in

கேள்வியின் நாயகனே…?-1&2

                           கேள்வியின் நாயகனே                

                                         அத்தியாயம் 1

            “UNITED STATES OF AMERICA” உலக மக்களின் கனவு தேசம். எல்லா நாட்டு மக்களும் விரும்பும் அமெரிக்காவின், மின்னசோட்டா மாநிலத்தின் ரோசெஸ்டர்  இன்டர்நேஷனல் ஏர்போர்ட். மின்னசோட்டா மாநிலத்தின் முக்கியமான  வட மேற்கில் உள்ள வர்த்தக விமான நிலையம் தனது கம்பீரத்துடனும் அமெரிக்க மக்களின் முன்னேற்றத்தையும், வாழ்க்கை தரத்தையும் பறை சாற்றும் விதமாக பளபளப்பாக காட்சியளித்தது. எங்கும் சுத்தம், சுகாதாரம் அதை அப்படியே பாலோ பண்ணும்  மக்கள்…

மிட் நைட், அந்த நேரத்திலும் அங்கு மக்கள் வெள்ளம் ஜே.ஜே. என்று இருந்தது.  பயணம் செய்யப் போகும் பயணிகள், அவர்களை வழி அனுப்ப வந்தவர்கள், விமானத்தில் வரும்  ஆட்களை வரவேற்க வந்தவர்கள் என்று மக்கள் நடமாட்டம் நிறைந்து இருந்தது. உலகின் பல  முக்கியமான நகரங்களுக்கும் அங்கு ஏர் செர்வீஸ்  இருந்ததால், எப்போதும்  விமானம் புறப்படும் சத்தமும், லேண்ட் ஆகும் சத்தமும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த விமான நிலையத்திற்கு நியூ மாடல் 2018 ஹோண்டா ஒடிஸ்ஸி கார்  ஒன்று வந்து  பார்கிங் ஏரியாவில் நுழைந்து நின்றது. அதில் இருந்து நெடிய வாலிபன் ஒருவன் இறங்கினான். ஸ்டாக் கேண்டி பிராண்டட்  லைட் ப்ளூ சர்ட், ஹாக்கர் ஆஷ் கிரே பாண்ட், மேலே குளிருக்காக ஓவர் கோட், ரேபான் கிளாஸ் சகிதம், நவ நாகரிகத்தின் பிரதிபலிப்பாக இருந்தான்.

பார்கிங் ஏரியாவில்  இருந்து விரைந்து  விமான நிலையத்தின் படிகளில் தாவி ஏறியவன்,  பாசன்ஜர்ஸ் எக்ஸ்சிட்  என்ற நுழை வாயிலில் போய் நின்று கொண்டான்.

நியூயார்க்கில்  இருந்து வந்த விமானம் அப்போது தான் தரை இறங்கி  இருந்தது. அதில் இருந்து வெளி வந்த மக்களில் உள்ள இரு பெண்கள்  பெரிய டாக்டர் குழுவின் அங்கத்தினர்கள்.

அந்தக் குழு வெளி வந்ததும் “ஹை மாம்…” என்று குரல் கொடுத்தான் அந்த வாலிபன். அவன் குரல் கேட்டது திரும்பிய நடுத்தர வயதினள், நல்ல சிவந்த நிறத்துடனும், சாரியிலும் இருந்தார். அடர்ந்த நீல நிற மெல்லிய பட்டு சாரி, அவளுடைய நிறத்தை எடுப்பாகக் காட்டியது. தனது நீண்ட கூந்தலை பராமரிக்க முடியாமல் குட்டையாக  தோள் வரை கத்தரித்து அதை ஒரு கிளிப்புக்குள்  அடக்கி இருந்தார். நிரந்தர  புன்னகையும்  நெற்றியில் பொட்டுமாய் முதன் முறை பார்க்கும் எவருக்கும், திரும்பி  பார்க்கத் தூண்டும்  தோற்றம்….

“ஹாய்  கெளதம், ஹேய் யூ ஆர் ஹியர். ஐ அம் நாட் பிலீவ். ஐ திங் தட் யூ ஆர் அட்டன்டட்  எனி பிசினஸ் பார்ட்டி….” பிரபா மகனிடம் கூறினாள்.

அதற்குள் டீமில் இருந்த டாக்டர் வில்சன் “ஹாய் கெளதம், நைஸ் டூ மீட் யூ. ஐ அம் வெரி  ஹாப்பி டூ ஸீ யூ ஆப்டர் எ லாங் பீரியட்…!”

“ஹாய், டாக்டர் ஐ அம் ஆல்சோ ஹாப்பி…!” அவரை ஹக் செய்தவாறு உரைத்தான்.

