in , , , ,

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -30

மௌனம் -30

     குழப்பத்துடன் இங்கிருந்து கிளம்பிய துருவ் மீண்டும் வாகனத்தை பிளைட்டில் தூக்கி போட்டு கொண்டு விமானத்தில் ஏறி திருப்பூர் வந்து சேர்ந்தான்.. விமானத்திலிருந்து இறங்கியதும் தன் இருசக்கர வாகனத்திலியே வீட்டை நோக்கி கிளம்பியவனுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள். ‘போனது வேஸ்டா போச்சே. அங்க யாரையோ அடைச்சு வெச்சிருக்காங்கன்னு தான் தோணுது, ஆனா அங்க இருந்தது யாருன்னு தான் தெரியல. அந்த ரத்தம் யாரோடதா இருக்கும்?’ என்று நினைத்தவன் முதலில் வீட்டுக்கு செல்லலாம் என்று தான் நினைத்தான். ஆனால் பாதி வழியிலேயே அவனுக்கு அலைபேசி அழைப்பு வரவும் எடுத்துப் பேசியவன், பிரதாப் சொன்ன தகவலில் அதிர்ந்தவன் அடுத்த நிமிடம் புயல் வேகத்தில் வாகனத்தை பிரதாப் சொன்ன மருத்துவமனையை நோக்கி செலுத்தினான்..

வேர்க்க விருவிருக்க அந்த மருத்துவமனையின் வாயிலை அடைந்தவன் பைக்கை ஸ்டாண்ட் இட்டு நிறுத்தவேண்டும் என்று கூட தோன்றாமல் அப்படியே போட்டு விட்டு அடித்துப் பிடித்து உள்ளே ஓடினான்.‌

அப்போது தான் அவனுக்கு தெரிந்தது தன் உயிரை விடவும் எந்த அளவுக்கு அவளை நேசிக்கிறோம் என்று..
நேசம் என்ற ஒன்றை உணராத வரைக்கும் தன்னெதிரிலேயோ,‌ தன் கூடவேவோ இருப்பவர்கள் தனக்கு பொக்கிஷமாகவோ, முக்கியமானவர்களாகவோ தெரிய மாட்டார்கள்.‌ அவர்களது அக்கறையும் சரி, அருகாமையும் சரி எவருக்கும் முக்கியமானதெனத் தெரியாது.‌ ஆனால் அவர்கள் மீது உயிருக்குயிராக தான் வைத்திருக்கும் பாசத்தை உணர்கையில், அவர்கள் தன் வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும்.  அவர்களுக்கு தான் எத்தனை கொடுமைகள் செய்திருந்தாலும் சரி அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தனக்காகவே ஒருவர் தன்னுடன் இருக்கிறார் என்பதை உணர்கையில் தான் அவரது மகத்துவம் புரிகிறது.‌
அப்போது தான் அவரது அன்பை உணரமுடியும். தான் செய்த தவறும் புரியும், அந்த தவறுக்கான பரிகாரத்தையும் தேடத் தோன்றும்.

அவனுக்காக அந்த மருத்துவமனையின் வாசலிலேயே காத்திருந்தான் பிரதாப்.‌ பிரதாப்பைக் கண்டதும் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட துருவ், “சொல்லு பிரதாப், ஆரூவுக்கு என்ன ஆச்சு? எதுக்குடா முழிக்கிற, பதில் சொல்லு ஆரூவுக்கு என்ன ஆச்சு? டேய் சொல்லித் தொலையேன்டா  என் பொண்டாட்டிக்கு என்னடா ஆச்சு?” என்றான் பதைபதைப்புடன்..

“பாஸ்.. பாஸ்… பாஸ் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாகுங்க, மேடமுக்கு ஒன்னும் இல்ல. காலையில காலுல சுடுதண்ணி கொட்டுனதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணியாச்சு, ஆனா‌ அடி வயிறு வலிக்குதுன்னு சொன்னாங்க அதான் டாக்டர் எதுக்கும் ஒரு ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்னு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. அந்த டாக்டர், இங்க தான் ஒர்க் பண்றாங்க அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.‌. சரி எதுக்கும் உங்களுக்கு இதை சொல்லலாம்னு நினைச்சேன் ஆனா மேடம்தான் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதனால தான் பாஸ் நான் உங்களுக்கு போன் பண்ணி சொல்லல. ஆனா இப்ப நான் வேற ஒரு விடயத்தை இங்க பார்த்தேன், அதனால தான் பாஸ் உங்களுக்கு போன் பண்ணுனேன்” என்றான்.

