in ,

42 – நான் என்பதே நீதான(டா)டி..!

NEN 42

ஆத்ரேயன், தன் காதலை அதிதியிடம் சொல்லாத வரையில் அவளை மறைந்து மறைந்து ரசித்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது அவளுக்கு தெரிந்துவிட்டதால் நேரடியாகவே ரசிக்கத் தொடங்கினான்.

முதலில் அதை கவனிக்காத அதிதி, பின்பு அவன் பார்வையின் மாற்றத்தை உணர்ந்ததும் அந்த பார்வையின் வீரியம் அவளை ஏதோ செய்ய, அவனை ஏறிட்டு பார்க்கவே தயங்கினாள்.

அவளின் தயக்கம் அவனுக்குள் கர்வத்தை உண்டாக்க பார்வையை அவளை விட்டு விலக்கவே மனமின்றி அமர்ந்திருந்தான். சாப்பிட்டு கொண்டிருந்தவள் அதற்கு மேல் சாப்பிட முடியாமல் எழவும் சிந்து அவளை தடுத்தாள்.

“ஏன் சிக்கு பாதியிலே எழுந்திருக்கிற? உட்கார்ந்து சாப்பிடு…” என்று அவளை அமர வைக்கவும்,

ஆத்ரேயனை பார்த்தவள் அவன் பார்வை இன்னும் தன் மேலே படிந்து இருப்பதை உணர்ந்து, “எனக்கு போதும் அத்தை, நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்…” என அங்கிருந்து ஓடி விடவும்,

சிந்து அவளின் ஓட்டத்திற்கான காரணம் புரியாது மகனைப் பார்க்க அவன் புன்னகைத்துக் கொண்டே எழுந்து மனைவியைத் தொடர்ந்து செல்ல சிந்துவிற்கு ஏதோ புரிவது போல இருக்கவும் மனதிற்குள் நிம்மதி பரவ தன் வேலையை கவனித்தாள்.

அதிதி அறையில் தயாராகிக் கொண்டிருக்க அங்கு வந்த ஆத்ரேயன் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு அவளையே இமைக்காது பார்க்கவும்,

கண்ணாடி வழியே அவன் பார்வையை உணர்ந்தவள் முதலில் திணறி பின் ஒரு முடிவோடு அவனை நெருங்கி, “எதுக்குடா என்னை அப்படி குறுகுறுன்னு பார்க்கிற? திரும்புடா அந்த பக்கம்…” என்று அதட்டவும்,

“என்னடி வம்பா இருக்கு, பார்க்கிறது குத்தமா?” என்று அப்பாவியாய் அவன் கேட்க,

அவளோ, “உன் பார்வையே சரியில்லையே…” என்றாள் முறைத்துக் கொண்டு.

“ஏன் என் பார்வைக்கு என்ன? நல்லா தான இருக்கு?” என்றவனை முறைத்தவள் பின்பு கெஞ்சலில் இறங்கினாள்.

“ப்ளீஸ்டா! என்னை அப்படி பார்க்காத, எனக்கு ஒரு மாதிரி இருக்கு…” தயக்கத்தோடு சொல்பவளை கண்டு சிரித்தவன்,

“ஒரு மாதிரினா, எந்த மாதிரி?” புரியாதது போல அவன் கேட்கவும்,

“வேணாம் அத்து, நீ எப்பவும் போல இரு இல்லனா நான் என் ரூமுக்கே போயிடுவேன்…” என அவனை மிரட்டிப் பார்க்கவும்,

“எங்கே முடிஞ்சா போ பார்க்கலாம்…” என்றபடியே மூச்சுக்காற்று அவள் மேல் படும் தூரம் அவளை நெருங்கி நிற்க,

அந்த நெருக்கம் அவளை ஏதோ செய்ய தடுமாறியப்படி நின்றவளைக் கண்டு அவன் சத்தமாக சிரிக்கவும்,

அவனை சரமாரியாக அடித்தவள், “போடா எருமை…” என்று தன் வேலையை கவனிக்க முயல மேலும் சிரித்தவன் அவளை சீண்டும் பணியை செவ்வனே செய்தான்.

