in , ,

20,21,மாறனின் அ(ன்)ம்பு

அன்பு – 20

அகிலாண்டம் தன் பேத்தியிடம், “உனக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு. இன்னொன்னு புரிஞ்சுக்கோ, உன் விருப்பப்படி, நாங்கள் கதிரைப் உனக்கு கட்டி வைத்திருந்தாலும், அவன் மனதில் கூட, உனக்கு வெற்றியை கண்டால் ஏற்படும் அருவருப்பு, கதிருக்கு உன்மேல் தோன்றியிருக்கும்.”

அந்த எண்ணமே காயத்ரியின் விழிகள் கலங்கி நீரை வரவழைத்தது.   

“வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பத்திற்காக உன்னைக் கல்யாணம் பண்ணினாலும், நீங்க ரெண்டு பெரும் சந்தோஷமாய் இருக்க மாட்டீங்க. மனதிற்குப் பிடித்தவனின் வெறுப்பே, வாழ்க்கையை நரகமாக்கி விடும்.”

“இப்பச் சொல், உனக்கு கதிர் தான் வேணுமா?”

அவன் தன்மேல் ஒரு அருவருப்பை காட்டினால், அதன்பின் உயிர் வாழவே மாட்டோம் என்று நினைத்தவள், “கதிர் எனக்கு வேண்டாம் பாட்டி.”

அகிலாண்டம் தன் பேத்தியை கட்டிக்கொண்டு, அவளின் தலையை வருடிக் கொண்டே, “மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் காதல் வரும். இன்பம் என்று ஒன்று வந்தால், துன்பம் என்று ஒன்று வரத்தானே செய்யும் கண்ணம்மா. மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் நாம், ஏன் துன்பத்தை ஏற்க மறுக்கிறோம். 

காதல் வந்தால், அதிலும் நல்லது கெட்டது வரத்தானே செய்யும். உன் காதல் தோல்வியில்லை. நீ சொல்லாத காதலை நினைத்து, ஏன் உன் வாழ்க்கையே தோல்வியாக நினைக்கிறடா?

உன்னைப் பற்றி யோசிக்காத ஒருவனை நினைத்து, நீயே உன் வாழ்க்கையை நாசப் படுத்திக்கிற. நீ வெற்றியோடு வாழ்ந்து பார்த்தால் தான், கதிரை விட பல நல்ல விஷயங்கள் அவனிடம் இருக்கிறது பற்றித் தெரியும்.”

அகிலாண்டம் தன் பேரனைப் பார்த்து கண்ணடித்து விட்டு, காயத்ரியிடம், “உன் அழகுக்கு இந்த கருவா பயலை ஏன்டா கட்டணும்? அந்த வெற்றிதான் உன் அழகுக்குப் பொருத்தமானவன்.”

பெண்ணவளோ, “அழகைப் பார்த்து காதல் வராது பாட்டி.”

“இந்த டயலாக் எல்லாம், நீ முன்னமே பேசி இருக்கணும் குட்டிமா!  இப்ப காலம் கடந்து வந்து பேசி என்ன ஆகப் போகுது?” 

பின் அகிலாண்டம் தன் பேத்தியை மடியில் படுக்க வைத்து,  “கதிருக்காகவே  நீ படைக்கப்பட்டாயா? இவன் மேல்கொண்ட காதலைத் தவிர, உனக்கு வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லையா? ரொம்ப வருஷமாய் இவனையே நினைத்து உன் இளமைப் பருவத்தை வீணாக்கி விட்டாயே காயத்ரி. நினைச்சுப் பாரு! நீ இழந்த நிமிஷங்களை. ஜாலியா விளையாடலை. சந்தோஷமா இருக்கலை. இன்னும் நல்லா படிச்சு பெரிய ஆளாய் வந்திருக்கலாம். ஒருவேளை நீ படித்திருந்தால் இப்போது உனக்கு திருமணம் நடந்திருக்காது.

ஆனால், கதிரோ அவன் நினைச்ச மாதிரி இருக்கான். நினைச்ச நேரம் சினிமாவுக்கு போறான். சாப்பிடுறான். ஜாலியா இருக்கான். அவன் எதுவுமே இழக்க வில்லையே.”   

அகிலாண்டம் சிரித்துக்கொண்டே, “இந்தக் காலத்து இளைஞர்களுக்கு காதலைத் தவிர, வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை என்று நினைக்கிறீர்கள். காதல் என்பது இளமைப் பருவத்தில் அனைவருக்கும் வருவது இயல்பே.

ஆனால், திருமணத்திற்குப் பின், கணவன் உடன் ஒரு நெருக்கம் வரும் பார். ஒரு காதல் வரும் பார், அது போல் போதை உலகில் வேறு எதுவும் தர முடியாது. உன்னைப் பற்றி யோசிக்காத இவனை நினைத்து, உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காதே. அதை விட முக்கியமானது தாலி ஏறி உன் வாழ்க்கை தொடங்கி விட்டது, அத்தோடு உனக்கென்று ஒருவனும், ஒரு குடும்பமும் இருக்கு.” 

காயத்ரிக்கு தன் கண்களை மூடி, தான் நேசிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்போ வரைக்கும் கதிரைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாததை எண்ணி  இழந்த இளமைக் கால வாழ்க்கை, இனி நினைத்தாலும் திரும்பி வாழ முடியாது. வாழும் உன் எதிர் காலத்திலாவது தனக்காய் வாழ வேண்டும் என்று நினைத்தவள், தன் பாட்டியின் காலில் விழுந்து, “கதிரை என்னால் மறக்க முடியாது பாட்டி. என்னை கொஞ்சமும் நினைக்காத அவனுக்காக என் உயிரை விடும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை. நான் எப்போது சாகிறேனோ, அப்போதுதான் இவனின் நினைவும் என் மனதிலிருந்து நீங்குமோ என்னவோ…!”

