in ,

44 – நான் என்பதே நீதான(டா)டி..!

NEN 44

போட்டிக்காக அதிதி தீவிரமாக கவனம் செலுத்தி உடை வடிவமைத்துக் கொண்டிருக்க, ஆத்ரேயனோ இது முழுக்க முழுக்க அதிதியின் திறமையால் இருக்க வேண்டும் என்றெண்ணி ஒதுங்கி நின்று அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.

போட்டி நாள் நெருங்கும் முன்பே அதிதி உடையை வடிவமைத்திருக்க அதை கண்டு ஆத்ரேயன் அவளை பாராட்டவும் மகிழ்ந்தவள் அவனை அணைத்துக் கொண்டு மகிழ ஒரு நொடி கண் மூடித் திறந்தவன் சட்டென்று அவளை விட்டு விலகிச் சென்று விட அவள் மனம் வலித்தது.

போட்டி மும்பையில் நடைபெறுவதால் ஆத்ரேயன் அதிதியையும் யாழிசையும் அழைத்துக் கொண்டு மும்பை சென்றான்.

யாழிசை, துருவேந்திரனையும் உடன் அழைக்க அவனோ ஷூட்டிங் ஆரம்பிப்பதால் தன்னால் வர முடியாது என்றதும் மனதில் ஏமாற்றம் எழுந்தாலும் அவன் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு ஆத்ரேயன் அதிதியோடு மும்பை சென்றாள் யாழிசை.

பல மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் வந்திருக்க அனைவரும் தங்குவதற்கான ஏற்பாட்டை போட்டி நடத்தும் நிர்வாகமே கவனித்துக் கொள்ளவும் மற்றவர்கள் சிரமமின்றி இருந்தனர்.

போட்டியை நேரலையில் ஒளிபரப்பவும் அதிதி ஆத்ரேயனின் குடும்பத்தினர் டிவி முன்பு அமர்ந்து ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, துருவேந்திரனும் தன் மனைவியைக் காண ஆர்வமாக அமர்ந்திருந்தான்.

அவனை வெகு நேரம் காக்க வைக்காது அதிதி வடிவமைத்த அழகிய ஆடையில் தேவதையாக வந்தவளைக் கண்டு இமைக்க மறந்து அவன் இருக்க அங்கே அதிதியோ பதற்றத்தில் அமர்ந்திருந்தாள்.

போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருமே தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடைகளை மிகவும் அழகாக வடிவமைத்திருந்தனர்.

ஒவ்வொரு மாடலிங்கும் அணிந்திருக்கும் ஆடையை பார்த்ததும் அதிதிக்குத் தன்னுடையது குறைவோ என்ற அச்சத்தை உண்டு பண்ண பதற்றத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

அருகிலிருந்த ஆத்ரேயனோ, “அப்படி என்ன உனக்கு டென்ஷன் இருக்குனு இரத்தம் வர அளவுக்கு நகத்தை கடிக்கிற?” என்று அதட்டவும் திருதிருவென விழித்தவள்,

‘இரத்தம் வர அளவுக்கா நகத்தை கடிச்சேன்? வலிக்கவே இல்லை…’ என குழம்பியப்படி பார்க்க,

அவனோ ஆத்திரத்தோடு, “என் விரலை கடிச்சா உனக்கு எப்படி வலிக்கும்?” என்றான் அவள் கையிலிருந்த தன் கையை உருவிக் கொண்டு.

அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது, பதற்றத்தில் அவன் விரலை கடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது.

அவன் விரலைப் பார்த்தவள் அதில் ரத்தம் கசியவும் தன் கைக்குட்டையை கொண்டு அதை துடைத்தவள், “சாரிடா எதோ டென்ஷன்ல…” என்று மன்னிப்புக் கேட்க,

அவளை முறைத்தவன், “எதுக்கு டென்ஷன் ஆகுற? வெற்றி தோல்வி எது வந்தாலும் ஏத்துக்கணும்னு சொல்லியிருக்கேன் தான…” என்றான் கோபமாக.

அவனின் கோபத்தைக் கண்டு அவள் அமைதியாக இருக்கவும் அவள் கரத்தைப் பற்றியவன், “டென்ஷன் ஆகாதடி, உன் முயற்சிக்கான பலன் நிச்சயம் உனக்கு கிடைக்கும்…” என்று நம்பிக்கை அளிக்க புன்னகைத்தவள் ஆர்வத்தோடு போட்டிக்கான முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆத்ரேயன் சொன்னது போலவே அதிதியின் முயற்சிக்கான பலன் அவளுக்கு கிடைத்தது. ஆம், அவள் வடிவமைத்த ஆடை தான் அவளுக்கு முதல் பரிசையும், சிறந்த டிசைனர் என்ற பட்டத்தையும் அவளுக்கு வாங்கிக் கொடுத்தது.

மகிழ்ச்சியில் ஆத்ரேயனைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டவள் யாழிசையையும் அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியைத் தெரிவிக்க அவளும் மகிழ்ந்தாள்.

சில மணித்துளிகள் கடந்து பரிசைப் பெற்றுக் கொண்டு மூவரும் வெளியே வர அங்கு அவர்களை வரவேற்க துருவேந்திரன் நிற்பதைக் கண்டு மூவரும் திகைத்தனர்.

