in , , , ,

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -31

மௌனம் -31

       தேவேந்திர சக்ரவர்த்தி அங்கிருந்து சென்ற பிறகும் தந்தையின் கைகளில் முகம் புதைத்திருந்த சுருதி யாரையும்  நிமிர்ந்து பார்க்கவில்லை.  ஆனால் மகள் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத சிபி, “பாப்புமா மாப்பிள்ளை இங்கிருந்து போயிட்டாருமா நீ இப்ப எந்திரிச்சு உட்காரலாம்” என்று சொன்னதும் நிமிர்ந்து அமர்ந்தாள். 

தந்தைக்கு மட்டுமே தன் முகம் காட்டியபடி அமர்ந்திருந்தவள் சட்டென்று முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு மற்றவர்களின் புறம் திரும்பி, “அவர் நெனச்ச மாதிரி தான் நீங்க எல்லாரும் நெனைச்சுருந்தீங்களா.இந்த கல்யாண பிடிக்காம, அவரையும் பிடிக்காம தான், நான் அந்த வீட்டை விட்டு போயிட்டேன்னு நினைச்சீங்களா?” என்று கேட்டாள்.

நிச்சயமாக தன் குடும்பத்தார் அப்படி நினைத்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தது தான். இருந்தாலும் அதை உறுதி செய்வதற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாள்.  அவள் குடும்பத்தினர் யாரும் பதில் சொல்லவில்லை.  மாறாக சிபியோ, “எங்க வீட்டு பொண்ணை பத்தி எங்களுக்கு தெரியும். நீ அப்படி பிடிக்காம போயிருக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றான்..

“நீங்க மட்டும் தான் அப்படி சொல்றீங்க இவங்க எல்லாரும் அமைதியா தானே இருக்காங்க.‌” 

“இல்லம்மா, அப்படி எல்லாம் யாரும் நினைக்கலை.‌ உன் மேல நாங்க எவ்வளவு பாசம் வெச்சுருக்கோம்னு உனக்கே தெரியுமே,‌ அதுக்கப்புறமும் ஏன்மா இந்த மாதிரி கேட்குற?”

“நீங்க எல்லாரும் என் சொந்தம்னா,‌ அவரும் என் சொந்தம் தானேப்பா, அப்ப அவர் மட்டும் ஏன்பா அப்படி நினைச்சாரு. அதுவும் அவரை பிடிக்கலன்னு, இந்த கல்யாண பிடிக்கலன்னு சொல்லிட்டு போனதா சொல்றாரு. அப்படி போயிருந்தா, இந்த மாதிரி ஒரு நிலமையில உங்க முன்னாடி வந்து நிற்பேனா?” என்று தன் மேடிட்ட வயிற்றை சுட்டிக்காட்டி கேட்டாள்.‌ அவள் கேட்டதன் அர்த்தம் அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது தான்.

அவளை விட்டு தள்ளி நின்றிருந்த இசை ஓடிவந்து தன் மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “இல்லம்மா நீ அப்படி தப்பா நெனைக்காத. மாப்பிள்ளையும் வேணும்னே உன்னை அப்படி நினைக்கல.‌ உன்னை தப்பா நினைக்க, அன்னைக்கு இருந்த சூழ்நிலை காரணமா அமைஞ்சுதே தவிர மத்த படி அவர் உன் மேல வச்சிருக்க நம்பிக்கை மாறல.‌ அதனால தான் உன் வயித்தை பார்த்ததும் அவ்வளவு பாசத்தோட,‌ தன் குழந்தைங்குற அன்போட உங்கிட்ட வந்தாரே தவிர, அந்தக் குழந்தை யாரோடதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல. அதுல இருந்தே அவர் உன் மேல வச்சி இருக்க பாசம் உனக்கு புரியலையா..?” என்று கேட்க.

“அப்புறம் எதுக்குமா அவர் அப்படிக் கேட்டாரு?”

“அது தான் சொல்றனே, சூழ்நிலை சரியில்லன்னு. சூழ்நிலை அப்படி இருக்கும் போது அவர் மட்டும் என்ன பண்ணுவாரு?”

“நீங்க ஆயிரம் தான் சமாதானம் சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது.. நம்ம வீட்டுல இருக்குற எல்லாரும் என்னை புரிஞ்சுக்கும் போது அவர் மட்டும் ஏன் என்ன புரிஞ்சுக்காம போனாரு” என்று சொல்லி தேம்பியழுத சுருதி அனைவருக்கும் புதிதாகத் தான் தெரிந்தாள். 

