in , ,

18,19,மாறனின் அ(ன்)ம்பு

அன்பு – 18

அன்பு தனது ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டே ‘கடவுளே காப்பாத்து. எங்க வீட்டில் யாரும் என்னைப் பார்த்திடக் கூடாது’ என்று வேண்டிக்கொண்டே தன்னவனோடு பேசப்போகும் ஆவலில் வந்து கொண்டிருக்க, மாறன் அவளுக்கு முன் அங்கே சென்று தன்னவளின் வரவிற்காய் காத்து நின்றான். 

மாறனின் மலர்ந்த முகத்தைக் கண்ட அருள், “என்ன மச்சி? முகமெல்லாம் சிவந்து பளிச்சுன்னு பல்பு எரியுது.”

மாறனோ… “அப்படியா? அதெல்லாம் இல்லையே!” என்று சொல்லிக் கொண்டே நொடிக்கொரு முறை வாயிலையே பார்த்தவன், பின் அங்கே நின்றிருந்த கார் கண்ணாடியின் முன், கலைந்திருந்த கேசத்தை தனது விரல்களால் சரி செய்தான். அந்த நேரம் அன்பு தனது வாகனத்தை ஒர்க்‌ஷாஃப் முன் நிறுத்திவிட்டு நின்றிருந்தாள்.

அவளைக் கண்டதும் அருள், “நடத்து ராசா நடத்து, உன் காட்டுல மழை பெய்யுது…” என்று சொன்னவன், அங்கே இருந்த எழிலைப் பார்த்தான். 

அங்கே அவனோ ஒரு வாகனத்தை பிரித்துப் போட்டு அதன் பாகங்களை உற்று கவனித்துக் கொண்டிருந்தான். அருள் அவனின் அருகே சென்று, அவனின் முதுகில் ஒரு மிதி மிதித்து, “டேய் விளங்காதவனே! கொஞ்சம் திரும்பி அங்க பாரு! உனக்கு பின்னாடி கல்யாணம் முடிச்சவன், அந்தப் பிள்ளையை கரெக்ட் பண்ணி, ஒர்க் ஷாப்புக்கு கூட்டிட்டு வந்துட்டான். விவரம் தெரிஞ்சப்ப இருந்து அவன் கூடத்தான இருக்க. ஒன்னு ரெண்டு கற்றிருக்கலாம் இல்லையா?  வீட்டுல போயி பொண்டாட்டியை கரெக்ட் பண்றதை விட்டுட்டு, 24 மணி நேரமும் வண்டிங்களோடவே  குடும்பம் நடத்தினால் நல்லதெல்லாம் எப்படி நடக்கும்?”

எழில் பாவமாய் முகத்தை வைத்து, “நான் உயிரோட இருக்கிறதில உனக்கு விருப்பமில்லையா, ராசா?”

“ஏண்டா அப்படி சொல்ற?”

“நான் மட்டும் அவ கிட்ட போயி ஏதாவது விரும்புறேன்னு சொன்னேன் வை. கத்தியை எடுத்து ஒரே குத்து குத்திடுவாள்.”

“நீ எல்லாம் பிறக்காமலே இருந்திருக்கலாம்டா. உன் வாழ்க்கையில ஒரு நல்லது நடக்கணும்மென்றால், நீ ஏதாவது முயற்சி செய்தால் தானே நடக்கும்.”

“எழில் எழுந்து தன் கைகளைத் தட்டிக் கொண்டே, இன்னைக்கு நீ என் வீட்டுக்கு வரணும், மச்சான்!  வெண்பாக்கு உன்னைப் பாக்கணும் என்று ஆசையாய் இருக்காம்.”

அருள் கண் விரித்து, “என் மேலயா? யாரு வெண்பாவிற்கா?” என்று கேட்க, 

எழில் “ஆமாம், மச்சான்!”

அருள்… “டேய் சதிகாரா…! அதுவும் என்னைப் பார்க்கனுமென்று அவசொன்னாளா? டேய்…! உன்னோட திட்டம் என்னனு புரிஞ்சிடுச்சு, ஏற்கனவே அவ பார்வையிலேயே என்னை ஏதோ கொலைகாரனைப் பார்க்கிற மாதிரியே பாத்துட்டு இருக்கா. இன்னைக்கு வீட்டுக்கு வந்தால், கண்டிப்பா உனக்கு பதில் கத்தி எடுத்து என்னைக் குத்திடுவா.  பிள்ளையப் பெத்து வைக்கச் சொன்னா, பிசாசைப் பெற்று வச்சிருக்காங்க!” என்று  திட்டவும், 

எழில் பட்டென்று  அவன் மண்டையில் கொட்டி, “அவளை எதுக்குடா திட்டுற?”

“உன்னை கேவலமாக திட்டி வெளியே அனுப்பும் அவளுக்காக, உன் கூடவே சுத்துற என்னை அடிச்சிட்டயேடா!”

அதற்குள் அன்பு உள்ளே வரவும், எழில் அங்கிருந்த கடைப் பசங்களை, “டேய்! எல்லாரும் போய் டீ சாப்பிட்டு வாங்க!” என்று சொல்லிவிட்டு, 

அருளை வம்படியாய் அழைத்துக் கொண்டு  வெளியே சென்றான்.