“ஹவ் ஆர் யூ மை சைல்ட் …?” வில்சனின் கனிவான கேள்வி, அவனை புன்னகை கொள்ள செய்தது.

“பைன்  சார். ஆர் யூ  குட்…?”

“யா, யா, பிரபா  யுவர் சன் ஆல்சோ டூ ஸ்மார்ட், லைக் யூ ..”

“தாங்க்யூ ….!” பிரபா புன்னகை புரிந்தாள். “ஓ. கே பிரண்ட்ஸ் வீ வில் மீட் டுமாரோ,  இன் அவர்  ஹாஸ்பிடல். வி ஷல்  லீவ்…!” கௌதமுடன் இணைந்து நடந்தாள்.

அம்மாவின் ட்ராலியை தள்ளிக் கொண்டு, அவளையும்  அணைத்துக் கொண்டு வெளியில் வந்தான். கார் டிக்கியை  திறந்து  அம்மாவின் ஏர் பாகை உள்ளே வைத்து விட்டு, ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை கிளப்பினான். கார் வழுக்கிக் கொண்டு கிளம்பிற்று. முன் சீட்டில் அமர்ந்து வழக்கம் போல  ரோடு சைட்  கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளை கெளதமின் குரல் கலைத்தது.

“என்ன டாக்டர் மேடம், வழக்கம் போல இந்த ஊரின் அழகை ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா…?”

“ஆமாம், கெளதம் நான் இந்த ஊருக்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்கள் ஆயிற்று. ஆனால் எப்போது பார்த்தாலும் இந்த சிட்டி அழகுதான். ரோசெஸ்டர்  என்ற இந்த சிட்டி, சம்ப்ரோ என்ற ஆற்றின் அருகில் அமைந்து உள்ளது. மின்னசோட்டா மாநிலத்தின் மூன்றாவது பெரிய சிட்டி. ஆரம்பத்துல இந்த சிட்டி சாதாரண வியாபார ஸ்தலமா மட்டும்தான் இருந்தது. 1863ல இங்க வந்த வில்லியம் வ.மயோ என்கிறவர் டாக்டரா வந்தார். அந்த சமயத்துல நடந்த போரில் நிறைய பேர் காயப் பட்டாங்க, நிறைய பேர் இறந்தாங்க. அப்போ எந்த மெடிக்கல் பெசிலிட்டியும் இங்க இல்லை. அப்போ மேயோ தன்னுடைய சகோதரிகள், மற்றும் மகனுடன்  ஆரம்பித்த ஹாஸ்பிடல் தான்  ‘மேயோ ஹாஸ்பிடல்’

இன்று உலகத்திலேயே மிகவும் தரம் வாய்ந்த  ஹாஸ்பிடலா இருக்கு. இங்கு இல்லாத மெடிக்கல் எக்யூப்மென்ட்டே இல்லை எனலாம். பெரிய, பெரிய மனிதர்கள் எல்லோரும் இங்கு பேஷன்ட்டாக   வந்து ட்ரீட்மென்ட் எடுத்து குணமாகி இருக்காங்க. இன்க்ளூடிங்  ஜார்ஜ் ஹச்.வ  புஷ் அவர்கள்.

இந்த சிட்டியின் அழகை நைட்டில் இங்குள்ள சௌத் சில்வர் லேக்கில் இருந்து பார்த்தா பார்த்து கிட்டே இருக்கலாம்.

“ஹாய்  மாம் விட்டா இன்னைக்கு பூரா இந்த சிட்டி புகழ் பாடிட்டே இருப்பீங்க. சரி கான்பரன்ஸ் எப்படி இருந்தது…? யூஸ்புல் ஆக இருந்ததா…?”

“வெரி யூஸ்புல்  கெளதம்.  நாம ஒரு நோயை கண்டுபிடித்து அதுக்கு மருந்து கண்டு பிடிச்சு  குணப் படுத்துறோம்னு சந்தோசப் பட்டால் கடவுள் புதுசா வேறு ஒரு  நோயை படைக்கிறார். இந்தத் தடவை  ஹார்ட் டிஸீஸுக்கு நிறைய டிஸ்கசன்ஸ்.  ஹார்ட அட்டாக் மட்டுமில்லாமல் ஸ்டெரெஸ்னாலே  ஹார்ட் பெயிலியர் கூட அதிக அளவில் இருக்கு. அதே மாதிரி பெண்களுக்கும் அதிக அளவில ஹார்ட் அட்டாக், ஹார்ட் டிசீஸ் எல்லாம் வருது.

“எஸ் மாம், எல்லாம்  லைப் ஸ்டைல் தான் காரணம்….!”

