in

மனங்கள் இணையும் மணநாள் 30 (final)

“சோ.. இன்னைக்கோட உங்க வேலை இங்க முடியுது” என்று ஆதித்யா கேட்க “ஆமா..” என்றான்.

” அடுத்து என்ன ப்ளான்?”

“அப்பா என் கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அவர் பார்த்துட்டு இருந்த ஃபேப்ரிக் வொர்க்க க்ளோஸ் பண்ணிட்டார். அத திரும்ப நான் ஸ்டார்ட் பண்ண போறேன்”

“வாவ்.. வாழ்த்துக்கள். நல்ல படியா பண்ணுங்க”

“நன்றி. உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். உங்களுக்கும் தீட்சிக்கும் வேலையில இருக்க நேர்த்தி ரொம்ப நல்லா இருந்தது. நான் கவனிக்காத சின்ன சின்ன விசயங்கள் கூட நீங்க கவனிக்கும் போது ஆச்சரியமா இருக்கும். உண்மைய சொல்லனும்னா இப்போ நான் நிறையவே கத்துக்கிட்டேன்.”

“எனக்கு அப்பா கிட்ட இருந்து வந்தது. அவர் எல்லாம் திட்டி திட்டி சொல்லி கொடுத்தார். தீட்சிக்கும் அப்பா தான் சொல்லி கொடுத்தார். ஆனா அவள திட்டுனதே இல்ல. லைட்டா பொறாமை”

மதிமாறன் சிரித்து விட்டு “ஒரு டவுட் இருக்கு. எப்படி நீங்களும் தீட்சியும் இவ்வளவு க்ளோஸ் ஆனீங்க?” என்று கேட்டான்.

“தீட்சி சொல்லலையா? நானே சொல்லுறேன். நான் படிக்குற காலேஜ்க்கு ஒரு கான்ஃப்ரண்ஸ்க்கு வந்து இருந்தா. என் பக்கத்துல தான் உட்கார்ந்து இருந்தா. திடீர்னு பேனாவ தொலைச்சுட்டா போல தேடிட்டு இருந்தா. என் ரெண்டு பென் எடுத்து எது வேணுமோ எடுத்துக்கோனு கொடுத்தேன். அவ கேட்காமலே கொடுக்கவும் ஆச்சரியமா பார்த்தா. அப்புறம் அங்க கொஞ்சம் பேசினோம். காலேஜ் விட்டு கிளம்புறதுக்குள்ள வேற ஒன்னு நடந்துச்சு.

கான்ஃப்ரண்ஸ் போகும் போது முன்னாடி இருந்த ரெண்டு பொண்ணுங்க என்ன திரும்பி பார்த்து அவங்களுக்குள்ள பேசி சிரிச்சுட்டே இருந்தாங்க. அத நான் பெருசா எடுத்துக்கல. ஆனா தீட்சிக்கு டிஸ்டர்ப்பா இருந்துச்சு. முடியுற வர அந்த பொண்ணுங்க பேசிட்டே இருக்கவும் தீட்சி என் கிட்ட.. இப்படி பேசுறதுக்கு இங்க எதுக்கு வரனும்? சுத்தமா கவனிக்கவே முடியலபானு சொன்னா.

நான் அத போய் அந்த பொண்ணுங்க கூட வந்த மேம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணி விட்டுட்டேன். அவங்க வார்ன் பண்ணி இருப்பாங்க போல. அந்த பொண்ணுங்க தீட்சிய திட்டி கீழ தள்ளி விட்டுட்டு போயிடுச்சுங்க.

கை சிரஞ்சு ரத்தத்த துடச்சுட்டு உட்கார்ந்து இருந்தா. அத பார்த்துட்டு என்னனு கேட்டேன். விசயத்த சொன்னா. சரி மருந்து போடலாம் வானு கூட்டிட்டு போகும் போது அந்த பொண்ணுங்க மேல இருந்து தீட்சி மேல தண்ணிய கொட்டிட்டு போயிடுச்சுங்க.

மொத்தமா நனைஞ்சு குறுகிப்போய் தீட்சி நிக்கும் போது செம்ம கோபம். ஒரு மேம் கிட்ட அவள விட்டுட்டு எங்க ஹச்ஓடி கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டேன். உடனே அவங்கள காலேஜ விட்டு போக சொல்லிட்டாங்க.

