in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 22

 ப்ரகாஷ் நித்திலாவின் திருமணம் நித்திலாவின் படிப்பை எண்ணத்தில் கொண்டு இரண்டு வருடங்களுக்கு பிறகு என்றும் அவர்களது நிச்சயதார்த்தத்தை ப்ரித்திகாவின் திருமணம் நிச்சயம் ஆனதும் வைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர்.

ப்ரகாஷ் நித்திலாவின் காதில், “அப்போ நம்ம நிச்சயதார்த்தம் ப்ரதீபன் கையில் தான் இருக்குது” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறவும், அவள் சிறு ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள்.

அவன், “என்ன?” என்று புருவம் உயர்த்த, 

“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள். 

“என்னது தெரியும்?” 

“ப்ரதீப் அத்தானை தான் ப்ரித்தி விரும்புறானு” 

அவன் முறைக்கவும், அவள், “என்ன?” என்றாள். 

“நான் என்ன சொன்னேன்?” 

“என்ன சொன்னீங்க?” 

“என்னை தவிர வேறு யாரையும் அத்தான்னு கூப்பிடக் கூடாதுனு சொன்னேனே!” 

“இப்போ இதுவா முக்கியம்?” 

“எனக்கு இது தான் முக்கியம்” 

“உங்களுக்கே இது அதிகமா தெரியலை?” 

“கொஞ்சம் கூட தெரியலை” என்றபடி அவன் காதல் பார்வை பார்க்கவும்,

ஆகாஷ், “டேய் அண்ணா பப்ளிக் பப்ளிக்” என்றான்.

இருவரும் சிறிது அசடு வழிய, அனைவரும் சிரித்தனர்.

ப்ரகாஷின் தந்தை ஈஸ்வரனிடம், “சரி.. நாங்க சரோ(அவரது தங்கை – இன்னொரு கரெக்டரானு அலற வேண்டாம்.. இவர் கதையில் வரப்போவதே இல்லை) வீட்டுக்கு போயிட்டு வரோம்.. மதியானம் அங்க சாப்பிட வரதா சொல்லி இருக்கிறேன்” என்றதும்,

ஈஸ்வரன், “சரி அத்தான்” என்றார்.

ப்ரகாஷ், “அப்பா நான் சாயுங்காலம் வரேன்” என்றதும்,

அவர் மெல்லிய புன்னகையுடன், “அதை நீயே உன் அத்தை கிட்ட போன் பண்ணி சொல்லு” என்றார். 

“உங்க தங்கச்சியை சமாளிக்க என்னால முடியாது.. நீங்களே சமாளிச்சுக்கோங்க பா ப்ளீஸ்” 

“சரி உனக்கு தலைவலினு சொல்லிடுறேன் ஆனா இந்த ஒரு முறை மட்டும் தான்” என்றதும் அவனும் சரி என்பது போல் தலையை ஆட்டினான்.

ஆகாஷ் ஏதோ சொல்ல வர அவர் அவனிடம், “சீக்கிரம் கிளம்பு” என்று முடித்துவிட, அவன் தமையனை பரிதாபமாக பார்க்க அவனோ, இவனை பார்த்து புன்னகையுடன், “ஜமாய்” என்றான்.

ஆகாஷ் பல்லை கடித்துக்கொண்டு, “ஏன்டா சொல்ல மாட்ட! தப்பிச்சிட்ட மிதப்புல பேசாத!” என்றான். 

சரஸ்வதியின் கணவர், “உன்னை கிளம்பச் சொன்னேன்” என்றதும் வேறு வழியில்லாமல் ஆகாஷ் பெற்றோருடன் அத்தையின் வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.

அவர்கள் சென்றதும் இருக்கையில் அமர்ந்த ஈஸ்வரன் நின்றுக் கொண்டிருந்த ப்ரித்திகாவை முறைக்க,

அவள், “என்ன லிங்கா பாசம் ரொம்ப பொங்குது?” என்று வினவினாள்.