எப்பொழுதும் அவளோடு சாதாரணமாக விளையாடுவது போல அவன் விளையாடினாலும் அவளால் ஏனோ சகஜமாக இருக்க முடியவில்லை.

அவன் தன்னை காதலிக்கிறான் என்று தெரிந்ததிலிருந்தே அவனை அவளால் முன்பு போல் இயல்பாக எதிர்க்கொள்ள முடியவில்லை. ஏனென்று தெரியாமலே ஒருவித தயக்கம் அவளுள் குடிக் கொண்டது.

“அத்து, நீ குட்பாய் தான, அப்புறம் ஏன்டா இப்படி பண்ற?” என அவள் தடுமாற,

“நான் குட் பாயா இருக்கிறதுனால தான்டி அமைதியா இருக்கேன். இல்லனா?” என்றவன்,

அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவளை அணைத்து அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்து,

“பேட்பாயா இருந்திருந்தா இப்படி தான் நடந்திருப்பேன். அதுவும் இதை விட மோசமா…” என்றவன் அவள் அதிர்ந்து இருப்பதைக் கண்டு புன்னகைத்து பாடல் ஒன்றை முணுமுணுத்தப்படி வெளியேறினான்.

அதிர்ச்சியில் இருந்து மீண்டவளுக்கு ஆத்ரேயனின் செயல் கோபத்திற்கு பதிலாக புன்னகையைத் தான் வரவழைத்தது.

தயாராகி கீழே வந்தவள் அவன் பைக்கில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை காரில் போகலாம் என்று பிடிவாதம் கொள்ள அவள் பதற்றத்தை எண்ணி உள்ளுக்குள் சிரித்தவன்,

வெளியே அவளிடம், “என் மேல எவ்ளோ நம்பிக்கை…” என்று முறைத்தப்படி காரில் அமர்ந்தான்.

காரை ஸ்டார்ட் செய்தவன் ஆடியோ ப்ளேயரை ஒலிக்கவிட அதில்,

நான் என்பதே நீ அல்லவோ தேவ தேவி

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

என்ற பாடல் ஒலிக்கவும் அதைக் கேட்டு ஆத்ரேயன் ரசித்தப்படி முணுமுணுக்க அதிதி வேகமாக ப்ளேயரை ஆஃப் செய்தாள்.

“எதுக்குடி ஆஃப் பண்ண? இந்த பாட்டுல என்ன குறையை கண்ட? நல்ல பாட்டு தான?” என்றவன் ப்ளேயரை ஆன் செய்யப் போகவும்,

அவன் கையைத் தட்டிவிட்டவள், “எனக்கு பிடிக்கல. அமைதியா வாடா, ஏன் பாட்டு கேட்காம உன்னால வண்டி ஓட்ட முடியாதா?” என்று சிடுசிடுத்தவளும் அந்த பாட்டின் வரிகளை நன்கு அறிவாளே.

“நானும் தூங்கி எழுந்ததுல இருந்து பார்க்கிறேன் உன் நடவடிக்கையே சரி இல்லையே. ஏன்டி நான் எது பண்ணாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்க?” தெரியாதது போல அவன் கேட்கவும் அவனை முறைத்தவள் பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “எப்பவும் துறுதுறுனு இருக்கிற என் ரவுடி பேபிக்கு இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு?” என்று அக்கறையோடு வினவ அவனின் ரவுடி பேபியில் மகிழ்ந்து அவனை பார்த்தவள் அவன் கண்ணில் தெரிந்த குறும்பில் முறைத்தாள்.

