in ,

43 – நான் என்பதே நீதான(டா)டி..!

NEN 43

அமைச்சர் புண்ணியக்கோடியின் வீட்டு வாசலில் அவரின் தொண்டர்கள் பரபரப்போடு காத்துக் கொண்டு நிற்க அமைச்சரின் பிஏவோ அமைச்சரிடம் எப்படி சொல்வது என தெரியாமல் அவரின் அறை வாசலில் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்.

நேற்றிரவு அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட மதுபோதையின் பலனால் தாமதமாக எழுந்த அமைச்சர், வெளியே பதற்றத்தோடு காத்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அறியாது குளித்து முடித்து அயர்ன் செய்து வைத்த வேட்டி சட்டையை அணிந்துக் கொண்டு வெளியே வந்தவர் அறை வாசலிலே நின்று கொண்டிருந்த பிஏவைக் கண்டு கேள்வியாக புருவம் உயர்த்தவும்,

அவரோ எப்படி சொல்வது என்று தயங்கி நிற்க அந்த நேரம் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப்பின் சைரன் சத்தம் கேட்கவும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவர் ஜீப்பில் இருந்து தர்ஷன் இறங்குவதைக் கண்டு யோசனையோடு கீழிறங்கி வந்தார்.

உள்ளே வந்த தர்ஷன் தன்னோடு வந்திருந்த கான்ஸ்டபிளிடம், “சீக்கிரம் அரெஸ்ட் பண்ணுங்க…” என்று கட்டளையிட,

தர்ஷனின் ஆணையை மீற முடியாத கான்ஸ்டபிள் தயங்கிக் கொண்டே அமைச்சரை நெருங்கவும், தர்ஷன் வந்திருப்பதற்கான காரணம் அமைச்சருக்குப் புரிந்த நொடி அவனை முறைத்தவர்,

“என்ன ஏசிபி, யார் வீட்டுல வந்து யாரை அரெஸ்ட் பண்ண நினைக்கிற?” என்றார் கோபமாக.

“என்னய்யா கேனத்தனமா கேள்வி கேட்கிற? உன் வீட்டுக்கு வந்து உன்னை அரெஸ்ட் பண்ணாம வேற யாரை பண்ணுவாங்க?” என்றவனின் வார்த்தையில் இருந்த கேலியில் அவரின் கோபம் மேலும் அதிகரித்தது.

“என்னை எதுக்காக கைது பண்ணனும்? முதல்ல என்னை கைது பண்ற அதிகாரத்த உனக்கு யாரு கொடுத்ததுனு சொல்லு?” என்றவர்,

தன் பிஏவிடம், “கமிஷ்னருக்கு போனை போடுடா?” என்று கத்தவும்,

பிஏ அப்பொழுதும் தயங்கி நிற்க தர்ஷன், “கமிஷ்னர் உனக்காக தான் ஒரு இடத்தை ரிசர்வ் பண்ணி வச்சிக்கிட்டு ஜெயில்ல காத்துக்கிட்டு இருக்காரு. சீக்கிரம் வா போகலாம்…” அலட்சியமாக சொன்னவனின் பதிலில் அமைச்சர் அதிர்ந்து பார்த்தார்.

“நீ ஷாக்காகுறத பார்த்தா உனக்கு விஷயமே தெரியாதா?” என்று பொய்யாக வியந்தவன்,

அவரின் பிஏவிடம், “என்ன மிஸ்டர் உங்க தலைவர்கிட்ட எதுவுமே சொல்லலையா?” என்றான் கேலி குரலில்.