“அப்படி என்ன விடயத்தை பார்த்த பிரதாப்” என்று கேட்ட துருவுக்கு தன்னவளுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்த பிறகே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“நான் இங்க அந்த சுருதியைப் பார்த்தேன் பாஸ்” என்றதும் அதிர்ந்து விழித்த துருவ்,
“என்ன சொல்ற இங்கையா? அப்ப நெஜமாவே அந்த பொண்ணு வீட்டை விட்டு தான் போயிருச்சா, யாரும் கடத்தலையா, அப்புறம் நீ ஏன்டா அந்த ஜெயசீலனை சந்தேகப்பட்ட” என்று கேட்டான்.

“பாஸ் என்ன முழுசா சொல்ல விடுங்க. அந்த பொண்ணு இங்கிருந்து போயிருந்தா இந்த ஏரியாவுலையோ, இந்த ஊருலையோ இருக்க வேண்டிய அவசியமே இல்ல. ஆனா இங்க இருக்காங்கன்னா ஏதோ தப்பா இருக்குது பாஸ். அது மட்டும் இல்ல அந்த பொண்ணு மாசமா வேற இருக்குது பாஸ். இப்பதான் ஹாஸ்பிட்டலுக்குள்ள கூட்டிட்டு வந்தாங்க. அந்த பொண்ணு கூட நாலு ஜென்ட்ஸ் வேற இருந்தாங்க. இவங்க மட்டும் தான் லேடி, நேரா டாக்டர்ட்ட போனாங்க பேர் குடுத்துட்டு வெயிட் பண்றாங்க. அது மட்டும் இல்ல அந்த பொண்ணைக் கடத்துனாங்களா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியல, அந்த அளவுக்கு அவங்க அமைதியா இருக்காங்க, எனக்கு ஒன்னுமே புரியல பாஸ்..” என்றான்.

“நீ  சொல்றத வச்சு பாக்கும் பார்க்கும் போது எனக்கு ரெண்டு விடயம் தோணுது. ஒன்னு அவங்க கடத்தப்பட்டு ஏதாவது எமர்ஜென்சிக்காக ஹாஸ்பிடல் வந்து இருக்கணும், இல்லையா சம்திங் ஏதோ தப்பா இருக்கு” என்ற துருவ் தன் சட்டைப்பையில் இருந்து தான் எடுத்து வந்த ரத்த மாதிரிகளை பிரதாப்பிடம் கொடுத்து, “இங்க யாராவது தெரிஞ்சவங்க இருந்தா இதைக் கொடுத்து என்னன்னு பரிசோதிச்சு பார்க்க முடியுமா?” என்று கேட்டவன் திடீரென ஏதோ தோன்றிட.

“இல்ல.. இல்ல நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.‌ இது யாருது, என்ன ஏதுன்னு விசாரிச்சு கேட்டு சொல்லு” என்று அதை அவனிடம் கொடுத்து விட்டு தன்னவள் இருந்த அறை எது என்று கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றான்.

அங்கே, காலில் சுடு தண்ணீர் கொட்டியதால் தோல் வெந்து புண் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் ஆருத்ரா.‌ ஆரூத்ராவின் வீட்டில் அவளைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதை உணர்ந்த மருத்துவர் தான் இந்த யோசனையை சொன்னது.  இங்கே என்றால், செவிலி பெண்கள் அவளைப் பார்த்துக் கொள்வார்கள் அல்லவா! அதனால் ஆரூத்ராவும் இங்கே வர சம்மதம் தெரிவித்து மருத்துவருடனே வந்து விட்டாள்.

அவளிருந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பவளைக் கவலையோடு பார்த்தான்.‌ சொந்த பந்தத்தோடு, அவளது வீட்டில் சந்தோஷமாக இருந்தவளை தன் அவசர புத்தியாலும், முன் கோபத்தாலும், ஆண் என்ற அகந்தையாலும்    கட்டாயக் கல்யாணம் செய்து கூட்டிக் கொண்டு வந்ததோடு மட்டுமின்றி, மறுபடியும் திரும்பி அவள், அவளது வீட்டிற்கு செல்ல முடியாதது போலவும் பண்ணி விட்ட தன் மடதனத்தை நினைத்து தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், நாற்காலி ஒன்றை அவள் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தான்.‌

அந்த சத்தத்தில் அவன் புறம் திரும்பிய ஆரூத்ராவோ எதுவும் பேசாமல் மீண்டும் விட்டத்தை வெறித்துப் பார்க்கும் தன் வேலையை கவனிக்க, இவனுக்குத் தான் யாரோ தன் முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.

