in , ,

24,25,மாறனின் அ(ன்)ம்பு

அன்பு – 24

கதிர் யோசனையாய், தன் பெரியம்மாவைப் பார்த்து, “நான் எப்படிமா மருத்துவமனை வந்தேன்? என்னை யார் இங்க கொண்டு வந்து சேர்த்தது? உனக்கு ஒண்ணு மில்லை, எதுவுமாகாது! என்று யாரோ என் காதுக்குள் சொல்லிக் கொண்டே வந்தது. என் காதில் தொடர்ந்து கேட்டதுமா.”

பரமேஸ்வரி கதிரின் தலையை வருடிக் கொண்டே “நீ யாரை எதிரியாய் நினைத்து, அவன்  நல்லாவே இருக்கக் கூடாது என  அவனின் தங்கச்சியைக் கடத்தினாயோ, அவன் தான் உன்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பணமும் கட்டி,  உனக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்த பின்னாடி இங்கே இருந்து போனான்.”

அதற்குள் செவிலியர் வந்து, “இவருக்கு மருந்து போடனும், அதுவரை  நீங்க வெளியே விசிட்டர் ஹாலில் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட, பரமேஸ்வரி  எழுந்து வெளியே சென்றுவிட்டார். 

கதிர் செவிலியரிடம், “சிஸ்டர், எனக்கு அடிபட்டு இங்க தூக்கிட்டு வந்தபோது யாராவது பொண்ணுங்க வந்தாங்களா?” என்று வினவ,

“ஆமாம்! ரெண்டு பொண்ணுங்க இங்க நின்னு அழுதுட்டு இருந்தாங்க. மூன்று ஜென்ஸ் வந்தாங்க. அதில் ஒரு பொண்ணு மட்டும்  ரொம்பக் கதறிக் கதறி அழுதாங்க… அவங்க கழுத்தில் தாலி எல்லாம் இருந்துச்சு. அவங்க உங்க மனைவியா?”  என்று சொல்லவும், 

தனக்காய் அழுது இருக்கிறாள் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. 

‘உங்கள் மனைவியா? என்று கேட்டதும் ஏனோ அது நடந்தால் கொஞ்சம் நல்லா தான் இருக்கும் என்று ஆடவன் மனம் சொல்ல, ஏனோ தன் உடல் முழுவதும் அங்கங்கே பிசைந்த வலியையும் தாண்டி, புன்னகை அரும்பி வழிந்து, இதழ்களில் தன்னையும் மீறி இனி அவள் தன்னைப்பார்க்க எப்போ வருவாள்?’

செவிலியர் புன்னகையோடு “ஃபோன் பண்ணினால் வரப்போறாங்க” என்று சொன்னதும், 

அந்த நேரம் உள்ளே வந்த கமலத்திற்கு இருவரின் பேச்சும் கேட்டுவிட்டு, செவிலியரின் பதிலே, தன் மகனின் புன்முறுவல் போலவென நினைத்தவர் தொண்டையை செறும, செவிலியர் தன் கடமையை முடித்துவிட்டு கிளம்பினாள்.

கமலம் மகனின் தலையை வருடிக்கொண்டே “கண்ணா, நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா?”

“கேளுங்கம்மா!”  

கமலம் தன்மகனிடம், “நம்ம ஒரு நல்லது செய்தால், அதன் பலன் பத்துப் பேருக்கு நல்லதையும் செய்பவனுக்கு மட்டும் பாதிப்பாய் முடிகிறது என்று வை. ஒருத்தன் சந்தோஷமா இருக்கிறது முக்கியமா? இல்லை பத்துப்பேர் மகிழ்ச்சியாய் இருப்பது முக்கியமா?”

“பத்துப்பேர் நல்லாயிருப்பது தான் மா.”

தன் மகனைப் பார்த்து, “நான் ஒரு கதை சொல்றேன். கொஞ்சம் கவனமாய் கேட்டுக்கோ. அப்புறம் உன் பதிலைச் சொல்.”

“சரிமா” என்றவன் பெற்றவளின் முகத்தைப் பார்த்தான். 

“இது எங்கோ யாரோ சொல்லி, நான் காதால் கேட்டது தான்.” 

“சரி, சொல்லுங்கம்மா” என்றதும், 

“இரு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருந்திருக்கு. அதில் ஒரு தண்டவாளத்தில் ரயில் எப்போதும் வராது. மற்றொன்றில் ரயில் வந்துகொண்டே இருக்கும். ரயில்வே ஸ்டேசனில் வேலை செய்யும் ஊழியரின் குழந்தை ஒன்று ரயில் வராத தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.

அந்தப்பக்கம் ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்போது ரயில் வருகிறது. ரயில்வே ஊழியரோ தூரத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கிறார். அந்த நேரம் அருகில் ட்ராக் மாற்றும் கருவி இருந்ததால்  யாரைக் காப்பாற்றுவது என்று யோசிக்கும்போது, ஒரு குழந்தையின் உயிரா அல்லது  பத்துக் குழந்தைகளின் உயிர் முக்கியமா என்று யோசித்தவர்,  ஒரு குழந்தை மட்டும் விளையாடும் தண்டவாளத்தின் பக்கம் ட்ராக் மாற்றிவிட  பத்துப்பேர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் ரயில் வராத பாதையில் விளையாடிய ஒரு குழந்தை இறந்து விட்டது.”

எனும் கதையின் முடிவு கதிருக்கு மன பாரத்தை தரவும், “என்னம்மா சரியான பாதையில் விளையான்ட குழந்தையை கொன்னுட்டாங்களே…!”

கமலம், மகனின் விழிகளையே பார்த்து, “பல நேரத்தில், நம்ம இப்படித்தான் கண்ணா யோசிக்க வேண்டி இருக்கு.”

