in , , , ,

எனை கொ(வெ) ல்லும் மௌனமே -34,35 (இறுதி அத்தியாயம்)

மௌனம் -34

  அதற்கு பிறகு சிறிது நேரம் அமைதியாகவே இருந்தான் தேவா. முதலில் தன் மனைவியைக் கடத்தினார்கள் என்ற தகவலே அவனை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. இதில் அவளைக் கடத்தியது தன் தம்பிதான் என்பதை அறிந்து ஆத்திரப்பட்டான். ஆனால் அதன் பிறகு சுருதி சொன்னதை யோசிக்க ஆரம்பித்தான்.‌

சிறிது நேர ஆழமான யோசனைக்குப் பிறகு, “நீ சொல்றதுக்காக மட்டுமே அவனை எதுவும் செய்யாம விடுறேன், இல்லன்னா அவனை உயிரோட புதைச்சுருப்பேன். அதே மாதிரி தப்பு யார் மேல இருக்குன்னு ஒரு செகன்ட்டாவது என்னோட அப்பா அம்மா யோசிச்சுருக்கலாம்.‌ எனக்கு ஆறுதலா உறுதுணையா இருக்க வேண்டிய நேரத்துல, நான் தான் தப்பு செஞ்சேன்னு என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க.‌ பெத்த பையனை அவங்களே நம்பலன்னா வேற யாரு நம்புவாங்க. அதனால மறுபடிம் அங்க போகணும்னு எனக்கு தோணல, உனக்கு விருப்பம் இருந்தா நீ போயி அங்க இருக்கலாம் நான் தடுக்க மாட்டேன்” என்றான்.

“நீங்க இங்க இருக்கும் போது எனக்கு அங்க என்ன வேலை, நீங்க போலாம் சொன்னா நாம ரெண்டு பேருமே அங்க போலாம், இல்லன்னா போக வேணாம். மத்தபடி அவங்க வந்து அவங்க பேரப்பிள்ளையைப் பார்த்துட்டு போகட்டும் அதுக்கு நான் எந்த தடையும் சொல்லமாட்டேன் நீங்களும் அப்படி இருந்தா ரொம்ப சந்தோஷம். அப்புறம் முடிஞ்சா கோயிலுக்கு போயிட்டு கடவுளை பிரார்த்தனை பண்ணிட்டு வரலாம், ஏன்னா அந்த கடவுள் தானே உங்களுக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி என்னௌ உங்க வாழ்க்கையில கொண்டு வந்தாரு. அதனால கண்டிப்பா அவருக்கு நாம ரெண்டு பேரும் நன்றி சொல்லி தானே ஆகணும்”  என்று சொன்னாள்.

தேவாவோ தன் மனைவியை குறும்பு விழிகளோடு பார்த்தவன்,
“அப்படி நன்றி சொல்லுறதா இருந்தா நாம ரெண்டு பேரும்,  என்னோட சித்தப்பாவுக்கு தான் நன்றி சொல்லணும்.  ஏன்னா அவர் தான் என்னோட கல்யாணம் நின்னு போறதுக்கு காரணம். இது எனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் உன்னை நேசிக்க ஆரம்பிச்சேன். ” என்றான்.

“என்னங்க சொல்றீங்க, அவரு ஏன் உங்க கல்யாணம் நின்னு போக  காரணமாக இருக்கப்போறாரு?” என்றவளுக்கு குழப்பமாகவே இருந்தது.

“ஏன்னா அவ்வளவு கிராண்டா என்னோட கல்யாணத்தை ஏற்பாடு பண்ணியிருந்தாங்க, அது அவருக்கு பிடிக்கல.  அது மட்டும் கிடையாது ஆதிலட்சுமி மாதிரி ஒரு பொறுப்பான பொண்ணை ஜெயசீலனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுங்குற எண்ணம் அவருக்கு இருந்து இருக்குது.‌ ஆனா கடைசி நேரத்துல இப்படி ஆகவும் அதை அவரால தாங்கிக்க முடியல, அதனால தான் ஆள் வெச்சு என் தங்கச்சியைக் கடத்தி,  அதுக்கப்புறம் வாகினியைக் கடத்தி ஏதேதோ குளறுபடி எனக்கும், ஆதிலட்சுமிக்கும் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்காரு” என்றான்.

“ம்ம்‌‌.. சொந்தமாகவே இருந்தாலும் பொறாமை இருந்துருக்கு. ஆனா அது கூட  ஒரு விதத்துல நல்லது தானே அப்படி மட்டும் நடக்காம இருந்திருந்தா இப்ப நாம ரெண்டு பேரும் கணவன் மனைவியா இருந்துருக்க முடியாது.  அதற்காகவாவது கோயிலுக்கு போலாங்க” என்று சொன்னவள்,
சொன்னது போலவே அவனை இழுத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள்.

அவர்கள் இருவரையும் மனமகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த தமிழ், ‘நிச்சயம் இதை துருவேந்திரனுக்கு சொல்லணும்’ என்று நினைத்தவன் துருவுக்கு அழைத்து இந்த மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொண்டான். 

தன் வீட்டின் சமையல் அறையில் அரக்கப்பரக்க சமைத்துக் கொண்டிருந்த துருவ், அலைபேசி அழைப்பு வரவும் ஒரு கையால் அதை அழைப்பை ஏற்று காதில் பொருத்திக் கொண்டு அவசர அவசரமாக தக்காளி வெங்காயத்தை வதக்கிக் கொண்டிருந்தான்..

தமிழ் சொன்ன செய்தியில் அகம் மகிழ்ந்தவன், “ரொம்ப சந்தோஷம் இதை நான் ஆரூக்கிட்ட சொல்றேன்.
ஆனா இதைக்கேட்டு அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தான் தெரியலை. சரி தமிழ் அப்படியே முடிஞ்சா தேவாக்கிட்டா என்னோட விஷயத்தையும் சொல்லி, ஒரு எட்டு இங்க வந்து அவன் தங்கச்சியைப் பாத்துட்டு போக சொல்ல வேண்டியது தானே. அவளும் கொஞ்சம் சந்தோஷமா இருப்பால்ல” என்று ஒரு எதிர்பார்ப்போடு கேட்டான்.

“கொஞ்ச கொஞ்சமாக நானே எல்லாத்தையும் சொல்றேன் நீங்க ஃபீல் பண்ணாதீங்க துருவ்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் தமிழ். 

வதக்கிய தக்காளி வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு சட்னியாக அரைத்த துருவ், அவசர அவசரமாக இட்லியையும் ஊற்றி வைத்து விட்டு, தேங்காய் சட்னியையும் அரைத்தான்.‌ பின் இட்லி வெந்ததும் அதை எடுத்து ஹாட் பாக்ஸில் வைத்து விட்டு மணியை பார்க்கும்போது மணி ஐந்தை கடந்திருந்தது.  அவசரமாக கிச்சனை சுத்தம் செய்து விட்டு தன் அறைக்கு சென்று குளித்து முடித்தவன் கீழே வரும்போது தான், ஆரூத்ரா  தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.  