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள்  வந்தாலும் கலங்காது நிற்பவள், இன்று தன் கணவன் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஒரே காரணத்திற்காக கலங்கித் தவிக்கிறாள் என்றால் அவள் மனதில் கணவன் மீது எத்தனை அன்பு இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்தனர். 

தன் மகள் அழுவதைத் தாங்க முடியாமல் எழுந்து நிற்க முற்பட்டார் சிபி. ஆனால் பல மாதங்களாக கோமாவில் கிடந்ததால் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடினார்.

ஓடிச்சென்று முதலில் அவரை தாங்கிய துருவேந்திரன் அவரை அமரவைத்து,‌“எது சொல்றதா இருந்தாலும் இப்படி இருந்தே சொல்லுங்க, நீங்க முதல்ல பேசி முடிங்க உங்க எல்லாருக்கும் நான் ஒரு விடயத்தை சொல்றேன்” என்றான்.

“இங்க பாரு பாப்புமா நாம நெனைக்கிறது தான் சரி.  நம்ம பண்றது தான் எப்பவுமே சரியாய் இருக்கும், மத்தவங்க செய்றது தப்புன்னு யோசிக்கிறதை முதல்ல நிறுத்திக்க. எனக்கு தெரிஞ்சு என்னோட பொண்ணு மத்தவங்க இடத்துல இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் யோசிக்கிறவ. அப்படிப்பட்டவ தனக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது மட்டும் தெளிவா சிந்திக்கல. எதையும் ஆழமா யோசிக்காம இந்த  மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசுறது எனக்கு என்னமோ சரியா படலம்மா.” என்றார் சிபி.

“நான் என்னோட பாயிண்ட் ஆஃப் வியூவல இருந்து மட்டுமே யோசிக்கலையேப்பா. உங்க எல்லாருக்காகவும் தான் இந்த கல்யாணத்தை ஒத்துக்கிட்டேன். என்கிட்ட நீங்க யாரும் சம்மதம் கேட்கவே இல்லை, அந்த கோபம் எனக்கும் இருந்துச்சு, நான் இல்லைங்கலை. ஆனா போகப்போக அந்த கோபத்தை உங்க மாப்பிள்ளையோட பாசம் மறக்கடிச்சுருச்சுன்னு தான் சொல்லணும். சரி கொஞ்ச நாள் உங்கக்கிட்ட பேசாம இருந்து தண்டனை குடுத்துட்டு, அதுக்கப்புறம் பேசிடலாம்னு தான் நெனச்சேன். ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு.” என்று சொல்லி விட்டு மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

இதற்கு மேல் தான் அமைதி காத்தால் சரிவராது என்று நினைத்த துருவேந்திரன்,
“இங்க இருக்க யாரும், ஏன் அந்த ஒரு விடயத்தை பத்தி பேச மாட்டேங்குறீங்க.‌அதை சொன்னா இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க பிரச்சினை சால்வ் ஆயிடும். அப்படி இருக்கும் போது ஏன் இவ்வளவு அமைதியா இருக்கீங்க?” என்றதும் அனைவரும் அவனை குழப்பத்துடன் பார்க்க.

சிபியோ, “இப்ப நீ என்ன புது பிரச்சினையைக் கிளப்ப போறே?” என்றார்..

“புதுசா எந்த பிரச்சனையையும் நான் உருவாக்க நினைக்கல சார். ஏற்கனவே இருக்குற பிரச்சினைய சரி பண்ண நினைக்கிறேன். நீங்க யாரும் சுருதி காணாம போன அன்னைக்கு, ‘எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.‌ இந்த வீட்ல இருக்க பிடிக்கல அதனால இந்த வீட்டை விட்டு போறேன்னு’ எழுதியிருந்த லெட்டர் கெடச்சுதுல்ல, அதை ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க?”

“நான் எந்த லெட்டரும் எழுதி வைக்கலை. அதுமட்டுமில்லாம நான் எங்கையும் ஓடிப்போகவும் இல்லை,  என்னை இத்தனை மாசமா  கடத்தி வச்சிருந்தாங்க” என்றாள்.‌

அதைக் கேட்டு அதிர்ந்த சிபி,
“எது கடத்தி வச்சுருந்தாங்களா? என் பொண்ணைக் கடத்துற அளவுக்கு இங்க யாருக்கு தைரியம் வந்துச்சு.‌ சொல்லுமா யாரு உன்ன கடத்துனது, அது யாருன்னு மட்டும் சொல்லு அவனோட உடம்புல அடுத்த செகண்டு உயிர் இருக்காது. என்ன தைரியம் இருந்தா என்னோட செல்ல பொண்ணையே கடத்திருப்பான், சொல்லுமா யாரு அது” என்றார் அடங்காத கோபத்தோடு..