அவனோ, “இப்போ எதுக்குமா இந்த கதையை என்கிட்ட சொன்னீங்க?” என்று கேட்டவனைப் பார்த்து,

“நீ நேசிப்பவள் ஒரு திருமணமான பெண் டா. எல்லாம் விட்டுவிட்டு உன்னை நோக்கி வந்தால், நீ சந்தோசமாய் இருப்ப. அவளின் பிறந்த வீடும் புகுந்த வீடும் சேர்ந்து ரெண்டு குடும்பமும் அழிஞ்சிடும்.” 

ஏனோ ட்ரெயின் கதை கொஞ்சம் புரிவது போல் இருந்தது.

கமலமோ, “அவள் கணவனுடன் வாழ்ந்தால் உனக்கு மட்டும்தான் பாதிப்பு. இப்போ நான் ரயில்வே ஊழியர் மாதிரி தான் முடிவெடுக்க முடியும். விதி என்னும் ட்ரெயின் உன் பக்கமா, வெண்பாவின் குடும்பத்தினர் பக்கமா? என்று கேட்டு முடிவை உன்பக்கம் கொடுத்து விட்டேன். அப்புறம் நீ ஒண்ணும் வருடக் கணக்கில் காதலிக்கலை. என் காதல் தெய்வீகக் காதல் என்று சொல்வதற்கு. காலம் அனைத்தையும் மாற்றும். நல்லா யோசி.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இங்கே மாறனோ தனக்கு கூப்பிடுவாள் என்று நொடிக்கொரு முறை அழைபேசியை  எடுத்து எடுத்துப் பார்த்து ஏமாந்து போய், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான். பித்து பிடித்து நின்றவனைக் கண்ட அருள்,

அவனின் எண்ணம் புரிந்து மாறனின் செல்ஃபோனை எடுத்து அன்புவின் எண்ணை எடுத்து, 

தன் கைபேசியில், “ஹாய், நான் வெண்பா. கதிர் எப்படியிருக்கார்?” என்று குறுஞ்செய்தியை அனுப்பினான்.

அவளோ “ஹ்ம். அண்ணன் கண்விழித்து விட்டான். நீங்க வருத்தப்படாதீங்க.”

“ஹோ…” என்றவன், “நீங்க என் வீட்டுக்கு வர்றீங்களா?” என்று விலாசம் அனுப்ப, 

“இன்னும் பத்து நிமிடத்தில் வருகிறேன்.” என்றாள்.

அருள் மாறனிடம் “டேய்! வெண்பா என்ன பண்றாளெனப் போய் பார்த்திட்டுவா! நீ போனால் தான் சாப்பிடுவாள்.” என்றதும்,

“ஏனோ அவளைப் பார்க்கனு மென்பதால் வீட்டிற்கு வந்தான்.” 

வீட்டிற்கு வந்த தன் அண்ணனின் சோர்வான முகத்தைக் கண்டு, காஃபி போட்டு எடுத்துக் கொடுத்து விட்டு நிற்கும் போது, அந்த நேரம் வீட்டின் வாசலில் எழிலின் தங்கை நிற்பதைக் கண்டு வெண்பா வெளியே வந்தாள்.

“ஹேய் இசை!  ஏன் அங்கேயே நிற்கிற? உள்ள வா!”

வந்தவள் தயங்கித் தயங்கி, “அண்ணன் இல்லையா?” என்று கேட்கவும், 

“அவர் காலையில் வேலைக்குப் போயிட்டார்டா!”

“ஹோ…!” என்றவளின் முகம் சோர்வானது. அப்போதுதான் அவளின் தங்கையை மேலிருந்து கீழே பார்த்தாள். 

காதுகளில் பிளாஸ்டிக் கம்மல், கழுத்தில் கவரிங் செயின். 

‘இந்தக் காலத்தில் பொண்ணுங்க மாடல் மாடலாய் இருக்கும் போது, இவ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்று அவளையே பார்த்தவள், 

“எதாவது வேணுமா இசை?”

“ஆமாம் அண்ணி! கொஞ்சம் பணம் வேணும். திருவிழா வருது, அதுக்கு கொஞ்சம் புதுதுணி எல்லாம் வாங்கணும். அதான் அண்ணனைத் தேடி வந்தேன்.” என்றதும், 

‘ஏனோ தான் கேளாமலே திருவிழா வந்தால் புத்தாடைகள் வாங்கி அதற்கு மேட்ச்சிங்காய் வளையல் பொட்டு என்று வாங்கி அழகு பார்க்கும் அம்மாவின் முகம் நினைவிற்குள் வந்து போனது.’ 

பின் கேட்காமலே எல்லாம் நல்லதும் செஞ்சுட்டு, பின் மனம்விட்டுப் திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்லியும் கூட, வலுக்கட்டாயமாக செய்து வைத்த கல்யாணத்த நினைத்து மென்மேலும் கோபம் கூடவும், அந்த எண்ணத்தைத் தவிர்த்து, 

“இசை உள்ள வா!” 

“இல்லை அண்ணி. நான் போறேன்” என்றவளின் கைபிடித்து, வா என்று அழைத்து வந்தாள். 

மாறன் இசையைப்பார்த்து, “ஹேய்…! எப்போ வந்த?”

“இப்பத்தான் அண்ணா.”

வெண்பா தன் அண்ணனிடம்  “பணம் இருக்கா” என்றதும்,

மாறன் தனது பாக்கெட்டில் இருந்து எண்ணாமலே எடுத்துக் கொடுக்க, வெண்பாவும் அதை அப்படியே இசையின் கையில் கொடுத்து விட்டு, 

“நீ இங்கேயே இரு. நான் இதோ வர்றேன்.” என்று சொன்னவள், 

தனது அறைக்குச் சென்று அங்கே இருந்த  பீரோவைத் திறந்து, தனக்காக தன் அம்மா கொடுத்த நகைகளில், மூன்று வகையான கம்மல்கள் சும்மா இருக்க,  அதில் ஒரு ஜோடிக் கம்மலும், ஒரு டாலர் செயினையும் எடுத்து வந்து,  கம்மலை இசையிடம்  கொடுத்து  விட்டு ,செயினை கழுத்தில் மாட்டினாள்.