ஈஸ்வரன் கடுமையாக முறைக்கவும், ப்ரித்திகா விளையாட்டுதனத்தை கைவிட்டவளாக, “என்ன பா?” என்று கேட்டாள். 

ஈஸ்வரன் கோபத்தை அடக்கிய குரலில், “உனக்கு செல்லம் கொடுத்து நானே கெடுத்துட்டேன்.. உன்னோட அம்மா சொல்லும் போதெல்லாம் எனக்கு புரியலை ஆனா இப்போ வருத்தப்படுறேன்” என்றார். 

ப்ரித்திகா, “அப்பா!” என்று அழைக்க, 

“உனக்கு சுதந்திரம் கொடுத்தா அதை நீ அட்வான்டேஜ் எடுத்துக்கிற” என்று கடுமையாகவே கூறினார். 

ப்ரித்திகாவிற்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. மேகலாவிற்கு கணவரின் கோபத்திற்கான காரணமும் நியாயமும் புரிந்ததால் அமைதியாக இருந்தார். யமுனா சிறு தவிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, நித்திலா தமக்கை அருகில் சென்று நின்று கொண்டாள். சஹானாவும் ப்ரகாஷும் அதிர்ச்சியுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர். ஈஸ்வரனிற்கு அரிதாக தான் கோபம் வரும் அதனால் அவரது கோபத்தை பற்றி சஹானா மற்றும் ப்ரகாஷ் அறிந்திருக்கவில்லை.

ஈஸ்வரன் கோபத்துடன், “சுயமா முடிவெடுக்கும் சுதந்திரம் கொடுத்து இருக்கிறேன் தான், ஆனா இன்னைக்கு நீ செய்த காரியம்!!! இன்னைக்கு உன்னால எத்தனை பேருக்கு சிரமம்! கல்யாணம்-ங்கிறது உனக்கு விளையாட்டா? இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையை நீ எப்படி முடிவு செய்யலாம்?..” என்றார். 

நித்திலா, “அப்பா ப்ரித்தி..” என்று ஆரம்பிக்க, 

தனது ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்தபடி ஈஸ்வரன் நித்திலாவிடம், “மூச்.. நான் இப்போ சொன்னது உனக்கும் சேர்த்து தான்.. எவ்வளவு பெரிய முடிவை ஜஸ்ட் லைக் தட் எடுக்கிறீங்க! உங்களுக்கு எல்லாம் விளையாட்டா போச்சுல?” என்றவர் ப்ரகாஷையும் விட்டுவைக்காமல் முறைத்தார்.

“மாமா அது வந்து” என்று அவன் தயங்க,

அவரோ ப்ரித்திகா பக்கம் திரும்பி, “நீ யாரை காதலிக்கிறனு சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்குமா? நீ யாரை விரும்புறன்னு எனக்கு இப்போ தெரிந்தாகனும்” என்றார். 

கலங்கிய விழிகளுடன் ப்ரித்திகா, “ரொம்ப சாரி பா.. நான் ப்ரதீப் அத்தானை  தான் விரும்புறேன்” என்றவள் அவர் காலடியில் அமர்ந்து அவரது கையை பற்றி, “ரொம்ப சாரி பா.. என்னை மன்னிச்சிருங்க.. நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கலை.. கல்யாணத்தை நான் நிச்சயமா விளையாட்டா நினைக்கலை.. இன்னைக்கு வேறு வழியில்லாம தான் இப்படி யோசிச்சேன்.. நித்தி ப்ரகாஷ் வாழ்க்கையை விளையாட்டா நினைப்பேனா பா?” என்றபோது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவளது அறிவிப்பில் இன்ப அதிர்ச்சியுடன் அவளை பார்த்த யமுனா அவளது கண்ணீரை கண்டு வெகுவாக வருந்தினார்.

எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் மகளின் முகத்தில் கண்ணீரை கண்டதும் ஈஸ்வரனின் மனம் இளகத் தான் செய்தது இருந்தாலும் அமைதியாக இருந்தார்.

யமுனா, “அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே! விடேன்டா” என்று கூற,

அவர், “நீ தான் க்கா இவளுக்கு அதிகம் செல்லம் கொடுக்கிற” என்றார். 

“ஆமா இப்போ அதுக்கு என்னங்கிற? என் மருமகளுக்கு நான் சப்போர்ட் பண்ணாம வேறு யாரு பண்ணுவாங்க?” 

“அக்கா” 

“என்ன?” 

“நீ பேச்சை திசை திருப்பாத!” என்று கூற,

யமுனா ஏதோ கூற வரவும், மேகலா, “மச்சினி உங்க தம்பிக்கு எப்பவாது தான் கோபம் வரும்.. அது உங்களுக்கே தெரியும்.. அவரோட கோபம் நியாயமானது தானே! அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க!” என்று அமைதியான குரலில் சற்று அழுத்தத்துடன் கூறிவிட யமுனா அமைதியானார்.

யமுனா ஈஸ்வரனை சமாதானம் செய்துவிடுவார் என்று நம்பியிருந்த சஹானா நித்திலா மற்றும் ப்ரகாஷ் இப்பொழுது பரிதாபத்துடன் ப்ரித்திகாவை பார்த்தனர்.

ப்ரித்திகா, “ப்ளீஸ் பா.. என்னை மன்னிச்சிருங்க.. இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.. நான் சொன்ன மாதிரியே உன் கிட்ட தான் முதல்ல நான் யாரை விரும்புறேன்னு சொன்னேன்.. என் வாயால் ப்ரதீபன் பெயரை சொன்னது உன் கிட்ட தான்” என்றாள். 

ஈஸ்வரன் அவளை அமைதியாக பார்த்தார். அந்த பார்வை ‘இதை நீ எப்போ சொல்லி இருக்கனும்?’ என்று கேட்டது.

ப்ரித்திகா, “நான் முன்னாடியே சொல்லாதது தப்பு தான்.. அவன் என்னை எனக்காக கல்யாணம் செய்துக்கணும்னு நினைத்தேன், நினைக்கிறேன்.. பெரியவங்க சொல்றதுக்காக அவன் என்னை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.. அது தப்பா?” என்று கேட்டாள். 

“..” 

“இன்னைக்கு நான் வேற என்ன செய்திருக்க முடியும்னு நினைக்கிற! நான் ப்ரகாஷை காதலிக்கலைனு சொல்லி இருக்கனுமா?” 

“..” 

“இப்படி அமைதியா இருக்காத பா.. ப்ளீஸ் பேசு” என்று கண்ணீர் வடிந்தபடி அவள் கெஞ்சவும்,

யமுனா, “ப்ரித்தி செய்தது சரின்னு சொல்லலை.. ஆனா நீ செய்தது மட்டும் சரியா?” என்று கேட்டார். 

ஈஸ்வரன் யமுனாவை பார்க்கவும், அவர், “என்ன பார்க்கிற? சரசு கூட சேர்ந்துட்டு சர்ப்ரைஸ் அது இதுனு பண்ணாம ஒழுங்கா இவகிட்ட கேட்து இருந்தா இப்படி நடந்திருக்காதே!” என்றதும் சஹானா நித்திலா மற்றும் ப்ரகாஷ் மனதினுள் ‘அதானே!’ என்று கூறிக் கொண்டனர்.

ப்ரித்திகா அமைதியாக, “உன்னை என்கிட்ட பேசவிடாம சரசு அத்தை ஏதாவது சொல்லி இருக்கலாம்.. கூடவே நீயும் நான் ப்ரகாஷை காதலிப்பதா நினைத்து இருக்கலாம்..” என்றதும் ஈஸ்வரின் கை தானாக அவளது தலையை கோதியது.

