in

தூக்கணாங்குருவிகள்12

இன்பரசன் வந்திருப்பது வழக்கம் போல கனவு தான் என்று, நினைத்தவள், கனவில் மட்டும் காதலிக்கும் அவன் மீது கோபம் கொண்டு, அவனை விட்டு விலகி ஓட முயற்சிக்க, அவள் கைகள் அவனிடம் சிக்கி தடுக்க, எதுவும் புரியாமல் மீண்டும் கைகளை இழுக்க அவள் முயற்சிக்க, 

“அழகி,…. என்ன தூக்கத்துல உளரிக்கிட்டு இருக்கன்னு பாத்தா, தூக்கத்துல இப்டி சண்டையும் போடுற. கண்ண முழிச்சு பாரு, நான் இன்பரசன் தான்.” என்ற அவனது குரலில், நடப்பது அனைத்தும் உண்மை தான் கனவில்லை என்று உணர்ந்தவள், வெக்கம், தயக்கம், பயம் எல்லாம், ஒண்ணுசேர அமைதியாய் தலையை கவிழ்ந்து நின்றாள்.

அவள் அப்படியே நிற்க, “என்ன இவ்ளோ நேரம் பேசிக்கிட்டே தூக்கம், இப்போ நின்னுகிட்டே தூக்கமா. நான் என்ன பாடுபட்டு உன்கிட்ட பேசனும்னு வந்தா, நீ என்ன தூங்கிக்கிட்டே இருக்க. சரி போ… போய் தூங்கு, அப்பறமா வயகாட்டுக்கு வா, பேசணும்.” என்று சொல்லி அவள் கையை அவன் விடுவிக்க. 

“அய்யோ மாமா, நான் தூங்கள, உன்னய இப்போ இங்க எதிர்பாக்கலையா அதான் கொஞ்சம் ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருந்தது. வேற ஒண்ணும் இல்ல, சொல்லு மாமா என்ன பேசணும்.” என்றாள்.

“என்ன நடக்குது அழகி. தென்னரசு கூட உனக்கு பேசி முடிச்சு அடுத்த மாசம் கல்யாணம்னு சொல்றாங்கிய,”

“ஆமா மாமா, அப்படித்தான் முடிவு பண்ணி இருக்காங்க. இதுல உனக்கு என்ன மாமா பிரச்சனை, நீ ஏன் இம்புட்டு பதட்டமா இருக்க.”

“நான் ஏன் பதட்டமா இருக்கேனா….????, புரியல, என்ன தான் நெனச்சுட்டு இருக்க நீ, உன்மேல எனக்கு எந்த அக்கறையும் இல்லன்னு நெனைக்கிறயா…. உன் விருப்பத்தோட இந்த கல்யாணம் நடந்தா ஓகே. ஆனா அது அப்டி இல்லன்னு தெரிஞ்ச அப்பறம் பதட்டமா ஆகாம எப்டி இருக்க சொல்ற..”

“பதட்டம் ஆகி என்ன மாமா செய்ய போற. நீ என்ன  கட்டிக்க போறீயா..?”

“பைத்தியம் மாதிரி பேசாத அழகி. விளையாட்ற நேரமா இது. சீரியஸா பேசு. நான் முன்னாடியே அத்த மாமாகிட்ட பேசலாம்னு பாத்தேன். நேத்து கூட சுசேட்ல மாமாவ பாத்தேன்.  அவர் கிட்ட பேசலாம்னு போனேன். ஆனா மாமா என்கிட்ட ஏதோ மாதிரி பட்டும் படாம பேசிட்டு போயிட்டாரு, அதுக்கு அப்பறம் அவரே போயி அப்பாகிட்ட நான் இந்த விஷயத்துல இருந்து ஒதுங்கியே இருக்கணும்னு சொல்லிட்டு வந்து இருக்கார். ஆனா ஏன் அவர் அப்படி சொல்லணும். எனக்கு ஒண்ணுமே புரியல அழகி. அதான் நேரடியா வந்தா உன்கிட்ட பேச முடியாதுன்னு இப்டி உண்ண பாக்க வந்தேன். நான் என்ன பண்ணனும் அழகி. சொல்லேன் யாருக்கிட்ட பேசணும். என்ன பண்ணனும் சொல்லு, எதுவா இருந்தாலும் செய்றேன்.”