யாழிசையோ இன்பமாக அதிர்ந்து இருக்குமிடத்தையும் மறந்து ஓடிச் சென்று அவனை கட்டிக்கொள்ள அவளைக் கண்டு மகிழ்ந்து ஒரு முறை அணைத்து இருக்குமிடத்தை உணர்ந்து விலக்கியவன் அதிதியை பாராட்டினான்.

“ஷூட்டிங் இருக்குனு சொன்னிங்க?” என்று யாழிசை பொய்யாக கோபம் கொள்ள,

“ஷூட்டிங் மும்பைல தான்…” என்று கண்சிமிட்டவும் வெட்கம் கொண்டு தலைகுனிந்தவள் அவன் தோளிலே இடித்தாள்.

மற்ற இருவரையும் பார்த்தவன், “ஹோட்டல் தாஜ்ல ரூம் புக் பண்ணியிருக்கேன். இங்க ரெண்டு நாள் தான் ஷூட்டிங், முடிஞ்சதும் ஒன்னாவே போகலாம்…” என்றதும் அதிதி தலையசைக்க ஆத்ரேயன் மறுத்தான்.

“இல்லண்ணா இங்க ஒரு ஃப்ரெண்டை பார்க்க வேண்டியது இருக்கு. பார்த்துட்டு அப்படியே கிளம்புறோம், நீங்க போங்க…” என்றதும்,

அவனுக்கு மும்பையில் எந்த நண்பனும் இல்லை என்பது தெரிந்த துருவேந்திரன் அவன் எதற்காக மறுக்கிறான் என்பது புரியவும் அவனை கட்டாயப்படுத்தாது யாழிசையை அழைத்துச் சென்றான்.

ஆத்ரேயனை முறைத்த அதிதியோ, “எனக்கு தெரியாம உனக்கு எந்த ஃப்ரெண்டுடா இங்க இருக்கான்?” என்று கோபம் கொள்ள அவளை கண்டு கொள்ளாமல் டாக்சியை அழைத்தவன் ஏர்போர்ட்டிற்கு போக வேண்டும் என்றதும் அதிதி மேலும் முறைத்தாள்.                 

“எதுக்குடா பொய் சொன்ன? மாமா கூட போய்ருந்தா ஷூட்டிங் பார்த்துட்டு வந்திருக்கலாமே…” கோபமாகச் சொல்ல,

அவளை முறைத்தவன், “உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்காடி? அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்கட்டுமேனு தான வேணாம்னு சொன்னேன்…” என்று சிடுசிடுக்க அவனின் நோக்கம் புரிந்து அமைதியாக இருந்தாள்.

“சாரி எனக்கு தோணல…”

“உனக்கு தான் எதுவுமே தோணாதே…” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீடு வரும் வரை அமைதியாக இருந்த அதிதி, அனைவரும் உறங்கியிருப்பதைக் கண்டு ஆத்ரேயன் பின்னே அறைக்குள் சென்றவள் கதவைச் சாற்றிய அடுத்த நொடி அவன் மீது பாய்ந்தாள்.

அவனை ஆவேசத்தோடு கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தவள், “என்னடா நினைச்சிட்டு இருக்க? நானும் போனா போகுதுனு பார்த்தா ரொம்ப தான் பண்ற.

எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு கத்திக்கிட்டே இருந்தா நான் பயந்திடுவேனா? என் பழைய அத்து எங்கடா போனான்? அவன் தான் எனக்கு வேணும். நீ வேணாம் போடா…” என்று கத்தியப்படி அவன் முடியைப் பிடித்து இழுத்து உலுக்கி அவனை சரமாரியாக அடிக்க அவன் அவளை தடுக்கக் கூட முயலாது அவளையே ரசனையோடு பார்த்திருந்தான்.

அவனிடமிருந்து எந்தவித எதிரொளியும் வராது போக அவனைப் பார்த்தவள் அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு புரியாது குழம்பியவள் அப்பொழுது தான் அவன் பார்வை மாறியிருப்பதை உணர்ந்தாள்.

அதை உணர்ந்த நொடி அவன் மீது அமர்ந்திருக்கவே சிரமமாக இருக்கவும் அவன் மீதிருந்து எழ முயன்றவளின் எண்ணத்தை ஊகித்தவன் அவளை இழுக்க அவன் மீதே சரிந்தவளை அணைத்துக் கொண்டவன்,

“பண்றதுலாம் நீ, இதுல உனக்கு என் மேல கோபம் வருதா? பழைய அத்து வரதும் வராததும் உன் கையில தான் இருக்கு…” என்று பொய் கோபம் கொள்ள,

முதலில் வார்த்தை வராது திணறியவள், “எல்லாரும் போன் பண்ணி என்னை பாராட்டுனாங்க, நீ பக்கத்துல இருந்தும் பாராட்டுலையே…” என்றாள் கோபமாக.

“நான் பாராட்டுனா தான் உனக்கு பிடிக்காதே…” என்றவனை புரியாது பார்த்தவள்,

“நான் எப்படா சொன்னேன் நீ பாராட்டுனா பிடிக்காதுனு?” என்றாள்.

