயர்த்தவும்,

அவர் மெல்லிய குரலில், “நித்திலாவுடன் ப்ரகாஷுக்கு கல்யாணம் உறுதியாச்சு” என்றதும் அவன் சட்டென்று ப்ரித்திகாவை பார்த்தான். அவள் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனால் அவளது பார்வையில் இருந்து அவனால் எதையும் அறிய முடியவில்லை. சற்று முன்பு அவன் காட்டிய உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் இப்பொழுது அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும் எல்லோரும் சேர்ந்துகொண்டு தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கோபமும் கொண்டது.

“ஹலோ.. ப்ரதீப்” என்ற அன்னையின் குரலில் சுதாரித்தவன் அவளை முறைத்தபடி, “நேத்து என்ன சொன்னீங்க?” என்றான். 

“என்ன சொன்னேன்?” 

“அம்மா!” என்று அவன் குரலை உயர்த்த இப்பொழுது சுதாரித்திருந்த யமுனா திடமாக, “என்ன டா?” என்றார்.

“நேத்து இவளுக்கும் அவனுக்கும் கல்யாணம் உறுதியாகியிருப்பதா தானே சொன்னீங்க?” என்றவனது கேள்வியில் ‘அப்போ அவன் கூட ப்ரித்திகா இருக்கிறாள்’ என்பதை யமுனா புரிந்துக் கொண்ட நேரத்தில் அங்கே வந்த சஹானா மெல்லிய குரலில், “அம்மா ப்ரித்திகா அண்ணா கிட்ட உண்மையை சொல்ல சொல்லி மெசேஜ் பண்ணியிருக்கா” என்று கூறவும் யமுனா முற்றிலும் தெளிந்தார்.

யமுனா, “எவளுக்கும் எவனுக்கும்?” என்று கேட்டார். 

“அம்மா!” 

“என்னடா இன்னைக்கு அம்மா அம்மானு ஏலம்விட்டுட்டு இருக்கிற! நேரிடையா கேள்விகளை கேட்டால் நேரிடையான பதில்கள் கிடைக்கும்” 

பல்லை கடித்தவன், “ப்ரித்திகாக்கும் (ஒரு நொடி இடைவெளி விட்டு) ப்ரகாஷுக்கும் கல்யாணம் உறுதியாகி இருப்பதா தானே சொன்னீங்க?” என்றான். 

“நான் அப்படி சொல்லலை” 

“பொய் சொல்லாதீங்க மா”

 “எனக்கு அந்த பழக்கமில்லை” 

“சகவாச தோஷத்தில் வந்திருக்கலாமே!” 

“நீ உன்னை சொல்றியா? ப்ரித்தியை சொல்றியா?” 

“நான் பொய் சொல்வேனா மா?” 

“தெரியலை” 

“அம்மா!” 

“என்ன?” 

“சரி நேத்து என்ன சொன்னீங்க?” 

“முதலில்  ப்ரித்திக்கும் ப்ரகாஷுக்கும் கல்யாணம் உறுதி பண்றது போல தெரியுதுனு தான் சொன்னேன்.. முடிந்துவிட்டதா சொன்னேனா?” 

“சரி.. நைட் என்ன சொன்னீங்க?” 

“நீ என்ன கேட்ட? பங்க்ஷன் எப்படி போச்சுனு கேட்ட.. நல்லபடியா முடிந்ததுன்னு சொன்னேன்.. ப்ரித்திக்கு சந்தோஷமானு கேட்ட.. அவளுக்கும் சந்தோசம்னு சொன்னேன்.. அது உண்மை தானே.. இதில் எங்கே நான் பொய் சொல்லியிருக்கிறேன்?” 

“..” 

“என்னடா சத்தத்தை காணும்?” 

“சரி நான் அப்புறம் பேசுறேன்” என்றபடி அழைப்பை துண்டிக்கவும் பெருமூச்சொன்றை வெளியிட்ட யமுனாவின் முகத்தில் சிறு கவலை இருந்தது.

சஹானா, “கவலைப் படாதீங்க மா.. ப்ரித்தி பார்த்துப்பா” என்றாள். 

“நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன்.. பார்க்கலாம்” என்றவர் பூஜை அறைக்கு சென்றார்.