இசையின் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது. தன் அண்ணன் கொஞ்ச நாளாய் சம்பாதிக்கும் பணம் எல்லாம் குடிசை வீட்டை அழித்து, தங்கள் வீட்டை புதுப்பித்ததற்கே பணம் செலவாவதால், வயதுப் பெண்ணாக இருந்தாலும், தங்கம் வாங்கும் அளவிற்கு தன் வீட்டில் பணம் இல்லை என்பதை அறிந்த இசை, தன் அண்ணி  கொடுத்த பணத்தை எண்ணி, இதில் எனக்கு அவ்வளவு வேண்டாம் என்று சில ஆயிரங்களை மட்டும் எடுத்துவிட்டு, மீதியை மாறனிடம் கொடுத்துவிட்டு, 

“நான் கிளம்பறேன்.” என்றதும், 

தன் அண்ணனின் கையில் இசை திணித்த பணத்தை வாங்கிய வெண்பா, “அண்ணா! நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு. நான் இந்த பணத்தை இவளின் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, இவளையும் விட்டு விட்டு வருகிறேன்.” என்று சொல்லியவள், 

பின் இசையிடம் “நீ வயதுப்பெண். யாருமில்லா சாலையில் தனியாய் போக வேண்டாம். நான் வந்து உன்னை வீட்டில் விட்டு விட்டு வருகிறேன்.” என்று கூடவே நடந்தாள்.

மாறனுக்கோ வீட்டின் தொலைக் காட்சியில், மீயூசிக் சேனல்கள் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே இருந்தாலும், ஆடவன் கவனம் எதிலும் லயிக்கவில்லை. வியர்ப்பது போல் தோன்ற, தனது சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி விட்டு, அங்கு இருந்த சோபாவில் சாய்ந்து படுத்து இருந்தான்.

அந்த நேரம் அன்பு தனது ஸ்கூட்டியை கொண்டு வந்து,  வெண்பா அனுப்பிய விலாசத்தில் முன் நிறுத்தி விட்டு, இந்த வீட்டைப் பார்த்து தானே, அன்னைக்கு நம்ம அண்ணன் நின்றிருந்தான் என்ற யோசனை வர, அன்பு தனது கைபேசியில் வெண்பா தனக்கு அனுப்பிய மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணினாள். 

“நான் உங்க வீட்டுக்கு முன் தான் இருக்கிறேன்.” என்றதும் அருளும் அவள் வந்து விட்டாள் போல என்று நினைத்தவன், 

வீட்டின் நிறத்தைச் சொல்லிவிட்டு, பின், “உள்ளே வாருங்கள்!” என்று குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தான். 

வீட்டின் அருகே சென்று திறந்திருந்த கதவில் கைவைத்து தட்ட, சத்தம் கேட்ட மாறன்  எழுந்து வந்து பார்க்க, அங்கே நின்றிருந்த அன்புவை கண்டதும், ஆடு பகை, குட்டி உறவு போல் என்று நினைத்தவன்,  “உள்ளே வா!” என்றான்.

ஏனோ அவனைக் கண்டதும், இவர் இங்கே என்ன பண்றாரென கோபம் வந்து வந்தவழியே செல்வதற்காக  பெண்ணவள் திரும்ப,  அப்படியே தன் கையிரண்டையும் அவளின் இடையில் வைத்துப் பிடித்துத் தூக்கி, வீட்டின் உள்ளே நிறுத்தினான்.

“விடுங்க! நான் போகனும்.” என்று முகம் பார்க்காமல் குனிந்து சொன்னவளின் முகத்தை தனக்கு நேர் நிமிர்த்திப் பார்த்து,

“உனக்கு என்னதான்டி பிரச்சனை?”

“உங்களுக்குத்தான் என்னை பிடிக்கலையே…!  அப்புறம் எதுக்கு கேட்கிறீங்க?” என்று சொன்னதுதான் தாமதம். 

அவளின் கோபம், நேற்றைய பொழுது தன் விலகலில் என்பதை புரிந்து கொண்டவன், மெல்ல கதவைத் தாழிட்டான்.

பெண்ணவளோ தயங்கி தயங்கி, “இப்போ எதுக்கு கதவைச் சாத்துறீங்க?” என்று கேட்டு முடிப்பதற்குள்,

 மாறன் தன் முத்தத்தை உச்சந்தலையில் வைத்தான். அவனின் பார்வையில் தெரிந்த மாற்றம், இதுவரை தெரியாத, ஏதோ புதுவித உணர்வு தோன்ற, பெண்ணவளின் அடிவயிற்றுக்குள் சில்லிட்டது.

நெருங்கி நின்றவன், அடுத்த முத்தப் போரைத் தொடுக்க வருவதை உணர்ந்தவள், விரல் வைத்து, தன்  முகம் மூடினாள்.

காதல் கொண்டவன், மூடிய பெண் அவளின் விரல்களை ரசித்து, காதின் அருகே குனிந்து, “முத்தம் வேண்டாமா?” எனக் கேட்க, பெண்ணவளின் உடல் சில்லிட்டுச் சிலிர்த்தது.

அவளின் சிலிர்ப்பு உணர்ந்தவன், அவளின் முகத்தில் முகம் மூடிய ஒவ்வொரு விரல்களையும் முத்தமிட்டே விலக்க, விரல் இடுக்கில் பெண்னவளின் நாணம் வழிய, அதைக் கண்டவன் வெண்பிஞ்சு விரல் ஒவ்வொன்றிலும் தனது முத்தத்தைப் பதிக்க, கூச்சத்தில் பெண்னவளே தன் கைகளை நீக்கிவிட்டாள்.  