அவள் முன்பு சென்று நின்றவன்,
“ப்ளீஸ் ஆரூ இட்லி செஞ்சிருக்கேன் மறக்காம சாப்பிட்டுடு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் வெளிய போயிட்டு வரேன்.‌ அப்புறம் உங்க அண்ணி திரும்பி வந்துட்டாங்க, உங்க இன்னொரு அண்ணன் ஜெயசீலன் தான் உங்க அண்ணியைக் கடத்தி அடைச்சு வச்சுருந்துருக்கான். நானும் தமிழும் தான் அவன் மேல சந்தேகப்பட்டு சில விஷயங்களை சேகரிச்சு அவங்க அம்மாகிட்ட போய் இந்த விடயத்தை சொன்னோம். அதுக்கு அப்புறம் அவங்களே மத்த எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. இப்போ உங்க அண்ணி, உங்க அண்ணன் ரெண்டு பேருமே ஒண்ணு சேர்ந்துட்டாங்க உனக்கு சந்தோஷம்தானே” என்று கேட்டான். அவனை முறைத்துப் பார்த்தவள் எதுவும் பேசாமல் டைனிங் டேபிளில் அமர்ந்து அவன் சமைத்து வைத்ததை சாப்பிட ஆரம்பித்தாள்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட துருவ்,‌ ‘எப்படி கெத்தா இருந்த என்னை இப்படி மாத்திட்டாளே’ என்று நினைத்தவாறே வெளியில் கிளம்பி சென்றான். வெளியில் சென்றவன் தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் போது மணி எட்டைக் கடந்திருந்தது. 

‘ஐயோ நைட்டுக்கு என்ன சாப்பாடு செய்யறதுன்னு தெரியலையே, இந்த லேடீஸ் எல்லாம் எப்படி தான் ஆயூளுக்கும் விதவிதமா சமைக்கிறாங்களோ. இந்த ஒரு வாரத்துக்கே நமக்கு நாக்கு தள்ளுது.‌ ஆனா நான் கூட சமைக்க கத்துக்குவேன்னு கனவுல கூட நெனச்சு பாக்கல’ என்று நினைத்து புலம்பியவாறு தான் அவன் வீட்டுக்குள் நுழைந்தான். 

வீட்டிற்குள் வந்தவன் ஹாலில் இருந்தவர்களைப் பார்த்து முதலில் அதிர்ந்தவன் பின்னர் ஒட்ட வைத்தப் புன்னகையோடு “எல்லாரும் வாங்க வாங்க”என்று  வரவேற்க, அவனைக் கண்டதும் அனைவரும் அமைதியாகி விட்டனர். 

துருவோ நேராக தன் மனைவியின் அருகில் சென்று அமர்ந்தவன் அவளது குடும்பத்தினரைப் பார்த்து, “பெத்தப் பொண்ண பாக்கறதுக்கு உங்களுக்கு இவ்வளவு மாசம் ஆச்சா?” என்று கேட்டான்.

“என்ன பண்றது மாப்பிள்ளை நீங்க செஞ்ச வேலைக்கு நாங்க வந்திருக்கவே கூடாது தான்.‌ ஆனா எங்க வீட்டு பொண்ணு வாயிம் வயிருமா இருக்காளே,  அவளை பாக்காம எங்களால  இருக்க முடியல அதான் எல்லாரும் கிளம்பி வந்துட்டோம்” என்றார் அன்னக்கொடி.

அவர் அவ்வாறு சொன்னதும், தலை குனிந்தவன்,
“நான் வேணும்னே எதையும் பண்ணல அத்தை. எனக்கு, இது இது இப்படி தான், இது தப்பு, இது சரின்னு சொல்லி கொடுக்க யாருமில்லை. நானாவே  வளர்ந்தேன், அதனால நான் செய்யிறது தான் சரிங்குற முடிவுக்கு வந்துட்டேன். நான் பண்ணுனது பெரிய தப்பு தான், மன்னிக்க முடியாத தப்பு தான், என்ன பண்றது இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டு தானே ஆகணும், தயவு செஞ்சு எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. 

அதே மாதிரி உங்க குடும்பத்து பெரிய மனுஷி, அந்த பாட்டியை நான் கொல்லலை. அவங்க நெஜமாவே பாம்பு கடிச்சு தான் இறந்து போனாங்க.  நான் உங்க பேமிலியைக் கண்காணிக்க அங்கங்க ஆள் வச்சிருந்தேன், அவங்க இப்படின்னு சொல்லவும் அதை யூஸ் பண்ணி ஆரூவை என்கிட்ட வர வைக்கலாம்னு நான் ப்ளான் பண்ணி ஆரூக்கிட்ட பொய் சொன்னேனே தவிர இதுவரைக்கும் நான் யாரையும் கொல்ல நினைச்சதில்லை, கொலை பண்ணுனதும் இல்லை” என்றான் சன்னக்குரலில்.
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அமைதியாகத் தான் இருந்தனர்.

கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த தேவாவிடம் தேவேந்திரனை பற்றிய அனைத்தையும் சொன்னான் தமிழ்.‌ கூடவே சுருதியை கண்டுபிடிக்க உதவியதையும் சொன்னான். அதோடு தற்போது அவனது மாற்றத்தையும் எடுத்துரைக்க,‌தங்கையின் மேல் தப்பில்லை என்பதால் அவளை தன் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க முடிவு செய்தான் தேவா.

அதிலும் சுருதி வேறு அவன் தனக்கு மருத்துவமனையில் செய்த உதவியை சொன்ன பிறகு சும்மா இருப்பானா தேவா உடனே திட்டத்தை வகுக்க ஆரம்பித்தான்.  இத்தனை மாதங்களுக்கு பிறகு தன் வீட்டிற்கு அழைத்து தாயிடம் நிலைமையை விளக்கியவன் அவர்களை அங்கே வரச் சொல்லி விட்டு இவனும் மனைவியுடன் துருவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.  

தன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் தன் வீட்டிற்கு வந்ததைக் கண்டு முதலில் அதிர்ச்சியில் உறைந்த ஆரூத்ரா, பதற்றத்தில் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். அதன் பிறகு அவளை மயக்கம் தெளிவித்து அனைத்து விசயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசி முடித்தார்கள். 

மகளின் மேல் தப்பில்லை என்றதும் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி தான் போனார்கள். அண்ணனின் தோள் சாய்ந்து ஆறுதல் தேடியவள் ஒரு வார்த்தைக் கூட துருவேந்திரனைப் பற்றி தவறாகப் பேசவில்லை. 

அவன் மன மாற்றத்தையும் அவனது செயல்களால் ஏற்பட்டிருக்கும் நல்ல விடயங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். அதிலேயே அவளது மனதில் அவனுக்கான இடம் எத்தகையது என்பதை அங்கிருந்த அனைவருமே புரிந்து கொண்டார்கள். ‘கட்டாய திருமணம்’ என்ற போதும் தங்கள் வீட்டு பெண்ணின் மனதில் அவன் ஒரு நல்ல இடத்தைப் பிடித்து விட்டான் என்ற உண்மையை உணர்ந்த பிறகு அனைவரும் அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்கள்.

அவன் வெளியில் சென்றிருந்ததால் அவன் வீட்டிற்கு வரும் வரை அனைவரும் காத்திருந்தார்கள்.  இதோ வந்ததும் அனைத்தையும் பேசி சுமூகமாகவே பிரச்சினைகளை முடித்துக் கொண்டனர்.‌ அனைவரும் அங்கேயே இரவு உணவை உண்டு விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றதும்,‌ சாப்பிட அமர்ந்தான் துருவ்.

ஆரூத்ராவோ பல நாட்களுக்கு பிறகு அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். அதுவே அவனுக்கு ஒரு நிறைவைத் தர எதுவும் பேசாமல் அவன் சாப்பிட்டு விட்டு எழுந்தான். அதிசயமாய் அவன் சாப்பிடட தட்டிலே இவளும் சாப்பிட அமர்ந்தாள். அவளுக்குண்டான மாத்திரை மருந்துகளை எடுத்து டேபிளில் அவளருகே வைக்கையில் எதேச்சையாக அவளது இடையைத் தீண்டியது அவன் கரங்கள். 

