in

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்! – தேடல் 1

அன்புத் தோழமைகளே…
இது நான் எழுதிய ஏழாவது கதை.. உங்கள் விருப்பத்திற்காக மீண்டும் பதிவிடுகிறேன்…
இந்த கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை.. இதை எடுத்தாலே என் மனதிற்குள் அப்படி ஒரு தனி உற்சாகமும் புத்துயிரும் வரும்.. மீண்டும் இதை பதிய கூறியதிற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி 🙂 🙂 🙂

கதையின் முன்னுரை :-
மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேடல் இருக்கும்.

சிசுவின் தேடல் பால்
குழந்தையின் தேடல் பாலும் தாயும்
மழலையின் தேடல் தாயும் விளையாட்டும்
சிறுவர்களின் தேடல் விளையாட்டும் அறிவும்
இளமையின் தேடல் அறிவும் காதலும்
முதுமையின் தேடல் பாசமும் ஆதரவும்…! 
இவற்றுள் இளமை பருவத்தில் இதயம் தேடும் தேடலான காதலைப் பற்றிய கதை தான் “இதயம் தேடும் தேடல்!!!

நம் கதையின் கதாநாயகிகள்  ப்ரித்திகா  மற்றும்  சஹானா.   இவர்களின் கதாநாயகர்களை கதையின் ஓட்டத்தில் தெரிந்துக் கொள்வோம்…
இவர்களுள் சூட்டிகையும் துறுதுறுப்பும் நிறைந்த ப்ரித்திகா தன் இதயம் தேடும் கள்வனை சில போராட்டங்களுக்குப் பிறகு கைபிடிக்க, அமைதியும் பாசமும் நிறைத்த சஹானா தன்னை தேடும் இதயத்தை சில தடங்கல்களைத் தாண்டி சேர்கிறாள்.

இந்த காதல் கதையில் அன்பால் பிணைக்கப்பட்ட ஒரு பெரிய குடும்பத்தைப் பற்றிக் கூறியுள்ளேன். உங்களில் சிலர் நினைப்பீர்கள்… ‘இந்த காலத்தில் இப்படி ஒரு பெரிய குடும்பமா!’ என்று… ஆனால் உண்மையில் இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது.
3 அக்கா, 5 தங்கை மற்றும் 3 தம்பிகளுடன் பிறந்தவர் தான் என் தந்தை. பன்னிரெண்டு பேர் கொண்ட குடும்பமும் அவர்களுக்குள் உயிர்ப்புடன் இருக்கும் அன்பும் பாசமும் மட்டுமே உண்மை, மற்றபடி இந்த கதை முழுக்க முழுக்க எனது கற்பனையே!!!! அதுவும் கதையில் வருவது போல் அல்லாமல் எங்கள் குடும்பத்தில் பெண் வாரிசுகளே அதிகம். எங்கள் குடும்பத்தின் பாசப்பிணைப்பிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் காரணம் என்றபோதிலும் ஆலமரம் போன்ற எங்கள் குடும்பத்தின் அன்பிற்கும் ஒற்றுமைக்கும் ஆணிவேராக இருக்கும் எனது பெரிய மாமா, பெரிய அத்தை மற்றும் எனது பெற்றோருக்கு இந்த கதையை சமர்பிக்கிறேன்.

அன்று மலர்ந்த புது ரோஜாவின் மலர்ச்சியுடன் கிளம்பி வந்த மூத்த மகள் ப்ரிதிக்காவின் அழகை ரசித்த மேகலா, “பதினோரு மணிக்கு தானே படம்… இப்பவே கிளம்பிட்ட?” என்று கேட்க,

“இப்பவே கிளம்பி போனா தானே உன் நாத்தனாரின் மகளை கிளப்பி சரியான நேரத்திற்கு போக முடியும்!” என்றாள். 

“சஹானா என்னைக்கு தாமதமா கிளம்பி இருக்கிறா?” என்று தனது அக்கா மகளை ஈஸ்வரன் தாங்கி பேசவும், ப்ரித்திகா தந்தையை முறைத்தாள்.

ஈஸ்வரன், “இப்போ எதுக்கு செல்லம் இவ்வளவு அன்பா பார்க்கிற?” என்றதும்,

ப்ரித்திகா முறைப்புடன், “ஹ்ம்ம்.. எல்லாம் வேண்டுதல்” என்றாள்.