சட்டென்று முன்னேறியவன், கன்னம், கழுத்து, கைகள் என்று ஆடவனின் இச் இச் என்ற முத்தச் சத்தம், அறை முழுவதும் எதிரொலிக்க, பெண்ணவளின் முகமெல்லாம் எச்சிலால் நிரம்பியிருந்தது. இறுதியில் அடர் கொண்ட மீசையின் உராய்வுகள், பெண்ணவளின் உடல்சூட்டைக் கிளப்ப, மாறன் தன் காதல் அம்புகளால், தன்னவளின் இதழினை மெதுவாய் வருட, பெண்ணவளோ இமைகளை மூடிய நேரம், அவளின் இதயத்தின் துடிப்புகள் எகிறித் துடிக்கவும், பெண்ணவளின்  இடையினில் தன் பத்து விரல்களை அழுத்திப்பிடித்து, சுவற்றில் சாய்த்து உடலோடு ஒட்டி நின்று, தன் பற்களால் பெண்ணவள் இதழ் இழுத்து, இதழினை கடித்திட்ட நொடி, ஆடவனின் எச்சிலின் உமிழ் நீரின் சுவையை தேனின் சுவையாய் பெண்ணவள் உணர்ந்தாள்.

மாறனோ, தன் இதழ்களால் நொடிக்கு நூறு இதழ் ஒத்தடம் கொடுத்து, பெண்ணவளின் உமிழ் நீரை தன்வசம் ஆக்கிக் கொண்டான்.

என் அன்பை நான் சொல்ல 

உன் காலம் போதாது… 

என் காதல் இணையென்ன 

உன் நெஞ்சு காணாது; 

ஆனாலும் என் முத்தம் 

சொல்லாமல் போகாது…’

பாடலின் வரிகள் போல் முத்தம் வைத்து  எலும்புகள உடைபடும் அளவிற்கு இறுக்கி அணைத்து, தன் காதல் அனைத்தையும்  முத்தத்தால் உணர்த்திவிட முயன்றான்.

பெண்ணவள் தயக்கம் விட்டு, முரடன் அரவணைப்பில் அக மகிழ்ந்து போனாள்.  தன்னவன் மேல் கொண்ட சினத்தை எல்லாம், முத்தத்தின் வழியே உறிஞ்சிவிட்டான் போலும்.  

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இதழ்கள் கழுத்திலிருந்து, பெண்ணின் இதயத்தை நோக்கி நகர்ந்த நொடியில், யாரோ வரும் அரவம் கேட்டு அவளைவிட்டு விலகிய போது, 

அங்கே அருளின் அம்மா, “ஹேய் வெண்பா இந்த வெயிலில் எங்க போன?” என்று கேட்டபோது,

மாறன் தன் மனைவியைப் பார்த்து, “நல்லவேளை வெண்பா வந்ததால் நீ தப்பிச்சடி!” என்று சொல்லி விட்டு  கதவைத் திறந்தவன், 

வெண்பா அருளின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், சத்தமில்லாமல் தனது வாகனத்தை எடுத்துச் சென்று விட்டான்.

அன்பு வேகவேகமாய் அங்கேயே இருந்த கண்ணாடியின் முன் நின்று தன்னைப் பார்க்க, தன் முகம் எல்லாம் சிவந்து, தலைமுடி எல்லாம் கலைந்திருக்க, வேகமாய் கிச்சனில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் போட்டு கழுவி, பின் கலைந்த தலையும் சரி செய்து சோபாவில் வந்து அமர்ந்து விட்டாள்.

அன்பு – 25

அருளின் அம்மாவிடம் பேசி முடித்து உள்ளே வந்த வெண்பா, அங்கே அமர்ந்திருந்த அன்பைப் பார்த்து, “ஏய் நீ எப்ப வந்த?  உங்க அண்ணனுக்கு இப்போ எப்படி இருக்கு?”

“என்ன ஆச்சு உங்களுக்கு?  இப்பத்தானே மெசேஜ்  மூலம் எல்லாம் சொன்னேன்.” என்றதும், 

வெண்பாவோ யோசித்துக் கொண்டே, ‘எனக்கு இவ ஃபோன்  நம்பரே தெரியாதே’ என்று யோசித்தவள்,

“ஒரு நிமிஷம் பொறு!” என்று காஃபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக் கொண்டே, 

“உங்களுக்கு எங்க அண்ணனை ரொம்ப பிடிக்குமோ?”

வெண்பா அவளையே பார்த்து, “உனக்கு எங்க அண்ணனை பிடிக்கும் போது, எனக்கு உங்க அண்ணனைப் பிடிக்கக் கூடாதா?”

அன்பு அவளிடம், “உங்க அண்ணன் என் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பிருந்தே, நான் என் மனசுக்குள் லவ் பண்ணிட்டுத்தான் இருந்தேன். ஆனால், ஏதோ ஒரு சூழ்நிலையில் உங்க அண்ணன் எனக்குத் தாலி கட்டிட்டார். ஆனால், உங்க கழுத்தில் இன்னொருத்தர் கட்டிய தாலியைப் போட்டுக்கிட்டு, எப்படி என் அண்ணனை லவ் பண்ண முடியும்?  உங்களுக்காக என் அண்ணன் சாகத் துணிந்து விட்டான். காலம் தாழ்த்தாமல், ஒரு நல்ல முடிவு எடுத்தால் எல்லாருக்கும் நல்லது.”

“டக்கென்று முடிவு எடுக்கும் சூழ்நிலையில் நான் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று என்னால் எதையும் யோசிக்க முடியாது.”