அவள், “ரொம்ப சாரி பா.. இனி உன்கிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டேன்” என்றாள். 

“ஹ்ம்ம்” 

“தேங்க்ஸ் பா..” என்றவள் மேகலாவை பார்த்து, “சாரி மா” என்றதும்,

அவர், “சரி விடு.. அப்பா சொல்ற மாதிரி எல்லாம் நன்மைக்கேனு எடுத்துக்க வேண்டியது தான்.. இந்த குளறுபடி நடக்கலைனா இப்போ கூட நீ ப்ரதீப்பை தான் காதலிக்கிறனு சொல்லியிருக்க மாட்ட! நித்தி ப்ரகாஷ் கல்யாணமும் நிச்சயம் ஆகியிருக்காது” என்றார். 

சில நொடிகள் மௌனத்தில் கழிய ப்ரித்திகா மெல்ல பெற்றோர்களை பார்த்து, “எதை வைத்து நான் இவனை காதலிப்பதா நினைச்சீங்க?” என்று வினவினாள்.

மேகலா, “ரெண்டு காரணங்கள்.. ஒன்னு உன் கவிதை.. இன்னொன்னு நீ கேம்பஸ் செலக்ஷனில் பெங்களூர் தெரிந்தெடுத்தது” என்றார். 

“ஹ்ம்ம்.. ப்ரதீப் முழு பெயர் என்னமா?” 

மேகலா யோசனையுடன், “ப்ரதீபன்” என்றதும் அவள், “அவனோட பின் பாதி பெயரை மனதில் வைத்து தான் நான் ‘ப்ரகாசமே’ ‘ஒளி’ னு கவிதையில் எழுதினேன்.. தீபன் – தீபத்தை குறிக்கும் தானே! அப்புறம் அவனை மனதில் நினைச்சு தான் பெங்களூர் செலக்ட் பண்ணேன்” 

“ஹ்ம்ம்.. இப்போ புரியுது.. ஆனா அப்போ இவனை தான் எங்க மனசுக்கு தோணுச்சு” என்றதும்,

“சரி போதும் இந்த பேச்சு..” என்ற நித்திலா, “இனி யாரும் ப்ரித்திகா ப்ரகாஷ்னு பேசக் கூடாது சொல்லிட்டேன்” என்று கூறவும் அனைவரும் சிரித்தனர்.

சொன்ன பிறகே தான் சொன்னதை உணர்ந்தவள் அசடு வழிந்தாள். ப்ரகாஷ் காதலுடன் அவளை பார்த்தான்.

நித்திலா மனதினுள், ‘இவன் ஒருத்தன்.. இடம் பொருள் ஏவல் பார்க்காம பொசுக்கு பொசுக்குன்னு இந்த பார்வையை பார்த்து வைப்பான்.. இவனை போய் தயிர் சாதம்னு நினைச்சோமே!’ என்று கூறிக் கொண்டவள் அவனை முறைத்தாள். 

ப்ரகாஷ் மனதினுள், ‘இப்போ எதுக்கு முறைக்கிறா? அம்மா சொன்னப்ப வாய் திறக்காம இருந்தது நம்ம வாழ் நாள் முழுவதும் துரத்துமோ!’ என்ற பீதியுடன் தன்னவளை பார்த்து சிரித்தான். அவள் பெரியவர்களை பார்வையால் சுட்டிக்காட்டவும் தான் நிம்மதி அடைந்தான்.

ப்ரகாஷ் ஈஸ்வரனிடம், “மாமா நீங்க சொன்ன மாதிரி ஜஸ்ட் லைக் தட் நாங்க இந்த முடிவுக்கு வரலை.. அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கனு தெரியாம நாங்க திணறினப்ப ப்ரித்தி மனசுல இந்த யோசனை வரவும் எங்க கிட்ட யோசிச்சு பதில் சொல்ல சொன்னா.. அப்போ அவ மனசுல இருந்த ஒரே எண்ணம் ‘தன்னால் குடுபத்தின் ஒற்றுமையில் சிறிதும் விரிசல் வந்திரக் கூடாதே’ என்றது தான்.. அதே எண்ணம் தான் எங்களுக்கும்..