“கண்டிப்பா யாரு என்னைக் கடத்துனாங்கன்னு நான் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எல்லாரும் இப்படிதான் நெனச்சுருந்தீங்களா, இந்த கல்யாணம் பிடிக்காம தான் நான் வீட்டைவிட்டு போயிட்டேன்னு” என்றதும் அனைவரும் ஆமாம் என்று தலையசைத்திருந்தனர். 

அதைப் பார்த்து விட்டு தளர்வுடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள், “நீங்களே அப்படி நெனைச்சு இருக்கும் போது கொஞ்ச நாளே பழக்கமான அவர் அப்படி நெனச்சதுல என்ன தப்பு இருக்கு?” என்றாள்.

அவள் கேட்ட கேள்வி நியாயமானது தானே என்றெண்ணி அனைவரும் அமைதி காத்தனர். இதற்கு மேலேயும் தான் அமைதி காத்தால் சரிவராது என்று நினைத்த துருவேந்திரனோ தானே முன்வந்து, “யார் செஞ்சது தப்பு, யார் செஞ்சது  சரின்னு வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா இந்த பிரச்சனை சரியாகும்னு நினைக்கிறீங்களா கண்டிப்பா, சரியாக வாய்ப்பே கிடையாது. பிரச்சினைக்கு சம்மந்தப்பட்டவங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுனா தான் எல்லாம் சரியாகும். இன்னொரு விடயம் நமக்கு எது சரி, எது தப்புன்னு சொல்லிக் கொடுக்க பெத்தவங்க இருந்தா அந்த பசங்க எதிர்காலத்துல நல்லபடியா இருப்பாங்க.

அந்த மாதிரி  சொல்லிக் கொடுக்க யாரும் இல்லன்னா புள்ளைங்க எந்த மாதிரியான வழியில போவாங்க, என்ன மாதிரி நடந்துக்குவாங்கங்குறதுக்கு நான் ஒரு உதாரணம். நல்லது கெட்டது சொல்லித்தர ஆளில்லாம நான் எவ்வளவோ தப்பு பண்ணி இருக்கேன். ஏன் உங்க பேமிலில கூட ஒரு உயிர் போறதுக்கு நான் காரணமா இருந்துருக்கேன். ஆனா இப்ப நான் அப்படி இல்ல திருந்திட்டேன்னு சொன்னா நீங்க நம்பப்போறீங்களா, நான் மன்னிப்பு கேட்டுட்டா மட்டும் உங்களுக்கு என் மேல இருக்க கோவம் சரியா போயிடுமா?” என்றான்.

அனைவருக்கும் அவன் என்ன சொல்கிறான் என்று முழுமையாக புரியவில்லை. ஆனால் அவன் சொல்வதில் இருந்த பெற்றோர் வளர்ப்பில் தான் பிள்ளைகளின் எதிர்காலமும், தன் நடத்தையும், ஒழுக்கமும் இருக்கிறது என்ற உண்மை மட்டும் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

“எங்க பேமிலில ஒரு உயிர் போக காரணமாகிட்டேன்னு சொன்னியே, அது யாரு?” என்று ஆதி கேட்க, “தீப்தி தான் அ..” என்று அவன் வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பே அவன் வாயில் இருந்து ரத்தம் கசிந்தது. 

அப்போதுதான் விஷயத்தைக் கேள்விப்பட்ட குமரன், கல்லூரிக்கு சென்று சரணை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்தவன் அந்த அறையின் உள்ளே நுழைந்த வேளையில் தான் துருவ் சொன்னதைக் கேட்டான். 

அடுத்த நிமிடம் கொதித்தெழுந்தவன், பேசிய வாயிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டான் அதன் விளைவு தான் அந்த ரத்தக்கசிவு. அதைக் கண்டும் மனம் இளகாதவன்
ஆத்திரத்துடன் துருவின் சட்டையைக் கொத்தாகப் பற்றி சுவற்றில் அவனை மோத செய்தவன், “எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட வாழ்க்கை நாசமாக நீ காரணமா இருப்ப. என் தீபு தான் என் உலகம்னு நெனச்சுட்டு இருந்தேன்டா,‌ ஆனா இப்படி அநியாயமா என் தீபுவைக் கொன்னுட்டியேடா?” என்றான் அடங்காத துவேசத்துடன்.‌.