அன்பு வெண்பாவைப் பார்த்து, “சரி நான் இப்பக் கிளம்புறேன், அண்ணனைத் தான் பார்க்கப் போறேன். அங்க போனதும் ‘கால்’ பண்றேன்.” என்றதும்,

வெண்பாவோ “என்னிடம் உன் நம்பர் இல்லையே…?”

“அப்போ, இது யாரோடது?” என்று தனது செல்போனில் இருக்கும் எண்களை எடுத்துக் காட்டவும், வெண்பாவிற்கு ஒன்று புரிந்தது. 

பின், “இங்க நீ வரும் போது என் அண்ணன் இங்கு இருந்தார் தானே.”

அதைக் கேட்டதும், பெண்ணவளுக்கு விட்டுப் போன வெட்கம் மீண்டும் வந்து சூழ்ந்து கொள்ள,  “அப்போ, இது அவருடைய நம்பரா?” என்று கேட்டதும்,  

“என் அண்ணன் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யாது. என் அண்ணன் ஒருத்தனை சோறு போட்டு வளர்த்து கிட்டு இருக்கான். அவன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வான்.”

“அந்த நல்லவர் யார்?” என்றதும், 

“ஹோ! உனக்கு ஹெல்ப் பண்ணியதால், அவன் ஒண்ணும் அவ்வளவு பெரிய விஐபி எல்லாம் இல்ல. பேரு அருள். அந்த தடிமாடுதான் சும்மா இருக்குறவங் களின் மனசைக் கெடுத்து விடுவான்.”

“அவங்க யார்?”

“அவனா, என் அண்ணனோட ஃப்ரண்டு” என்றதும்,

ஏனோ பெண்ணவள் மனதுக்குள் அவனுக்கு மானசீகமாய் ஒரு நன்றியை சொல்லிவிட்டு, அன்பு கிளம்பி விட்டாள்.

மிகவும் மகிழ்ச்சியாய் வந்த மாறனை கண்ட அருள், “என்ன மச்சான்? செம்ம ஹேஃபியாய் இருக்க போல, உன் பொண்டாட்டி வந்துச்சா?”

மாறன் புன்னகையோடு, ‘உனக்கெப்படி தெரியும்டா?”

“நீ தான் நேற்று ராத்திரியிலிருந்து உலகமே இருண்டது மாதிரியே இருந்த. அதான்…” என்று தான் செய்த செயலைக் கூறிய அடுத்த வினாடியே, 

மாறன் மகிழ்ச்சியாய், “மச்சான்…” எனக் கத்தி அப்படியே அருளைக் கட்டிக்கொண்டு, அவன் கன்னத்தில் முத்தம் வைக்க,  

அருள் “டேய்! நைட் நீ உன் வீட்டிலே தூங்கு. நான் ஒரு அடக்கமான கன்னிப்பையன். அப்புறம், நம்ம ஊரில் திருவிழாவிற்கு இன்னைக்கு சாட்டுறாங்க. சுத்த பத்தமாய் இருக்கனும் தெரியுமா?”

முறைத்த மாறனோ.. “கொஞ்சம் மூடுடா… அதெல்லாம் எனக்குத் தெரியும்.”

அருள், “உன்மூஞ்சி இப்படி சிவந்திருக்கே… உன்னை நம்பி உன்கூடப் படுக்கலாமா?”

“செருப்பு பிஞ்சிடும் நாயே! மரியாதையாய் வாயை மூடு டா..”

அந்த நேரம் வேலை செய்யும் எழிலைப் பார்த்த அருள்,  “டேய்,  உன்னைத்தான் நாய்னு சொல்றான்.”

மாறனோ… “மச்சான்… இந்த நாயைச் சொன்னால் அவன் உன்னைச் சொல்றான் டா.”

எழில் திரும்பி “டேய்! வேலை செய்யாமல் வம்பிழுத்திட்டு இருக்கியா? உன்னை பிஞ்ச செருப்பால அடிக்கப் போறேன்.” என்றதும், 

அருளோ “நல்லதுடா. திருவிழா கடைக்குப் போறப்போ பிஞ்சதை தூக்கிப் போடு. நல்லதாய் வாங்கிக்கோ!”

எழில் திரும்பி, “டேய் கொல்லப் போறேன். ஒழுங்காய் ஓடிடு.”

அந்த நேரம் எழிலுக்கு ஃபோன் வரவும் எடுத்து பேசியவன், தன் நண்பர்களிடம், “அம்மா சீக்கிரமாய் வீட்டுக்கு வர சொல்லுது, அத்தை மாமா எல்லாம் வந்து இருக்காங்களாம். நான் போய் பார்த்துட்டு வந்தர்றேன்.” என்றதும், 

மாறனோ “அவங்க தான் உன் மேல கோபமா இருக்காங்களேடா. அவங்க பொண்ணை நீ கட்டிக்காததால்” என்றவனிடம், 

“என்ன விஷயம்னு தெரியல மச்சான். நான் போய் விசாரிச்சுட்டு சொல்றேன்.” என்று சொன்னவன், அங்கே சென்றான்.

‘அம்மாவின் கூடப் பிறந்த அண்ணன், இன்று வந்ததுகூட அம்மாவிடம் சண்டை போடத்தான், தங்கள் வீட்டில் பெண் இருக்கும் போது, வெண்பாவை திருமணம் செய்ததால் வந்த கோபம். இதுநாள் வரை தங்களிடம் பேசாதவர்கள் வந்த காரணம் என்னவாய் இருக்கும்?’ என யோசித்துக் கொண்டே எழில் உள்ள நுழைந்த நிமிஷத்தில், தாய் மாமனான சீனிவாசன், அவன் சட்டையைப் பிடித்து கன்னத்தில் அடித்து சண்டை போட்டார்.