“என்னை கடுப்பேத்தாம ஓடிடு…” என்று அவனிடமிருந்து விலக முயன்றவளை விடாது அணைத்துக் கொண்டவன்,

“நான் எப்பவும் போல தான்டி இருக்கேன், நீயும் அதே மாதிரி இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை? உன்னை நான் ஏதாவது தொந்தரவு பண்ணனா?” என்றதும் அவளும் யோசித்தாள்.

அவன் தன்னை எதுவும் தொந்தரவு செய்யவில்லையே என்று யோசிக்கும் போது சட்டென்று நினைவு வர, “உன் பார்வை முன்ன மாதிரி இல்லயே…” என்றாள்.

“சும்மா பார்க்கிறதுல என்னடி தப்பு இருக்கு? நானே முன்ன மாதிரி திருட்டுத்தனமா உன்னை சைட் அடிக்க முடியலையேனு ஃபீலிங்ல இருக்கேன்.

என்னதான் பக்கத்துல இருந்து உன்னை பார்த்தாலும் திருட்டுத்தனமா பார்க்கிறதுல இருக்க சுகமே தனி தான்…” என்றான் ரசனையோடு.

“போடா! இதுக்குனே உன்னை லவ் பண்ண மாட்டேன்…” என முறுக்கிக் கொண்டவளைக் கண்டு புன்னகைத்தவன்,

“தயவுசெஞ்சு லவ் பண்ணிடாதடி. ஒன்சைட் லவ்ல இருக்கிற சந்தோஷம், டபுள் சைட்ல இருக்காது. நீ இப்படியே இரு, நான் மட்டுமே உன்னை காதலிச்சிட்டு இருக்கேன்…” என்று அவளை அதிர வைத்தான்.

“நான் உன்னை லவ் பண்ணலனா நீ ஃபீல் பண்ண மாட்டியா?” கவலையும் ஏமாற்றமும் கலந்து அவள் கேட்க அவன் மறுப்பாகத் தலையசைக்கவும்,

சரமாரியாக அவனை அடிக்கத் தொடங்கியவளைத் தடுத்தவன், “கார் ஓட்டிட்டு இருக்கனே தெரியல, கொஞ்ச நேரம் அமைதியா வாடி…” என்று அதட்டவும் அவள் முகம் வாடியது.

அதைக் கண்டவன் தங்களது ஷாப் வந்ததை உணர்ந்து பார்க்கிங்கில் காரை நிறுத்தவும், கீழே இறங்க முயன்றவளைத் தடுத்து சாரிடி என்றதும் அவள் முறுக்கிக் கொள்ள,

அவளை தன் முகம் பார்க்கச் செய்தவன், “நான் தான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்னு சொல்லிட்டனே. அப்புறமும் எதுக்கு உன்னை குழப்பிக்கிட்டு இருக்க? நீ எப்பவும் போல இருடி…” என்றவன்,

“ஆனா, நான் உன்னை பார்க்கிறத மட்டும் தடுக்காதடி. அது ரொம்ப கஷ்டம்…” என்றான்.

அவள் எதுவும் சொல்லாமல் இறங்கவும் இந்த முறை அவளை தடுக்காது மறுபுறம் இறங்கி அவளை பின்தொடர்ந்து சென்றான்.

அவன் என்னவோ எளிதாக சொல்லிவிட்டான். ஆனால், அவளால் தான் முன்பு போல் இருக்க முடியவில்லை. தனக்குள் ஏன் இந்த தவிப்பு என்றும் அவளால் உணர முடியவில்லை.

அவள் பின்னே வந்தவனோ அவளை தடுத்து நிறுத்தி, “ஏய் சிக்கு ப்ளீஸ்டி! இன்னைக்கு மட்டும் ஒரே ஒரு தடவை. என்னால இதுக்கு மேலயும் கன்ட்ரோல் பண்ண முடியும்னு தோணல…” என கெஞ்ச அவள் புரியாது பார்த்தாள்.

“என்னடா?”