மனசுக்கு நெருக்கமானவர்களின் விலகலும் சரி, பிடித்தமானவர்கள் விலகலும் சரி, நேசிப்பவர்களின் மௌனமும் சரி தாங்க முடியாத வலியையும்,‌வேதனையையும் தரும் என்பதை துருவ் முதல் முறை உணர்கிறான்.
ஆறு மாதத்திற்கு முன்பு எவரேனும் நீ ஒரு பெண்ணால் இவ்வளவு வலி வேதனையை அனுபவிப்பாய், அவளுக்காக உன்னையே மாற்றிக்கொள்வாய் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பி இருக்க மாட்டான். ஆனால் இப்போதோ ஆரூத்ரா இல்லாமல் அவனால் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த அளவிற்கு அவளது வார்த்தையற்ற மௌனங்களும்,‌நேற்று அவளுரைத்த வார்த்தைகளும் அவனுள் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தன. 

அவளது கால்களைப் மயிலிறகால் வருடுவது போல் மெதுவாக தொட்டு பார்த்தான். அவனது தொடுகையை  உணர்ந்தவள் காலை இழுக்க முயல, தன் இடது கையால் அவள் முட்டி பகுதிகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன்,
“நான் எதுவும் பண்ணலமா.  நீ காலை அசைச்சா உனக்கு வலிக்கும் இல்லையா அதனால அசையாத.‌ நான் உன்னை எதுவுமே பண்ணல சும்மா பாக்குறேன் அவ்வளவு தான்” என்று சொன்னவாறு அவளது காலை வருடி விட்டான். 

அதே நேரம் செவிலிப்பெண் ஒருத்தி உள்ளே வந்து ஆரூத்ராவுக்கு தான் கொண்டு வந்த மருந்தை போட்டு விட முயன்றாள். ஆனால் அதை தன் கையில் வாங்கிக் கொண்டவன்,
“நீங்க போங்க நான் போட்டு விட்டுடுறேன்” என்று சொன்னதும்.

“நீங்க அவங்களுக்கு யார் சார்?” என்று கேட்க. அதற்கு ஆரூத்ரா ஏதாவது பதில் சொல்வாள் என்று அவள் முகத்தையே பார்த்தான் துருவ். ஆனால் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு,‌ “நான் இவங்களோட ஹஸ்பண்ட்” என்று சொன்னதும் அந்த செவிப்பெண் சென்று விட்டாள். பின்பு மெதுவாக எங்கே அவளுக்கு தான் வைக்கும் மருந்து எரிச்சலும், வலியும் தருமோ என்று பயந்து பயந்து மெதுவாக அந்த களிம்பை அவளது காலில் இருந்த புண்ணின் மேல் பூசி விட்டான். 

கவனம் முழுவதும் அவள் புண்ணுக்கு மருந்து போடுவதிலேயே இருக்க இவளோ விழியகலாது அவனையே பார்த்திருந்தாள்.. அவனது இந்த மாற்றம் அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் அதை அவனிடம் சொல்ல தோன்றவில்லை. அவன் தனக்காக தவிப்பது பிடித்து இருந்தது, ஆனால் அதை அவன் முன்பு காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவனால் ஏகப்பட்டதை இழந்துவிட்டாள். அப்படி இருக்கும் போது அவனது இந்த மாற்றத்தை சத்தியமாக அவளால் நிரந்தரம் என்று நம்ப முடியவில்லை. ஒரு வேலை  அவனது குழந்தையைச் சுமப்பதால் இப்படி நடந்து கொள்கிறானோ என்றும் அவளுக்கு என்ன தோன்றியது. அதனாலேயே எது நடந்தாலும் கண்டு கொள்ளாதது போலவே இருக்க பழகிக் கொண்டாள்..

மருந்தை பூசி விட்டு நிமிர்ந்தவன் கையைத் தன் சட்டையிலேயே துடைத்துக் கொண்டு அவள் அருகில் வந்து அமர,‌ ஆரூவோ அவனது அந்த செயலை விழிகளை விரித்துப் பார்த்திருந்தாள்.‌

துருவ் தொட்டதற்கெல்லாம் கைகளையும்,‌ தான் பயன்படுத்துபவைகளையும்  சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவன்.‌ அது மட்டுமல்ல அவன் உடுத்தும் உடைகளில் இருந்து,‌ அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வரை அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.‌ அவள் வந்த இந்த ஆறு மாதத்தில் அவனைப் பற்றி அவள் தெளிவாக புரிந்து கொண்டிருந்தாள். அப்படி இருக்கும் போது தன் கால்களுக்கு போட்ட களிம்பு கறையைச் சட்டையில் துடைப்பவனை வியப்போடு தானே பார்க்க முடியும்.‌

அவளது விரிந்த விழிகளில் தன்னைத் தொலைத்தவன், அவளது அகன்ற விழிகளைப் பார்த்தவாறே அவள் அருகில் வந்து அமர்ந்தான். பின்பு,
“என்னமா அப்படி பார்க்குற?” என்று கேட்டான் அத்தனை கனிவாக.