ஹரிணியும் அம்மாவும் ஹரிணியோட சுடிதார எடுத்துட்டு வந்தாங்க. அத மாத்திட்டு கிளம்பும் போது கேட்டா.

நான் சொன்னத ஏன் மேம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணனு.. எல்லாரும் தங்களோட பிரச்சனைய எல்லாரு கிட்டயும் சொல்ல மாட்டாங்க. நீ என் கிட்ட சொன்ன. ஒரு ஃப்ரண்டா அத தீர்க்க முயற்சி பண்ணேன். அவங்க வார்னிங்ல அந்த பொண்ணுங்க அமைதியாகிட்டா லன்ச்க்கு அப்புறம் நடக்க போற க்ளாஸ நீ ஒழுங்கா கவனிப்பனு நினைச்சேன். பட் அவங்க உன்ன இப்படி செய்வாங்கனு எதிர் பாக்கலனு நான் சொன்னேன்.

அன்னையில இருந்து தீட்சிக்கு பிரச்சனைனா என் கிட்ட மறைக்காம சொல்லிடுவா. என் கிட்ட மட்டும் தான் சொல்லுவா. ஆபிஸ் பிரச்சனை வீட்டு பிரச்சனை எதுவா இருந்தாலும் என் கிட்ட தான் சொல்லுவா. என்ன பண்ணலாம்னு கேட்பா.

யாசி சின்ன பொண்ணு. ஹரிணியும் சின்ன பொண்ணு. அதுனால ரெண்டு பேர் கிட்டயும் எதையும் பெருசா சொல்லிக்க மாட்டோம். முடிஞ்ச அளவு நாங்களே பிரச்சனைய முடிச்சுடுவோம். அவ சொல்லாத ஒரே பிரச்சனை உங்களுக்குள்ள இருக்க பிரச்சனைய பத்தி மட்டும் தான். ஆனா அதுக்காக அவள அப்படியே விட்டுற முடியுமா?

ஒரு ஃப்ரண்டா அவ பிரச்சனைய சரி பண்ணுற கடமைய என்னைக்கும் விட மாட்டேன். “

“உங்க மேல தீட்சிக்கு ஏன் அவ்வளவு நம்பிக்கை.. அவ்வளவு உரிமைனு இப்போ தான் தெரியுது. “

“ஆமா.. ஹரிணி கூட என்ன அவ்வளவு அடிச்சது இல்ல. மேடம் வெளுத்துடுவாங்க. எனக்கு கூட பிறக்காத அக்கா தான்.”

“அவ உங்க கிட்ட இயல்பா இருக்கா”

“ஆமாங்க மிஸ்டர் ஆமா”

“நீங்க ஏன் மிஸ்டர்னு கூப்பிடுறீங்க? பல நாள் சந்தேகம்”

“வேற எப்படி கூப்பிடுறது? சார்னு கூப்பிட்டா யாரோ மாதிரி இருக்கும். மாமானு கூப்பிட்டா தீட்சி இருக்க கோபத்துக்கு சண்டை போடுவா. அதுக்காக மரியாதை இல்லாம பேரையும் சொல்ல முடியாது. சோ மிஸ்டர்.மதிமாறனாகிட்டீங்க. அவ கூட சேர்ந்துடுங்க. அப்ப தான் தைரியமா அக்கா ஹஸ்பண்ட் மாமானு கூப்பிட முடியும்”

“அப்போ.. இந்த பிரச்சனைய முடிக்க எனக்கும் ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?”

“பண்ணிட்டா போச்சு”

“அவள இன்னைக்கு நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகனும். அதுக்கு ஹெல்ப் வேணும்”

“அய்யய்யோ.. என்ன அடிச்சே கொண்ணுடுவா.. என் ஹனி நான் இல்லாம வாழ மாட்டா.. நான் மாட்டேன்பா” என்று ஆதித்யா அலற “ப்ளீஸ்.. இந்த ஒரே ஒரு ஹெல்ப். பெருசா வேணாம். எனக்கு சப்போர்ட்டா பேசி அவள சம்மதிக்க மட்டும் வைங்க. அதுக்கப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு” என்று உறுதியாக கூறினான்.

“எதோ கேட்குறீங்க செய்யுறேன். ஆனா அவ அடிச்சா நீங்க தான் வாங்கனும்” என்று கூறி விட்டான்.

மாலை கிளம்பும் போது அலுவலகமே காலியாக இருந்தது. தீட்சண்யா இறங்கி கீழே வர மதிமாறன் முன்னால் வந்தான்.