‘அய்யய்யோ தெரியாம கை பட்டாலும் வேணும்னே பண்ணுனேன்னு சொல்லி குதிப்பாளே, கடவுளே எப்படியாவது என்னைக் காப்பாத்திரு’ என்ற வேண்டுதலோடு சமையலறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். குளிர்சாதனப் பெட்டி இருந்த சந்தில் நுழைந்து தன்னை மறைத்துக் கொண்டவன் சற்று பயத்துடனே தான் நின்றிருந்தான். 

ஆரூத்ராவோ அமைதியாக சாப்பிட்டு முடித்து எழுந்தவள் பாத்திரங்களை ஒதுங்க வைத்து விட்டு, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தவள், பாட்டிலில் இருந்த நீரை அவன் மீது ஊத்தினாள். அவனோ குளிர்ந்த நீர் மேலே படவும் துள்ளிக்குதித்து, அவன் பின்னே நின்ற ஆரூவின் மேல் மோதி விட்டான்.

அதனால் இருவரும் நிலைத்தடுமாறி கீழே தரையில் உருண்டனர். அவள் மீது விழுகையில் சற்று ஒருக்களித்து விழுந்தவன்,‌அந்த நிலையிலும் அவளது பின்னந்தலையில் தன் ஒற்றைக் கரத்தையும், வயிற்றில் ஒற்றைக்கரத்தையும் பதித்து அவளைத் தாங்கியவாறே தான் விழுந்தான். அவனது அச்செயல் ஆரூவை மெழுகாக உருகச்செய்தது. 

“சாரி ஆரூ நீ தெரியாம‌ தண்ணி கொட்டிட்ட, ஆனா ஜில்னஸ் தாங்க முடியாம மேல் விழுந்துட்டேன் சாரி” என்றவன் அவளை விட்டு விலகி எழ முயன்றான்.‌ அவ்வேளையில் அவனை உரசினாற்போல் எழுந்த ஆரூவின் ஈர இதழ்கள், துருவின் இதழ்களை உரசியவாறு தீண்டி மீள, அவளது கரங்களோ அவனை இதமாக தழுவி பின்னர் விலகின. இது கனவா, நிஜமா என தெரியாமல் உறைந்த நிலையில் கிடந்தான் துருவேந்திரன்.

அவளோ அதைக் கண்டும் காணாமலும் அங்கிருந்து நகர்ந்தவள் மாத்திரைகளை விழுங்கி விட்டு எப்போதும் தான் தூங்கும் அறைக்குச் செல்லாமல் அவனது அறைக்குள் நுழைந்தாள். அவள் பின்னே மே வந்த துருவ் இவற்றையெல்லாம் பார்த்து விட்டு குழம்பியவன், கடைசியாக அவள் தன் அறைக்கு செல்வதைக் பார்த்ததும் அவளது மன மாற்றத்தைப் புரிந்து கொண்டான். 

அதில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நிலத்தில் இருந்து ஓரடி உயரே எம்பி குதித்து ‘எஸ்’ என்று சொல்லிக் குதூகலித்தவன்,
துள்ளல் நடையோடு தன் அறைக்குள் நுழைந்தான்.  அங்கே அவன் அறையில், அவன் கட்டிலில் இரவு உடையில் தேவதை போல் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா. இவன் வந்ததை பார்த்தவள், “இது வரைக்கும் நடந்ததை மாத்தவே முடியாதுங்குறது யாராலையும் மறுக்க முடியாத உண்மை, அதை நானும் ஒத்துக்குறேன்.  ஆனா இதுக்கு மேல நீங்க நல்லவரா இருந்தா இதே வீட்டுல உங்க மனைவியா இருப்பேன். உங்க நடவடிக்கையில எதாவது வித்யாசம் தெரிஞ்சுது நான் என்னோட குழந்தையோட எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன் ஞாபகம் வச்சுக்கோங்க” என்று சொல்லி விட்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

“உன்னை விட்டா சொந்தம்னு சொல்லிக்க எனக்கு வேற யாரும் இல்லை ஆரூ” என்று சொன்னவாறு அறை கதவை தாழிட்டு விட்டு அவள் அருகே வந்து படுத்தான் துருவ். 

தனக்கு முதுகு காண்பித்து படுத்திருந்தவளின் தோள்பட்டையில் கரம் பதித்தவன், “சாரிமா” என்றிட.

அவன் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்து, “ப்ளீஸ் முடிஞ்சதைப் பத்தி பேச வேணாம். இதுக்கு மேல உங்களோட சந்தோசமா வாழணும்னு மட்டும் முடிவு பண்ணியிருக்கேன், அதுவும் கூட நீங்க நடந்துக்குறதை பொருத்து தான்” என்று விமலுடன் சொன்னாள் ஆரூத்ரா.‌ 

அவளது அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருந்த நாட்கள் எல்லாம் வெயில் பட்டு பனித்துளி போல் மறைந்து போனது போல் உணர்ந்தவன் அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “கண்டிப்பா உன்னோட இந்த நம்பிக்கையை நான் நிச்சியம் காப்பாத்துவேன்” என்று வாக்குக் கொடுத்தான்.

அவளும்,‌“ம்ம்.‌.. ” என்ற சொல்லோடு அவனுள் புதைய,‌ அவனோ,‌“ஆரூம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை கிஸ் பண்ணுனியா?” என்று கேட்டான். 

அவன் அணைப்பில் மெய்மறந்திருந்தவள், “அதைக்கூட கண்டு பிடிக்க முடியல நீங்கல்லாம் என்னத்த வில்லோ?” என்று வாரினாள்.

“நான் எப்படி வில்லன்னு சொன்னேன்..” என்றவன் அதிர,

“அப்ப நீங்க வில்லன் இல்லையா?” என்றவள் கேலியாய் வினவ,

“நான் வில்லனும் இல்ல, ஹீரோவும் இல்ல சாதாரண மனுஷன். எல்லா உணர்ச்சிகளும் இருக்க மனுஷன். கோவம் வந்தா அதை மறைச்சுக்கிட்டு நடிக்கிறதுக்கு எனக்கு தெரியாது.‌ ஒருத்தரை புடிக்கலன்னாலும் அவங்களை சகிச்சுக்கிட்டு போக தெரியாது, இது மாதிரி எதையுமே நான் கடைபிடிச்சது கிடையாது. நான் நானா இருந்தேன், இன்னொருத்தருக்காக நான் என் இயல்பை மாத்திக்கிட்டு நடிச்சது கிடையாது…” 

“அப்ப, இப்ப மட்டும் சமைக்கிறீங்க, அது என்ன சங்கதியாம்?” 

“அது உனக்காக நான் செய்ய வேண்டிய கடமை, உன் மேல நான் வச்சுருக்க அன்போட வெளிப்பாடு, உனக்காக எதுவேணும்னாலும் செய்யத்தோணுது.இதுதான் அன்பு, பாசம் இப்படி தான் இருக்கும், காதலிச்சா இப்படி தான் சுயநலம் இல்லாம இருப்பாங்கன்னு உன்னோட உறவும், மௌனமும் எனக்கு புரிய வச்சுருச்சு ஆரு..” என்றவன் வாஞ்சையுடன் அவள் நெற்றியில் அன்பு முத்தம் வைத்திட, அவளோ காதலுடன் அவன் இதழ்களில் தஞ்சம் அடைந்தாள்..

—————————————————-

தன் கணவன் குடும்பத்தாரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தேவாவுடன் கெஸ்ட் ஹவுசுக்கு வந்து சேர்ந்தாள் சுருதி.‌ அனைவரும் ஒரே இடத்தில் தான் இருந்தாலும் யாருடனும், எதுவும் பேசாமல் தங்கையுடன் மட்டுமே பேசி விட்டு வந்து விட்டான் தேவா.‌ அதிலேயே அவனது மனநிலையும், அவன் எந்த அளவிற்கு காயப்பட்டிருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டவர்கள், அவனே மனது மாறி, தங்களை மன்னித்து, புரிந்து கொண்டு வரும் வரை காத்திருப்பதென முடிவு செய்தார்கள்.

இரவுணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்ததால் தன் மனைவியை தன் அறைக்கு அழைத்துக் கொண்டு  வந்த தேவா, முதலில் அவளைக் கட்டிலில் அமரவைத்து அவள் முன் மண்டியிட்டான். அவள் வயிற்றில் இருக்கும் உடையை விலக்கி தன் வாரிசுக்கும், மனைவிக்கும் சேர்த்தே அழுத்தமாக முத்தமிட்டு நிமிர்ந்தவன், “இதுக்கு மேல என்ன விட்டு போகாத சுருதி,  உன்னை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுனேன் தெரியுமா.?” என்றான் விழிகள் கலங்க. 

“கண்டிப்பா நீங்க என்னை மிஸ் பண்ணிருப்பீங்கன்னு தெரியும்.‌ என்ன,‌ ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் பார்த்த தேவேந்திர சக்ரவர்த்தி முரடான முரட்டு பீட்சா தெரிஞ்சாரு. ஆனா இந்த காதல் உங்களை இப்படி சாப்டானவரா  மாத்திடுச்சு. ஆனா என்னைக்குமே அந்த முரட்டு தனமா நடந்துக்கிற தேவாவைத் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லி அவனின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள் சுருதி. அவனும் அவளின் முதல் குழந்தையாய் மாறி அவளுள் ஐக்கியமாகி விட்டான். 

குற்றாலம்…

அன்று ஆதிலட்சுமியிடம் அவ்வாறு பேசிவிட்டு வந்ததிற்குப் பிறகு அவளை சென்று சந்திக்க சுதன் முயற்சி செய்யவில்லை.

அதே போல் இங்கே சுருதி கிடைத்தது முதல், அவள் தேவாவுடன் அவள் இணைந்தது, ஆருத்ரா – துருவேந்திரனை தேவாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டது, சொந்த தந்தையே ஜெயசீலனை மனநல காப்பகத்தில் சேர்த்திருப்பது  வரை அனைத்தையும் போன் பண்ணி சுதனிடம் குமரன் சொல்லி விட்டான்.‌ அவன் சொன்னதுக்கு எல்லாம், “சரி சரி, அப்படியா ரொம்ப சந்தோசம்” என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான், ஆதிலட்சுமியைப் பார்த்ததை யாரிடமும் சொல்லவில்லை..

மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது.
அன்றும் எப்போதும் போல வேலைக்கு கிளம்பிய சுதன் தனக்கு தெரிந்த விதத்தில் சமைத்தான். பின்னர் குளித்து விட்டு வந்து அதை சாப்பிட்டவன், கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தான். அலுவலகத்தில் நுழைந்த போது அவனுக்கு அதிர்ச்சி தரும் தகவலாய், அவனை மீண்டும் கோயமுத்தூருக்கே பணி மாற்றம் செய்திருந்தனர். 

‘எதுக்கு இப்படி பண்ணி இருக்காங்கன்னு தெரியலையே?’ என்ற  யோசனையோடு அவன் ஸ்டேஷனில் அமர்ந்திருக்கும் போது, “சார் ஒரு பொண்ணு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்துருக்காங்க?” என்று காவலாளி ஒருவர் வந்து சொல்லி விட்டு தயக்கத்துடன் நின்றார்.

“கம்ப்ளைன்ட் கொண்டு வந்து கொடுத்தா வாங்கிட்டு அனுப்ப வேண்டியது தானே சார்” என்று சுதன் சொன்னதற்கு,
“சார் அந்த பொண்ணு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்ததே உங்க மேல தான் சார்” என்றதும் அதிர்ச்சியுடன் தன் இருக்கையிலிருந்து எழுந்த சுதன், “அது யாரு எம்மேலையே கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தது.  வர சொல்லுங்க பார்க்கலாம்” என்றான் அமர்த்தலானக் குரலில். அந்த காவலர் அவனறையை விட்டு வெளியே சென்றவர் அப்பெண்ணை உள்ளே அனுப்பி வைத்தார். சில நிமிடங்களில் கையில் பையோடு அவன் எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஆதிலட்சுமி. 

சுதனோ அவளைக் கண்ட பிறகும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமர்ந்திருந்தவன்,
“சொல்லுங்க மேடம், என்ன கம்ப்ளைன்ட் கொடுக்கணும். அதுவும் என் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்னு சொன்னீங்களாமே, சொல்லுங்க என்ன கம்ப்ளைன்ட்?”  என்று கேட்டவனது விழிகள் அவளை கூர்மையாக ஆராய்ந்தது.

அதற்கு அவளோ, “சார் என் பேரு ஆதிலட்சுமி, என் வீட்டுக்காரர் பேரு சுதன்தேவ், அவரு இந்த ஸ்டேஷன்ல தான் வொர்க் பண்றாரு, எனக்கும், அவருக்கும் கொஞ்சம் பிரச்சனை இருந்துச்சு  அதனால நாங்க பிரிஞ்சு வாழ்ந்தோம்.  இப்ப நான் அவர் கூட வாழணும்னு ஆசைப்படறேன், ஆனா அவரு என்னைக் கூட கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டாரு சார், அதான் அவர் மேல கம்ப்ளைன்ட் குடுக்கலாம்னு வந்துருக்கேன்” என்று சொன்னாள்.

அவள் உரைத்த வார்த்தைகள் நிச்சயமாக சுதனின் உள்ளத்தைக் குளிரச் செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.‌ அளவற்ற புன்னகையுடனும், மகிழ்வுடனும் அவளை நிமிர்ந்து பார்த்தான்..

இப்போது ஆதிலட்சுமியோ தலையை குனிந்து கொண்டு,
“நம்ம வீட்டுக்கு போலாங்க”, என்றாள் உள்ளே சென்ற குரலில்.


மௌனம் -35

“அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நான் பேசுனா எல்லாத்துக்கும் சாரி.‌ ஒருத்தர் மேல நாம அளவுக்கு அதிகமான நம்பிக்கை வெச்சுருக்கும் போது அந்த நம்பிக்கை ஏதோ ஒரு விஷியத்தை முன்னிருத்தி உடையும் போது அந்த இடத்தில நம்மளோட மனநிலை எப்படி இருக்கும், கோபம் வரும் இல்லையா.  அதனால தான் உன்கிட்ட அப்படி பேசிட்டேன் சாரி. நான் எவ்வளவு தான் மன்னிப்பு கேட்டாலும், நான் சொன்ன வார்த்தைகளைத் திரும்ப வாங்க முடியாது தான் ஆனா என்ன பண்றது நான் வேணும்னே எதுவும் பேசலையே, சூழ்நிலை அந்த மாதிரி, என்ன பேசுறதுன்னு தெரியாம‌ கோபத்துல ஏதேதோ பேசிட்டேன்  என்னை மன்னிச்சி என் கூட வரேன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ் ஆதிலட்சுமி.  இதுக்கு மேல இந்த மாதிரி பேச மாட்டேன்னு உறுதியா சொல்ல முடியாது, முயற்சி வேணா பண்றேன்.‌ ஏன்னா எல்லோருக்குமே கோபம் இயல்பானது, ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு மறுபடியும் அதை செஞ்சா உனக்கு ஏமாற்றம்தான் வரும். அதனால நான் முடிஞ்ச அளவுக்கு உன் மனசு கஷ்டப்படுற மாதிரி பேசாம இருக்க முயற்சி பண்றேன்” என்று தன் எண்ணத்தை சொன்னதோடு, ‘இனிமே பேசாம இருக்க முயற்சி பண்றேன்’ என ரொம்பவே பிராக்டிக்கலாக பேசினான்.‌

ஆதிலட்சுமிக்குமே அவன் சொன்னதில் இருந்த உண்மையை புரியத்தான் செய்தது.‌ “எனக்கு புரியுதுங்க இங்கே யாருமே பர்ஃபெக்ட்டானவங்க கிடையாது. ஏதோ ஒரு சூழ்நிலையில தன்னோட குணாதிசயங்களை மாத்திக்கிறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.‌ தன்னுடைய இயல்பை மீறி ஓவர் ரியாக்ட் பண்றவங்களும் இருக்கத்தான் செய்றாங்க. நானும் முடிஞ்ச அளவுக்கு எந்த விஷயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யாம யோசிச்சு முடிவு பண்ண முயற்சி பண்றேன்” என்றாள்.