தன்னை அவன் கொன்றாலும் பரவாயில்லை என்று நினைத்து அவனைத் தடுக்காமல் அமைதியாகவே நின்றான் துருவேந்திரன்.‌ தன்னால் முடிந்த மட்டும் அவனைக் கன்னாபின்னாவென்று அடித்து, சுவற்றில் மோதச் செய்து தலையில் இருந்து ரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்படுத்திய குமரனை ஓடிவந்து இழுத்து பிடித்தனர் மற்றவர்கள்.

ஆதியோ நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக,‌ “என்ன பண்ணிட்டு இருக்க குமரா.  உனக்கு கொஞ்சங்கூட பொறுமையே இல்லையா.‌ இப்ப அவரு தான் நமக்கு உண்மைய சொல்லிருக்காரு, அதை மறந்துறாத.‌ அவரு மட்டும் சொல்லாம இருந்திருந்தா நமக்கு உண்மைத் தெரிய போகுதா, இல்ல தானே! அப்படி இருக்கும் போது நீ இப்படி மூர்க்கத்தனமா நடந்துக்கிட்டா எப்படி. 

இன்னும் சொல்லப்போனா அவர் ஒரு விதத்துல நமக்கு சொந்தக்காரர், அதனால கொஞ்சம் பொறுமையா நடந்துக்க. என்ன நடந்துச்சுன்னு பொறுமையா விசாரிக்க வேண்டியது நம்ம கடமைடா, ஏன்னா நாம இருக்குற சூழ்நிலை அப்படி,  அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு இப்படி நடந்துகிட்டா எப்படி சொல்லு பாக்கலாம்,‌ அவரை விட்டு கொஞ்சம் தள்ளி நில்லு” என்று சொன்ன பிறகே வேண்டா வெறுப்பாக துருவின் சட்டையின் மீதிருந்து கையை எடுத்த குமரன் அடங்காத கோபத்தோடு சற்று தள்ளி நின்று கொண்டான். 

துருவேந்திரனோ வாயிலிருக்கும் எச்சிலுடன் கூடிய ரத்தத்தை வாஷ் பேசினில் சென்று துப்பிவிட்டு முகத்தை கழுவிக் கொண்டு வந்தவன்,
“என்ன நடந்துச்சுங்குறதை நான் சொல்றேன் அதுக்கப்புறம் என் மேல தப்பு இருந்தா நீங்க கொன்னு போட்டா கூட நான் தடுக்க மாட்டேன், தாராளமா நீங்க என்னைக் கொன்னுடலாம்” என்றான்..

அங்கிருந்தவர்கள் அனைவரும் அவன் மீது கோபத்தோடு தான் இருந்தனர்.  வெளியில் சொல்லாவிட்டாலும் பெண்களுக்கும் கூட அவன் மீது கோபம் இருக்கத்தான் செய்தது. தங்கள் வீட்டுப்பெண் எந்த தவறு செய்திருந்தாலும் அதற்கு தண்டனையாக அவள் உயிரை எடுப்பது எந்த விதத்தில் சரியாகும் என்று அனைவரும் எண்ணினார்கள்.

மெதுவாக அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன் குமரன் தன்னை அடித்ததால் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலியை பொறுத்துக் கொண்டு, கண்களை அழுத்தமாக மூடித்திறந்தவன்,
“நான் யாரையும் கொலை பண்ணல. இன்னும் சொல்லப் போனா கொலை பண்ற எண்ணமே எனக்கு வந்ததில்லை” என்றான். அதை கேட்டவுடன் அவன் முகத்தை அதிர்வுடன் பார்த்தது மற்றவர்கள் மட்டுமல்ல பிரதாப்பும் தான்.

“என்னடா சொல்ற. நீ கொல்லாம என் தீபுவ வேற யாருடா கொன்னுருப்பா.‌ நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன உங்க வீட்ல ஒரு உயிர் போறதுக்கு நான் காரணமாகிட்டன்னு,‌ இப்ப என்னவோ மாத்தி பேசுற, என்ன நாடகமாடுறியா? ” என்றவாறு அவனை நெருங்கிய குமரனை இழுத்துப் பிடித்து பின்னால் நிறுத்திய ஆதி, “சொல்லுங்க மிஸ்டர் துருவேந்திரன் நீங்க கொலை பண்ணலன்னா எங்க வீட்டு பொண்ணு எப்படி செத்துருப்பா?” என்று கேட்டார்.