ஆனா நான் மனபூர்வமா தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.. அது அப்பாவுக்கு புரிந்ததால் தான் உங்க கிட்ட நிலா.. நித்தியை எனக்கு பொண்ணு கேட்டாங்க.. அம்மா முதல்ல ப்ரித்தியை பொண்ணு கேட்டப்ப நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் ப்ரித்தி மனசுல என்ன இருக்குதுன்னு தெரியாம சபையில் பேச வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன்.. சத்தியமா சொல்றேன் மாமா.. என் மனசில் காதல் உதிச்சது என் நிலா மீது மட்டும் தான்” என்று முடித்தவனது பார்வை தன்னவளிடம் சரணடைந்தது.

அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் முறையாக அவளது பார்வை காதலை பிரதிபலிக்கவும் அவன் சுற்றி இருந்தவர்களை மறந்தான்.

இவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்த பெற்றவர்கள் மனம் நிறைந்தது தான் இருந்தாலும் தெளிவு படுத்திக்கொள்ள ஈஸ்வரன், “நித்தி” என்று அழைத்தார். அது அவள் காதில் விழுந்தால் தானே! அவர் சற்று குரலை உயர்த்தி, “நித்திலா” என்று அழைக்கவும் கனவுலோகத்தில் இருந்து விடுபட்டவள் சிறு அதிர்வுடன், “ஹ.. அப்பா” என்றாள்.

அவளது செய்கையில் அனைவரும் சிரித்தனர். மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த ப்ரகாஷை பார்த்து முறைத்தவள் ஈஸ்வரனிடம், “என்ன பா?” என்றாள்.

ப்ரகாஷ் மனதினுள், ‘இவ எதுக்கு முறைக்கிறானு யோசிச்சே நம்ம வாழ்க்கை ஓடிரும் போல!’ என்று புலம்பிக் கொண்டான்.

ஈஸ்வரன், “ப்ரகாஷ் தெளிவு படுத்திட்டான்.. நீ என்ன சொல்ற?” என்று கேட்டார். 

“முதல்ல சூழ்நிலைக்காக தான், குழப்பத்துடன் தான் சம்மதிச்சேன் ஆனா அத்தான் கிட்ட பேசினதுக்கு அப்புறம் அவருடன் வாழ்ந்தால் சந்தோஷமா இருப்பேன்னு தோணுச்சு.. நானும் உங்க கிட்ட மனப்பூர்வமா தான் சம்மதம் சொன்னேன்” என்றாள். 

அப்பொழுது ப்ரகாஷ் முணுமுணுக்கவும், ஈஸ்வரன், “என்ன?” என்று வினவ,

அவன், “உங்க பொண்ணு சொன்னதில் ஒரு திருத்தம்.. அவ என் கூட பேசினதுக்கு அப்புறம் இல்லை.. கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்ததுக்கு அப்புறம்” என்றதும் அனைவரும் சிரிக்க நித்திலா முறைத்தாள்.

‘ஆரம்ச்சுட்டா டா’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் அவளிடம் சிறு புன்னகையுடன், “நீ என் முறை பொண்ணு தான்.. அதுக்காக எப்போதும் என்னை முறைச்சிட்டே இருக்கணும்னு இல்லை” என்றான். 

நித்திலா முறைப்புடன், “இவ்வளவு நேரம் உங்க நிலாவா இருந்தவ இப்போ உங்கள் மகளா மாறிட்டேனா?” என்று கேட்டாள். 

“என்னது மகளா! உறவுமுறையையே மாத்துறியே!!” 