மேகலா புன்னகையுடன், “முறைத்தது போதும் கிளம்புடி” என்றதும் அவள் புன்னகையுடன் கிளம்ப,

ஈஸ்வரன், “இன்னும் சாப்பிடலையே!” என்று கூற, அவள் மீண்டும் தந்தையை முறைத்தாள்.

ஈஸ்வரன் குழப்பத்துடன், “இன்னைக்கு ஏன் உனக்கு என் மேல் இவ்வளவு பாசம் பொங்குதுனே தெரியலை” என்றார்.

மேகலா சிரிப்புடன், “இவ(ள்) ஏன் சீக்கிரம் கிளம்புறானு தெரியுமா?” என்று கணவரிடம் வினவினார்.

“அதான் சொன்னாளே! சஹானாவை சீக்கிரம் கிளப்பனு… இதற்கும் இவ(ள்) முறைப்பிற்கும் என்ன சம்பந்தம்?” 

“நீங்க முதலில் பேசியதிற்கும் இவளது முறைப்பிற்கும் தான் சம்பந்தம்”  

“சஹானா பற்றி சொன்னதை சொல்றியா?” 

“சஹானா பற்றி சொன்னது உண்மை தான் ஆனா அதை இவ பேச்சிற்கு எதிரா சொல்லிட்டீங்களே! அத்தோடு இவ சாப்பிடவில்லைனும் சொல்லிட்டீங்களே!” 

“சுத்தி வளைத்து மூக்கை தொடாமல் நேர விஷயத்தைச் சொல்லு” 

“அது ஒன்றுமில்லைங்க… உங்க அக்கா இன்னைக்கு பூரி சென்னா செஞ்சிருக்காங்க” என்றதும்,

ஈஸ்வரன் புன்னகையுடன் “இது தான் விஷயமா” என்றார்.

ப்ரித்திகா அசடு வழிந்தபடி, “ஹே செல்ல குட்டி கண்டுபிடிச்சிட்டியா” என்று தாயை கொஞ்ச,

அவர் பொய் கோபத்துடன், “நீ ஒன்றும் என்னை கொஞ்ச வேண்டாம்” என்றார்.

ப்ரித்திகா தாயின் தோளில் தொங்கியபடி, “செல்ல குட்டி நீ செய்யும் பூரி சென்னாவும் நல்லா தான் இருக்கும் ஆனா அத்தை செய்றது அதைவிட நல்லா இருக்குதே!!!” என்றாள்.

மேகலா மகளின் காதை வலிக்காமல் திருகியபடி, “இனி என்கிட்ட வந்து, செல்ல குட்டி பூரி சென்னா செஞ்சு குடுனு கேளு.. அப்போ கவனிச்சிக்கிறேன் உன்னை” 

“எப்படி கவனிப்ப! ருசியான பூரி சென்னா செய்து தந்து தானே!” என்று புன்னகையுடன் கண்னை சிமிட்டி கேட்கவும், மேகலா மகள் காதிலிருந்து கையை எடுத்தபடி சிரித்தார்.

“அப்பாடி கோபம் போயிருச்சா” என்று வினவ,

ஈஸ்வரன், “கோபம் வந்தால் தானே போவதற்கு” என்றார்.

“அப்போ எல்லாம் நடிப்பா கோபால்! நடிப்பா!”

அவள் ஏற்ற இறக்கத்துடன் நடிகை சரோஜாதேவி போல் கூறியதில் பெற்றோர் சிரித்தனர். 

ஈஸ்வரன் சிரிப்புடனே, “நீ நடித்தது போல் அவளும் நடித்தாள்” என்றார்.

தந்தையை மீண்டும் முறைத்தவள், “வேண்டாம் லிங்கா.. என்னை நெற்றிக்கண் திறக்க வைக்காதே” என்றாள். 

‘அதை இனி தான் திறக்கனுமா!’ என்று அவர் சத்தமாக முணுமுணுக்க மேகலா புன்னகைக்க, ப்ரித்திகா அதிகமாக முறைத்தாள்.

ஈஸ்வரன் மகளின் தோளில் தட்டியபடி, “சரி டா செல்லம்.. கோபப்படாத.. அப்பா ஏதோ தெரியாம செஞ்சிட்டேன்” என்று புன்னகையுடன் கொஞ்சினார்.