“லைப்  ஸ்டைல்…! யார் கண்டு பிடிச்சா இந்த வார்த்தையை. இங்க உள்ள வாழ்க்கை முறை வேறு. இந்தியாவுல உள்ள வாழ்க்கை முறை வேறு  கெளதம். அதுவும் முந்தைய தலை முறை வாழ்க்கை முறை வேறு. அப்போ பெண்களுக்கு வீடு மட்டும்தான் உலகம். கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்ற கூட்டுக் குடும்பம். எல்லோரையும் கவனித்துக் கொண்டு வீட்டை நிர்வகிப்பது மட்டும்தான் பெண்களின் வேலை. பொருளாதாரத்தை பற்றிய பொறுப்பு கிடையாது.   அது ஒரு வகையில் அவர்களுக்கு ஸ்ட்ரெஸ்  இல்லாமல் இருந்தது. பிசிகல்  வொர்க்கும் ஜாஸ்தி என்பதால் நல்ல ஆரோக்கியமும் இருந்தது. அதனாலே அப்போ அவங்களுக்கு அதிக அளவுல உள்ளை பிரச்சினை என்னவென்றால் மூட்டு வலி , தள்ளாமை மட்டும் தான். அதுவும் கூட வயது அதிகம் ஆனதால் உள்ள  பிரச்சினை மட்டும் தான்.

ஆனால், இப்போ அங்கேயும், மற்ற நாடுகளைப் பார்த்து பெண் சுதந்திரம், கல்வி என்று கூறி, கூட்டுக் குடித்தனம், பெரியவர்கள் ஆலோசனை இல்லாத கணவன் மனைவி மட்டுமே தனித்து வாழுகிற அமைப்பு வந்துடுச்சு. அப்போ அவங்களே, வீட்டு வேலை, ஆபிஸ், மற்றும் குழந்தைகள் என்று அளவுக்கு அதிகமாய் பாரம் சுமக்கிற போது  அவர்களுக்கு ஸ்ட்ரெஸ் சின்ன வயசிலேயே வந்திருது. அது முக்கிய காரணம்.  அதை விட முக்கியம் மக்களுடைய தேவைகள் அளவுக்கு அதிகமா பெருகிடுச்சு. அதான் சமாளிக்க முடியாம  இரண்டு பேர் வேலை பார்த்தாதான் ஆச்சு என்கிற நிலைமையும் ஒரு காரணம்.

“அது எப்படிம்மா. எல்லாம் தான் தேவையா  இருக்கே …!” 

“தேவை தான்  கெளதம். அதை நான் மறுக்கலை. அந்தக் காலத்துல கூட்டுக் குடித்தனத்தில் நிறைய சேவிங்ஸ் இருக்கு. உதாரணத்துக்கு  இரண்டு பேருக்கு சமைக்கிற இடத்துல  பத்து பேருக்கு சமைக்கிறோம். அப்படின்னா, ஒரு மூணு லேடீஸ் வேலை பார்ப்பாங்க. காஸ், மளிகை, கரண்ட், தண்ணீர், தங்குற வாடகை எல்லாம் மிச்சம்.  இதே தனித்தனியா இருந்தா செலவு மூணு மடங்கு. அதனாலேயே  தான் எங்க தாத்த பட்டி காலத்துல எல்லாம் அண்ணன் தம்பிகள் எல்லாரும் ஒற்றுமையா இருந்து இருக்காங்க. ஒரு குடும்பத்துல அண்ணன் தம்பில யாரவது ஒருத்தர் இல்லாம போய்ட்டா கூட அந்தப் பிள்ளைகள் மற்றவங்க பரமரிப்புல வளர்ந்துடுவாங்க.  அந்த அன்பு, பாசம் எல்லாம் இருக்கிற வரை ஆரோக்கியமும் நம்ம கிட்ட இருந்துச்சு. ஆனால் இப்ப அங்கேயும் இதே நிலைமைதான்..!”  பேசிக் கொண்டே தங்கள் வீடு வந்தனர்.

“ஏம்மா, இவ்வளவு ஆழமா உங்க இந்தியாவை நேசிக்கிற நீங்க, இங்க வந்ததுல இருந்து  ஒரு தடவை கூட ஏன் அங்க போகலை…?”

“அது என்னடா உங்க இந்தியா.? உனக்கும் அது தான் தாய்நாடு. நீயும் அங்கதான் பிறந்தே. உன்னை நான் ஆறு மாதக் குழந்தையாய் இந்த நாட்டுக்கு தூக்கிட்டு வந்தேன்…!”

“அது தாம்மா நானும் கேட்கிறேன். ஏன் அப்புறம் இந்தியா பக்கம்  திரும்பி கூட  பார்க்கலை…!”