அவனது குரலில் இருந்த அந்த கனிவு சட்டென்று அவளை ஏதோ செய்ய கண்களை மூடிக் கொண்டாள். அவனோ அவளையே பார்த்திருந்தவன்,
“என்னைக்குமே, என்னை மன்னிக்க மாட்டியாமா?”என்று ஏக்கமாக கேட்டான்.

அவளோ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு அவன் முகத்தைப் பார்த்தவள், “இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ். பேசுறதுக்கு கூட என் உடம்புல தெம்பு இல்லை..” என்றதும் தான் விருட்டென்று எழுந்து நின்றான்..

“சரியா சாப்டாம இருக்க, அதனால தான் தெம்பு இல்லை போல, இரு நான் போயி உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்..‌ அதுக்குள்ள நீ தூங்கிடாதமா சரியா!” என்று சொல்லி விட்டு அந்த அறையிலிருந்து வெளியேறிய அதே நேரம் ஒரு பெண் முகத்தை மூடிக் கொண்டு தன்னைக் கடந்து வேக வேகமாக ஓடுவதைப் கண்டான்.

‘என்னடா இது, யார் இப்படி ஓடுறது’ என்று நினைத்தவன் அடுத்த நிமிடமே, ‘ஒருவேளை சுருதியா இருக்குமோ?’ என்ற எண்ணத்தில் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்…

அவனுக்கு முன்னால் முகத்தை மூடிக் கொண்டு சென்ற பெண்ணோ, கண் மட்டும் தெரியும் அளவிற்கு முகத்தை மூடி இருந்ததால், பின்னால் திரும்பி பார்த்தவாறே சென்றாள். அவள் திரும்பும் போதெல்லாம் சட்டென்று நின்று, அவளுக்கு முதுகு காண்பித்தவாறு மறுபுறம் திரும்பி கொள்வான் துருவ். ஏனெனில் தான் பின்தொடர்ந்து வருவது தெரிந்தால் அந்தப் பெண் இன்னும் வேகமாக ஓடக் கூடும் , பிறகு அது யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு செய்தான். அந்த பெண்ணோ  வேகமாக ஓடியவள் ஒரு வளைவில் திரும்பும் போது எட்டிப்பார்த்தாள். நால்வர் தன்னைப் பின்தொடர்ந்து தொலைவில் ஓடி வருவதைக் கண்டவள் எதைப்பற்றியும் யோசிக்காமல் இன்னும் வேகமாக அந்த வளைவில் திரும்பி அந்த வராண்டாவில் ஓடியவள் இரண்டாவதாக இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டாள்.. 

அவள் வளைவில் திரும்பும் போது எட்டி பார்பதைக் கண்ட துருவின் வேகமும் அதிகரித்தது. அவன் அந்த வளைவில் கால் வைத்த அதே நேரம் இரண்டாவதாக இருந்த அறைக்குள் அந்த பெண் நுழைவதைக் கண்டவன் எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த அறையின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான்.‌

அதே நேரம் அவனை கடந்து சென்ற நால்வர், “டேய் எங்கடா போயிருப்பா? சீக்கிரம் தேடுங்கடா, இல்லன்னா நம்ம பாஸ் அடி பின்னிடுவாரு. அவளை சீக்கிரம் தேடுங்கடா”  என்று சொல்லிக் கொண்டே சென்றிட.  அதை உன்னிப்பாக கவனித்த துருவுக்கு அந்த பெண் நிச்சயமாக கடத்தப்பட்ட பெண் தான் என்பது உறுதியானது. இவர்களிடம் இருந்து தப்பித்து தான் அவள் ஓடி வந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது.‌ ஒருவேளை அது சுருதியாக இருக்குமோ? என்ற அவனது சந்தேகம் இன்னும் வலுப்பெற்றது..‌

அந்த அறைக்குள் நுழைந்த பெண்ணோ அந்த அறையில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மெதுவாக கதவை திறந்து எட்டி பார்த்தாள். அவர்கள் சென்று விட்டதும் அந்த அறையையே பார்த்துக் கொண்டிருந்த துருவ், அறை கதவு மெல்லதாகத் திறக்கப்பட்டதும் வேகமாக ஓடிச்சென்று முழுதாக அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டான். அந்த பெண்ணும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். பின்பு தன்னை துரத்தி வந்தவர்கள் இல்லை, இவன் வேறு யாரோ என்பதை உணர்ந்ததும் தான் பெருமூச்சு விட்டவள் தன் முக்காட்டை  விலக்கி விட்டு சுற்றுப்புறத்தை அப்போது தான் ஆராய்ந்தாள்.