“நீ கோபப்பட கூடாது…” என அவளை நெருங்க ஏனோ அந்த நொடி அவள் மனம் என்றும் இல்லாது தவிக்கவும்,

அதை அவனிடம் மறைக்க பெரும்பாடுபட்டவள், “என்னன்னு சொல்லுடா…” என்றாள் அவசரமாக.

“சொன்னா கோபப்படுவியே. அதனால…” என அவள் பொறுமையை சோதித்தப்படி அவன் இழுக்க,

அவனை முறைத்தவள், “இப்ப நீ சொல்லுலனா தான் கோபப்படுவேன்…” வார்த்தைகளை கடித்து துப்ப,

அவனோ அவள் கோபம் கொள்வாளோ என்று அஞ்சி, “ப்ளீஸ்டி கோபப்படாத. உனக்கு பிடிக்காதது தான் இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல. இன்னைக்கு மட்டும் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இனி ஒரு நாளும் உனக்கு பிடிக்காதத செய்யமாட்டேன்…” என்றவன் அவளின் உணர்வுகளை கவனிக்காது,

அவள் பின்னால் நின்ற ஸ்வேதாவிடம், “ஸ்வேதா தேங்க்யூ சோ மச்…” என்று குஷியோடு கத்த அதிதிக்கு அப்பொழுது தான் புரிந்தது அவனின் தயக்கத்திற்கான காரணம் என்னவென்று.

அவனை சரமாரியாக அடித்தவள், “இதுக்காடா இவ்வளவு பில்டப் கொடுத்த? அதுக்குள்ள நான் என்னவென்னவோ கற்பனை பண்ணிட்டேன்…” பதற்றத்தோடு மீண்டும் அடிக்கத் தொடங்கியவள் தான் சொன்னதன் அர்த்தம் உணர்ந்து நாக்கைக் கடிக்க,

ஆத்ரேயனோ விஷமத்தோடு அவளை நெருங்கி, “அப்படி என்னடி கற்பனை பண்ண?” என்றதும் அவன் முகம் பார்க்க முடியாது திரும்பிக் கொண்டாள் அவள்.

முதல் முறையாக அவளது வெட்கத்தைக் கண்டவன் கர்வத்தோடு அவளை நெருங்க, அங்கே இருந்த ஸ்வேதாவோ இருவரையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆத்ரேயன் அவளிடம் பேசியதை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. அதே நேரம் அதிதியும் அவனிடம் கோபம் கொள்ளாமல் இருப்பதைக் கண்டு குழப்பமாகவும் இருந்தது.

இருவரையும் பார்க்க அவர்கள் இருவரும் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மற்ற நண்பர்களோடு விலகிக் கொண்டாள்.

“சொல்லுடி, என்ன கற்பனை பண்ண?” என அதிதியின் முகத்தை நிமிர்த்தி அவளை சீண்ட வேண்டுமென்று அவன் கேட்க,

ஏனோ அவன் முகம் பார்க்க முடியாமல் திணறியவள், “ஒண்ணுமில்லை போடா…” என்று நகர்ந்தவளை தடுத்தவன்,

“உன் கற்பனைல என்ன தோணுச்சோ அதை செயல்படுத்த எனக்கு உன் அனுமதி தேவைப்படாது சிக்கு. ஏன்னா நீ என் பொண்டாட்டி. அதுக்கான நேரம் வரும் போது நானே எடுத்துப்பேன்…” என்று அவள் கன்னம் தட்டிச் சொல்ல அவனை விழி விரிய பார்த்தவள் அங்கிருந்து ஓடியேவிட்டாள்.

தன் மனம் என்ன நினைக்கிறது எதை விரும்புகிறது என்பதை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.