“இது என்னடா கேள்வி. ஒரு பெரிய ஹாஸ்பிடல்ல  டாக்டர் அப்படிங்கிற பேர் கிடைச்சிருக்கு. அதான் நேரம் காலம் பார்க்காமல் ஓடிட்டு இருக்கேன். இப்போ இது போதும்.  காரை செட்ல விட்டுட்டு வா. சாந்தா மாமி கிட்ட  நான் வர்ற விசயம் சொன்னியா..?”

“சொல்ல வேண்டாம்னு தான் நினச்சேன். எங்க விட்டாங்க. ஈவ்னிங்ல இருந்து, எப்படா உங்க அம்மா வருவா..? அப்படின்னு ஒன் மினிட்டுக்கு ஒரு தடவை கேட்டு என்னை டார்ச்சர்  பண்ணிட்டாங்க…!”

“நான் இப்பதான் பெரியவாளைப் பத்தி அவ்வளவு சொல்லி வரேன். நீயே அவாளை அப்படி பேசலாமா கெளதம்….!” வருத்தமான் குரலில் கேட்டாள்.

“ஓ.. சாரி மாம். நான் சும்மா வேடிக்கைக்கு சொன்னேன். எனக்குத் தெரியாதா? பாட்டி பத்தி பேசினா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்மா. எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும்மா. நீங்க இப்போ போய் கதவு திறங்களேன். அவங்க தூங்காம உங்களுக்காக உட்கார்ந்து இருபாங்க  பாருங்க…!” அம்மாவிடம் வீட்டு சாவியைக் கொடுத்து விட்டு காரை செட்டுக்குள் செலுத்தினான்.

அவன் சொன்ன மாதிரியே  பிரபா கதவு திறந்து உள்ளே போய் ஹால் லைட்டை போட்டதும், கீழே உள்ள பெட் ரூமில் இருந்து சாந்தா மாமி எழுந்து வந்தார்.   

“வந்துட்டியா பிரபா…?” என்றவாறு வந்து நின்றார். வயது ஆன படியால் மூச்சு இறைத்தது.

“மாமி நீங்க எதுக்கு இப்போ எழுந்து வந்தீங்க…?” அதான் கெளதம் இருக்கானே. நாங்க இரண்டு பேரும்  வீடு திறந்து உள்ளே வந்து படுக்கப் போக மாட்டோமா. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க…!”

“சரி, பிரபா, பால் சூடு பண்ணி பிளாஸ்கில் வைத்து இருக்கேன். குடிச்சிட்டு படு..! என்றவர்  ‘கிருஷ்ணா, ராமா’  என்றவாறே  படுக்க உள்ளே சென்றார். அவரையே பார்த்திருந்த  பிரபா ‘இவர் மட்டும் நம் கூட இந்த ஊருக்கு வராதிருந்தால் என்னவாகி இருப்போம்’அவரது அன்பை நினைத்து, கண்கள் கலங்க நின்றார். அதற்குள் கெளதம் உள்ளே வந்து கதவை சாத்தும் சத்தம் கேட்டதும் தன்னை சுதாரித்துக் கொண்டவர், அவனுக்கும் தனக்கும் பாலை கிளாசில் ஊற்றி எடுத்து வந்தார்.

“ஏம்மா, வந்தவுடனே கிச்சனுக்கு போகணுமா..? நான் வந்து உங்களுக்கு பால் சூடு பண்ணி தர மாட்டேனா…?”

“டேய், நம்ம இரண்டு பேரையும் பாட்டி கிச்சனுக்குள்  விடுவாங்களா என்ன..! அவங்க சூடு பண்ணி பிளாஸ்கில் வைத்து இருந்தார்கள். நான் கிளாஸ்ல மட்டும் தான் ஊற்றி எடுத்து வந்தேன்.!”

“எஸ், அதான் பாட்டி, அவங்க அப்படி செய்யலேன்னா தான் ஆச்சரியம்…!  குட்  நைட் மா..”  தாவி படி ஏறிய மகனின் தோற்றம்  பிரபாவுக்கு  மகிழ்ச்சியை தந்தது.

                                       அத்தியாயம் 2

       ‘கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா 

        ப்ரவர்ததே ….!

        உத்திஷ்ட  னரஸார்தூல கர்தவ்யம்

        தைவமாஹ்னிகம் ……..!’

காலையில் ஒலித்த  பாட்டு சத்தத்தின் ஒலியில்  எழுந்த பிரபா  பெட் ரூமை விட்டு வெளியில் வந்தாள். கிச்சனில் சாந்தாமாமி ரைஸ் குக்கரை அடுப்பில் ஏற்றிக்  கொண்டு இருந்தார்.