படுக்கையில் கிடந்த நபரைக் கண்டு அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள், அடுத்த நிமிடமே கண்களில் பொங்கிய கண்ணீரோடு,“அப்பா..” என்ற அறைகூவலோடு அவரை நோக்கி ஓடினாள் சுருதிலயா… 

அப்போது தான் கழிவறையிலிருந்து வெளியே வந்த இசையும் அவளது குரலைக் கேட்டு விட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தவள் தன் மகளின் மேடிட்ட வயிறைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள். சுருதியோ ஓடி வந்து தந்தையின் நெஞ்சில் சாய்ந்தவள்,“அப்பா உங்களுக்கு என்ன ஆச்சுப்பா?  நீங்க எதுக்கு ஹாஸ்பிடல்ல இருக்கீங்க? அப்பா.. அப்பா.. அப்பா.. அப்பா.. அப்பா..‌ கண்ணை முழிச்சு என்னைப் பாருங்கப்பா.. உங்களுக்கு என்னாச்சுப்பா” என்றவாறு அவள் பாட்டுக்கு தன்னைப் போல் அரற்ற ஆரம்பிக்க, படுக்கையில் சுயநினைவின்றி கிடக்கும் சிபியிடமோ எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

ஆனால் சுருதியோ ஓயாது தந்தையை எழுப்பிக் கொண்டு இருந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு தன்னிலையை விளக்க ஆரம்பித்தாள். “என்னை மன்னிச்சுடுங்கப்பா.‌ ப்ளீஸ்பா,‌‌ கண்ணு முழிச்சு எந்திரிச்சு வந்து என் கிட்ட பேசுங்கப்பா.‌ ப்பா நான் எந்த தப்பும் பண்ணலப்பா.‌ என்னப் பாருங்கபா,‌ப்ளீஸ்பா என்னைப் பாருங்கப்பா.‌ நான் எங்கையும் போகலப்பா  என்னை கடத்தி வச்சிருந்தாங்கப்பா. நீங்க இருந்தும் என்னை கடத்திட்டாங்களேப்பா? நீங்க ஏன்பா என்னைத் தேடி வரலை?  அந்தளவுக்கு நான் வேண்டாதவளா போயிட்டனா?” என்று கதறினாள்.

‘என்னை கடத்தி வெச்சுருந்தாங்க அப்பா’ என்று அவள் சொன்னதைக் கேட்டதும் அவன் உடலில் மெல்ல மெல்ல அசைவுகளும், அவன் உடலுடன் இணைக்கப்பட்டிருந்த மானிட்டர் திரையில் அவனுடல், முன்னேற்றம் அடைவதற்கான சமிஞ்கைகளும் தெரிவதைக் கண்ட இசை அடுத்த நிமிடம் மருத்துவரை அழைக்க சென்றாள்.

ஆனால் அக்காட்சிகளை வியப்போடு கண்டு கொண்டிருந்த துருவோ,
“ நான் போறேன்,‌ நீங்க இருங்க” என்று சொல்லி விட்டு தானே சென்று மருத்துவரை அழைத்து கொண்டு வந்தான்.

வந்த மருத்துவரும் சிபியை பரிசோதித்து விட்டு,‌“நல்லது தான் நடந்துருக்கு. இவருக்கு மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்படுது. ஆமா இவங்க யாரு? இவங்களால தான் இவருக்கு சரியாகுது போல” என்று கேட்க.

“என்னோட பொண்ணு டாக்டர்” என்றாள் இசை.

அதற்கு மருத்துவரோ,
“ம்ம்.. பரவால்லையே இவங்களால தான் இப்ப உங்க வீட்டுக்காரரோட உடல்ல கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றம் தெரியுது, ஆனா முழுசா அவரு ரெக்கவரி ஆகலை அதனால பாத்துக்கங்க”என்று சொல்லி விட்டு செல்ல, அடுத்த நிமிடம் வீட்டில் உள்ள அனைவருக்கும் அழைத்து விஷயத்தைச் சொன்ன இசை, அனைவரையும்  கிளம்பி வரச் சொன்னாள்.

அதேபோல் தேவாவுக்கும் இதை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்த இசை அவனுக்கு போன் செய்ய முயல அதை தடுத்து நிறுத்திய துருவேந்திரன்.‌

“யாருக்கு போன் பண்ணப்போறீங்க,‌தேவேந்திர சக்கரவர்த்திக்கா?” என்று கேட்டான். 