“உங்களை!!! நான் நீங்க சொன்னதை அப்படியே திருப்பி சொன்னேன்” 

‘அது எனக்கு தெரியாதா!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் அவளிடம், “அது சும்மா மாமா சந்தோஷப்படுவாங்கன்னு சொன்னது.. நீ எப்பவுவே என் நிலா தான்” என்று கூறி கண்சிமிட்டவும், ஒரு நொடி தன்னை மறந்தவள் அடுத்த நொடி தந்தையிடம்,

“நான் சம்மதம் சொன்னதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்குது பா..” என்றவள் நமட்டு சிரிப்புடன் ப்ரகாஷை ஓரப்பார்வை பார்த்தபடி, “அது.. எவ்வளவு அடிச்சாலும் இந்த அத்தான் சமாளிப்பாருன்னு தோணுச்சு.. அதான்” என்றதும் மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

இப்பொழுது முறைப்பது ப்ரகாஷின் முறையாயிற்று. அனைவருடன் சேர்ந்து ப்ரித்திகா சிரித்தாலும் அதில் எப்பொழுதும் இருக்கும் உயிர்ப்பு இல்லை. அதை ப்ரகாஷ் நித்திலா தவிர மற்றவர்கள் கவனிக்க தவறவில்லை.

‘தனியா மாட்டுவல அப்போ பார்த்துக்கிறேன்’ என்று கண்களில் தன்னவளை ப்ரகாஷ் மிரட்ட, அவள் நாக்கை துருத்தி அவனுக்கு அழகு காட்டினாள்.   

யமுனா ஈஸ்வரனிடம், “உன் விசாரணை எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டார். 

“என்ன க்கா?” 

“ப்ரித்தி ப்ரதீப் கல்யாணத்தை பத்தி பேசலாமா?” 

“அது அத்தான் வந்த பிறகு பேசலாம் க்கா” என்று ஈஸ்வரன் கூற,

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ப்ரித்திகா, “ப்ளீஸ் பா.. இப்போ இதை பத்தி பேச வேண்டாம்” என்றாள். 

மேகலா, “இன்னும் உனக்கு கோபம் போகலையா?” என்று கேட்டார். 

ப்ரித்திகா அமைதியான குரலில், “கோபம் சுத்தமா இல்லைன்னு சொல்ல மாட்டேன் ஆனா நான் இப்போ சொன்னதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.. நான் அவன் கிட்ட நேரில் பேசணும்.. அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசலாம் ப்ளீஸ்” என்றாள்.

யமுனா ஏதோ கூற வர,

“அம்மா அவ முதல்ல அண்ணா கிட்ட பேசட்டும்..” என்ற சஹானா ஈஸ்வரனிடம், “இப்போ தான் ப்ரித்தி யாரை விரும்புறானு தெரிஞ்சிருச்சே மாமா.. இனி பிரச்சனை வராது.. கொஞ்சம் அவளுக்கு டைம் கொடுங்க” என்றதும் பெரியவர்கள் சரி என்றனர்.

நித்திலா, “எப்போ அத்.. (ஒரு நொடி ப்ரகாஷை பார்த்தவள் தமக்கையை பார்த்து தொடர்ந்தாள்) உன்னவரை போய் பார்க்க போற?” என்று வினவினாள். ப்ரகாஷ் மனதினுள் கும்மாளம் அடித்தாலும் வெளியே மெலிதாக சிரித்தான்.

ப்ரித்திகா, “முதல்ல எக்ஸாம் முடியட்டும்” என்றாள்.

இப்பொழுது தான் ப்ரித்திகாவின் அமைதியை நித்திலாவும் ப்ரகாஷும் கவனித்தனர். இருவரும் சிறு கவலையுடன் அவளை பார்த்தனர்.

அப்பொழுது தான் நினைவு வந்தவராக யமுனா அவசரமாக தனது கைபேசியை எடுத்து ப்ரதீபனை அழைத்தார். ஆனால் அது அணைக்கப் பட்டிருந்தது. அவர் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தில் சஹானா, “என்னாச்சு மா?” என்று கேட்டாள். 