“என்ன மாமி, என்னை எழுப்பக் கூடாதா என்ன..? காலையில் நீங்க சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன், அப்புறம் உள்ள வேலை மட்டும் நீங்க பார்த்தால் போதும்னு, எத்தனை தடவை சொல்றது..?”

“பெரிய வேலை  ஒண்ணும்  இல்லை பிரபா, இன்னைக்கு என்னமோ உடம்பு  நல்லாத்தான் இருந்தது. நீயும் நாலு நாள் அலைஞ்சுண்டு தானே வந்திருக்கே, உனக்கு அலுப்பா இருக்காதா என்ன..? அதான்  செத்த தூங்கட்டும்னு விட்டுட்டேன். ஆனால் குளிச்சதும் பழக்க தோஷம்  இந்த பாட்டை போட்டு விட்டுட்டேன். நீ எழுந்து வந்துட்டே. சரி பல் துலக்கிட்டு வா. காபி கலந்து தரேன். குடிச்சுட்டு குளிக்கப் போ…!”

“சரி, நம்ம ரெண்டு பேருக்கும் காபி கலக்குங்கோ. நீங்க இனிமேல் ஒரு வேலையும் பார்க்க வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். வீட்டை க்ளீன் பண்ண இன்னைக்கு  லாராவை  வரச்சொல்லி இருக்கேன். அவ கிட்டயே  பாத்திரம் க்ளீன் பண்ண சொல்லிடுங்கோ…!” என்று கூறிக் கொண்டே பாத்ரூமுக்குள் சென்றாள். அவள் வந்ததும் இருவரும் காபி குடித்தனர்.

“என்ன இன்னைக்கு கெளதம் மார்னிங் வாக்  போகலியா, என்ன…?”  

“நேத்து மிட் நைட் வந்தது, அப்புறம் தூங்க இரண்டு மணி ஆயிடுத்து. அதான் போய் இருக்க மாட்டான். அப்புறம் இன்னைக்கு என்ன  சமையல் பண்ண மாமி …?”

“உனக்கும் கெளதமுக்கும் என்ன வேணுமோ பண்ணு. எனக்கு எதுனாலும்  ஒரு வாய் சாப்பிடப் போறேன்.  எனக்குன்னு எதுவும் வேண்டாம்…!” மாமி சொல்லும் போது மாடிப்படியில்  கெளதம் குரல் கேட்டது.

“ஹாய் பாட்டி, ஹாய் மம்மி, குட்மார்னிங்..”

“குட்மார்னிங்  கெளதம், இன்னைக்கு உன் ப்ரோக்ராம்  என்ன..?”

“என்னோட ஆபிஸ் போகணும்.  இன்னைக்கு எதுவும் முக்கியமான மீட்டிங் கிடையாது. அதனாலே என் பிரண்ட் ஜானோட  பார்ட்டிக்கு போகலாம்னு  நினைக்கிறேன்…! காபி  ப்ளீஸ்மா…” என்றவன்  அன்றைய பேப்பரை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு போய் விட்டான்.

கெளதம்  ஒரு மெக்கானிகல் என்ஜினியர். அவனுக்கு என்னவோ டாக்டர் படிப்பு பிடிக்கவில்லை. மகனின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து ரோசெஸ்டரில் உள்ள காலேஜிலேயே மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க வைத்தாள். எம்.பி.ஏ  மட்டும் நியூயார்க்கில் உள்ள யுனிவர்சிட்டியில் சேர்ந்து படித்தான்.

படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்ல பிரியப் படாமல் தன் நண்பனுடன்  சேர்ந்து இந்தக் கம்பெனியை ஆரம்பித்தான். காருக்கு தேவையான பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனி. அதில் ஓரளவு  வெற்றியும் பெற்று விட்டான். அம்மா இருபத்தி ஐந்து வருடங்களாக ‘மேயோ  ஹாஸ்பிடலில்’ புகழ் பெற்ற டாக்டர். அதனால் பணத்துக்கு எந்தக் கஷ்டமும் இல்லை என்பதால் அவனுக்கு பெரிய தேவையும் இல்லை. ஆதலால் தன் தொழிலை ரோசெஸ்டரிலும், மின்னாபொலிஸ் நகரிலும்   நிறுவி  இருந்தான்.

பாக்டரி ரோசெஸ்டரில் மட்டும்தான். ஆனால் ஆபிஸ் மின்னாபொலிசிலும்  உண்டு. மின்னாபொலிஸில்  நிர்வகிப்பது அவனுடைய பிரண்ட் ஜான். அவனுடைய பார்ட்டிக்குத்தான் செல்லப் போவதாக  அம்மாவிடம் சொன்னது.