“என்ன?”

“என் கூட வா”

“எங்க?”

“வீட்டுக்கு”

“மாட்டேன்” என்றவள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டாள்.

“ஒரே ஒரு மணி நேரம். அப்புறம் நீ அங்க இருந்து போறனா நான் உன்ன தடுக்கவே மாட்டேன்”

“அந்த ஒரு மணி நேரத்த இங்கயே பேசுறது. நான் வரல”

அந்நேரம் ஆதித்யா வந்தான்.

“ஆதி கார எடு கிளம்புவோம்”

“கிளம்புவோமா? நீ எங்க வர்ர?”

“வீட்டுக்கு தான் டா”

“இவர் உன்ன கூட்டிட்டு போக போறதா சொன்னாரு”

“நான் போகல”

“ஏன் போனா கடிச்சு வச்சுடுவாரா?”

“ஆதி…”

“ப்ச்ச்.. இன்னைக்கு தான் கடைசி. மூணு மாசம் முடிஞ்சு போச்சு. இனி நீயே நினைச்சாலும் இவர பார்க்க முடியாது. போய் பேசிட்டு வருவியா அத விட்டுட்டு அடம் பிடிக்குற? நீங்க கூட்டிட்டு போங்க. எங்க வீட்டு அட்ரஸ் மேடம்க்கு நல்லா தெரியும். வர்ரதுனா இவ கிட்டயே அட்ரஸ் கேட்டு வந்து விட்ருங்க. நான் கிளம்புறேன்” என்று ஆதித்யா சென்று விட்டான்.

தீட்சண்யா மூன்று மாதம் முடிந்து போன செய்தியில் அதிர்ச்சியாகி விட்டாள். இதை அவள் மறந்தே போனாள். அந்த அதிர்ச்சியை விட்டு வெளியே வரும் முன் ஆதித்யா கிளம்பி விட்டான். தீட்சண்யா கூப்பிட கூப்பிட நிற்காமல் சென்று விட்டான்.

மதிமாறன் அவனது காரை எடுத்து விட்டு வர தீட்சண்யா நின்ற இடத்தை விட்டு அசையவே இல்லை.

“ப்ளீஸ்.. ஒரு மணி நேரம் தான். அப்புறம் நீ இருக்க பிடிக்கலனு சொன்னா ஃபோர்ஸ் பண்ண மாட்டேன் ப்ராமிஸ்”

எவ்வளவு நாள் தான் அந்த வீட்டை நினைத்து பயப்படுவது? பார்த்து விடுவோம் என்று கிளம்பி விட்டாள். வீட்டிற்கு செல்லும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவர் மனதிலும் கடந்த காலம் ஓடிக் கொண்டிருந்தது. நெடுநேர பயணம் முடிவுக்கு வந்தது. வீட்டு இரும்புக்கதவை பார்த்தவள் புருவம் சுருக்கினாள்.

அது வேறாக மாறியிருந்தது. அதை தாண்டி உள்ளே செல்லும் போது அவளால் நம்பவே முடியவில்லை. பாதை மொத்தமாக மாறியிருந்தது. வீட்டை பார்த்தவள் வேறு வீட்டுக்கு வந்து விட்டோமா என்று யோசித்தாள்.

வீடு முற்றும் முழுதுமாக மாறியிருந்தது.  மதிமாறன் அவ்வளவு அற்புதமாக மாற்றி இருந்தான். காரை விட்டு இறங்கியதும் அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க ” உள்ள வா” என்று கூறி கையை பிடித்து அழைத்துச் சென்றான்.

திடீரென பயம் வந்து விட “ம்ஹும் நான் வரல” என்றாள்.

“நம்புமா.. ஒன்னும் ஆகாது வா” என்று கூறி அழைத்துச் சென்றான். இப்போது வீடு மொத்தமாக மாறியிருந்தது. தன் கண்ணையே நம்ப முடியாமல் பார்த்தாள்.

அங்கிருந்த அத்தனை பொருட்களும் மாறியிருந்தது. மதிமாறனின் அன்னையின் படம் மட்டும் இல்லை என்றால் அவள் இது வேறு வீடு என்றே நம்பி இருப்பாள்.

“எப்படி?” என்று அவள் ஆச்சரியமாக கேட்க “இதுக்கு தான் மூணு மாசம் ஆச்சு. இந்த வீடு நம்ம பழைய நினைவுகள தூண்டவே தூண்டாது.” என்றான்.