“அப்படினா பிடிக்குமா?” ஆவலோடு அவன் கேட்க பிடிக்கும் என்பது போல தலையசைத்தவள் அடுத்த நொடி அவனின் முத்தத்தில் திகைத்தாள்.

அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன், “எனக்கு இப்படி தான் பாராட்ட தெரியும்…” என்று கூறி கண்சிமிட்ட அவனது செயலில் திகைத்தவள் தன்னை மறந்து அவனது அணைப்பில் கட்டுண்டாள்.

———-

ஒரு நன்னாளில் தர்ஷன் மான்சியின் திருமணத்தை மான்சியின் ஊரில் நடத்த திட்டமிட்டு திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே தர்ஷனின் மொத்த குடும்பமும் மான்சியின் கிராமத்திற்குச் சென்றனர்.

அதிதி ஆத்ரேயனோடு தனியாக பைக்கில் செல்ல திட்டமிட அதிக தூரமாயிற்றே என்று முதலில் மறுத்த குடும்பத்தினர் பின்பு அதிதியின் பிடிவாதத்தால் ஒத்து கொள்ளவும் மகிழ்ந்தாள்.

ப்ரகதி ஆத்ரேயனிடம் ஒருமுறைக்கு பலமுறை வலியுறுத்தி கவனமாக வரும் படி சொல்லவும் ஆத்ரேயனும் தான் பார்த்துக் கொள்வதாக நம்பிக்கை அளித்து அதிதியோடு சென்றான்.

முன்பெல்லாம், தோன்றும் பொழுது ஆத்ரேயனோடு பைக்கில் பல மணி நேரம் பயணம் செய்பவள் சில காலமாக அது முடியாத காரணத்தால் இப்பொழுது அவனோடு இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ய, ஆத்ரேயனும் அவளது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து அவளை அழைத்துச் சென்றான்.

அவனை கட்டிக் கொண்டபடி அவள் பின்னால் அமர்ந்திருக்க அவனோ, “நான் பைக் ஓட்டணுமா வேணாமா?” என்றான் கடுப்பாக, உள்ளுக்குள் அவள் செயலை ரசிப்பதை வேண்டுமென்றே அவளிடம் மறைத்தான்.

“உன்னை ஓட்ட வேணாம்னு யாரு சொன்னது?” அவளும் அதே கடுப்போடு பதில் கேள்வி கேட்க,

“தள்ளி உட்காருடி…” என்று அதட்டினான்.

சொல்வதையே அப்படியே கேட்டுவிட்டால் தான் அவள் அதிதி இல்லையே. அவனை மேலும் இறுக்கிக் கொள்ள ரகசியமாக புன்னகைத்தவன் மனதில் மனைவியை ரசித்தப்படியே பைக்கை ஓட்டினான்.

கொளுத்தும் வெயிலைக் கூட உணராது உல்லாசமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர் அந்த காதல் பறவைகள்.

வழியில் ஓரிரு இடத்தில் இறங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டு மான்சியின் ஊரை அடைந்தவர்கள் ஊர் எல்லையில் இறங்கியப்படி மான்சிக்கு போன் செய்து முகவரியைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு செல்ல அந்த கரடு முரடான சாலையின் உபாயத்தால் பைக் டயர் பஞ்சராகவும் ஊருக்குள் எப்படி செல்வது என தவித்தனர்.

பைக்கை ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு அவளோடு நடக்க ஆரம்பிக்க முதல் முறையாக கிராமத்தை பார்ப்பவர்கள் இருவருமே அதன் பசுமையை ரசித்தப்படி நடந்து கொண்டிருந்தனர்.

ஒரு வயலில் ஒரு முதியவர் கோவணத்தைக் கட்டிக் கொண்டு ஏர் உழுது கொண்டிருக்க அதை கண்டு சிரித்த அதிதி ஆத்ரேயனிடம் அவரைக் காட்டி சிரிக்க அவளை முறைத்தவன் அவளை அதட்டினான்.

“உனக்கு எல்லாமே கிண்டல் தானாடி? இந்த வயசுலயும் உழைக்கிறாரேனு அவரை பாராட்டாம கேலி பண்ணி சிரிச்சிட்டு இருக்க…” என்றவனை முறைத்தவள்,

“ஹலோ இங்க அவ்ளோ சீன்லாம் இல்ல. அவரை மாதிரி நீயும் இருந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்து தான் சிரிச்சேன்…” என்றதும்,

அவள் தலையில் கொட்டியவன், “திருந்தவே மாட்டியாடி? அமைதியா வா…” என்று அதட்டியப்படி நடக்கவும்,

சிறிது தூரம் நடந்தவள் “கால் வலிக்குதுடா…” என்று சிணுங்கினாள்.

“கொஞ்ச தூரம் தான், போய்டலாம் வா…” என்றவன்,

அவள் நடக்க முடியாது சோர்ந்து நிற்பதைக் கண்டு சட்டென்று அவளை கைகளில் ஏந்திக் கொண்டு நடக்க, வாகாக அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டவள் கிராமத்து பசுமையோடு சேர்த்து அவனையும் ரசித்துக் கொண்டு வந்தாள்.

