in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 6 & 7

 

அடுத்த நாள் காலை 8 மணிக்கு விழித்த ப்ரித்திகா காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு குளியலறையை விட்டு வெளியே வந்த பிறகு ‘சைலென்ட் மோடில்’ இருந்த தனது கைபேசியில் இருந்த விடுபட்ட அழைப்புகளை பார்த்ததும் சஹானாவை அழைத்தாள்.

சஹானா சிறு கோபத்துடன், “ஹே கும்பகரணி.. மணி என்ன தெரியுமா?” என்றாள். 

“மணி இப்போ 8.15 அதுக்கும் என்னை நீ கும்பகரணினு சொன்னதிற்கும் என்ன சம்பந்தம்?” 

“ஓ! 8.15 மணி உங்களுக்கு அதி காலையோ!” 

“நீ என்ன லூசா?” 

“உன்னுடன் பழகினதுக்கு அது தான் நடக்கும்” 

“உனக்கு என்னாச்சு சஹு?” 

“கடுப்பேத்தாம சீக்கிரம் கிளம்பி வா” 

“எங்க?” 

“நினைத்தேன்” 

“எதை?” 

“நீ மறந்திருப்பனு” 

“எ.. ஓ” 

“என்ன நியாபகம் வந்திருச்சா?” 

“மறந்தால் தானே நியாபகம் வரும்” 

“அப்புறம் ஏன் எங்கனு கேட்ட?” 

“உங்க வீட்டுக்கா இல்லை ராஜி வீட்டுக்கானு கேட்டேன்” 

“நல்ல சமாளிக்கிற!” 

“நான் ஒரு இன்ஜினியரிங் ஸ்டுடென்ட் மா.. நாங்கலாம் அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விக்கே பதில் எழுதுற ஆட்கள்” 

“பதில் சரியா இருக்கணுமே” 

“இப்போ உனக்கு சொல்லலையா!” 

“என்னத்தை சொன்ன! ராஜி வீடு இருக்கும் ஏரியா தான் எனக்கு தெரியும் அவ வீடு தெரியாது.. ஸோ உன் பதில் தப்பு” 

“இல்லையே.. அவ வீடு இருக்கும் தெரு உனக்கு தெரியும் ஸோ.. அங்க வெயிட் பண்றியானு மீன் பண்ணேன்” 

“இப்போ ஒத்துகிறேன் நீ ஒரு இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்” 

“அது! சரி என்னை ஏன் கும்பகரணினு சொன்ன” 

“கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை என்பது இது தான்” 

“எனக்கு..” 

“தான் மீசை இல்லைனு சொல்லப் போறிய! கடிக்காதடி..” 

“சரி.. சரி விஷயத்திற்கு வா” 

8.15 வரை தூங்கினால் வேற எப்படி சொல்றது” 

“யாரு 8.15 வரை தூங்கினா?” 

“வேற யாரு நீ தான்” 

“ஹலோ நாங்கலாம் ஆறு மணிக்கு எழுந்து வாகிங் போற ஆளு” 

“ஷப்பா!!! முடில டா சாமி.. தயவு செய்து சீக்கிரம் கிளம்பி வா..” 

“எங்க?” 

“மறுபடியுமா!!!!!! நீ முதல்ல கிளம்பி உன் ரூமை விட்டு வெளிய வா.. எங்கன்னு அப்புறம் சொல்றேன்” 

“நான் எப்பவோ கிளம்பியாச்சு” 

“சரி வெளிய வா” 

“ஹ்ம்ம்” என்றபடி அறைக்கதவை திறந்து வெளியே வந்தவளை பார்த்து சஹானா சிறு அதிர்ச்சியுடன் பார்க்க அவள் தனது குர்த்தாவின் காலரை தூக்கியபடி, “எப்புடி!” என்றாள்.

ஈஸ்வரனும் அதே ஆச்சரியத்துடன், “எப்படி டா?” என்று வினவ,

அவள், “சஹு பேசியதில் இருந்து அவ இங்க தான் இருக்கிறானு புரிஞ்சிடுச்சு.. அதான் நான் கிளம்பும் வரை அவ கூட மொக்கை போட்டேன்” 

“சரி சரி.. சீக்கிரம் சாபிட்டுட்டு கிளம்பு.. இப்பவே மணி 8.30 எனக்கு பத்து மணிக்கு காதர் சார் கிளாஸ்.. இதுவரை அவரிடம் திட்டு வாங்காத ஒரே ஆள் நான் தான்..” 

“இதோ மேகாவின் மல்லிப்பூவை ரெண்டே நிமிஷத்தில் சாப்டுட்டு வரேன்” 

ஒரு நொடி யோசித்த சஹானா புன்னகையுடன், “இட்லியை தான் அப்படி சொன்னியா!” என்றாள். 

“ஹ்ம்ம்” என்றபடி அவசரமாக உண்டவள் சொன்னது போல் இரண்டு நிமிடத்தில் கிளம்பினாள். ஆனால் செல்வதற்கு முன் தனது கைபேசியில் இருந்து வீட்டு தொலைபேசியை அலற விட்டு நித்திலாவை எழுபிவிட்டுவிட்டு தான் சென்றாள்.

 

 

இருவரும் ராஜி என்ற ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்ற போது அவளது தந்தை வெளியே சென்றிருந்தார். அவர் வருவதற்காக காத்திருந்த நேரத்தில் மூவரும் தோட்டத்தில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, ப்ரித்திகா, “ஹே.. சேஞ்சிங் ரோஸ் வாங்கியிருக்கிறதா சொன்னியே! எங்க வச்சிருக்க?” என்றதும் ராஜி குதுகலத்துடன், “வா காட்டுறேன்” என்றபடி அழைத்துச் சென்றாள்.

அழகாக பூத்திருந்த ரோஜாவை ரசித்த ப்ரித்திகா, “அழகா இருக்கிறதுல சஹு” என்றபடி திரும்பினால் அங்கே சஹானா இல்லை.