அதுவரை பொறுமையாக நின்றிருந்த கதிர் காயத்ரியை பார்த்து, “நான் ஏதாவது உன் மனசுல தவறான எண்ணம் வருவது போல் நடந்திருந்தால் என்னை மன்னிச்சிடு. தயவுசெய்து உன் புருஷன் கிட்ட போய் நல்லா வாழப்பாரு. நீ இப்படி இருந்தால் அதுவே எனக்கு குற்ற உணர்ச்சியாய் இருக்கும். அதையும் மீறி நீ என்னை மட்டும் தான் நினைத்துக் கொண்டு தான் இருப்பேன்னு நீ சொன்னால், நான் இந்த வீட்டுக்கு வரவே மாட்டேன். எங்காவது கண்காணா தேசம் போயிடுவேன்.”

அவனையே பார்த்த காயத்ரி, “நீ எங்கேயும் போக வேண்டாம் கதிர். நான் நல்லா இல்லாட்டியும் பரவாயில்லை. நீ சந்தோசமாய் இரு. அதுவே எனக்கு போதும்.” என்று சொல்லியவள்,

பின் திரும்பி தன் பாட்டியைப் பார்த்து, “பிடிக்குதோ பிடிக்கலையோ கொஞ்சம் கொஞ்சமாய் அவரோடு ஒரு வாழ்க்கையை வாழப் பழகிக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு உதவி பாட்டி, என் வீட்டுக்கு இவனை மட்டும் அனுப்பாதீர்கள். நான் இங்க வரும்போது, இவன் இங்க இருக்க வேணாம். இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க. கண்டிப்பாய் கொஞ்ச நாள் தக்கி முக்கி சமாளித்து, கடைசியில் வாழ்ந்திடுவேன் பாட்டி.” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.

அவள் போனபின் சோகமாய் இருந்த கதிரிடம் வந்த அகிலாண்டம், “அவளின் மனதில் ஆசை வருவதற்கு நீ காரணம் இல்லை, கண்ணா! நீ கண்டதையும் போட்டு மனதைக் குழப்பிக்காத…!”

பின் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, “அவள் மனதை சரி செய்யத்தான், உன்னை கருவா பயலே என்றேன்டா”  என்றதும் அவன் சிரித்துக் கொண்டே,

“சொன்னாலும் சொல்லாட்டியும் நான் கருவாப் பயதான்  பாட்டி!” என்று சொல்லிச் சென்றான்.

கீழே வந்த காயத்ரி தன் அம்மாவிடம் சொல்லி விட்டு, உடனே தனது புகுந்த வீட்டிற்குக் கிளம்பினாள். வேலை முடித்து வெளியே சென்றிருந்த வெற்றி, தனது அறைக்கு வந்த போது, அங்கே இருந்த காயத்ரியைப் பார்த்து, “நீ எப்போ வந்த?”

“இப்பத்தான்” என்றவளைப் பார்த்து சிறிது நேரம் மவுனமாய் நின்றவன், 

பின் அவளின் அருகே வந்து “என்னை மன்னிச்சிடு.  நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணினேன் என்று அதுக்கு அப்புறம் தான் ரியலைஸ் பண்ணினேன். இனிமேல், கண்டிப்பா, உன் அனுமதி இல்லாமல் அப்படி நடக்க மாட்டேன்.” என்று சொல்லியவன், அந்த நிமிடத்திலிருந்து  சொன்ன சொல்லைக் காப்பாற்றி னான்.

ஒரு குழந்தையைப் போல் தாங்க ஆரம்பித்தான். சாப்பிடும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை, பெண்ணவளின் விருப்பம் கேட்டு வாங்கித் தரும் கணவனை, தன்னால் ஒதுக்க முடியாத அளவுக்கு, அவன் அன்பால் நெருங்கிக் கொண்டிருந்தான்.

இங்கே வெண்பாவிற்கு தாலி கோர்த்து போடணும் என்று பெரியவர்கள் சொல்ல, வேறு வழியின்றி வெண்பாவும் வேண்டா வெறுப்பாய், கோவிலுக்கு வந்தாள். 

நாத்தனார் முறையில் யாராவது கோர்த்தால் நல்லா இருக்கும் என்று யோசிக்கும் போது, கோவிலுக்கு வந்த அன்புவைக் கண்ட முத்துலட்சுமியின் பக்கத்து வீட்டுப் பெண்ணான வளர்மதி, “எக்கோ,  நீ எதுக்கு வெளியாட்களை தேடிட்டு இருக்க? உரிமை பட்டவளின் கையாலேயே கோர்த்துப் போடு” என்றதும்,

முத்துலட்சுமி புரியாமல், “என்னடி சொல்ற?” என்ற போது, 

அங்கே கோவில் பிரகாரத்தை சுற்றும் அன்புவைக் காட்டி, “உன் மருமகள் தான் இருக்காளே…! அவளை வைத்தே நாத்தனார் முடிச்சு கோர்க்கலாமே…!”

முத்துலட்சுமி கோபமாய்,  “கூறுகெட்டத் தனமாய் பேசாத வளரு. அன்னைக்கு ஏதோ என் மகன் கோபத்தில் கட்டி இருப்பான். அதெல்லாம் இந்நேரம் அவங்க வீட்டில் கழட்டி வீசி இருப்பாங்க.” என்று சொல்லும்போதே, 

அன்பு அக்கம் பக்கம் நோட்டம் விட்டு, தன் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து வெளியே நீட்டி, அதற்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொண்டிருந்தாள்.