“இதுக்கெல்லாம் நிறைய செலவு ஆகியிருக்குமே”

அவள் தோளில் கை போட்டுக் கொண்டவன் “இன்னும் நான் அவ்வளவு மோசமான நிலைக்கு போகல. இத கூட செய்ய முடியாத அளவுக்கு.. அண்ட்.. நீ இங்க வரும் போது உனக்கு பழச நியாபகபடுத்த கூடாதுனு எப்போவோ முடிவு பண்ணிட்டேன். உன் பிறந்த நாள் அன்னைக்கே ப்ளான் போட்டது. இப்போ தான் முடிஞ்சது” என்றான்.

தீட்சண்யாவிற்கு கண்கலங்கி விட்டது. அதை பார்த்தவன் கண்ணை துடைத்து விட்டு “எல்லாத்தையும் புதுசா ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கொடுப்பியா?” என்று கேட்டான்.

“எல்லாத்தையும் மன்னிச்சு என்ன ஏத்துப்பீங்களா?” என்று தீட்சண்யா கேட்க “நீ என்ன பண்ண மன்னிக்க?” என்று கேட்டான்.

“சொல்லாம போனது.. குழந்தை வேணாம்னு முடிவு பண்ணது.. நீங்க ட்ரீட்மெண்ட் எடுக்க நானும் ஒரு காரணமானது.. எல்லாத்தையும் மன்னிப்பீங்களா?”

“ட்ரீட்மெண்ட்டா?”

“மைதிலி என் ஃப்ரண்ட்”

“ஓஓ..”

உடனே மதிமாறன் புரிந்து கொண்டான்.

“ம்ம்.. எல்லாத்தையுமே எல்லாமே மன்னிச்சுட்டு என்ன ஒரு மனைவியா ஏத்துப்பீங்களா?”

“நாம திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“அய்யய்யோ”

“சீரியஸா கேட்குறேன்”

“அப்புறம் கழுத்துல இருக்க இந்த தாலிய என்ன பண்ணுறதாம்?”

“தாலி கட்டி தான் கல்யாணம் பண்ணனுமா என்ன? நாம ஃபாரின் ஸ்டைல்ல மோதிரம் போட்டு கல்யாணம் பண்ணுவோம்” என்றவன் மோதிரத்தை எடுத்து காட்டினான்.

தீட்சண்யா ஆச்சரியமாக பார்க்க “வில் யூ மேரி மீ? ஓ.. முட்டி போடனும்ல?” என்று கேட்டு அவன் குனிய அவரசமாக அவனை அணைத்துக் கொண்டாள்.

முதலில் அதிர்ந்த மதிமாறன் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான். சில நிமிடங்கள் இருவரும் அதீத சந்தோசத்தில் கண் கலங்கி நின்று இருந்தனர்.

அணைப்பை விட்டு விலகாமலே தீட்சண்யா பேசினாள்.

“ஒரு தடவ இந்த மாதிரி என் கிட்ட இதுக்கு முன்னாடி பேசி இருக்கலாம். அம்மாக்கு அப்புறம் நான் அதிகமா பாசத்த அனுபவிச்சதே இல்ல. உங்கள தப்பா நினைச்சு ஓடிப்போக நினைச்சேன். சரியா நினைச்சதும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழ நினைச்சேன். ஒரு நாள் என் கிட்ட பேசுவீங்க. மனசுல இருக்கத எல்லாம் கொட்டனும்னு ஆசை பட்டேன். நான் போனதும் என்ன தேடி வருவீங்கனு பார்த்தேன். உங்கள பார்த்ததும் நீங்க என்ன தேடுனதா சொல்லுவீங்கனு எதிர் பார்த்தேன். அன்னைக்கு பேசும் போது என் மேல உள்ள பாசத்த சொல்லுவீங்கனு நினைச்சேன். பிறந்தநாளப்போ என்ன சந்தோச படுத்துற போல எதாவது செய்வீங்கனு நினைச்சேன். இது எல்லாத்தையும் நானே நினைச்சு ஏமாந்துட்டு உங்க மேல கோபத்த வளர்த்துக்கிட்டேன். என்ன மன்னிச்சுடுங்க. வாய திறந்து கேட்டா மறுக்கப்படுமோங்குற பயம். அந்த பயத்துலயே வாழ்க்கை போயிடுச்சு”

கண்ணீர் கொட்ட அவள் எல்லாம் ஒப்பிக்க மதிமாறன் அவளது தலையை வருடிக் கொடுத்தான்.

