in

தூக்கணாங்குருவிகள் 14

போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதியிடம், அனுமதி வாங்கி அழகியை அழைத்துக்கொண்டு தனியே பேச   சென்றான் இன்பரசன்.

தனியே வந்தவன் அழகியிடம் அழகி இப்போ இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு புரியுதா, எனக்கு ஒண்ணுமே புரியல. இப்போ என்ன நடக்குதோ இது நடந்தே தீரனும்னு நினைக்கிறியா. நானும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு ஏன் பொய் சொன்ன. நீ சொன்ன பொய் எங்க கூட்டிட்டு வந்து நிக்க வச்சிருக்கு பாரு. இப்பவும் கூட ஒண்ணும் இல்ல, இன்ஸ்பெக்டர்கிட்ட எதையாவதும் சொல்லி சமாளிப்போம். நீ திரும்ப ஊருக்கு எல்லாம் வர வேண்டாம். சென்னைக்கு போ, அங்க உனக்கு எல்லா ஏற்பாடுகளும், வசதிகளும் என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி பண்றேன். நீ அங்க போய் நிம்மதியா இரு அழகி. ஒருநாள் எல்லாம் மாறும் அப்போ நீ திருப்ப இங்க வந்துடலாம் எல்லாமே சரியா போயிடும். 

அப்டி இல்லாம ஏதோ ஒரு கட்டாயத்துக்காக இப்போ நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாமே நம்ம திட்டம்னு ஆகிடும். வேணும்னே பண்ணின மாதிரி இருக்கும். உண்மையா நீயும் நானும் விரும்பி, அத மறச்சு தென்னரச ஏமாத்திட்டோம்னு எல்லாரும் நெனச்சுப்பாங்க. உங்க அம்மா அப்பா, எங்க வீட்ல எல்லாரும், மொத்த ஊரும் காலத்துக்கும் உன்ன  பேசி பேசியே கொன்னுட்டுவாங்க அழகி, எந்த தப்பும் பண்ணாம குற்றவாளி ஆகிடுவ. இங்க குற்றவாளி உன் குடும்பம் தான். நீ அதுல பாதிக்கப்பட்டவ. ஆனா இப்போ இந்த கல்யாணம் நடந்தா மொத்த குற்றமும் உன்  மேல விழுந்து தீரா பழிதான் கிடைக்கும் அழகி.  நல்லா யோசி, உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற பல முடிவுகள் காலத்துக்கும் நம்மள கலங்க வச்சுடலாம். அதையெல்லாம் விட முக்கியமான ஒண்ணு, கல்யாணம் ஒண்ணும் விளையாட்டு இல்ல, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி, தற்காலிக முடிவுகளை எல்லாம் அதுல எடுக்க முடியாது. ஒரு வாட்டி எடுத்த முடிவு எடுத்தது தான்.நல்லா யோசி” 

“பேசட்டும் மாமா, யாரும் எண்ணமும் பேசட்டும்,  பெத்தவங்களே நம்பிக்கை வைக்காம கொன்னுட்டாங்க. அவங்களுக்கு அவங்க பெத்த பொண்ண விட நெறய விஷயம் முக்கியமா போச்சு. அப்பறம் ஊர் என்ன ஊர் மாமா. எனக்கு யாரபத்தியும் கவலை இல்ல. என்னால ஊர விட்டு எல்லாம் போக முடியாது மாமா. என் கனவு லட்சியம் எல்லாம் என் ஊர் சார்ந்து தான் இருக்கு. நான் உருவாக்கின என் உலகம் இங்கதான் இருக்கு, அத விட்டுட்டு எல்லாம் எங்கேயும் போக முடியாது. அப்பறம் நான் தற்காலிக முடிவு எல்லாம் எடுக்கல. கல்யாணத்தோட அர்த்தமும், முக்கியத்துவமும் புரிஞ்சுதான் இந்த முடிவை எடுத்து இருக்கேன்.”