ப்ரதீபன் அமைதியாக இருந்தான். ப்ரித்திகா அவனது மௌனத்தை கலைக்கவில்லை. அமைதியாக இருந்தவன் ப்ரகாஷுடன் நிகழ்ந்த உரையாடலை யோசித்துப் பார்த்தான். ப்ரகாஷ் பெண்ணின் பெயரை சொன்னபோது முதலில் சரியாக கேட்கவில்லை என்பது நினைவிற்கு வரவும் அவனுக்கு விஷயம் புரிந்தது. இருந்தாலும் உறுதிபடுத்திக்கொள்ள அவனை அழைத்தான்.

ப்ரகாஷ், “ஹலோ” என்றதும், 

“உனக்கு யாருடன் கல்யாணம் உறுதியாகி இருக்குது?”  என்று கேட்டான். 

“அதை தான் நேத்தைக்கே சொன்னேனே!” 

“பரவாயில்லை.. இப்போ சொல்லு” 

“உனக்கு என்னாச்சு?” 

“டேய் இப்போ சொல்லப் போறியா இல்லையா?” என்று இவன் குரலை சற்று உயர்த்தவும்,

அவன், “நித்தி கூட.. எதுக்குடா இவ்வளவு டென்ஷன்? என்னாச்சு?” என்றான். 

“சரி நான் அப்புறம் பேசுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து ப்ரித்திகாவை தீர்க்கமாக பார்த்து, “ஏன்?” என்று கேட்டான். 

“ஏன்னு உனக்கு தெரியாதா?” 

“அப்போவே சொன்னேன்.. கேள்வி கேட்டால் பதிலை சொல்லுனு” என்று அவன் எரிச்சலுடன் கூறினான்.

அவள் அவன் கண்களை பார்த்தபடி, “ப்ரகாஷுக்கு என்னை பெண் கேட்டது உண்மை.. ஆனா நான் ஒத்துக்கலை.. ஏன் என்றால்” என்று ஒரு நொடி இடைவெளி விட்டவள், “நான் என் ப்ரதீபன் அத்தானை காதலிக்கிறேன்” என்றாள். 

“இல்ல இது சரி வராது” 

“என்ன சரி வராது?” 

“விட்டுரு” 

“என்னை வேண்டாம்னு யாரும் சொல்ல மாட்டாங்க.. என் காதல் வெற்றி பெரும்னு சொன்ன!” 

“இல்ல இது சரி வராது.. இதை இப்படியே விட்டுரு.. நீ காதல்னு சொல்றதுக்கு முன்னாடி இருந்த நிலை சரி.. நட்புக்கும் காதலுக்கும் நடுவில் இருந்த நிலை நல்லா இருந்தது.. அது அப்படியே இருக்கட்டும்” என்றதும்,

அவள் முறைத்தபடி, “உனக்கு என்ன காக்க காக்க சூர்யானு நினைப்பா?” என்றாள். 

சட்டென்று தோன்றிய சிரிப்பை மறைத்தவன் உணர்ச்சியற்ற குரலில், “எனக்கு எந்த நினைப்பும் இல்லைனு தான் சொல்றேன்.. ஆனா சூர்யா சொன்னது எனக்கும் பொருந்தும்.. நான் இப்போ தனியா இருந்து பழகிட்டேன்.. எனக்கு அது தான் சரி வரும்” என்றான். 

“சூர்யா சொன்னது உனக்கு பொருந்தம்னா ஜோதிகா சொன்னதில் ஒண்ணு எனக்கும் பொருந்தும்.. 

அது ‘நான் உன்னை காதலிக்கிறேன், ட்ரூலி டீப்லி மேட்லி.. ஆனா அடுத்து ஜோ சொன்ன மாதிரி ‘என் காதலை தான் சொன்னேன், என்னை ஏத்துக்கோனு கேட்டேனானு’ சொல்லுவேன்னு நினைக்காத.. என்னிடம் அது நடக்காது..

 நீயும் என்னை காதலிக்கிறனு தெரிந்தாலும் அதை நூறு சதவிதம் உறுதி செய்துக்க நினைத்தேன்.. அது இப்போ உறுதியாகிருச்சு.. இப்போ என் கேள்வி என் காதலை நீ நிராகரிப்பதற்கான காரணம் மட்டுமே” 

அவன் உதட்டோரம் மெல்லிய புன்னகை அரும்பவும் அவள் எரிச்சலுடன், “என்ன?” என்றாள். 

“என்ன என்ன?” 

“எதுக்கு இப்போ சிரிச்ச?” 

