in ,

41 – நான் என்பதே நீதான(டா)டி..!

NEN 41

கயல்விழியின் அன்னை தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்ற செய்தியை போனில் கேட்டு அதிர்ந்த மாறன் கயல்விழியை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டிய நிலையில் இருந்ததால் தன் அன்னையை ஊருக்கு அனுப்பி தன் அத்தையின் நிலையை அறிய முயன்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்.

காந்திமதியும் ஊருக்குச் சென்று அங்கிருக்கும் சூழ்நிலையை மகனுக்குத் தெளிவாக விளக்க மாறனும் மனைவியை ப்ரகதியிடம் ஒப்படைத்துவிட்டு உடனே ஊருக்குக் கிளம்பிச் சென்றதும் தான் அவனுக்கு தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரிய வந்தது.

கயல்விழியின் வளைகாப்பிற்காக அவளின் அன்னை மகளிர் குழு மூலம் கடன் வாங்கியிருந்தது தெரிந்தது.

அவர்கள் குடும்ப சூழலை ஏற்கனவே மாறனும் அவன் அன்னையும் அறிந்திருந்ததால் அவர்களை எந்த செலவும் செய்ய வேண்டாமென சொல்லியிருக்க அவளின் அன்னையோ மகளுக்காக கடன் வாங்கி செலவு செய்திருந்தார்.

ஏற்கனவே அவர் வாங்கியிருந்த கடனை கயல்விழி அடைத்திருந்ததால் இந்த முறை தானே சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மகளிர் குழு மூலம் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால், அதை சரியான நேரத்திற்கு செலுத்த முடியாது போகவும் மற்றவர்களின் தரமற்ற பேச்சைக் கேட்க முடியாமல் அவமானத்தில் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.

நல்லவேளையாக அவரின் மகன் அந்த நேரம் வீடு வரவும் அவர் நிலையை உணர்ந்து உடனே மருத்துவமனையில் சேர்த்து தன் அன்னையை காப்பாற்றிவிட்டான்.

மாறனிடம் விவரத்தைச் சொன்னவன், “எங்க கம்பெனியில திடீர்னு வேலையில இருந்து நிறைய பேரை தூக்கிட்டாங்க மாமா. அதுல என் வேலையும் போய்டுச்சு.

நான் வேற வேலை தேடிட்டு இருக்கேன். அதனால என்கிட்ட அம்மா இதை பத்தி எதுவுமே சொல்லாம தனியா சமாளிக்க பார்த்திருக்காங்க…” என்றான் கலங்கியக் குரலில்.

“அதுக்காக எதுக்குடா இப்படி பண்ணாங்க? நீ ஏற்கனவே சம்பாதிச்சது இருக்குமே. அப்படி இல்லனாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே…” என்றான் மாறன் கோபமாக.

“போன மாசம் தான் இருந்த பணம்லாம் சேர்த்து சொந்த வீடு கட்டலாமேனு ஒரு இடம் வாங்குனோம்…” என்றதும் மாறனுக்கும் தன் மனைவி சொன்னது நினைவு வர, தன்னிடமாது சொல்லியிருக்கலாமே என்று குறைபட்டான்.

“அம்மா ஒரு நாளும் கேட்க மாட்டாங்க மாமா…”

“அதுக்காக இந்த முடிவுக்கு வரணுமா? இந்த மாசம் முடியலனா அடுத்த மாசம் சேர்த்து கட்டிக்கிறது…”

“இல்லை மாமா, இது அப்படி இல்லை. ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் கந்து வட்டியை விட மோசமா வசூலிப்பான்.

ஒவ்வொரு கிராமத்துலயும் மகளிர் குழுன்னு ஒன்னு உருவாக்கி அது மூலமா ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிப்பிட்ட பணத்தை கடனா கொடுத்து வாராவாரம் வட்டி வசூலிப்பான்.

அந்த குழுவுல இருபது பேரு கடன் வாங்குறாங்கனா வாராவாரம் இருபது பேரும் கட்டியாகணும். என்ன நடந்தாலும் கட்டாம இருக்கக்கூடாது.

ஒருத்தரால கட்ட முடியலனா மீதி இருக்கிறவங்களாம் சேர்ந்து கட்டாதவங்களோட பணத்தையும் சேர்த்து கட்டணும்ன்றது தான் அந்த குழுவோட விதி. அப்படி மத்தவங்க சேர்ந்து கட்ட வேண்டிய நிலைமை வந்துச்சுனா, கட்டாதவங்கள வார்த்தையாலே சாகடிச்சிடுவாங்க மாமா.