“அவளே தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொன்னா இங்க இருக்க யாராவது நம்புவீங்களா, ஆனா அது தான் உண்மை.‌ ஒத்துக்குறேன் அவ என்னோட ஆபீஸ்ல வேலை செஞ்சா, நல்ல பொண்ணு தான். நான் இதுவரைக்கும் ஒரு தடவைக் கூட அவளை தப்பா பார்த்தது கிடையாது..” என்றவனின் பேச்சை குறுக்கிடுவது போல.
“உன்னைப் பத்தி எல்லாம் தெரியும். தீபு சொல்லிருக்கா, மேல சொல்லு” என்று வேண்டா வெறுப்பாக எரிச்சலுடன் சொன்னான் குமரன்.

“ஓஓ தெரியுமா அப்ப ரொம்ப நல்லது. அது என்னோட ஆபீஸ் தான் ஆனாலும் அதுல நான் சைலண்ட் பார்ட்னர் தான். அவ பாட்டுக்கு அவளோட வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது.‌ ஆனா நான் அப்ப என்னன்ன இல்லீகல் வொர்க் பண்றேன்னு அவ கண்டுபிடிக்க ஆரம்பிச்சா.ஒரு ஏலத்துல  ஒருத்தருக்கு தேவையான டெண்டர் வேணும்னா, பணத்தை வாங்கிக்கிட்டு ஈசியா அவங்க இந்த டெண்டரை வாங்கறதுக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன். 

அதுக்குண்டான கமிஷனை நான் வாங்கிக்குவேன் மத்தப்படி நான் எந்த தப்பும் செய்யலை. இதனால ஏகப்பட்ட குளறுபடி நடந்துருக்கலாம், ஏகப்பட்ட பேர் சூசைட் ட்ரை பண்ணி இருக்கலாம் ஆனா அதெல்லாம் அப்ப எனக்கு பெருசா தெரியல.‌ இன்னும் சொல்லப் போனா எனக்கு பணம் மட்டும் தான் பிரதானமா தெரிஞ்சுதே தவிர மத்ததெல்லாம் என் கண்ணுக்கு தெரியல. தீப்தி இதையெல்லாம் கண்டுபிடிக்கவும் எனக்கு செம கோவம். நான் அவக்கிட்ட உன்னை இங்க யாரு அனுப்புனாங்கன்னு சொல்லச் சொல்லி மெரட்ட மட்டும் தான் செஞ்சேன். 

அவ எதுவுமே சொல்லலை.‌ நான் ரியாக்ட் பண்றதுக்குள்ள என்னோட பிசினஸ் பார்ட்னர் அவளை அடிக்க போனான்.‌ அவன் அடிக்கத்தான் போனான், ஆனா அவளோ, அவக்கிட்ட நாங்க தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுறோம்னு நெனைச்சுக்கிட்டு அங்கிருந்து ஓடினவ,‌ கண்ணாடி கதவுல இடிச்சு கீழ விழுந்துட்டா. அதுல உடைஞ்சு விழுந்த பீஸ் அவளைக் குத்திடுச்சு அதனால தான் அவ இறந்து போனா.. கண்டிப்பா நான் அவளைத் கூட தொட கிடையாது, இதுதான் உண்மை. 

இதுதான் நடந்துச்சு நீங்க நம்புறதும், நம்பாததும் உங்களோட விருப்பம்.  ஆனா இதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு,  அன்னைக்கு அந்த ரூம்ல நடந்தது எல்லாமே சிசிடிவி கேமராவுல பதிவாகியிருக்கு, அந்த புட்டேஜ் எங்கிட்ட தான் இருக்கு, அதைக் கொண்டு வந்து கொடுக்குறேன், பாருங்க‌,‌ அதுக்கப்புறம் நீங்க நம்புனாலும் சரி நம்பாம போனாலும் சரி.  அதே மாதிரி என் எதிரிகளை  காயப்படுத்தி ஹாஸ்பிடல்ல படுக்க வைப்பனே தவிர இதுவரைக்கும் யாரையும் கொன்னது கிடையாது எல்லாமே ஜஸ்ட் பில்டப் மட்டும் தான், வேணும்னா பிரதாப்கிட்டையே கேட்டு பாருங்க” என்று சொல்லி நிறுத்த அனைவரது பார்வையும் இப்போது பிரதாப்பின் புறம் திரும்பியது.