ஆனால், அதை சரியாக புரிந்துக் கொண்ட ஆத்ரேயனோ அவள் தன்னை காதலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் தன் வேலைகளை கவனிக்கச் சென்றவனை தடுத்த கார்த்திக்,

“எப்படா ட்ரீட் கொடுக்க போற?” ஆவலாக கேட்கவும்,

“எதுக்கு?” என்றான் ஆத்ரேயன் புரியாமல்.

“எதுக்குனு தெரியாத மாதிரி கேட்டா விட்டுடுவனு நினைக்காதடா. மரியாதையா வந்து ட்ரீட் கொடு அதுவும் இப்பவே…” என்றான் அவன்.

“நிஜமா தெரியாம தான்டா கேட்கிறேன், ட்ரீட் கொடுக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு?”

“நல்லா நடிக்கிறடா. அதான் அதிதிக்கும் உனக்கும் எல்லாம் சரியாகிடுச்சுல, அப்புறம் என்ன?”

“சரியாகிடுச்சுனு உனக்கு யார் சொன்னது?”

“யார் சொல்லணும்? அதான் பார்த்தாலே தெரியுதே. என்னைக்கும் திருட்டுத்தனமா சைட் அடிக்கிறவன் இன்னைக்கு வெளிப்படையாவே சைட் அடிக்கிறியே. அதிதியும் உன்னை பார்த்து வெட்கப்படுறா. இன்னும் என்ன தெரியணும்? அதிதியும் உன்னை லவ் பண்றாள்னு பார்த்தாலே தெரியுதே…”

“உனக்குத் தெரியுது. ஆனா, தெரிய வேண்டியவளுக்கு தெரியலையே…” கவலையோடு ஆத்ரேயன் சொல்லவும் கார்த்திக் புரியாமல் பார்த்தான்.

“என் காதல் மட்டும் தான் கார்த்தி அவளுக்கு தெரிஞ்சிருக்கு. அவ இன்னும் அவளோட காதலை உணரல…” என்றவனை கார்த்திக் திகைப்போடு பார்க்கவும்,

“சீக்கிரமே அந்த நாள் வரும்ன்ற நம்பிக்கை இருக்குடா. அப்போ கண்டிப்பா கொடுக்கிறேன், இப்ப வந்து வேலைய பாரு…” என்று நண்பனை இழுத்துச் சென்றான் ஆத்ரேயன்.

அதிதி சில மணித்துளிகள் கழித்தே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வேலையில் கவனம் செலுத்த, அவளருகில் வந்த ப்ரியா மற்றவர்களையும் அழைத்து விவரம் தெரிவித்தாள்.

நாடு முழுவதும் உள்ள சிறந்த பெண் டிசைனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க மிகப்பெரிய அளவில் ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற உள்ளதாக தகவல் வந்திருந்தது.

போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அதை நண்பர்களுக்குத் தெரிவித்த ப்ரியா அதிதியையும் அதில் கலந்துக்கொள்ள சொல்ல அதிதி மறுத்தாள். எந்த போட்டியிலும் கலந்துக்கொள்ள போவதில்லை என்ற முடிவை அவள் எப்பொழுதோ எடுத்துவிட்டாளே.

தான் போட்டியில் கலந்துக் கொண்டதால் தன் அத்துவின் உயிரையும் பணயம் வைத்தது மட்டுமல்லாது அவனின் கோபத்திற்கும் ஆளாகி சில நாட்கள் அவன் அவளோடு பேசாமல் இருந்த வலியையும் அனுபவித்திருந்ததால் இனி அது போன்ற ஒரு நிலை வரவே கூடாது என்று அதிதி அந்த முடிவை எடுத்திருந்தாள்.

அன்றிலிருந்தே அவள் எந்த போட்டியிலும் கலந்துக் கொள்வதுமில்லை. வெற்றி தோல்வி பற்றி எதையும் சிந்திப்பதுமில்லை. அவளை பொறுத்தவரை அவள் அத்து மட்டும் தான் முக்கியம்.

அவனுக்காக எதையும் செய்யத் துணிபவள் இப்பொழுது அவனுக்கு பிடிக்காததையும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.