“நான் இப்பவும் சொல்றேன்.. எனக்கு உன்னை பிடிக்கும்..” 

“ஆனா காதல் இல்லை.. அதானே சொல்லப் போற?” 

அவன் மெல்லிய புன்னகையுடன், “உன்னோட இந்த அடாவடித் தனம் எனக்கு பிடிக்கும் தான் ஆனா அது என்னிடம் பலிக்காது” என்றான். 

“நான் அடாவடியா?” 

“பின்ன நீ அடக்க ஒடுக்கமான பொண்ணா?” 

அவனை முறைத்தவள், “நான் அடாவடினா நீ?” என்றாள். 

“அதனால் தான் உன் அடாவடி என்னிடம் பலிக்காதுனு சொல்றேன்” 

“பேச்சை மாத்தாம பதில் சொல்லு” 

“காதலே இல்லைனு சொல்றேன்..” 

“சரி என் காதலை ஏன் ஏற்க மறுக்கிற?” 

“நீ என்னை காதலித்தால் நானும் உன்னை காதலிக்கணுமா என்ன?” 

“இல்லை தான் ஆனா சார் நேத்து ஏன் தண்ணி அடிச்சீங்க?” 

“அது.. என் சொந்த விஷயம்” 

அவள் சிரிக்கவும், இப்பொழுது அவன் எரிச்சலுடன், “என்ன சிரிப்பு?” என்றான். 

“எனக்கும் உன் அடாவடித்தனம் பிடிக்கும்.. அதான் சிரிச்சேன்” 

“எல்லாரையும் உன் கைக்குள் போட்டுக்கிட்டு என்னை தேவை இல்லாம ஏமாத்தியதுக்கு கோபப்படாமல் உன்னுடன் சிரிச்சு பேசுறது என் தப்பு தான்” 

“கோபப்பட்டிருக்க வேண்டியது தானே! நானா வேண்டாம்னு சொன்னேன்! உன்னால் கோபப்பட முடியாது.. ஏன்னா உண்மை தெரிந்த நொடியில் உன் மனம் கோபப்பட்டதை விட சந்தோஷப்பட்டது தான் அதிகம்.. உன்னை ஏமாத்தியது புரிந்த உனக்கு எதுக்காக அப்படி செய்தோம்னும் புரிந்து இருக்குமே! அதனால காதல் இல்லைனு பிணத்தாம உண்மையை ஒத்துக்கோ” 

கோபமாக எழுந்தவன், “நீ எப்போ ஊருக்கு கிளம்புற?” என்று கேட்டான். 

அவள் அமைதியாக இருக்கவும், “நான் ஆபீஸ் கிளம்புறேன்.. உன்னை வீட்டில் விட்டுட்டு போறேன்.. வரியா வரலையா?” என்று கேட்டான். 

அவள் அசையவில்லை என்றதும் அவளது கைபேசியை பிடுங்கியவன் ஸ்ரீராம் எண்னை கண்டறிந்து தனது கைபேசியில் இருந்து அழைத்தான்.

ஸ்ரீராம் “ஹலோ” சொன்னதும்,

“நான் ப்ரதீபன் பேசுறேன்.. உங்க தங்கச்சி என் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பார்க்கில் இருக்கிறா.. அட்ரெஸ் அனுப்புறேன்.. வந்து கூட்டிட்டு போங்க” என்றபடி அழைப்பை துண்டித்தவன் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பினான்.

“நம் விஷயம் ராம் அண்ணாவுக்கு..” என்றவளின் பேச்சை இடையிட்டவன், 

“நம் இல்லை உன் விஷயம் உன் அண்ணாவுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்.. எப்போதும் உன் அண்ணா தோளில் தொங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு நெருக்கமா இருக்கும் நீ இதை பத்தி நிச்சயம் சொல்லியிருப்ப” என்றான். 

அவள் மீண்டும் சிரிக்கவும், அவன் கோபமும் எரிச்சலுமாக, “என்ன?” என்றான். 

“எதுக்கு சிரிச்சேன்னு சொல்றேன்.. அதுக்கு முன்னாடி ஒரு கேள்விக்கு பதில் சொல்லு.. என் ராம் அண்ணா உனக்கு யார்?” என்றதும் அவனுக்கு சுரீர் என்று தனது தவறு புரிந்தது.