“உன் மேல தப்பு இல்ல. சாதாரணமா மனைவிக்கு இருக்க எதிர் பார்ப்ப புரிஞ்சுக்காம என் கேள்விக்கு பதில் போதும்னு நானும் இருந்துட்டேன். என் பக்கமும் தப்பு தான்”

உடனே அவனை விட்டு விலகியவள் “நீங்க ஏன் வேற ஒரு பொண்ணு கூட வாழ்ந்தீங்க? நீங்க விர்ஜின்னு பொய்லாம் சொல்லாதீங்க” என்று கண்ணீரை துடைத்து விட்டு முறைப்போடு கேட்க மதிமாறன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

“அது தான் எனக்கு பல நாளா உறுத்திட்டே இருந்துச்சு. ப்ச்ச்..”

“அது.. எதோ ஒரு கோளாறுல”

“ஒரு விளக்கமும் வேணாம். இனி அத பத்தி பேசவே வேணாம். “

“சரி உன் விருப்பம். இப்போ மோதிரம் போடட்டுமா ? அதுக்கு மட்டும் சரினு சொல்லு”

“உங்களுக்கு போட என் கிட்ட ரிங் இல்லையே”

தீட்சண்யா சோகமாக கூற அதிலேயே அவளது சம்மதம் கிடைத்து விட்டது.

“நோ ப்ராப்ளம்.. நீயே கிஃப்ட் தான்.. ” என்றவன் அவள் விரலை பிடித்து அணிவித்தான். நெருப்பின் வடிவத்தை ஆச்சரியமாக பார்த்தாள்.

“நம்ம ஃபர்ஸ்ட் அனிவர்சரிக்கு வாங்குனேன். பட்.. இட்ஸ் ஓகே. இனிமே இந்த நாள் தான் நம்ம அனிவர்ஸரி. ஊருக்கு எப்படியோ நமக்கு நம்ம கல்யாண நாள் இன்னைக்கு தான்”

தீட்சண்யா தலையாட்டி சிரிக்க அவளது நெற்றியில் முத்தமிட்டான். அதன் பிறகு அவர்களது வாழ்வை பற்றி பேசவும் அவர்களது காதலை பற்றி பேசவும் தான் நேரம் இருந்தது.

அடுத்த நாள் காலை தீட்சண்யா குளித்து விட்டு மதிமாறன் வாங்கி வைத்திருந்த புடவையை கட்டிக் கொண்டாள். ஈர கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்க “ஹேய் என்ன சேலை?” என்ற கேள்வியோடு மதிமாறன் முழித்தான்.

“உங்களுக்கு தான் பிடிக்குமே” என்று புன்னகையுடன் கூற “நீ மார்டன் ட்ரஸ்லயே அழகா தான் இருந்த.. எப்படி தெரியுமா?” என்றவன் எதோ முணுமுணுப்பாக சொல்லி வைத்தான்.

“உஸ்..” என்று வாயில் விரல் வைத்து கூறியவளுக்கு வெட்கம் வந்து விட மதிமாறன் சிரித்து வைத்தான்.

“போதும்.. போய் குளிங்க” என்று அதட்டி விட்டு போனை கையில் எடுத்தாள். அவளது இந்த உரிமையான அதட்டலும் அவனுக்கு பிடித்து இருந்தது.

“யாருக்கு போன் பண்ணுற ஆதிக்கா?”

“ஆமா..”

“சரி பேசிட்டு இரு. வரேன்” என்று எழுந்து சென்று விட்டான்.

“ஹலோ”

“ஹலோ யாருங்க பேசுறது? ஊர்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று அழைப்பை ஏற்று ஹரிணி பேசினாள்.

“நல்லா இருக்கோமே.. அங்க எல்லாரும் நலமா?”

“இங்க ஒருத்தனுக்கு ஓவர் சந்தோசத்துல பைத்தியம் புடிச்சுருச்சு. பாட்டா பாடி சாவடிக்குறான்”

தீட்சண்யா சிரித்து விட்டு “அந்த பைத்தியத்து கிட்ட போன கொடு. இப்பவே வைத்தியம் பார்க்குறேன் ” என்றாள்.

“டேய்.. போதும் பாடி கிழிச்சது. தீட்சி பேசுறா வந்துத்தொலை” என்று ஹரிணி கத்த ஆதித்யா வேகமாக வந்தான்.

