in

மனங்கள் இணையும் மணநாள் 29 (pre-final)

காலையில் தீட்சண்யா சாப்பிட்டுக் கொண்டிருக்க ஆதித்யா வந்தான்.

“குட் மார்னிங் டா”

“குட் மார்னிங். உனக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு என் கிட்ட”

“என்ன உன் ஆளு மறுபடியும் கோச்சுகிட்டாளா?”

“உனக்கு அதான் குட்‌ நியூஸா? பிச்சுடுவேன்”

“அப்போ இல்லையா? சரி என்ன விசயம்?”

“ஆபிஸ்ல எல்லாரும் வித்தியாசமா பிகேவ் பண்ணுறாங்கனு பார்த்தோம்ல.. “

“ஆமா..”

“அதுக்கு உன் ஆளு தான் காரணம்” என்றவன் நேற்று மதிமாறன் பேசியதை மொத்தமாக சொல்லி விட்டான்.

“பார்ரா”

“இவ்வளவு தானா ரியாக்ஸன்?”

“வேற என்ன பண்ணுறது?”

“ஏன் உன் ஆளு கூட ரொமான்ஸ் பண்ணுறது” என்று சொல்லிக் கொண்டே ஹரிணி வந்தாள்.

“அந்த வெங்காயத்த நாங்க பார்த்துக்கிறோம். நீங்க உங்க வேலைய பாருங்க” என்றவள் எழுந்து விட்டாள்.

அலுவலகம் சென்று அமர மதிமாறன் முதல் ஆளாக முன்னால் வந்து நின்றான். அவனை பார்த்தவள் “என்ன?” என்க “குட்‌மார்னிங் மேடம்” என்றான்.

“மார்னிங் மார்னிங். நேத்து என்னவோ ஆபிஸ்ல சொல்லி இருக்கீங்க போல?”

“அதுக்குள்ள தெரிஞ்சுடுச்சா?”

“ஆதி சொன்னான். என் மானத்த இப்பவாது காப்பாத்த நினைச்சிங்களே.. அது வரை சந்தோசம். அதுக்கு உங்களுக்கு ஒரு கிஃப்ட் இருக்கு “

“கிஃப்ட்டா? என்ன அது?” என்று வேகமாக முன்னால் வந்தான்.

“இந்த ஆபிஸ் உங்க கையில இருக்கும் போது ஓவரா லாஸ் பிரச்சனைனு வந்துட்டே இருந்துச்சே.. அதுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?”

“என் கேர்லஸ் தான்”

“அதுவும் ஒரு காரணம் தான். ஆனா முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு. ருத்ரஸ்ரீ”

“ஸ்ரீயா ?”

“ஆமா.. அவங்களுக்கு ஒரு அண்ணன் இருக்காராமே.. தெரியுமா?”

“ம்ம்..”

“அவர் தான் இதையெல்லாம் பண்ணி இருக்கார். அவரோட தங்கச்சிய நீங்க ஏமாத்திட்டீங்களாம். அதுக்கு பழி வாங்க தான் இத எல்லாம் பண்ணி இருக்கார்”

“ஏமாத்திட்டனா?”

“அப்படி தான் அவர் நினைச்சு இருக்கார்”

“ஓ..”

“சோ அவங்க கிட்ட பேசி பிரச்சனைய முடிக்க பாருங்க”

“இது எப்படி உனக்கு தெரியும்?”

“அது எதுக்கு உங்களுக்கு?”

“ஒரு க்ரியோஸிட்டி தான்”

“உங்க ஆர்வத்துக்கு தீனி போட என்னால முடியாது. விசயத்த சொல்லிட்டேன். இனி உங்க விருப்பம். கிளம்புங்க”

தீட்சண்யா வேலையை பார்க்க திரும்பிக் கொண்டாள். மதிமாறன் யோசனையுடன் அங்கிருந்து சென்று விட்டான்.

அடுத்த நாள் மாலையே ராமசந்திரனை பார்க்க வேண்டும் என்று ருத்ரஸ்ரீயிடம் கேட்க முதலில் ருத்ரா சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால் மதிமாறன் வற்புறுத்த ராமசந்திரனின் எண்ணை கொடுத்து‌விட்டாள்.