“என்ன பிரபா, இன்னைக்கு அவன் நைட் வர மாட்டானா..? ம்ம், இங்கு வளர்ற குழந்தைகள் சின்ன வயசிலேயே பார்ட்டி, கீர்ட்டி எல்லாம் பழகிடுதுக. இவனுக்கும் வயசு இருபத்தி ஐந்து ஆச்சு. அவன் விருப்பம் கேட்டு கல்யாணம் பண்ணலாம் இல்லியா…!” மாமி பாட்டுக்கு புலம்பிக் கொண்டே எழுந்து சென்றார்.

தன் மகனைப் பற்றி நன்கு தெரிந்தவள்  என்பதால், அம்மா  அமைதியாக இருந்தாள். பார்ட்டிக்கு செல்வான், மற்றவர் கம்பல்சனுக்காக. டிரிங்க்ஸ் கிளாஸ் கையில் எடுப்பான், ஒரு பெக்கை வைத்தே ஒட்டி விட்டு பார்ட்டியை முடித்துக் கொள்வான். இதுவும் அவனே அவளிடம் சொன்னது. எந்த விசயத்தையும் அவன் அம்மாவிடம் மறைத்தது இல்லை. அவனுக்கு தெரியும் அம்மாவின் உலகமே தான் தான் என்பது. அம்மா மனம் நோக ஒரு வார்த்தை பேசியிராத பிள்ளை அவன். அவனுக்கு நான் எப்படி திருமணம் செய்து வைக்கப் போகிறேன்..? இந்தக் கேள்வியே அவள் மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

ட்வின்ஸ்  சிட்டி என்று அழைக்கப்படும் மின்னாபொலிஸ் மற்றும் மின்னசோட்டாவின் தலைநகரான செயின்ட் பால் சிட்டியும் புகழ் வாய்ந்தவை. மின்னாபொலிசின் உள்ள மில்லேனியம் ஸ்டார் ஹோட்டலில் வைத்துதான் ஜான் அன்று அவன் பர்த்டே பார்ட்டி கொடுக்கிறான்.

காலையில் ரோசெஸ்டரில் உள்ள தன்னுடய ஆபிசுக்கு போய் விட்டு, அதன் பிறகு பிளைட் பிடித்து, ஈவ்னிங் அங்கே இருக்கும் தனது ஆபிசுக்கு வந்து சேர்ந்தான். அங்கு ஆபிஸ் செகரட்டரி எமிலி அவனுக்காக காத்து இருந்தாள். 

“சார்,  சம் பைல்ஸ் ஆர் லீவ் ஹியர் பை  ஜான் சார், பார் யுவர் சைன் சார்..”

“ஓ.கே. பைன், கிவ் டு மீ…” வாங்கி அனைத்தையும் சரி பார்த்து கையெழுத்து  இட்டவன், மற்றும் அக்கவுண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணி விட்டு தனது பெர்சனல் ரூமில் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணி விட்டு ஹோட்டலை நோக்கி கிளம்பினான்.

இவன் சென்ற போது பார்ட்டி  ஆரம்பித்து சற்று நேரம் ஆகி இருந்தது. ஜான் இவனை கட்டி பிடித்து வரவேற்று தன்னுடைய பிரண்ட், மற்றும் பிசினஸ் பார்ட்னர் என்று அறிமுகப் படுத்தினான். நிறைய பிரண்ட்ஸ், மற்றும் பிசினஸ் பீபிள்ஸ் அனைவரும் வந்து இருந்தனர். மேலை நாடுகளில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் பார்ட்டி கொடுப்பது வழக்கம். அதே போல் பார்ட்டிக்கு அனைவரும் வந்து விடுவர். இவனுடன் காலேஜில் படித்த பெண்களும் வந்து இருந்தனர். அதில் ரோசி எப்போதும் கெளதம் பின்னாலே சுற்றி, சுற்றி வருவாள். அவளும்  இந்த பார்ட்டிக்கும் வந்து இருந்தாள்.

“ஹாய் கெளதம்…” என்று புன்னகையோடு வந்தவள் கெளதமை அணைத்து உதட்டில் முத்தமிட்டாள். பொன்னிறக் கூந்தலும், நீல விழிகளும், கடைந்து எடுத்த தந்தம் போன்ற உடலும் கொண்ட ரோசி கோடீஸ்வரர் ஒருவரின் ஒற்றை வாரிசு. மிகச் சிறந்த அழகி. அவளை மணம் புரிய அவர்கள் நாட்டு வாலிபர்கள் அனைவரும் போட்டி போட்டனர். ஆனால் அவள் கெளதம் மேல் பித்தாக இருந்தாள். இன்னொருவன் என்றால்  அங்குள்ள பழக்கப்படி லிவிங் டுகெதர் என்ற பெயரில்  அவளுடன் குடித்தனம் செட் பண்ணி இருப்பான். ஆனால் பிரபாவின் வளர்ப்பு அவனை அந்த மாதிரி இருக்க விடவில்லை. எத்தனையோ வருடங்கள் தவசி மாதிரி தனக்காக வாழும் தன் தாயைப் பார்த்தவனால், அந்த மாதிரி தப்பு எதுவும் செய்ய விரும்பவில்லை. எனவே அவளிடம் நாசூக்காக  தன் மறுப்பை தெரிவித்து  வந்தான்.