வளர்மதி, “இப்ப சொல்லு முத்துக்கா, அந்தப் பிள்ளை உன்  உரிமை பட்ட மருமகள். உன் மகன் நல்லா இருக்கணும்னு தாலிக்கு பொட்டு எல்லாம் வைக்கிறாள். பாரு!”

முத்துலட்சுமி எப்படி கூப்பிடுவது என்று தயங்கிக் கொண்டே, அவளையே பார்க்க… 

வளர்மதி அங்கே சென்று அன்பிடம், “தாலி கோர்க்கனும்மா, கொஞ்சம் வாம்மா!” என அவளை அழைத்து வந்தாள்.

வரும் வரை, தன் மாமியாரையும் நாத்தனாரையும் தான் பார்க்கப் போகிறோம் என்று தெரியாத அன்பு, அங்கே வந்ததும் மாறனின் அம்மாவைக் கண்டதும், கை கால் எல்லாம் வெடவெடக்க நின்றிருந்தாள்.

அவரோ முதலில் தயங்கி, பின், “இங்க வாம்மா வந்து உட்காரு.” என்று சொல்லியவர்,

அங்கே இருந்த மஞ்சள் குங்குமத்தை எடுத்து தன் மருமகளின் நெற்றியில் வைத்து விட்டார். பெண்ணவளின் மனதில் சிறு தயக்கம் இருந்தது. மாறனின் பெற்றோர் தன்னை ஏற்றுக் கொள்வார்களா, இல்லையா என்று, இந்த நிமிடம் அது பறந்து விட்டது. 

பின் கொஞ்சம் அரிசி எடுத்து, அவளின் தலையில் போட்டு ஆசீர்வாதம் பண்ணியவர், “வெண்பாவிற்கு உன் கையால் தாலி கோர்த்துப் போடுமா” என்றதும் மகிழ்ச்சியாய் தலையை ஆட்டியவளை, அப்போது தான் வெண்பா நிமிர்ந்து பார்த்தாள்.

அன்பரசியும் அவளைப் பார்த்துவிட்டு, இருவரும் ஒரே கல்லூரி தான் என்றாலும் பேசிப் பழக்கமில்லை. ஆனால், இன்று சந்திக்கும் நேரத்தில், தன் அண்ணனால் பாதிக்கப்பட்டவள் என்பதால் பேசத் தயங்கினாள்.

இங்கே எழிலை அழைத்துக் கொண்டு வந்த அருள், மாறனிடம், “உன் பொண்டாட்டிக்கு எப்போ மச்சான் தாலி கோர்த்துப் போடுவ?”

“திருவிழா முடிந்ததும் என் பொண்டாட்டிக்கு தங்கத்தால் தாலிச் செயின் செஞ்சு போடணும், மச்சான்.”

அவனோ, “ஹோ… அப்போ எதை செஞ்சாலும் சீக்கிரம் செஞ்சிடு மச்சான், அந்தப் புள்ள வேற உன்னைத் தேடி கடைக்கு வருது.  நீங்க இருக்கிற அவசரத்துக்கு அப்புறம் பிள்ளைகள் ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் செய்யற மாதிரி ஆகிடப் போகுது.”

“டேய் விளக்கெண்ணெய், யாரைப் பார்த்து என்ன சொல்ற? என்னைப் பார்த்தா, சந்து பொந்தில் சிந்து பாடுற ஆள் மாதிரியா தெரியுது?” 

அருளும் முகத்தை ஒரு மாதிரி வைத்துவிட்டு, நம்ம அப்படி என்ன தப்பா கேட்டு விட்டோம் என்று நினைத்தவன், “உலகமே பார்க்கிற மாதிரி தாலியைக் கட்டிப்புட்ட. இப்போ அன்பு உன் பொண்டாட்டி தானடா. இனி சந்துல பாடினால் என்ன?  சிந்தில பாடினால் என்ன?”

மாறன் புன்னகையாய், “என் பொண்டாட்டியாய் இருந்தாலும், அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் இருக்குடா!  ஊரறிய என் பொண்டாட்டியை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, நல்ல நேரம் பார்த்து தான் என் வாழ்க்கையை தொடங்குவேன்.”

அருள் தன் தலையில் அடித்து, “ரெண்டு பேரும் வேலைக்காக மாட்டானுங்க போலயே. உங்க ரெண்டு பேரையும் என் பிரெண்டுன்னு சொல்லிட்டு திரியுறதுக்கு எனக்கு கேவலமாய் இருக்கு மச்சான். எனக்கெல்லாம் இந்நேரம் சான்ஸ் கிடைச்சால், என் பிள்ளை ஸ்கூலுக்கு போயிட்டு இருந்திருக்கும்.” என்றவனை இருவரும் முறைத்து, அவன் முகத்தில் துப்பினர்.

கோவிலுக்குள் வந்தால், அங்கே அன்பு மஞ்சள் கயிற்றில் தாலியை பெரியவர்கள் சொல்வது போல கட்டிக் கொண்டு, பின் தாலியில், தங்கச் செயினைப் கோர்த்து கட்டிக் கொண்டிருந்தாள்.

கோர்த்து முடித்ததும் மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கள் என்றதும், மாறன்  எழிலை அங்கே நிறுத்தி விட்டு, அங்கே தன் மனம் விரும்பியவளின் அருகில் நின்று கொண்டான்.

அன்பு தாலியை வெண்பாவின் கழுத்தில் போட்ட நொடியில் தான், வெண்பாவின் கலங்கிய கண்களைப் பார்த்தாள். அதைப் பார்க்கும் போது அன்பின் மனதிற்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத வருத்தம் ஏற்பட்டது.

வெண்பா முட்டிபோட்டு குனிந்து,  தம்பதியர்களாய் இருந்த மாறன் மற்றும் அன்புவின் காலில் விழும்போது, அவளின் கண்ணீர் துளியில் ஒன்றிரண்டு அன்புவின் காலில் பட்டுச் சென்றது. அதிலே புரிந்து கொண்டாள், இது இவளுக்கு விருப்பமில்லாத திருமணம் என்று.