திடீரென்று அவன் கன்னத்தில் இதழ் பதிக்க அவன் திகைத்து ஏனென்று பார்க்கவும் ‘கொடுக்கணும்னு தோணுச்சு’ என்றவள் மீண்டுமொரு இதழ் ஒற்றலை வைக்கவும் தனக்குள்ளே புன்னகைத்தவன் அவளிடம் உணர்ச்சியற்ற முகத்தைக் காட்டிவிட்டு நடக்க அவளுக்கு உள்ளுக்குள்ளே புகைந்தது.

அதில் கோபம் கொண்டு அவனிடம் இருந்து இறங்கியவள் வேகமாக முன்னோக்கி நடக்க அவளது கோபத்தை ரசித்துக் கொண்டே அவளை பின்தொடர்ந்து சென்றான் அவன்.

மஞ்சுளாவின் குடும்பத்தினர் அவரைக் கண்டதும் கோபம் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள அவர்களை எதிர்க்கொண்ட தர்ஷன்,

“நாளை மறுநாள் உங்க பேத்திக்கும் எனக்கும் கல்யாணம் மறக்காம வந்திடுங்க…” என்று பத்திரிக்கையை நீட்டியவன் அவர்கள் திகைத்து நிற்பதைக் கண்டு கொள்ளாது அவர்களது கையில் திணித்து விட்டு மஞ்சுளாவை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

அங்கு அவர்கள் தங்குவதற்காக ஏற்கனவே வீட்டை ஏற்பாடு செய்திருந்ததால் அங்கே சென்று தங்கியவர்கள் அன்று மாலையே அனைவரின் வீட்டிற்கு மஞ்சுளாவோடு சென்று பத்திரிக்கையை கொடுத்து விட்டு வந்தான்.

அடிக்கடி செய்திகளில் அவனைப் பற்றி தெரிந்து கொண்டிருந்ததால் அவனையும் மஞ்சுளாவையும் ஆச்சரியமாக பார்த்தவர்கள் பதில் பேசாது பத்திரிக்கையை வாங்கிக் கொள்ளவும் மஞ்சுளாவிற்கு தன் மருமகனை எண்ணி கர்வம் பிறந்தது.

எந்த ஊரின் முன்னால் தன்னைப் புரிய வைக்க முடியாது தலைகுனிந்து வெளியேறினாரோ இன்று அவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நின்றார். அதற்கு காரணமான தர்ஷனை எண்ணும் போது அவர் கர்வம் கொள்வதில் ஆச்சரியம் இல்லையே.

கோபமாக வீட்டிற்குள் நுழைந்த அதிதியைக் கண்டு குடும்பத்தினர் குழம்பியிருக்க அவள் பின்னே வந்த ஆத்ரேயனோ மற்றவர்கள் இருப்பதைக் கூட உணராது தன்னவளை பார்வையாலே வருடிக் கொண்டிருந்தான்.

இருவரையும் கண்டு ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மற்றவர்கள் தங்கள் வேலையை கவனிக்கச் சென்றுவிட, தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்ற அதிதியை பின்தொடர்ந்து ஆத்ரேயனும் சென்றான்.

அவள் கோபமாக இருப்பதைக் கண்டும் காணாதது போல தன் உடைமையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றவனை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தாள் அவள்.

அவளே அவனை நெருங்கி வந்தாலும் வேண்டுமென்றே அவளை அவன் ஒதுக்குவதைக் கண்டு தான் அவளுக்கு கோபமே.

அன்று ஆத்ரேயன் அவளை காதலோடு அணைத்து முத்தமிட்டதும் அவளையும் அறியாமல் அவனது அணைப்பில் கட்டுண்டவள் அவனது அணைப்பையும் அருகாமையையும் மிகவும் விரும்ப ஆரம்பித்தாள்.

ஆனால், ஆத்ரேயனோ அவள் காதலை உணராதவரை அது போன்ற ஒரு தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று அவளிடமிருந்து ஒதுங்கியே இருந்தான்.

அதிதி வேண்டுமென்றே அவனை சீண்டினாலும் அதை அவன் உள்ளுக்குள்ளே ரசிக்க பழகிக் கொண்டாலும் வெளியே விறைப்பாகவே திரிந்து கொண்டிருக்கிறான்.

அதிதியும் பலவிதத்தில் முயன்று பார்த்து விட்டாள். ஆனால், பலன் தான் இல்லை.

‘இன்னும் எத்தனை நாளைக்குனு நானும் பார்க்கிறேன்டா…’ என்று கறுவியவள் தன் வேலையை கவனித்தாள்.

திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் மறுநாளே தொடங்கவும் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் பரவியது. ஒவ்வொரு சடங்கிற்கும் மஞ்சுளாவின் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தி வரவழைத்திருந்தான் தர்ஷன்.

மகளின் மீதிருக்கும் பாசமோ பேத்தியைக் கண்ட மகிழ்ச்சியோ தெரியவில்லை அவர்களை மறுப்பு சொல்லாமல் வரவழைத்தது.

முதலில் முறுக்கிக் கொண்டு இருந்த மஞ்சுளாவின் அண்ணனும் பின்பு சந்தோஷமாக அனைத்து சடங்கிலும் கலந்துக் கொண்டார்.