பார்ட்டியில் மேல் நாட்டு இசை ஒலிக்க ஆரம்பிக்கவே ஆணும், பெண்ணும் ஜோடி, ஜோடியாய்  ஆட ஆரம்பித்தனர்.  ரோஸியின் அழைப்புக்கு இணங்கி அவளுடன் ஆட ஆரம்பித்தான். சற்று நேரத்தில்  ரோசி ஆடலுடன் சேர்ந்து அவன் தோள் தழுவி அவனை முத்தமிட முயற்சிக்கையில்  அவன் சட்டென்று அவளிடம் இருந்து பிரிந்து வெளியில் வந்து விட்டான். அவனுக்கே அவனது செய்கை நியாயம் இல்லை என்று தோன்றவே, பின்னாலேயே வந்த ரோஸியிடம், “சாரி. ஐ அம் நாட்  இன் குட் மூட், டான்சிங் வித் யூ…” என்று மன்னிப்பு கேட்டவன், ஜானை தேடித் பிடித்து, அவனிடம் சொல்லி விட்டு ஹோட்டலை விட்டு வெளியில் வந்தான்.

‘லேட்  ஆகி விட்டதே, ப்ளைட் வேறு கிடையாது, ஆபிஸ் போய் தனது ரூமில் தங்கி விட்டு எர்லி  மார்னிங் ப்ளைட்டில் போய் விடலாமா…’  என்று யோசித்துக் கொண்டே வந்தவன் ஹோட்டலின் லாபியில் வரும் போது எதிரே வந்த ஒருவர் மீது பலமாய் மோதிக் கொண்டான்.  “ஓஹ்..   சாரி..” அவரும், இவனும் ஒரே சமயத்தில் சொல்லிக் கொண்டனர். அவர் ஒரு இந்தியர். கூட ஒரு அமெரிக்க டாக்டர்.

அவரைக் கடந்து  திரும்பி நடந்தவனை “எக்ஸ்க்யூஸ்மி.. “ என்ற  அவரின் குரல் தேக்கியது.  அவர் தேங்கி நின்றவனின் முன்னே வந்து, அவனை உற்றுப் பார்த்தார்.

“ஆர் யு  பிரம் தமிழ் நாடு…?”

“நோ. ஐ அம் லிவிங் ஹியர்..!”

“யுவர் பேஸ் இஸ் பெமிலியர் டு மி..!”

“நோ சான்ஸ், ஐ அம் லிவிங் ஹியர் ஆப்  ட்வென்டி பைவ்  இயர்ஸ்..!”

நகரப் போனவனை அவரது முணுமுணுப்பு தடுத்து நிறுத்தியது. ‘அப்படியே என் பிரண்ட் ஜாடை, மிராகிள்…’

“சார், இப்ப என்ன சொன்னீங்க …?” அவன் தமிழ் பார்த்து அவர் ஆச்சரியப் பட்டார்.

“ஏன் சார்…?”

“இல்லை, இருபத்தைந்து வருசமா இங்க இருக்கிறதா சொல்றீங்க. நல்லா தமிழ் பேசறீங்க…?”

“எங்க அம்மா  எனக்கு தமிழ் பேச மட்டும் அல்ல எழுதவும், படிக்கவும் கத்துக் கொடுத்து இருக்காங்க.  பாரதியார் பாட்டு, கண்ணதாசன், சுஜாதா  அகிலன் எல்லா எழுத்தாளர்கள் புத்தகமும்  எங்க அம்மா சொல்லி நான் படிச்சு பார்த்திருக்கிறேன்.  சார், பை த பை,  ஐ அம்  கெளதம்..!” அவரிடம் கை நீட்டினான்.

“ஐ அம்  டாக்டர் வேணு. காஸ்ட்ரோலாஜிஸ்ட். ஆமாம் உங்க அம்மா என்ன பண்ணறாங்க…?”

“எங்க அம்மாவும்  டாக்டர்தான், பெயர் பிரபா. கார்டியாலஜிஸ்ட். மேயோ ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணறாங்க..”