“என்ன மேடம் எப்படி இருக்கீங்க?”

“சந்தோசமா இருக்கேன்”

“ஹப்பா.. இந்த வார்த்தைய கேட்க எவ்வளவு போராட்டம்… எங்க உன் ஆளு?”

“ஏன்?”

“அவரோட இன்னைக்கு விருந்துக்கு வருவியாம். அம்மா கூப்பிட சொன்னாங்க”

“என் திங்க்ஸ் எடுக்கனும்ல வரோம்”

உடனே அவனிடமிருந்து போனை பறித்த ஹரிணி “போதும்டிமா நாத்தனாரே.. போய் அண்ணன கவனி. கரடி கிட்டலாம் அப்புறமா பேசலாம். பை” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

தீட்சண்யா சிரித்துக் கொண்டாள். அங்கு ஆதித்யா “நான் கரடியா?” என்று ஹரிணியோடு சண்டை போட ஆரம்பித்து விட்டான்.

அடுத்த அழைப்பு சகாயத்திற்கு சென்றது.

“ஹலோ யாரு?”

“ப்பா…” என்று தீட்சண்யா அழைத்ததுமே குரலை கண்டு பிடித்து விட்டார்.

“தீட்சி.. என்னமா? எப்படிமா இருக்க?” என்று அவரது குரல் தடுமாற கேட்டார்.

“ரொம்ப சந்தோசமா இருக்கேன்பா”

இதைக்கேட்டதும் அவருக்கு கண் கலங்கி விட்டது.

“மாப்பிள்ளை.. உன்ன நல்லா பார்த்துக்கிறாரா?”

“ஆமா பா. சாரி பா.. இவ்வளவு நாள் உங்க கூட நான் பேசல. பேசுனா எங்க அங்க வந்துடுவேனோனு பயம். அதான் நான் பேசாமலே இருந்துட்டேன் சாரிபா”

“அப்பாவ மன்னிச்சுடுமா.. உன் கஷ்டத்த நான் புரிஞ்சுக்கவே இல்ல”

“இல்லபா.. நான் தான் எதையுமே சொல்லாம மறச்சுட்டேன். இனி எதுவும் முன்னாடி நடந்தத பத்தி பேச வேணாம். ஒரு நாள் அவரோட தேனிக்கு வரேன்”

“இப்ப தான்மா நிம்மதியா இருக்கு. உன்ன கஷ்டப்படுத்துறார்னு மாப்பிள்ளை கிட்ட கோபமா வேற பேசிட்டேன்”

“அவர் கூட நேரா வரேன். பேசிக்கோங்க”

“சரிமா..”

“யாசி எங்க?”

“எதோ பண்ணிட்டு இருந்துச்சு.. இரு கூப்பிடுறேன்”

யாசினியை வேகமாக அழைத்து அவள் கையில் போனை கொடுத்தார்.

“அக்கா.. என்ன திடீர்னு?”

“இங்க எல்லாமே முடிஞ்சது யாசி”

“எது?” என்று குழப்பமாக கேட்டவள் “ஓ.. மாமா கூட சண்டை முடிஞ்சதா?” என்று குதூகலமாக கேட்டாள்.

“அய்யோ.. எவ்வளவு பெரிய ஹாப்பி நியூஸ். எப்போ வரீங்க இங்க?”

“ம்ம்.. அவர் ஃப்ரி ஆகிட்டா வரோம்”

“சூப்பர். வா வா.. நானே உங்களுக்கு சமையல் பண்ணி போடுறேன்”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மதிமாறன் வந்து விட்டான்.

“யாரு?” என்று கேட்க “யாசி” என்றாள்.

பேசி முடித்துவிட்டு வைத்ததும் “உன் தங்கச்சிக்கு என் மேல செம்ம கோபம். முகம் கொடுத்து கூட பேச மாட்டா” என்றான்.

“அவ எப்பவும் நான் என்ன சொல்லுறனோ செய்யுறனோ அத தான் நம்புவா. நான் உங்க மேல கோபம்னா அவளும் கோபப்படுவா. நான் சமாதானம் ஆகிட்ட உடனே அவளும் எல்லாத்தையும் மறந்துடுவா”

“நல்ல தங்கச்சி நல்ல அக்கா”

“ஆதி வீட்டுல விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க. போகலாமா?”

“எப்போ?”

“லன்ச்க்கு “

“போகலாமே” என்றவன் உடை மாற்றிக் கொண்டான்.