அதற்கு இசையும் ஆமாம் என்று தலையசைக்க.‌“உங்கக்கிட்ட ஒரே ஒரு உதவி மட்டும் கேட்டுக்குறேன், நான் யாருன்னு உங்களுக்கு தெரியாம இருந்திருக்காது.  ஆனாலும் சொல்றேன் நான் தேவாவோட  மச்சான்,  அவரு தங்கச்சியைக் கல்யாணம் பண்ணியிருக்கேன். அப்படி பார்த்தா நான் உங்களுக்கு மகன் முறை வரும்னு நினைக்கிறேன்.  நாங்க செஞ்சது தப்பாவே இருந்தாலும், அந்த தப்பை சரிபண்ணிக்க ஒரு வாய்ப்பு தரலாமே அம்மா?  அவங்களோட சேர்றதுக்கு எங்களுக்கு இது ஒரு வாய்ப்பா அமையட்டுமே. ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரணுங்குறதுக்காக நானும் இவங்களை எங்க எங்கையோ  தேடி அலைஞ்சேன்.  இப்பவும் கூட இவங்களை தான் பின் தொடர்ந்து வந்தேன்.‌ என்னோட பிஏ சொன்னான், இவங்க இங்க தான் வந்திருக்காங்கன்னு,  அதனால தான் முகத்தை மூடியிருந்தாலும்,  இவங்க சுருதியா இருப்பாங்களோன்னு  ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். கடைசியா இவங்க இங்க வரலன்னாலும் எப்படியாவது இவங்களை கண்டுபிடிச்சு, கண்டிப்பா உங்க முன்னாடி கூட்டிட்டு வந்து நிறுத்தியிருப்பேன். ஏன்னா என் மச்சான் பாவம் மா, நான் போய் அவரை கூட்டிகிட்டு வரட்டுமா? அப்பவாவது அவர் மனசு கொஞ்சம் மாறும் இல்லையா?” என்று கேட்டான்.

சிறு பிள்ளை போல், ஒரு தாயிடம் கெஞ்சும் பிள்ளையின் முகபாவனைகளோடு கேட்டவனை கனிவோடு பார்த்த இசை ,
“நீங்க நேர்ல போய் அவரைக் கூட்டிட்டு வர்ற வரைக்கும் இவ இங்க இருப்பான்னு சொல்ல முடியாது. ‘எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல, அதான் நான் வீட்டை விட்டு போறேன்னு’ எழுதி வச்சுட்டு தானே போயிருக்கா, அப்படி இருக்கும் போது” என்று ஏதோ சொல்ல வந்தவர் அப்போது தான் ஏதோ நினைவு வந்தவராக சுருதியிடம்,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன சுருதி,‌உன்னைக் கடத்துனாங்கன்னா சொன்ன?”  என்று அதிர்ச்சியோடு கேட்டார்.. 

“ஆமா கடத்தியிருந்தாங்க. நான் அந்த மாதிரி எந்த லெட்டரும் எழுதி வைக்கலம்மா” என்று சொன்னவாறு எழுந்து நின்றாள்.

சுருதியின் மேடிட்ட வயிற்றைப் பார்த்த இசை, ‘இது யாரோட குழந்தை?’ என்று தான் கேட்க நினைத்தார். ஆனால் ஏதோ ஒன்று தடுத்ததால் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

சுருதியோ,“உங்க போனைத் தாங்கமா நானே அவருக்கு போன் பண்ணி வர சொல்றேன்”என்றவள் துருவிடம், “நீங்க கவலைப்படாதீங்க,‌ இதுக்கு முன்னாடி நீங்க எப்படிப்பட்டவரா வேணா இருந்துருக்கலாம், ஆனா இந்நேரம் என் நாத்தனாரோட அன்புல மயங்கி, இப்ப நீங்க முன்ன மாதிரி இருக்க‌ வாய்ப்பில்லை, கண்டிப்பா நீங்க மாறி இருக்க வாய்ப்பு இருக்கு.‌ உங்களைப்  பத்துன எல்லா விடயமும் எனக்கு தெரியும். எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சால்வ் ஆயிடும் ஃபீல் பண்ணாதீங்க” என்று சொன்னவள் தன் அம்மாவின் அலைபேசியில் இருந்து தேவாவிற்கு அழைத்தாள்.‌

மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்ததால் பாருக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த தேவாவின் அலைபேசி இசைத்தது.  தன் அத்தையின் எண்ணில் இருந்து அழைப்பு வரவும், அழைப்பை ஏற்று காதில் பொருத்தியவன்,
“சொல்லுங்க அத்தை, இப்ப மாமாவுக்கு உடம்பு பரவாயில்லையா?அவருக்கிட்ட ஏதாவது முன்னேற்றம் இருக்குதா?” என்று கேட்டான்.