இதனால தான் அக்கா இங்க கடனே வாங்காதிங்கனு அம்மாகிட்ட பலமுறை சொல்லுவாங்க. அம்மா வேற வழி இல்லாம அங்கேயே போய் வாங்கிடுவாங்க. அப்புறம் அக்கா தான் அடைக்க வேண்டியது வரும்.

கடைசி ரெண்டு முறையா அம்மாவால பணத்தை கட்ட முடியாததுனால மத்தவங்க பேசுனத கேட்க முடியாம இந்த முடிவ எடுத்திருக்காங்க…” என்றான் கவலையோடு.

அந்த ஊரில் இருக்கும் மாறனின் நண்பன் ஒருவன் அங்கு வந்திருந்தான். அவன் தான் தன் ஊரைச் சுற்றி நடக்கும் தகவல்களை மாறனுக்குத் தெரியப்படுத்துவது.

மாறனிடம் வந்தவன், “இது மாதிரி இங்க மட்டும் இல்ல மாறா, பக்கத்து ஊர்லயும் நடந்திருக்கு. போன வாரம் ரெண்டு பேரு தற்கொலை பண்ணியிருக்காங்க. அதுல ஒருத்தரை காப்பாத்தியாச்சு, ஒருத்தர் இறந்துட்டாங்க. நான் ஊர்ல இல்லாததுனால எனக்கு விஷயம் இன்னைக்கு தான் தெரிஞ்சது…” என்றவன்,

“இது மாதிரி பிரச்சினைகள் நிறையவே நடக்குது, ஃபைனான்ஸ்காரன் பெண்களுக்கு உதவி பண்றேன்ற பேர்ல அதிக வட்டிக்கு பணம் கடன் கொடுத்து கொள்ளை தான் அடிக்கிறான். இது நம்ம தமிழ்நாட்டுல மட்டுமில்ல நாடு முழுவதும் நடக்குது…” என்றதும் மாறன் திகைத்தான்.

மாறன் அது சம்மந்தமான தகவல்களைத் திரட்டி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றெண்ணி உடனடியாக தகவல்களை சேகரிக்கும் பொழுது தான் அவனே எதிர்ப்பார்க்காத உண்மை தெரிய வந்தது.

இது போன்ற நிதி நிறுவனங்கள் பெரும்பான்மையானது அமைச்சருடையது என்பது. பினாமியின் பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தி அதன் மூலம் மக்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்து சம்பாதிக்கிறார்.

அது சம்மந்தமான ஆதாரங்களை தர்ஷனிடம் ஒப்படைத்தவன், “அவரோட ஃபைனான்ஸ் கம்பெனி நாடு முழுக்க இருக்கு சார். ஒவ்வொரு கிராமத்துலயும் மகளிர் குழு மூலம் பணத்தை ரோலிங் பண்ணிட்டு இருக்காரு.

நாம அவரு ஊழல் செய்யற பணத்தை என்ன பண்றாருனு தெரியாம தேடிட்டு இருக்கோம். ஆனா, அவரு இப்படி மக்கள்கிட்ட வட்டிக்கு விட்டு கோடிக்கணக்கா சம்பாதிச்சு பினாமி பேர்ல பதுக்கி வைக்கிறாரு.

வாராவாரம் வட்டி மட்டுமே அவருக்கு பல கோடி வருது. அவரோட டார்கெட்டே கிராம பெண்கள் தான். ஈஸியா வட்டிக்கு பணம் கிடைக்கிறதுனால அவங்களும் அதிக வட்டியையும் பெருசு படுத்தாம கடன் வாங்கிட்டு, பின்னாடி அதை அடைக்க முடியாம ரொம்பவே கஷ்டப்படுறாங்க.

தினக்கூலி வேலை செய்யற பெண்கள் சரியா கடன் கட்ட முடியாம மத்தவங்க முன்னாடி அசிங்கப்பட்டு தவறான முடிவை எடுக்கிறாங்க.

வேற மாநிலங்கள்ல பெண்கள் பணத்தைக் கட்ட முடியாம தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறாங்கன்றது தான் கொடுமையே. அவங்களை மூளைச்சலவை செய்து அவர்களை தவறான வழிக்கு ஈடுபடுத்துவதே அமைச்சருடைய ஆட்கள் தான்.

பார்க்கிறவங்களுக்கு அது வெறும் ஃபைனான்ஸ் கம்பெனி தான். ஆனா, அதுக்குள்ள நடக்குற எதுவும் வெளிய தெரியாது. இதுமட்டுமில்லாம எம்.எல்.ஏ மாணிக்கமே இவரோட பினாமி தான்.

அவரு கடத்துற போதைப் பொருளுக்கும் அவரு செய்யுற ஊழலுக்கும் காரணமே இவரு தான். போதைப் பொருளால மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்காங்க.