அதன் பிறகு இருவரும் ஒன்றாக சமைத்து ஒன்றாகவே உண்டனர். பழைய நியாபகம் வரக்கூடாது என்று அறையை கூட மதிமாறன் மாற்றியிருந்ததால் நிம்மதியாக உணர்ந்தாள் தீட்சண்யா.

மதிய உணவிற்கு ஆதித்யாவின் வீட்டிற்கு சென்றனர். மிகவும் மரியாதையாக மதிமாறனை வரவேற்று உபசரித்தனர். “அண்ணா” என்று அழைத்த ஹரிணியை மதிமாறனுக்கு மிகவும் பிடித்து விட்டது.

மாப்பிள்ளை உபசரிப்பு ‌பலமாக இருக்க மதிமாறனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வீட்டின் கலகலப்பு சூழ்நிலை எதற்காக அவர்களை தீட்சண்யாவிற்கு பிடித்து இருக்கிறது என்பதை விளக்கியது.

“அடுத்து என்னணா பண்ண போறீங்க?” என்று ஹரிணி கேட்க மதிமாறன் விசயத்தை விளக்கினான்.

“எனக்கு ஃபேப்ரிக் பத்தி தெரியும். எதும் ஹெல்ப்னா என் கிட்ட கேளுங்க”

“கேட்டுட்டா போச்சு” என்று அவன் கூற அவர்களுக்குள் ஒரு சகோதர பாசம் உருவானது.

அடுத்து வந்த நாட்கள் வேகமாக கடந்தது. மதிமாறன் தந்தையின் தொழிலை புது முறையில் ஆரம்பிக்க போராடி ஆரம்பித்தும் விட்டான். தீட்சண்யா அவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தாள். மௌனிகா சித்தார்த் எல்லோரும் மன கசப்புகளை மறந்து இயல்புக்கு திரும்பி விட்டனர். ஆதித்யாவின் தொழிலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

நான்கு மாதங்களுக்கு பிறகு ஆதித்யாவின் தொழில் அடுத்த கட்டத்தை தொட்டது. அப்போது ஹரிணிக்கும் ஆதித்யாவிற்கும் திருமணம் செய்வதற்கான பேச்சு வார்த்தை ஆரம்பித்தது. அதை பற்றி சொல்ல ஆதித்யா தீட்சண்யாவை அழைக்க அழைப்பு மதிமாறனால் எடுக்கப்பட்டது.

“ஹலோ..” என்ற மதிமாறனின் குரல் ஒரு மாதிரி இருக்க “என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன ஆச்சு?” என்று பதறினான்.

“இங்க உன் ஃப்ரண்ட் இருக்காளே”

“ஆமா.. அவளுக்கு எதுவும் பிரச்சனையா?”

“இல்ல.. ஆனா ஆமா”

“யோவ் மாம்ஸ்.. எதாவது தெளிவா சொல்லுறீங்களா இல்லையா ?”

“நான் மட்டும் இல்ல. நீயும் கூட மாமாவாக போற”

“என்னது?” என்று புரியாமல் கேட்டவன் ஹரிணி கேட்கவும் அதை அப்படியே சொன்னான்.

“ஓ மை காட்.. தீட்சி ப்ரக்ணன்ட்” என்று ஹரிணி கத்தவும் தான் ஆதித்யாவிற்கு விசயம் புரிந்தது. தீட்சண்யாவோ சந்தோசம் தாங்காமல் வயிறை தடவிக் கொண்டு இருந்தாள்.

“வாவ்.. அண்ணா.. எங்க அந்த கள்ளி?” என்று கேட்க “இங்க தான் இருக்கா”‌ என்று போனைக் கொடுத்தான்.

“என்ன பேபி?”

“பேபி பேபினு சொல்லி உனக்கு ஒரு பேபி வருது செல்லம்.. அய்யோ எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? இப்போ தான் நிம்மதியா இருக்கு. இங்க எங்க கல்யாணத்த பத்தி பேசலாம்னு முடிவு பண்ணாங்க. உன் கிட்டயும் சொல்லனும்னு கால் பண்ணா இப்படி ஒரு சர்ப்ரைஸ்.. “

“ஹே சூப்பர்.. இனி லைசன்ஸோட அவன கொடுமை பண்ண போறியா? வாழ்த்துக்கள் பேபி” என்று தீட்சண்யா சிரித்தாள்.