ராஜி, “உன் பின்னாடி சஹானா வரலையா?” என்று கேட்டாள். 

“எதுக்கு டென்ஷன்! குயில் சத்தம் கேட்குதா.. அந்த இடத்துக்கு போனால் அவளை பார்க்கலாம்.. அது ஒரு குயில் பயித்தியம்”  

ப்ரித்திகா சொன்னது போல் சஹானா ஒரு மரத்தின் அடியில் நின்று கூவும் குயிலை தான் ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவர்கள் இருவரும் சென்ற பொழுது சஹானவோ பாதி நனைந்த உடம்புடன் ஒரு இளைஞனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

அந்த காட்சியை கண்ட ப்ரித்திக்கா வாய்விட்டு சிரிக்க, ராஜி, “என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்க?”  என்று கூற,

அந்த இளைஞன் சிறு பதற்றத்துடன் சஹானாவிடம், “சாரி.. நான் ப்ரித்திகானு நினைத்தேன்.. வந்து.. சாரி” என்றவன் அவசரமாக இடத்தை விட்டு அகன்றான்.

பற்கள் தந்தியடித்தபடி ப்ரித்திகாவை முறைத்த சஹானா, “யாரையாவது விட்டு வைக்கிறியா?” என்றாள். 

ராஜி, “என்ன சஹானா! இது தான் நீங்க கோபத்தை வெளிபடுத்தும் முறையா! நானா இருந்தால் இவளை மொத்தியிருபேன்” என்றதிற்கு மெலிதாக புன்னகைத்தாள்.

ராஜி, “உங்களை மாற்ற முடியாது.. சரி வாங்க முதல்ல தலையை துவட்டுங்க” என்றபடி அவளை அழைத்துச் செல்ல, ப்ரித்திகாவும் அவர்களுடன் மேலே சென்றாள்.

ராஜி துண்டை எடுத்து வர அறையின் உள்ளே சென்ற பொழுது சஹானா, “ராஜி அண்ணா கிட்ட என்ன சேட்டை பண்ண? உன்னால் என் மேல ஐஸ் வாட்டரை ஊத்திட்டாங்க.. இப்போ எப்படி நேரத்திற்கு கிளாஸ் போக முடியும்.. உன்னால் நான் காதர் சாரிடம்..” என்று பொறியத் தொடங்கவும்,

அதை கவனிக்காதவள் போல் ப்ரித்திகா வாய்விட்டு சிரித்தபடி, “சஹு மேடம்.. உங்க மேல் தண்ணீரை ஊத்தியது ராஜி அண்ணா இல்லை.. நீங்க பார்க்க விரும்பிய, கூட்டு சேர விரும்பிய, மகா கணம் பொருந்திய ஸ்ரீதர்” என்றாள். 

சஹானா அதிர்ச்சியுடன் அவளை பார்க்க,

அவள் புன்னகையுடன், “இப்போ புரியுதா நான் ஏன் அவனை அண்ணானு சொல்றதில்லைனு.. இது வெறும் சாம்பிள் தான்.. இத்தனை வருடங்களில் நான் அடைந்த கடுப்புகள் எரிச்சல்கள் பற்பல” என்றாள். 

“இது யார் வீடு?” 

“என் பெரியப்பா வீடு.. ராஜி குடும்பம் இங்கே மாடியில் வாடகைக்கு இருக்கிறாங்க” 

“நீ சொன்னதே இல்லையே” 

“நீ கேட்டதே இல்லையே” 

“இங்கே வரும் போதாவது சொல்லியிருக்கலாமே” 

“பெரியப்பா வீடுன்னு தெரிந்தால் நீ வர யோசிப்பியோன்னு வந்த பிறகு சொல்லிக்கலாம்னு நினைத்தேன்” 

ராஜி துண்டுடன் வரவும் அவர்கள் பேச்சு நின்றது.

ப்ரித்திகா, “ராஜி, அங்கிள் சாயுங்காலம் எப்போ ப்ரீயா இருப்பாங்கனு கேட்டு சொல்லு.. இப்போ நாங்க கிளம்புறோம்.. இப்போ உடனே வீட்டுக்கு போனா தான் சஹு டிரெஸ் சேஞ் பண்ணிட்டு கிளாஸ்க்கு போக சரியா இருக்கும்.. அப்புறம் நான் இப்போ வந்ததை பெரியம்மா கிட்ட சொல்லிடாத.. சாயுங்காலம் வந்து சமாளிச்சுக்கிறேன்.. ஆன்ட்டியிடமும் சொல்லிடு..” என்றபடி புன்னகையுடன் கிளம்பினாள். 

வீட்டிற்கு செல்லும் வழியில் சஹானா, “உன் அருமை அண்ணனை பார்க்காமல் எப்படி வந்த?” என்று கேட்டாள். 

“எல்லாம் உனக்காக தான்” 

“நம்ப முடியலையே!” 

“ஏன் சஹு?” 

“என்னை விட அவனை தானே உனக்கு பிடிக்கும்?” 

“சஹு செல்லம்.. எனக்கு உன்னையும் பிடிக்கும் என் அண்ணனையும் பிடிக்கும்..” 

“இருவரில் யாரை ரொம்ப பிடிக்கும்?” 

அவள் சிரித்து சமாளிக்க முயற்சிக்க, சஹானா, “சிரிச்சு சமாளிக்காதே!” என்றாள்.

வண்டியை வீட்டின் முன் நிறுத்திய ப்ரித்திகா, “சீக்கிரம் ஓடு.. டைம் ஆச்சு.. நானே உன்னை ஸ்கூலில் விடுறேன்” 

“பேச்சை மாற்றினதா நினைப்பா! கிளாஸ் முடிந்து வந்து கேட்கிறேன்.. அப்புறம் இன்னொரு விஷயம்.. ஸ்கூல்னு சொல்லாதே!” 

“நீ படிப்பது MCAனாலும் அதை ஸ்கூலுக்கு போய் தானே படிக்கிற!” 