உள்ளே வந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருக்க, ஒர்க்ஷாஃபிற்குள் இருந்த தனி சிறு அறையில் அமர வைத்தான். அங்கே அடித்த டீசல் பெட்ரோல் மற்றும் சில ஆயில் வாடைகளால் பெண்ணவள் முகத்தை சுழிக்க, அதை அறிந்தவன் “உனக்கு டீசல் வாடை பிடிக்கலையா?”

தலையாட்டி, “எனக்கு டீசல் ஸ்மல் சுத்தமாய்ப் பிடிக்காது” என்றதும், 

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி, “அப்புறம் எப்படி என்னை ஏற்றுக் கொள்வாய்?  பெட்ரோல்-டீசல் வாடையிலே வாழும் நான் எங்கே… அந்த வாடையே பிடிக்காத நீ எங்கே?”

உடனே வேகமாய் அங்கேயிருந்த பெட்ரோல் டின்னில் கொஞ்சம் சாய்த்து,  கைகளில் தேய்த்து அதை நுகர்ந்தாள்.

மாறன் அங்கிருந்து துணியை எடுத்து, அவளின் கைகளை துடைத்துக் கொண்டே, “எதுக்கு இதெல்லாம் பண்ற?”

“பெட்ரோல் டீசலில் வாழும் நீங்களும், உங்களோடு வாழப்போகும் நானும் தானே வருங்காலத்தில் நிரந்தரம். அதனாலதான் இப்போது இருந்தே இதெல்லாம் நுகர்ந்து பழகிக்கலாம் என்று…”

மாறன் பெண்ணவளின் கண்களைப் பார்த்தான். ஆடவன் பார்வை தன் முகத்திலேயே இருக்க, ஏனோ அன்பரசியால் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள். அந்த நேரத்தில் கூட மங்கையவளின் மனதில் சாரல் தான். காரணம் தாலிகட்டிய மனைவி என்றாலும், உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்லாமல், தன்னவன் பார்வை தன் கண்களில் மட்டுமே மையம் கொண்டிருந்ததால்.  

“ஏன் என்னை இப்படிப் பார்க்கறீங்க?” என்று கேட்டதும், தன் அடர்ந்த மீசையை திருக்கிக் கொண்டே… 

“அந்த காலத்தில் தொல்காப்பியம், குறுந்தொகை மற்றும், நம்ம  திருவள்ளுவர், கம்பன், எல்லாம் பெண்ணவளின் கண்களை வர்ணித்து பாடல் எழுதி இருக்கிறார்கள். அது எவ்வளவு உண்மை என்று நினைத்தேன்.”

“அப்படி என்ன சொல்லியிருக்காங்க?”

தொல்காப்பித்தில் உள்ள களவியலிலுள்ள பாடலில்  காதலில் தபால் காரனே கண்கள் தானாம். கண்கள்தான் காதலை வெளிப்படுத்துமாம். அதைப் புரிந்துக் கொண்டால் இருவருக்கும் காதல் என்று அர்த்தம்.  

பெண்ணவள் வெட்கப்பட்டு, “அப்படியா, அப்போ என் கண்கள் என்ன சொல்லுது?”

ஆடவனின் குரலில் கூட ஒரு வெட்கமும் ஒரு தவிப்பும் தட்டுப்பட்டது போல, ஆண்மை ததும்பும் குரலில், ஒரு கிரகத்துடன் “என்னென்னமோ தெரியுது…” என்றான்.

“எப்படித் தெரியுது?”

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங் 

கதனை கொண்டன்ன துடைத்து      

என்று திருக்குறள் சொன்னவனைப் பார்த்து,

“எதுக்கு இப்போ குரல் சொல்றீங்க? நான் என்ன குரல் போட்டியா நடத்துறேன்?” 

சிரித்தவன் “அணங்கு என்றால் யானைப் படையை குறிக்கும். திருவள்ளுவர் இந்த குறளுக்கு சொல்லப்பட்ட உவமை, பெண்ணின்  பார்வை எப்படி இருக்கிறதாம் என்றால், ஒரு யானைப் படையே வந்து மோதுவது போல் இருக்கிறதாம்.”   

“பரவாயில்லையே, திருக்குறள் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!” என்று வெட்கப்பட்டு சொன்னவளிடம்,

“உன் அளவுக்கு எனக்கு கவிதை அனுப்பத் தெரியாது. ஆனால் அடுத்தவரின் கவிதையை வாசித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு கொஞ்சம் தெரியும்.”

அந்த நேரம் கடையில் வேலை செய்பவன்,  ஒரு டீ கஃப்பை கொண்டு வந்து நீட்ட, அவன் கைகளில் இருக்கும் டீசல் கரையைப் பார்த்தாள். சுத்தமில்லாத அந்த கையோடு அவன் தேநீர் கோப்பையை எடுத்து வரவும்,  அதைப் பார்த்து  வாங்கத் தயங்கினாள். 