அப்போது தான் பிரதாப்பும் ஒன்றை உணர்ந்தான்.‌ ‘இதுவரைக்கும் எத்தனையோ பேரை அடிச்சு ஹாஸ்பிடல்ல தான் போட சொல்லி இருக்காரு,‌  இதுவரைக்கும் ஒருத்தரையுமே கொல்ல சொன்னதே கிடையாது. அந்த தீப்தி விடயம் நடந்தப்ப கூட நாம கூட இல்லை. அதான் அதை கொலைன்னு நெனச்சுட்டோம்’ என்பதை உணர்ந்தவன் அதை அவர்களிடம் வாய்மொழியாக சொல்ல அனைவரும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதி காத்தனர்.

ஆனால் குமரனோ,“நீ ஆயிரம் தான் காரணம் சொன்னாலும் என்னுடைய தீபுவைக் கொன்னது நீ தாண்டா. நீ என்ன காரணம் சொன்னாலும், அவளைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா, சொல்லுடா என் தீபுவை திருப்பி கொண்டுவர முடியுமா?”என்று கோபத்துடனே கேட்டான்.

“என்னால தீப்தியைத் திருப்பிக் கொண்டு வர முடியாது ஆனா அதே மாதிரி ஒரு பொண்ண கொண்டு வந்து நிறுத்துனா நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று எதிர் கேள்வி கேட்டான்.

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமானான் குமரன். அவனுக்குத்தான் தெரியுமே தீப்தி போன்றே இன்னொரு பெண் இருக்கிறாள் என்று.‌  அப்பெண்ணின் நினைவுகளும் அவ்வப்போது அவனுக்கு வந்து கொண்டுதான் இருந்தது. தீபுவுக்கு பதிலாக அவள் இடத்தில் அந்த பெண்ணை  வைத்துப் பார்க்கத் துவங்கி இருந்தான். தன் மனம் செல்லும் போக்கை அவனும் அறிந்ததால் தான் தற்போதெல்லாம் வீட்டை விட்டு விட்டு எங்கும் போகாமல் இங்கேயே அடைந்து கொள்ள பழகிக் கொண்டான். வீடு, வீடு விட்டால் மில் என்றே இருந்து விடுவான், கடை வீதிகளுக்கு கூட செல்வதில்லை.

தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்று இருந்த குமரனை துருவின் பார்வைத் துளைத்தெடுத்தது.‌ அதன் பிறகு அங்கு ஒரு நிமிடம் கூட நிற்காமல் விறுவிறுவென்று கதவு வரை சென்றவன் கதவைத் திறக்காமல் பின்புறம் திரும்பி,
“வீட்டுக்குத்தான் போறேன் வர்றியா சுருதி?” என்று கேட்டான்.

பெருமூச்சு ஒன்றை இழுத்து  வெளியிட்ட சுருதி, “வர்றேன்..”  என்று சொன்னவாறு எழுந்து நின்றவள் தந்தையின் முகத்தை பார்த்து, “உடம்பு சரியானதும் சீக்கிரம் வீட்டுக்கு வாங்கப்பா நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு தன் அண்ணனுடன் நடந்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@

சுருதி அங்கிருந்து போகச் சொன்னதும் கோபத்தோடும் இயலாமையோடும் அந்த மருத்துவமனை வராண்டாவில் நடந்து சென்ற தேவாவைப் பின்பற்றி ஓடி வந்த தமிழ்,
“பாஸ்.. பாஸ்.. பாஸ்.. கொஞ்சம் நில்லுங்க பாஸ்” என்றிட.

“எதுக்குடா என்னை நிக்க சொற. அதான் யாரோ மாதிரி இங்கிருந்து போன்னு சொல்லிட்டாளே, இதுக்கு மேல அங்கிருந்து நாம என்ன பண்ணறது?” என்று சொல்லிக் கொண்டே முன்னேறினான்.

ஓடிச்சென்று அவனை வழிமறித்த தமிழ், “எனக்கு ஒரு விஷயம் புரியல பாஸ். மேடம் காணாமப் போனதும் நீங்க பைத்தியம் புடிச்ச மாதிரி திரிஞ்சீங்க. கிட்டத்தட்ட தேவதாஸ் மாதிரி குடிகாரனாவே மாறிட்டீங்க. அப்படிப்பட்டவரு அவங்களைப் பார்த்ததும் நாலு வார்த்தை நல்லவிதமா கேட்காம, பேசாம நீங்க பாட்டுக்கு, ஏண்டி போன, எதுக்கு வீட்டை விட்டு போன, என் குடும்ப மானம் போயிருச்சு அது இதுன்னு பேசுறீங்களே உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..” 