விருப்பம் இல்லாதவர்களோடு தன் வீட்டில் வாழ்வதே தனக்கு இவ்வளவு கஷ்டம் என்றால், காலம் முழுவதும் விருப்பம் இல்லாதவர்களோடு எப்படி வாழ்வாள் என்று அவளையே பார்த்தாள்.

அதற்குள் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வந்தது.  மாறனிடம் மட்டும் விழியால் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனிக்க, கொஞ்ச நேரமிரு என்ற ஆடவனின் விழிக் கெஞ்சலில், சற்று நேரம் நின்றாள்.

உன்னுடைய சாலையில் 

நின்று மலர் தூவவே     

கன்னி வரம் கேட்கிறேன்     

நானும் அரங்கேறவே     

உன்னருகில் வாழுவதொன்று     

போதும் இந்த மண்ணிலே     

வேறு ஒன்றும் தேவை இல்லை     

யாவும் உந்தன் அன்பிலே     

எனை ஆளவே வந்த மகராசனே     

நான் உனக்காகவே பல பிறவி

துணை வருவேனே

அப்போது வளர்மதி,  மாறனையும் அன்புவையும் ஒன்றாய் நிறுத்தி, “நீங்க ஜோடியாய் பெற்றவரின் காலில் விழுந்து ஆசி வாங்குங்க!” என்றதும் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து எழுந்தனர்.

மாமியாரிடம், “யாராவது பார்த்து விடுவார்கள். நான் கிளம்புறேன்.” என்று சொல்லி விட்டு, மாறனிடம் சொல்லிக் கொண்டு சென்றவளுக்கு, வெண்பாவின் மனதை எப்படி சரி செய்வது என்ற யோசனையே மனதில் நின்றது.    

காயத்ரி இங்கே வாழ்க்கையில் நடக்கும் மாறுதல்களோடு ஒத்துப் போக முடியாமல் திண்டாடினாள். தன் பிறந்த வீட்டில் தான் உடுத்தும் ஆடை, போகுமிடம், இதுவரை தன் அம்மாவின் விருப்பமாய் மட்டுமே இருந்தது. ஆனால், கணவன் வீட்டிற்கு வந்ததுக்குப் பிறகு அனைத்துமே தன் விருப்பமாய் மாறியது. வெற்றி ஒவ்வொன்றையும் பெண்ணவளின் பார்வையைப் பார்த்து, பிடித்ததா பிடிக்கலையா என்று கண்டறிந்து நிறைவேற்றினான். வாரத்தில் ஒரு நாள் ஹோட்டல், ஒருநாள் தியேட்டர், ஒருநாள் கோவில் இப்படி பெண்ணவளை, வேறு சிந்தனையில் நிலை கொள்ளாமல், சிம்லா, ஊட்டி கொடைக்கானல் என்று சுற்றிக் காட்டி சிந்தனையை சிதற விடாமல் தன்மேல் இருக்கும்படி பார்த்துக் கொண்டவன், தினம் தினம் புதுவித உலகத்தைக் காண்பித்தான். விட்டுக்குள் அடங்கிக் கிடந்தவளுக்கு இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று காண்பித்தான். 

இரண்டு மாதமாய் தன் பேத்தி தன் வீட்டிற்கு  வராததால், அவளை காணச் சென்ற அகிலாண்டத்திற்கு, அங்கு கண்ட காட்சி மனதில் மகிழ்ச்சியைத் தந்தது. காரணம், மாடிப் படியில் இறங்கும்போது கால் தடுக்கிய தன் பேத்தியைக் கண்ட வெற்றி, 

“ஹேய் பார்த்துப் வரமாட்டியா?” என்று திட்டிக்கொண்டே அப்படியே கைகளால் அவளைத் தூக்கி,  தன் தொடையில்  அமர வைத்து, அவளின் விரல்களைப் தேய்த்துவிட்டான்.

“உள்ளே வரலாமா?” என்று குரல் கேட்டு திரும்பிய இருவரும் அகிலாண்டத்தைக் கண்டதும் எழுந்து கொள்ள, 

காயத்ரி, புன்னகையோடு “பாட்டி…” என்று வரவும், 

“நில், நானே வருகிறேன்.” என்று சொல்லி, அருகே வந்த பாட்டியை ஆசையாய் கட்டிக்கொண்டாள்.

திருமணமான புதிதிலேயே தன் மகனின் மகிழ்ச்சிக்காக வெற்றியின் பெற்றோர் புதுமணத் தம்பதிகளை தனிக்குடித்தனம் வைத்திருந்தனர். அது ஒருவகையில் நல்லதுதான் போலும் என்று அகிலாண்டம் நினைத்துக் கொண்டார். பாட்டிக்கும் பேத்திக்கும் தனிமை தர விரும்பிய வெற்றி, அவர்களை உபசரித்து விட்டு வெளியே சென்று விட்டான்.

கொஞ்ச நேரம் பேசிவிட்டு அகிலாண்டம் தன் பேத்தியை பார்த்து, “இப்போது உன் வாழ்க்கை நல்லா இருக்கா?”

சற்று அமைதியானவள். “அவர் ரொம்ப நல்லவர் பாட்டி. ஆனால் நான் அவருக்கு தகுதியில்லையோ என தோணுது. எனக்கு ஒரு சந்தேகம் பாட்டி, எனக்கு கதிரின் மேலிருந்த அன்பில் மாற்றமிலை. ஆனால், வெற்றி ஆசையாய் இரவில் கிட்ட வருகிறார், பாட்டி. என் கணவரோடு இரவில் ஒத்துப் போனால் நான் தப்பானவளா பாட்டி?”