தந்தையின் கையை தட்டிவிட்டவள், முகத்தை திருப்பி அன்னையிடம், “மேகா பாய்.. மதியம் சாபிட்டுட்டு தான் வருவேன்” என்று கூறியபடி தனது ஸ்கூட்டியை கிளப்பினாள்.

 

 

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவளது வண்டி ஈஸ்வரனின் மூத்த அக்கா யமுனாவின் வீட்டின் முன் நின்றது. உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து வீட்டினுள் சென்றவள் வராண்டாவில் யமுனாவின் கணவர் நமசிவாயம் இருப்பதை பார்த்ததும் துள்ளலை குறைத்து அடக்க ஒடுக்கமாக அமைதியாக உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள் யமுனா கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து சைகையில் யாரென்று விசாரித்தாள்.

அவர் “ப்ரதீப்” என்றதும் உற்சாகத்துடன் கைபேசியை பிடுங்கி, “ஹாய் பனைமரம்! எப்படி இருக்க?” என்றாள்.

யமுனா உதட்டின் மீது விரலை வைத்து, “மெதுவா.. மாமா வெளியே தான் இருக்காங்க” என்றதும் அவள் புன்னகையுடன் தலையை ‘சரி’ என்பது போல் அசைத்து பேச்சை தொடர, அவர் புன்னகையுடன் சமையலறையை நோக்கிச் சென்றார்.

இவளது குரலை கேட்டதும் ப்ரதீபனும் உற்சாகம் கலந்த குரலில், “ஹாய் ஹாசினி” என்றான்.

“என்னை ஹாசினி கூப்பிடாதே சொன்னா கேட்கவே மாட்டியா!” 

“அப்போ பூசணினு கூப்பிடவா?” 

“போடா.. நான் மெலிஞ்சிட்டேன்” 

“இதை நான் நம்பணுமாக்கும்!” 

“நம்புனா நம்பு நம்பாட்டி போ” 

“அப்போ நான் பூசணினு கூப்பிடலாம்” 

“டேய்” 

“ஹ்ம்ம்.. இப்போ தான் அம்மா பூரி சென்னா செஞ்சிருக்கிறதா சொன்னாங்க.. கரெக்டா வந்துட்டியே” என்று கிண்டலுடன் கூற,

அவள் அலட்டிக் கொள்ளாமல், “இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்.. நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ நான் பூரி சென்னாவை ஒரு பிடி பிடிக்காம போக மாட்டேன்” 

“அதான் எனக்கு நல்லா தெரியுமே பூசணி” 

“போடா ஓமகுச்சி” 

“நான் ஓமகுச்சியா?” 

“நான் பூசணினா நீ ஓமகுச்சி தான்”

“நான் என்ன அவ்வளவு ஒல்லியாவா இருக்கிறேன்?” 

“நான் மட்டும் அவ்வளவு குண்டாவா இருக்கிறேன்?”

அவன் வாய்விட்டு சிரிக்கவும்,

அவள், “போதும் பல்லு கழண்டுக்க போகுது” என்றாள். 

“பல்லு கழண்டா பல் செட் வச்சிக்கிறேன்”

“இப்பவே இந்த மூஞ்சியை பார்க்க முடியலை இதுல பல் செட் வைத்தா யாரு பார்க்கிறது?” 

“உன்னை பார்க்க சொல்லி யாரும் கெஞ்சலை” 

“கெஞ்சிட்டாலும்” 

“சரி இதை விடு.. அத்தை மாமா நித்தி எப்படி இருக்காங்க?” 

“ஹ்ம்ம்.. எல்லோரும் நல்லா இருக்காங்க.. நித்தி அடுத்த வாரம் வருவா.. ஆனாலும் உனக்கு இந்த ஓரவஞ்சனை ஆகாது” 

“ஏன்?” 

“ஹ்ம்ம்.. அத்தை மாமா நித்தி பத்தி கேட்ட.. என்னை பத்தி கேட்டியா?”

அவன் சிரிப்புடன், “உன் குரலில் இருந்தே நீ சூப்பரா இருக்கனு தெரியுதே” என்றான். 

“எனக்கும் தான் உன் குரலில் இருந்தே நீ நல்லா இருக்கனு தெரியுது, இருந்தாலும் நான் கேட்கலையா?” 