“உண்மையா நான் எது சொன்னாலும் செய்வியா மாமா.”

“ஏன் அழகி இவ்ளோ சந்தேகம். நிச்சயம் எதுவா இருந்தாலும் செய்வேன்.”

“இல்ல மாமா நான் எது சொன்னாலும், விளையாட்டுக்கு சொல்றேன்னே சொல்வியே அதான் கேட்டேன்.”

“அழகி….. நான் எவளோ முக்கியமா, பேசிட்டு இருக்கேன். நீ நக்கலாவே பேசிட்டு இருக்க.”

“நக்கல் எல்லாம் இல்ல மாமா. உன்கிட்ட போய் நான் நக்கல் பண்ணுவனா. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க, அப்டீன்னு வள்ளுவர் சொன்னத வாழ்க்கையில கொண்டு வர ஒரு சின்ன முன்னோட்டம் மாமா.”

“போதும் உன் விளக்கம். வள்ளுவர் சொன்னத்துக்காக மட்டும் எல்லாமே சரி ஆகிடாது. சூழலும், சுற்றமும் மாறும் போது, அர்த்தமும், மாறும். இப்போ இந்த சூழலுக்கு இது கொஞ்சமும் பொருந்தாது. இப்போ சரியான முடிவை எடுக்கலன்னா வாழ்க்கை மொத்தமும் துன்பமா கூட போகலாம். ஒண்ணு தென்னரச மனசார ஏத்துக்கோ. இல்லனா உங்க அம்மா அப்பாவ எதிர்த்து நில்லு எனக்கு இந்த கல்யாணம் வேணாம்னு. இப்டி விதியேனு ஒரு வாழ்கைக்குள்ள போகாத அழகி.

“கண்டிப்பா மாமா நீயே சொல்லிட்டல, அப்டியே செஞ்சுற்றேன்.”

“சத்தியமா கோபம் வருது அழகி. எனக்கு ஏனோ உன் பேச்சுல வழக்கமா தெரியுற அந்த ஒட்டுதல் தெரியல. வித்தியாசமா இருக்கு. நீயெல்லாம் பேசாத போடான்னு சொல்ற மாதிரி இருக்கு. சரி நான் போறேன். எப்போ எதுனாலும் தயங்காம என்ன நீ கூப்புடு. உன் குரலுக்கு ஓடி வருவேன் நான். நீ கூப்பிட்டாலும் இல்லனாலும் உனக்காக நான் வந்து நிப்பேன். வறேன் அழகி” என்று சொல்லி அவன் அங்கிருந்து கிளம்பியவன்.
“மாமா” என்ற குரலில் நின்றான்.

“மாமா, அன்னைக்கு ஒரு வாக்கு குடுத்த ஞாபகம் இருக்கா. நான் என்ன சொன்னாலும் செய்வேன்னு.”

“அன்னைக்கு குடுத்ததும் ஞாபகம் இருக்கு. இன்னைக்கும் சொல்றேன். நீ என்ன சொன்னாலும் செய்றேன்.”

“அது போதும் மாமா.”

“அப்போ சொல்லு. என்ன செய்யணும்.”

“சொல்றேன் மாமா, நிச்சயம் சொல்றேன். நேரம் வரும்போது சொல்றேன்.” என்ற அழகியின் வார்த்தையில் மேலும் கோபம் வர இன்பரசன் வேகமாய் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அழகி எழுந்த போதே முழித்து விட்ட ராஜியோ, இதையெல்லாம் இதுவரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவள், இன்பா சென்றதும் வேகமாய் வந்து “அழகி என்னடி, எவளோ அருமையான சந்தர்ப்பம், இப்போ சொல்லி மாமாவுக்கு உன் மனச புரிய வச்சு இருக்கலாமே. நான் மாமாவ இங்க இப்போ பாத்ததும் என்ன என்னமோ நெனசென்டி. போ அழகி இப்போ நீ நடந்துகிட்டது சுத்த முட்டாள் தனம்.