“மாமாவைத் தான் கட்டிக்க போறேன்னு சின்ன வயசுல இருந்து நாங்க சொல்ல, என் மகளும் ஊரெல்லாம் மாமன் தான் என் புருஷன் என்று சின்ன வயதிலிருந்து  சொல்லிக் கொண்டேயிருப்பாள். கட்டிட்டு போனவ, முதல் நாளே, மாப்பிள்ளைக் காரன் இதை யார் மூலமோ கேள்விப்பட்டு, அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய்விட்டான். என் மகளை அவன் ஏறெடுத்தும் பார்க்கலை. இப்போது வரைக்கும் என் மகளாய்த்தான் இருக்கிறாள். 

மகளின் வாழ்க்கை பாழாய்ப் போனதால், அவர்கள் கதறுவதை பார்த்த எழிலோ, கவலைப்படாதீங்க மாமா. நான் அவளைக் கட்டிக்கிறேன்.” என்றதும்.

எழிலின் அம்மா பளார் என்று கன்னத்தில் அடித்து, “பொண்டாட்டி இருக்கும் போது என்னடா பேசுற? அம்மா வெண்பா படித்தவள். அவளுக்கு நான் பொருத்த மானவன் இல்லை. அன்றைய சூழ்நிலையில் மாறனுக் காகத் தான், தாலி கட்டினேன். நானே அவளுக்கு டைவர்ஸ் கொடுக்கத்தான் போறேன்.”

சீனிவாசனோ, “மாப்பிள்ளை, நான் உன்னை கோபத்தில் அடித்ததற்காக நீ முடிவெடுக்க வேண்டாம். என் மகளின் வாழ்க்கை நல்லா இருப்பதற்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கனு மென்று நினைக்கும் ஆள் நானில்லை. என் மகளுக்காய் ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான். நீ நல்லா வாழு.” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அந்த நேரம் இசையோ, “அண்ணி நல்லவங்க அண்ணா. நம்ம குடும்பத்துக்கு ஏத்தவங்க. இங்க பாரு என்று தன் காதில் இருக்கும் கம்மலையும், கழுத்தில் இருக்கும் செயினையும் காட்டிவிட்டு இதை அண்ணிதான் கொடுத்தார்கள்.” என்று சொன்னதும், 

எழிலோ ‘நம்ம பிரியப் போறோம் என்றதும் இயல்பாய் பழகுகிறாள் போல’ என்று நினைத்தான்.

மாறன் அன்பிற்கு அழைத்து, “மேடம் என்ன பண்றீங்க? ஏனோ அவனுடன் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம், கூச்சம். அதெல்லாம் பெண்ணவளை புரட்டிப் போட, வெட்கத்தில் வார்த்தைகள் வராமல் தடுமாறியது. அதற்குள் யாரோ வரவும், ஆள் வர்றாங்கன்னு சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். பின் தன் அண்ணனை தனியாகப் பார்த்துப் பேசிவிட்டு, அந்த பொண்ணுக்காக நம்ம வீட்ல எல்லோரையும் மறந்துட்டு சாகப் போயிட்ட! இது மட்டும் சித்திக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப் படுவாங்க?”

அம்மாவுக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னவன், பின்  “அவ எப்படி இருக்கா?”

“நிஜமா நேத்து முழுவதும் ரொம்ப கதறி அழுதவங்களை சமாதானப் படுத்துவது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அவங்களும் பாவம்தான்!”

எழிலின் மனமோ “இதற்கு முடிவு தான் என்ன?” என நினைத்தான்.

இங்கே சங்கரபாண்டி தன் அக்காவிடம், “எங்கே, மாப்பிள்ளையை ஒரு ரெண்டு நாளாய் காணோம். கதிருக்கு அடிபட்டும் கூட, அவன் வந்து இன்னும் பார்க்காமல் இருக்கிறான்.” என்றதும்,

விசாலாட்சியோ “அவன் ஏதோ அகல்யா வீட்டுக் காரருடன், வேலையாய் வெளியூர் போயிருக்கான். கதிரைப் பார்க்கத் தான் வந்து கொண்டிருக்கான். மதியம் போய்விடுவான்.” என்று சொல்லியவர்,  

தனது அறைக்கு வந்து மகனுக்கு அழைத்து, “டேய்!  நீ என்ன பண்ற?  கதிரை வந்து பாரு.” என்றதும்,

அப்பவே கதிரைப் பார்க்க மருத்துவமனை வந்தான்.

ஜெயா தனது அம்மாவிடம், “அவன் எந்த வார்டில் இருக்கிறான்.” என்று கேட்கும் போது,

செல்லில் சார்ஜ் கம்மியாக இருந்தது. அவன் வார்டு சொல்வதற்குள், செல்போன் ஸ்விட்ச் ஆஃப்  என்று வரவும், அங்கே ரிசப்ஷனில் கேட்டுவிட்டு கதிரின் அறைக்கு வந்தவன், முதலில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு  உள்ளே வந்தவன், அன்பரசியைப் பார்த்து புன்னகை சிந்தியவன், பின் கதிரிடம் நலம் விசாரித்துவிட்டு, எதேச்சையாய் பார்க்க, அன்பரசி குனிந்து எதையோ தேடும் பொழுது பெண்ணவளின் கழுத்தில் தொங்கும் தாலியைப் பார்த்தவன், கொலை வெறியோடு பெண்ணவளை வெறுப்பாய் பார்த்துவிட்டு,

‘டேய் மாறா, உனக்கு இப்பவே முடிவு கட்டுறேன்.’ என தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டே கோபமாய் எழுந்தவன், கதிரிடம் சொல்லிவிட்டு, செல்போனை மறந்து கிளம்பி விட்டான்.