இவரை பத்தி தெரிஞ்ச அமைச்சர் பாண்டியனை மாணிக்கம் மூலமா கொலையும் செஞ்சிருக்காரு. அதை விபத்துனு நம்ப வச்சு எல்லாரையும் ஏமாத்தவும் செஞ்சிட்டாங்க.

பாண்டியன் மாதிரி ஒரு நேர்மையான அமைச்சரை இழந்துட்டு தமிழ்நாடே கவலையில இருந்தது. இனியும் தாமதிக்க கூடாது, இவங்களால இன்னொரு உயிர் போறதுக்கு முன்னாடி அவங்களை கைது பண்ணனும் சார்…” என்றான் மாறன் ஆவேசமாக.

அமைச்சரைப் பற்றி கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆளுங்கட்சியின் அமைச்சராக இருப்பவரை உடனே கைது செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.

தர்ஷனுக்கு அதற்கான அதிகாரத்தை முதலில் அவனின் மேலதிகாரி வழங்க வேண்டும். ஆனால், அவரோ அமைச்சரின் உறவினர். என்ன செய்வதென்று யோசிக்கும் போது,

ஆத்ரேயன், “ஜெயந்தன்கிட்ட பேசும் போது நல்லவிதமா தெரியுது மாமா. அவர் அப்பா தான முதலமைச்சர், நாம நேரடியா அவர்கிட்டே பேச கூடாதா? ஜெயந்தன் உதவி பண்ணுவாருனு தோணுது…” என்றதும் யோகேந்திரன் மறுத்தான்.

“முதலமைச்சர் பத்தியும் ஒரு சில வதந்திகள் வருது அத்து. நாம உறுதியா சொல்ல முடியாது. ஒருவேளை அவரு நேர்மையானவரா இருந்தாலும் கட்சி பேரு பாதிக்கப்பட கூடாதுனு ஆக்ஷன் எடுக்க தயங்குவாரு.

அதனால நாம ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஏற்கனவே முடிவு பண்ண மாதிரி உன் பெரியப்பா ரத்தினவேலுக்கிட்டயே பேசலாம்…” என்றதும் மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

நேரம் கடந்ததால் அவரிடம் நாளை பேசி விடலாம் என்று முடிவு செய்து வீடு திரும்பினர்.

தாமதமாக வீட்டிற்கு வந்த ஆத்ரேயனைக் கண்டு அதிதி கோபம் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் ஆத்ரேயன் அவளின் கோபத்திற்கான காரணம் புரியாது விழித்தான்.

அனைவரும் உறங்கியிருக்க ஹாலில் அமர்ந்தவளின் அருகில் சென்றமர்ந்தவன், “மேடம்க்கு என் மேல அப்படி என்ன கோபம்?” என்றதும் அவள் பதில் சொல்லாது முகத்தைத் திருப்பிக் கொள்ள,

அவளது செயலில் புன்னகைத்தவன், “என்ன கோபம்னு சொன்னா தானடி தெரியும்…” என அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பவும்,

அவனை முறைத்தவள், “உன் போனை கொடு…” என்றதும்,

அவனும் ஏனென்று கேட்காது அதை எடுத்து கொடுக்க அதை வாங்கியவள் வேகமாக சமையலறைக்குச் செல்லவும் ஆத்ரேயனும் அவள் செயலுக்கான காரணம் புரியாது அவள் பின்னே சென்றான்.

அவளோ வேகவேகமாக அடுப்பை பத்த வைத்து ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதிக்க வைத்தவள் அவன் போனை அதில் போடப் போகும் நேரம் அதுவரை ஒன்றும் புரியாது அவள் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தவன் இறுதியாக போனை அவள் கொதி நீரில் போடப் போகவும் பதறி,

அவளைத் தடுத்தவன், “உனக்கென்ன பைத்தியமாடி? போனை எதுக்கு அதுல போட போற?” என்று போனை வாங்க முயல,

அவனை முறைத்தவள், “நான் போன் பண்ணும் போது அட்டண்ட் பண்ணாம இருக்கிறதுக்கு இந்த போன் உன்கிட்ட இருந்தா என்ன இல்லனா என்ன?” என்றாள் கோபமாக.

அப்பொழுது தான் ஜெயந்தனைப் பார்க்க போவதற்கு முன்பே போனை சைலண்டில் போட்டிருந்தது அவனுக்கு நினைவு வந்தது.

நடந்த பிரச்சினையில் அவன் அதை மறந்திருக்க அதிதி அவனுக்கு பலமுறை அழைத்து ஏமாந்திருந்தாள்.