“இதுக்கு ஒரே வழி நம்ம கல்யாணம் மட்டும் தானா அழகி.”

“ஆமா மாமா, இது மட்டும் தான் ஒரே வழி,”

“இதுல நானும் சம்மந்த பட்டிருக்கேன், எனக்கு என்ன விருப்பம்னு ஒண்ணு இருக்கே.”

“ஏன் மாமா, என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா, நான் உனக்கு பொருத்தமா இருக்க மாட்டேனா.”

“அழகி, இங்க பொருத்தம் பாக்கிற சூழ்நிலை இல்ல. நான் அதுக்கெல்லாம் தயாரா இல்ல, நான் கல்யாணத்த பத்தி எல்லாம் யோசிக்க கூட இல்ல.”

“இனி யோசி மாமா. இப்போ யோசி,…. இல்ல இல்ல ரொம்ப எல்லாம் யோசிக்க வேணாம். ரொம்ப யோசிச்சா ஒரு முடிவுக்கு வர முடியாது.”

“அழகி உனக்கு புரியல. இது நம்ம ரெண்டுபேருக்கும் தண்டனையா போயிடலாம். வேணாம்னு சொல்லிடு.”

“மாமா நீ எனக்கு ஒரு வாக்கு குடுத்து இருக்க ஞாபகம் இருக்கா.”

“அழகி……..”

“அதேதான் மாமா, இப்போ எனக்கு அந்த வாக்கை நிறைவேத்து, என் கழுத்துல தாலி கட்டு, அதுக்குமேல எதையும் நான் உன்கிட்ட இருந்து எதிர்பாக்கல.” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, 

“இன்னைக்கு பூராம் போதுமா பேச, இல்லனா இப்போ போய்ட்டு ஒரு ஒரு மாசம் கழிச்சு பேசி முடிச்சு வறீங்களா, இங்க அவன் அவன் என்ன பிரச்சினைல இருகாங்கிய,  அட வாங்க ரெண்டுபேரும், விட்டா பேசிக்கிட்டே இருப்பீங்க போல, எப்பவும் ரொம்ப பேசினா எந்த முடிவுக்கும் வர முடியாது. போதும் பேசின வரைக்கும் வாங்க வாங்க.” என்று வளர்மதி அழைக்க. 

“போலாம் மாமா, நான் சொன்னது தான். இப்போதைக்கு உன் பொண்டாட்டிங்கிற ஒரு அடையாளம் மட்டும் போதும் எனக்கு. நீ வேற ஒண்ணும் செய்ய வேணாம். இவ்ளோ நாள் நீ சொன்ன மாதிரி என் மேல உண்மையா நீ பாசமும் அன்பும் வச்சிருந்தனா, இத மட்டும் எனக்கு செய்.” என்று சொல்லிவிட்டு அவள் முன்னே செல்ல. இறுகிய முகத்துடன் பின்னே சென்றான் இன்பரசன்.

கையில் மாலையுடன் இருவரும் எதிர் எதிரே நின்று மாலையை மாத்த போக, தென்னரசும் அவன் பின்னே மதியழகன் மற்றும் இந்திராணியும் வந்தனர். அவர்களை கண்டதும் மாலையை மாற்ற போன அவன் கைகள் கீழிறங்க, “மாப்பிள்ள சார், என்ன கை கீழ இறங்குது. தூக்கின கை தூக்கினது தான், ம்ம் மாலையை போடுங்க, அதான் ஆசீர்வாதம் பண்ண அப்பா அம்மா அண்ணன் எல்லாரும்  வந்தாச்சே.” என்ற வளர்மதியின் பேச்சில், கோபம் ஏற,

“யாருக்கு யார் அண்ணன். என்னமா நடக்குது இங்க. இவ எனக்கு நிச்சயம் பண்ணின பொண்ணு.  நீங்க எப்டி அவளுக்கு அவன் கூட கல்யாணம் பண்ணி வைக்க முடியும். யார் குடுத்தாங்க உங்களுக்கு அந்த உரிமையை.” என்று தென்னரசு கத்த,