ஜெயபிரதாபன் கோபத்தில் நேராய் குடவுனுக்குச் சென்று, “இன்று மாலையே மாறன் கோவிலுக்கு வருவான். அவனைக் கோவிலில் வைத்து, போட்டு விடுங்க.” என்று சொல்லிவிட்டு, அவனுங்களை தப்பிக்க ஐடியாவும் கொடுத்துவிட்டு வந்தான்.

கமலம் தான், நீண்ட நேரம் சார்ஜில் இருக்கும் செல்போனைப் பார்த்து, “கதிர், இது யாரோடது டா?”

“அம்மா, அதை எடுங்க. அது மச்சானோடது.” என்றதும் கமலம் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, 

செல்போனை ஆன் செய்த அடுத்த நொடி வரிசையாய் கால் வந்துகொண்டே இருந்தது. வந்த கால்களில் தொடர்ந்து ஒரே நம்பரிலிருந்து மீண்டும் மீண்டும் வரவும், கதிர் எடுத்து காதில் வைக்க, அந்தப் பக்கம், “அண்ணா, பசங்க எல்லாம் கோவிலுக்குள் இறங்கிட்டாங்க! அந்த மாறன் எப்ப வருவான்?” என்று சொன்னதும், கதிருக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை.

கதிர் மீண்டும் டவர் இல்லாத இடத்தில் வைத்துப் பேசுவது போல, செல்ஃபோனை தூரமாய் வைத்து,  “ஹலோ ஹலோ” என்றதும்,

அவனும் “அண்ணா! நம்ம ஆட்கள் எல்லாம் கோவிலைச் சுற்றித்தான் இருக்காங்க!” என்றதுமே, கதிர் அழைப்பைத் துண்டித்தான். 

பின் காலை கட் பண்ணி, அந்த நம்பரை குறித்துக் கொண்டு, பதட்டமாய் பேசுவதைக் கண்ட கமலமும்  அன்பரசியும், “என்னாச்சு?”  என்றதும் 

“முதலில் மாறனைக் காப்பாற்றனும்மா!” 

அன்போ பதட்டமாய், “அவருக்கென்ன?”  

“மாறனுக்கு, ஏதோ ஆபத்து!” 

கமலமோ, “என்னடா சொல்ற? மாப்பிள்ளைக்கு என்ன பிரச்சனை?”

கதிரோ, “என்னது மாப்பிள்ளையா?”  என்று நினைத்த நொடி, 

அன்பு தனது செல்ஃபோன் மூலம் மாறனுக்கு அழைக்க, அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைக்க, அவன் எடுக்காததால், தன் சித்தியிடம் சொல்லிக் கொண்டே கிளம்பி விட்டாள்.

மாறனுக்கு நாள் குறித்து விட்ட மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்த ஜெயப்பிரதாபன், தனது அம்மாவை கட்டிக் கொண்டு, “இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல செய்தி வரும்.” என்று சொன்னவன் குளியலறை புகுந்தான்.

ஊர்த் தலைவரான கருப்பசாமி கோவில் வேலைகள் சிலவற்றை மாறனிடம் கொடுக்க, அது சம்பந்தமான வேலையைப் பார்ப்பதற்காய், அருளை துணைக்கு அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்து விட்டான்.

கோவிலின் இருபுறமும்  கடை போடுவதற்கு யார் யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது, அவர்களால் கோவிலுக்கு வருமானம் கிடைக்குமா? கோவிலைச் சுற்றி அலங்காரம் செய்வதற்கான ஆட்கள் எல்லாம் நியமிப்பது பற்றி முடிவெடுக்க வந்தான்.

வண்டியை சர்வீஸ் கொடுத்தவர்கள் எல்லாம் கால் பண்ணி, இப்போது வந்தால் கடையில் வண்டி எடுத்துக் கொள்ளலாமா என்பது சம்பந்தமாக கேட்பதால், தனது செல்போனை சைலண்டில் போட்டுவிட்டு, வேலையில் மூழ்கினான்.

அங்கே கடைக்குக் கட்டுவதற்காக கடை நடத்தப் போறவர்கள் பணத்தை மாறனிடம் கொடுக்க, அதை வாங்கியவன், ஒரு நோட்டில் எழுதிக்கொண்டே அருளிடம் கொடுக்க, அதை எண்ணி ஒரு பையில் போடும் போது  நிமிர்ந்த அருள், 

‘யார் இவன்?  ஊருக்கு புதுசாய் இருக்கான்?’

அவன் பார்வை முழுவதும் இங்கே இருக்கவும், ‘ஒரு வேளை பணத்தை அடிப்பதற்காய் வந்திருப்பார்கள்! இவ்வளவு பேர் இருக்கும் போது அவ்வளவு தைரியமெல்லாம் வராது’ என்று யோசித்தவன், பணத்தை வாங்கி வாங்கி பையில் போட்டுக்கொண்டு, கவனத்தை அவர்களின் மீது வைத்துக் கொண்டே இருந்தான்.

இங்கே ஜெயப்பிரதாபன் இன்னும் ஏன் கூப்பிடாமல் இருக்கிறார்கள் என்று தனது செல்போனைத் தேட, அது அறையில் இல்லை. ஒருவேளை காரில் இருக்குமோ என்று அங்கே வந்து தேட, அதைக் கண்ட விசாலாட்சி “என்னத்தைடா தேடுற?”

“அம்மா என் செல்ஃபோன்.”

“அதை எங்கடா வச்ச?”

கண்களை மூடி யோசித்தவன், செல்போனை ஹாஸ்பிட்டலில் சார்ஜில் போட்டு வந்தது ஞாபகம் வரவும், தனது அம்மாவிடம் நடந்ததைச் சொல்ல, முதல் முறையாக தனது மகனை பளார் என்று கன்னத்தில் அறைந்தார் 

கதிர், தனது அப்பாவிற்கு விஷயத்தைச் சொல்ல, அவரோ இதனால் பெரிய பிரச்சனை வரும். சுந்தரபாண்டி தனது அண்ணனுக்குச் சொல்லி விட, இருவரும் கிளம்பி நேராய் வீட்டிற்கு வந்து,

கோபமாய் “அக்கா அக்கா” எனக்கத்த, வெளியே வந்தவர், 

“என்னடா?”