காந்திமதி மனதில் எதையும் வைத்துக் கொள்ளாது மான்சியையும் தன் மகளாக எண்ணி ஒவ்வொரு சடங்கையும் முன்னின்று செய்ய, மாறனோ மான்சியை தங்கையாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வராவிட்டாலும் ஒரு தமையன் ஸ்தானத்தில் இருப்பவன் செய்யக் கூடிய அனைத்தையும் தானாக முன்வந்து செய்தான்.

மான்சியும் அவனிடம் தங்கை பாசத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவனை ஒரு தோழனாக நினைத்து அவன் செய்வதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டாள்.

காந்திமதியும் மஞ்சுளாவும் தங்கள் பிள்ளைகள் விரைவிலே அவர்கள் நட்பு வட்டத்தில் இருந்து அண்ணன் தங்கை உறவுக்கு உயிர் கொடுப்பர் என்று நம்பி கவலை இல்லாது திருமண வேலையில் ஈடுபட்டனர்.

திருமணத்தன்று ஊர் மக்கள் அனைவரும் வந்திருக்க மஞ்சுளாவின் மனம் நிறைந்திருந்தது.

அன்று காலையில் தன் அறையில் இருந்த அதிதி கண்ணாடி முன் நின்று கொண்டு தன்னைப் பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டாள்.

தான் எளிமையாக அலங்கரித்துக் கொண்டாலே அவளின் அத்து வியந்து பார்ப்பதை உணர்ந்திருந்தவள் இன்று அவனுக்காக ஒரு முறைக்கு பல முறையாய் தன்னை சரிபார்த்து அலங்கரித்துக் கொள்வது அவளுக்கே வியப்பாக இருந்தாலும் தன்னை கண்டு அவன் வியக்க வேண்டும், தன்னை பாராட்ட வேண்டும் என்று தன்னை அலங்கரிப்பதில் மிகுந்த கவனம் கொண்டாள்.

தூங்குவது போல பாவனை செய்தபடி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஆத்ரேயனோ அவளை ரசித்துக் கொண்டே எழுந்தவன் அவள் தன்னைப் பார்க்கும் நேரம் அவளை கவனியாதது போல நேரே குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள அதிதிக்கு ஏமாற்றமாகிப் போனது.

தூக்கக் கலக்கத்தில் தன்னை கவனிக்கவில்லையோ என்று எண்ணியவள் அவன் வரும் வரை காத்திருக்கவும் அவனோ இப்பொழுதைக்கு வர போவதில்லை என்பது போல குளியலறைக்குள்ளே இருக்கவும் கடுப்பானவள் குளியலறைக் கதவைத் தட்டப் போகும் நேரம் அவளின் அறைக் கதவு தட்டப்பட்டது.

கதவைத் திறக்க அங்கே நின்ற ப்ரகதி நேரமாகிறது என்று அவளை அழைத்துச் சென்றுவிட அவள் சென்ற நொடி வெளியே வந்தவன் சிரித்துக் கொண்டே தயாராகி வெளியே வந்தான்.

தன்னைக் கண்டு அவன் வியக்க வேண்டும் என கவனமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டவளோ இப்பொழுது அவனைக் கண்டு மெய் மறந்து நின்றாள்.

பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளைத் தோரணையில் கம்பீரமாய் நடந்து வந்தவனைக் கண்டு அவளால் பார்வையை விலக்க முடியவில்லை. 

இதற்கு முன்பும் அவனை வேஷ்டி சட்டையில் பார்த்திருக்கிறாள் தான். ஆனால், ஏனோ இன்று அவன் புதிதாகத் தெரிந்தான்.

புன்னகைத்துக் கொண்டே வந்தவனின் கன்னக்குழியைக் கண்டவள் அதில் முத்தமிட தோன்றவும் அவன் தன்னருகில் வருவதற்காக காத்திருந்தாள்.

ஆனால், அவன் அவளை நெருங்க நெருங்க ஏன் என்று தெரியாமலே அவளது இதயத்துடிப்பு வேகமாகத் துடிக்கவும் திகைத்து நின்றவளை நெருங்கி வருவது போல வந்தவன் பின்பு விலகிச் சென்றுவிட அவன் சென்றதைக் கூட உணராது அவனையே பார்த்தப்படி நின்றிருந்தாள் அவள்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை, “ஏன்மா என்ன பொண்ணுமா நீ? ஒரு ஆம்பிள பிள்ளைய இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்கிற…” என்ற குரலில் திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்று கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியைக் கண்டு அசடு வழிந்தாள்.

“பட்டணத்துல வளர்ந்தவங்களுக்குலாம் இங்கீதம் தெரியாதா? இப்படியா ஒரு பையனை பார்த்து வைப்ப? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கனு கூடவா தோணாது?” என்று அவர் நொடித்துக் கொள்ள,

அவரின் கன்னம் பிடித்து கொஞ்சியவள், “நான் அவனை பார்க்கிறேன்னு உனக்குலாம் தெரியுது. ஆனா, தெரிய வேண்டியவனுக்குத் தெரியலையே ஓல்டு லேடி…” என்று அலுத்துக் கொள்ளவும் அவர் திகைத்தார்.