“நான் சைலன்ட்ல போட்டத மறந்துட்டேன்டி. அதுக்காக இப்படி பண்ணுவியா? போனை கொடுடி அதுல முக்கியமானதுலாம் இருக்கு…” போனை வாங்குவதிலே அவன் குறியாக இருக்கவும் அவளின் கோபம் மேலும் அதிகரித்தது.

“நான் எத்தனை முறை உனக்கு கால் பண்ணேன், நீ அட்டண்ட் பண்ணாததுனால நான் எவ்ளோ டென்ஷனா இருந்தேன் தெரியுமா? நீ அதை பத்தி கொஞ்சமும் யோசிக்காம போன் போயிடுமேனு கவலைபடுற. அப்படி என்னடா உனக்கு என்னை விட உன் போன் முக்கியம்?”

“நான் எடுக்கலனா நீ கார்த்திக்கு போன் பண்ணியிருக்க வேண்டியது தான? அதை விட்டு எதுக்கு தேவையில்லாம டென்ஷனான?” என்றவனை அடித்தவள்,

“அந்த எருமைக்கும் தான் போன் பண்ணேன், அவனும் எடுக்கவே இல்லை. ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணி சொல்றான் நீ தர்ஷன் கூட இருக்கேன்னு.

அதுக்குள்ள நான் எவ்ளோ டென்ஷன் ஆனேன் தெரியுமா? அப்படி என்னடா அவன் கூட இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த?” என்றாள் ஆத்திரத்தோடு.

“என்னன்னு சொல்றேன், முதல்ல போனை கொடுடி. ஆத்திரத்துல அதை உடைச்சுடாத…” என்றதும்,

“திரும்பத் திரும்ப போன்லயே குறியா இருக்க அதுல என்னடா இருக்கு?” என்றவள்,

அதில் அப்படி என்ன இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள போனை ஆன் செய்து பார்க்கவும் ஆத்ரேயன் தடுக்க முயன்றும் பலன் இல்லாமல் போனது.

ஆத்ரேயனின் கன்னத்தில் அதிதி முத்தமிட்டப்படி இருக்கும் ஸ்க்ரீன் சேவர் அவளை வரவேற்கவும் ஆத்ரேயனைப் பார்த்தவள் அவன் திருதிருவென விழிப்பதைக் கண்டு யோசித்து பின்பு அதை பெரிதாக எண்ணாமல் உள்ளே இருக்கும் ஃபோல்டர்களை ஆராய்ந்தாள்.

போன் முழுவதும் அதிதி அத்து மட்டும் இருக்கக் கூடிய புகைப்படங்கள் மட்டுமே நிரம்பி இருந்தது.

ஒவ்வொன்றும் இருவர் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தக் கூடியதாகவும், அதிதியின் குறும்புகளும் ஆத்ரேயனின் பாவப்பட்ட முகமும் சிறு வயது புகைப்படங்களும் அதில் இருக்க அதை ஒவ்வொன்றாக பார்த்தவள் ‘இதலாம் இன்னமும் வச்சிருக்கியாடா!’ என ஆச்சரியப்பட்டாள்.

ஒவ்வொரு போட்டோவையும் பார்க்கும் போது அதிதியின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை அவன் ரசித்துக் கொண்டிருக்க,

அவளோ, “உன் போன்ல போட்டோவ தவிர வேற எதுவுமே இல்லை. இதுக்காடா இந்த அலப்பறை பண்ண?” என முறைக்கவும்,

பதிலுக்கு அவளை முறைத்தவன், “எனக்கு இது தான்டி முக்கியம்…” என அவள் எதிர்பாராத நேரத்தில் போனை கைப்பற்றிக் கொண்டு தன் அறை நோக்கிச் சென்றான்.

உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் விழுந்தவனிடம் பால் டம்ளரை அவள் நீட்டவும் எழுந்தமர்ந்து அதை வாங்கிப் பருகியவன்,

“எதுக்கு போன் பண்ண?” என்று வினவ,

“இப்ப மட்டும் எதுக்கு கேட்கிற? போய் அந்த தர்ஷன் கூடவே இருக்க வேண்டியது தான…” என கடுப்பாகச் சொல்லிவிட்டு நகர்ந்தவளை இழுத்தவன்,

தன்னருகில் அமர வைத்து, “சொல்லுடி, எதுக்கு போன் பண்ண? எதாவது பிரச்சினையா?” என்றதும்,

“ஏன் பிரச்சினைனா தான் போன் பண்ணனுமா?” என்று அதற்கும் கோபம் கொண்டாள்.