“யார் சொன்னா குற்றமென்று. ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், தான் பெற்று வளர்க்கும் எல்லாக் குழந்தைகளிடமும் ஒரே மாதிரியாத் தான் இருப்பாள். தான் நேசிக்கும் குழந்தைகளிடம் ஒரே மாதிரியான அன்பைத்தான் காட்டுவாள்.  இதுதான் வாழ்க்கை. இதுதான் நிஜம். இனி உன் கணவருடன் சந்தோசமாய் இரு.” என்று சொல்லி விட்டு  வந்தார்.

அன்பு – 21

அன்பு வீட்டிற்குச் சென்றதும், நேராய் தனது சித்தியின் அறைக்குச் சென்ற போது, அங்கே கமலம்,  கதிரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

“டேய் இதை ஒழுங்காய் போய் அந்தப் பிள்ளையிடம் கொடுத்திட்டு வந்திடு. கடத்தி அந்தப் பிள்ளையின் வாழ்க்கையை கெடுத்தது மட்டும் இல்லாமல், பத்தாக் குறைக்கு இப்ப கண்டதையும் பேசி, அந்த புள்ள மனச கெடுத்துட்டு வந்து இருக்கடா!” என்று திட்டுவதை கேட்டவளுக்கு, வெண்பாவைப்பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்ததும்,

கதவின் ஓரமாய் நின்று விட்டாள். பெண்ணவளின் கண்ணீர் தன் அண்ணனுக்காய் வந்ததை புரிந்து கொண்டாள்.

“அம்மா, அவளின் ஞாபகமாய் இந்தக் கொலுசு ஒண்ணுதான் இருக்கு.”

“டேய்! அறிவு கெட்டவனே! அந்தப் பொண்ணுக்கு புருஷன் இருக்கான். அவனோடு சேர்ந்து வாழட்டும். பத்து வருஷம், பதினொரு வருஷம் காதலித்தவங்களே ஒத்து வரலைன்னால் பிரிந்திடுவாங்க… நீ ஒரு நாள் தானடா பார்த்திருக்க.” 

“அம்மா, அவ வாழ்க்கையில் நல்லது நடந்திருந்தால், நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன்.” 

“டேய் கதிரு, ப்ளீஸ் அம்மா சொல்வதைக் கேளு. நீ போய் அவ கிட்ட, புருஷன் கிட்ட சேர்ந்து வாழுன்னு சொல்லுடா. நீ உனக்கான வாழ்க்கையை வாழுன்னு சொல்லிட்டு வந்திடு.”

“அம்மா, அவளுக்கு திருவிழா வரைக்கும் டைம் கொடுத்து இருக்கேன். இன்னும் இருபது நாளில் திருவிழா தொடங்கிடும்மா.”

“அய்யா ராசா, அம்மா பேச்சைக் கேளு கண்ணா! நீ காத்திருக்கிறேன்னு சொன்ன வார்த்தையே, அவளுக்கு நினைவில் அடிக்கடி வரும். அப்படி வரும் போதெல்லாம், அவ கணவனுடன் வாழாமல் இருக்கறதுக்கு காரணம் நீயும், நீ சொன்ன வார்த்தையாய்க் கூட இருக்கலாம். நமக்காக ஒருத்தன் காத்துகிட்டு இருக்கான், அதனால அவன் கூட போயிடலாம்னு கூட அவ மனசுல அப்படி ஒரு எண்ணம் கூட உருவாகியிருக்கலாம்டா. மீண்டும் மீண்டும் அவமனசில் கட்டியவன் மேல் வெறுபாகி, இந்த தாலி இருப்பதால், தான் நினைத்த வாழ்க்கை வாழ முடியலைன்னு தோன்றும். திடீர்னு மனதில் ஏதோ ஒரு எண்ணம் தோன்றி, அவனைக் கொலை செய்துவிட்டால்…”

“அம்மா, அவள் அந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடையாதும்மா…”

“அவ நல்ல பொண்ணுதான். ஆனால் அவளின் மனதில் நஞ்சை விதைக்கக் காரணம், நீ சொன்ன வார்த்தை தான். இப்பெல்லாம் டிவி பார்த்தாலே இந்த செய்தி தான் சொல்றாங்க. ரெண்டு மாசம் பழகியவனுக்காக, இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு பத்து வருஷம் வாழ்ந்த கணவனை கொன்று  வீட்டுக்குள்ளேயே புதைத்த பொண்ணப் பத்திக் கூட போன வாரம் நியூஸில் போட்டாங்க, கண்ணா. உலகம் கெட்டுக் கிடக்குடா. ஏதோ ஒரு சூழ்நிலையில்  முடிவெடுத்து தப்பு செஞ்ச பிறகு, ஐயோ! இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தப்படுவதைக் காட்டிலும் முன் எச்சரிக்கையாக வாழ்வது நல்லதல்லவா…! 

இப்பவே கிளம்பி போய், அவளிடம் நீ உன் வாழ்க்கையை வாழுன்னு சொல்லு. நான் யோசிச்சேன். நீ உன் கணவணோடு வாழ்வதுதான் நம் பண்பாடுன்னு சொல்லி, உடனே அவளுக்கு உன் மேல் கோபம் ஏற்பட்டு அவளுக்காய் வாழனுமென்று முடிவெடுப்பாள். அவளுக்கு புருஷன் இருக்கானே டா. அவனும் பாவம் டா. உன் ஒருவனின் சந்தோஷத்தை விட்டுக் கொடுத்தால் ரெண்டு குடும்பம் நல்லாயிருக்கும்டா. நீ போய் விளக்கிச் சொன்ன பின்னும், அதையும் மீறி  அவள் உன்னையே நினைச்சிட்டு வாழாமல்  இருந்தால்,  நம்ம அதன் பின்னர் வேற முடிவெடுக்கலாம்” என்று சொல்லவும், கண் கலங்கி நின்றான். 