சஹானா முறைக்கவும், ப்ரித்திகா, “காதர் சாரிடம் திட்டு வாங்குற எண்ணத்தில் இருக்கிறியா?” என்றதும் அவள் அவசரமாக தன் அறைக்கு சென்றாள்.  

அவள் தலை முடியை காயவைத்து உடையை மாற்றி வந்த போது ப்ரித்திகா யமுனாவிடம், “ப்ராஜெக்ட் ஏதோ மக்கர் பண்ணிரிச்சுன்னு ராம் அண்ணா வரலை” என்று கூறிக் கொண்டிருந்தாள்.

ப்ரித்திகா முன் வந்து நின்ற சஹானா இடுப்பில் கைவைத்தபடி அவளை முறைக்கவும் ப்ரித்திகா, “உன் பாசத்தை அப்புறம் காட்டு.. இப்போ நேரமாச்சு” என்று அவளை திசை திருப்பினாள். 

மணியை பார்த்த சஹானா அவசரமாக தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். சஹானாவின் முறைப்பிற்கு காரணம் அறியாத யமுனா ப்ரித்திகாவை பார்க்க அவள், “என் மேல் உள்ள பாசத்தின் வெளிபாடு” என்று புன்னகையுடன் வண்டியை கிளப்பினாள். அவளது பதிலின் மூலம் ஒன்றும் புரியாத போதும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் யமுனா புன்னகைத்தார்.   

ப்ரித்திகா வண்டியை வேகமாக ஓட்டியும் சஹானா இரண்டு நிமிடங்கள் தாமதமாக தான் வகுப்பிற்கு சென்றாள். அதன் விளைவு ‘இது வரை காதர் ஆசிரியரிடம் திட்டு வாங்காத ஒரே ஆள்’ என்ற பெருமை பறிபோனது. ஆம் இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததிற்காக ஆசிரியரிடம் நன்றாக திட்டு வாங்கி இருந்தாள்.. 

 

    

 

இவர்கள் அறியாத விஷயம் ஒன்று நிகழ்ந்து இருந்தது. வீட்டின் தெருவாசல் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஸ்ரீராம் ஸ்ரீதர் தண்ணீர் பாட்டிலுடன் தோட்டத்திற்குள் செல்வதை பார்த்ததும் அவன் ப்ரித்திகா மேல் ஊற்ற செல்வதாக எண்ணி அவளை எச்சரிக்கும் நோக்கத்துடன் வேகமாக சென்றவன் குயிலுடன் பேசிக் கொண்டிருந்த சஹானாவை பார்த்ததும் தன்னை மறந்து நின்று விட்டான். ஸ்ரீதர் ப்ரித்திகாவை தேடிக் கொண்டிருக்க, ஸ்ரீராம் சஹானாவை ரசித்தபடி தனி உலகில் இருந்தான்.

ஸ்ரீதர் அவளது பின் பக்கம் இருந்தபடி அவள் மேல் தண்ணீரை உற்றியதும் தனது உலகத்தில் இருந்து வெளிவந்தவன் அவள் தனது தம்பியை திட்ட போகிறாள் என்று நினைத்ததிற்கு மாறாக அவள் அவனை முறைத்ததோடு நிறுத்திக் கொண்டு, தங்கையையும் திட்டாததை கண்டு ஆச்சரியம் கொண்டான். இவன் இருந்த இடம் செடிகளின் மறைவில் இருந்ததால் யாரும் இவனை கவனிக்கவில்லை. அவர்கள் சென்றதும் வீட்டினுள் சென்றான்.

உள்ளே சென்ற ஸ்ரீராமை கண்ட ஸ்ரீதர் உற்சாக குரலில், “வா டா நல்லவனே! வர மாட்டேன்னு சொன்ன!” என்றான். 

“கடைசி நேரத்தில் ஒரு வழியா வேலையை முடிச்சிட்டேன்.. எதுக்கும் இருக்கட்டும்னு டிக்கெட் கேன்சல் பண்ணாம இருந்தது நல்லதாம் போச்சு” 

“ஓ!” 

“அம்மா எங்க?” 

“ஒரு கண்டோலென்ஸ்..” 

“அதான் தோட்டத்தில் கூத்தடிச்சியா?” 

“ச.. மிஸ் ஆகிருச்சு.. ப்ரித்தினு நினைத்து அவ(ள்) பிரெண்ட் மேல ஊத்திட்டேன்” 

“யாரு மேல ஊத்தி இருந்தாலும் ப்ரித்தி உன்னை சும்மா விட மாட்டா” 

“அதானே வெளியே கிளம்பிட்டு இருக்கிறேன்.. சாவியை எப்படி மேலே போய் குடுக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. நல்ல வேளை நீ வந்துட்ட” 

“அம்மா எப்போ, யார் கூட போயிருக்காங்க?” 

“கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஜானட் ஆன்ட்டி கூட போனாங்க.. வர எப்படியும் பத்து மணியாகும்” என்றபடி அவன் கிளம்ப,

ஸ்ரீராம், “நாளை வரை இப்படி வெளியேவே சுத்திட்டு இருப்பியா?” என்று கேட்டான். 

“சம்பவம் நடந்த உடனே தான் தாக்கம் அதிகமா இருக்கும்.. அம்மா கிட்ட மகேஷை பார்க்க போனதா மட்டும் சொல்லு” 

புன்னகையுடன் தம்பியை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் அவன் செல்லவும் சஹானாவும் ப்ரித்திகாவும் கிளம்பிச் சென்றனர். தனிமையில் இருந்த ஸ்ரீராமின் மனதை சஹானா ஆக்கிரமிக்கத் தொடங்கினாள்.

 

 

மாலையில் வகுப்பு முடிந்து சஹானா வீட்டிற்கு வந்த போது ப்ரித்திகாவும் நித்திலாவும் அங்கு இருந்தனர். சஹானா அப்பொழுதும்  ப்ரித்திகாவை முறைத்தாள்.

ஆனால் ப்ரித்திகா அலட்டிக்கொள்ளாமல், “கிளாஸ் எப்படி போச்சு? உன்னோட காதர் சார் திட்டில் இருந்து தப்பிச்சியா இல்லையா?” 