பிஏ தயக்கத்தோடு அமைச்சரைப் பார்க்க தர்ஷன் அமைச்சரிடம், “இத்தனை வருஷம் அமைச்சரா இருந்திருக்க, நாட்டுல என்ன நடக்குதுனு தவறாம தெரிஞ்சிக்கிறதில்லையா? உனக்குலாம் யாருய்யா அமைச்சர் பதவி கொடுத்தது?” நக்கலாக கேட்டவன்,

கான்ஸ்டபிளிடம், “டிவிய ஆன் பண்ணு, நியூஸ் பார்த்து தெரிஞ்சிக்கிட்டும்…” என்றதும் அவரும் டிவியை ஆன் செய்தார்.

நியூஸ் சேனல் முதற்கொண்டு அனைத்து சேனல்களிலும் அமைச்சரின் பதவி நள்ளிரவோடு பறிக்கப்பட்டதையும், அவரின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதையும், எம்.எல்.ஏ மற்றும் கமிஷ்னரை கைது செய்ததையும் இடைவிடாமல் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் செய்த ஊழல்கள் மற்றும் குற்றங்கள் அனைத்தையும் புள்ளிவிவரங்களோடு மாறன் தங்கள் சேனலில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டு அமைச்சர் உறைந்து அமர அவர் முன் வந்து அமர்ந்த தர்ஷன், “யாருக்கும் தெரியாதுனு பினாமி பேர்ல நீ பண்ணிட்டு இருந்த எல்லா தில்லாலங்கடியும் வெளிய வந்துடுச்சு புண்ணியக்கோடி. நீ காலம் முழுக்க ஜெயில்ல இருக்க வேண்டியது தான்…” என்று கேலி செய்யவும்,

கோபத்தில் கொதித்தெழுந்தவர் தன் ஆட்களை அழைத்து தர்ஷனை அழிக்க சொல்ல அவர்களும் ஆவேசத்தோடு அவனை நெருங்கினர்.

அவர்களை ஏளனமாகப் பார்த்தவன், “ஆக்ஷன் சீன் பண்ணலாம் எனக்கு நேரம் இல்லை செல்லங்களா! இடத்தை காலி பண்ணுங்க, அந்த ஆளை அரெஸ்ட் பண்ணனும்…” என்று அலட்சியமாக எழுந்தவனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும்,

தங்கள் தலைவன் சொன்ன வேலையை முடிக்காது திரும்பக் கூடாது என்று அவனை நெருங்கியவர்கள் அடுத்த நொடி அவன் கையில் எடுத்த துப்பாக்கியைக் கண்டு நடுங்கி நின்றனர்.

“எதுக்குடா பயப்படுறிங்க? கேவலம் உங்களை கொன்னு என் துப்பாக்கியோட மதிப்பை குறைப்பனா?” என்றவன்,

“நீங்க என்னை கொல்ல வர்றீங்களே, என்னை கொன்னா உங்களுக்கு கொடுக்க கூட அந்த ஆள்கிட்ட ஒரு பைசா இல்லை. எல்லாத்தையும் ஜப்தி பண்ணியாச்சு. இப்ப சொல்லுங்க என்னை கொல்லணுமா?” என்று அவர்களிடமே கேட்க அவர்களோ அமைச்சரின் நிலையை உணர்ந்து தர்ஷனை பகைத்துக் கொள்ள விரும்பாது பின்வாங்கினர்.

அதைக் கண்டு அமைச்சர் மேலும் கோபம் கொண்டு தர்ஷனை அடிக்க நெருங்க அதை தடுத்தவன் அவர் கையில் விலங்கை மாட்டி வேகமாக இழுத்துச் சென்றான்.

வெளியே காத்திருந்த தொண்டர்கள் அமைச்சரை கைது செய்வதைக் கண்டு காவல் துறையை எதிர்த்து கோஷமிட, அவர்களை தர்ஷன் பார்த்த பார்வையில் சத்தம் இல்லாது ஒடுங்கி நிற்கவும் அவர்களை அலட்சியமாக கடந்து வெளியே வந்தவன் அமைச்சரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

ரத்தினவேலின் உதவியோடு அமைச்சரின் சொத்துக்களை முடக்கி எம்.எல்.ஏவையும் கைது செய்தவன் கமிஷ்னர் செய்த குற்றங்களையும் ஆதாரத்தோடு ஒப்படைத்து அவரையும் பதவி நீக்கம் செய்து கைது செய்திருந்தான்.