அவனை நேரில் சந்தித்தவன் நடந்ததை விளக்கமாக விசாரித்தான். ராமசந்திரன் பட்டும் படாமல் பேச “உங்க பக்க கோபம் புரியுது. ஆனா இது வரை உங்க தங்கச்சி கிட்ட நான் எந்த வாக்கும் கொடுத்தது இல்ல. அவளா காதலிச்சா.. அவளே சண்ட போட்டா.. கடைசியா அவளே ப்ரேக் அப் பண்ணிகிட்டா. இது உண்மையானு உங்க தங்கச்சி கிட்டயே கேட்டுக்கோங்க. நான் பண்ண ஒரே தப்பு உங்க தங்கச்சி கெஞ்சுறாளேனு அவ காதலுக்கு அனுமதி கொடுத்தது மட்டும் தான். அதுக்காக உங்க கோபத்த பொறுத்துகிறேன். இனிமே இப்படி பண்ணாதீங்க. அப்படி எதுவும் பண்ணனும்னா மறைஞ்சு இருந்து பண்ணாதீங்க. நேரடியா மோதுங்க. என் பதில அப்போ பார்ப்பீங்க” என்று பொறுமை மாறாமல் கூறி விட்டு கிளம்பி விட்டான்.

ராமச்சந்திரன் இதை பற்றி தங்கையிடம் விசாரித்தான்.

“ஆமா ணா. அவன் வேணாம் வேணாம்னு தான் சொன்னான். நான் தான் அடம் பிடிச்சேன். அப்பவும் கூட அக்சப்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னவன் ஐ லவ் யூ னு சொன்னதே இல்ல. அவன் என்ன காதலிக்கவே இல்லங்குற விசயம் மூணு மாசத்துக்கு அப்புறம் தான் புரிஞ்சது. அதுனால தான் ப்ரேக் அப்னு சொல்லிட்டு வந்தேன். இதுல அவன் எந்த தப்பும் பண்ணல. எல்லாம் என்னால தான் “

ருத்ரஸ்ரீயும் அமைதியாக நடந்ததை சொல்லி விட்டு எழுந்து சென்றாள். அவள் இப்போது மதிமாறனை கிட்டத்தட்ட மறந்து இருந்தாள். வேறு யாரோ ஒரு பெண்ணின் கணவனாகி விட்ட தன் காதலனை மனதில் சுமப்பது மிகவும் அசிங்கம். அதை அவள் செய்வதாக இல்லை. அதனாலே அவனை சிறிது சிறிதாக மறக்க முயற்சித்தாள்.

காதல் இல்லை என்றால் என்ன கண் முன் பரந்து கிடக்கும் வாழ்வு இருக்கிறது. அதை பார்த்து விட்டு போவோம் என்று முடிவு செய்து கொண்டாள்.

*.*.*.*.*.*.

அடுத்து நாட்கள் வேகமாக கடக்க யாசினி வேலையை விட்டு விட்டு தேனிக்கு வந்து விட்டாள். அவள் வந்து சமைக்க ஆரம்பித்ததும் சகாயம் அவளது சமையலை சாப்பிட ஆரம்பித்தார். அவ்வப்போது தீட்சண்யாவை பற்றி கேட்டுக் கொள்வார். சந்திரகலா என்று ஒருவர் இருப்பதையே அவ்விருவரும் மறந்து போயினர்.

சந்திரகலா யாசினியிடம் பேச வந்தால் அவள் முகம் கொடுத்து பேசுவது இல்லை. அவர் எதைச் செய்தாலும் தொடுவதும் இல்லை.

“ஏன் இன்னும் கோபமாவே இருக்க? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?” என்று சந்திரகலா கேட்க “நீங்க என்ன பண்ணீங்க? நீங்க ஒன்னுமே பண்ணல‌. நான் தான் சின்ன பிள்ளையில இருந்து எங்கக்காவ உங்க கிட்ட இருந்து காப்பாத்த முடியாம தோத்து போயிட்டேன். போதுமா?” என்று கேட்டு விட்டு சென்று விட்டாள்.

அதன் பிறகு சந்திரகலா எதை பேசினாலும் காதிலே வாங்காமல் இருந்து விட்டாள்.