“அப்டியே இருக்கட்டும் மொசக்குட்டி, அதுதான் அவருக்கு நல்லது. வா போய் தூக்கத்தை தொடருவோம்.”

“அழகி இப்போ எனக்கு கொலைவெறி வருது. என்ன பொண்ணோ நீ. நான் போறேண்டி” என்று சொல்லி ராஜி சென்றுவிட, அழகி அங்கேயே இருளில் அமர்ந்து விடியலுக்காய் காத்திருக்க தொடங்கினாள்.

விடியலும் வந்தது. ஜெயகொடியும், விருமுவும் எழுந்து வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்க. “அப்பா,” என்று அழைத்தாள் அழகி.

ஜெயகொடியும், விருமுவும் அமைதியாய் வந்து நின்றனர். “நேத்து ஏன் மதி மாமாவ போய் பாத்தீங்க.” என்று நேரடியாய் கேட்டாள் அழகி.

“அவன் மகன் ஏன் என்ன பாத்தான். அதான் நான் அவன் அப்பன பாத்தேன்.” ஜெயகொடியும் வீராப்பாய் பதில் சொன்னார்.

“உங்கள பாத்து என்னப்பா கேட்டாரு. உங்க மகள பொண்ணு கேட்டாரா.”

“அழகி உனக்கு நாக்கு நீழுது இப்போ எல்லாம். நான் உங்க அப்பன் அத மறந்துடாத.”

“நான் மறக்கற மாதிரி நீங்க செஞ்சூடாதீங்க. இந்த நிமிஷம் வரைக்கும் உங்களுக்காக தான் நான் எல்லாத்தையும் பொறுத்து கிட்டு அமைதியா இருக்கேன். நீங்களும் அதே மாதிரி இருக்கனும். அதுதானே ஒப்பந்தம். ஒப்பந்தத்தை நீங்க மீறினா, நானும் என் ஒப்பந்தத்தை மீறிடுவேன்.” என்றவள் அதற்குமேல் பேசாமல் அங்கு இருந்து சென்றுவிட்டாள்.

ஜெயகொடியும், விருமுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, அமைதியாய் இருந்தனர்.

நாட்கள் கடந்தது, கல்யாண வேலைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. தெய்வா ராஜி எவ்வளவு சொல்லியும் அழகி, அமைதியாய் தன்னை இந்த திருமண வேளைகளில் ஈடுபடுத்தி கொண்டாள். தென்னரசு வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமா கொண்டிருந்தான். அழகியை வெளியில் அனுப்ப முடிந்தவரை அவள் அறியாமல் தடை போட்டனர். ஆனால் அனைத்தையும் அவள் அறிந்தே இருந்தாள். ஆனாலும் அமைதியாய் இருந்தாள். அவளது பள்ளிக்கு கூட சென்று வர முடியாமல். ராஜியையே கவனித்து கொள்ள சொல்லி இருந்தாள். இன்பாவிடம் எந்த தொடர்பும் இல்லாமல் போனது. அழகி அதை தவிர்கிறாள் என்று தெரிந்தே அவனும் முயற்சி செய்யாமல் இருந்தான்.

இதற்கிடையில்  தென்னரசுவின் அம்மா, மாமியார் பதவியை அழகியிடம் தினம் தினம் நிலை நாட்டி கொண்டிருந்தார். ஒருபக்கம் தேர்தல் வேறு நெருக்கத்தில் இருப்பதால், கல்யாண வேலை கட்சி மாநாடு போல, மிகையாய் நடந்து கொண்டிருந்தது. கல்யாணத்தின் ஒவ்வொரு அசைவும் பெரிதாய் பேசப்பட்டது. அன்றும் அப்படியே கல்யாணத்திற்கான வேண்டுதலாய் குலதெய்வம் கோவிலில் கிடா விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக கல்யாணம் முடிந்த பின்னர்தான் வேண்டுதல் நிறைவேற்றப்படும், அதுவும் கிடா விருந்து நிச்சயம் கல்யாணத்திற்கு பிறகே நடக்கும்.

வழக்கத்திற்கு மாறாக இன்று இந்த விருந்து நடக்க காரணம் உண்டு.  தென்னரசு, என்னதான் சுயேட்சையாக தேர்தலில் நின்றாலும். ஒரு பெரிய கட்சியின் பினாமியாகவே செயல்பட்டான். அந்த கட்சி அந்த பகுதியில் நின்றாள் வெற்றி கொஞ்சம் சந்தேகம் தான் என்பதால் தான். ஜாதி ஓட்டுகளை கவர்ந்திழுக்க தென்னரஸை தங்கள் பினாமியாக நிறுத்தி உள்ளது. அந்த கட்சிக்கு தன் படை பலத்தை காட்டவே வழக்கத்திற்கு மாறான  இந்த கிடா விருந்து. தென்னரசின் பெற்றோருக்கும் கூட இதில் விருப்பம் இல்லை. இதை ஒரு சகுன குறையாகவே பார்த்தனர். ஆனாலும் தென்னரசு கேட்கவில்லை. இதோ இன்று கோவிலில் ஆறு ஊர் அங்காளி பங்காளி அனைவரும் கூடி இருந்தனர். அதுவும் போக. மாமன் மச்சான் ஊரான பணியான் மக்களும் அங்கேயே இருந்தனர். சொந்தபந்தங்கள் தாண்டி. நட்பு, பழக்கம், கட்சிக்காரர்கள் என்று கிட்டத்தட்ட கல்யாணத்திற்கு ஒரு முன்னோட்டம் போல இருந்தது அந்த விழா. ஆனால் அழகி மட்டும் அங்கு இல்லை. 

கல்யாண பெண்ணிற்கு கண் பட்டுவிடும். என்று அவளை வீட்டிலேயே இருக்கும்படி செய்தனர். 

கிடா விருந்திற்கு, எழுபது ஆடுகள் தயாராகி கொண்டிருக்க, அது போக, பலிக்காக கிட்டத்தட்ட ஆளுயர கிடாய்கள் இரண்டு நிற்க. தென்னரசின் தாய் மாமனான ஜெயகொடி கையில் இரண்டடி அருவாளை ஏந்தி நிற்க. கிடாயின் தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்ற அவைகள் தலையை சிலுப்ப, சாமியே சம்மதம் குடுத்து விட்டது என்று அவர்களே ஒரு முடிவுக்கு வந்து கிடாய்களை ஜெயகொடி பலியிட, ஜெயகொடி மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்றி சடங்கை நிறைவு செய்தனர். 

(இதற்கு மேல் விளக்கமா சொன்னாள் கேட்க சிலருக்கு பிடிக்காமல் போகும். ஆனாலு சின்ன சின்னதாய் இதில் நிறைய சடங்குகளும், முறைகளும், அதற்கான காரணங்களும் சொல்ல படுவது உண்டு. கிடாயை வெட்டிய பின் வெட்டியர் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது கூட அவரின் அந்த செயலின் விளைவை புனித படுத்த தான் என்று ஒரு சொல் உண்டு)

அதன்பின் தடப்புடலாய் விருந்து தயாராகியது. ஒருபக்கம் மது ஆராய், கடலாய் ஓட, மதுப்பிரியர்கள் அதில் மிதந்து கொண்டிருந்தனர். அடி தடி சண்டை. கொஞ்சல் கெஞ்சல், உறவு பகை எல்லாம் அரங்கேறிக்கொண்டிருக்க. அங்கு வந்தார் அந்த பெரிய கட்சியின் தற்போதைய MLA..

அவர் அங்கு வர, அவருக்கு தனியாக சிறப்பு கவனிப்பு அரங்கேற, அவரும் எல்லாம் முடித்து, தென்னரசின் படை பலம் பார்த்து முழு திருத்தியுடன் அவர் அங்கிருந்து கிளம்புகையில், ஒரு பெருங்கூட்டம் பைக்குகளிலும், ஆட்டோக்களிலும், சில கார்களிலும் வந்து, அந்த MLA விற்கு எதிராய் கோசமிட்டது. கிட்டத்தட்ட அவரை முற்றுகையிட்டது. அதில் முன் வரிசையில் முதலாய் இருந்தான் நம் இன்பரசன்.