அமைச்சரை கைது செய்வதற்கான அனுமதியை முதலமைச்சரிடம் இருந்து பெற சிறிது தாமதமாகியதால் அவரை இப்பொழுது கைது செய்ய வந்திருந்தான்.

————

அமைச்சரையும் எம்.எல்.ஏவையும் கைது செய்த பிறகு தான் அனைவரும் நிம்மதியாக இருந்தனர்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்க யோகேந்திரன் தர்ஷனிடம், “இன்னும் ஏன் தர்ஷினி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம வர வரனலாம் மறுத்திட்டு இருக்கா? என்ன பிரச்சினைனு கேட்டியா?” என்றான்.

ஏற்கனவே அதைப் பற்றி தமக்கையிடம் பேச நினைத்த தர்ஷன் ‘தர்ஷினி எங்கே’ என்று கேட்கவும்,

ப்ரகதி ‘அவள் வீட்டில் இல்லை’ என்றதும் தர்ஷினியின் மொபைலுக்கு அழைக்க எண்ணி அவள் நம்பரை டயல் செய்யும் நேரம் தர்ஷினியே அங்கு வந்தாள்.

அவளோடு வந்தவனைக் கண்டு அனைவரும் அவன் நலன் விசாரிக்க துருவனின் புருவங்கள் யோசனையில் வளைந்தன.

தர்ஷினி சென்னைக்கு வந்த புதிதில் ஒரு நாள் துருவனிடம் தினேஷைப் பற்றி விசாரித்து அவன் இப்பொழுது படம் எதுவும் எடுப்பதில்லையா என்று கேட்க துருவன் இல்லை என்றான்.

ராகவியின் மரணம் அவனை வெகுவாகவே பாதித்திருந்தது. அதே நேரம் தன்னால் தான் தன் தங்கைக்கு இந்த நிலை என்ற குற்றவுணர்வும் அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. அதில் முடங்கியவன் வீட்டை விட்டே வெளிவருவதில்லை.

துருவனை வைத்து அவன் எடுத்த முதல் படம் அவனுக்குப் பெரிய வெற்றியைத் தேடி தந்து அவனுக்கான ஒரு இடத்தையும் கொடுத்தது.

ரசிகர்களும் அவனின் அடுத்த படத்திற்காக ஆவலோடு காத்திருக்க அவனோ தங்கையைப் பற்றிய வேதனையிலே உழன்று கொண்டிருந்ததால் எதைப் பற்றியும் யோசியாது இருந்தான்.

துருவனும் அவன் திறமை வீணாவதை எண்ணி கவலைக் கொண்டு அவனிடம் பலமுறை பேசி பார்க்க பலனில்லாமல் போகவும் அந்த முயற்சியைக் கைவிட்டான்.

அதிதியும் தினேஷிடம் தன்னால் இயன்றவரை பேசிப் பார்த்துவிட்டாள். ஆனால், பலன் தான் இல்லை. அவர்களிடம் பேசும் நிலையில் கூட அவன் இல்லை.

தினேஷின் படத்தைப் பார்த்து அவன் அடுத்து என்ன செய்கிறான் என்று விசாரித்த தர்ஷினி, தினேஷின் நிலை அறிந்து அவனைத் தேடிச் சென்றவள் அவனிருக்கும் நிலையை எண்ணி வேதனையுற்றாள்.

அவனின் முதல் படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் நடக்கும் போது துருவனைப் பார்க்க வந்திருந்த தர்ஷினி, தினேஷ் அந்த துறையில் காட்டும் ஈடுபாட்டைக் கண்டு வியந்திருந்தாள்.