அன்று காலை வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். கோலத்தை முடித்து விட்டு நிமிர்ந்து நன்றாக வந்திருக்கிறதா என்று அழகு பார்த்தாள்.

பிறகு குனிந்து இருந்ததால் இடுப்பை பிடித்து விட்டு திரும்ப ஒரு கார் சரியாக கோலத்திற்கு முன் வந்து நின்றது. அவள் புருவம் சுருக்கி பார்க்க ராமசந்திரன் தான் வந்தான்.

“ஹாய்” என்று அவன் கோலத்தை சுற்றிக் கொண்டு வர “இங்க எதுக்கு வந்தீங்க?” என்று கேட்டாள்.

“உனக்காக தான்”

“காலையிலயே கடுப்பேத்தாம போறீங்களா?”

“நிஜம்மா தான். நீ தான் என்ன பார்த்து பயந்து வேலைய விட்டுட்டு ஓடி வந்துட்ட. அதான் பார்த்து பேசிட்டு போகலாம்னு”

“அய்யடா.. அப்படி வேற நினைப்பு இருக்கா. சரி அப்படியே வச்சுக்கோங்க. கிளம்புங்க இங்க இருந்து”

“என்ன யாசினி வீட்டுக்கு கெஸ்ட் வந்தா வாசலோட அனுப்புற? உள்ள எல்லாம் கூப்பிட மாட்டியா?”

“அது கெஸ்ட்டுக்கு. உங்கள எல்லாம் கூப்பிடனும்னு அவசியம் இல்ல”

அந்நேரம் சகாயம் வெளியே வந்து விட்டார். அவரிடம் பேசி வீட்டுக்குள் வந்து அமர்ந்து விட்டான்.

“என்ன விசயம் தம்பி. இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க?”

“உங்க மக சொல்லாம கொள்ளாம வேலைய விட்டுட்டா.. இதுனால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா?”

“ப்பா.. நான் ஒன்னும் இவர் ஆபிஸ்ல வேலை பார்க்கல. இவரோட ஃப்ரண்ட் ஆபிஸ்ல தான் வேலை பார்த்தேன்” என்னு யாசினி கூறி விட சகாயம் யோசனையாக பார்த்தார்.

உடனே ஒரு முடிவுக்கு வந்த ராமசந்திரன் “சார்.. நான் உங்க பொண்ண விரும்புறேன். அவள கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்” என்று பட்டென போட்டு உடைத்தான்.

சகாயம் அதிர்ந்து போய் பார்க்க “இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லபா.. இவரு தான் லவ்னு பின்னாடி சுத்துனாரு. நான் இல்ல” என்றாள் அவசரமாக.

“அத சொன்னதுக்கு தான் பயந்துட்டு வேலைய விட்டுட்டு வந்துட்டா உங்க பொண்ணு”

“அட.. நானும் பார்த்துட்டே இருக்கேன். உங்களுக்கு பயந்து ஓடி வந்தேங்குறீங்க? இங்க என்ன நடந்துச்சுனு உங்களுக்கு தெரியுமா? சும்ம கண்டத கற்பனை பண்ணிக் கிட்டு பேசிட்டே போறீங்க? எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்ல அதுனால நான் வந்துட்டேன். என்னமோ உலகத்துல எல்லாரும் உங்களுக்கு பயந்து ஓடுற மாதிரி பில்டப் வேற.. ப்பா இவர் அவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லபா. பல நாளா என் பின்னாடி ஃபாளோவ் பண்ணிட்டே இருந்தாரு. கடுப்பாகி ஒரு நாள் நானே நேரா திட்டிட்டேன். இவர் கிட்ட போய் பேசிகிட்டு. ஏங்க கிளம்புங்க முதல்ல. ஆயிரத்தெட்டு வேலை இருக்கு”

யாசினி படபடவென பொரிய ராமசந்திரன் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். சகாயம் யோசிக்க “இன்னும் என்ன யோசனை? கிளம்பச்சொல்லுங்க” என்றாள்.

“இந்த பையன உனக்கு பிடிக்கலையாமா?” என்று நேராகவே கேட்டார்.