“சட்டம் தான் தம்பி, நம்ம அரசியல் அமைப்பு சட்டம் இருக்கே அது குடுத்த உரிமை தான்.  அவளுக்கு அவ விரும்பின வாழ்க்கையை வாழ முழு உரிமை இருக்குனு சட்டம் சொல்லுது. அதே மாதிரி அதுக்கு தடையா யாராவது வந்து, கட்டாய கல்யாணம் பண்ண முயற்சி பண்ணினா, அவங்கள தூக்கி உள்ள போடவும் சட்டம் சொல்லுது, அவன் எந்த கொம்பனா இருந்தாலும், அவன தூக்கி வைக்க முடியும், தம்பிக்கு புரியும்னு நெனைக்கிறேன்.” என்றவர் இன்பரசன் பக்கம் திரும்பியவர் “என்ன நீ அப்போ அப்போ ஸ்ட்ரக் ஆகி நின்னுடுற, போடு மாலையை” என்று அரட்ட, அவன் பெற்றோர் முகத்தை பார்க்க. மதியழகன் அவன் பார்வையை தவிர்க்க தன் பார்வையை தாழ்த்தி கொண்டார். இந்திராணியோ கண்களில் பயமா, தயக்கமா, ஏமாற்றமா, மகிழ்ச்சியா என்று உணர முடியாத உணர்வுடன் புடவை முந்தானையை வாயில் வைத்து நின்றுகொண்டிருக்க. 

“எம்மோ… நீ ஏன் இப்டி கலங்குற. உன் மகன் நல்லா இருப்பாப்ள, சந்தோசமா ஆசீர்வாதம் பண்ணு.” என்று வளர்மதி சொல்ல. இந்திராணியும் கண்களால் ஒரு நொடி மகிழ்ச்சியை காட்ட,

இன்பரசன் மாலையை அழகிக்கு போட்டுவிட்டான். அழகியும் இன்பரசன் கழுத்தில் மாலையை போட, வளர்மதி எடுத்து கொடுத்த, சொக்கரும் மீனாட்சியும் தம்பதி சகிதமாய் வீற்றிருந்த  தாலியை அவள் கழுத்தில் கட்டி தன் வாழ்க்கையின் மீதியாய் அவளை ஆக்கி கொண்டான் அவன்.  அழகிக்கோ, கண்கள் கலங்கவில்லை, இல்லை இல்லை கலங்க அவள் விடவில்லை, இந்த நிமிஷம் இந்த நொடி, அது தரும் உணர்வு அவை எதையும் நொடி பொழுதும் தவிர்க்காமல்  நினைவு பெட்டகத்தில் சேர்க்க வேண்டி ஒவ்வொன்றையும், அனுபவித்து கொண்டிருந்தாள். 

இருமனம் இணைய வேண்டிய திருமணம் இங்கே, ஒரு மனதின் வெறுப்பை கூட்டி இருக்க, காலம் அது வெறுப்பையும் வெறுமையாக்கி, வாழ்வை செம்மையாக்கும் என்று நம்பி தன் தோழியின் வாழ்வை எண்ணி பூரித்து கொண்டிருந்தாள் ராஜி, 

பால்ய பருவ தோழி, ஆசிரியை போன்றவள், தன்னை அவளுக்கு  நிகராக நினைப்பவள் உடன்பிறப்புக்கும் மேலானவள், அவளே இன்று தன் அண்ணன் மனைவியாக, தனக்கு அண்ணியாக, தன் குடும்பத்தில் ஒருத்தியாக வந்துவிட்டதை எண்ணி தெய்வாவும் சிலாகித்து கொண்டிருந்தான். 