சிறுசிறு விஷயங்களைக் கூட நுணுக்கமாக கவனித்து எந்த குறையும் இல்லாமல் அவன் நேர்த்தியாக செயல்புரிவதைக் கண்டு அவனை மனதார பாராட்டவும் செய்திருந்தாள்.

அங்கிருந்த ஒரு வாரத்திலே தினேஷிற்கு அந்த துறை எவ்வளவு பிடித்தம் என்பதை அறிந்திருந்தவள் இன்று தினேஷ் இருக்கும் நிலையைக் கண்டு துடித்தாள்.

தோழி என்ற முறையில் அவனை கொஞ்சம் கொஞ்சமாக அவனது வேதனையில் இருந்தும் குற்றவுணர்வில் இருந்தும் மாற்ற முயன்றவள் அவன் மீதான காதலையும் உணர்ந்தாள்.

இறுதியில் இரண்டுமே வெற்றி பெற குடும்பத்தினரின் அனுமதியோடு தன் காதலைத் திருமணத்திற்குக் கொண்டு செல்ல எண்ணி தினேஷோடு அவளின் வீட்டிற்கு வந்தவள் அனைவரிடமும் விவரத்தைச் சொல்ல அது துருவேந்திரனைத் தவிர மற்றவர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

முதலில் தினேஷிடம் ராகவியின் மரணத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றெண்ணிய யோகேந்திரன் தினேஷிடம் நடந்ததைச் சொல்ல அவன் ‘தர்ஷினி என்கிட்ட ஏற்கனவே நடந்ததை சொல்லிட்டா சார்…’ என்றான் விரக்தியோடு.

தன் தங்கை ஒருவனை காதலித்ததைக் கூட அறியாத அளவுக்கு இருந்திருக்கிறோமே என்று விரக்திக் கொள்ள அவனது கையைப் பற்றி அழுத்தம் கொடுத்த தர்ஷினி அவனைத் தேற்றினாள்.  

அத்தையின் முன்பே அனைத்தையும் சொல்கிறாரே என்று தர்ஷனும் துருவனும் யோகேந்திரனை குழப்பத்தோடு பார்க்க, யோகேந்திரன் ப்ரகதியைப் பார்த்து புன்னகைப் புரிந்தான்.

அவனின் புன்னகையே ப்ரகதிக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்பதை உணர்த்த இருவரும் ப்ரகதியை பார்த்தனர்.

சைத்தன்யாவை கைது செய்தது பேப்பரில் வந்ததுமே ப்ரகதி யோகேந்திரனிடம் அதைப் பற்றி விசாரித்தாள்.

ஏற்கனவே தன் கணவன் தன்னிடம் எதையோ மறைக்கிறார் என்ற எண்ணம் கொண்டிருந்த ப்ரகதி அவராக சொல்லும் வரை காத்திருக்க வேண்டும் என்று அமைதியோடு இருக்க சைத்தன்யாவைப் பற்றிய செய்தி பேப்பரில் வரவும் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் யோகேந்திரனிடம் கேட்டுவிட்டாள்.

இதன் பிறகு மறைக்கக்கூடாது என்றெண்ணிய யோகேந்திரனும் சைத்தன்யாவைப் பற்றி சொல்லிவிட அதை கேட்டு ஆவேசம் கொண்டு கத்திய ப்ரகதியை யோகேந்திரன் சமாதானம் செய்து அவளுக்குப் புரிய வைத்து அவளின் கோபத்தையும் குறைத்திருந்தான்.

தன்னிடம் மறைத்ததற்காக ப்ரகதி, துருவனையும் தர்ஷனையும் முறைக்க துருவன் அவளிடம், “எங்களை எதுக்கு முறைக்கிறிங்க அத்தம்மா? உங்ககிட்ட சொல்ல கூடாதுனு சொன்னதே மாமா தான்…” என யோகேந்திரனை முறைக்கவும் யோகேந்திரன் அப்பாவியாய் மனைவியைப் பார்க்க,

தர்ஷன், “பண்றதுலாம் பண்ணிட்டு பார்க்கிறத பாரு…” என்று முணுமுணுக்க ப்ரகதி அவனை முறைத்தாள்.