“பிடிக்கல பா” என்றாள் யோசிக்காமல்.

“அப்போ என் பொண்ணோட முடிவு தான் தம்பி என்னோடதும். அவளுக்கு பிடிக்கலனா இதுக்கு மேல பேசி பயன் இல்ல. நீங்க மனச மாத்திக்க முயற்சி பண்ணுங்க. கிளம்புங்க”

சகாயம் எழுந்து விட ராமசந்திரன் ஏமாற்றத்துடன் யாசினியை பார்த்தான். அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“உங்க பொண்ணு கிட்ட கடைசியா பேச வாய்ப்பு கொடுக்கிறீங்களா?” என்று ராமசந்திரன் கேட்க “என்னால எல்லாம் பேச முடியாது” என்றாள்.

“கடைசியா.. அதுக்கப்புறமும் அவங்க முடிவு நோவா இருந்தா நான் இங்க இருந்து போயிடுறேன்”

“ஒரு நிமிஷம் பேசிடுமா” என்று சகாயம் கூற முகத்தை சுருக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

வாசல் இரும்புக் கதவுக்கு அருகே சென்று நின்று கொண்டாள்.

“என்ன பேசனுமோ பேசிட்டு அப்படியே கிளம்பிடுங்க”

“ஏன் என்ன பிடிக்கல யாசினி?”

“ஏன்னா எனக்கு உங்க மேல காதல் கத்திரிக்கா எதுவும் வரல”

“என் காதலயாச்சும் புரிஞ்சுக்கலாம்ல?”

“இதே வார்த்தைய உங்க தங்கச்சி எங்க மாமா கிட்ட சொல்லி இருப்பா. அவரும் வேற வழியில்லாம சரினு சொல்லி இருப்பார்.‌ அப்புறம் மாமா செட் ஆகலனு உங்க தங்கச்சி பிரிஞ்சுருப்பா.‌ நீங்க உடனே மாமா ஏமாத்திட்டாருனு பழி வாங்கிருப்பீங்க. அதே மாதிரி நானும் சரினு சொல்லி பிரிஞ்சு என்ன பழி வாங்க கிளம்பிட்டா? என்னால எல்லாம் தாங்க முடியாது. நானே சாதாரண பொண்ணு. ஆள விடுங்க சாமி”

“நான் பண்ண இது தான் உனக்கு பிடிக்கலையா?”

“இது மட்டும் இல்ல. என்ன வாட்ச் பண்ண ஆள் போட்டது. ஃபாளோவ் பண்ணது எதுவுமே பிடிக்கல. அன்னைக்கு நீங்க எதேச்சையா வந்தீங்கனு நினைச்சேன். இல்ல. என்ன ஃபாளோவ் பண்ணிட்டு வந்து இருக்கீங்க. அதான் நான் நிக்கவும் கார நிறுத்தி பேசி இருக்கீங்க. இல்லனா எதோ ஒரு பொண்ணு எதோ இடத்துல தனியா நிக்குதுனா கார நிறுத்தி விசாரிப்பீங்களா என்ன? அது தான் சொன்னேன். உங்கள நல்லவர்னு நினைச்சுட்டேன். அன்னைக்கு ஆபத்துல இருந்து என்ன காப்பாத்துனதுக்கு கோடி நன்றி. ஆனா அந்த நன்றிய காதலாக்க முயற்சிக்காதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும் கிளம்புங்க”

ராமசந்திரனுக்கு இதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியவில்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு நிற்கிறாள். அவன் எதை பேசினாலும் இனி எடுபடாது. ஆனால் அவனது காதல் நிஜமல்லவா? அவளது மறுப்பில் வலிக்கத்தான் செய்தது.

கடைசி முயற்சியாக “இது எல்லாத்தையும் விட என்னோட லவ் எனக்கு முக்கியம். நீ எனக்கு தான்னு இருந்தா அத யாராலையும் மாத்த முடியாது யாசினி” என்றான்.

“ஆமா.. நீங்க என் தலையில தான் விழனும்னா யாராலையும் மாத்த முடியாது. அதே போல உங்களுக்கு நான் இல்லனாலும் அதையும் யாராலையும் மாத்த முடியாது. இப்போ பத்திரமா ஊர் போய் சேருங்க” என்று கதவை திறந்து விட்டாள்.

