in

பிம்பங்கள்

#சிறுகதை

பிம்பங்கள்

“ராஜு, இன்னிக்கு லேட் ஆகும், கொஞ்சம் கீர்த்தனாவப் பாத்துக்கோங்க. சாயங்காலம், ஆயம்மா கூட்டிட்டு வருவாங்க. நீங்க அந்த நேரம் வீட்ல இருக்கணும். இல்லன்னா, வராண்டாவுல விட்டுட்டு போயிடுவாங்க”. என்று காயத்ரி சொல்லிக்கொண்டே புத்தகங்கள், பேனா, மற்ற விஷயங்கள் எல்லாம் இருக்கா என்று சரி பார்த்து, வாசலில் காத்திருக்கும் ஆட்டோவுக்கு, ராஜுவின் பதிலுக்குக் காத்திருக்காமல் ஓடினாள்.

“அண்ணா, இன்னிக்கு கொஞ்சம் சீக்ரம் போகணும். எப்பவும் போற ரூட்ல போகாதீங்க. ஏதாவது குறுக்குவழி இருக்கான்னு பாத்துப்போங்கண்ணா” என்றாள், ஆட்டோ விசுவிடம், அனிச்சையாக, கைகள் பையிலிருந்து கண்ணாடியை எடுத்து, நெற்றிப் பொட்டு, முகத்தின் அதிகப்படி பவுடர் எல்லாம் சர் செய்தவாறே.

“ஏம்மா, சீக்ரம் போகணும்னு தெரியுது இல்ல, கொஞ்சம், சீக்ரம் எந்திரிச்சு, கிளம்பலாம்ல. பாப்பா வேற வெச்சிருக்க, இப்புடி ஓடி ஓடி யாருக்கு சேக்கறீங்களோ!” என்றார் விசு, அவளிடம், வெகு நாட்களாக இருக்கும் உரிமையில்.

பதில் சொல்லவில்லை அவள். என்ன சொல்லுவாள்? விசுவுக்கு அவளை 15 வயதிலிருந்து தெரியும். அப்பாவின் திடீர் முடிவு, வேலையை விட்டு வந்து, அம்மாவின் குடும்பச்சுமைக்குத் தோள்கொடுக்க வேலைக்குப் போக ஆரம்பித்த, ஓட ஆரம்பித்த கால்கள், பிடிக்கிறதா, இல்லையா என்பதையே கூட யோசிக்க இயலாத நிற்க, நிதானிக்க நேரமில்லாத வாழ்க்கையின் ஓட்டத்தை நினைத்துக்கொண்டாள் காயத்ரி.

குடும்பச்சுமையின் அவசியத்தில், அவளது ஒவ்வொரு கனவும் அடகுக்கு போனது. மீட்டெடுக்க முடியாதபடி அடுத்த சுமை வந்துவிடும். சொத்தே கனவுகள் தான் அவளுக்கு.

இப்போதும், ஆட்டோவில், கண்ணாடியைப்பார்க்கும் போது, முகத்தில் ரேகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வை மனதுக்குள் நிழலாடித் தான் போகிறது. வயதுக்கு ஏற்ற வனப்பு இருந்தாலும், அவளின் மனதில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி, அதுவே முகத்திலும் எதிரொலிக்கும். ஒரு நன்மை அதனால், அதிகம் தொந்திரவு இல்லை. யாரும் வழிய மாட்டார்கள். இந்தம்மா கொஞ்சம் சீரியஸ் பான்னு ஒதுங்கிடுவாங்க.

கண்ணாடி பார்க்கும்போது, காயத்ரிக்குத் தோன்றும், இது பொய் சொல்லுதா? நிஜம் சொல்லுதா? நான் சிரிக்கத் தெரியாதவளா? ஏன் இத்தனை சீரியஸா காட்டுது என்று? அது கூட இப்போது தான் இப்படித் தோன்றுகிறது. இதுவரை நிதானித்து பார்த்திருந்தால் தானே?!

கண்ணாடியில் தெரிவது என் பிம்பம் தானே! நான் எப்படி இருக்கிறேனோ அப்படித் தானே காட்டும்? சிரிக்கத் தெரிந்த ஒரே மிருகம்னெல்லாம் சொன்னாலும், சிரிப்பை மறைக்கத் தெரிந்த மிருகம்னு ஏன் ஆராய்ச்சி பண்ணி சொல்லலன்னு தெரியலை என்று நினைத்துக்கொண்டு….

“என்னம்மா, சிந்தனை? இறங்கு” என்று ஆட்டோ ட்ரைவர் சொன்னதும், சுயம் வந்து, இறங்கி ஓடினாள் அலுவலகத்துக்கு. இன்னிக்கு க்ளையண்ட் மீட்டிங்க் இருக்கே!!

“மீட்டிங்க் ரொம்ப நல்லாப் போச்சு காயத்ரி, இந்த ஆர்டர் நிச்சயம் நமக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன். நீங்க ரொம்ப நல்லா ப்ரெசண்ட் பண்ணீங்க” என்றார் மேலாளர்.

புன்னகைத்து, மீண்டும் அடுத்த கட்ட ஓட்டம், வீட்டுக்கு.