“நீ என் குரலை கேட்கும் முன்பே கேட்டுட்ட..” 

“அதனால் என்ன! நீங்க என் குரலை கேட்ட பிறகு கேளுங்க” 

“இப்போ என்ன சொன்ன!!!” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டவன் அடுத்த நொடியே சிரிப்புடன், “ஓ! அப்பா பக்கத்துல இருக்காங்களா? மரியாதை பலமா இருக்குதே!”

அவள் குரலை தாழ்த்தி, “ஹ்ம்ம்.. வந்துட்டு போனாங்க.. அதான்” 

“நீ பயப்படுற ஒரே ஆள் என் அப்பா தான்” 

“ஹலோ! இது ஒன்றும் பயம் இல்லை” 

“பின்ன?” 

“முன்னெச்சரிக்கை” 

“எதுக்கு?” 

“என் காதில் இருந்து ரத்தம் வராமல் இருக்க” 

“அப்பா உன்னை அடிக்க மாட்டாங்களே!”

“அடித்தால் தான் ரத்தம் வரணுமா?”     

“வேற எப்படி வரும்?” 

“ஹும்.. நான் பாட்டுக்கு மாமா காதுபட உன்னை நீ வா போ னு பேசி வைத்தால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உன்னை விட எட்டு வயது பெரியவனை இப்படி தான் பேசுவியானு லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சிருவாங்க, அப்பறம் என் காதில் இருந்து ரத்தம் வராமல் என்ன செய்யும்?” 

வாய்விட்டு சிரித்தவன், “இதற்காக தான் உன்னை ஹாசினினு கூப்பிட்டேன்” என்றான். 

“மாமா சந்தோஷ் சுப்பிரமணியன் பிரகாஷ்ராஜ் போல் இருக்கலாம் ஆனால் நான் ஹாசினி இல்லை” 

“ஏன் இந்த பெயரை சொன்னால் இவ்வளவு டென்ஷன்?” 

“என் கிளாஸில் அந்த பெயரில் ஒரு திமிர் பிடிச்சவ இருக்கிறா.. அவளை கண்டாலே எனக்கு ஆகாது” 

“ஓ!” 

“கதை கேட்டு முடிச்சாச்சா.. போனை வைக்கிறேன்” 

“பூரி சென்னா வந்திருச்சு போல” 

“அது அப்போவே வந்து, நான் சாபிட்டும் முடிச்சிட்டேன்” 

“அடி பாவி.. சாப்டுட்டே இவ்ளோ பேசுனியா!” 

“ஹ்ம்ம்.. அதான் கம்மியா பேசினேன்” 

“இது கம்மியா?” 

“ஆமா” 

“இதுவே கம்மி என்றால்!” 

அவள் சிரிப்புடன், “சந்தேகமே வேண்டாம், நான் ஜாஸ்தியா பேசினா நீ தாங்க மாட்ட” என்றாள். 

“இதையே என்னால் தாங்க முடியலையே!”     

“ஹ்ம்ம்.. வேலை ரொம்ப டைட்டாக போகுது.. மூளையை ரெப்ரெஷ் பண்ண போன் பண்ணேன்னு சொல்லும் போது இதை சொல்றேன்” 

“சரி சரி.. உன்னோட ப்ராஜெக்ட் எப்படி போயிட்டு இருக்குது?” 

“இதை தான் எங்க ஊரில் கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைனு சொல்வாங்க” 

“எங்க ஊரா!! அப்போ என் ஊர் எது?” 

“பெங்களூர்” 

“பெங்களூர் நான் பொழைக்க வந்த ஊர்” 

“ஹ்ம்ம்.. அந்த நினைப்பு இருந்தால் சரி” என்றவள் அவனது மௌனத்தை கவனிக்காதவள் போல், “என் ப்ராஜெக்ட் உன் ப்ராஜெக்ட்ஸ் விட சூப்பரா போயிட்டு இருக்குது.. நெக்ஸ்ட் வீக் முடிஞ்சிரும்..” என்றாள். 

அவன் சிறு புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்.. ஏதும் ஹெல்ப் வேணுமா?” 

“தேங்க்ஸ்.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேட்கிறேன்” என்றவள் மணியை பார்த்து, “ஐயோ! மணி பத்தாகிருச்சி, இன்னும் இந்த சஹுவை காணுமே!” என்றாள்.