அவரும் சுற்றி இருக்கும் மக்கள் கூட்டத்தை மனதில் வைத்து, நல்லவர் போல பொறுமையாய் அவர்களை எதிர்கொண்டு கொண்டிருந்தார். தென்னரசு முகம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது. இன்பரசனை பார்வையாலேயே எரித்து விடும் படி பார்த்து கொண்டிருந்தான். 

தன்னோடு இருந்த கூட்டத்தை அமைதிபடுத்திய இன்பரசன், பேச தொடங்கினான். “எந்த அடிப்படையில எங்க ஊர் நெல் கொள்முதல் குடௌன மதுரைக்கு மாத்துநீங்க, இந்த சுற்று வட்டாரத்தில கிட்டத்தட்ட பதிமூணு ஊருக்கு சேத்து இருந்ததே ஒரே ஒரு குடோன், அதையும் மதுரைக்கு மாத்தினா, எங்க சுத்து பட்டு எல்லா விவசாயியும் எங்க போவோம். ஏற்கனவே நெல் வந்து பத்து நாளுக்கு அப்பறம் தான் அளவைக்கு போகுது (எடை போட்டு அரசாங்கம் வாங்கும் நிகழ்வு தான் அளவை) அப்படி இருக்கும்போது இப்டி பதினெட்டு கிலோமீட்டர் தாண்டி எடுத்துட்டு போயி, அங்க மாசகணக்குள காத்துகிட்டு இருந்து எப்டி நாங்க பொழைக்கிரது. அளவைக்கு மாசகணக்கு ஆகும்னா, நாங்க அம்புட்டு  நாளும் அங்கேயே காவ காத்துகிட்டே கெடக்கணும். இதுக்கு இடையில மழை  வந்தா நெல்லு பூராம் வீணாகி போகவும் வாய்ப்பிருக்கு. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. விவசாயி, விவசாயம் எல்லாம் உங்களுக்கு அம்புட்டு எலக்காரமா போச்சுல, அதெல்லாம் இனி நடக்காது. நீங்கதான MLA   உங்கள மீறி எதுவும் நடந்து இருக்க வாய்ப்பில்லை, எங்களுக்கு சரியான பதில் வேணும். பதில் என்ன பதில் தீர்வு வேணும். ஒரு தீர்வு தெரியாம இங்க இருந்து யாரும் நகர முடியாது.” என்று இன்பரசன் சொல்ல. ஆமா யாரும் நகர முடியாது, என்று உடன் இருந்தவர்களும் ஒருமித்த குரலில் கத்த.

“இன்பரசா நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல. என் வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்காரு அண்ணன். அவர இங்க வச்சு இப்டி பண்றது நல்லா இல்ல.” என்றான் தென்னரசு பல்லை கடித்து கொண்டு. இதுதான் முதல் முறை இருவரும் நேருக்கு நேர் மோதி கொள்வது. இன்பரசனும் சளைக்காமல் பதில் சொன்னான்.

“தென்னரசு இது உன் வீட்டு விசேஷமா இல்லையான்னு எல்லாம் எனக்கு பிரச்சினை இல்ல. இப்போ இவர்தான் இந்த தொகுதி MLA. இவர அவரோட எடத்துக்கு போனா சந்திக்க முடியல. அதான் அவர் நம்ம இடத்துக்கு வந்தப்போ பாத்து எங்க கேள்வியை கேக்குறோம். இதுல நீ பேசவேண்டிய அவசியம் இல்ல.” என்று

“நான் ஏன் பேச கூடாது. பேசுவேன், நான்தான்டா இந்த ஊருக்கு ஒன்னொன்னும் பாத்து பாத்து செய்யுறேன். என்கிட்ட இல்ல ஒரு பிரச்சனைனும் போது நீங்க வந்து இருக்கணும். அதவிட்டுட்டு வீட்டு விசேஷத்துக்கு வந்தவர்கிட்ட வம்பு பண்றது தான் உன் வீரமா.” என்ற தென்னரசிடம்