நுழைந்ததும், ராஜூ, “என்ன நீபாட்டுக்கு, அவள பார்த்துக்கணும்னு சொல்லிட்டு ஓட்டமா ஓடிட்ட, இங்க பாரு, எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல, அவ வந்ததும், அவளுக்கு சாப்ட குடுக்கணும், இன்னும் அவள போரடிக்காம பாத்துக்கணும், இதெல்லாம் என்னால பண்ண முடியல, பேசாம, நீ இந்த மாதிரி வேலையெல்லாம் இருக்கற போது, லீவு போட்டுடு. இல்லன்ன யாராவது ஆளப் போட்டுடுவோம்” என்றான்

“நல்லா இருக்குங்க. நம்ம குழந்தை, அத பார்த்துக்க, இன்னொரு ஆள் போடணுமா? இன்னிக்கு ஒரு நாள் தானே இப்டி ஆச்சு?”

“அப்டி இல்லை காயத்ரி, எங்கயுமே தொடர்ந்து இந்த மாதிரி ஒண்ண விட்டுக்கொடுத்து இன்னொண்ணுக்கு முக்கியத்துவம் குடுக்க முடியாதும்மா. இன்னிக்கு உன்னால இருக்க முடியும்னு தெரிஞ்சதும், இனிமே இதே மாதிரி வேலை தான் தருவாங்க காயத்ரி. நீதான் ஒரு கோடு கிழிக்கணும். நீ தான் எது முக்கியம்னு சொல்லணும். உனக்கு எது ரொம்ப அவசியம்னு வரிசைப்படுத்தணும். வேலைல நான் ரொம்ப ஈடுபாடா இருக்கேன்னு ஒரு செய்தி அவங்களுக்கு கிடைச்சா, வீடு உனக்கு ரெண்டாம்பட்சம் தான்னு தெரிஞ்சா, அவங்க அந்த சூழ்னிலையை உபயோகிச்சுப்பாங்க. அதனால, அது உனக்கு முக்கியமில்லைன்னு நீ தான் புரிய வெக்கணும்.”

“இப்ப நீங்க சொல்ல வரது உங்களுக்கும் பொருந்துமா? உங்களுக்கு குழந்தை வளர்க்கறது முக்கியம் இல்லையா?” என்றாள் அவனிடம்

“முக்கியம், அதுவும், உன் மூலமா, உன்னோட நல்ல குணங்கள் அவளுக்கு வரணும்னு நான் நினைக்கறதால தான் இத சொல்றேன். உன் வேலை, அதில் உயர்வுகள் அதை கெடுக்கறேன்னு நீ கொண்டு போகாம, உன் இன்றைய வாழ்க்கைக்கு எந்த கடமை ரொம்ப முக்கியம்னு நீயே நல்லா யோசிச்சு பாரு. எனக்கு உன் வளர்ச்சியை தடை பண்ணுவது நோக்கம்ன்னு நினைக்காதே. யாரால எத நல்லா பண்ணமுடியும்னு போலித்தனமில்லாம நாம் ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ண்ணும்னு தான் நான் நினைக்கிறேன். உன்னைப்பற்றிய உன்னுடைய பிம்பத்தை கொஞ்ச்சம் மறு ஆராய்ச்சி பண்ணலாமே என்று தான் சொல்றேன்” என்றான்.

….

அதிகாலை எழுந்தவுடன், வழக்கம்போல், குளித்து, கண்ணாடி பார்த்தாள். அவள் பிம்பம் சிரிப்பது போல இருந்தது. என்ன இத்தனை வருடத்தில் என் முகம் இப்படி சிரிப்புடன் நான் பார்த்ததே இல்லையே! என்று நினைத்தவளாய், சமையல் அறைக்கு சென்றாள்.

ராஜூ, “என்ன காயத்ரி? வேலைக்கு கிளம்பலையா? என்று வர, இல்லங்க, எனக்கு எது முக்கியம்னு நான் தேர்ந்தெடுத்துட்டேன். முக்கியமில்லைன்னு தோணியதை முடிச்சுட்டேன்” என்றாள்.

என்ன சொல்றே?

“ஆமாங்க, நீங்க சொன்னத யோசிச்சேன், என் தேவைகள் ஒவ்வொரு நேரத்துலயும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. என்னைப்பற்றிய என் பிம்பங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது. எப்போதும் அது மற்றவர்களுக்கு மட்டுமே அழகாய், ப்ரயோஜனமாய் இருந்திருக்கு. இனிமே, எனக்கு, நமக்கு அழகா தெரியணும்னு முடிவு பண்ணிட்டேன். ராஜினாமா பண்ணி மெயில் அனுப்பிட்டேன்.”

“எனக்குப்பிடிச்சதை மட்டும் பண்ணப்போறேன், என் நிஜ பிம்பமா நம்ம குழந்தையை வளர்க்கப் போறேன். கொஞ்ச நாள் இப்படி வாழ்ந்து பார்ப்போமே!!”

அலுவலகத்தில் ஒரு “நான்”, வீட்டில் ஒரு “நான்”, பொதுவெளியில் ஒரு “நான்” தனிமையில் முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு “நான்”. எந்த நான் நிஜ நான் என்பது கூட மறந்து போகும் அளவுக்கு பிம்பங்கள் நிஜங்களின் முகங்களை அழிக்கின்றன வாழ்வில்.

காயத்ரியின் முடிவில் ராஜுவுக்கும் சந்தோஷம்

…. கண்மணி

12/6/21#சிறுகதை 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

அன்பின் அரசனே…. 45

தூக்கணாங்குருவிகள் 14