அந்த நேரம் அடிபட்ட பாம்பாய், உச்சகட்ட அவமானத்தை சுமந்தவனாய், தீராபழியை தனக்குள்  சுமந்த ராஜ நாகமாய் தனக்குள் விஷத்தை சுரக்க தொடங்கி இருந்தான் தென்னரசு. அவனது வஞ்சம் அவனை நிலை குழைய செய்ய துவங்கியது. அவனுக்கு அவமானம் கண்ணை மறைக்கும் அளவிற்கு இருந்தது. அங்கே அவனால் ஒரு நொடி கூட நிற்க முடியாமல் வேகமாய் தன் காரை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டான் அவன். 

இன்பரசன், முத்தழகி கல்யாண விஷயம் ஊருக்குள் தெரிந்து ஊரே ஒரே கலவரமாய் கொந்தளித்து கொண்டிருந்தது. தென்னரசுக்கு இருந்த ஆதரவாளர்கள், குடும்பத்தினர் என ஒட்டுமொத்த ஜனங்களும் இருவரையும்  கொலைவெறி யுடன் எதிர்த்தனர். இன்பரசனிற்கு ஆதரவாய் சில சொந்தபந்தங்களும், இயக்க நண்பர்களும் இருந்தனர். 

தென்னரசு சார்பில் இருப்பவர்கள் இருவரையும் ஊருக்குள் நுழையவே கூடாது என்று எதிர்த்தனர். அதெப்படினு நாங்க பாக்குறோம் என்று, இன்பரசன் சார்பில் இவர்களும் முழு மூச்சாய் நிற்க. அந்த கலவரத்திற்கு நடுவே இப்போது ஊருக்குள் போக வேண்டாம், என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல்  தம்பதி சகிதமாய் வந்து நின்றனர் இன்பரசனும் முத்தழகியும்.  

இருவரையும் பார்த்ததும், ஊரே கொந்தளித்து கலவரத்திற்கு தயாராக, தன் படை சூழ அங்கு வந்தார் வளர்மதி, அவர் அப்படி அங்கு வர, பிரச்சினை அவர் பக்கம் திரும்பியது. “இதென்ன ஊர் பிரச்சினையா, நீங்க ஏன் இதுல வறீங்க. இது எங்க குடும்ப பிரச்சினை நாங்க பாத்துகிறோம். நீங்க போகலாம்.” என ஊர்க்காரர்கள் வளர்மதியை விரட்ட. 

“ஊர் பிரச்சினை, குடும்ப பிரச்சனை எதுவா வேணும்னாலும் வச்சுக்கோங்க. இவங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு குடுக்க சொல்லி ஆர்டர் இருக்கு, நாங்க கொடுப்போம். நீங்க அதை தடுக்க முடியாது. எல்லாரும் போய் அவங்க அவங்க வேலையை பாருங்க போங்க.” என்ற அவர் பேச்சை எல்லாம் அவர்கள் கேட்கவில்லை. ஆனாலும் இன்பரசன் பக்கம் அவர்களை நெருங்க விடாமல் அரனாய் காத்து நின்றார் வளர்மதி. அப்போது அங்கு வந்த தென்னரசின் அப்பா நடராஜன், 

“எல்லாரும் போங்கப்பா… இது எங்க குடும்ப பிரச்சினை நாங்க பேசிக்கிறோம் போங்க. நேரம் வரும்போது பாத்துக்குவோம்” என்று சொன்ன ஒரு சொல்லில் கலைந்து சென்றனர். அவர்கள் எல்லாம் போன பிறகு, வளர்மதியிடம் வந்தவர். “என்ன போலீஸ்காரம்மா, எத்தனை நாளைக்கு நீ இப்டியே பொத்தி பொத்தி வச்சிருப்ப, இந்த ஊருக்குள்ள தான இருக்கணும். இந்த ஊரு மட்டும் இல்ல இந்த மதுரை ஜில்லா மொத்தமும், எங்க போனாலும் விரட்டி விரட்டி வெட்டி வீசுவோம். பொணம் கூட கைக்கு கிடைக்காது.  என்னைக்கா இருந்தாலும் ரெண்டுபேரும் காணா பொணம் தான்.” என்று நடராஜன் சொல்ல. 