“எய்யா கதிரு, ஒருவேளை அந்தப்பிள்ளை மனதால் உன்னை மட்டுமே நினைச்சிட்டு, அவளுக்கு தாலி கட்டியவனை தள்ளி நின்று தினமும் தண்டிப்பாள். சூழ்நிலை மாறி இருவரில் ஒருவர் தற்கொலை செய்தால்… மனித உயிர் போனால் வராது கண்ணா!”

தன்னால் அவளுக்கோ, அல்லது அவனுக்கோ எதுவும் ஆகிவிடுமோ என்று பயந்தவன், “அம்மா அவளுக்கு எதுவும் ஆகிடக் கூடாதும்மா. அவள் நல்லா இருக்கணுமா!” 

“அப்போ போயா… போய் சொல்லிட்டு வா, நீ சொன்னால், கண்டிப்பா, தனக்காக யாரும் இல்லைன்னு அந்தப்பிள்ளைக்கு தோனும். அந்த ஒரு எண்ணமே அவளின் புது வாழ்க்கையின் தொடக்கமாய் அமையும்.” 

“நான் வரும்போது பார்த்தேன்மா, அவளின் வீடு பூட்டியிருந்தது. நாளைக்கு கண்டிப்பாய் போய் கொலுசைக் கொடுக்கிறேன்.” என்றதும், 

கமலம் தன் மகனின் தலையை தடவிக்கொடுத்தார். அன்பு ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டு, ‘அப்பாடா நம்ம சித்தி ஒரு நல்ல தீர்வை கண்டுவிட்டார்.’ என்று நினைத்தாள். 

இங்கே வடநாட்டிலிருந்து ஜெயப்பிரதாபன் மாறனைக் கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்தான். நேரடியாய் தான் சம்மந்தப்பட்டிருப்பது கொலை செய்பவனுக்கே தெரியாது. வந்தவர்களை  தங்களுக்கு என்று தனியாக இருக்கும் மர குடோனில் வைத்திருந்தான். அது காட்டுக்குள் இருப்பதால் யாரோடது, யாருக்குச் சொந்தமானது என்று யாருக்கும் தெரியாது. வந்தவர்கள் செத்தாலும் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். அப்புறம் கொலை செய்த அடுத்த நிமிடமே, தம்பிச்சு போயிடுற மாதிரி ஏற்பாடு செய்தான்.

விசாலாட்சி கோபமாய் “திருவிழா வரைக்கும் எதுக்குடா வெயிட் பண்ணனும்? இப்பவே போட்டு விடலாமே!”

“இல்லம்மா திருவிழா அப்போ பயங்கரக் கூட்டம் இருக்கும். அதில் மாறனை வச்சு செஞ்சுட்டால் அவனுங்க தப்பிச்சு போறதுக்கு வசதியாயிருக்கும். கூட்டத்தோட கூட்டமாய், அவங்க முடிச்சுட்டு கிளம்பிடுவாங்க. மாறன் குடும்பத்தாரின் கோபம் எல்லாம் நம்ம மாமா மேல தான் இருக்கும். அன்பரசிக்கு தாலி கட்டியதால் அவர்தான் செஞ்சிருப்பாரோ என்று நினைப்பாங்க. ஆனால் கடைசிவரை சந்தேகமாய் இருக்குமே தவிர, குற்றத்தை நிரூபிக்க முடியாது. மாமாவும் தப்பு பண்ணலை என்றதால், வேற யாரோ செஞ்சிட்டாங்க என்றும், தொல்லை விட்டதுன்னும் நிம்மதியாய் இருப்பார்.”

“என்னோட அண்ணன் பெயர் வருமாடா?”

“வராத அளவுக்கு பாத்துக்குறேன்மா. இங்க கொலை செய்யும் போது பக்கத்து ஊரில் நமக்கு தெரிஞ்ச பசங்க, நாங்க தான் கொலை செஞ்சோமென்று ஸ்டேசனில் நேரடியாய் சரணடைந்து விடுவார்கள். இங்கே சாட்சி சொல்றவங்க, நம்ம ஆளுங்க தான். கொலை செய்தவன் இவனில்லை என்று சாட்சியை மாற்றிச் சொன்னால் ஒன்று அல்லது ரெண்டு வருடத்தில் வெளியே வந்திடுவாங்க. சரியான எவிடென்ஸ் இல்லாமல் மாமாவைக் கைது செய்ய முடியாதுமா…!”

விசாலாட்சிக்கும் சரியெனப்பட திருவிழா எப்போது வரும்மென காத்திருந்தார்.

இரவில் படுக்கையில் விழுந்த அன்பிற்கு இன்று தன்னவனுடன் நடந்த நிகழ்வுகள் பலவித எண்ணங்களையும் மகிழ்ச்சியையும் தந்தது.

நேரத்தில் சாப்பிட்டு நேரத்தில் தூங்கிப் பழகியவளுக்கு ஏனோ பல நாளாய் உணவும் உறக்கமும் மறந்து போனது.

தன்னவன் தந்த ஒற்றை நெற்றி முத்தத்தால், மனமோ பொல்லாத ஏக்கங்களால் பெண்ணவளின் மீது மின்சாரத் தாக்குதல்களைப் பாய்ச்ச, உடலோ ஆடவன் தொடுகைக்காய் ஏங்கத் தொடங்கியது.

மனம் நிறைய காதலுடன் தன் அலைபேசியை எடுத்து தன்னவன் எண்களை அழுத்தும்போது, பெண்ணின் மனமோ இந்த நிமிடம் பேசினால் தவறாய் பேசி விடுவோமோ என பயந்து அழைக்காமலே வெண்ணிலாவை தூது அனுப்பிக் கொண்டே இருந்தாள். 