வெகு நாளைக்கு பிறகு தன் கணவனின் குரல் கேட்டு பொங்கி வந்த அழுகையை உணர்வுகளோடு அடக்கிக் கொண்டவள்,“நான் சுருதி பேசுறேன். எங்க அப்பா அட்மிட் ஆகி இருக்க ஹாஸ்பிடலுக்கு வாங்க” என்று சொல்லி விட்டு அலைபேசியைத் துண்டித்தாள்.
தன் மனைவியின் குரலை இத்தனை நாட்களுக்கு பிறகு கேட்டவன் சிலையென சமைந்து  நின்று விட்டான்.‌சிறிது நேரம் கடந்த பிறகே அவள் அங்கே வர சொன்னது நினைவுக்கு வர வேக வேகமாக அடித்து பிடித்து தமிழையும் இழுத்துக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தான்…

அவன் அந்த அறைக்குள் நுழைந்த போது சுருதியின் மொத்த குடும்பமும் அவளை சுற்றி நின்று இருந்தனர்.‌ அவர்களுக்கு மத்தியில் அவள் ஒரு புதையல் போல் அமர்ந்திருந்தாள்.‌ சிபி இன்னும் கண் விழிக்காமல் தான் இருந்தார். ஆனால் அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்ததை அவர் உடலுடன் பொருத்தப்பட்டிருந்த மானிட்டர் காட்டிக் கொடுத்தது. அனைத்தையும் விழிகளால் பார்த்துக்கொண்டே சுருதியின் அருகில் நெருங்கினான் தேவா.‌ அவனைக் கண்டதும் அனைவரும் விலகி நிற்க, இப்போது ‌சுருதி, தேவா  இருவரும் ஒருவரை ஒருவர் விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
பின்பு அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கியவன், ‌ அவள் பேச வாயைத் திறப்பதற்கு முன்பே தான் திறந்திருந்தான்.‌ அவள் முகத்தையே அழுத்தமாக பார்த்திருந்தவனின் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு மறைந்து இருந்தது. அந்த அறைக்குள் நுழைந்த வேளையில், அவளைக் கண்டதும் அவனது முகம் பூவாய் மலர்ந்திட, சந்தோசத்தின் உச்சியில் நின்றிருந்தான்.  ஆனால் இப்போதோ அவனது முகம் இறுக்கமாக மாறி இருந்தது. 

அதே இறுக்கமான முகபாவனைகளோடு அவளையே பார்த்திருந்தவன்,
“என்னைப் பிடிக்கலன்னா டிவோர்ட்ஸ் வாங்கிட்டு பிரிஞ்சு போயிருக்கலாமே சுருதி. எதுக்கு இப்படியொரு லெட்டர் எழுதி வெச்சுட்டு,‌ எங்களுக்கு எல்லாம் அவமானத்தையும், களங்கத்தையும் குடுத்துட்டு போன?  நீ செஞ்ச அந்த ஒரு காரியத்தால என் குடும்பம் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சதுன்னு உனக்கு தெரியுமா? போற இடத்துல ஏல்லாம் எவ்வளவு அவமானம் தெரியுமா? இதுக்கும் மேல சொந்த வீட்டுக்குள்ளேயே போக முடியாம, பெத்தவங்களே என்னை தள்ளி வச்சுட்டாங்க,‌ இதெல்லாம் யாரால, எல்லாம்  உன்னால மட்டும் தான். நீ ஒருத்தி மட்டும் அப்படி எதுவும் செய்யாம இருந்துருந்தா இப்ப நாங்க இப்படி இருந்திருக்க மாட்டோம் சுருதி.‌ ஏதோ எங்க வீட்டுல இழவு விழுந்த மாதிரி எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலையில சோகத்தோட இருக்கோம். இதுக்கெல்லாம் காரணம் நீதான், நீ ஒருத்தி மட்டும்தான்.. நீ ஏன்டி என் வாழ்க்கையில வந்த, நீ வந்ததால எங்க சந்தோஷம், நிம்மதி எல்லாமே போயிடுச்சு”என்று நெருப்பை அள்ளிக் கொட்டும் கணக்காய் வார்த்தைகளைக் கொட்டினான் தேவா..

அவனைக் கண்டு விட்ட மகிழ்விலும், ‘நீங்க அப்பாவாக போறீங்க’ என்பதைச் சொல்ல தான் அவள் இதழ்கள் துடித்தன. அதைத்தான் அவள் முதலில் சொல்ல நினைத்ததும். ஆனால் அதற்குள்ளாகவே தேவா பேசி முடித்து விட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகம் மகிழ்வைத் தொலைத்தது.  எதுவும் பேசாமல் அவன் பேசும் வரை அமைதி காத்தாள். ஆனால் தன் பெண்ணைக் குறை சொன்னதும் சிபியின் உடலில் மாற்றங்கள் பெரிதாக நிகழ ஆரம்பித்தன.  அவன் கை கால்களும் அசைந்தன.‌ விழிகளும் அங்கும் இங்கும் சுழல ஆரம்பித்தது.‌ சிறிது நேரத்தில்,‌ “டேய்”  என்ற பெரும் சத்தத்தோடு சிபி விழிகளைத் திறந்தார்.