ராமசந்திரன் வெளியேற பூட்டி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

*.*.*.*.*.*.

வாரங்கள் மாதங்களானது. தினமும் மதிமாறனின் தொல்லை இருந்து கொண்டே தான் இருந்தது தீட்சண்யாவிற்கு. ஆனால் திட்டுவது குறைந்து முறைத்து பார்ப்பாள். அவன் சென்றதும் சிரித்துக் கொள்வாள்.

திடீரென தீட்சண்யா இரண்டு நாள் வரவில்லை. மதிமாறனுக்கு வேலை ஓடவே இல்லை. ஆதித்யாவிடம் கேட்டதற்கு “அப்பா எதோ வேலைனு அவள கூட்டிட்டு போயிருக்கார். ரெண்டு நாள்ல வந்துடுவா” என்றான்.

மதிமாறனின் நிலைமை படு மோசமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு தீட்சண்யா வர வேகமாக அவள் முன்னால் சென்று நின்றான்.

“என்ன?”

“ஏன் ரெண்டு நாள் வரல?”

“ஏன் ஆதி சொல்லி இருப்பானே”

“ஆமா.. ஆனா.. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்”

“ஓஹோ..”

“சீரியஸா சொல்லுறேன்”

“சரி அதுக்கு என்ன பண்ணனும்?”

“லீவ் போடாம வரனும்”

“முயற்சி பண்ணுறேன். இப்போ வேலைய பார்க்கட்டுமா?”

மதிமாறன் புன்னகையோடு தலையாட்டி விட்டுச் சென்று விட்டான். அடுத்து வந்த நாட்கள் சுமூகமாக கடந்தது. இன்னும் ஒரு வாரத்தில் மூன்று மாதங்களும் முடியும் நிலை. தீட்சண்யா அவனது தொல்லைகளுக்கு பழகி விட்டாள். மதிமாறன் அவளது திட்டுக்கு பழகி விட்டான்.

அன்று… மாலை எல்லோரும் வேலை முடிந்து கிளம்பி விட மதிமாறனும் கிளம்பினான். ஆதித்யா எதோ மீட்டிங் என்று மதியமே வெளியே சென்று விட்டான். தீட்சண்யாவின் அறையை தாண்டிய மதிமாறன் அவள் உள்ளே இருப்பது போல் தெரிய எட்டி பார்த்தான்.

“ஹலோ மேடம்..” என்று அழைக்க தீட்சண்யா நிமிர்ந்தாள்.

“கிளம்பலையா? டைம் ஆச்சே” என்றான்.

“ம்ம்.. கிளம்பனும்”

“என்ன அப்படி வேலை பார்த்துட்டு இருக்க?” என்று உள்ளே வந்து பார்த்தான்.

“பெருசா ஒன்னும் இல்ல.‌ உட்காருங்க” என்றதும் மதிமாறனும் அமர்ந்து கொண்டான். வேலையை முடித்து மூடி வைத்தவள் மதிமாறனை பார்த்தாள்.

கன்னத்தில் கை வைத்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதை கண்டு கொள்ளாமல் “உங்க கிட்ட பேசனுமே” என்றாள்.

மதிமாறனுக்கு ஆச்சரியம் தான். எப்போதும் அவன் தான் பேச வருவான்.‌ முதன் முறையாக அவள் கேட்டதும் நிமிர்ந்து அமர்ந்தான்.

“ம்ம்.. பேசலாமே”

“கடன அடச்சுட்டீங்களா?”

“அடச்சுட்டேன்”

“எப்படி?”