“என்னடா நீ முந்திகிரியா இந்த கேள்வியை நாங்க கேக்கனும். எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருக்கியே நீயெல்லாம் நாளைக்கு MLA ஆகி என்னத்த கிளிக்க போறேன்னு. அப்டி கேக்காம விட்டதுக்கு எங்கள கேள்வி கேக்குரியா நீ.” என்ற இன்பரசனின் பேச்சில் கோபம் உச்சிக்கு ஏற. அவனின் சட்டையை பிடித்து தென்னரசு அடிக்க பாய, அவனை தடுக்கும் பொருட்டு இன்பரசனும் பதிலுக்கு சண்டையிட. “ரெண்டுபேரும் அமைதியா இருங்க” என்று MLA கத்தியத்தில் ஒருத்தரை ஒருத்தர் விட்டு விலகி நிற்க. அவரே பேசினார்.

“இன்பரசு என்ன வேணும் உங்களுக்கு, நெல் குடோன் எங்கேயும் போகாது. யாரோ தப்பா சொல்லி இருக்காங்க.  இடம் பற்றாக்குறை காரணமா வெறும் பரிசீலனைல மட்டும் தான் இருக்கு அந்த விஷயம். உங்க  பகுதி மக்கள் எதிர்ப்ப சொல்லிடீங்கள இனி இது நடக்காது. எல்லாரும் போகலாம்.” என்று அவர் சொல்ல

“உங்க வார்த்தையில எங்களுக்கு நம்பிக்கை இல்ல. எழுத்து மூலமா உறுதி குடுங்க.” என்று அவன் விடாபிடியாய் இருக்க. அதற்குள் பத்திரிக்கை காரர்களுக்கு விஷயம் தெரிந்து அவர்களும் வர வேறு வழியின்றி அவரும் எழுத்து மூலம் உறுதி கொடுத்தார். எல்லாம் முடிந்து போகும் முன் இன்பரசன் “இது இப்போ இருக்கிற MLA க்கு மட்டும் இல்ல. இனி யார் அந்த இடத்துக்கு வந்தாலும் இதான் நடக்கும்.” என்று சொல்லிவிட்டு செல்ல. அங்கிருந்த அனைவரும் விசேஷம் பத்தின பேச்சை விட்டுவிட்டு இதையே பேசிக்கொண்டு போக. தென்னரசு கொதித்து போனான். அந்த கோபத்தை அப்படியே அங்கிருந்த, ஜெயகொடியின் மீது காட்டினான். 

நேராய் அவரிடம் சென்றவன், “எல்லாம் உங்கனால தான். அவன் எதை எதையோ மனசுல வச்சுக்கிட்டு தான் இங்க வந்து இப்டி பிரச்சினை பண்ணிட்டு போறான். நாளைக்கு கல்யாணத்திலேயும் வந்து இப்டி தான் பண்ண போறான். அப்படி மட்டும் நடக்கட்டும் அன்னைக்கு ஒரு கொலை விழும். ஒண்ணு அவன் சாகனும் இல்ல நான் சாகனும். அதானே உங்க எல்லாருக்கும் விருப்பம்.” என்று கத்தியவன் அங்கிருந்து சென்றுவிட. அதே கோபத்தில்  அங்கிருந்து புறப்பட்ட ஜெயகொடி நேராய் சென்றது மதியழகனை தேடி தான்.

அவர்  எங்கோ சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கையில் வழியிலேயே அவரை வழிமறித்த ஜெயகொடி, “என்னையா பிள்ளைய பெத்து வளத்து வச்சிருக்க, ஊருக்கும் அடங்காம, வீட்டுக்கும் அடங்காம. அவன் எப்படியோ எக்கேடோ கெட்டு போகட்டும் ஆனா என் மக வாழ்க்கையில ஏன் குறுக்க வறான். என் மருமகன் கிட்ட ஏன் வம்புக்கு போறான். நல்லா சொல்லிட்டேன் மதியழகா, மச்சான்னு பெரிய மரியாதை இருக்கு உங்க மேல. ஆனா உங்க மகன் கெடுத்துட்டுவான் போல. இதுக்கு அப்பறம் என் மக விஷயத்துல அவன் உள்ள வந்தான். அவன் உசுருக்கு நான் பொறுப்பிள்ளை, என் மருமகன் என்ன வேணும்னாலும் செய்வான்.” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே. 