அடுத்த மாதமே ஆதித்யா ஹரிணியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது திருமணத்திற்கு யாசினியும் சகாயமும் வந்தனர். முதலில் ஒரு முறை கர்ப்பமாக இருக்கும் மகளை பார்க்க சகாயம் வந்து சென்று இருந்தார்.

லேசாக மேடிட்ட வயிறுடன் தீட்சண்யா காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்க யாசினி சமைத்துக் கொண்டிருந்தாள். ஆதித்யாவின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிறது. திருமணத்திற்கு வந்த யாசினி அக்காவை பார்க்க வேண்டும் என்று அங்கேயே தங்கி விட்டாள்.

“யாசி..”

“என்ன கா”

“அந்த ராமசந்திரன நேத்து பார்த்தேன்”

“எங்க?”

“இவர் ஆபிஸ்ல”

“அப்படியா?”

“அப்பாவும் நடந்தத எல்லாம் சொன்னார்”

“சரி”

“அவர ஏன் வேணாம்னு சொன்ன?”

“அவர் மேல காதல்லா வரல கா”

“ஏனாம்?”

“அன்னைக்கு என்ன காப்பாத்துனார். அதுக்கு அவர் மேல அளவு கடந்த மரியாதை இருக்கு. அவர் இல்லனா அன்னைக்கு என்ன நடந்து இருக்கும்னு நினைக்கவே பயமா இருக்கு. ஆனா அது காதலா எப்படி மாறும்? இது என்ன சினிமாவா? ஒருத்தர் காப்பாத்திட்டா லலலா லலலானு பாட்டு பாட்டிட்டே காதல் வந்துட. ரியல்ல அது எல்லாம் வராது”

“பட் காதல் சினிமால எவ்வளவு முக்கியமோ அதே அளவு வாழ்க்கையிலயும் முக்கியம்”

“என்னமோ சொல்லுற.. ஒன்னும் புரியல”

“சரி.. நான் அவர கல்யாணம் பண்ணிக்க சொன்னா பண்ணிப்பியா?”

“ஹான்!”

“அவர் பர்ஃபெக்ட் இல்ல. படத்துல வர்ர கதைகள்ல வர்ர மாதிரி பத்து பேர போட்டு அடிக்குறவரும் இல்ல. ஆனா உன்ன உண்மையா நேசிக்கிறார். உன்னோட மறுப்பு அவர ரொம்பவே பாதிச்சுடுச்சு. உலகத்துல யாரும் பர்ஃபெக்ட் இல்ல. ஆனா உண்மையான பாசம் வைக்குறவங்க கிடைக்கிறது கஷ்டம். கிடைச்சா விட்ர கூடாது. நல்லா யோசி”

தீட்சண்யா அதோடு முடித்துக் கொள்ள யாசினி யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

அதையே இரவு மதிமாறனிடம் சொல்ல “ம்ம்.. அவர் நல்லவரு தான். என்ன யாசினிக்கும் அவருக்கும் வயசு வித்தியாசம் அதிகம்” என்றான்.

“ம்ம்.. ஒன்பது வருசமாம். ஆனா அவர் இவள மறக்காம வாழுறாரு. இனியும் ஏன் சோதிக்கனும்?”

“ருத்ரஸ்ரீக்கு மேரேஜ் முடிஞ்சது. இப்ப தான் சரியான நேரம். யாசினி சம்மதிச்சா உடனே பண்ணி வச்சுடுவோம்”

தீட்சண்யா புன்னகையோடு தலையாட்டி விட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“சரி பாப்பாக்கு பேர் யோசிக்க‌ சொன்னேன்ல? யோசிச்சியா?”

“பாப்பா பிறக்குறதுக்கு முன்னாடி பேரெல்லாம்‌ யோசிக்க கூடாதாம். நல்லது இல்லையாம்”

“யார் சொன்னது?”

“ஊர் பக்கம் சொல்லுவாங்க. காலையில யாசி சித்தி கிட்ட பேசும் போது சொல்லி இருக்கா. அவங்க மறைமுகமா சொன்னாங்க. அத என் கிட்ட சொன்னா”

“ஓஹோ..” என்றவன் அவள் விரலுக்கு சொடக்கெடுத்துக் கொண்டிருக்க‌ நொடி முள் அவர்களது சந்தோசத்தை குறித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது.

முற்றும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

மனங்கள் இணையும் மணநாள் 29 (pre-final)

33 – நான் என்பதே நீதான(டா)டி..!