“உங்க புருஷனை விட்டு கொடுக்க மாட்டிங்களே…” என அவன் அலுத்துக் கொள்ளவும் புன்னகைத்தவள் தினேஷ் தர்ஷினியைப் பற்றி வசுந்தராவிற்கு போனில் சொல்ல அவள் தன் கணவனோடு உடனே வருவதாக சொல்லவும் அவர்கள் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தனர்.

அந்த வாரமே வசுந்தரா தன் கணவனோடு வந்தவள் தினேஷைப் பற்றி தன் சகோதரர்களிடம் விசாரித்தாள். அவர்கள் அவனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லவும் எந்த தயக்கமுமின்றி மகளின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க தர்ஷினியும் மகிழ்ந்தாள்.

இதற்கு மேலும் நாளை கடத்தக் கூடாது தர்ஷினிக்கு வயதாகிறது விரைவிலே திருமணத்தை முடிக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் தினேஷின் தந்தையிடம் குடும்பத்தோடு சென்று பேச அவரும் சம்மதித்தார்.

தர்ஷினியின் திருமணத்தோடு துருவன் மற்றும் தர்ஷனின் திருமணத்தையும் வைத்துக் கொள்ளலாமே என்று அவர்களை கேட்க துருவன் சம்மதித்தான். ஆனால் தர்ஷனோ மறுத்தான்.

அவன் மறுப்பதை எதிர்பார்க்காதவர்கள் அவனை குழப்பத்தோடும் திகைப்போடும் பார்க்க,

“இப்ப கல்யாணம் வேணாம்னு தான் சொன்னேன், கல்யாணமே வேணாம்னு சொல்லல…” என்று புன்னகைக்கவும் நிம்மதியுற்றவர்கள் அவனிடம் காரணத்தைக் கேட்டனர்.

மான்சியின் அன்னை மஞ்சுளா அவரின் ஊரில் நிறையவே அவமானப்பட்டுள்ளார்.

அவர்கள் முன்பும் அவர் குடும்பத்தினரின் முன்பும் அவர் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் அவர் மகளின் திருமணத்தை அவர்கள் கண்ணெதிரிலே வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்று எண்ணியவன்,

தன் திருமணத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம் முதலில் சகோதரியின் திருமணத்தை முடிக்கலாம் என்று சொல்லவும் அவனை அனைவரும் பெருமையாகப் பார்த்தனர்.

துருவேந்திரனிடம் யாழிசையின் தந்தை திருமணத்திற்கு சம்மதித்தாரா என்று கேட்கவும் அவனும் புன்னகையோடு தலையசைத்தான்.

யாழிசையின் காதல் விஷயம் தெரிந்ததும் அவரும் கோபம் கொண்டார் தான். துருவன் சென்று பேசும் போது அவனிடம் பேசக் கூட தயாராக இல்லை. சில நாட்கள் காத்திருந்தவன் அவரின் கோபத்தை குறைத்து அவரின் சம்மதத்தைப் பெற்றான்.

தன் பேச்சை மீறி வெளியே சென்று தனியே தொழில் தொடங்கிய மகள் மீது அவருக்கு கோபம் இருந்தாலும் திருமணத்தை தன் அனுமதி இல்லாது செய்து கொள்ளமாட்டேன் என்ற உறுதியில் இருக்கிறாள் என்பது தெரிந்ததும் சற்று மனமிரங்கி மகளின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

அதைக் கேட்ட துருவனின் குடும்பத்தினர் மகிழ்ந்து தர்ஷினி மற்றும் துருவன் திருமணத்தை முதலில் முடித்து விட்டு தர்ஷனின் திருமணத்தை அடுத்த மாதத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வரவும் அதற்கான ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர்.