“பிரபா  பையானா  நீ…?” அவருடைய  குரலே அவருடைய அதிர்ச்சியின் அளவைக் காட்டியது.

அவருடைய அதிர்ச்சியைக் கவனித்தவன்  “சார், உங்களுக்கு  எங்க அம்மாவை தெரியுமா..?” என்று  கேட்டான்.

ஒரு  நிமிடம் அவனை ஆழ்ந்து பாத்தவர்,  “எனக்கு உங்க அம்மாவை பார்க்கணும்.  எங்க இருக்காங்க..? பார்க்கலாமா…?’’ கேள்விகளை அடுக்கினார்.

“ஒரு நிமிடம்’’ என்று அவனிடம் கூறி விட்டு கூட வந்த நண்பரிடம், “நீங்க ரூமுக்கு போங்க நான் இவரிடம் ஒரு முக்கியமான விஷயம்  பேசி விட்டு வருகிறேன்…”  என்று அவரை அனுப்பி விட்டு, இவனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ரெஸ்டாரன்ட்டுக்குள்  நுழைந்தார்.

“நாளை ஈவ்னிங்  எனக்கு ஐந்து மணிக்கு பிளைட். எனக்கு அதுக்குள்  உங்க அம்மாவை பார்த்தே ஆக வேண்டும். உங்க வீடு எங்கு இருக்கிறது..?  இப்போது போகலாமா…?” என்றவருக்கு என்ன   பதில் சொல்வது என்று யோசித்தான்.

முடிவில் தனது  அம்மாவை அழைத்தவன், “அம்மா…” அவன் அழைக்கும் முன்னே “என்னடா, இன்னைக்கு நைட் வீட்டுக்கு வர மாட்டே. அதை சொல்லத்தானே  கூப்பிட்டே….!” என்றாள்.

“இல்லம்மா, இது வேற ஒரு விஷயம். நான் இங்க ஹோட்டல்ல ஒரு இந்தியரை மீட் பண்ணினேன். அவருக்கு உங்களை தெரியுமாம். உங்களை பார்க்கணும்னு சொல்றார்மா. அவர் கிட்ட போன் கொடுக்கவா..”

“பெயர் என்ன சொன்னார்…?”

“டாக்டர் வேணு..” என்றவன் அலைபேசியை அவரது கையில்  கொடுத்தான்.

“ஹலோ, ஐ அம்  வேணு..” சற்று நகர்ந்து பேசியவரிடம் இவனும் ஒன்றும் கேட்கவில்லை. அவனிடம் அலைபேசியைக்  கொடுத்தார்.

“கெளதம், நாளைக்கு நீ வரும் போது அவரையும் கூட்டி வா. எர்லி மார்னிங் பிளைட்ல வாங்க. அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

“ஓகேம்மா, குட்  நைட் ” என்றவன்  அவரிடம் “சார், எர்லி மார்னிங் போர் ஓ கிளாக் பிளைட். நீங்க  நேரே ஏர்போர்ட் வந்திடுங்க.  உங்க டீடைல்ஸ் என்னோட இந்த நம்பருக்கு சென்ட் பண்ணுங்க.  நான் டிக்கட் அரேன்ஜ்  பண்ணிடறேன்..” தன்னுடைய தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்து விட்டு அவரதை வாங்கி பதிந்து கொண்டான்.

அனைத்து விபரங்களையும்   கொடுத்து விட்டு அவனிடம் விடை பெற்று  தனது அறைக்கு  சென்றவருக்கு ஆயிரம் குழப்பங்கள். அதோடு பிரபாவின் கண்டிப்பு வேறு நினைவுக்கு வந்தது.

“வேணு, நான் இங்கு பிரபா மட்டும் தான். வேறு ஒன்றும் என் மகனுக்கு தெரியாது. நீங்களும் சொல்லக் கூடாது. இது என் மேல் ஆணை. இதற்கு சம்மதித்தால் மட்டும்  என்னை பார்க்க வாருங்கள்..”  அவள் போனில் இதை தான்  சொன்னாள், அதை எண்ணிக கொண்டே கண்ணயர்ந்தவர், காலையில் அவனுக்கு முன்பே ஏர்போர்டில் இருந்தார்.

“ஹாய் சார், நீங்க எனக்கு முன்னாடியே வந்துட்டீங்க..” ஆச்சரியமாகக்  கேட்டான்.

“பிளைட் மிஸ் பண்ணிரக் கூடாதுன்னு, தூக்கமே வரலை. அதான் சீக்கிரமே வந்துட்டேன்..”

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் இருவரும் ரோசெஸ்டர்  விமான நிலையத்தில் இருந்து அவன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

                       

         

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

23- கனவே கலைவதேனோ?

மழைச்சாரலடி மனதில்!-4