“திடீர்னு எனக்கு இங்கிருந்து கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் குடுத்திருக்காங்க, அதுக்கு காரணம் நீயா?” 

“ம்ஹூம்..‌ இல்லை, ஆண்டவனா பார்த்து தான் இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கான்னு நினைக்கிறேன், என்னவோ இனிமேலாவது ஃபேமிலியோட இருக்கலாமேன்னு நான் வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு நாள் ஃபேமிலியோட அவங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிடலாமே, இவ்வளவு நாள் என்னை பத்திரமா ஒரு குறையும் இல்லாம பாத்துக்கிட்டாங்கல்ல”  என்றாள்.

“ம்ம். கண்டிப்பா கூப்டலாம். நீ சொல்ல வர்றது எனக்கு புரியுதுமா,  என்னோட ரூம் கீயைத் தர்றேன் நீ அங்க போயி இரு, வேலையையும், மத்த பார்மாலிட்டிசலயும் முடிச்சுட்டு ஈவ்னிங் வர்றேன் அதுக்கப்புறம் நாம ஊருக்கு கிளம்பலாம்” என்று சுதன் சொன்னான்.

அவளும் அவனிடம், குவாட்ர்ஸின் சாவியைப் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.‌ வீடு இருந்த நிலையைக் கண்டு புன்னகைத்தவள் வீட்டை கூட்டி சுத்தம் செய்தாள். பின்னர் அவன் துணிகளை துவைத்து காயப்போட்டாள், அவை காய்ந்ததும் எடுத்து மடித்து அடிக்கி வைத்தாள். பின்னர் சமைத்து முடித்தவள் முதல் முறையாக தன் நிலையில் இருந்து இறங்கி, தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி தனது தாய் தந்தைக்கு அழைத்தாள்.

மாதா மாதம் இசை அவர்கள் செலவுக்கான பணத்தை அனுப்பி வைத்து விடுவதால், அவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதில்லை. கூடவே உடல் முதிர்ச்சியும் அவர்களை எந்த வேலைக்கும் செல்ல விடாமல் செய்திருந்தது. அழைப்பை ஏற்ற அவளது தந்தையோ, ‘ஹலோ’  என்றது தான் தாமதம்,

”நான் ஆதிலட்சுமி பேசறேன் அப்பா” என்றதும் அவர்கள் விசும்பலுடன் அந்த பக்கம் அழுவது தெரிந்த‌து.‌ இவளுக்கும் அழுகை வருவது போல் இருந்தது ஆனால் முயன்று அழுகையை ஒதுக்கி வைத்தவள்,
“நான் செஞ்ச எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்குறேன் அப்பா.  எனக்கு தெரியாம நீங்க இப்படி பண்ணிட்டிங்களேங்குற கோபம் என்னை இது மாதிரி பண்ண வச்சிருச்சு. இதுக்கு மேல உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டேன்,  இன்னும் உங்கிட்ட நிறைய பேசணும் நாளைக்கு நான் சொல்ற அட்ரஸ்க்கு வந்துடுங்க”, என்று அட்ரஸை அவர்கள் எழுதும் வரைக்கும் பொறுமையாக சொன்னவள் தாயிடமும் இரண்டு வார்த்தை பேசி விட்டு அலைபேசியை  வைத்தாள். 

இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுதனோ ஏதோ தன் வாழ்வு நிறைவு பெற்றது போல் உணர்ந்தான்.‌ அலுப்புடன் வீட்டிற்கு வரும் கணவனுக்கு இன் முகத்தோடு கதவைத் திறந்துவிடும் மனைவி, அவனை குளிக்க வைத்து, இரவு உணவையும் ஒன்றாக உண்டு,  படுக்கையில் சரி பாதியாக அவன் தேவையை பூர்த்தி செய்வதை மிகவும் ரசித்தான்.  தன் நெஞ்சில் அவளை சாய்த்துக்கொண்டு எவ்வளவு பேச முடியுமா அவ்வளவு பேசினான். தான் செய்ததுக்கு  எல்லாம் மன்னிப்பு கேட்டான். தான் செஞ்சதுக்கெல்லாம் உன் காலில் விழுந்தால் கூட பாவம் போகாது என்றெல்லாம் புலம்பினான். 

ஒரு புன்சிரிப்புடன் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டாள் ஆதிலட்சுமி.  மறுநாள் விடியலில் அங்கிருந்த உடமைகள் அனைத்தையும் பேக் செய்து கொண்டு இருவரும் கோயம்புத்தூருக்கு கிளம்பினார்கள்.

கிட்டத்தட்ட பல மணி நேர பயணத்திற்கு பிறகு மதியத்தை தாண்டிய வேலையில் தான் இருவரும் கோயம்புத்தூரை வந்தடைந்தார்கள். நேராக தன் வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தான் சுதன். ஏனெனில் முதலில் அங்க தான் போக வேண்டும் என்று ஆதிலட்சுமி சொன்னதால் தான் இஙாகே வந்தார்கள். மதிய உணவை உண்டு விட்டு அவரவர் அவரது அறையில் ஓய்விற்காக அடைந்திருக்க, இவர்களோ வீட்டு வாசலை வந்தடைந்தவர்கள் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தார்கள்.‌

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறையில் இருக்க ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷ்,‌ ஆதர்ஷனா இருவரும் கதவு தட்டப்பட்டதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.‌

“யாரா இருக்கும் இந்த நேரத்துல?” என்று ஆதர்ஷனா கேட்டாள்.‌

“தெரியலையே நீ போய் கதவைத்திற”  என்று சொன்னான் ஆதர்ஸ்.  உடனே அவளும் எழுந்து சென்று கதவைத் திறந்தவள் அங்கே தன் அண்ணனும், அண்ணியும் ஒன்றாக நிற்பதைக் கண்டு இன்பமாக அதிர்ந்தவள்,
“அம்மா அப்பா அண்ணா அண்ணி ரெண்டு பேரும் வந்துட்டாங்க சீக்கிரம் வாங்க” என்று சத்தமாக அழைத்தாள். அதே நேரம் அவள் சொன்னதைக் கேட்டு தன் அறையிலிருந்து வேகமாக கீழே ஓடி வந்தாள் மகி..

வந்தவள் அவர்கள் இருவரையும் கண்டு மகிழ்ச்சியுற்றவளாய்,
“அங்கையே நில்லுங்க” என்று சொல்லி விட்டு ஓடிச் சென்று அவசர அவசரமாக ஆரத்தியைக் கறைத்துக் கொண்டு வந்தவள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்ததற்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

அவர்கள் இருவரையும் அழுத்தமான விழிகளோடு பார்த்திருந்த புகழோ,
“இப்ப ரெண்டு பேரும் என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?” என்று அதைவிட அழுத்தமாக் கேட்டார்.