மாறன் அதை வாங்கிக்கொண்டு, “நீ போடா!” என்று என்று அவனை அனுப்பிவிட்டு, பின் அவளை நிமிர்ந்து பார்த்து, “நானும் பல நேரம் இப்படித்தான் இருக்க வேண்டியிருக்கும். உன் ஒவ்வாமை என்னையும் தாக்குமே…!” என்று சொல்லிக்கொண்டே அவன் அந்த டீயை பருக,

பெண்ணவள் அவன் கையிலிருந்து அந்தக் கோப்பையை பிடுங்கி, அவன் குடித்த பக்கத்திலேயே தன் இதழ் வைத்து, ரசித்து ருசித்து ஒவ்வொரு மிடராய் குடிக்க ஆரம்பித்தாள். அந்த நேரம் மாறன் எழுந்து பெண்ணவளின் அருகே வரவும், சொல்லமலே தன் உடல் நடுங்க, கையிலிருக்கும் கோப்பை நடுங்கி மாறனின் மேல் கொட்டவும், தான் அணிந்திருந்த சட்டையைக் கழட்டி, பணியனுடம் நின்றவனைக் கண்டதும், 

அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்

அவன் மார்பினில் முடிகள் பிடிக்கும் 

அய்யோ சந்தன நிறமோ பிடிக்கும் 

கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும் 

என் அவனுக்கு மட்டும் 

யானை பலத்தில் ஏழு மடங்காச்சே

அவன் ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே

 நான் உயிரை வளர்த்தேனே—!

பெண்ணவளின் மனதிற்கு விருப்பமான பாடலொன்று, அவனைப் பார்த்ததும் உதிர்த்துச் சென்றது. 

அலசிய சட்டையை அங்கே ஆணியில் மாட்டியவன், சட்டையில்லாமல் அவள் முன் நிற்கக் கூசி மின் விசிறியின் முன் நின்றான்.

அவனின் மேலாடையில்லா மேனியைக் கண்டதும், பதறியவள் வேகமாய் கண்களை மூடிக்கொண்டாள். 

பின் நினைவில் ஒன்று தோன்ற ஆசையாய் அங்கே ஆணியில் மாட்டியிருந்த சட்டையைப் எடுத்து அவன் வாசம் நுகர்ந்தவள், தன் கணவனின் வியர்வையின் வாசம் பிடித்தவள், தன்னவன் சட்டையை, ஆசையாய் எடுத்து, அணிந்து கொண்டவளுக்கு, கட்டியணைப்பதை விட இது கூட சுகமான உணர்வைத் தருவதாய் உணர்ந்தாள். 

பின் அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காய் திரும்பியவன், அவளின் செயல்கண்டு, “ஹேய் சட்டை முழுவதும் வியர்வையால் நனைந்திருக்கு.”    

“தெரிந்துதான் மாட்டி இருக்கேன்.” என்று சொன்னவளையே பார்த்தான். 

இருவரின் கண்களும் பார்வையால் ஒன்றாகிவிட, அங்கே வாய்ப் பேச்சு அற்றுப் போனது.

ஏனோ பரிட்சை வைத்து தேர்வாகும் குழந்தை போல, தனது ஒவ்வொரு கேள்விக்கும், செயலால் பதில் அளித்து, தன் மனம் என்னும் ஏணிப்படியில் ஏறிக் கொண்டே இருந்தவளை, வைத்த கண் வாங்காமல் பார்த்தான். பின் மெல்ல நெருங்கி வந்து, மங்கையவளின் காதுக்குள், 

“காதல் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தெளிவையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல சிநேகிதியையும் கொடுக்குமாயின், சாகும்வரை காதலித்துக் கொண்டே இருக்கலாம் என்று எழுத்தாளார் பாலகுமாரன் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த உலகத்தில் நீ எனக்கு கிடைத்த வரம்.” என்றவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

இரு உள்ளங்கள் சங்கமிக்கும் நேரத்தில், மாறன் ஒன்றைப் புரிந்து கொண்டாண்.

அன்பரசி, தனக்காக, தன் மேல்கொண்ட, காதலுக்காக அனைத்தையும் இழக்கத் துணிந்து விட்டாளென்று.  

தன் மார்பில் சாய்ந்தவளை இறுக்கி அனைக்கும் போது, ஏதோ ஒன்று குத்த, “ஷ் ஆ” என்றதும்,

மங்கையவள் விலகி நின்று, “என்னாச்சு?”

“ஏதோ குத்துது.” என்றதும்,

பெண்ணவள் தன் மார்பில் கை வைத்துப் பார்க்க, தாலி. புன்னகையோடு தாலியை எடுத்து நீட்ட, 

“எத்தனை நாளைக்கு, இதை நீ மறைச்சு வைப்ப?” என்று கேட்டவனைப் பார்த்தவள்,

“எங்கவீட்டிற்கு வந்து எப்போது, நீங்க என்னைக் கூப்பிடுறீங்களோ அது வரைக்கும்.”

“நான் வந்து கூப்பிட்டும், அவங்க, உன்னை என்னுடன் அனுப்ப சம்மதிக்காவிட்டால், அப்ப என்ன பண்ணுவ?”