“இத்தனை முறை கால் பண்ணியிருக்கியே, அதான் கேட்டேன். என்னன்னு சொன்னா தானடி தெரியும்…”

“உன்கிட்ட பேசணும் போல இருந்ததுடா, அதான் கால் பண்ணேன். நீ எடுக்கவே இல்லை, கார்த்திக்கு போன் பண்ணா அவனும் எடுக்கல. எப்பவும் உடனே எடுக்கிறவன் இன்னைக்கு எடுக்கலனா எனக்கு டென்ஷனாகாதா?

அந்த ஜெயந்தன் நம்பருக்கு போன் பண்ணா அவன் நீங்க எப்பவோ போய்ட்டிங்கனு சொன்னான். அதான் என்ன ஆச்சோனு ரொம்ப டென்ஷன் ஆகிடுச்சு.

அந்த கார்த்திக் மட்டும் போன் பண்ணாம இருந்திருந்தா உன்னை தேடி நானே வந்திருப்பேன். ஆனா, உன்னை எங்க தேடுறதுனு தான் தெரியல…” என்றாள் கவலையாக.

“என்கிட்ட தினமும் பேசிட்டு தான இருக்க இன்னைக்கு மட்டும் என்ன தனியா தோணுச்சு?” என அவளை அறிந்துக் கொள்ளும் ஆவலில் அவன் கேட்க,

அவளோ, “தெரியலடா, கொஞ்ச நேரம் நீ என் பக்கத்துல இல்லனதுமே கஷ்டமாகிடுச்சு…” என்றவள்,

அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு, “நீ எப்பவும் என் பக்கத்துலயே இருடா, எங்கயும் என்னை விட்டு தனியா போகாத…” என்றாள் அவள்.

அதைக் கேட்டு உள்ளுக்குள்ளே உல்லாசமாக குதித்தவன் அதற்கான காரணத்தை அவளிடம் கேட்க அவளிடம் அதற்கு சரியான பதில் இல்லை என்றதும் அவன் மனதில் சிறு ஏமாற்றம் பரவியது.

எனினும் விரைவில் புரிந்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை எழவும் அவளை அணைத்துக் கொண்டவன், “எப்பவும் நான் உன்கூட தான்டி இருப்பேன்…” என்று அவன் சொல்ல அவளும் மகிழ்ந்தாள்.

பின்பு ஆத்ரேயன் அங்கு நடந்ததைச் சொல்லவும் அதைக் கேட்டவள் ராகவியை எண்ணி கவலைக் கொண்டாள்.

உண்மை என்னவென்று தெரியாமலே அவள் இறந்துவிட்டாளே என அதிதி கவலைக்கொள்ள ஆத்ரேயனோ சைத்தன்யாவின் செயலைச் சொல்லி அவன் எடுத்த முடிவையும் சொன்னவன் அவனை நினைத்துக் கவலைக் கொள்ளவும் அதிதி ஆத்ரேயனை முறைத்தாள்.

“என்னை அவனை நினைக்க கூடாதுனு சொல்லிட்டு நீ எதுக்குடா அவனை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்க? அப்போ அவன் பண்ணது சரினு நினைக்கிறியா?” என்றதும் ஆத்ரேயன் பதில் சொல்லாது அவளை பார்க்க அதிதியின் கோபம் அதிகரித்தது.

“எதுக்கு அமைதியா இருக்க? பதில் சொல்லு. ராகவியோட நிலைக்கு அவன் பழிவாங்கணும்னு என்னை என்னவெல்லாம் பண்ண நினைச்சான். அதலாம் மறந்து போச்சா உனக்கு?

ஒருவேளை அவன் நினைச்சதுலாம் பண்ணியிருந்தா அப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணிருப்பியா? இல்ல நீயும் அதை தான் விரும்புனியா?” என அதிதி ஆத்திரத்தில் வார்த்தையைத் தவற விட ஆத்ரேயன் அவளை அறைந்திருந்தான்.

சைத்தன்யா செய்யவிருந்ததை அதிதியால் இன்னமும் மன்னிக்க முடியவில்லை. ஆத்ரேயனுக்காக அதை தற்காலிகமாக மறந்திருந்தாலும் சைத்தன்யா மீதான கோபம் அவள் மனதில் இன்னமும் இருக்கத் தான் செய்கிறது.

அவன் காதல் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கட்டுமே. அதற்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடும் உரிமையை அவனுக்கு யார் கொடுத்தது என்ற ஆத்திரம் தான் சைத்தன்யாவை அவளால் மன்னிக்க முடியாமல் போனதற்கான காரணம்.

ஏதோ விதி வசத்தால் சைத்தன்யாவின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது. ஒருவேளை அவன் நினைத்தது நடந்திருந்தால் தன் நிலை என்னவென்பதை யோசிக்க முடியாமல் அவள் தனக்குள்ளே தவித்துக் கொண்டிருக்க, ஆத்ரேயன் அவனை மன்னித்ததை தான் அவளால் தாங்க முடியவில்லை.