மதியழகனும், இந்திராணியும் நடு நடுங்கி போயினர். இன்பரசன்  எந்த சலனமுமின்றி நின்றிருந்தான். அழகி முதல் முறையாக, தவறான முடிவை எடுத்து விட்டோமோ என்று இன்பரசனுக்காக  நினைக்க தொடங்கினாள். வளர்மதியோ,

“மனுசனாயா நீங்க எல்லாம். மிருகங்க கூட கூட உங்கள எல்லாம் ஒப்பிட முடியாது. நீ இவங்கள காணா பொணம் ஆக்குவியா, அதுக்கு முன்னாடி, உண்ண களி திண்ண வச்சுடுவேன் நானு.” என்று சொல்லி தன் போனில் இருந்த ரெகார்டை போட்டு காட்ட, அதில் நடராஜன் பேசியவை தெளிவாக பதியப்பட்டிருந்தது. அதை முழுவதும் போட்டு காட்டி விட்டு பின் “இவங்க ரெண்டு  பேருக்கும் எது ஆனாலும் அதுக்கு முழு பொறுப்பும் நீங்க தான். அப்பறம் உங்க பையன் பெரிய அரசியல்வாதி ஆகணும்னு தான உங்க ஆசை, நான் மட்டும் இந்த ஆடியோவ நேரம் பாத்து ரிலீஸ் பண்ணுனேன்னு வைங்க, அம்புட்டும் புட்டுகிட்டு போயிடும், நீங்க விவரமான ஆளு உங்களுக்கு புரியும்னு நெனைக்கிறேன்.” என்றவர், இன்பரசனை வீட்டிற்க்கு போக சொல்லி, அவரும் உடன் சென்று வீட்டில் பத்திரமாய் விட்டுட்டு, தைரியம் சொல்லி, அதோடு கவனமாய் இக்கும்படியும் சொல்லி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

வீட்டு திண்ணையில் மதியழகன், அவருக்கு கீழ் வாசற்படியில் தெய்வா, அவனுக்கு பின் உள் திண்ணையில் இன்பரசன், அதை தாண்டி  நடு வீட்டில் முத்தழகி, சமையர்கட்டில் இந்திராணி, வீட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்று முழுதாய் அறியும் ஆவலில் அக்கம் பக்கத்தினர்,  இப்படியே உலகம் ஸ்தம்பித்தது போல ஒரு அங்குலம் அசையாமல் இவர்கள் இருக்க,  நேரம் அப்படியே  கடக்க, இருள் சூழ தொடங்கி இருந்தது. 

இந்த கலவரத்தில் ராஜியை கவனிக்க மறந்து போய் இருந்தனர். தெய்வா தான் முதலில் தெளிந்து, வீட்டின் பின்புறம் சென்று, முகம் கழுவி வந்தவன், இந்திராணியிடம் சென்று, 

“அம்மா, என்ன நீ, இப்டியே இருந்தா எப்டி, போ மா, அப்பாவ சாப்பிட கூப்டு,” என்றான்

“சாப்பிட எப்டி கூப்புற்றது, இனிமேதான் சோறே ஆக்கணும்(செய்யணும்).”

“அப்போ மொத, அழகியை கூப்டுமா, சோறாக்க சொல்லு.”

“தெய்வம், என்னடா சொல்ற, இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு, நீ என்னடா செய்ய சொல்ற.”

“இங்க என்ன நடக்குது. எல்லாம் நல்லா தான் நடக்குது. உனக்கும் அழகிய பிடிக்கும் தான,”

“அவளுக்கென்ன டா, அவ மருமாகளா வரணும்னு எம்புட்டு நாள் நெனச்சு உருகி இருக்கேன் தெரியுமா. ஆனா உங்க பெரியப்பன் பேசினது நெஞ்சுக்குள்ள படக்கு படக்குனு அடிச்சுகிருக்கு தெய்வம்.”