“டேய்..” என்ற சத்தம் தான் அவர் வாயிலிருந்து முதலில் வந்தது. அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் சந்தோசத்தோடு மருத்துவரை அழைத்து வந்து மீண்டும் ஒரு பரிசோதனையை சிபிக்கு செய்து முடித்தார்கள்.‌ பல மாதங்களாக கோமாவில் கிடந்ததன் விளைவாக அவரால் சட்டென்று எழுந்து அமரமுடியவில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு சிபியால் பேச முடிந்தது.

தொலைவில் நின்றிருந்த தன் மருமகனை நிமிர்ந்து பார்த்தவர்,
பேச வாய் திறந்த வேளையில், “வேணா விட்டுடுங்க யாருக்கும் என்னோட நிலைமையை எக்ஸ்பிளைன் பண்ணனும்னு எனக்கு அவசியமில்லை.‌ ஓகே மிஸ்டர் தேவேந்திர சக்ரவர்த்தி நீங்க சொன்ன மாதிரி டிவோர்ட்ஸ் கொடுத்துருங்க, அதுதான் எல்லாருக்கும் நல்லது. இப்ப நீங்க போகலாம். ஏன்னா இது என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும் இருக்க வேண்டிய பிளேஸ். உங்களுக்கும் எனக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லாத போது என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ்ஸ  பார்க்க வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன வந்துச்சு, சோ  நீங்க தாராளமா இங்கிருந்து போகலாம்.‌.” என்று அந்த அறையின் கதவை நோக்கி கை காட்டினாள்..

அவளை ஒரு வெறித்த பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான். கதவு வரை சென்றவன் கடைசியாக அவளிடம் ஏதோ சொல்லலாம் என்ற நினைவுடன் திரும்பிய அதேநேரம் சுருதி எழுந்து நின்றாள்.  அவளிடம் பேச திரும்பிய தேவாவின் விழிகள் முதலில் அவளது முகத்தை தழுவி இறுதியாக மேடிட்டிருந்த அவளது வயிற்றை தழுவியது. மேடிட்டிருந்த அவள் வயிற்றைப் பார்த்ததுமே அவனுக்கு புரிந்து போனது அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று.

உடனே அவனது முகம் பிரகாசமாக மின்னியது. தன் வாரிசு என்று தான் அவனால் என்ன முடிந்ததே தவிர சுருதியின் தாய் நினைத்தது போல் அது யார் குழந்தை என்று கேட்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. அங்கே தான் அவனது பாசமும், சுருதியின் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையும், காதலும் உறுதி பெற்றது.

அவளை அந்நிலையில் கண்டதும் வேகவேகமாக அவளை நெருங்கியவன்,
“சுருதி இது..” என்று அவன் கேட்க வந்த வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பு கைகளை முன்னால் நீட்டி அவன் பேச்சை தடுத்து நிறுத்தியவள்,
“எனக்கும் உங்களுக்கும் தான் எந்த சம்மந்தமும் இல்லன்னு ஆயிடுச்சே,  அதனால இதைப் பத்தி நீங்க பேச வேண்டிய அவசியமில்லை. நீங்க போலாம், விவாகரத்து பத்திரத்தை ரெடி பண்ணிட்டு வாங்க சைன் பண்ணி தரேன்” என்று சொன்னவள் வேறு எதுவும் பேசாமல் தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தவள்,  அவரது கரத்தினுள் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.. அவள் அழுகிறாள் என்பதை சிபி மட்டுமே அறிவார்.  அவள் தன் முகத்தை சிபியின் கைகளில் புதைத்து இருந்த காரணத்தினால் அவன் கைகளில் தான் அவளது விழிகள் கொட்டிய கண்ணீர் உருண்டோடியது.

சுருதி சொன்னதைக் கேட்டு
விக்கித்துப் போய் நின்றான் தேவா. தனக்கு தன் வாய்தான் சனி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டு தளர்ந்த நடையோடு வீட்டிற்க்கு கிளம்பினான். அங்கு நின்ற மற்றவர்களும் சரி, தமிழும் சரி வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். ..

சொல் கொண்டு 
செல்லாலான
இதயத்தை சிதைத்து
விட்டு செல்பவனே! 
சில நிமிடமேனும்
சிந்தித்தாயா 
உன்னுடன் உறவால்
இணைந்தவள் உனை
நீங்கி செல்வாளென்று? 

கணக்கில்லாத கற்களை 
சுமப்பதைப் போல்
வலியை தருகிறதடா
உந்தன் விலகலும்..
தள்ளி நின்றே நீ கொடுத்த 
ஓடுகாலியென்ற பட்டமும்.. 

உனை சுமக்கும் 
கையளவு இதயமும்..
உன் மீதான
கடலளவு நேசமும்
மொத்தமாய் சிதைந்து
போனதடா உந்தன்
இதழுரைத்த 
வார்த்தைகளின்
கணம் தாளாமல்..

         – மௌனம் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

Story MakerContent AuthorYears Of Membership

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -29

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -31