in

தூக்கணாங்குருவிகள் 15

ராஜியை பார்த்துவிட்டு, தெய்வா வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அப்போது அழகி ஏதோ குழப்பமாய் இருப்பது போல இருக்க. அவள் அருகில் சென்றவன் “என்ன அழகி நின்னுகிட்டே தூக்கமா.” என்று கேட்க.

“விளையாடாத தெய்வா, ராஜிய நீ பாத்தியா, போலீஸ் ஸ்டேஷன் ல நடந்த கலவரத்துல அவள கவனிக்காமா இருந்துட்டேன். இங்க வந்து இவ்ளோ நேரமாச்சு இன்னமும் அவ வரல. இவ்ளோ நேரம் அவ வரலன்னா, நிச்சயம் ஏதோ பிரச்சனை தான். அவள நெனச்சு ரொம்ப கவலையா இருக்கு தெய்வா.” என்று புலம்பியவளிடம்.

“இப்போதான் அந்த வாயாடிய பாத்துட்டு வறேன். நல்லா தான் இருக்கா. என்ன அவ அப்பனும் அம்மாவும் கொஞ்சம் வஞ்சுபுட்டாய்ங்க போல, ஆனா நம்மாளு அதுக்கெல்லாம் அசையறவளா சொல்லு, நான் போனப்போ நல்லா தின்னுபுட்டு மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு இருந்தா  சும்மா ஒரு, ஒரு வாரம் பத்து நாள் நல்ல புள்ள மாதிரி அமைதியா இருந்துட்டு அப்பறம் இங்கதான் சுத்திட்டு இருக்க போரா, நீ அவள பத்தி ஏதும் கவலைப்படாத அழகி” என்று உண்மையை மறைத்து அழகி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னவன்

“சாப்பாடு ரெடியா…” என்று கேட்டுக்கொண்டே பாத்திரங்களை திறந்து பார்க்க, சமையல் எல்லாம் முடிந்திருந்தது. ஆனாலும் யாரும் சாப்பிட தயாராய் இல்லை. பின் தெய்வா தான் ஒரு வழியாய் பேசி பேசி, மதியழகனையும், இந்திராணியையும் சாப்பிட வைத்தான். அதுவரையிலும் இன்பரசன் வரவே இல்லை. தெய்வா போய் அழைத்தும் வருவதாக சொல்லி அனுப்பிவிட்டு, தன் நண்பர்களுடன் அவன் பேச்சை தொடர, இது வேலைக்காகாது என்று நினைத்த தெய்வா. அழகிக்கும் தனக்கும் சாப்பாடு எடுத்து வந்தவன்.

“அழகி வா, சாப்பிடுவோம். ரொம்ப பசிக்குது.”என்றழைக்க.

“மாமா வந்துரட்டும் தெய்வா, நான் அப்பறம் சாப்பிடறேன். நீ சாப்டு.” என்று சொல்ல.

“புருஷன் பாசம் எல்லாம் அப்பறம் காட்டிகலாம். இப்போ இருக்குற சூழலுக்கு அவன் வந்து உன்கூட உக்காந்து சாப்பிட போரானா, இல்லல. அப்பறம் என்ன, வா வந்து சாப்பிடு. அவன் வந்து எதாவதும் சொல்லி நீ மனசு கஷ்டப்பட்டு அப்பறம் சாப்பிடாம பட்டினியா தான் தூங்கனும். அதுனால இப்போ வா சாப்பிட்டுட்டு தெம்பா சமாளிப்போம், உன் புருஷன் கொம்பேறி மூக்கன.” என்றவன் விட்டால் ஊட்டி விட்டுவிடுவான் போல இருக்க. அழகியும் அவனுடன் சேர்ந்தே சாப்பிட அமர, இந்திராணியும் பரிமாறிய படி அங்கேயே அமர்ந்து விட்டார். 

அந்நேரம் கையில் பெரிய பையுடன்  உள்ளே வந்த இன்பரசன், இவர்கள் பக்கம் கூட திரும்பாமல் தன் அறைக்கு சென்றுவிட, அதை பார்த்து அழகி சாப்பிடாமல் முழிக்க. 

“என்ன அவன் வந்து ஊட்டி விடனுமா,” என்ற தெய்வாவை அவள் முறைக்க,

“அப்பறம் என்ன என்ன லுக்கு, ஒழுங்கா சாப்டு அழகி.” என்ற தெய்வாவின் தலையிலேயே ஒரு கொட்டு வைத்த இந்திராணி. 

“அழகின்னு சொல்லாதனு சொன்னேன்ல, திரும்பவும் அப்டியே சொல்ற, மதினி னு சொல்லு தெய்வம்.” என்று கட்டளையிட.

“இருபது வருஷத்துக்கும் மேல பழக்கம் ஆகிடுச்சுமா, ஒரே நாள்ல எப்டி மாறும் சொல்லு.” என்றவனிடம்,

“மாறும் தெய்வம் எங்களுக்கு மாறலயா சொல்லு, கல்யாணம் ஆன உடனே எங்க குடும்பமே வேறொன்னா மாறும் போது கூட நாங்க எங்கள அதுக்கு மாத்திக்கிடலையா. இந்தா உன் மதினி  இருக்காளே அவ கழுத்துல உங்க அண்ணன் தாலி கட்டி முழுசா அரை நாள் ஆகல. அவகிட்ட கேளு எது உன் வீடுன்னு, இந்த வூட்ட தான் சொல்லுவா. அந்த மாற்றத்தை ஏத்துகிற சக்திதான் இயற்கையா மனுஷனுக்கு கிடைச்ச பெரிய வரம், பொண்ணோ ஆணோ பச்சோந்தி மாதிரி தான், மாற வேண்டிய இடத்துல மாறிதான் ஆகணும். அதுதான் வாழ்க்கையை வாழ மனுஷனுக்கு இருக்க வேண்டிய  முக்கியமான தகுதி. மாற்றம் ஒண்ணும் தப்பு இல்ல. மாற்றம் மொத கஷ்டமா இருக்கும், சில நேரம் கொஞ்சம் கொழப்பமா கூட இருக்கும், ஆனா கடைசியில அதுதான் தெய்வம் அழகா இருக்கும். நீயும் மாறிடு. இன்னொருதடவ அவள அழகி னு கூப்ட்ட அம்புட்டுத்தான் சொல்லிபுட்டேன்.” என்றவர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட.

“மதினி … என் அழகி மதினி, கடைசியில என்னையும் மதினி னு கூப்பிட வச்சுடுவாங்கிய போலயே எங்க அம்மா இம்புட்டு பேசுமா…..” என்று தனக்குள்ளே  அவன் பேசிக்கொண்டிருக்க, 

“தெய்வா….. என்னடா கனவுக்குள்ள போய்ட்டியா.” என்று அழகி கேட்டதும், 

“நான் பேசுறது இருக்கட்டும். சாப்பிட்டு முடிச்சாச்சுல நீ போ, போய் அந்த கொம்பேறி மூக்கன சாப்பிட கூட்டிட்டு வா, வரானானு பாப்போம்.” என்று தெய்வா சொன்னதும்,

“அதான் தெய்வா பயமா இருக்கு, மாமா திட்டிடுச்சுன்னா என்னடா பண்றது.” என்றவளிடம்

“அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா. வாழ்க்கைன்னா சில அடிகள் விழ தான் செய்யும் போ போ….” என்று என்னதான் அவன் விளையாட்டாய் சொன்னாலும். அவன் உள்பட அனைவரும் நெஞ்சிலும் ஒரு பிரளயமே நடந்துகொண்டிருந்தது.

இன்பரசனின் அறை, இப்போது அவளுக்கும் அதுதான் அறை. உரிமையோடு, உள்ளம் நிறைந்த பூரிப்போடு வைத்திருக்க வேண்டிய தன் முதல் அடியை அந்த அறைக்குள், மனம் பூராவும் பயத்துடனும், படப்படப்புடனும், எடுத்து வைத்து உள்ளே சென்றாள். அந்த ஊரில் சில வீடுகளில் மட்டுமே படுக்கைஅறையுடன் கூடிய குளியலறையும் இருக்கும். இன்பரசன் அறையிலும் குளியலறை இருந்தது, உள்ளே வந்த அழகியின் கண்களுக்கு அவன் புலப்படவில்லை, அறையை சுற்றி சுற்றி அவனை தேட, குளியலறை உள்ளிருந்து வந்தவன், அங்கு அவள் இருப்பதையே பொருட்படுத்தாமல் சட்டையை கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு, துண்டை எடுத்து முகம் துடைத்தவன் அதே துண்டை தோளில் போட்டபடி, வெளியே வந்தவன், “அம்மா” என்றழைக்க, இந்திராணி அங்கில்லை. பின் அவனே அடுப்பங்கரைக்குள் சென்றவன் தட்டில் சாப்பாடை போட்டு கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட தொடங்க. இதை எல்லாம் அமைதியாய் பார்த்து கொண்டிருந்த அழகிக்கோ அவளிடம் அவன் பேசவில்லை என்றாலும் அவன் சாப்பிட்டு விட்டான் என்பதே மகிழ்ச்சியை குடுக்க. தெய்வாவிற்கோ பயம் அதிகமானது. காரணம் அவனிற்கு நன்றாக தெரியும், தன் அண்ணனின் உச்சப்பட்ச கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த அசுர அமைதி என்று. இந்த அமைதியை உடைப்பது அவ்வளவு சுலபமாக இருக்க போவதில்லை என்றும். இன்பரசனின் இந்த அமைதி அவனுக்குள் பீதியை உண்டாக்க, சாப்பிட்டு முடித்த இன்பரசன் மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட,  மீண்டும் அந்த அறைக்குள் போக  அழகி தயங்கி நிற்க. 

அவள் அங்கு நிற்பதை பார்த்து கொண்டே தன் அறைக்குள் சென்ற மதியழகன், இந்திராணியை அழைத்து, “அந்த பிள்ளையை உள்ள போய் தூங்க சொல்லு” என்று சொல்ல.

“அவ தயங்கி தயங்கி நிக்கிறா, அதான் நான் என்கூட தூங்க வச்சுக்கலாம்னு நெனச்சேன்” என்று ராணி(இந்திராணி) சொல்ல,

“இன்னைக்கு தயக்கமா இருக்குனு உன்கூட வச்சுகிட்டா என்னைக்கு தான் எல்லாம் சரி ஆகுறது. எதையும் தேவையில்லாம பழக்க படுத்தி, அப்பறமா அத மாத்த சங்கட பட்டு இது எல்லாம் தேவையே இல்ல. அங்கேயே போய் தூங்க சொல்லு.”

“இல்ல இன்பம் என்னமோ ஒரு மாதிரி இருக்கான். அழகி பிள்ளையும் இன்னும் படப்படப்பா தான் இருக்கு”

“அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும். அவக வாழ்க்கை, அவக முடிவு, நல்லது கெட்டத சேர்ந்தே கடந்து வரட்டும்.”

“இல்லைங்க இருந்தாலும்…”

“ராணி… சொல்றேன்ல, புரிஞ்சுகிட்டு செய்.” என்ற மதியழகன் சொல்லிற்கு மறுப்பில்லாமல் ராணியும் சென்று, அழகியை அறைக்குள் சென்று தூங்க சொல்லிவிட்டு சென்றுவிட. தெய்வாவும் வந்து, 

“இங்க பாரு அழகி, உனக்கு மட்டும் தான் தெரியும் இந்த கல்யாணத்துல இன்பாவுக்கு விருப்பம் இல்லன்னு, அம்மா அப்பாவுக்கு தெரியாது.கடைசி வரைக்கும் அத காப்பாத்து. போ போய் தூங்கு.  ஆமா உனக்கு ட்ரெஸ் எல்லாம் வேணும்ல, மாத்திக்க எதுவும் இருக்காது தான, பாரேன் நான் ஒரு பைத்தியம் சுத்தமா மறந்துட்டேன். இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ் பண்ணிக்கோ, காலைல மொத வேலை இதுதான்.” என்று சொல்ல.