மற்றவர்கள் அவனை மன்னித்திருந்தால் கூட அதை அவள் பெரியதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால் ஆத்ரேயன்?

அவன் அவளின் அத்து அல்லவா? அவனால் எப்படி சைத்தன்யாவை மன்னிக்க முடிந்தது? என்ற ஆத்திரத்தில் தான் வார்த்தையைத் தவறவிட்டாள்.

அவள் பேசியதைக் கேட்டு ஆத்ரேயன் அவளை அடித்து விடவும் தான் அதிதிக்குத் தன் வார்த்தையின் வீரியம் புரிந்தது.

எனினும் ஆத்ரேயனை மன்னிக்க முடியாமல் அவனைப் பார்க்க அவனோ, “உன் மனசுல என்னை பத்தி இவ்வளவு கேவலமான எண்ணம் இருக்கும்னு தெரியாம நான் ஏதேதோ கற்பனை பண்ணிட்டு திரியுறன் பாரு, இந்த உலகத்துல என்னை விட முட்டாள் எவனுமே இருக்க மாட்டான்டி…” என அவளை உதறியவன் எழுந்து வெளியே சென்று விட அவனின் கோபத்தைக் கண்டு அதிதி துடித்தாள்.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவனோ அவள் அழுது கொண்டிருப்பதைக் கண்டு துடித்து மனம் கேளாது அவளருகில் வர அவனை கண்டதும் அணைத்து கொண்டவள் மேலும் அழ இப்பொழுது அவன் துடித்தான். அவனால் அவளிடம் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

அவள் பேசிய வார்த்தையால் உண்டான கோபத்தைக் கூட மறந்து அவளை சமாதானம் செய்யவும், “என்னை மன்னிச்சிடு அத்து, நான் கோபத்துல தான் அப்படி பேசிட்டேன்டா.

நீ என் அத்துடா, உன்னை நான் அப்படி நினைப்பனா?

நீ என்னை புரிஞ்சி வச்சிருக்கிறது அவ்வளவு தானா?” என மேலும் அழ அவளை தேற்றி கண்ணீரைத் துடைத்துவிட்டான் அவன்.

அவன் சற்று இறங்கி வரவும் அதிதி பழையப்படி முறுக்கிக் கொண்டு மேலே ஏறினாள்.

“நீ எப்படிடா அவனை மன்னிக்கலாம்? அவன் உன் சிக்குவ என்னவெல்லாம் பண்ண நினைச்சான், அதலாம் அதுக்குள்ள மறந்துட்டியா? போடா, என்கிட்ட பேசாத…” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளை செல்லமாக முறைத்தவன், “நான் அவனை மன்னிச்சிட்டேனு உனக்கு யாருடி சொன்னது? என்னால அவனை என்னைக்கும் மன்னிக்க முடியாது…” என்றவன்,

“ஆனா…” என்று இழுக்க,

அவள் அவன் என்ன சொல்ல போகிறான் என்று பார்க்கவும்,

“அவன் மேல எனக்கு முன்ன இருந்த கோபம் இப்போ இல்லைடி…” என்றவன் அவள் முறைப்பதையும் பொருட்படுத்தாது,

அவளை அணைத்துக் கொண்டு, “அவன் மட்டும் நம்ம லைஃப்ல வரலனா, நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்டியே…” என்று மகிழ்ச்சியோடு சொல்லவும் அதிதி புரியாமல் பார்த்தாள்.

தான் சொல்வதன் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை என்பதை அவள் முகத்தை வைத்தே உணர்ந்தவன்,

அவள் தலையில் செல்லமாக முட்டி, “உனக்கு புரிஞ்சா தான் ஆச்சரியம். எல்லாத்துலயும் புத்திசாலியா இருக்கிறவ என் விஷயத்துல மட்டும் ஏன் இவ்ளோ தத்தியா இருக்கேனு தெரியல…” என அலுத்துக் கொள்ளவும் அதிதி அவனை முறைத்தாள்.

“என்னன்னு சொன்னா தான புரியும்?” என்றவளிடம்,

“நான் சொல்லாமலே நீ புரிஞ்சிக்கணும். பார்க்கலாம், எப்ப புரியுதுனு?” என்றவன் படுக்கவும்,

அவனருகில் படுத்தவள், “நீ எதையோ என்கிட்ட மறைக்கிற அத்து, என்னன்னு சொல்லு…” என்றதும்,

“ஒண்ணும் அவசரம் இல்லடி நான் வெயிட் பண்றேன், பொறுமையாவே புரிஞ்சிக்கோ. ஆனா, ரொம்ப நாள் எடுத்துக்காதடி என்னால முடியாது…” என்றான் பரிதாபமாக.