“நீங்க முறையாய் வந்து கூப்பிடுங்க. அப்போது அவங்க மறுத்தால், நான் உங்களின் கையப் பிடிச்சுகிட்டு  உங்க கூடவே வந்து விடுவேன்.”

“நிஜமா…?” என்றவனைப் பார்த்து 

“நிஜம்தான்.”

அதுவரை கொஞ்சம் தள்ளி நின்றவன், சட்டென்று இறுக்கியணைத்து, தனது முதல் அன்பை நெற்றியில் முத்தமாய் பதித்தான்.

பெண்ணவளின் செந்நிற இதழ்கள், தன்னை வா என்று அழைப்பது போலிருந்தது. ஆனாலும், ‘தன்னை நம்பி வந்தவளை, இதுதான் சமயமென்று இருட்டு அறையில் தனித்துக் கிடப்பவளை, அனுபவிப்பது ஆண்மகனுக்கு அழகு இல்லை’ என்று நினைத்தவன், அவளை விட்டு ஒதுங்கி நின்றான்.  

ஏனோ அவன் விலகல் கண்டு, ஒரு மாதிரி முழித்து, “ஏன்? என்னை உங்களுக்கு பிடிக்கலையா?”

“ரொம்ப ரொம்பப் புடிச்சிருக்கு. ஆனால் அதுக்குன்னு ஒரு இடமும், காலமும் இருக்கு. இந்த மாதிரி கிடைத்த இடத்தில் எல்லாம் தவறாய் நடந்தால், அது ஆண்மகனுக்கு நல்லதல்ல.”

விலகி நின்றவளுக்கு, இந்தப் பதிலில் ஆடவன் தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வதை உணர்ந்தவள்,  யோசிக்காமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டே, “சரி சீக்கிரம் வந்து கூட்டிட்டு போங்க.”

“கூட்டிட்டுப் போறேன். அதுக்காக நீ ரெண்டு மாசம் காத்திருக்கனும்.” 

“இன்னும் ரெண்டு மாதமா?” என்று ஏக்கமாய் கேட்டவளைப் பார்த்தவன், 

“திருவிழா வருது, அதனால தான்!” 

“திருவிழாவிற்கும், என்னை கூட்டிப் போறதுக்கும் என்ன சம்பந்தம்?” 

“ஏற்கனவே ஊரில் இருக்கிறவங்க, திருவிழாவில் உங்க அப்பாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை வருமோன்னு பயந்துட்டு இருக்காங்க! இந்த நேரத்தில் நான் உன்னை கூட்டிட்டு போனேன் வை. இதை வைத்தே  உங்கப்பா திருவிழாவை நடத்த விடாமல் பண்ணி விடுவார். என்னால் இந்த ஊருக்கு நல்லது மட்டுமே நடக்கனும், கெட்டது எதுவும் நடக்கக்கூடாது.”

“ஒன்னு ரெண்டு மாதமா, சரி ஓகே!” பின்,  

“ஹோ… இன்னும் ரெண்டு நாளைக்கு உங்களை பார்க்க முடியாது.” என்று சொன்னவளைப் பார்த்தவன்,

“ஏன் என்னாச்சு?”

“அதுவா, வீட்டில் காயத்ரி அக்காவுக்கு கல்யாணம். எங்கேயும் போக முடியாது.”

“ஹேய்… பார்க்கத்தானே முடியாது, பேசலாமே…!”

“வீட்டில் எந்த நேரமும் ஆட்கள் இருப்பார்கள். யாருமில்லாட்டி, மெசேஜ் பண்றேன். நேரமாச்சு, கிளம்பட்டுமா?”

“சீக்கிரம் கிளம்பு. அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது.” என்றவனை காதலோடு நோக்கிவிட்டு, 

“சீக்கிரம் வாங்க, அதுதான் நமக்கு நல்லது.” என்று  தன் இருகண்களையும் சிமிட்டி, தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

……………

இங்கே காயத்ரி அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த கதிரையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை யாரோ குறுகுறுவென பார்க்கும் பார்வை அறிந்தவன், திரும்பிய போது அங்கேயிருந்த காயத்ரியைப் பார்த்து, “நீ என்னைக் கூப்பிட்டாயா?”

பெண்னவளுக்கோ மனசுக்குள் இவனை நினைத்தால், இவனுக்கு கேட்கிறதே எனப் பார்த்தாள். பின் பொய்யாய் இல்லை என்றவளின் சோர்வான முகத்தைப் பார்த்து, 

“ஹோ, நான் கூட நீ என்னைக் கூப்பிட்டாயோவென நினைத்தேன்.” என்று சொல்லியவன்,

“ஹேய்…! உனக்கு என்ன ஆச்சு? பார்க்கும் நேரமெல்லாம் முகம் உம்மென்று இருக்கு. ஏதாவது பிரச்சனையா? இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா?” என்றவனைப் பார்த்து கண் கலங்கினாள்.

காயத்ரி சுற்றும் முற்றும் விழிகளால் நோட்டம் விட்டு, அங்கே யாரும் இல்லை என்ற பின், “எனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலை!”

அதிர்ச்சியானவன், “லூசா நீ! நாளைக்கு கல்யாணத்த வச்சுகிட்டு, இன்னிக்கு வந்து சொல்ற!” 