இங்கே அலைபேசியை எடுத்த மாறனோ தனது அலைபேசியில் நொடிக்கொருமுறை எடுத்து எடுத்து பார்த்து, ஒருவேளை வீட்டில் ஆட்கள் இருப்பார்கள் போல. அதனால் தான் கூப்பிடவில்லையோ? காலையில் பார்த்தாலும் இரவில் பேசாதது ஏதோ பல வருடப் பிரிவைத் தருவது போல் இருந்தது.

தன் வீட்டின் பின்புறம் இருக்கும் எளிய வீடுகளில் வசிக்கும் ஆட்கள், கூலி வேலைக்கு சென்று வருபவர்கள். அவர்களின் பொழுது போக்கே பாடல் கேட்பது தான். தினமும் இரவில் கேட்பது வழக்கம். அதுபோல் தான் பெண்ணவள் ஜன்னலோரமாய் நின்றிருக்க, காற்றிலே மிதந்து வந்த பாடல், தன் நிலைமைக்கு உகந்ததாக இருந்தது.

பனி போல் குளிர்ந்தது 

கனி போல் இனித்ததம்மா 

ஆஹா மழை போல் விழுந்தது

மலராய் மலர்ந்ததம்மா

ஒரு தூக்கம் இல்லை 

வெறும் ஏக்கம் இல்லை 

பிறர் பார்க்கும் வரை 

பிரிவும்மில்லை பிரிவும்மில்லை

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

அந்நாளில் இல்லாத

பொல்லாத எண்ணங்களே

பொன்னான கை பட்டு 

புண்ணான கன்னங்களே!

ஏதேதோ எண்ணங்களுடன் வந்து படுக்கையில் விழுந்தாள். 

பொழுதும் விடிந்தது. வழக்கம் போல் கதிரவன் தனது கடமைகளைச் செவ்வனே செய்தான். அதன் ஒளிக் கற்றைகள் முகத்தில் பட்டு, எழுந்த அன்பரசி குளித்து முடித்தவள் அன்று எப்போதும் போல் கிளம்பாமல்,  கொஞ்சம் தாமதமாக கிளம்பும் போது, தனது அண்ணன் கதிர் தனக்கு முன்னே செல்வதைக் கண்டவள், அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவன் ஒரு வீட்டின் முன் நின்று பார்க்க, அந்த வீடு பூட்டி இருக்கவும் அவன் ஏதோ ஒரு யோசனையோடு   செல்வதைக் கண்டவள் தானும் பின் சென்றாள். 

கதிர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும்போது அங்கே பேருந்து நிறுத்தத்தில் வெண்பா நின்று கொண்டிருந்தாள். அங்கே யாரும் இல்லை என்பதால் வண்டியை நிறுத்திவிட்டு அவளிடம் சென்றான்.

அவளின் பின்னால் வந்த அன்பு பத்தடி தூரத்தில் அங்கேயே நின்றுவிட்டாள். எப்பொழுதும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு நேரமாய் வருபவள், இன்று வராததால் அவளைத் தேடி மாறனும் அருள் எழில் மூவரும்  கணினி நடத்துமிடத்திற்கு சென்று விட்டு, அவள் இல்லாததால் வேறொரு வேலையை முடித்துக் கொண்டு மூவரும் கிளம்பி வந்து கொண்டிருந்தனர்.

மூவரும் வரும்போது அங்கே அன்பு நின்று இருப்பதைக் கண்ட அருள், “மச்சான் அவளை நீ கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று தேடின. அவள் இங்க நின்னு யாரைப் பார்த்துக்கிட்டு இருக்கா?”

மாறன் தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டே அன்புவின் பின்னால் நிறுத்தி, நான் வந்ததைக் கூட கவனிக்க முடியாமல் அப்படி என்ன யோசனையில் இருக்கிறாளோ என்று எட்டிப்பார்த்தான்.

அங்கே நின்றிருந்த வெண்பா மற்றும் கதிரைக் கண்டவன், கோபத்தில் எழுந்தான். 

எழிலோ, “மச்சான் பொறுடா!  ஒரு நிமிஷம்!  அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு, அப்புறம் முடிவு எடுக்கலாம்.”

கதிர் கொலுசு கொண்டுவந்து பெண்ணவளின் முன் நீட்டும் போது வேண்டாம் வேண்டாம் என்று மறுத்த பெண்மனம், அவனைக் கண்டதும், முகமும் இதழும் மலர்ந்து விரிந்தது.

ஏனோ அவளின் புன்னகை கண்டவனுக்கு, இன்னும் ஒரு நொடியில் அவளை காயப்படுத்த போகிறோமே என்று அதற்கும் வேதனை கொண்டான்.

பின் அவளிடம் கொடுத்துவிட்டு “நடந்த அனைத்திற்கும் என்னை மன்னித்துவிடு. இனி உனக்காய் நீ வாழு!” என்று சொன்னதும்,

கோபம்கொண்ட வெண்பாவோ, “அதைச் சொல்ல நீ யாரு?” என்று கேட்டாள்.

தலை தாழ்ந்தவன், “என்னை மன்னிச்சுடு” என்றதும், 

கண்கலங்கிய வெண்பா, “உன்னை மன்னிக்க நான் யார்? என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டடா. நீ மட்டும் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாய் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். நீ கடத்தாமல் ஒருவேளை எதோவொரு பிரச்சனை வந்து, திருமணம் நின்றிருந்தாலும் எழிலைக் கட்டிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், மகிழ்ச்சியாய் கட்டி இருப்பேன். ஆனால், ஒரே ஒரு நாள் உன் முகம் பார்த்து, என் வாழ்க்கை நாசமா போச்சு.”