சஹானா பல்லை கடித்துக் கொண்டு, “உன்னால் திட்டு தான் வாங்கினேன்” என்றாள். 

“ஹெலோ மேடம் நீங்க திட்டு வாங்கினதுக்கு காரணம் நான் இல்லை, உங்க சங்கத் தலைவர் ஸ்ரீதர்” 

நித்திலா குதுகலத்துடன் சஹானாவின் கையை குலுக்கி., “ஹே நீயும் எங்க சங்கத்தில் சேர்ந்துட்டியா? இது எப்போ நடந்தது?” என்று கேட்டாள். 

சஹானா கடுப்புடன் நித்திலாவை முறைக்கவும், அவள் தன் சகோதிரியிடம், “சஹு இவ்வளவு டென்ஷன் ஆகிற அளவுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டாள். 

ப்ரித்திகா சிரிக்க தொடங்கவும், சஹானா அவளை அடிக்க போக, ப்ரித்திகாவோ அருகில் இருந்த மேஜையில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து அதனுள் இருந்த சிறிது நீரை சஹானா முகத்தில் ஊற்றி, “இது தான் நடந்தது” என்றாள்.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்த்திறாத சஹானா சிறு அதிர்ச்சியுடன் நின்றுவிட,

நித்திலா சிறு புன்னகையுடன், “ஸ்ரீ நீனு நினைத்து சஹு மேல ஊத்திட்டானா?” என்றாள். 

ப்ரித்திகா புன்னகையுடன் ஆம் என்பது போல் தலையை அசைத்தாள்.

சஹானா இருவரையும் முறைக்க, நித்திலா, “கவலைப்படாத சஹு.. நாம ஒரு வாளி தண்ணியை இவ மேல் ஊத்திடலாம்” என்றாள். 

அன்னை கொண்டு வந்து கொடுத்த துண்டை கொண்டு முகத்தை துடைத்த சஹானா அமைதியாக இருக்கவும், நித்திலாவும் ப்ரித்திகாவும் ஒன்றாக, “என்னாச்சு சஹு?” என்று வினவினர்.

நித்திலாவை பார்த்த சஹானா, “உங்க சங்கத்தில் என்னைக்கும் நான் சேர மாட்டேன்” என்று கூறிவிட்டு ப்ரித்திகாவிடம், “காலையில் நான் கேட்ட கேள்விக்கு இப்போ பதிலை சொல்லு” என்றாள். 

“ராஜியிடம் பேசிட்டேன்.. இப்போ அங்கிளை பார்க்க போகணும்.. வந்து இதை பத்தி பேசலாம்” 

“எனக்கு இப்பவே தெரியனும்” என்று சஹானா உறுதியுடன் கூறவும், நித்திலாவும் யமுனாவும் ‘என்ன’ என்பது போல் ப்ரித்திகாவை பார்த்தனர்.

ப்ரித்திகா, “உன்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும், என் ராம் அண்ணாவையும் ரொம்ப பிடிக்கும்.. யார் முக்கியம்னு கேட்காதே.. சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது” என்றாள். 

சஹானா மெளனமாக இருக்கவும், ப்ரித்திகா, “நான் உன் கிட்ட உன் அண்ணாவை ரொம்ப பிடிக்குமா என்னை ரொம்ப பிடிக்குமானு கேட்டால் என்ன பதிலை சொல்லுவ?” என்ற கேள்வியை எழுப்பினாள். 

“அது..” 

“இப்போ புரியுதா என் நிலை.. ராம் அண்ணா என் உடன் பிறந்த அண்ணா இல்லைனு நீ நினைக்கலாம் ஆனா என்னை பொறுத்தவரை ராம் அண்ணா  என் உடன் பிறந்த அண்ணா தான்..” 

சஹானாவின் தோளை தொட்ட நித்திலா, “உனக்கு தான் இவளை பத்தி நல்லா தெரியுமே டா?” என்றாள். 

சஹானா மெல்லிய குரலில், “ஹ்ம்ம்.. சாரி ப்ரித்தி..” என்று ஆரம்பிக்க,

ப்ரித்திகா புன்னகையுடன் அவளது மறு தோளை தொட்டு, “ஃப்ரீயா விடு.. இப்போவாது கிளம்பலாமா?” என்றாள். 

“ஹ்ம்ம்.. இரண்டு நிமிஷத்தில் வரேன்” என்று புன்னகையுடன் உள்ளே சென்றவள் சொன்னது போல் இரண்டு நிமிடங்களில் பளிச்சென்ற மலர்ந்த முகத்துடன் வந்தாள்.

சின்னவர்களின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த யமுனா மூவருக்கும் மென்னகையுடன் விடை கொடுத்தார்.

 

நித்திலா பெரிய அன்னை வீட்டிற்கு செல்ல ப்ரித்திகாவும் சஹானாவும் மேலே இருந்த ராஜி வீட்டிற்கு சென்றனர். இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த ராஜியின் தந்தை இவர்களை தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.

சஹானா தனது தோழியை பற்றி கூறி முடித்ததும் அவர், “இது உண்மைனு எப்படி நம்புறது?” என்று கேட்டார். 

“புரியலை சார்” 

“உன் தோழி உண்மையை தான் சொன்னாள்னு எப்படி நம்புறது?” 

“அவ பொய் சொல்ல மாட்டா சார்” 

“சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒருவரது குணத்தை மாற்றலாமே!” 

“அவ பொய் சொல்ல என்ன காரணம் இருப்பதா நினைக்கிறீங்க?” 

“காதல் கல்யாணம், கணவன் இங்கு இல்லை.. புகுந்த வீட்டு உறவுகளுடன் ஒத்து போகாமல் அவர்களை அவமானப்படுத்த நினைத்து இப்படி சொல்லி இருக்கலாமே!” 