“என்ன பொண்ணோ! கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம வெளிப்படையா பேசுற…” என்றதும்,

“இதுல வெட்கப்பட என்ன இருக்கு?” என்றவள்,

“அவனை கூப்பிட்டு ஏன்டா மடையா, உன் பொண்டாட்டி உன்னை வெட்கமே இல்லாம சைட் அடிச்சிட்டு இருக்காளே கொஞ்சமாது அவளை கண்டுக்குடானு சொல்லுங்க பாட்டி…” என்றதும் திகைத்தவர்,

“அவன் உன் புருஷனா?” என்றார் வியப்பு குறையாது.

ஆமாம் என அவள் தலையசைக்க, “அப்புறம் எதுக்கு இப்படி தூரத்துல இருந்து பார்த்துட்டு இருக்க? பார்க்கிறவங்க உன்னை தப்பா தான நினைப்பாங்க, வீட்டுக்குப் போய் பார்த்துக்க வேண்டியது தான…” என்றார் அக்கறை கலந்த கோபத்தோடு.

“நான் அவன் பக்கத்துல போனா தான் அவன் கண்டுக்கவே மாட்டன்றானே, ஒரேடியா முறுக்கிக்கிட்டு திரியுறான்…” என அவள் அலுத்துக் கொள்ளவும்,

“இப்படி தான் புருசனை மரியாதை இல்லாம பேசுவியா?” என்றார் கோபமாக.

‘அப்படி தான் பேசுவேன்’ என அவளும் சொல்ல அவள் காதைச் செல்லமாகத் திருகியவர்,

“முதல்ல புருசனுக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோ…” என அறிவுறுத்தி விட்டு,

“புருசன்னா அப்படிதான் முறுக்கிக்கிட்டு திரிவாங்க. ஆனா, உள்ளுக்குள்ள பாசம் இருக்கும். பொண்ணுங்க நாம தான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்து நம்ம முந்தானையில முடிஞ்சு வச்சுக்கணும். அப்புறம் பாரு நீ நில்லுனா நிப்பான், ஓடுனா ஓடுவான்…” என்றதும்,

“முந்தானையில எப்படி முடிஞ்சு வைக்கிறது? புடவை கிழிஞ்சிடாது?” என அதிமுக்கிய சந்தேகத்தை அவள் கேட்கவும் அவளை முறைத்தார் அவர்.

“சுத்தம்… உன்னை வச்சிக்கிட்டு, பாவம் அந்த பையன் என்னலாம் கஷ்டப்படுறானோ?” என ஆத்ரேயனை எண்ணி பரிதாபம் கொண்டார்.

“பார்த்தியா ஓல்டு லேடி! இவ்வளவு நேரம் எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி பேசிட்டு இருந்த, இப்போ அவன் பக்கம் தாவுறியே…” என்றவளின் தலையில் செல்லமாகக் கொட்டியவர் அவளுக்கு இல்லற வாழ்க்கையின் சூட்சமங்களை சொல்லிக் கொடுக்க அவளுக்கு புரிந்ததோ தெரியவில்லை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளின் மனமோ அந்த பெண்மணியின் வெள்ளந்தியான மனதைக் கண்டு வியந்து கொண்டிருந்தது.

ஊர் மக்கள் அனைவரின் ஆசீர்வாதத்தோடு தர்ஷன் மான்சியின் திருமணம் நல்முறையில் நடந்து முடிந்தது. அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக ஒன்றாக கூடினர்.

அவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஒரு சிலர் முன் வரிசையில் அமர்ந்து கொள்ள அதிதியின் அருகில் அமர்ந்த ஆத்ரேயன் அவள் காதில்,

“என்னடி, பாட்டி ஐடியாலாம் பலமா கொடுத்திட்டு இருந்தாங்க…” என்றவன்,

“ஆனா அதுதான் உனக்கு யூஸ் ஆகாதே, அப்புறம் எதுக்கு தேவையில்லாம நேரத்தை வீணாக்கிட்டு இருக்க…” நக்கலாகச் சொல்லவும்,

அவனை முறைத்தவள், “ஒட்டு கேட்டியாடா?” என்று அதட்ட ஆமாம் என்பது போல தலையசைத்து கண்சிமிட்டினான் அவன்.

அவனை அவள் அடிக்கவும் அவன் அதை தடுத்துக் கொண்டே போட்டோவிற்கு போஸ் கொடுக்க அவர்களின் ஊடலைக் கண்டும் காணாதது போல இருந்த அவர்களின் குடும்பத்தினர் அங்கே இன்னொரு ஜோடிக்கு நடுவில் நடந்து கொண்டிருந்த பனிப்போரை கவனிக்கத் தவறினர்.

————

திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து எடுத்துக் கொண்ட விடுப்பும் முடிந்து விட மான்சி வேலைக்குச் சென்றாள்.

அங்கே அவளின் நண்பர்கள் அவளுக்கு திருமண பரிசாக ஒரு அழகிய பீச் ரெசார்ட்டில் தேனிலவைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்து அதற்கான டிக்கெட்டை அவளிடம் வழங்க நண்பர்களிடம் மறுக்க முடியாதவள் அதை வாங்கிக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்த மான்சி கணவனிடம் விவரம் தெரிவிக்க அவனோ இரண்டாவது ஹனிமூனுக்குச் செல்லப் போகிறோம் என்ற எண்ணத்தில் குஷியோடு வேகமாகத் தலையாட்டவும் அவனை செல்லமாக முறைத்தவள்,

“இதை நான் அத்துவுக்கும் சிக்குவுக்கும் கொடுக்கப் போறேன்…” என அவனை அதிர வைத்தாள்.