பெண்னவளோ கலங்கிய விழிகளுடன், “இத்தனை நாள் கேட்காமல் இன்னிக்கு வந்து கேட்கிறடா! நான் சோகமாய் இருக்கிறது உனக்கு இன்றுதான் தெரியுமா?”  

கதிர் கோபமாய், “ஹேய்…! உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்காவிட்டால், நீ முதலிலேயே சொல்லி இருக்கலாமே. வீட்ல பேசி இதை தடுத்து நிறுத்தி இருக்கலாம். எல்லாப் பெண்ணுங்களும் இப்படியே இருக்கீங்க? வீட்ல சொல்வதற்காக கல்யாணம் பண்ணிட்டு, அப்புறம் வருத்தப்பட வேண்டியது. ஏற்கனவே ஒருத்தி என்னைப் போட்டு டார்ச்சர் பண்றா. இப்போ நீ வேறயா?”

யார் அந்த பொண்ணு என்று பதட்டமாய் கேட்டு, அவளிடம் நடந்த அத்தனையும் ஒரு நிமிடத்தில் சொல்லி, “நான் அவளைப் பார்த்த அடுத்த நிமிஷத்தில் இருந்தே, என் மனசுக்குள்ள வந்து உட்கார்ந்து விட்டாள். இப்போ ரெண்டுங்கெட்டான் மாதிரி கட்டிக்கிட்டவனோடு வாழவும் முடியாமல், நேசித்த என்னைக் கட்டிக்க முடியாமலும் படாத பாடு படுறா.”

ஏனோ, அந்த நிமிடம் காயத்ரியின் உயிரில் ஏற்படுகின்ற வலி, சொல்லி மாளாது. தன் இதயத்தை யாரோ புடுங்கி, உயிரற்ற உடலாய் நடமாட விட்டது போல் ஒரு உணர்வு.

‘அவன் மனதில் தான் இல்லை என்ற வலியை விட இன்னொருத்தி அந்த மனதில் குடியிருக்கிறாள் என்று தெரிந்த அடுத்த நொடி, தன் மொத்த வாழ்க்கையும் சிதைந்தது போல் தோன்றவும், இங்கே இருந்து தொடர்ந்து இவன் முகம் பார்த்து, பார்த்து, சாவதைக் காட்டிலும் தெரியாதவனோடு வாழ்ந்துவிடலாம்.’ என்று நினைத்தவள், ஒரு  புது வாழ்க்கைக்கு தன்னை தயார் படுத்தி கீழே இறங்கி வந்தாள்.

வீட்டில் கல்யாணக் கலை அமோகமாக நடந்தது. ஒரு வழியாக திருமணம் நாளும் வந்து, அனைவரின் முன்னிலையில் மாப்பிள்ளையான வெற்றி பெண்ணவளின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு விட்டான். அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாத பேதை, தன் முன்னே நின்று தன் மேல் அச்சத்தை தூவும் கதிரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.     

அன்பு வளரும்..

அன்பு – 19

புது மணத் தம்பதிகளுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்து முடித்து, இறுதியாக இல்லற வாழ்க்க்கையைத் தொடங்கும் சடங்கான முதலிரவிற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தனர். காயத்ரியை அலங்காரம் செய்த அவளின் அக்காவான அகல்யா, எல்லாம் முடித்து “நீ செமையாய் இருக்கடி. உன் ஹஸ்பண்ட் உன்னிடமே கட்டுப்பட்டு இருக்கணும் என்றால், இந்த நாளில் எல்லாத்துக்கும் ஓகே சொல்லிடு. அப்போதுதான் அவன் உன் பேச்சை கேட்பான்.” என்று சொல்லி, முதலிரவு அறையில் விட்டுவிட்டுச் சென்றாள்.

அந்த அறையின் படுக்கையில் விதவிதமான மலர்கள் பார்த்ததும், சிறு பெண்ணின் நெஞ்சாங் கூட்டில் நடுக்கம் ஏற்பட்டு, பயத்தில் கட்டிலின் ஓரத்தில் போய் அமர்ந்து இருந்தாள். அங்கு கட்டிலின் அருகே பழங்கள், இனிப்புகள், ஊதுபத்தி வாசம், எனப் பார்த்ததும், இந்த அலங்காரமெல்லாம்  திரைப்படத்தில் மட்டும்தான் போல் என்று நினைத்தவளுக்கு, தனக்கும் சினிமாவில் பார்த்தது  போல் வைக்கவும், நிஜத்திலும் இதெல்லாம் வைப்பார்களோ என வெறுப்பாய் இருந்தது.

காயத்ரியின் மனமோ முதலிரவோடு தொடர் பில்லாமல், தன் வீட்டில் வாழும் ஆடவன் மேல் நினைவுகளை வைத்து மனம் அமைதியற்று இருந்தது. கதிரின் முகமும் அவன் செயல்களுமே மனத்திரையில் வந்து கொண்டிருந்தது.