அதனால் அவள் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள மறுக்க அவளை அறிந்த ஆத்ரேயன், “உன்னை போட்டியில கலந்துக்க கூடாதுனு நான் என்னைக்குமே சொன்னதில்ல சிக்கு. உன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிற போட்டியில நீ கலந்துக்கிறது தான் எனக்கு பிடிக்காது…” என்றவனை அவள் பார்க்க,

“வெற்றிக்காக உன்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றதுல தப்பு இல்ல. ஆனா, வெற்றி தோல்வி எது வந்தாலும் அதை ஏத்துக்க பழகணும். தோல்வியில கூட நாம கத்துக்கிறதுக்கு நிறைய இருக்கு. அந்த பக்குவம் உனக்கு வரணும்…” என்றான்.

அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க, “எனக்காக நீ இந்த போட்டியில கலந்துக்குடி…” என்றதும் அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு அவள் தலை தானாக ஆடியது.

அவள் சம்மதித்ததும் ப்ரியா அவளிடம் அப்ளிகேஷனை நீட்டி, “இந்த அப்ளிகேஷனை ஃபில் பண்ணிட்டு இது கூட ஒரு சேம்பிள் டிரெஸ்ஸையும் டிசைன் பண்ணி அனுப்பணும் அதிதி.

நாம அனுப்புற டிசைன் வச்சு தான் அவங்க நம்மல போட்டியிலே சேர்த்துப்பாங்க. இதுல இருந்து பத்து பேரை ஃபில்டர் பண்ணுவாங்க. மூணு மாசம் கழிச்சு தான் போட்டி…” என்றாள்.

ஸ்வேதா அமைதியாக நிற்கவும், “நீ கலந்துக்கலயா ஸ்வேதா?” என்றாள் அதிதி.

“இந்த காம்படிசன் வரும் போது எனக்கு மேரேஜ்டி நான் பிஸியா இருப்பேன்…” என்று காரணத்தைச் சொல்ல அதிதியும் அவள் நிலை உணர்ந்து ப்ரியாவைப் பார்க்க,

அவளோ, “எனக்கு போட்டினாலே அலர்ஜி…” என்று கையை விரிக்கவும் அவளை முறைத்த அதிதி அவளையும் கலந்துக்கொள்ள சொன்னாள்.

ப்ரியாவும் மறுக்காது தனக்கான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வதற்கு சென்றுவிட அதிதி ஆத்ரேயனிடம், “நான் ஏற்கனவே டிசைன் பண்ண ட்ரெஸ் ஒண்ணு இருக்கு அத்து, அது நல்லா இருக்குனு சொன்னியே அதையே அனுப்பட்டுமா இல்ல புதுசா பண்ணட்டுமா?” என்றாள்.

“வேணாம், அதுவே நல்லா தான் இருக்கு அதையே அனுப்பு…” என்றதும் சரி என்றவள் அப்ளிகேஷனை பூர்த்தி செய்தாள்.

அதில் கேட்ட ஒவ்வொன்றையும் கவனமாக படித்து பார்த்து பூர்த்தி செய்தவள் இறுதியாக கையொப்பம் இடும் இடத்தில் கையெழுத்திடவும் அதை கவனித்தவன் மகிழ்ச்சியில் இருக்கும் இடத்தையும் மறந்து அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க அவள் திகைத்தாள்.

நல்லவேளையாக மற்றவர்கள் அவர்களுடைய வேலையில் கவனமாக இருந்ததால் இவன் செய்ததை கவனிக்கவில்லை. அதிதி அவன் செயலில் திகைத்துப் பார்க்க அவளை பார்த்து கண் சிமிட்டியவன் ஒரு பறக்கும் முத்தத்தையும் அவளுக்கு அனுப்பி விட்டு சிறு குழந்தையாய் துள்ளி குதித்து ஓடினான்.