“மாமா அவர் இருந்த வீட்ட அடமானம் வைக்க சொன்னார். எனக்கும் அது சரியா பட்டுச்சு. இப்போ அத வச்சு பணத்த செட்டில் பண்ணிட்டேன்”

“குட்.. சோ அந்த வீட்ட என் பேர்ல எழுதி தர விருப்பம் இல்ல”

“நீயும் வந்து என் கூட அங்க இருப்பனா உடனே எழுதி தரேன். இல்லனா நோ தான்”

“நான் ஏன் வந்து இருக்கனும்”

“ஏன்னா.. நான் உனக்கு வாழ்க்கை பட்டு இருக்கனே”

அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“நான் தான் தப்பு பண்ணி இருக்கனே”

“நீ ஒரு தப்பும் பண்ணல”

“யாரோ ஒருத்தன போய் ப்ளே பாய்னு கமெண்ட் பண்ணேன்”

“அது நீ பார்த்தத வச்சு தான பேசுன”

“ஆபிஸ்க்கு வந்து மன்னிப்பு கேட்க சொல்லி சண்ட போட்டேன்”

“ஒரு பொண்ணோட வாழ்க்கைக்காக தான பண்ண?”

“என் பிரச்சனை என்னனு சொல்லாமலே வீட்ட விட்டு‌ ஓடிட்டேன்.”

“அத கவனிக்காம விட்டது என் தப்பு”

“திரும்ப பார்த்தும் கூட முகத்தை திருப்பிட்டு கோபமா பேசாம போனேன்”

“உன் கோபம் நியாயமானது”

“உங்கள லவ் பண்ணி உங்க கால்ல விழ மாட்டேன்னு சொன்னேன்”

“நீ பண்ணலனா நோ ப்ராப்ளம்.‌ நான் பண்ணி உன் பின்னாடி வந்துட்டு போறேன்”

“சொத்த கூட என் பேர்ல எழுதி கேட்டேன்”

“உயிரையே தரேன்ங்குறேன்”

“போதும் சாமி” என்று கும்பிடு போட்டவள் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“யாருங்க நீங்க? ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி நான் பார்த்த மதிமாறனா இது ?”

தீட்சண்யா சிரிப்போடு கேட்க “நீ இப்படி சிரிச்சு நான் பார்த்ததே இல்ல” என்றான்.

“ஆஹான்.. எப்படி இந்த மாற்றம்?”

“எல்லோரும் எனக்கு ஆப்போசிட் சைட் போய் நின்னு கை காட்டும் போது தான் எல்லாமே புரிஞ்சது. பொண்டாட்டிய பத்தி ஃப்ரண்ட் கிட்ட கூட தப்பா பேச கூடாது.  ஊரு உலகத்துக்கு முன்னாடி பொண்டாட்டிய விட்டு கொடுத்து போக கூடாது. அவ பிரச்சனை என்னனு கேட்கனும். எனக்காக எத செஞ்சாலும் அவ அன்பா செஞ்சாளா இல்லையானு உணரனும். முக்கியமா அவள மனசு விட்டு பேச வைக்கனும். எல்லாமே புரிஞ்சு கிட்டேன்”

“பரவாயில்ல. நான் போனப்புறம் அப்படியே பொங்கி எழுந்து எப்படி நீ என்ன விட்டு ஓடிப்போகலாம். எவன் கூட போன அது இதுனு சில ஆம்பளைங்க கேட்குற மாதிரி நீங்க கேட்கல. அது வரை நிம்மதி”

“ஆனா எனக்கொரு சந்தேகம்”

“என்ன?”

“எப்படி என்ன இவ்வளவு சீக்கிரம் மன்னிச்ச? நீ இருந்த கோபத்துக்கு பயங்கரமா ஹர்ட் பண்ணுவனு பயந்துட்டே இருந்தேன்”

“நான் ஆல்ரெடி பனிஸ்மெண்ட் கொடுத்தாச்சு”

“என்னது?”

“நமக்கு ஏன் குழந்தையே பிறக்கலனு எப்பவாது யோசிச்சு இருக்கீங்களா?” என்று கேட்டதும் மதிமாறனின் பார்வை கூர்மையானது. நினைத்து இருக்கிறான். ஒரு வேளை குழந்தை இருந்திருந்தால் தீட்சண்யா பிரிந்திருக்க மாட்டாள் என்று நினைத்து இருக்கிறான்.