உடலளவில் பலசாலியான வெற்றிக்கு, முதலிரவு நாளில், இதுவரை ஹாய், பை தவிர எதுவும் பேசாத பெண்ணுடன், தனிமையில் தள்ளப்படும் போது, ஆடவன் மனதுக்குள் ஒருவித அச்சம், பீதி முதலிரவை நினைத்து ஒருவித பயமும் வந்தது.

தன்னைப்போல் தானே அவளுக்கும் இருக்கும் என நினைத்து உள்ளே வர, அங்கே முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்து இருந்தவளைப் பார்த்தான். நித்தமும் வேலை, ஓயாத அரசியல் வாழ்க்கை என்று நிற்க நேரமில்லாமல் ஓடியவனுக்கு, ஒரு பெண்ணுடன் தனிமையில் பழகப்போவது இதுவே முதல் முறை.

தனது தொண்டையைச் செருமி தன் வருகையை அவளுக்குக் காட்ட, இருமல் சத்தம் கேட்டதும் பெண்ணவள் கட்டிலில் இருந்து குதித்து எழுந்து நின்றாள்.

“ஹேய்…! எதுக்கு இப்படி பயப்படுற?”

அவனின் கேள்விக்கு பெண்ணவளின் மெளனமே பதிலாக இருந்தது. தன்னைப் பார்த்து பயப்படுகிறாள் போல் என்று நினைத்தவன், அவளின் அருகே வந்து முகம் பார்த்தான்.

பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் மனம் வருடும் பெண்ணாய்த் தான் தெரிந்தாள். மெல்ல அவளின் கையைப் பிடிக்க, அவளின் கைவிரல்கள் நடுங்கியது. அந்த நடுக்கத்தைப் போக்கும் பொருட்டு, தனது இரண்டு கையை வைத்து அதில் ஒரு அழுத்தம் கொடுத்து “பயப்படாதே!” என்றான்.

அப்படி இருந்தும் அவள் உடல் நடுங்குவதைக் கண்டவன், கோபம் வந்து என்னை பார்த்தால் எப்படி தெரியுது என்று குரலை உயர்த்திக் கேட்க,  இன்னும் மிரண்டு விட்டாள்.

இவளை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று தெரியாமல், அவளின் அருகே நெருங்கிச் செல்ல, அவளோ பயத்தில் கட்டிலை ஒட்டி நின்றாள். ஆடவன் நெருங்கும் நேரம் பெண்ணவள், பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து நிலை கொள்ளாமல் வானத்தைப் பார்த்து கட்டிலில் விழுந்து விட்டாள்.

விழுந்தவள் அவனைப் பார்க்க, அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் தெரியவும், எழுவதற்கு முயற்சி செய்தாள். ஆடவன் அவளை நெருங்க, காயத்ரிக்கு அப்போது தான் பிடிக்காதவன் தன்னை நெருங்குவது, தன் உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டாள்.

தத்தித் தடுமாறி ஒரு வழியாய், அவனிடம் எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்லவும், “ஹேய்… அப்போ உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா? அப்புறம் எதுக்கு உங்க அம்மா எனக்கு கட்டி வெச்சாங்க?” வேகமாய் தனது கைபேசியை எடுத்து, 

“இப்பவே உன் அம்மா இங்க வரணும், அவங்களை  கூப்பிடுறேன்.” என்றதும் பயந்தவள், 

“ஹய்யோ! அம்மாவை எதுக்கு கூப்பிடுறீங்க?”

“உனக்குத்தான் என்னை பிடிக்கலையே…! அப்புறம்…” என்று செல்போன்களில் விசாலாட்சியின் எண்களை தட்டச்சு செய்து கொண்டிருப்பவனின் அருகில் சென்று,

“இதுக்காக எதுக்கு அம்மாவிற்கு கூப்பிடுறீங்க?  எனக்கு விருப்பம் தா… கொஞ்சம் பயமா இருக்கு,” என்று முதலிரவைக் காட்டிலும், தன் அம்மாவின் மேல் கொண்ட பயத்தில் நடுங்கினாள்.

சட்டென்று அவன் மனம் அமைதி அடைந்தது. காரணம் பல லட்சாதிபதிகள் தனக்கு பெண் கொடுக்க வரிசையில் தூதுவிட்டும், தனது அப்பா இவளை தேர்ந்தெடுத்திருக்கும் பொழுது, இவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லையோ என்றதும், அந்தக் கோபத்தால் அழைத்தவன், பின் பெண்ணவளின் நிலையை புரிந்துக் கொண்டு, 

“நான் மென்மையாக நடந்துக்கிறேன். பயப்படாதே…!” என்றதும்,

காயத்ரி புரியாமல் அவனையே பார்த்தாள். அவனோ “அப்போ அடுத்த கட்டத்திற்கு போலாமா?” என்று செயலிலும் இறங்கினான்.