சங்கரபாண்டி தன் அக்காவிடம் பேசவும், அவரோ அமைதியாய் தன் மகனைப் பார்த்தார். 

ஜெயா, தந்திரமாய் மாறன் அன்பிற்கு தாலி கட்டியது பற்றிப் பேசி, அதனால் தான் மாமா ஆட்களை ஏற்பாடு பண்ணினேன்.

சங்கரபாண்டி கோபமாய் மருமகனின் கன்னத்தில் அடித்து “கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?  எலக்சன் வரப்போகுது? பத்தாக் குறைக்கு அவன் தங்கச்சியைக் கடத்தியது கதிர். அவனுக்கு ஒரு கெடுதல் நம்ம செஞ்சோம். அதற்கு திருப்பி அவன் பதில் செஞ்சான். ஆனால், இப்போ நம்ம கதிரை காப்பாற்றியது அவன் தானே!”

“மாமா, அவன் தாலியைக் கட்டிட்டு போனாலும், உங்க பொண்ணு அந்தத் தாலியை கழுத்தில் போட்டு சுத்திக்கிட்டு  இருக்கா. அப்ப நான் என்ன சொம்பப் பயலா. நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு இன்னொருத்தன் தாலி கட்டும் போது வேடிக்கை பார்ப்பதற்கு?” 

சங்கரபாண்டி, “இங்கே பாரு ஜெயா, உடனே எல்லாத்தையும் நிறுத்து. திரு விழாவில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது.” என்று சொல்ல, 

ஜெயப் பிரதாபனோ “என்னால் முடியாது மாமா.  ஆட்கள் இந்நேரம் களத்தில் இறங்கி இருப்பார்கள்.” என்று சொன்னதும், சங்கரபாண்டி மாறனைக் காப்பாற்ற கிளம்பி விட்டார்.

தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வந்த அன்பரசி, முதலில் வெண்பா வீட்டிற்குச் சென்று, அங்கு மாறன் இருக்காரா என்று பார்க்க,  

வெண்பா, அவளின் பதட்டம் கண்டு, “என்னாச்சு? ஏன் இவ்ளோ பதட்டமாய் இருக்க?”

வெண்பா முதல் முறையாய் எழிலுக்கு அழைக்கவும், வெண்பா என்ற பெயரைப் பார்த்து, ‘நம்பரை ஏதும் மாற்றி கூப்பிட்டு இருப்பாளோ…!’ என்ற தயக்கத்துடன்,  எடுத்து காதில் வைக்க,  

வெண்பா பதட்டத்துடன், “அண்ணன், எங்கே?” 

“கோவிலில் இருக்கான்.” என்று சொன்னதும்,

“அண்ணனுக்கு கோவிலில் ஆபத்து” என்று சொல்லியவள்,

“ஒருவேளை அண்ணன் அங்கே வந்தால் பத்திரமாய் இருக்கச் சொல்லுங்க!” என்று படபடப்பாய் சொல்லியவள், இணைப்பைத் துண்டித்து விட்டு கோவிலுக்கு அன்புடன் புறப்பட்டாள்.

எழில் மாறனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவில்லை. அடுத்து அருளுக்கு அழைக்க, அவனோ எடுத்து காதில் வைத்ததும், 

“மச்சான்,  ஹலோ ஹலோ” என்று கத்த, அங்கே இருந்த சத்தத்தில் அவன் பேச்சு எதுவும் கேட்காததால், நான் அப்புறம் பேசுறேனு சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

கணக்கு எல்லாம் எழுதி முடித்து பணம் எல்லாம் சரி பார்த்து கருப்பசாமியிடம் கொடுத்துவிட்டு, மாறனும் அருளும் நடந்து வண்டி நிறுத்துமிடத்திற்கு  வரும் வழியில், அங்கே பல புதுமுகங்கள் தெரிய அனைவரும் தங்களை நோக்குவதைப் போல் தெரிய, அருள் மாறனை இடித்து, 

“மச்சான்! ஏதோ பிரச்சனை வரும் போல தெரியுதுடா. கொஞ்சம் நிமிர்ந்து பாரு. அங்கே இருக்குறவனுங்க நம்மளையே பார்க்கிற மாதிரி இருக்கு.”

மாறன் விழியைச் சுழற்றிப் பார்த்துக் கொண்டே, “மச்சான், எனக்கு குறி வச்சிருக்கானுங்க. இங்க நம்ம ஊர் ஆட்கள் நிறையப் பேர் இருக்காங்க. என்னால் அவங்க யாருக்கும் ஆபத்து வர வேண்டாம்” என்று சொல்லியவன்  மடமடவென்று ஓட ஆரம்பித்தான். 

அருள் ஊர் மக்களை எல்லாம் ஒரு ஓரமாய்  நிற்கச் சொல்லிவிட்டு, ஆயுதம் ஏதாவது கிடைக்குமா என்று அருகேயிருந்த கட்டைகளை எடுத்தவனைப் பார்த்த இளையவர்கள், பெரியவர்களை கோவிலுக்குள் செல்லுமாறு நிறுத்திவிட்டு,  இளைஞர்கள் அனைவரும் அங்கிருந்த கட்டைகளை உருவிக் கொண்டு வந்தனர்.

ஓடிய மாறன், கோவிலை விட்டு கொஞ்சம் தள்ளி வந்ததும், அப்படியே நின்றான்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Eswari

Story MakerYears Of MembershipContent Author

22,23,மாறனின் அ(ன்)ம்பு

பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் சுமதி! | Nalla Seithi – 447 |