“அது.. நீங்க மூணு பேரும் ரூம்ல இருந்தப்ப ப்ரதீப் போன் பண்ணான்.. நான் ப்ரித்திக்கும் ப்ரகாஷுக்கும் கல்யாணம் உறுதி செய்ய போறதா சொன்னேன்..” என்றதும் நித்திலா அவரை முறைத்தாள்.

அவர் நித்திலாவிடம், “எனக்கு என்னடி தெரியும்? இப்படி என் அத்தான் தான் எனக்கு மட்டும் தான்னு நீ பாடிட்டு வந்து நிற்பனு!!” என்றார். 

“அத்தை” என்று நித்திலா செல்லமாக முறைக்க, அனைவரும் சிரித்தனர்.

ப்ரித்திகா, “இப்போ அவன் போனை எடுக்கலையா அத்தை?” என்று கேட்டாள். 

“ஸ்விட்ச்-ஆஃப் பண்ணி இருக்கிறான்” என்றதும் இரண்டு நொடிகள் யோசித்தவள், “அவனா இதை பத்தி கேட்டால் மட்டும் சொல்லுங்க அத்தை” என்றாள்.

பெரியவர்கள் ‘ஏன்’ என்பது போல் பார்க்க, ப்ரகாஷ், “அப்படியாவது அவன் வாயை திறந்து தன் காதலை சொல்றானானு பார்ப்போம்!” என்றவன் ப்ரித்திகாவிடம் கட்டை விரலை உயர்த்தி, “நீ நடத்து” என்றான். அவள் மெலிதாக சிரித்தாள். 

பிறகு, “நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்” என்று பொதுப்படையாக சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

 

யமுனா ஈஸ்வரனை குற்றம்சாட்டும் பார்வை பார்க்க, அவர், “எல்லா நேரமும் இதே மாதிரி சுமுகமா முடியும்னு சொல்ல முடியாதே க்கா” என்று முடித்தபோது அவர் குரலும் தேய்ந்து தான் ஒலித்தது.

மேகலா, “விடுங்க அவ சரியாகிடுவா” என்றார்.

 

 

அறைக்கு சென்றதும் ப்ரித்திகா ஸ்ரீராமை அழைத்தாள்.

ஸ்ரீராம், “டிக்கெட் கிடைச்சிருச்சு.. இன்னைக்கு சாயுங்காலம் ஆறு மணிக்கு உனக்கு பஸ்.. நாளைக்கு சாயுங்காலம் ஏழு மணிக்கு நமக்கு பஸ்” என்றான் உற்சாகத்துடன்.

அவள் அமைதியாக இருக்கவும், அவன், “என்ன மேடம்! இப்போவே கனவுலோகத்திற்கு போயிட்டீங்களா?” என்று கிண்டல் செய்தான்.

அவள் மெல்லிய குரலில், “இன்னைக்கு கிளம்புற உன் டிக்கட்டை கன்சல் பண்ணிட்டியா?” என்று கேட்டாள். 

“என்னாச்சு? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்குது? அங்க எதுவும் பிரச்சனையா? நித்தி மட்டும் தானே சம்மதம் சொல்லனும்னு சொன்ன! அவ விருப்பமில்லைனு சொல்லிட்டாளா?” என்று கேள்விகளை அடுக்கினான். 

“இல்லை.. அவங்க கல்யாணம் அவ படிப்பு முடிஞ்சதும் வச்சிக்கலாம்னும், நிச்சயதார்த்தம் என் கல்யாணம் முடிவானதும் வச்சிக்கலாம்னும் முடிவு பண்ணியிருக்காங்க” 

“அப்புறம் என்ன? நித்தி கல்யாணத்தை பத்தி பேசும் போது உன் கல்யாணத்தை பத்தி உங்க அத்தை மாமா வேற எதுவும் பேசினாங்களா?” 