“இல்ல தெய்வா, ட்ரெஸ் இருக்கு உங்க அண்ணன் அவர் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி வாங்கி வச்சிருக்காரு.” என்றவளிடம்

“பார்ரா இதெல்லாம் நடக்குதா, அப்போ அங்கேயும் ஏதோ இருக்கு, இருக்கட்டும் இருக்கட்டும்.” 

“போ தெய்வா கிண்டல் பண்ணாத, நீ இன்னும் தூங்கலயா,”

“தூங்கதான் போறேன்.”

“எங்க”

“மெத்துல (மாடியில்)”

“மெத்துலயா,”

“அதுதான் எங்க சொர்க்கம், அங்கதான் நானும் அண்ணனும் எப்பவும் தூங்குவோம். சரி நீ போ நேரமாச்சு.” என்றவன் மெத்து படிக்கட்டில் ஏறி செல்ல, தங்கள் அறைக்குள் அழகி நுழைய, அவள் நுழைந்த அடுத்த நொடி, இன்பரசன் வெளியே வந்து அதே மெத்து படிகளில் ஏறி மேலே சென்றுவிட்டான். 

அவன் நாலு வார்த்தை திட்டி இருந்தால் கூட அழகி பெரிதாய் வருந்தி இருக்க மாட்டாள். இப்போது அவன் அடித்தாலும் கூட வாங்கி இருப்பாள். காரணம் எல்லாவற்றிற்கும் காரணம் இவள் தான். ஆனால் அவனின் இந்த புறக்கணிப்பு அதுதான், அவளால் தங்க முடியவில்லை. இருந்தாலும் காலம் அத்தனையையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் உறங்க சென்றாள். 

இன்பரசனின் அறை, அந்த அறை முழுவதும் அவன் வாசனை, அவன் படித்த புத்தகங்கள், அவனை உரசிய உடைகள், அவன் கலைத்து போட்ட படுக்கை, என அத்தனையும் அவன்  அங்கு இருப்பதை போல் அவளுக்குணர்த்த, அதுவே போதும் என பனிப்பாறைகளின் நடுவே குளிர்காயும் நிலவை போல சுகமாய் உறங்கி போனாள் அவனின் அவள்.

நொடிக்கு நொடி

மூச்சுக்காற்றாய் …

என் இதயத்தை

உரசி போன…

உன் நினைவுகள்

அனைத்தும் சேர்த்து, 

முத்துகளாய் அதை கோர்த்து, 

அழகாய் நான் வார்த்த

மாலையொன்று உன்

கழுத்தை சேர காத்திருக்க.

இறுதியில் உன் கழுத்தை

சேரும்போது ஏனோ அது

எருக்கம் பூவாய் மாறி போனது…

எருக்கம் பூவும் சிறக்குமே

பிள்ளையாரை சேரும் போது,

என் காதலும் சிறக்கும் தான்

நீ அதை ஏற்கும் போது…

என்றது அவள் ஆழ் மனம்…!!!

இன்பரசன் மேலே வந்து வழக்கம் போல உறங்க, அவனின் நிலை உணர்ந்து, காயப்படுத்தும் மனம் இல்லாமல் கேள்வி ஏதும் கேட்காமல் அமைதியாய் இருந்துவிட்டான் தெய்வா. 