“நான் போலீஸ் துணையை நாடுவேன்னு அவளுக்கு எப்படி தெரியும்? இன்னும் சொல்ல போனால் நான் உதவி செய்வேனானு கூட அவளுக்கு தெரியாதே!” 

“உன் தோழிக்கு உன் குணம் தெரியாதா என்ன?” 

“அதே மாதிரி அவளோட குணம் எனக்கும் தெரியும் தானே!” 

அவர் சிறு புன்னகையுடன், “கண்டிப்பா.. ஆனா உன் குணம் மாறும் அளவிற்கு எந்த மாற்றமும் உன் வாழ்வில் நிகழவில்லை.. அவளோட வாழ்க்கை அப்படி இல்லையே!” என்றார். 

“இல்லை சார்.. அவளது தோற்றமும் குரலும் தோய்ந்து போய் இருந்துது.. நிச்சயம் அவ) பொய் சொல்லலை” 

“ஒருவேளை உன் தோழி பொய் சொல்லி இருந்தால் நம் நடவடிக்கையால் வரும் பின் விளைவுகளை சந்திக்க நீ தயாரா இருக்கிறியா?” 

“தயார் சார்” என்று அவள் சிறிதும் தயக்கமின்றி கூற,

ப்ரித்திகா, “சஹு அவசரப்படாத.. எதுக்கும் மாமாகிட்ட கேட்டுக்கோ” என்றாள். 

ராஜியின் தந்தை தீர்க்கமாக சஹானாவை பார்க்க, அவளோ உறுதியுடன், “நிச்சயம் என் அப்பா அனுமதியோட செயல்படுறேன் சார்.. இப்போ, என் தோழியின் கூற்று உண்மையாக இருக்கும் பச்சத்தில் நாம என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கனும்னு சொல்லுங்க”  என்றாள். 

“உன் அப்பாவின் சம்மதம் எனக்கு முக்கியம்.. முன் பின் தெரியாத பெண்ணாக இருந்தால் கூட இதை தான் சொல்லியிருப்பேன்.. நீயோ ப்ரித்திகாவோட அத்தை பொண்ணு, அதனால் உன் அப்பாகிட்ட போனில் பேசினதுக்கு அப்புறம் தான் உனக்கு நான் உதவி செய்வேன்.. இப்போ நீ கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லும் முன் எனக்கு ஒரு பதில் தேவை.. உன் தோழி புகுந்த வீட்டை எதிர்த்து உண்மையை சொல்லவோ, வீட்டை விட்டு வெளியே வரவோ சிறிதும் தயங்க மாட்டாளே?” 

“அவ இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது நிச்சயம் வெளியேற தான் விரும்புறா சார்” 

“சரி இப்போ நீ கேட்ட கேள்விக்கு பதிலை சொல்றேன்.. முதல்ல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கணும், அப்புறம் மகளிர் சங்கம் உதவியுடன் உன் தோழியை மீட்கணும்.. உன் தோழியின் முகவரி தெரியுமா?” 

“தெரியாதே சார்” 

ப்ரித்திகா, “என்ன சஹு இப்படி சொல்ற?” என்றாள். 

“இப்போ என்ன சார் பண்றது?” என்று சஹானா மிகுந்த கவலையுடன் கேட்கவும்,

ராஜின் தந்தை, “அவளுடைய மொபைல் நம்பர் தெரியுமா?” என்று கேட்டார். 

“ஹ்ம்ம்.. தெரியும் சார்” 

“அப்போ அட்ரெஸ் கண்டுபிக்க கஷ்டமில்லை.. நீ உன் அப்பாகிட்ட பேசிட்டு சொல்லு.. நான் என் நண்பன் மூலம் அவளோட அட்ரெஸ் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.. அவளோட முழுப்பெயர் என்ன?” 

“பாலகுமாரி.. கணவர் பெயர் ராஜீவ்” 

“அவளோட பெற்றோர், புகுந்த வீட்டினர் பற்றி தெரிந்ததை சொல்” 

அவள் கூறியதை குறித்துக் கொண்டார்.

அப்பொழுது ப்ரித்திகா, “எனக்கு ஒரு டௌட் அங்கிள்.. ஒருவேளை அந்த நம்பர் தொடர்பற்று இருந்தால் எப்படி முகவரியை கண்டுபிடிப்பது?” என்று கேள்வியை எழுப்பினாள். 

சஹானா சிறு கலக்கத்துடன் அவரை பார்க்க அவர் மெல்லிய புன்னகையுடன், “நாம நல்லவிதமாவே யோசிப்போம்.. ரொம்பவும் தொடர்பற்று இருக்க வாய்ப்பில்லை.. அழைத்தது யார், எதற்காக அழைத்தார்கள்னு விவரத்தை தெரிந்த பின், அவளை தனியே பேச விடாமல் அருகிலேயே இருந்தபடி அவளை பேச விடுவதற்கு வாய்ப்பு இருக்குது.. பார்ப்போம்” என்றார். 

சஹானா, “நாம நல்லவிதமா யோசிக்கிறது சரி தான்.. ஒருவேளை ப்ரித்திகா சொன்னது போல் முற்றிலுமாக தொடர்பற்று இருந்தால் என்ன செய்றது சார்?” என்று கேட்டாள். 

“வேற வழியில் யோசிக்கலாம், கவலைப்படாதே.. அவளோட புகைபடத்தை கோவில் குருக்களிடம் கொடுத்து அவ கோவிலுக்கு வந்தால் நம்மகிட்ட தகவல் சொல்ல சொல்லலாம்..“ என்றதும் தான் சஹானாவிற்கு நிம்மதியாக இருந்தது.

“தன்க்யூ சார்.. என் அப்பாவை உங்ககிட்ட பேச சொல்றேன் சார்” என்றபடி எழுந்துக் கொண்டாள்.

ப்ரித்திகாவும், “தன்க்யூ அங்கிள்” என்றபடி எழுந்துக் கொண்டாள். 