“அவளை ஏன் தேடுற? படத்திற்கு போக போறீங்களா?” என்று அவனது குரல் சிறிது கடுமையாக வரவும்,

அவள், “உன்னோட சொற்பொழிவை ஆரம்பித்து விடாதே! இன்னைக்கு ஒரு நாள் கிளாஸ் கட் பண்ணுவதால் ஒன்னும் ஆகிட மாட்டா” என்றாள். 

“நீ தான் கட் பண்றனா, அவளையும் ஏன் கெடுக்கிற?” 

“ஆமா உங்க தொங்கச்சிக்கு ஒண்ணுமே தெரியாது! நாங்க தான் கெடுக்கிறோம்” 

“ப்ரித்திகா நான் சீரியஸ்-ஆ பேசிட்டு இருக்கிறேன்” 

“ச்ச்.. நானே கஷ்டப்பட்டு ஹிட்லர் கிட்ட பெர்மிஷன் வாங்கியிருக்கிறேன்.. நீ அதை கெடுத்திறாத” 

“இது ரெகுலர் கோர்ஸ் இல்லை.. அவளுக்கே வாரத்தில் ரெண்டு நாட்கள் தான் கிளாஸ்.. அதில் ஒரு நாள் கட் பண்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள், 

“ரொம்ப பீல் பண்ணாத.. அவளுக்கு இன்னைக்கு பெருசா கிளாஸ் இல்லை.. முக்கியமா ஒரு டெஸ்ட் மட்டும் தான்.. அதை எழுதிட்டு தான் படத்திற்கு வருறா.. ஸோ நீ கொஞ்சம் அடக்கி வாசி” என்றாள். 

“ச்ச்.. என்ன இருந்தாலும் இது தப்பு தான்” 

“அய்யோ நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கலையே!”

அவன் சிறு எரிச்சலுடன், “இந்த படத்தை சாயுங்காலம் பார்த்தால் ஆகாதா?” என்றான். 

“நீ வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லு, நான் இந்த படத்தை அடுத்த வாரம் பார்த்துக்கிறேன்” 

“நான் என்ன சொல்றேன்! நீ என்ன சொல்ற?” 

“எல்லாம் சரியா தான் சொல்றேன்.. சாயுங்காலம் நாங்க ரெண்டு பேரும் தனியா படத்துக்கு போயிட்டு வர முடியுமா? படம் முடிஞ்சு தனியா வர பெரியவங்க விடுவாங்களா? அதான் துணைக்கு நீ வரியான்னு கேட்டேன்” 

“..” 

“என்ன பதிலை காணும்? ஊருக்கு வருவதை பத்தி பேசினா மட்டும் அமைதியா இருந்திரு” 

“ச்ச்.. உனக்கு புரியாது” என்று அவன் சலிப்புடன் கூற,

அவள், “எங்களுக்கும் புரியும்.. நாங்க ஒன்றும் சின்ன பாப்பா இல்லை” என்றான்.

அவன் சட்டென்று வரவழைத்த உற்சாகத்துடன், “நீ பாப்பா இல்லை பீப்பானு எனக்கு தான் தெரியுமே!” என்றான்.

அவனது வரவழைத்த உற்சாகத்தை புரிந்துக் கொண்டவளாக, “போடா ஸ்கேலிட்டன்” என்றவள் ஒரு நொடி இடைவெளிக்கு பிறகு, “எனக்கு ஒரு டவுட்” என்றாள்.

“என்ன?” 

“நீ ஏன் இதை போல் சஹுவிடம் பேசுவதில்லை” 

“புரியலை” 

“என்னுடன் கலகலப்பா தானே பேசுற! ஆனா..” 

“ஏன்னா அவள் என் தங்கை, நீ என் மாமா பொண்ணு” 

“பெரிய கண்டுபிடிப்பு தான்” 

“அப்படி இல்லை ப்ரித்தி.. எங்களுக்குள் வயசு வித்யாசம் அதிகம்..” 