“நீ என்னை காதலிக்கிறியா அத்து?” என அவள் பட்டென்று கேட்கவும் அதிர்ந்து பார்த்தான் அவன்.

அவன் பார்வையே அவள் கேள்விக்கான பதிலைச் சொல்லி விடவும் அவளது முகம் வாடியது. அதை தவறாகப் புரிந்துக் கொண்டவன் எழுந்தமர்ந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டு,

“சாரிடி, உன்னை கஷ்டப்படுத்திருந்தா என்னை மன்னிச்சிடு. உன்னை காதலிக்கணும்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா, நீ எப்ப எனக்குள்ள வந்தனு எனக்கே தெரியலடி…” அவளை கஷ்டப்படுத்திவிட்டோமோ என வருந்தி அவன் மன்னிப்புக் கேட்க அவள் அமைதியாகவே இருந்தாள்.

“ப்ளீஸ்டி! என்னை தப்பா நினைக்காத, நான் உன்னை காதலிக்கிறது உண்மை தான். ஆனா, ஒருநாளும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். உனக்கு என்ன தோணுதோ அதையே செய்…” என்று சொல்லியும் அவளிடம் மௌனம் மட்டுமே நிலவியது.

“எதாவது பேசுடி, ஏன் அமைதியா இருக்க? என்னை திட்டவாது செய்…” என அவன் கலங்க,

அவளோ, “உனக்கு என் மேல வந்த காதல் எனக்கு ஏன்டா உன் மேல வர்ல?” என்றதும் அவன் மனதில் ஒரு வலி எழுந்தது.

அதை உணர்ந்தவள், “சாரிடா அத்து, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். மத்தவங்கள விட நீதான் எனக்கு ஸ்பெஷல். நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்றது உண்மை தான். ஆனா காதல்?” அவள் தயங்கவும்,

அவள் மனதை அறிந்தவன் அவள் கலங்குவதைத் தாங்காது தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “விடுடி, எதுவும் பேசி உன்னை நீயே கஷ்டப்படுத்திகாத…” என்றான்.

“இல்லடா, எனக்கு ஏன் உன் மேல காதல் வர்ல? சின்ன வயசுல இருந்தே உன் பக்கத்துலயே இருந்ததுனால எனக்கு தோணலையா? ஆனா, உனக்கு தோணிருக்கே. அப்புறம் ஏன் எனக்கு தோணல?” என அவள் வேதனையில் பிதற்றவும் அவன் அவளை எண்ணி துடித்தான்.

“சொன்னா கேளுடி, எதுவும் யோசிக்காத அமைதியா தூங்கு…” என அவளை படுக்க வைத்தவன் அவளருகில் படுத்து அவளை தூங்க வைக்க முயல ஆனால் அவளோ ஆத்ரேயனை எண்ணி தவித்துக் கொண்டிருந்தாள்.

“அத்து நீ என்னை எப்ப இருந்துடா காதலிக்கிற?” என்றதும்,

“இப்ப எதுக்கு இதலாம்? அப்புறம் பேசிக்கலாம் தூங்கு…” என்றான் அவன்.

“ப்ளீஸ் சொல்லுடா…”

அவள் கட்டாயப்படுத்தவும், “எனக்கு தெரியலடி, உன் மேல இருந்த அன்பு எப்ப காதலா மாறுச்சுனு எனக்கு தெரியல. ஆனா, இப்போ அதை நான் நல்லாவே உணர்றேன்…” என்றவனை வேதனையோடு பார்த்தாள் அவள்.

தன்னால் அவனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே என ஏற்கனவே அவனை எண்ணி கலங்கியிருந்தவள் இப்பொழுது அவன் தன்னை காதலிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை எண்ணி தவித்தாள்.

“அத்து, நான் ஒண்ணு சொல்றேன் கேட்பியா?”

“என்ன?”

“நம்ம வாழ்க்கைக்கு உன் ஒருத்தரோட காதல் மட்டும் போதாதா? அப்புறம் ஏன் இன்னும் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்க? நான் தான் எப்பவோ தயாரா இருக்கனே.

இப்ப தான் நீயும் என்னை காதலிக்கிற, எனக்கும் உன்னை பிடிக்கும். இனி நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாமே…” என்றதும் அவள் தனக்காகத் தான் யோசிக்கிறாள் என்பது அவனுக்கும் புரிய மறுப்பாகத் தலையசைத்தான் அவன்.