“ஏன்?” அதிர்வோடு அவன் வார்த்தைகள் வெளிவர,

“என்ன ஏன்? நமக்கு லீவ் முடிஞ்சிடுச்சுல்ல, இதுக்குலாம் நேரமில்லை. அவங்க போகட்டும், உங்களுக்கும் உங்க கடமை தான முக்கியம்…” என்றதும்,

“எனக்கு கடமையை விட பொண்டாட்டி தான் முக்கியம்…” என்றான் குழைவாக.

“என்ன ஏசிபி சார் அதுக்குள்ள கடமை மறந்துடுச்சா? பொண்டாட்டி கூட அப்புறம் ரொமான்ஸ் பண்ணிக்கலாம் எங்கயும் போய்ட மாட்டேன். போய் உங்க காக்கிச் சட்டைக்கான கடமையை கவனிங்க…” என்றதும்,

“இதுலாம் அநியாயம்டி! ஏன் போலீஸ்காரன்லாம் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண கூடாதுனு எதாவது சட்டம் இருக்கா?” என்றான் பரிதாபமாய்.

“சொன்னா கேளுங்க தர்ஷன், நாம தான் ஏற்கனவே போய்ட்டு வந்துட்டமே அவங்க ரெண்டு பேரும் எங்கயும் போகாம இருக்காங்க. அதனால அவங்க போகட்டும். நாம கொஞ்ச நாள் கழிச்சு லாங் லீவ் எடுத்துக்கிட்டு போய்ட்டு வரலாம்…”

“அதுங்களை அனுப்புறது வேஸ்ட்டுடி. அதுக்கு பதிலா துருவன்கிட்ட கொடுத்தா கூட அவன் பொண்டாட்டி கூட சந்தோஷமா போய்ட்டு வருவான். அதை விட்டுட்டு இதுங்களை அனுப்பி டிக்கெட்டை வீணாக்காதடி…” அதிதி ஆத்ரேயன் பற்றி தெரிந்தவனாய் அவன் சொல்ல மான்சி அவனை முறைத்தாள்.

“ஒண்ணும் வேஸ்டாகாது. அவங்களுக்கும் கொஞ்சம் ப்ரைவசி கொடுக்கலாம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க வாய்ப்பு கிடைக்கும்…” என்றவள்,

தர்ஷன் முறைப்பதையும் பொருட்படுத்தாது அதிதியை போனில் அழைத்து அவளிடம் ஹனிமூன் பேக்கேஜ் என்று சொல்லாது வெக்கேஷன் என்று மட்டும் சொல்லவும் அதிதியும் ஆத்ரேயனோடு செல்ல விரும்பியதால் சம்மதம் தெரிவித்தாள்.

“அநியாயமா ரெண்டு டிக்கெட்டை வீணாக்கிட்டியேடி…” என்று புலம்ப மட்டுமே முடிந்தது தர்ஷனால்.

அதிதிக்கு ஆத்ரேயனோடு தனியாக செல்ல கசக்குமா என்ன? மான்சி சொன்னதும் சம்மதம் தெரிவித்தவள் ஆத்ரேயனிடம் சொல்ல அவன் மறுத்தான்.

“எனக்கு வேலை இருக்கு என்னால வர முடியாது…” என்றவனை முறைத்தவள்,

“எந்த வேலையா இருந்தாலும் ஓரம்கட்டி வச்சிட்டு என்கூட வர…” என்று கட்டளையிட்டு சென்றவளை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

ஆத்ரேயனோடு செல்லத் தயாராகிய அதிதி அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் ஒரு முறைக்கு பலமுறை தன்னை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கவும் அவளை கவனித்தவன் அவளருகில் நெருங்கி வர,

அவன் வருவதை உணர்ந்து ஆவலோடு அவனையே பார்த்தப்படி நிற்கவும் அவளை ரசித்தப்படியே மெல்ல அடி எடுத்து அவளை நெருங்கி வந்து அவளது எதிர்பார்ப்பை அதிகரித்தவனோ,

அவளறியாது கள்ளத்தனமாக சிரித்து விட்டு கண்ணாடி முன் இருந்த சீப்பை எடுத்து தலைவாரிக் கொண்டு நகர்ந்து விட அவளுக்கு ஏமாற்றமாகியது.

அதில் முகம் வாடியவள் பின் சகஜமாகி வெளியே வந்து தனக்காக பைக்கில் காத்திருந்தவன் அருகில் சென்று நிற்க அவன் அவளை கண்டு கொள்ளாது இருக்கவும் அவன் முதுகில் இரண்டு அடி வைத்தவள் அவன் முறைப்பதைக் கண்டு கொள்ளாது பைக்கில் அமரவும் அவனும் சிரித்துக் கொண்டே பைக்கை செலுத்தினான்.