தர்ஷனின் முடிவை அறிந்த மான்சி அவனை காதலோடு அணைத்துக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவனும் மகிழ்ந்தான். மஞ்சுளாவும் தர்ஷனை எண்ணி பெருமைக் கொண்டார்.

இரண்டு ஜோடிகளின் திருமணம் என்பதால் திருமண வேலை வெகு விரைவாக ஆரம்பிக்கவும், யாழிசை மணப்பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கான ஏற்பாட்டை தான் தான் கவனிப்பேன் என்று சொல்லிவிட மற்றவர்களும் அதை மறுக்கவில்லை.

அதற்கான ஏற்பாட்டை தன் குழுவினரோடு அவள் கவனித்துக் கொண்டிருக்க, அதிதியும் ஆத்ரேயனும் மணமக்களுக்கான உடைகளை வடிவமைப்பதில் முனைப்போடு இருந்தனர்.

“அத்து எனக்கும் ட்ரெஸ் டிசைன் பண்ணி கொடுடா, ரிசப்ஷனுக்கு போட்டுப்பேன்…” என்றவளை முறைத்தவன் தன் வேலையை கவனிக்க,

அவன் கோபத்தை அலட்சியம் செய்தவள், “ப்ளீஸ் அத்து! நீதான் எனக்கு டிசைன் பண்ணனும் இல்லனா நான் மேரேஜுக்கே வரமாட்டேன்…” என்றாள் பிடிவாதமாக.

“உன் மாமா கல்யாணத்துக்கு நீ போறதும் போகாததும் உன் விருப்பம். என்னால டிசைன் பண்ண முடியாது…” அவன் கோபமாக சொல்லிவிட்டு சென்று விடவும் காரணமேயின்றி அவன் கோபத்தை ரசித்தவள் அவன் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தாள்.

அவனை அதிகாரம் செய்த பொழுது கிடைக்காத சந்தோஷம் கூட இப்பொழுது அவனிடம் கெஞ்சும் பொழுது அவளுக்கு கிடைத்தது.

அன்று அவன் கோபத்தில் அவள் இருக்கும் பக்கமே வர மாட்டேன் என்று சொல்லி சென்றுவிட அதிதி முதலில் கலங்கினாலும் பின்பு அவன் வரவில்லை என்றால் என்ன, நான் செல்வேன் என்று அவன் பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அதைக் கண்டு அவன் கோபம் குறைந்தாலும் அவளை கண்டுகொள்ளவே இல்லை.

சிறிது மனமிறங்கினாலும் அவள் பழைய படி முறுக்கிக் கொள்வாள் என்பதை அவன் அறிவானே.

அதனால் அவள் காதலை உணராத வரை அவளை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து முன்பு போலவே அவள் அறியாது திருட்டுத்தனமாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அந்த கள்வன்.

அவனது விலகல் அவளுக்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் தன்னால் தானே அவன் கோபமாக இருக்கிறான் என்பது புரிந்து அவன் பின்னே சுற்றிக் கொண்டிருந்தவள் அவனை விரைவிலே காதலிக்க வேண்டும் என்று தான் எண்ணுகிறாள்.

ஆனால், ஏனோ அது எப்படி என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. காதல் திட்டமிட்டு வரக் கூடியது அல்லவே.

பொறுத்திருந்து பார்த்தவள் அவனிடம் கெஞ்சுவதில் பலனில்லை என்ற முடிவோடு அவன் கையில் இருந்த துணியை எடுத்துக் கொண்டு,

“என்னை விட உனக்கு இது முக்கியமில்லை. முதல்ல எனக்கு டிசைன் பண்ணு, உன் வேலையை நான் பார்த்துக்கிறேன்…” என்று அங்கிருந்து செல்லவும் புன்னகைத்தவன் ‘ராட்சசி’ என முணுமுணுத்துக் கொண்டே அவளுக்கான ஆடையை வடிவமைத்தான்.