அவன் தன்னை தீண்டும் நொடியில் எல்லாம், பெண்ணவள் இறந்து கொண்டே இருந்தாள். செத்து செத்து பிழைப்பது இதுதான் போலும் என்பதை முதன் முறையாக உணர்ந்தாள். அவன் தனது கடமையை செய்து முடித்து, கட்டிலில் விழுந்தான். பெண்ணவள் அடுத்தநொடி வேகமாய் குளியலறை சென்று, அவன் கைப்பட்ட இடமெல்லாம் நீரால் கழுவி, சத்தமில்லாமல் அழுதவள், வலிகளை எல்லாம் கண்ணீரால் வெளிப்படுத்தினாள்.  அவனின் தொடுகை அனைத்தும் அருவெருப்பாய் தோன்ற, குமட்டலின் மூலம் அது வாந்தியாய் வெளி வந்தது. 

ஏற்கனவே கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிடாததும், வயிற்றிலிருக்கும் கொஞ்சமும் வாந்தியின் மூலம் வெளியேறிவிட பெண்ணவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள். உடல் அசதியில் படுத்து இருந்தவன் வெகுநேரமாகியும் கழிவறை சென்றவள் வராததால், எழுந்து போய் பார்க்க அங்கே மயங்கிக் கிடந்தவளைக் கண்டதும், பயந்து விட்டான்.

பின் வெற்றி அவளது ஆடைகளை சரிசெய்து, தானும் ஆடை மாற்றிக் கொண்டு, வேகமாக கீழே சென்று தனது பெற்றோரை அழைத்தான். அவர்கள் குடும்ப மருத்துவரை வீட்டிற்கு அழைத்தார்கள்.

மருத்துவர் அவளை பரிசோதித்து அவள் சரியாக சாப்பிடாமல் இருக்கிறாள். கல்யாணமென்றதும் சில பெண்களுக்கு வரும் மேரேஜ் ஃபீவர் தான்.

பின் மருத்துவர் வெற்றியிடம் தனியாய் பேசனுமென்று சொல்லி, அவனை தனியே அழைத்து, “ஏன் வெற்றி ஒரு பெண் அனைத்தையும் விட்டுவிட்டு உன்கைபிடித்து வீட்டிற்கு வந்திருக்கிறாள். உன் குடும்பத்தை நினைத்து ஏற்கனவே அவளுக்கு மனதுக்குள் பல பயம் இருந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் தன் கணவன் ஒருவன் இருக்கிறான். அவன் பார்த்துப்பான் என்ற தைரியத்தில் தானே வந்திருப்பாள். ஆனால் நீயோ  இன்றிரவே முதல் இரவுவை நடத்தியிருக்கிறாய். இல்லறம் இன்றே தொடங்கி விடனும் என்று எதுவும் கட்டாயமா?

பெண்ணவளின் மனதுக்குள் நுழைந்து அவள் உடலைத் தொட்டு இருந்தால், இந்த உலகத்தில் தராத சந்தோஷத்தை எல்லாம் பெண்ணவள் உனக்கு இரட்டிப்பாய் திருப்பித் தந்து இருப்பாள்.  பகுத்தறியத் தானே படிப்பு. நீ பெரிய  படிப்பெல்லாம் படித்தற்கு ஒரு நியாயம் வேண்டாமா? 

அந்தக் காலத்தில் தான் உற்றார் உறவினரின் வற்புறுத்தலால் பெண்ணின் மனதில் என்ன இருக்கு என்று தெரியாமல், ஒரு இருட்டு அறையில் கணவனுடன் தள்ளி விடுவார்கள். அங்கே அந்த ஆடவன் மகிழ்ந்தானோ இல்லையோ, அந்த பெண் கண்டிப்பாக விட்டில் புழுவைப் போல துடித்துக் கொண்டே தான் இருந்திருப்பாள்.  நம் தாத்தாக்கள் போல் உடலைத் தொட்ட பின், பெண்களின் மனதை அடையலாம் என்று நினைத்திருக்கிறாய். காதலித்து காமம் செய். உன் வாழ்க்கை சிறக்கும். இனிமேல் அவள் அனுமதி இல்லாமல் அத்துமீறாதே!” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். 

ஏனோ ஆடவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. ஒருவேளை அவள் விருப்பத்திற்காக சில நாள் காத்திருக்கலாமோ என்று. அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அயர்ந்து விட்டான். காயத்ரிக்கு உடலில் வெப்பம் கூடி குளிர் காய்ச்சல் அதிகமாகி மருத்துவமனையில் காட்டி பின் மீண்டும் பெற்றவர் வீட்டில் கொண்டு வந்துவிட்டனர்.

அகல்யா “அடியே! இதுக்கெல்லாம் மருத்துவமனை போவாங்களா?  இதுக்கு போய் ஊசி போட்டு அழைத்து வந்திருக்கிறாரே, இந்த வெற்றி” என காயத்ரியைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். 

காய்ச்சல் வந்தால் ஊசி போடுவது வழக்கம் தானே, “அக்கா! இதுக்கு எதுக்கு நீ சிரிக்கிற?”

“ஏனென்றால், இது முதலிரவு காய்ச்சல்டி. முதலிரவு முடிந்தால் பல பெண்களுக்கு காய்ச்சல் வருவது இயல்புடி.”

தன் மனதை அறியாத, தன் வீட்டினர் தன்னைப் பார்த்து சிரிக்க, பெண்ணவள் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்தாள்.