இருவரும் ப்ரித்திகாவின் பெரிய அன்னை லலிதா வீட்டிற்கு சென்றனர். கதவை திறந்து மெல்லிய புன்னகையுடன் தலை அசைத்து வரவேற்ற லலிதா சஹானாவை பார்த்து, “எப்படி இருக்க? சின்ன வயசுல பார்த்தது.. ஆளே அடையாளம் தெரியலை..” என்றார். 

“நல்லா இருக்கிறேன் அத்தை.. நீங்க எப்படி இருக்கிறீங்க?” 

“ஹ்ம்ம்.. நல்லா இருக்கிறேன்” என்றவர் ப்ரித்திகாவை பார்த்து செல்லமாக முறைக்கவும், அவரது தோளில் தொங்கியபடி அவரது கன்னத்தை பிடித்து, “என் செல்ல பெரியம்மாகிட்ட  என்னை போட்டு கொடுத்தது என் எருமை இல்லை அருமை தங்கையா?” 

அவர் அவளது கையை தட்டி விடவும் அவள் மீண்டும் அவரது கன்னத்தை பிடித்தபடி, “எப்படியும் நான் வந்த நேரம் நீங்க வீட்டில் இல்லை.. அப்புறம் எதுக்கு இந்த முறைப்பு?” என்றபடி புருவம் உயர்த்தினாள்.

அவர் மெல்லிய புன்னகையுடன், “என்னை போட்டு குடுத்தது என் அருமை தங்கையா?” என்றார். 

இருவரும் புன்னகைத்தனர். ப்ரித்திகா, “எங்கே அந்த இரண்டு வானரங்களும்?” என்று கேட்டாள். 

“நித்தி பிரெண்டை பார்க்க போயிருக்கிறா.. ஸ்ரீ தூங்கிட்டு இருக்கிறான்.. சரி உட்காருங்க.. நான் காபி கொண்டு வரேன்” 

லலிதா சமைலறைக்கு செல்லவும் ப்ரித்திகா, “சஹு.. நான் பாத்ரூம் போயிட்டு வரேன்..” என்றபடி கழிவறை நோக்கிச் சென்றாள்.

சோபாவில் அமர்ந்த சஹானாவிற்கு அருகில் இருந்த சிறிய டீபாய் மேல் இருந்த தண்ணீர் குவளையை பார்த்ததும் காலையில் நிகழ்ந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. இதுவரை யார் மீதும் பெரிதாக கோபம் கொண்டிராத சஹானா இன்று காதர் ஆசிரியரிடம் திட்டு வாங்க காரணமாக இருந்த ஸ்ரீதர் மீது சிறிது கோபம் கொண்டாள். அதன் விளைவாக அந்த தண்ணீர் குவளையுடன் அருகில் இருந்த அறைக்குள் சென்றாள்.

அந்த அறையின் மெத்தையில் ஒரு பக்கமாக படுத்திருந்த ஸ்ரீராம் முகத்தை கையை கொண்டு மறைத்திருந்தான். முகம் தெரியாத காரணத்தினால் லலிதாவின் கூற்றை வைத்து படுத்திருப்பது ஸ்ரீதர் என்று சஹானா நினைத்துக் கொண்டாள். ஒரு வேகத்தில் அவன் முகத்தில் தண்ணீரை ஊற்ற போனாள் ஆனால் அவளது அன்னை கூறும் கூற்றான ‘தூங்குறவங்களை எழுப்புவது பெரிய பாவம்’ நினைவிற்கு வரவும் அவளது வேகம் மட்டுப்பட்டது.

தண்ணீரை ஊற்ற நினைப்பதும் பின் தயங்குவதும் என்று அவள் குழம்பிக் கொண்டிருக்க, பக்கவாட்டில் இருந்த குளியலறை திறக்கும் சத்தம் கேட்கவும் அவள் அவசரமாக வெளியே செல்ல எத்தனிக்க, அவளது முயற்சியை தடுப்பது போல் அவளது துப்பட்டா நுனியில் இருந்த நூல் கட்டிலின் முனையில் மாட்டிக் கொண்டது. அப்பொழுது குளியலறை கதவை திறந்துக் கொண்டு ஸ்ரீதர் வர, அவனை கண்டதும் அதிர்ச்சியில் அவள் கையில் இருந்த குவளையை தவறவிட்டாள்.

சரியாக அந்த நொடியில் ஸ்ரீராம் முகத்தின் மீதிருந்த கையை விலக்கவும் தண்ணீர் அவன் காதினுள் செல்ல குவளை அவன் கன்னத்தின் மேல் விழுந்து மிக சிறிய கீரலை ஏற்படுத்தியது.

காதினுள் தண்ணீர் சென்றதும் பதறி எழுந்த ஸ்ரீராமின் முகத்தை சஹானாவின் துப்பட்டா திரை போல் மறைத்தது. அந்த மெல்லிய துப்பட்டாவின் வழியாக அவளது முகம் நிழலோவியமாக தெரிந்தது. அவன் கனவா நிஜமா என்று குழம்ப, அவன் எழுந்த வேகத்தில் கட்டிலில் மாட்டியிருந்த நூல் அறுந்துவிட சஹானா வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்ற சில நொடிகள் கழித்தே சுயநினைவிற்கு வந்த ஸ்ரீராம் ஸ்ரீதரை கவனித்ததும் தன் காதல் உணர்வுகளை துல்லியமாக மறைத்துக் கொண்டு வரவழைத்த கோபத்துடன், “உன்னால் தான்” என்றான்.

ஸ்ரீதர் அலட்டிக் கொள்ளாமல் தோளை குலுக்கிவிட்டு வெளியே செல்ல திரும்ப,

ஸ்ரீராம், “எங்க போற? ஒழுங்கு மரியாதையா இந்த மெத்தை விரிப்பை மாத்து” என்றபடி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டவன் கண்களை மூடி தன்னவளின் ஆடை தீண்டலை அணுஅணுவாக ரசித்தான். ஸ்ரீதர் முணுமுணுப்புடன் மெத்தை விரிப்பை மாற்றத் தொடங்கினான்.