மனதில் அவளை நிறுத்தியதுமே அவளுக்கான வடிவமைப்பை அவன் கை தானாக வரைய அதைக் கண்டு ரசித்தவன் உடை வடிவமைக்க ஆயத்தமானான். அவனறியாது தூரத்தில் இருந்து அவனை கவனித்துக் கொண்டிருந்தவளோ மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.

இப்பொழுதெல்லாம் அவள் அறியாமலே அவனையும் அவன் செய்கைகளையும் ரசிக்கத் தொடங்கியிருந்தாள். முன்பு அவனை பார்ப்பதற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் அவளது பார்வையில் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால், அது என்னவென்றும் ஏனென்றும் தான் அவள் உணரவில்லை.

திருமண நாளும் வந்தது. இரு ஜோடிகளின் திருமணம் அனைவரின் நல்லாசியோடு இனிதே நடைபெற்று முடிய இரு ஜோடிகளும் தத்தம் இணையை எண்ணி மனநிறைவோடு அமர்ந்திருந்தனர்.

துருவேந்திரனோ தங்கள் காதலுக்கு யாழிசையின் தந்தை இடையூறாக இருப்பாரோ என்று கவலைக் கொண்டிருந்தது வீணோ என்று எண்ணும் அளவுக்கு அவர் துருவேந்திரனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு நிம்மதியுற்றான்.

ஆனால், அவன் வாழ்வில் இனி தான் நிம்மதி பறிப் போகப் போகிறது என்பதை அவன் அறியவில்லை.

ரோஷனின் திருமணம் முடிந்த மறுநாள் அதிதி சொன்னதை மறக்காது இன்றும் நினைவு வைத்திருந்தவன் துருவேந்திரனின் தொழிலை சில நாட்கள், தான் பார்த்துக் கொள்ள முடிவு செய்து துருவேந்திரனையும் யாழிசையும் தேனிலவிற்கு அனுப்பி வைத்தான்.

தர்ஷினி, தினேஷிடம் அவர்களுக்கான டிக்கெட்டை ரோஷன் கொடுக்க தர்ஷினியோ தினேஷ் அடுத்த படம் எடுக்கத் தயார் நிலையில் இருக்கிறான், அதனால் நாட்களை வீணாக்க விரும்பவில்லை என்று கணவனின் மனமறிந்த மனைவியாய் சொல்ல தினேஷ் அவளை எண்ணி பூரித்து நிற்க ரோஷனும் அவளை எண்ணி மகிழ்ந்தான்.

யாழிசை தேனிலவை முடித்து வரும் இரண்டாவது நாளில் போட்டி என்றிருக்க அதிதி மிகுந்த கவனத்தோடு ஆடை வடிவமைத்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் தேர்வு செய்த லிஸ்ட்டில் ப்ரியா இடம் பெறாமல் போக அதிதி பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தது.

அதை எண்ணி ப்ரியா மகிழ்ந்தாலும் தன் தோழி வரவில்லையே என்று அதிதி கவலைக்கொள்ள ப்ரியா அவளை தேற்றி போட்டியில் கவனம் செலுத்த வைத்தாள்.

யாழிசையைத் தான் மாடலிங் செய்யுமாறு அதிதி வலியுறுத்தியிருந்தாள். அவளும் அதிதிக்காக சம்மதம் தெரிவிக்க அதிதி அதற்கான பணியில் ஈடுபட்டாள்.

இந்த போட்டி தான் யாழிசையின் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்பதை இருவருமே அப்பொழுது அறியவில்லை.

*********

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Selva Rani

Story MakerContent AuthorYears Of Membership

42 – நான் என்பதே நீதான(டா)டி..!

44 – நான் என்பதே நீதான(டா)டி..!