ஏனோ அந்த வார்த்தையில் துணுக்குற்றவன், “ஒரு நாளில் காதல் எல்லாம் வந்துடுமா?”

“ஒருநாளில் வந்ததோ இல்லையோ, நான் பாட்டுக்கு அமைதியா இருந்தேன். நீ  தாண்டா மறுபடியும் வந்து மூணு மாசம் டைம் கொடுக்கிறேன் எங்காவது போலாம்னு சொன்ன. அப்படி இருந்தும், நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் வீட்டு மாடியில் நான் நடக்கும் போது, பைத்தியக்காரன் மாதிரி நீ எதுக்குடா என் வீட்டை சுற்றி சுற்றி வந்த?

முதலில் அந்த கல்யாணத்துக்கு பிடிக்காமல் தான் இருந்துச்சு. உன்னிடம் பேசிய பின் இப்போ எனக்கு தாலி கட்டியவனைப் பார்க்கும் போது குற்ற உணர்ச்சியா இருக்கு. 

அவன் கையில் இருந்த கொலுசை வாங்கி, தூக்கி சாலையில் எறிந்த வெண்பா, ஏற்கனவே உன்னாலும் உன் நினைவாலும் தான் இப்படி இருக்கேன். பத்தாக்குறைக்கு இந்த கொலுசு வேறயா? இதை எடுத்துட்டுப் போயி, சதா உன்னையே நினைத்து ஒரேயடியாய் என்னை சாகச் சொல்றியா?”

கதிர் அவளை, “ஹேய்! உனக்கு என்னடி பிரச்சனை?  உன்னைக் கட்டியவனோடு சேர்ந்து வாழ வேண்டியது தானே?”

“உனக்கு என்னடா பிரச்சனை? நான் வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன?”

பெண்ணவளோ அவனின் ஓதுக்கம் கண்டு கோபத்தில் “நான் எக்கேடோ கெட்டுப் போறேன். நீ என் கண்ணு முன்னாடி வராதே. என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்குத் தெரியும்.”  

கதிர் குனிந்து கீழே இருந்த கொலுசு எடுத்து வெண்பாவின் முன் நீட்டி, “ஹேய்! இப்போ இதை நீ வாங்கப் போறியா மாட்டியா?”

கோபம் வந்த வெண்பா, “ஹேய் நீ யாருடா? நீ எனக்கு என்ன உறவு முறை? என் வாழ்க்கையைத் தீர்மானிக்க, நீ யார்? ஆளாளுக்கு முடிவெடுத்து என்னை சவக்குழியில் தள்ளியாச்சு. பத்தாக்குறைக்கு இப்போ நீ வேற.. என்னை ஏன்டா ஆட்டிப் படைக்கிறீங்க.”

அந்த வார்த்தையைக் கேட்டு கொண்டிருந்த மாறனின் கண்ணில் நீர் வருவதற்கு முன், எழிலின் கண்ணில் நீர் வந்தது. 

கதிர், அவளிடம், “இப்போ உனக்கு என்னடி பிரச்சனை?”

“எனக்கு நீ தான்டா பிரச்சனை! நீ இல்லாட்டி என் வாழ்க்கை நல்லா இருக்கும்!” 

கோபம் வந்தவன், “ஹோ…! நான் இல்லாட்டி உன் வாழ்க்கை நல்லா இருக்குமா?”

“ஆமாம்! நல்லா இருக்கும்.” என்று சொன்னதும் கதிர் கோபமாய் தனது காரில் ஏறி அசுர வேகத்தில் ஓட்ட, அது நிலை கொல்லாமல் எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி நின்றது.  

நொடி நேரத்தில் நடந்த நிகழ்வில் பதறி அனைவரும் ஆவென்று கதற

மாறன் வேகமாய் தனது காரை எடுத்துக் கொண்டு வந்து கதிரை அள்ளிப் போட்டுக் கொண்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு போலாமென்றதும், அருள் வாகனத்தை ஓட்டினான். அழுது கொண்டிருக்கும் வெண்பாவின் அருகே வந்த அன்பரசி, அவளைத் தன் வண்டியில் ஏற்றி, மாறனின் வாகனத்தைப் பின் தொடர்ந்தாள்.

அனைவரின் மனதிலும், ஒரு பதட்டமான சூழ்நிலை அன்பரசி மனம் தனது அண்ணனுக்காய் துடித்தது.

எழிலின் மனமோ ‘நம்ம நண்பனுக்காய் தாலி கட்டினோம். ஆனால், நேசித்தவளை துன்புறுத்தக் கூடாது என்பதால் தள்ளி நிற்கிறோம். ஆனால் இவனோ அவளுக்காய் உயிரைக் கூட விடத் துணிந்து விட்டானே! மனதிற்குள் ஒருவனை வைத்துக்கொண்டு தான் இவள் தன்னிடம் கோபமாய் இருக்கிறாள் என்று தெரிந்ததும், எழிலுக்கு மனம் பாரம் கூடியது. ஒருநாள் என்றால் என்ன? ஒரு வருஷம் என்றால் என்ன? காதல் காதல் தானே!’

அருள் மாறனிடம், “என்ன மச்சான் இவன் இப்படி பண்ணிட்டான்?”

மாறனுக்கு பதட்டமாயிருந்தது, ‘அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால், வெண்பாவும் அடுத்த நொடியே ஏதாவது செய்து கொள்வாள்.’ என்று நினைத்தான்.

அனைவரின் வேண்டுதலும்,  அவனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று தான்.

.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Eswari

Story MakerYears Of MembershipContent Author

18,19,மாறனின் அ(ன்)ம்பு

22,23,மாறனின் அ(ன்)ம்பு