 

 

வெளியே சென்ற சஹானா சோபாவில் அமரவும் ப்ரித்திகா வரவும் சரியாக இருந்தது. சஹானாவின் முகத்தை பார்த்த ப்ரித்திகா, “நீ ஏன் பேயை கண்ட மாதிரி ஒரு திகிலுடன் இருக்கிற?” என்று கேட்டாள். 

“அது.. அது வந்து..” 

ப்ரித்திகா அவள் அருகில் அமர்ந்து, “என்ன சஹு?” என்றாள். 

“நான்.. வந்து..” 

ப்ரித்திகா அவளது கையை பற்றி, “சஹு.. ரிலாக்ஸ்.. மூச்சை இரண்டு முறை இழுத்து விடு.. ஹ்ம்ம்.. இப்போ சொல்லு.. என்னாச்சு?” என்று கேட்டாள். 

“நான்.. ஸ்ரீதர்னு நினைச்சு உன்.. உன் பெரியப்பா முகத்தில் தண்ணியை ஊத்திட்டேன்” 

ப்ரித்திகா வாய்விட்டு சிரித்தபடி அவளது கையை குலுக்கி, “சூப்பர் சஹு.. கடைசியில் நீயும் எங்க வானர சங்கத்தில் கலந்துட்ட” என்றாள். 

சஹானா அவளது கையை தட்டிவிட்டபடி, “ச்ச்.. என்ன ப்ரித்தி சீரியஸ்னஸ் புரியாம..” 

“இப்போ யாரு சீரியஸ்ஸா இருக்கிறாங்க?” 

சஹானா முறைக்கவும், ப்ரித்திகா, “சரி விடு நீ சிரிக்கும் நிலையில் இல்லை.. உனக்கு ஒரு இனிய தகவலை சொல்லவா!!! என் பெரியப்பா ஊரில் இல்லை” 

“அப்போ நான் தண்ணி ஊத்தியது?” 

“அது ஸ்ரீதர் இல்லைனு எப்படி சொல்ற?” 

சஹானா சிறு எரிச்சலுடன், “அவன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததை நான் பார்த்தேனே! முதல்ல தண்ணியை ஊத்த நான் தயங்கிட்டு தான் இருந்தேன்.. அந்த குரங்கை பார்த்த அதிர்ச்சியில் தான் கட்டிலில் தூங்கிட்டு இருந்தவர் மேல் தண்ணியை கொட்டிட்டேன்” என்றாள்.

ப்ரித்திகா சிரிப்புடன், “அதானே பார்த்தேன்!!! வானர சங்கத்தில் நீயா சேரலை.. ஸ்ரீதரால் தள்ளபட்டிருக்க..” என்றாள். 

“இப்போ இது ரொம்ப முக்கியம்!” 

“இதை விட முக்கியமான விஷயம்.. நீ ஸ்ரீதரை குரங்குனு கூப்பிட்டது” 

“எரிச்சலை கிளப்பாதே ப்ரித்தி.. அங்கே படுத்திருந்தது யாரு?” 

“வேற யாராக இருக்கும்! அது என் ராம் அண்ணா தான்” 

“என்னது!!!” 

“கடைசி நேரத்தில் வேலையயை முடிச்சிட்டு கிளம்பி வந்துட்டான் போல” என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுது அறையை விட்டு ஸ்ரீராம் வெளியே வரவும் ப்ரித்திகா செல்ல முறைப்புடன், “ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை? மதியம் போன் பேசினப்ப கூட சொல்லலை.. இதுக்கு நிச்சயம் தண்டனை தரப்படும்” என்றாள். 

ஸ்ரீராம் மெல்லிய புன்னகையுடன், “உனக்கு பதில்லா உன் பிரெண்ட் தண்டனை கொடுத்துட்டாங்களே!” என்றதும்,

சஹானா பதற்றத்துடன், “இல்லை.. அது வந்து.. நான் தெரியாம தான்.. சாரி..” என்று சற்று திணறினாள். 

ஸ்ரீராம் ஆச்சிரியத்துடன் சஹானாவை பார்த்தான். அவளது முகத்தில் சிறு பதற்றமும் சங்கடமும் நிலவியிருக்க, அவளது பார்வை அரை வினாடி கூட அவன் முகத்தில் நிலைக்கவில்லை.

அவன் மென்மையான குரலில், “நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகிற அளவிற்கு இது ஒரு விஷயமே இல்லை.. நீங்க ப்ரித்திகாவோட தோழியானு ஆச்சரியமா இருக்குது” என்றான். 

இப்பொழுதும் சஹானாவின் முகத்திலிருந்து சங்கடம் முழுமையாக விலகவில்லை.

ப்ரித்திகாவின் முறைப்பை பார்த்தவன் மெல்லிய சிரிப்புடன், “நீயே சொல்லு.. இவ்வளவு மென்மையான குணம் இருக்கிறவங்க உன் தோழினு சொன்னால் யாரால் நம்ப முடியும்?” என்றான். 

ப்ரித்திகா மென்னகையுடன், “அது என்னவோ உண்மை தான்.. இவ மென்மையான குணம் கொண்டவள் தான்” என்றவள் சஹானாவின் தோளை சுற்றி கை போட்டு அவளது இடது தோளில் தனது நாடியை பதித்து, “இவ என்னோட தோழி மட்டுமில்லை.. அத்தை பொண்ணும் கூட” என்றாள். 

ஸ்ரீராம் கண்களில் சிறு மின்னலுடன், “ஓ! உன் பேச்சில் அடிக்கடி வரும் பச்சைக்கிளி முத்துச்சரம் இவங்க தானா!” என்றான். 

ப்ரித்திகா வாய்விட்டு சிரிக்கவும், சஹானா, “அது என்னடி பச்சைக்கிளி முத்துச்சரம்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். 

“அது உன் காலேஜ் யூனிபார்ம் கொடுத்த பெயர்”    [சஹானா B.Sc படித்த மகளிர் கல்லூரியின் சீருடை பச்சை நிற புடவை] 

சஹானா முறைக்கவும் ப்ரித்திகா புன்னகையுடன், “பட்டப்பெயர் வைத்தது ராம் அண்ணா.. என்னை ஏன் முறைக்கிற?” என்றாள். 