“நான் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணி பில்ஸ் சாப்பிட்டேன்”

மதிமாறன் அதிர்ந்து போய் பார்க்க “உங்களுக்கு இதுல முழு உரிமை இருந்தாலும் அத நான் கொடுக்கல. நானே முடிவு பண்ணி ஆன்லைன்ல டேப்ளட் வாங்கி சாப்பிட்டேன். நீங்க கொஞ்சம் என்ன கவனிச்சு இருந்தாலும் அத கண்டு பிடிச்சுருக்கலாம். ஆனா நீங்க என்ன கவனிக்கவே இல்ல. சோ கடைசி வர தெரியமலே போயிடுச்சு” என்றாள்.

மதிமாறனுக்கு மனம் வலித்தது. எவ்வளவு பெரிய தண்டனை. அவர்களது குழந்தையை அவள் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவனது வாரிசை சுமக்க முடியாது என்று மறுத்து இருக்கிறாள். கண்ணை மூடிக் கொண்டவன் கைகளால் முகத்தை அழுத்தி துடைத்தான்.

“சத்தியமா எதிர்பார்க்கல” என்றவன் குரலில் வலி அதிகமாக தெரிந்தது.

“ஆனா அப்போ நான் குழந்தை பெத்து இருந்தா என்ன ஆகி இருக்கும் தெரியுமா? பிள்ள ஆரோக்கியமா பிறந்து இருக்காது. நான் இருக்க மன உளைச்சலுக்கு பிள்ளைய குறையோட பெத்து இருப்பேன். அது வாழ் நாள் முழுக்க அந்த பிள்ளைக்கு நான் செஞ்ச துரோகமா மாறியிருக்கும்.”

மதிமாறனுக்கு நெஞ்சம் வலிக்க கண் கலங்கி விட்டது.

“மீறி பிள்ளைய நான் பெத்து இருந்தா நீங்க பிள்ளைக்காகனு என்ன திட்டுறத குறைச்சு இருப்பீங்க. ஆனா நான் அனுபவிச்ச வலி? அது அப்படியே என் மனசுல தங்கி இருக்கும். அதுக்கு ஒரு நியாயம் கிடச்சு இருக்காது. நானும் ஒரு அம்மாவா என் வலிய விட பிள்ள வாழ்க்கை தான் முக்கியம்னு அங்கயே இருந்துருப்பேன். கொஞ்ச நாள்ல பைத்தியமாகி செத்தும் போயிருப்பேன்”

“ப்ளீஸ் இப்படிலாம் பேசாத” என்று சொல்லும் போது அவனது குரல் கம்மியது.

“அது தான் நடந்து இருக்கும். அப்போ நீங்க இருந்த நிலமையில எனக்கு பிள்ள வேணாம்னு சொல்லி இருந்தா வீம்புக்குனே பெத்துக்கனும்னு அடம் பிடிச்சு இருப்பீங்க. அதான் என் மன திருப்திக்காக உங்க உரிமைய பரிச்சுட்டேன். நான் தெரிஞ்சே செஞ்ச முதலும் கடைசியுமான தப்பு அது மட்டும் தான். ஆனா அதுக்காக நான் வருத்தப்படல.‌ என் நிலைமை அப்படி செய்ய வச்சுடுச்சு.”

தீட்சண்யா அமைதியாக அந்த இடம் சற்று நேரம் பேரமைதியாக இருந்தது. பிறகு அவளே தன்னை சுதாரித்துக் கொண்டு பேசினாள்.

“இத விடவா உங்களுக்கு பெரிய தண்டனை இருந்துட போகுதுனு தான் மத்த எல்லாத்தையும் சீக்கிரம் மன்னிச்சுட்டேன்”

“ரியலி.. செம்ம ஹர்ட்” என்ற மதிமாறன் வலியோடு சிரித்தான். தீட்சண்யா வேறு எங்கோ பார்த்தாள்.

மதிமாறன் பிறகு தன்னை தானே தேற்றிக் கொண்டு “என்ன மன்னிச்சுட்டல.. இப்பவாது வீட்டுக்கு வரலாம்ல?” என்று கேட்டான்.

“அதுக்கு இன்னும் என் மனசு சரினு சொல்லல. பார்க்கலாம்” என்று கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

மதிமாறன் அவள் காரில் ஏறிச் செல்வதை பார்த்துக் கொண்டே நின்றான்.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

வசீகரனே உந்தன் நெஞ்சில்..!- 6

மனங்கள் இணையும் மணநாள் 30 (final)