காலை பொழுது, வழக்கமாய் சிட்டுக்குருவியின் சேதி கேட்டே விடியும் அழகிக்கு, கடந்த சில நாட்களாக நடந்த  பல பிரச்சனைகளில் அதெல்லாம் கிடைக்காமல் போக,   இன்று ஏனோ மனம் முழுவதும் சிட்டுக்குருவியின் நினைவே வர, அதேபோல் இன்பரசன் வீட்டிலும் இருக்கும் கிணற்றடியில் வந்து சுற்றி முற்றி பார்த்து கொண்டிருந்தாள். அவளது சிட்டு அங்கு வரவில்லை. அழகிக்கு சிட்டு நாளின் முதல் தரிசனம் என்றால், சிட்டுவிற்கு அடுத்த தரிசனம் அவளின் மொசக்குட்டி ராஜி தான், இன்று அவளும் அங்கு வர வாய்ப்பில்லை. இந்த இரண்டும் காலையிலேயே அவளுக்கு சோர்வை தந்தாலும், அதையும் கடந்து கடமை உணர்ந்து தன் புகுந்த வீட்டில் தன் கடமை தொடங்கினாள் அவள்.மற்றவர்களும் அவர் அவற்கான வேலைகளை பார்க்க  ஆளுக்கொரு திசையில் ஓடி கொண்டிருந்தனர். முடிந்தவரை ஒருவரை ஒருவர் தவிர்த்து கொண்டே இருந்தனர். இப்படியே நாட்கள் நகர்ந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. இன்பரசனும் அழகியும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ள வில்லை. வீட்டில் யாரும் இருவரையும் ஒரு கேள்வியும் கேட்கவும் இல்லை. ராஜியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, தெய்வா அவளை பார்க்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அனைவருக்குள்ளும் இருக்கும்,  பிரச்சினைகளும் மனஸ்தாபங்களும் முடிக்கப்படாமல் மூடி வைக்க பட்டு கொண்டே தொடர்ந்தது…

குளம் ஒன்று குழம்பினால்

தானே மீனை பிடிக்க முடியும், 

இங்கே குழம்பிய மனங்கள் எல்லாம், குட்டைகளை போல,

தேக்கி வைத்து கொண்டிருந்தன

தீர்க்கப்படாத குழப்பங்களை…

மாலை நேரம் அழகி வீட்டிற்குள் ஏதோ செய்து கொண்டிருக்க, இன்பரசன் அவன் அறையில் இருக்க, வேகமாய் வந்தான்  இன்பரசனின் நண்பன். வந்தவன் அழகியை கண்டதும்.

“மதினி, மதினி… என்று சத்தமாய் பதற்றமாய் அழைக்க.

உள்ளிருந்து வேகமாய் வந்தவள். “வாங்க,” என்று அழைத்தாலும் அவன் யாரென்று தெரியாமல் முழிக்க, 

“மதினி  இன்பரசன் அண்ணன் இல்லையா, எங்க அவரு.” என்று கேட்டதும்.

“உள்ளதான் இருக்காரு, இருங்க கூப்பிடுறேன்.” என்றவள் அவன் தன்னுடன் பேசுவதில்லை என்பதை எல்லாம் வந்தவன் முகத்தில் இருந்த பதற்றத்தில் மறந்திருந்தால். அறைக்குள் சென்று 

“மாமா, உங்கள தேடி யாரோ வந்திருக்காங்க,” என்று சொல்ல. அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் கட்டிலில் இருந்து எழுந்தவன் வெளியே வந்து அங்கு நின்றிருப்பவனை கண்டு.

“என்ன ஆனந்தா என்ன ஆச்சு, ஏன் இம்புட்டு பதட்டமா இருக்க.” என்று கேட்டதும்.

“அண்ணன் தென்னரசு அண்ணனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிட்டுச்சாம், ரொம்ப சீரியஸா இருக்காராம். உசுருக்கு உத்திரவாதம் இல்லன்னு சொல்றாங்க, ஒரு வாரமும் எல்லாரும் அவர தேடிக்கிருந்தாங்கன்னேன் நேத்து தான் கொடைக்கானல்ல இருக்காருன்னு தெரிஞ்சு கூட்டிட்டு வந்தங்களாம். வந்ததுல இருந்து ஒரே சரக்காம். நெதானம் இல்லாம அப்டியே கார எடுத்துட்டு போய், லாரில விட்ருக்காராம்ண்ணேன். கார் அப்பளமா நொறுங்கி போச்சாம். இவருக்கும் நல்ல அடியாம். பூராப்பேரும் உங்க மேல கொலைவெறில இருக்காய்ங்கண்ணேன். நீங்க பேசாம கொஞ்சநாளைக்கு வெளியூருக்கு போயிடுங்க.” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் ஆனந்தன்.