அவனாக எதாவது பேசுவான் என்று எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாகவே வரவும் கடுப்பானவள் அவன் இடையோடு தன் வலக்கரத்தை சேர்த்து அணைத்தப்படி நெருங்கி அமர்ந்தவள்,

“உனக்கு என்ன தான்டா ஆச்சு? ஏன் என்கிட்ட பேச மாட்டன்ற?” என்றதும் அவனின் அமைதி மட்டுமே பதிலாக கிடைக்க,

அவன் முதுகில் பலமாக அடித்தவள், “இப்ப சொல்ல போறியா இல்லையா? நானா வந்து பேசுனாலும் பேச மாட்டன்ற, என்னன்னு சொன்னா தான்டா தெரியும்…” என்றவளிடம்,

“பேசிட்டு தான இருக்கேன்…” என்றான் அவன்.

“என்னால முடியலடா…” என அவன் தோளில் சாய்ந்தவள்,

“நீ எப்பவும் போல என்கிட்ட பேசுடா. நீ பேசாம இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு. நீ என்னை சைட் அடிச்சா கூட நான் எதுவும் சொல்ல மாட்டேன். ப்ளீஸ்டா அத்து…” என்றவளின் குரலில் இருந்த வலியை உணர்ந்தவன்,

“நான் எப்பவும் போல தான்டி இருக்கேன், நீ எதையும் யோசிச்சிட்டு இருக்காத…” என்றான்.

“பொய் சொல்லாதடா, நான் அன்னைக்கு அப்படி சொன்னதுல இருந்து நீ என்னை விட்டு ரொம்ப தூரம் விலகி போய்ட்ட. நானே அதை மறந்துட்டு சாதாரணமா இருந்தாலும் நீ ஏன்டா இன்னும் அதையே நினைச்சிக்கிட்டு இருக்க…” என்றதும்,

அவன் அமைதியாக இருக்க, “உனக்கு ஒன்னு தெரியுமா அத்து, இப்பலாம் நான் உன்னை திருட்டுத்தனமா சைட் அடிக்கிறேன்டா…” என்றதும் அதை ஏற்கனவே அறிந்திருந்தவன் அவள் தன்னைப் பார்ப்பதை நினைத்து தனக்குள்ளே சிரித்தாலும் அவளாக உணர வேண்டுமென அமைதி காத்தான்.

அவன் சிரித்துக் கொண்டிருப்பதைக் கூட உணராதவள், “ஏன் அத்து, நீயும் என்னை இப்படி தான திருட்டுத்தனமா சைட் அடிச்சதா சொன்ன. அப்படினா நானும் உன்னை காதலிக்கிறனாடா?” என்று அப்பாவியாய் கேட்டவள்,

அவன் திகைப்பதைக் கூட உணராது, “எனக்கும் உன் மேல காதல் வந்திடுச்சா அத்து? எனக்கு தெரியவே இல்லை நீயே சொல்லுடா…” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்க,

அவனோ அவள் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று பைக்கில் இருந்து அவளை தள்ளிவிடவும் சற்று தூரம் சென்று விழுந்தவள் கையிலும் காலிலும் ஏற்பட்டிருக்கும் வலியைக் கூட பொருட்படுத்தாது ஆத்ரேயனைப் பார்க்க அவன் தூர சென்று விழுந்திருக்கவும் அதிர்ந்தாள்.

என்ன நடந்ததென்று யோசிப்பதற்கு முன்பே அனைத்தும் நடந்திருந்தது. அதிதி பேசுவதையேக் கேட்டுக் கொண்டு வந்த ஆத்ரேயன் சாலையின் நடுவில் மெல்லிய கம்பி கட்டியிருப்பதை அறியாது அதில் மோதி விடவும் தான் சுதாரித்தவன்,

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என தோன்றிய நொடியே அதிதியை கீழே தள்ளிவிட்டவனை, அடுத்த நொடி எங்கிருந்தோ வந்த மரக்கிளை ஒன்று அவன் மார்பில் பலமாக மோதி அவனைத் தூக்கித் தூர எறிந்திருந்தது.

கீழே விழுந்தவள் தன்னை நிலைப்படுத்தி எழுந்து பார்ப்பதற்குள் ஆத்ரேயன் தூர சென்று விழுந்திருப்பதைக் கண்டு பதறி எழுந்து அவனருகே சென்றவள் அவன் மூர்ச்சையாகி கிடந்ததைக் கண்டு அதிர்ந்தாள்.

கீழே விழுந்ததில் அவன் தலையிலும் அடிப்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருக்க அவன் நிலையைக் கண்டு செயலிழந்தவள் அவன் நிலையை கிரகித்துக் கொள்ளவே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை அவன் நிலை கண் முன் தோன்ற பதறி அவனை நெருங்கியவள் அவன் கன்னத்தைத் தட்டி அவனை கண்விழிக்க செய்ய முயல அதன் பலன் பூஜ்ஜியமாகவே இருந்தது.

அதிர்ச்சியில் அழக் கூட தோன்றாத நிலையில் இருந்தவள் அவனின் இதயத் துடிப்பைக் கேட்க முயல அது தன் வேலையை நிறுத்தியிருப்பதை உணர்ந்து அதிர்ந்து அத்தூஊஊஊஊஊ என்று அலறியவள் அவன் மீதே சரிந்தாள்.

*********

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Selva Rani

Story MakerContent AuthorYears Of Membership

43 – நான் என்பதே நீதான(டா)டி..!

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 6 & 7