“ஆமா பைத்தியம் தான் புடிச்சிருக்கு போதுமா? தள்ளுடா மொதல்ல.” என்று சொல்லி  விட்டு தமிழை விலக்கிக் கொண்டு நடந்தான்.

தமிழும் விடாமல் அவன் பின்னே ஓடியவன், “உங்களைப் பார்த்து அவங்க முகம் எவ்வளவு பிரைட்டாச்சுன்னு எனக்குதான் தெரியும் பாஸ்.நான் அதை தெளிவா பார்த்தேன். நீங்க கோவமா இருந்ததால உங்களுக்கு அது தெரியாம போச்சு. வீட்டை விட்டு வெளிய போனவங்க இந்த மாதிரி அதே ஊருக்கு திரும்பி வரமாட்டாங்க. அதே மாதிரி யாரை வேணாம்னு சொல்லிட்டு வீட்டை விட்டு வெளிய போனாங்களோ அவங்களைப் பார்த்ததும், அந்த மாதிரி எக்ஸைட் ஆகுறதுக்கு வாய்ப்பே கிடையாது பாஸ்.” என்றான்.

அதைக் கேட்டு நடையை நிறுத்திய தேவா,
“இப்ப என்ன தாண்டா சொல்ல வர்ற, அவ வேணும்னே வீட்டை விட்டு வெளியே போகலன்னு சொல்ல வர்றியா.?” என்று எரிச்சல் மேலோங்க கேட்டான்.

“என்ன ஏதுன்னு விசாரிக்காம நீங்க பாட்டுக்கு இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசுறது நல்லது கிடையாது பாஸ், வாங்க வந்து அவங்க கிட்ட என்ன நடந்ததுன்னு விசாரிங்க.”

“நான் வேணான்னு சொல்லிட்டு போயிட்டால்ல அதுக்கப்புறம் எந்த முகத்தை வெச்சுக்கிட்டு  போய் அவக்கிட்ட பேசுறது. எனக்கும், மானம், ரோசம் மரியாதை எல்லாம் இருக்குது. அதையெல்லாம் விட்டுட்டு என்னால வர முடியாது” என்று முரண்டு பிடித்தவனைப் பார்த்து சிரிக்க தான் தோன்றியது தமிழுக்கு. 

மனைவி இல்லை என்றதும் தன் வீடு,‌வாசலை இழந்து, சுயத்தை இழந்து தனிமரமாக நின்ற போதும் இடைவிடாது தன் மனைவியைத் தேடியவர், மனைவி கிடைத்த பிறகு சின்ன பிள்ளை போல் முரண்டு பிடிப்பதைப் பார்த்து, ‘சின்ன பிள்ளைங்களே பரவால்ல போல, இவரு அதை விட மோசமா அடம் பிடிக்கிறாரு’ என்று தான் நினைக்கத் தோன்றியது.

அவரது செயல் வேறு புன்னகையை வரவழைக்க கஷ்டப்பட்டு தன் புன்னகை அடக்கியவன்,‌“சரிங்க பாஸ் நீங்க சொல்ற, அந்த ரோசத்தோடவே இருங்க வேணாங்கலை.‌ ஆனா அதை மத்தவங்கக்கிட்ட காட்டுங்க, தன்னோட மனைவிக்கிட்டையும், தன் குடும்பத்து ஆளுங்கக்கிட்டையும் இறங்கிப் போறதால நாம ஒன்னும் குறைஞ்சு போயிடப் போறது இல்ல. இப்ப என்னோட குழந்தையை கையில வெச்சு ரசிச்சுக்கிட்டு இருக்கும் போது, அவ உங்களை அடிச்சா என்ன பண்ணுவீங்க திருப்பி அடிக்கிறீங்களா, இல்லை தானே.