ஆனந்தன் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்திருந்த, மதியழகனும் இந்திராணியும், இதைகேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.

இன்பரசன் அமைதியாய் சில நிமிடங்கள் இருந்தவன், “எந்த ஆஸ்பத்திரியில வச்சிருக்காங்க ஆனந்தா” என்று கேட்டதும்

“ஏன் நீ போய் பாக்க போறீயா…..” என்று இன்பரசனிடம் கோபமாய் கேட்ட மதியழகன், “ஆனந்தா அதெல்லாம் நீ சொல்ல வேணாம். நான் பாத்துகிறேன் ரொம்ப நன்றியா, இம்புட்டு தூரம் வந்து சொன்னதுக்கு. வேற எதுனாலும் ஒரு எட்டு வந்து சொல்லிட்டு போயா.” என்று சொல்ல.

“இதெல்லாம் நீங்க சொல்லனுமாப்பா, நான் எதுனாலும் சொல்றேன்பா, வறேன்ப்பா, கொஞ்சம் பாத்துக்கங்கப்பா, நீங்களும் எதுனாலும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்க.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

பின் இன்பரசன் அங்கிருந்தபடியே மற்ற நபர்களுடன் பேசி முழு விவரமும் தெரிந்து கொண்டவன், சட்டையை மாற்றிக்கொண்டு வெளியே கிளம்ப, “எங்க போகனுமாம், உன் பிள்ளைக்கிட்ட கேளு ராணி.” என்றார் மதியழகன்.

“அம்மா ஒரு அரைமணி நேரத்தில வந்துற்றேன். இன்னும் எத்தனை நாளுக்கு தான் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும்” இது இன்பரசன்.

“இருக்கணும் இருந்துதான் ஆகணும். வராத நோய் வந்தா குடிக்காத மருந்த குடிச்சு தான் ஆகணும். பிரச்சினை பெருசு அப்போ தீர்வுக்கான நேரமும் வழியும் பெருசா தான் இருக்கும். அதுவரையிலும் பொறுமையா இருந்துதான் ஆகணும்.” இது மதியழகன்.

“ஓடி ஒளிய நான் என்ன தப்பு பண்ணினேன்.”

“தப்பு பண்ணினவன் தான் ஓடி ஒளிவான்னு யார் சொன்னது., எதையும் இழக்க விரும்பாதவனும் ஓடி ஒளிவான். அது வீரமா இல்லாம போனாலும், அந்த விவேகம் தான் எல்லாத்தையும் காப்பாத்தும்னா விவேகமா தான் நடந்துகனும். ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ நம்மனால  அவமானப்பட்டு, அடிபட்ட பாம்பா நிக்கிறான், நம்ம அவன சீண்டாம விட்டாலே அவன் சரி ஆகிடுவான். அத விட்டிட்டு சீண்டிக்கிட்டே இருந்தா நல்லா இருக்காது. பிரச்சினையை முடிக்க பாக்கணுமே தவிர ஒரம்(உரம்) போட்டு வளக்க பாக்க கூடாது.”

“உள்ளயே உக்காந்துகிட்டு இருந்தா எந்த தீர்வும் வராதுப்பா.”

“இறங்கி போராட இது ஒண்ணும் நாட்டுக்கு நாட்டுக்கும் வந்த சண்டை  இல்ல. இது குடும்ப பகை, இங்க பொறுத்து தான் போகணும். இழப்பு எந்த பக்கம் இருந்தாலும் நஷ்டம் எல்லாருக்கும் தான்.”