“அம்மா அவர் அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் இல்லாம, நீ அதெல்லாம் நினைக்காத, நீ மட்டும் இப்ப எல்லாத்தையும் சரி பண்ணு, எல்லாம் சரி ஆகும். அப்படியும் உனக்கு பயம் போகலன்னா, கொஞ்சநாளைக்கு அப்பறம் ரெண்டுபேரையும் மெட்ராஸ்க்கு அனுப்பி வச்சுடுவோம். அப்போ அவங்கய நம்ம பேச்ச கேக்கணும்னா, இப்போ அவங்கியல நம்ம கைக்குள்ள போட்டுகனும். போ மா, போய் அழகிய வர சொல்லு.”

“அதென்னடா அழகி, மதினிண்டு சொல்லு. அதான் உங்க அண்ணன் பொண்டாட்டி ஆகிட்டாள, மரியாதையா பேசணும் சொல்லிபுட்டேன்.” என்றவர். “அடியே முத்தழகி, என்ன அப்டியே உக்காந்துகிருக்கவ, எந்திரிச்சு போய் மூஞ்சிய கழுவிக்கிட்டு வா, எல்லாம் சாப்பிடாம இருக்காக, நான் அடுப்புல ஒலையை வைக்கிறேன், அரிசியை அரிச்சு போடு. எவன் எங்கிட்டு இருந்து சண்டைக்கு வந்தாலும் சமாளிக்கணும்ல, தெம்பு வேணாமா, வா ஆத்தா வா…” என்று அவர் சொல்ல. 

சாட்டையில் இருந்து, சுத்தி விட்ட பம்பரமாய், சுழன்று, முகம் கழுவி வந்தவள், அடுப்பங்கரையில் தன் இருப்பை காட்ட தொடங்கினாள். 

இன்பரசனை பார்க்க அவன் நண்பர்கள் வர, அவர்களுடன் அவன் வெளியே சென்றுவிட்டான். அவன் செல்லும்போது, இல்லாத தெய்வாவை கூப்பிட்டு “தெய்வம் அவனை ரொம்ப தூரம் போக வேணாம்னு சொல்லு. எதுவா இருந்தாலும், வீட்டுக்கு பின்னாடி இல்லனா உள்ள போய் பேச சொல்லு.” என்று சொல்ல. 

“வீட்டுக்கு பின்னாடி தான்பா இருக்கேன்” என்று சொல்லி சென்றான் இன்பரசன். 

தெய்வாவிற்கு ராஜியை பற்றியே ஏதோ தவிப்பாய் இருக்க, ராஜியை பார்த்தே தீரவேண்டும் என்று அவளை பார்க்க கிளம்பினான். ராஜியின் வீட்டு பின்புறம், மாட்டு கொட்டகை பக்கம் சென்றவன், அங்கேயே காத்திருந்தான். நேரடியாய் சென்று இப்போது பார்ப்பது சரியாய் இருக்காது என்று நினைத்து அங்கேயே அவன் காத்திருக்க அவனை ஏமாற்றாது அவளும் வந்தாள். வந்தவள் வைக்க படப்பில் (சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வைக்கோலை தான் வைக்க படப்பு என்று சொல்வர்) இருந்து வைக்கோலை உருவி மாட்டுக்கு போட்டுவிட்டு, தொட்டியில் இருந்த தண்ணீரை குடத்தில் நிரப்பி, குழுதானி பானையில் ஊற்றி மாட்டுக்கு தண்ணீர் காட்டினாள். அவள் இத்தனையும் முடிக்கும் வரை பொறுமையாய் காத்திருந்தவன், “ராஜி…” என்று கூப்பிட, வேகமாய் திரும்பியவள் கண்ணுக்கு இருட்டில் இருந்த அவன் புலப்படாமல் போக, குரல் வந்த திசை நோக்கி தேடி நடக்க துவங்கியவள் கொட்டத்தை தாண்டி, இறங்கி நடக்க, செருப்பு போடாத அவள் காலில் காய்ந்து கொட்டியிருந்த கருவேல முள் காலை பதம் பார்த்தது, 

“ஸ்ஸ்ஸா” என்று கத்தியவள், முள்ளை பிடிங்கி போட்டுவிட்டு மேலும் தேட தொடங்க, “இருடி, வறேன், இருட்டுக்குள்ள நீ பாட்டுக்கு வந்துகிட்டே இருக்க.” என்றவன் அங்கு வந்து நிற்க.