  அது குழந்தை தானேன்னு விட்டுடுறீங்க, இன்னும் அடிக்கச் சொல்லி ரசிக்கிறீங்க தானே. அதே மாதிரி தான், அவங்க உங்க மனைவி, உங்கல்ல சரிபாதி அவங்க என்ன சொன்னாலும் பொறுத்து போறதுல ஒன்னும் தப்பு இல்ல.அவங்கிட்ட இறங்கி போயி பேசுறதால நாம ஒன்னும் குறைஞ்சும் போகமாட்டோம், கௌரவ குறைச்சலும் ஆகாது.  வாங்க பாஸ் வந்து பேசுங்க.” என்று சொல்லி தேவாவை சமாதானப்படுத்திய தமிழ் அவனை இழுத்துக் கொண்டு திரும்பி வருவதற்கும் குமரனோடு சுருதி அந்த வராண்டாவில் எதிராக நடந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

அவளைக் கண்டதும் அவளிடம் செல்ல சொல்லி பரபரத்த காலை தரையில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு நின்றிருந்தான் தேவா. அவனைக் கடந்து சென்ற போதும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள் சுருதி.

அவர்கள் சென்றதும், “பாரு இப்பகூட மூஞ்சியை திருப்பி வச்சிகிட்டு தான் போறா.  இவக்கிட்ட போய் என்னைப் பேச சொல்ற,‌ என்னால இனிமே அவக்கிட்ட பேச முடியாது. அவ எப்படியோ போகட்டும், ஆனா குழந்தை பிறந்ததும் என் குழந்தையை தூக்கிட்டு வந்துடுவேன். ஏன்னா அவ சுமக்குறது என்னோட குழந்தை” என்று அதீத கோபத்தோடு தமிழிடம் பொறிந்துத் தள்ளியவன் தன் கெஸ்ட் ஹவுஸூக்கு வந்து சேர்ந்தான்…

தன் அண்ணனுடன் சென்ற சுருதியோ எதுவும் பேசாமல் மௌனமாகவே வந்தாள். ஆனால் விழியோரம் தேங்கியிருந்த கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்த குமரன்,
“உன் புருஷனுக்காக அழுறியா சுருதி?” என்று கேட்டான்.

சுருதியோ பதில் சொல்லாமல் அவனைத் தாண்டி செல்ல முயல தங்கையின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய குமரன்,
“இப்ப உங்களுக்கு இடையில இருக்க எல்லா பிரச்சினையும் சால்வாக ஒரு வாய்ப்பு கெடைச்சுருக்குன்னு நினைக்கிறேன்.‌ உன் வீட்டுக்காரர் உன் மேல ஏன் கோபப்பட்டாருங்குறதுக்கான காரணம் தெரிஞ்சு போச்சு.ஆனா நீ ஏன் வீட்டை போன, உனக்கு என்னாச்சுன்னு அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.  இதைப் பத்தி அவர் கிட்ட பேசும்மா, பேசுனா இந்த பிரச்சினை கண்டிப்பா தீர்ந்திடும். என்னை பொருத்தவரைக்கும் திடீர்னு நடந்த கல்யாணமா இருந்தாலும் அவரு ரொம்ப நல்லவரு. நீ வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் அவர் என்னென்ன கஷ்டத்தை அனுபவிச்சாரு தெரியுமா?”, என்று தனக்குத் தெரிந்த விதத்தில் தேவா  தேவதாஸாகி, குடிகாரனாகி  எப்படி எல்லாம் இருந்தான் என்பதை சொன்னவன், தன் இருசக்கர வாகனத்திலேயே சுருதியை வீட்டுக்கு அழைத்து வந்தான்..

இருசக்கர வாகனத்தில் வரும் போது அமைதியாகவே வந்தாள் சுருதி. அவளால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஏதோ சிந்தனையிலே இருந்தாள். தன் வீட்டிற்கு வந்த குமரன் கதவை திறந்து சுருதியை உள்ளே அழைத்து வந்தான். எப்போதும் அங்கு வந்தால் தான் தங்கும் அறைக்கு சென்றவள் கதவை தாழிட்டு விட்டு கட்டிலில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் உடை மாற்றிக் கொண்டு வந்த குமரன் கதவைத் தட்டினான்.‌சுருதி கதவைத் திறந்ததும் தன் தங்கைக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தான்.‌ அந்த பழச்சாறை வாங்கி குடித்தவள்,
“அப்ப சரியாகி வீட்டுக்கு வர்ற வரைக்கும் நான் இங்கையே இருக்கவா அண்ணா” என்று கேட்டாள்.

“இதென்னடா பாப்புமா புதுசா பர்மிஷன் எல்லாம் கேட்குற.  இது உன்னோட வீடுடா,‌ நீ எப்ப வேணா இங்க வரலாம் போகலாம், எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம் சரியா!” என்று சொல்லி விட்டு குமரன் தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்…

       – மௌனம் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

Story MakerContent AuthorYears Of Membership

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -30

எனை கொ(வெ) ல்லும் மௌனமே -31