“இல்லை.. ஒரு வருஷம் கழிச்சு தான் எனக்கு கல்யாணம் செய்ய போறதா சொன்னதும் அதை பத்தி வேற எதுவும் பேசலை” 

“அப்புறம் என்ன?” 

“நான் இப்போ பெங்களூர் வரலை.. சாரி அண்ணா.. உன் டிக்கெட் கன்சல் பண்ணிட்டியோ! வேற கிடைக்குமா? ரொம்ப சாரி ணா.. எல்லோரையும் நான் ரொம்ப கஷ்டப் படுத்துறேன்ல?” என்றபோது அவளது குரல் மிகவும் தேய்ந்து ஒலித்தது.

ஸ்ரீராம் அதிர்ச்சியுடன், “என்னாச்சு ப்ரித்தி? ஏன் இப்படியெல்லாம் பேசுற?” என்றான். 

ஈஸ்வரனுடன் நிகழ்ந்த உரையாடலை சுருக்கமாக கூறியவள், “இனி அப்பா கிட்ட கேட்காம எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன் ணா.. இப்போ போய் நான் பெங்களூர் கிளம்புறேன்னு சொல்ல.. ப்ச் வேண்டாம் ணா விட்டுரு.. உன்னையும் கஷ்டபடுத்திட்டேன்.. ரொம்ப சாரி” 

“எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.. நீ முதல்ல இப்படி பேசுறதை நிறுத்து” 

“..” 

“ப்ரித்தி” 

“நான் அப்புறம் பேசுறேன் ணா” 

“உன் மனசில் என்ன இருக்குதுனு சொல்லு” 

அவள் அமைதியாக இருக்கவும், அவன், “என்னை சொந்த அண்ணனா நினைத்தால் சொல்லு” என்றான். 

“உனக்கு அது தெரியாதா?” 

“அப்போ சொல்லு” 

“அப்பா இவ்வளவு கோபப்பட்டது இல்லை.. இதுவரை நானும் அப்படி நடந்துக்கிட்டது இல்லை.. ஆனா இன்னைக்கு என்னால் வருத்தப்படுறேன்னு சொன்னாங்க.. எனக்கு கொடுத்த சுதந்திரம் தப்புனு ரொம்ப பீல் பண்றாங்க.. அப்பாவை ரொம்ப வருத்தப்பட வச்சிட்டேன்.. எனக்கு என் மேலேயே கோபமும் எரிச்சலும் வருது.. அப்பாவை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குது.. அந்த நேரத்தில் எனக்கு வேற என்ன செய்றதுன்னு தெரியலை..” 

“ஹ்ம்ம்.. அப்பா நாம சொல்றதை கேட்பாங்கனு தைரியமா நீ அப்படி முடிவு எடுத்துட்ட.. ஆனா சித்தப்பா நிலைமையில் இருந்து யோசிச்சு பாரு.. கல்யாணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.. அதான் கோபத்தில் ஏதோ அப்படி பேசிட்டாங்க.. நிச்சயம் உன்னை நினைச்சு பெருமை தான் படுவாங்க.. நடந்ததை நினைச்சு வருத்தபட்டுட்டே இருப்பதால் என்ன பிரயோஜனம்னு நீ தானே சொல்லுவ” 

“ஹ்ம்ம்.. அப்பாவை கஷ்டபடுத்தியதை நினைச்சா தான் கஷ்டமா இருக்குது” 

“ஹ்ம்ம்.. புரியுது.. கவலைப்படாத.. கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுட்டு தூங்கி எழுந்திரு, மனசு அமைதியாகும்.. அப்புறமா சித்தப்பா கிட்ட போய் பேசு..” 

“சரி” 

“சரி நான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன்” 

“டிக்கெட்..” என்று அவள் ஆரம்பிக்கவும் அவன், “அதை நான் பார்த்துக்கிறேன்.. நீ பாட்டு கேட்டுட்டு தூங்கு” என்றபடி அழைப்பைத் துண்டித்தான். 

தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 21

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 23