ஆதிலட்சுமியோ முதலில் தானே தன் தப்பை ஒத்துக் கொள்ள முடிவு செய்தவள்,“முதல்ல நான் செஞ்ச தப்புக்கு என்னை மன்னிச்சிடுங்க மாமா.‌ எந்த பிரச்சினையா இருந்தாலும் அதை வீட்டு பெரியவங்களான உங்கக்கிட்ட சொல்லியிருக்கணும், வீட்டை விட்டுப் போனது பெரிய தப்பு தான், என்னை மன்னிச்சிடுங்க. 

இதுக்கு மேல அந்த தப்பை என்னைக்குமே செய்ய மாட்டேன். இவரோட அருமை எனக்கு அப்போ புரியலை,‌ ஆனா இப்ப புருஞ்சுக்கிட்டேன்.‌ இந்த ஆறு மாச பிரிவு அவரோட அருமையை எனக்கு புரிய வச்சுருச்சு. இந்த உலகத்துல யாருமே பர்ஃபெக்ட் கிடையாது, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குறை இருக்கத்தான் செய்யுது. இவரு என் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தாரு அந்த நம்பிக்கை உடையிறதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நான்  காரணமாகிட்டேன். தெரிஞ்சோ தெரியாமலோ அவரோட அந்த நிலைமைக்கும், அவர் அப்படி நடந்துக்குறதுக்கும் நான் காரணமாகிட்டேன்.‌ இப்ப என் தப்பு எனக்கு புரிஞ்சுருச்சு அதனால தான் செஞ்ச தப்ப திருத்தலாம்னு, அவரோடு சேர்ந்து வாழ முடிவு செஞ்சிருக்கேன் மாமா” என்றாள்.

“அதே மாதிரி என்னையும் எல்லாரும் மன்னிச்சிடுங்க, எப்ப பார்த்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையா இருந்தாலும் செஞ்சு பழகிட்டேன். அதனால தான் இப்படியெல்லாம் நடந்துருச்சு.அப்ப இருந்த கோபத்துல என்னால எதையும் யோசிக்க முடியல சாரி” என்று சொல்லி தலை குனிந்து நிற்க, தன் மகனின் அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்ட புகழ், “இந்த உலகத்துல யாருமே தப்பு செய்யாதவங்க கிடையாது. ஆனா செஞ்ச தப்பை ரியலைஸ் பண்ணி திருந்தி வாழுறவங்க கொஞ்ச பேரு தான். உங்க தப்பை உணர்ந்து நீங்க திரும்பி வந்துட்டீங்களே அதுவே எங்களுக்குப் போதும் நீங்க சந்தோசமா இருக்கணும் அவ்வளவு தான் எங்களுக்கு தேவை வேறு ஏதும் தேவையில்லை” என்று மகிழ்வோடு சொல்ல, இருவரும் தம்பதிகள் சமேதரராய் பெற்றோரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றனர்.

அதற்குள் ஆதர்ஷ் அனைவருக்கும் அழைத்து விஷயத்தைச் சொன்னான். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மொத்த குடும்பமும் புகழின் வீட்டில் குழுமியிருந்தனர் மீண்டும் ஒருமுறை அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாள் ஆதிலட்சுமி. அவள் கேட்ட மறு கணம் தானும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினான் சுதன் தேவ்.
சுருதியும், தேவாவோடு வந்திருந்தாள். தேவாவோ தான் செய்தவற்றிற்கும் சுதன், ஆதிலட்சுமி இருவரிடமும் மன்னிப்பு கேட்டான். கோபம் என்ற சாத்தான் எப்பேர்பட்டவரையும் நொடியில் வீழ்த்தி விடும். கோபம் வந்ததாலும் கொஞ்சமேனும் சிந்தித்து செயல்பட்டிருந்தால் இங்கி யாரும் இத்தனை இன்னல்களை அடைந்திருக்க மாட்டார்கள். 

பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் குலதெய்வ கோயிலுக்கு இப்பவாது செல்லலாம் என்று முடிவெடுத்து இசை தேவாவின் குடும்பத்தை தொடர்பு கொண்டா இது பற்றி பேச,  ஒரு வாரம் சென்ற பிறகு அனைவரும் குலதெய்வம் கோவிலுக்கு போகலாம் என்று முடிவு செய்தனர்.

ஒரு வார காலம் அனைவரது வாழ்விலும் இன்பத்தை மட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருந்தது. இதோ அனைவரும் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்கான நேரமும் வந்தது.  சிபியின் குடும்பம், இசையின் குடும்பம் மட்டுமின்றி அமெரிக்காவில் இருந்தும் தினேஷ் மற்றும் மெலினா தன் பிள்ளைகளோடு வந்திருக்க,  அதேபோல் பெங்களூருவிலிருந்து மஹதியும் தன் குடும்பத்துடன் வந்திருந்தாள். 

ஆள் உயரத்தையும் தாண்டி சற்று பெரிதாக வீட்றிருந்தார் ஊரையே காவல் காக்கும் அய்யனார். அவர் அருகில் காவலுக்கென்று வேட்டை நாய்களும், அவர் வீதியுலா செல்வதற்கென்று இடது புறம் குதிரையும் இருக்க,  அவருக்கு எதிர் திசையில் 7 கன்னிமார் தெய்வங்களின் சிலைகளும் இருந்தன. 

ஏற்கனவே பூசாரிக்கு சொல்லி அனுப்பி இருந்ததால் அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.‌ ஒவ்வொரு குடும்பத்தினராக வந்து இறங்கினார்கள். 

அனைவரும் வந்ததும் முதலில் பொங்கல் வைக்க ஆரம்பித்தனர்.  சிபி,‌இசை ஒரு பொங்கலும் அவர்கள் குடும்பத்தை தழைக்க வந்த மருமகள் என்ற முறையில் ஆதிலட்சுமி ஒரு பொங்கலும் வைக்க ஆரம்பித்தாள். ஆதிலட்சுமி பொங்கல் பொங்குவதற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருக்க, உடன் நின்று அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான் சுதன்தேவ்.
ஆதர்ஷ், ஆதர்ஷனா இருவரும் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தனர்

அடுத்ததாக தேவாவின் குடும்பத்தின் சார்பாக நான்கு பொங்கப் பானைகள் பொங்கிக் கொண்டிருந்தன.

மகேந்திர சக்ரவர்த்தி மகேஸ்வரி தம்பதியர் தங்கள் குடும்பத்தின் சார்பாக பொங்கல் வைத்துக் கொண்டிருக்க, ‌ அன்னக்கொடியும் தன் கணவனுடன் ஒரு பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி வைத்து பொங்கல் வைக்கத் துவங்கி இருந்தார். 

தேவாவின் அக்கா ஸ்தானத்தில் இருந்த சுபத்ராவும் தன் மகளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்ததாக ஒருபுறம் சுருதிலயாவும் தன் கணவன் தேவேந்திர சக்ரவர்த்தியின் துணையுடன் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாள்.
கடைசியாக ஆரூத்ரா தன் கணவன் துருவேந்திரனுடன் சேர்ந்து மனமகிழ்வோடு பொங்கி வரும் பொங்கல் பானையில் களைந்து வைத்த அரிசியை போட்டுக் கொண்டிருந்தாள்.

மற்றொரு புறம் ஆதித்யா – கண்மணி தம்பதியரும்,
திவாகர் – பூங்குழலி தம்பதியரும் பொங்கல் வைத்து, முடித்தே இருந்தனர்.