அப்பொழுது லலிதா காபியுடன் வரவும் சஹானா அமைதியாக இருந்தாள். ஸ்ரீராம் மனதினுள் அன்னைக்கு நன்றி தெரிவித்தான். சஹானாவின் சங்கடத்தையும் பதற்றத்தையும் போக்கவே ‘பச்சைக்கிளி முத்துசரம்’ என்று கூறி அவளை சீண்டினான். ஆனால் முதல் சந்திப்பில் அவள் தன்னை முறைத்துவிட கூடாதே என்ற தவிப்பில் அவன் இருந்தபோது அவனை காப்பாற்றுவது போல் லலிதா வந்தார்.

அவர்கள் காபியை அருந்திக் கொண்டிருந்தபோது அவசரமாக அறையைவிட்டு வெளியே வந்த ஸ்ரீதர் காதில் கைபேசியை வைத்தபடி “இதோ கிளம்பிட்டேன்டா” என்றான்.

அப்பொழுது ஸ்ரீதரின் கைபேசியில் அழைப்பொலியின் சத்தம் கேட்கவும் அதை எடுத்து பார்த்தவன் அழைத்தது ஸ்ரீராம் என்றதும் அவனை நோக்கி, “துரோகி” என்றான்.

பெண்கள் மூவரும் சிரிக்க, ஸ்ரீராம் அலட்டிக்கொள்ளாமல், “இல்லைனா மட்டும் நீ ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துறது தெரியாது பாரு!” என்றான். 

ஸ்ரீதர் முறைக்க, ப்ரித்திகா மென்னகையுடன், “அந்த சிங் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தினது போல அழைப்பே வராத இவனுக்கு காஸ்ட்லி போன்” என்றாள் கிண்டலாக. 

ஸ்ரீதர், “இந்த சம்பவத்தை வைத்து தப்பு கணக்கு போடாதீங்க மேடம்” என்றான். 

“அப்படியா!”

“பின்ன.. ஆபீஸ்ஸில் என் ரேன்ஜ் என்ன தெரியுமா? எனக்கு எத்தனை பேன்ஸ்(fans) தெரியுமா?” என்றபடி தனது சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டான். 

“ஆமா ஆமா.. இவரோட அழகை பார்த்து இங்கிலாந்த் இளவரசியும், ஸ்டைல் பார்த்து ஹாலேன்ட் பேரழகியும் இவரோட கடைக்கண் பார்வைக்காக ஏங்குறாங்கலாம்.. ஓவரா பில்ம் கொடுக்காத.. உன்னை எல்லாம் உள்ளூர் கிழவி கூட திரும்பி பார்க்க மாட்டா”

“அதை ஒரு உள்ளூர் கிழவி சொல்கிறது!” 

“போடா குரங்கு” 

“போடி குரங்கு” 

லலிதா, “போதும் போதும்.. ஸ்ரீ காபியை குடி” என்றபடி ஒரு குவளை காபியை அவனிடம் நீட்டினார். காபியை வாங்கியபடியே தனக்கு பலிப்பு காட்டிய ப்ரித்திகாவிற்கு பலிப்பு காட்டினான்.

ஐந்து நிமிட பொதுப்படையான உரையாடலுக்கு பிறகு ப்ரித்திகாவும் சஹானாவும் கிளம்பினர். கிளம்பும் போது ப்ரித்திகா ஸ்ரீராமிடம் கண்ஜாடையில் பேசிவிட்டு சென்றாள்.

அவர்கள் சென்ற பத்தாவது நிமிடம் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும், லலிதா கதவை திறக்க நினைக்க அவரை கண்ணசைவில் தடுத்த ஸ்ரீராம் தம்பியை சுட்டி காட்டினான். லலிதா புரியாமல் விழிக்க ஸ்ரீராம் மீண்டும் ஸ்ரீதரை சுட்டி காண்பிக்க, லலிதா யோசனையுடன், “ஸ்ரீ கதவை திற” என்றார்.

இதை ஸ்ரீராம் சொல்லியிருந்தால் யோசித்திருப்பான் ஆனால் அன்னை கூறவும் யோசிக்காமல் அவன் எழுந்து சென்று கதவை திறக்கவும் சிறிய வெடி வெடித்தது போன்ற சத்தத்துடன் நுரையால் குளுப்பாட்ட பட்டான். சந்தேகமே வேண்டாம், நுரையால் அவனை குளிப்பாட்டியது ப்ரித்திகா தான். [பிறந்தநாள் விழாவில் பயன்படுத்தப்படும் சிறிய கருவியான ‘poppers’ என்றதை கொண்டு இவ்வாறு செய்தாள்]

ஸ்ரீதர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், “இது சஹானாக்காக” என்றபடி தனது வண்டியில் சிட்டாக பறந்திருந்தாள்.

சத்தம் கேட்டு வெளியே வந்த லலிதாவும் ஸ்ரீராமும் வாய்விட்டு சிரிக்க, ஸ்ரீதர் அவர்களை பார்த்து முறைத்தான்.

லலிதா சிரிப்பின் நடுவே, “இதுக்கு தான் இவனை திறக்க சொன்னியா?” என்று ஸ்ரீராமிடம் வினவ, அவன் தம்பியிடம் கவனத்தை வைத்தபடி, “உங்களை காப்பாத்தியதுக்கு நன்றி சொல்லலைனாலும் எட்டபி வேலை பார்க்காம இருந்திருக்கலாம்” என்றான்.

ஸ்ரீதர், “துரோகி” என்றபடி தமையன் பக்கம் திரும்ப அவன் தோட்டத்தை நோக்கி ஓட்டமெடுக்க, இவன் அவனை துரத்திக் கொண்டு ஓடினான். 

தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

44 – நான் என்பதே நீதான(டா)டி..!

எனை கொ(வெ) ல்லும் மௌனமே -28