“உன்னை நான் சந்தோஷமா வச்சிக்க என் ஒருத்தரோட காதலே போதும் தான். ஆனா, நான் அதை விரும்புலடி. நீயும் என்னை காதலிக்கணும். அப்ப தான் ரெண்டு பேராலயும் சந்தோஷமா வாழ முடியும்.

நம்ம வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். நீ என்னை நினைச்சு கஷ்டப்படாத. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, உனக்காக வெயிட் பண்றேன்…”

“எனக்கு கடைசி வரைக்கும் உன் மேல காதலே வர்லனா?” அவள் கவலையோடு கேட்க,

புன்னகைத்தவன், “கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடவும் நான் தயார்…” என்றான்.

“அப்போ என்னால வெயிட் பண்ண முடியாது சீக்கிரம் புரிஞ்சிக்கோனு சொன்ன?” அவள் சந்தேகமாக கேட்க,

அவள் தலையில் செல்லமாக முட்டியவன், “உன்கிட்ட என் காதலை சொல்ல முடியாம உன்னை திருட்டுத் தனமா சைட் அடிச்சிட்டு இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடி.

இப்ப தான் உனக்கு தெரிஞ்சிடுச்சே, இனி பிரச்சினையில்லை நேரடியாவே சைட் அடிப்பேன்…” என்றான் காதலோடு.

“இது மட்டும் போதுமா அத்து?” என்று அவள் கேட்க,

“எனக்கு போதும்டி. ஒரு நாளும் உன்னை காதலிக்கிறத நான் நிறுத்த போறதில்லை, இன்னும் அதிகமா தான் காதலிப்பேன். உனக்கும் என் மேல காதல் வரும் போது நாம சேர்ந்து வாழலாம்.

இல்லனா நான் உன்னை கடைசி வரைக்கும் காதலிச்சிக்கிட்டே இப்ப இருக்கிற மாதிரியே வாழ்ந்துடலாம்.

ஆனா, நீ எனக்காகவோ குடும்பத்துக்காகவோ எந்த முடிவையும் எடுக்கக்கூடாது புரியுதா?” என்றதும் அவனை வியப்பாக பார்த்தவள் சரி என்று தலையசைத்தாள்.

“நான் உன்னை காதலிக்கிறேன்னு உனக்கு எப்படிடி தெரிஞ்சுது?” அவன் ஆவலாக கேட்க,

“தெரியலடா, நீ கோபமா திட்டுனதும் திடீர்னு தோணுச்சு. அன்னைக்கும் அப்படி தான என் ஃபீலிங்க்ஸ புரிஞ்சிக்கோடினு ஃபீல் பண்ணி சொன்ன.

அன்னைக்கு நீ கொடுத்த முத்தம் கூட வித்தியாசமா தெரிஞ்சுது. அப்ப அது எனக்கு புரியல, இன்னைக்கு தான் புரியுது…” என்றவள்,

“உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறனா அத்து?” என்றாள் கவலையாக.

“எனக்கு எந்த கஷ்டமும் இல்லடி, உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என்றவனை,

“ஐ லவ் யூடா அத்து!” என்று அவள் கட்டிக்கொள்ள அதில் அவன் புன்னகைத்து அவளை அணைத்துக் கொள்ளவும்,

“இது அந்த லவ் யூ இல்ல, நீ தப்பா புரிஞ்சிக்காத…” என முறுக்கிக் கொள்ள,

மேலும் சிரித்தவன், “எனக்கு தெரியும்டி. உனக்கு என் மேல காதல் வந்துச்சுனா அது இந்த வார்த்தை மூலமா தான் நீ சொல்லணும்னு அவசியம் இல்லை.

உன்னால அப்போ சொல்லவும் முடியாது. உன் கண்ணே எனக்கு காட்டிக் கொடுத்துடும்…” என்றான் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் காதலோடு.

எப்பொழுதும் தனக்காகவே யோசிக்கும் தன் அத்துவை எண்ணி மகிழ்ந்தபடி அவள் உறங்கிவிட, ஆத்ரேயன் மனதும் நிறைந்திருந்தது.

இதுநாள் வரை அவள் மீதான காதலை அவளிடம் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இன்று அவளுக்கே தெரிந்துவிடவும் நிம்மதியுற்றவன்,

அவள் இப்பொழுது தன்னை காதலிக்கவில்லை என்றாலும் அவள் தன் காதலை அறிந்துக் கொண்டதே போதும் விரைவிலே தன்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கையோடு அவள் நெற்றியில் முத்தமிட்டவன் மகிழ்வோடு கண் அயர்ந்தான்.

***********

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Selva Rani

Story MakerContent AuthorYears Of Membership

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்!! – தேடல் 5

42 – நான் என்பதே நீதான(டா)டி..!