சுதனின் தம்பி தங்கை, ஆதர்ஷ், ஆதர்ஷனா ஒரு ஓரமாக நின்று எதைப்பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் அருகே கீழே விரித்து போடப்பட்டிருந்த தார்ப்பாயில் அமெரிக்காவில் இருந்து வந்த
தினேஷ்- மெலினா  அவர்களது மகன் பிரணித் மற்றும்
பெங்களூரில் இருந்து வந்திருந்த
சுஜித்- மஹதி-  அவர்கள் மகன மிருதேஷ், மகள்
அமுதரூபினி  மற்றும் அவளது குடும்பத்தினரும் அமர்ந்திருந்தார்கள்.

ஹரீஸ் , யாழ்க்குமரன் இருவரும் கோவில் சுற்றுவட்டாரத்தில் இருந்தவற்றை சுத்திப்பார்க்கச் சென்றார்கள்.

மறுபுறம் மகதீர சக்கரவர்த்தியோ அலைபேசியில் அன்று தன்னைத் திட்டிய ஜூனியர் பொண்ணுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான். அன்று ஆரம்பித்த அவர்களது நட்பு நாளடைவில் அலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டு குறுஞ்செய்தி வாயிலாக தொடர்பு கொண்டிருக்கிறது. பின்னாளில் இந்த நட்பு காதலாக மாறவும் வாய்ப்புள்ளது, ஆனால் அதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள்.

ஜெயசீலன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். 

ஆதிலட்சுமியின் தாய் தந்தையரான ரவி மற்றும் மகாலட்சுமி இருவரின் அருகில் அமர்ந்திருந்த பிரதீபா தன் மடியில் வாகினியை வைத்திருந்தாள்.
அவர்கள் அருகே
குற்றாலத்தில் இருந்து
கலைவாணண், துர்காதேவி, சிவநேயன், சக்திப்பிரியா என நால்வரும் அமர்ந்திருந்தார்கள்.‌

சரண் தேவைத் தவிர அங்கிருந்த அனைவரும் தங்களது வேலையில் கவனமாக இருக்க, சரியாக பொங்கல் அனைத்தும் வைத்து முடிக்கும் தருவாயில் தன் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்து இறங்கினான் சரண்தேவ். அவன் பின்னால் இருந்து ஒரு பெண் இறங்கினாள்.  நேராக அவளை அழைத்துக் கொண்டு இவர்கள் இருக்கும் இடத்திற்கு தான் வந்தான். முதலில் அந்தப் பெண்ணை பார்த்தது, பூங்குழலி தான்.

அச்சு அசலாக இறந்து போன தன் வளர்ப்பு மகள் போலவே வரும் பெண்ணைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றவரைத் தொடர்ந்து மற்றவர்களும் அப்பெண்ணைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். சரணிடம் இந்த பெண் யார் என்று விசாரித்தனர்.

சரணை முந்திக் கொண்டு தனக்கு தெரிந்த தகவலை கூறினான் துருவேந்திரன்.
“இந்த பொண்ணு பேர்
ஆராதனா. எந்த ஹோம்ல இருந்து தீப்தியை தத்தெடுத்தீங்களோ அதே ஹோம்ல தான் இந்த பொண்ணும் இருந்துருக்காங்க ஆனா நீங்க தான் கவனிக்கல. இவங்க ரெண்டு பேருமே இரட்டைப் பிள்ளைகள் போல அதனால தான் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க.  எனக்கு தெரிஞ்சு குமரன் அண்ணா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாருன்னு தோணுது. சோ ஏன் அவர் நேசித்த பொண்ணு உருவத்துல இருக்க இந்த பொண்ணை நாம கல்யாணம் பண்ணி வைக்க கூடாது. இது என் விருப்பம் தான் உங்களோட முடிவு என்னவாக இருந்தாலும் நீங்க தாராளமா சொல்லலாம். கூடவே இதை நான் செய்ய காரணம்,‌செஞ்ச பாவத்துக்கு பிரதியுபகாரமா இது இருக்கட்டுமேன்னு தான் சரண் கிட்ட சொல்லி இவங்களை கூட்டிட்டு வரச்சொன்னேன். முதல் தடவை இவங்களை பார்த்தப்பவே நான் முடிவு பண்ணிட்டேன், இவங்க தான் குமரன் அண்ணாவுக்கு மேட்ச் ஆவாங்கன்னு” என்றான்.

அங்கிருந்த அனைவருக்குமே இதில் சம்மதம் தான்.‌ ஆனா வந்திருந்த ஆராதனா என்ன சொல்வாளோ என்று அனைவரும் எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைப் பார்க்க, அவளோ, “ஏற்கனவே அவரை நான் பார்த்துருக்கேன்.  ஒரு தடவை மீட் பண்ணுனோம் அப்ப எங்கிட்ட ரொம்ப எமோஷனலா பேசுனாங்க. அதை வச்சு என்னால அவங்களை பத்தி எதுவும் தெரிஞ்சிக்க முடியல, ஆனா அவங்களை பிடிச்சுருந்துச்சு.  ஆனா இந்த அண்ணா வந்து பேசுனதுக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே புரிஞ்சுது எனக்கு இதுல சம்மதம் தான். ஆனா அவருக்கும் பிடிச்சுருந்தா மேற்கொண்டு எங்க ஹோமோட நிர்வாகிக்கிட்ட பேசுங்க,‌‌ எனக்கு எல்லாமே அவங்க தான்” என்று சொன்னவள்  தலை குனிந்து கொண்டாள்.

ஹரிஷ் உடன் கோயிலுக்கு பின்புறம் சென்று சுற்றிப்பார்த்து விட்டு முன்புறம் வந்த குமரன் அங்கு நின்றிருந்த பெண்ணை கண்டு அதிர்ந்து விட்டான். அச்சு அசலாக தான் நேசித்த தீப்தி போலவே இருக்கும் பெண்ணை விழியகலாது பார்த்தவாறு அவளை நெருங்கியவன் ஏதோ பேச வாய் திறக்கும் முன்பு,
“இந்த பொண்ணு தான் நாங்க உனக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு பார்த்திருக்கோம் உன்னோட விருப்பத்தை சொல்லு குமரா”  என்று கேட்டார் ஆதி.

தன் தந்தையை ஒருவித நெருடலுடன் நிமிர்ந்து பார்த்தவன், “நான் எப்படிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியும். எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமா? நான் தீப்தியை அவ்வளவு விரும்புனேன், அப்படி இருக்கும் போது இவங்களை எப்படிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியும்”  என்றான்.

ஆதியோ தன் மகனை குறுகுறுவென்ற பார்த்தவன்,
“வேறு எந்த பொண்ணையும் நாங்க பார்க்கலப்பா அச்சு அசலா நம்பர் தீப்தி போலவே இருக்க பொண்ணு,  அதுவும் அவ கூட பிறந்த இரட்டை பொண்ணைத்தான் பார்த்து இருக்கோம், இதுக்கு மேல உன் விருப்பம் ” என்றவர் சற்று குரலை தழைத்து குமரனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “கொஞ்ச நாளா நீ ஏதோ போல அலைஞ்சதுக்கு காரணம் இந்த பொண்ணு தான்னு எனக்கு தெரிஞ்சுருச்சு அதனால ஓகே சொல்லிடு மகனே!” என்றார் .

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குமரன், “எனகாகு கொஞ்சம் டைம் குடுங்க யோசிச்சு சொல்றேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தாலும் அவனது விழிகளோ நொடிக்கொருதரம் அப்பெண்ணைத் தான் தொட்டு தொட்டு மீண்டது.  அதிலேயே அவன் நிச்சயம் சம்மதம் தெரிவித்து விடுவான் என்று அனைவரும் நினைத்தவர்களாய் அடுத்த கட்ட வேலையை பார்க்க ஆயத்தமானார்கள்.