அவர்களின் திருமணம் நடந்த பிறகும் அதிதி யோகேந்திரன் என்றே கையொப்பம் இட்டுக் கொண்டிருந்தவள் முதல் முதலாக அதிதி ஆத்ரேயன் என்று கையொப்பம் இட்டதைக் கண்டு தான் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறான் அவன்.

அவள் எப்பொழுதோ இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டாள் என்பதை அவனும் அறிவான் தான். ஆனால், இன்று அவள் பெயரின் பின்னால் அவன் பெயரைப் பார்க்கவும் அவன் மனம் அவன் வசமின்றி பறந்தது.

மதிய உணவின் போது ஆத்ரேயனுக்கு உணவு பரிமாறிவிட்டு தனக்கும் பரிமாறிக் கொண்டவள் சாப்பிட மனம் வராது தட்டில் இருக்கும் சாப்பாட்டை விரலால் கிளறிக் கொண்டிருக்க அதை கவனித்த ஆத்ரேயன் அவளது குழப்பமடைந்த முகத்தைக் கண்டு யோசனையில் ஆழ்ந்தான்.

மற்றவர்கள் சாப்பிட்டு எழுந்து செல்லும் வரை அமைதிக்காத்தவன் அருகிலிருந்தவளிடம் கோபமாக, “இப்போ உனக்கு என்ன தான்டி பிரச்சினை…” என்று கத்த அவளோ பதில் சொல்லாது அவனையேப் பார்த்தாள்.

“உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லி தொலைடி…” என்று அதட்டவும்,

அவள், “நீ எதுக்குடா உன் காதலை என்கிட்ட சொன்ன? சொல்லாமலே இருந்திருக்கலாமே…” என்றவளின் கண்கள் கலங்கியது.

அதில் திகைத்தவன், “நான் தான் தெளிவா சொல்லிட்டனேடி உன்னை நான் எதுவும் கட்டாயப்படுத்த மாட்டேன்னு. இன்னமும் உனக்கு என் மேல நம்பிக்கை வர்லயா?” விரக்தியோடு அவன் கேட்க,

மறுப்பாக தலையசைத்தவள், “என்னால முடியலடா…” என்று அழுதுக் கொண்டே அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“என்னால முன்ன மாதிரி உன்கிட்ட சகஜமா பழக முடியல அத்து. இன்னைக்கு ரொம்பவே அவஸ்த்தைப்பட்டேன். நீ சாதாரணமா பார்த்தா கூட என்னால உன்னை ஃபேஸ் பண்ண முடியல.

நீ இல்லாதப்போ கூட என்னை நீ பார்க்கிற மாதிரியே ஃபீல் ஆகுது. ஒரு நாளைக்கே இப்படினா இன்னும் போக போக எப்படி இருக்கும்னு தெரியல. என் அத்துக்கிட்டயே என்னால ஃப்ரீயா இருக்க முடியலனு என் மேலயே எனக்கு கோபமா வருது.

நீ என்னை காதலிக்கிறது எனக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்…” என்றவளின் கண்ணீர் அவனின் தோளை நனைக்க அவள் நிலையை எண்ணி துடித்தவன்,

பின்பு ஒரு முடிவோடு அவளை நிமிர்த்தி, “இனி நான் உன் பக்கத்துல கூட வர மாட்டேன், என் தொல்லை இல்லாம நிம்மதியா இரு…” என்று எழுந்தவன்,

“வார்த்தைக்கு வார்த்தை என் அத்து என் அத்துனு சொல்றியே. முதல்ல அதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்கிட்டு சொல்லுடி…” என்றவன் அங்கிருந்து சென்றுவிட அதிதி அவனது கோபத்தில் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்.

**********

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Selva Rani

Story MakerContent AuthorYears Of Membership

41 – நான் என்பதே நீதான(டா)டி..!

43 – நான் என்பதே நீதான(டா)டி..!