அவனது அதிர்ச்சியை பார்த்தவள், “விடு.. நான் சமாளிச்சுக்கிறேன்.. ஆனா இனி இப்படி செய்யாத.. அப்புறம் நான் சிரிச்சதிற்கான காரணம் ஒவ்வொரு செய்கையிலும் உன்னை அறியாமல் நீ என்னை காதலிப்பதை உறுதி செய்ற” என்றாள். 

“என்ன! உன்னை நல்ல புரிந்து வைத்திருந்தால் நான் உன்னை காதலிப்பதா அர்த்தமா? ப்ரகாஷ் கூட தான் உன்னை அறிந்து வைத்திருக்கிறான்” என்றபோது அவனையும் அறியாமல் அவன் குரலில் கோபம் கூடியது.

அவள் மெல்லிய புன்னகையுடன், “நான் அப்படி சொல்லலை.. நல்ல நண்பர்களுக்கு நடுவிலும் நல்ல புரிதல் இருக்கும், எனக்கும் ப்ரகாஷுக்கும் இருப்பது போல்.. ஆனா அதிகமான பொறாமை காதலில் மட்டுமே வரும், உனக்கு வருவது போல்.. நட்பிலும் பொறாமை வரும் ஆனா அண்ணன் மேல இருக்கிற அன்பை அது பொறாமையுடன் பார்க்காது.. காதல் மட்டுமே அதையும் பொறாமையுடன் பார்க்கும்.. 

இப்போ கடைசியா பேசினப்ப கூட உன் காதல் வெளிப்பட்டது.. ப்ரகாஷ் பெயரை சொல்லும் போது உன்னையும் அறியாம உனக்கு கோபம் வருது.. அதுக்கு காரணம் என்னை அவனுடன் இணைக்க முடியாமல் நேத்து முழுவதும் நீ தவித்த தவிப்பு.. 

நேத்து உன்னை ஏமாத்த நாங்க நினைக்கலை.. நான் மறுப்பு சொல்றதுக்கு முன்னாடி நீ போன் பண்ணது, அதுக்கு அத்தை உன்கிட்ட சொன்னது எல்லாம் தற்செயலா நடந்தது.. அதை நான் பயன் படுத்திக்கிட்டேன் ஆனா யாரையும் பொய் சொல்ல சொல்லலை.. உண்மையை மறைக்க முயற்சி செய்தோம்.. உன் மனதை அறிய அப்படி செய்தோம்.. அதுக்கு பயன் கிடைச்சிருச்சு..” என்றவள் ஒரு நொடி இடைவெளி விட்டு வருந்திய குரலில்,

“ஆனா அதை உறுதி செய்வதற்காக கூட நீ குடித்தது எனக்கு பிடிக்கலை.. ரொம்ப கஷ்டமாவும் வருத்தமாவும் இருக்குது” என்று முடித்தாள். 

அவளது வருத்தத்தில் குற்றயுணர்ச்சியும் வருத்தமும் தோன்றினாலும் அதை வெளிக்காட்டாமல் இறுக்கமான முகத்துடனே இருந்தான்.

அவள், “நீ என்னை மறுப்பதற்கான காரணம் தான் எனக்கு புரியலை.. நீ எப்படியும் சொல்லப் போறதில்லை.. அதுக்காக நானும் உன்னை விட போறதில்லை.. என் காதலை உன் கிட்ட நேரில் சொல்லி உன் மனதில் இருப்பதை தெரிஞ்சுக்க நினைச்சேன்.. அது முழுமையா நிறைவேறலைனாலும் இப்போ நான் சந்தோஷமா தான் இருக்கிறேன்.. நீயும் உள்ளுக்குள் சந்தோஷமா தான் இருக்கிறனு தெரியும்.. இதே சந்தோஷத்துடன் எக்ஸமஸ் எழுதி முடிச்சிட்டு உன்னை கரெக்ட் பண்ணும் சூப்பர் திட்டத்துடன் உன்னை சந்திக்கிறேன்.. இப்போ கிளம்பலாம் வா” என்றபடி எழுந்தவள் தனது கைபேசியை பிடுங்கி ஸ்ரீராமை அழைத்து ப்ரதீபன் வீட்டிற்கு வர சொல்லிவிட்டு வைத்தாள்.

அவளது நீண்ட உரையாடலை கேட்டவன் பேச்சின்றி சிலையாய் நின்றிருந்தான். 

தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 24

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 26