இதையெல்லாம் ஓரமாக நின்று மற்ற அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஒரு ஓரமாக நின்று தன் மகள் பொங்கல் வைக்கும் அழகை பார்த்தவாறு நின்று இருந்தனர் ஆதிலட்சுமியின் தாய் தந்தையர். இரு தினங்களுக்கு முன்பு தான் அவர்களை வீட்டிற்கு வரவழைத்து நடந்த அனைத்து பிரச்சினைகளையும் தெளிவாக சொல்லி இருந்தாள் ஆதிலட்சுமி. முதலில் தன் மகளுக்கு திருமணமாகி விட்டது என்பதை கேட்டு அதிர்ந்து தான் போனார்கள். பின்னர் நடந்தவற்றை தெளிவாக விவரித்த பிறகே தன் மகளின் கோபத்திற்கு காரணம் என்ன என்பதே அவளது பெற்றோருக்கு புரிந்தது.

பொங்கல் வைத்து முடிந்ததும் அவரவர் தம்பதி சமேதியராய் அருகருகே நின்று தெய்வத்திற்கு பொங்கலைப் படைத்து விட்டு கைகூப்பி வணங்கினார்கள், இதற்கு பிறகு அவர்களது வாழ்வில் அனைத்தும் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று. 

தன் அருகே நின்றிருந்த சுருதியைத் திரும்பிப் பார்த்த தேவா குரலைத் தழைத்து,

துடித்து அடங்கும்
இதயத்தின் ஓசையைக் காட்டிலும்,
பெரும் சப்தத்தை தோற்றுவிக்குதடி!! 
உன் மீதான என் 
ஏக்கத்தின் கூக்குரல்..! 

பயமறியாமல் 
படபடத்து துடித்திடும் 
உன் வேல் விழிகளின் இமைத்தடுப்பிலும், 
ஈரப்பதம் கொண்டு
இயல்பாய் சிவந்திருந்த
இதழ் வனப்பிலும் 
தானடி தடுக்கி விழுந்து
உன் ரசிகனாய் மாறிய
தவறிழைத்தேன்! 

செய்த தவறை திருத்திக்கொள்ள
மட்டுமல்லடி மீண்டும்
மீண்டும் அதே தவறை
செய்யவே மனம்
விழைகிறது..
          
          – என்று சொல்ல செங்கொழுந்தாக சிவந்தாள் சுருதி.‌

ஆரூத்ராவின் விரலுடன்  தன் விரலைக் கோர்துக் கொண்ட துருவோ,
தனிமையில் சிறைப்பட்டிருந்தவனை 
சிரமேற்கொண்டு
மீட்டெடுத்த மைவிழியாலே! 
மௌனம் கொண்டு
எனை கொல்லாமல்
கொன்றவளும் நீயே தான்..
அம்மௌனத்தால் என்னை
முழுதாக வென்றவளும்
நீயே தானடி..

     ‌ – என்றிட, வெட்கம் கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள் ஆரூத்ரா.

கர்மை சிரத்தையாக கடவுளை வணங்கிய ஆதிலட்சியின் முன் மண்டியிட்ட சுதன் தேவ்,

அடங்கா திமிருடன்
அலைந்தவனை
ஆயூளுக்கும் உந்தன்
கைதியாய்
மனச்சிறைக்குள் பூட்டி
வைத்தவளே! 
சொல் கொண்டு
வதைத்த போதும்,
உனையே வெறுத்த
போதும் மெளனம் 
கொண்டு வதைத்தாயே
ஒழிய வெறுத்து 
ஒதுக்கிடாத தேவதையே..
எதிர்பாராமல் என்
வாழ்வில் நுழைந்து
இக்கணம் வரை 
எந்தன் ஆதியுமாகிப்
போன சரிபாதியவளே 
தேகத்தில் உயிர்
ஊடுருவும் வரை 
உன் விரல் பிடித்தே
வாழ்ந்திட ஆவல் கொள்கிறேனடி..
காவலன் காதலனாய்
மாறி கோரிக்கையை வைக்கிறேன் 
எந்தன் கோரிக்கையை ஏற்றிடுவாயா?

        – என்று கூறி அவள் நுனி விரலில் முத்தம் பதிக்க மொத்த கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரித்து தங்களது மகிழ்வை வெளிப்படுத்தியது.‌ 

கூடவே இறுதியாக ஆராதனாவின் அருகே சென்று நின்ற குமரன் அவளது விரல்களுடன் தன் விரல்களை பிணைத்துக் கொண்டு, “ஏற்கனவே நான் ஒரு பொண்ணை விரும்புனேன், அந்த பொண்ணு இருந்துட்டா.  ஆனா நீ அவள மாதிரியே இருக்கேங்குற காரணத்துக்காக மட்டும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல போறது கிடையாது.  உன்னை பார்த்ததுல இருந்து உன் நினைப்பு, உன் நியாபகம் தான். அது என்னமோ தெரியல அதை மனசுல வச்சுக்கிட்டு தான் நான் இப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல போறேன்.  நான் சொல்றது உண்மை. நான் எந்த அளவுக்கு தீப்தியை விரும்புனேனோ அதே அளவுக்கு அவ  என் மனசுல நிறைஞ்சுருக்கா, அதே மாதிரி உன் மேலயும் நான் வைக்கிற அன்பும், பாசமும் அதே அளவு ஆயுளுக்கும் இருக்கும் எப்பவுமே அது மாறாது. ஆனா அவளை மறந்துருன்னு நீ எப்பவும் சொல்லக்கூடாது சரியா!” என்று கேட்டான்.

“கண்டிப்பா மறந்துருங்கன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா அவ என் சகோதரி தானே. என் மேல அன்பு செலுத்துவேன்னு நீங்க சொன்னதே எனக்கு போதும், எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம் தான்” என்றாள், தன் முதல் நேசம் கைகூடும் போகும் பூரிப்போடு..  குமரன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னது அங்கிருந்த அனைவருக்கும் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இவர்களது எண்ணம் போல் இவர்கள் வாழ்வும் செழித்து வளர வேண்டும் என்ற வேண்டுதலோடு நாமும் இவர்களிடம் இருந்து விடைபெறலாம்.

மௌனம்….
      மௌனம் என்பது ஒரு அளப்பரிய ஆயுதம்.  இரும்பினாலான ஆயுதம் எவ்வாறு ஒருவரை உயிரோடு கொல்லுமோ, அதேபோல் நாம் நேசித்தவர்களின் மௌனமும், விலகலும் ஒருத்தரின் உணர்வுகளை உயிரோடு கொல்லும் என்பது நிதர்சனம்.‌

அதேபோல் மௌனமாக இருந்தால் தான் தங்களது அருமை பிறருக்கு தெரியும், அவர்களது அன்பை வெல்லும், பிரிந்து சென்ற உறவை பலப்படுத்தும் என்பதும் அதே அளவிற்கு நிதர்சனமான உண்மை… 

மௌனம் கொண்டு
மௌனமாகவே மனதில்
வீற்றிருக்கும் அன்பர்களை  
உறவால் பிணைத்துக்
கொண்டு இன்பத்தில் திளைத்தோங்கும் 
இவர்களைப் போன்ற
அனைவரும் ஆயுளுக்கும்
மனமகிழ்வோடு வாழ
வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன்..

மீண்டும் ஒரு கதைக்களத்துடன் சந்திக்கலாம்…
                           பிரியமுடன்
                                 – ரம்யா சந்திரன்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

Story MakerContent AuthorYears Of Membership

எனை கொ(வெ) ல்லும் மௌனமே -33

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 8