“வழக்கத்திற்கு மாறாக எந்த துடுக்கு தனமும் இல்லாமல், வழக்கமான துருத்துருப்பும் இல்லாமல், என்ன தெய்வா இந்நேரத்துல இங்க வந்திருக்க. மாமாவும் அழகியும் என்ன பண்றாங்க. மாமாவும் அத்தையும் சண்டை போட்டங்களா, அவங்க கூட பேசினாங்களா,” என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக்கொண்டே போக.

“இரு தெய்வமே, எம்புட்டு கேள்வி கேக்குற. எல்லாத்துக்கும் நான் பதில் சொல்றேன், அதுக்கு முன்னாடி நீ சொல்லு, வீட்ல என்ன சொன்னாங்கிய. உன்னைய தான பேசியே கொன்றுபாங்கிய. எல்லாம் உன்னால தான்னு சொன்னாங்கியலா. நான் அங்க நடந்த கலவரத்துல உண்ணய கவனிக்க மறந்துட்டேண்டி, சாரிடி.” என்று அவன் சொல்ல. 

அவனை கட்டி கொண்டு, “தெய்வா, என்னய என்ன என்னமோ சொல்லிடாங்கியடா, நான் என் அழகிய… மாமாவுக்கு… என்னய எப்டி தெய்வா அப்டி சொல்லலாம். நான் அப்டி  பட்ட  ஆளாடா.” என்று அவள் குலுங்கி குலுங்கி அழுக. 

“ராஜி, அழுகாதடி, எனக்கு தெரியும் இதுதான் நடந்திருக்கும்னு தெரியும். அதான் என் மனசு கெடந்து அடிச்சுகிச்சு.அதான் இந்நேரம் வந்தேன்.  நீ ஏண்டி இதுக்கு எல்லாம் அழுகிற. சொல்றவங்கிய சொல்லிட்டு போகட்டும். அதெல்லாம் நீ ஏண்டி எடுத்துகிற,” என்றவனிடம்,

“யாரோ சொல்லல தெய்வா, அம்மாவும் அப்பாவுமே சொல்றாங்கியடா… அதாண்டா தாங்கவே முடியல.” என்றவளை என்ன சொல்லி சமாதான படுத்த  என்று தெரியாதவன். அவள் அழுக தோள் கொடுப்பதை தவிர வேறேதும் செய்ய முடியாமல் நின்றிருந்தான். அந்நேரம் வீட்டிற்குள் இருந்து, “என்னடி அவள கெனக்கா, நீயும் ஓடி போய்ட்டியா என்ன. நான் முன்னாடி போறேன் நீ பின்னாடியே வான்னு சொல்லிட்டு போனாலா, இல்ல மானம் ரோஷம் வந்து  கெணத்துல கிணத்துல விழுந்துடியா.” என்ற அவளின் அம்மா குரல் கேட்டதும். “நான் போறேன் தெய்வா” என்று சொல்லி கிளம்பியவளை கை பிடித்து நிறுத்தியவன். 

“யார் என்ன சொன்னாலும், நெனச்சாலும், நீ யாருன்னு உனக்கு தெரியும், எனக்கும் தெரியும்டி, எதையும் யோசிக்காத. எதையும் மண்டையில ஏத்திக்காதா. சரியா…” என்று சொல்ல. புன்னக்கையை மட்டுமே பதிலாய் சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டாள் ராஜி.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

பிம்பங்கள்

தவிப்பு