“எனக்கும் உனக்கும் இல்லையா? எனக்கும் உனக்கும் எட்டு வயசு வித்யாசம்.. ஆனா அவளுக்கும் உனக்கும் ஆறு வயசு தானே வித்யாசம்” 

“இது அப்படி இல்லை.. நாம சின்ன வயசில் இப்படி நெருங்கி பழகினது இல்லையே! அப்போதெல்லாம் எப்பொழுதாவது தான் பார்த்துப்போம்.. இந்த அஞ்சு வருஷமா தானே! சஹானாவின் காலேஜிற்காக மகாராஜநகர் வந்த பிறகு தானே நெருங்கி பழகுகிறோம்.. ஆனால் அவள் சின்ன வயதில் இருந்தே என்னுடன் இருக்கிறாள்.. வயது வித்யாசத்தில் அண்ணா என்ற உணர்வில் அவளை பாதுகாக்கணும் என்ற..” என்றவனின் பேச்சை மீண்டும் இடையிட்டவள், 

“ஆமா இவரு பெரிய ராணுவ வீரன்.. இவர் தங்கையை எதிரி நாட்டிடம் இருந்து பாதுகாக்கிறார்” என்றாள் நக்கலாக. 

அவன் மெல்லிய புன்னகையுடன், “நான் சொன்னால் உனக்கு புரியாது” என்றான். 

“என்னவோ போ.. அவளை பொறுத்தவரை எதுக்கு இரண்டு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்ற எண்ணத்தில் கேட்டேன்.. நல்ல வேலை சின்ன வயசில் நாம நெருங்கி பழகலை” 

“ஏன்?” 

“பின்ன என்னிடமும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசராக தானே பழகி இருப்ப” என்றதிற்கு அவன் பதில் சொல்லும் முன் அவளே உற்சாக குரலில், “ஹே! சஹு வந்துட்டா.. அவளிடம் போனை குடுக்கிறேன்.. அவளை மிரட்டாம ஒழுங்கா பேசு” என்றாள்.

“சரிங்க மேடம்” என்றவன், “எப்படி இருக்கீங்க அண்ணா?” என்ற தங்கையின் பாச குரலை கேட்டதும் மென்னகையுடன், “நல்லா இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிற?” என்றான். 

“ஹ்ம்ம்.. நல்லா இருக்கிறேன் அண்ணா.. எப்போ இங்கே வரீங்க?” 

“வேலை இங்கே டைட்டா போகுது.. அதனால் இப்போதைக்கு வர முடியாது” 

“ச்ச்.. எப்போ கேட்டாலும் இப்படியே சொல்றீங்களே அண்ணா” 

“இப்போ இருக்கிற போட்டியில் வெற்றி பெறுவது சுலபமில்லையே!” 

“நீங்க தான் கம்பெனியை ஸ்டெபிலைஸ் பண்ணிட்டீங்களே!” 

“அது போதுமா! இந்த வெற்றியை நிலைநிறுத்தி மேலும் வளர வேண்டாமா?” 

“அதுக்காக இப்படி வருஷ கணக்கில் எங்களை பார்க்காம உழைக்கணுமா?” 

“ஏதோ பல வருஷங்கள் வராதது போல் பேசுற! ரெண்டு வருஷம் தானே! சரி இந்த பேச்சை விடு” என்று அவனது குரல் கடுமையாக வரவும் சஹானா மௌனமானாள்.

ப்ரித்திகாவின் கூற்று நினைவிற்கு வர, தங்கையின் மௌனத்தை கலைக்கும் முயற்சியாக சற்று இயல்பான குரலில், “அதான் ஸ்கைப்பில் பார்க்கிறோமே!” என்றான்.

“இருந்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா?”

“ஹ்ம்ம்.. வர முயற்சிக்கிறேன்.. சரி சரி.. இதை பற்றியே கவலைப்படாம போய் படத்தை நல்ல என்ஜாய் பண்ணு” 

“உங்களுக்கு தெரியுமா! திட்டுவீங்களோனு பயந்திட்டு இருந்தேன்” 

“உன்னை திட்ட கூடாதுனு பெரிய மேடத்தின் ஆர்டர்” 

“ஓ!” 

“என்ன சுருதி இறங்கி வருது” 

“ஒன்றுமில்லை” 

“சஹானா!”

“அது வந்து ணா..” என்று அவள் மெல்லிய குரலில் தயங்க,

அவன், “தயங்காம சொல்லு” என்றான்.

“நீங்க ஏன் அண்ணா அவளுடன் சகஜமா பழகுவது போல் என்னுடன் பழகுவதில்லை?”