அறையில் தனித்துக் கிடந்தவளை, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அவ்வப்போது வந்து பார்த்து செல்ல, அதேபோல் கதிரும் அன்று அவள் அறைக்கு வந்தான். “என்ன மேடம்? போன அன்னைக்கே, காய்ச்சல்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்களா?”

கோபமே படாத காயத்ரி அவனைப் பார்த்து, “ஏன், உனக்கு நான் இங்க வந்திருக்கிறது பிரச்சனையா?” என்று எரிந்து விழவும், 

புரியாத கதிர், “ஹேய் நீ இப்படியெல்லாம் பேச மாட்டியே…! உனக்கு என்ன ஆச்சு?”

ஏனோ முதலிரவில்  தனக்கு தாலி கட்டியவன் நடந்து கொண்டது நினைவு வர, அதற்கெல்லாம் காரணம் கதிர்தான். இவன் மட்டும் தன்னை நேசித்திருந்தால், நம்ம போய் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டி வந்திருக்காது என்று நினைத்தவள், அவன் சட்டையைப் பிடித்து,

“எல்லாத்துக்கும் காரணம் நீதான். உன்னால் தான் என் வாழ்க்கை போச்சு. சின்ன வயதில் இருந்து உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். பக்கத்துல இருக்கும் போது நீ செய்யுற குறும்புத்தனம் எப்போதும் நகைச்சுவையா பேசுறது, நேர்த்தியாய் ஆடை அணிவது, கறுப்பாய் இருந்தாலும் கலையாய் இருப்பது, காலேஜ் போகும் போதும் வரும்போதும் பல ஆண்களை கடந்து போயிருக்கிறேன். ஆனால் யாரைப் பார்த்தாலும் கதிர் மாதிரி மீசை அழகாய் இல்லையே  என்று தோணும். 

நான் காணும் சின்ன சின்ன விஷயத்தில் கூட,  உன்னை மட்டுமே ரசித்து ரசித்து கடைசியில் ஒருவன் என்னைத் தொடும் போது தான்,  மொத்த அருவருப்பையும் நேற்று அவன் தொடுகையில்  நான் உணர்ந்தேன். நீ ஒண்ணும் பேரழகன் கிடையாதுடா. ஆனால், இந்த உலகத்தில் என் கண்ணுக்கு அழகனென்றால் அது நீ மட்டும் தான்.

உன்னைத் தவிர என்னால் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியலடா!” என்று அழுபவளைப் பார்த்த கதிருக்கு நாவில் பேச்சுவராமல் நின்றான். 

அந்த நேரம் உள்ளே வந்த அகிலாண்டத்தைக் கண்ட காயத்ரி, கதிரின் சட்டையை விட்டு தள்ளி நின்றாள்.

இருவரும் இணைந்து “பாட்டி” என்று சொல்லவும்,  அகிலாண்டம் காயத்ரியைப் பார்த்து, “உனக்கு  கதிரை எவ்வளவு பிடிக்கும்?” 

“சின்ன வயசிலிருந்து பிடிக்கும் பாட்டி.”

“அப்போ, இத்தனை நாள் ஏன் சொல்லலை?”

“நான் நினைக்கிற மாதிரி கதிரும் நினைக்கனுமே பாட்டி. நான் காதலைச் சொல்லி, அவன் ஒத்துக்காமல்  உதறித் தள்ளிவிடுவானோ என்ற பயம்தான் பாட்டி. பல நாள் ராத்திரி யோசித்து யோசித்து பயத்தில் விட்டு விட்டேன்.  காதலைச் சொல்லணும்னு ஒருபக்கம் ஏங்கினாலும், சொன்னா ஏத்துக்க மாட்டானோ என்று மறுபக்கமும் மனதால் தினம் தினம் செத்து, பின் அவனே என்னைப் பார்க்குற மாதிரி ஏதாவது பண்ணனும்னு யோசிச்சு, விதவிதமாய் ஆடையணிந்தும் அவன் ஏறெடுத்துக் கூடப் பார்க்கலை. ஒரு கட்டத்திற்கு மேல் இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து   அவன் மனசில் என் மேல எந்த ஒரு விருப்பமும் இல்லை. அவனுடைய முகத்தைப் பார்த்துட்டு இருந்தாலே போதுமென்று நினைத்து விட்டேன்.”

“அழுகிற பிள்ளைக்குத் தான் பால் என்று உனக்கு தெரியாதா? சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாத எந்த ஒரு விஷயமும் காலங் கடந்து சொல்லும்போது அதற்கு எந்த உபயோகமும் இல்லை என்பது உன்  விஷயத்தில் புரிந்திருக்கும் தானே…!” 

பின் கதிரைப் பார்த்து, “உனக்கு இவளின் மேல் ஏதாவது விருப்பம் இருக்கா?”

அவனோ “இல்லை எனக்கு அன்புவை போலத்தான் காயத்ரியும். நான் ஒரு அக்காவைப் போல் தான் நினைத்தேன்.” என்றதும்,

காயத்ரியின் மனம் சுக்குநூறாய் உடைந்தது.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Eswari

Story MakerYears Of MembershipContent Author

நெஞ்சம்…

20,21,மாறனின் அ(ன்)ம்பு