“என்னால யாரும் எதையும் இழக்க வேணாம்ப்பா, நானே சந்திச்சுக்கிறேன் எல்லாத்தையும், என்னய என் வழியில விட்ருங்க.”

“விட்ரனுமா….. என்ன பேசுற இன்பம், நாங்க இழக்க கூடாதுன்னு நெனைக்கிறதே உன்னைய தான். உன்னைய போக விட்டுட்டு.”

“அப்பா நான் பாத்துகிறேன் ப்பா…..”

“முத்தழகி, இதுக்குமேல அவனுக்கும் எனக்கும் எந்த பேச்சும் இல்ல. அவன உள்ள போக சொல்லு.” என்று மதியழகன் கத்த, இன்பரசனும் உள்ளே சென்றுவிட. “முத்தழகி எனக்கு நீ என்ன செய்வியோ தெரியாது, இன்பமும் நீயும் கொஞ்ச நாளைக்கு இங்க இருக்க கூடாது. இதெல்லாம் நடக்கும்னு தான் நான் அன்னைக்கு வேணாம்னேன். ஆனா உங்க இஷ்டத்துக்கு செஞ்சீங்க, அது இப்போ விஷ்வரூபம் எடுத்து நிக்குது. நான் எதையும் யாரையும் இழக்க தயாரா இல்ல. அவன இங்க இருந்து தூரமா கூட்டிட்டு போய்டு,” என்றவர் அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் வெளியே சென்றுவிட, ராணியோ அழுது புலம்பி கொண்டே பின் பக்கம் சென்றுவிட, இன்பரசனை நெருங்கும் சக்தி இல்லாமல் நொந்துபோய் நின்று கொண்டிருந்தாள் அழகி.  

அவள் அப்படியே என்ன செய்வதென்று யோசித்து யோசித்து என்ன ஆனாலும் பேசியே தீரவேண்டும் என்று முடிவெடுத்தவளாய் அறையை நோக்கி செல்ல. 

“அழகி… அழகி…” என்று அழைத்தபடி தெய்வா வந்தான்.

“என்ன தெய்வா, தென்னரசு மாமாவுக்கு ஆக்சிடெண்ட் ஆன விஷயம் தான, தெரியும்டா இப்போதான் இங்க ஒரு கலவரமே நடந்து முடிஞ்சுச்சு.” என்று சோர்வாய் சொல்லியவளிடம்

“அழகி… ராஜி… நம்ம ராஜி…” என்றவன் அதற்குமேல் பேசாமல் தரையில் மண்டியிட்டு  அழ தொடங்க. 

“தெய்வா… ராஜிக்கு என்ன ஆச்சு…  என்னடா தெய்வா முழுசா சொல்லுடா…” என்று அவளும் பதறி அழுக… பதில் சொல்ல முடியாமல் அவன் அழுதுகொண்டே இருக்க. அவன் அழுகுரல் கேட்டு வெளியே வந்த இன்பரசன் அதிர்ந்து போய்.

“தெய்வா என்னடா ஏண்டா அழகுற. அப்பா எங்க, அவருக்கு ஒண்ணும் இல்லல, அம்மா… அழகி அம்மா எங்க.” என்று அனைத்தையும் மறந்து அவளிடம் கேட்க. 

“அவங்க இங்க தான் மாமா இருக்காங்க. நல்லா இருக்காங்க, ராஜிக்கு தான் என்னமோ ஆகிடுச்சு.” என்று சொல்லி அழகியும் அழுக. 

“ராஜிக்கா… ராஜிக்கு என்னடா ஆச்சு… சொல்லுடா  சாகடிக்காம சொல்லுடா தெய்வா” என்று இன்பரசன் கத்த.

“ராஜிக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சுடா இன்பா… அவளுக்கு  தண்டனை குடுக்குறதா நெனச்சு  எவனுக்கோ பிடிச்சு கட்டி வச்சுடாங்கியாடா இன்பா…” என்றவனின் வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் இன்பரசன், முத்தழகி இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

எனை மீட்டும் இயலிசையே -1

தேவை ஒரு தேவதை -13