அவன் வாய்விட்டு சிரிக்கவும்,

அவள் மெல்லிய குரலில், “என்ன அண்ணா?” என்று கேட்டாள்.

“இப்போ தான் இதே கேள்வியை ப்ரித்தியும் கேட்டாள்” 

“நீங்க என்ன சொன்னீங்க?” 

“சஹானா என் தங்கை, நீ என் மாமா மகள்னு சொன்னேன்” 

“ஹ்ம்ம்.. பெரிய கண்டுபிடிப்பு தான்” 

அவன் மீண்டும் வாய்விட்டு சிரித்தபடி, “இதையே தான் அவளும் சொன்னாள்” என்றான். 

“ஹ்ம்ம்..” 

“மீண்டும் அதையே தான் சொல்கிறேன்.. நீ தான் என் தங்கை அவள் இல்லை.. நமக்குள் வயசு வித்யாசம் கொஞ்சம் அதிகமாக இருந்ததாலோ என்னவோ உன்னை தோழியாக பார்க்க தோணலை.. என் அழகு தங்கை மீது அதிக பாசமும் பாதுகாக்கும் உணர்வும் தான் வந்தது.. சிறு வயதிலிருந்து என்று இல்லாமல் இப்போ அஞ்சு வருஷமா மட்டும் நெருங்கி பழகிட்டு இருப்பதாலோ என்னவோ அவள் எனக்கு தோழியாக தோன்றியிருக்கலாம்” என்று கூறியவனின் மனசாட்சி, ‘அது மட்டுமா! அவள் மட்டும் தானே உன் துன்பத்தில் இருந்து உன்னை மீட்டு சிரிக்க வைத்தது’ என்று கூறியது.

“ஹ்ம்ம்.. அண்ணா இதை நான் பொறாமையில் கேட்கலை”

அவன் புன்னகையுடன், “புரியுது.. உன்னால் அவள் மேலோ, அவளால் உன் மீதோ பொறாமை பட முடியாதுனு எனக்கு தெரியும்” என்றான். 

“ஹ்ம்ம்.. தேங்க்ஸ் அண்ணா” என்று அவள் கூறும் போது, ப்ரித்திகா, “உங்கள் பாச மரத்தை வளர்த்தது போதும்” என்றாள்.

“நீ மட்டும் அரை மணி நேரமா பேசலாம்.. நான் பேச கூடாதா?”

“அரை மணி நேரம் பேசனும்னா நீ சீக்கிரம் வந்திருக்கனும்.. உனக்காக நான் வெயிட் பண்ணுவேன் ஆனா தியேட்டர்காரன் வெயிட் பண்ண மாட்டான்.. உன் பாச மரத்தை வந்து வளர்த்துக்கோ.. இப்போ சீக்கிரம் கிளம்பு”

அவன், “சரி.. போயிட்டு வந்து பேசு” என்று கூற,

சஹானா செல்ல சிணுங்கலுடன், “போங்க அண்ணா.. நீங்க எப்பவும் அவள் கச்சி தான்” என்றாள்.

இல்லை.. நான் உனக்காக தான் சொன்னேன்” 

“பொய்” 

“மெய்” 

“ரைம்மிங் நல்லா தான் இருக்குது”

“நிஜமா பொய் இல்லை.. இப்போ நீ கிளம்பலைனா ப்ரித்தி திட்டவா, அதான் கிளம்ப சொன்னேன்”

“நல்ல சமாளிக்கிறீங்க.. சரி நான் கிளம்புறேன்.. பாய்”

“ஹ்ம்ம்.. பார்த்து போயிட்டு வாங்க”

“சரி” என்று கூறி அழைப்பை துண்டித்தவள் ப்ரித்திகாவை பார்த்து முறைத்தாள்.

தூசியை தட்டுவது போல் தனது தோளை தட்டியவள், “கிளம்பு கிளம்பு” என்று அவசரப் படுத்தினாள்.

யமுனா புன்னகையுடன், “பத்திரமா போயிட்டு வாங்க” என்று வழி அனுப்பினார்.

தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by GomathyArun

Story MakerContent AuthorYears Of Membership

உன்னில் சரணடைந்தேன்…. 6

கோம்ஸ் – இதயம் தேடும் தேடல்! – தேடல் 2