“போதும் நிறுத்து. என்ன போனா போகுதுன்னு ஒதுங்கி போனா ரொம்ப பேசுற, என் மகன உன் மருமகன் எண்ண வேணும்னாலும் பண்ணுவனா.. பண்ண சொல்லு, சொல்லித்தான் பாறேன். என் மகன் என்ன சொம்பை னு நெனச்சியா,  என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியா பொறுமையா இருக்கான். உன் மருமகன் என் மவன் கிட்ட மோதினான் அவன் சங்க அறுத்து போட்டுட்டு போய்ட்டே இருப்பான். ஆமா என்ன மருமகன் மருமகன் னு ஓவரா உருகுற, இன்னும் கல்யாணம் முடியல என்ன, ஞாபகம் இருக்கட்டும். வேணாம்னு போறோம். சீண்டாத, அப்பறம் தூக்கிட்டு போய் தாலியை கட்டுடா மகனேன்னு சொல்லி, என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்துட்டே இருப்பேன். ஜாக்கிரதையா இரு.” என்றவர் தோளில் இருந்த துண்டை உதறி போட்டிக்கொண்டே வீட்டை நோக்கி போய்க்கொண்டே இருந்தார்.

வீட்டிற்கு வந்த ஜெயகொடி, முகம் கருத்துப்போய் அமைதியாய் வெப்பமரத்தடியில் கட்டிலில் அமர. விஷயம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த, விருமு அழுதுகொண்டே வந்தவர். “என்னங்க நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை. அவளுக்கு ஒரு நல்லது நடக்கும்னு தான நேனச்சோம். அதுக்கா இவ்ளோ அவமானம். இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு இப்டி பிரச்சனை வருதே.” என்று அவர் சொல்லி அழுதுக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ஜெயகொடியின் ஒன்றுவிட்ட அக்கா, “அதுக்குதாண்டி சொல்றது, ஆட்டத்தை கொரைக்கணும்னு. ஊற கூட்டி இங்க பாரு எங்க பகுமானத்தன்னு படம் போட்டு காமிச்சா, இப்படித்தான் ஒரு கண்ணு இல்லனாலும் ஒரு கொல்லி கண்ணு பட்டு பூராம் பொசுங்கி போகும்னு.  இப்பக்கூட ஒண்ணும் கேட்டு போகல, இதுக்குமேலயாவதும் ஒழிச்சு மறச்சு வச்சு செய்ங்க. எங்க என் அழகிய.” என்று அவர் கேட்டுக்கொண்டிருந்த அதேநேரம்,  வயகாட்டில் இருந்த அழகியிடம் நடந்த அத்தனையையும் ஒப்புவித்து கொண்டிருந்தான் அவளின் மாணவன் ஒருவன். அத்தனையையும் கேட்டவள். கோபம் கொந்தளிக்க, வீட்டை நோக்கி வேகமாக சென்றாள்.  

எதிரில் மதியழகனும் வயகாட்டிற்கு வந்து கொண்டிருக்க அவரை கொஞ்சமும் கவனிக்காமல் செல்லும் அவளின் வேகத்தை கவனித்து, அழகியின் குணம் இதுவல்ல. இப்படியெல்லாம் கண்னு மண்ணு தெரியாம அவ நடக்க மாட்டாலே என்று யோசித்த அவர். “அம்மா முத்து… அம்மாடி…” என்று அழைக்க, அவளுக்கு அதுவும் காதில் விழாமல் போக, அவளின் எதிரில் வந்த ஒருவர் அவளை நிறுத்தி சொன்ன பிறகே திரும்பி பார்த்தவள். “மாமா…” என்று அவர் அருகில் வந்தாள்.  வந்தவள் அவரை ஏறிட்டு பார்க்க தயங்கி நிற்க, அவள் முகம் அப்பட்டமாய் காட்டியது அவளுக்குள் இருக்கும் குற்றவுணர்வை, அதை மிகசரியாய் புரிந்த மதியழகனும், 

“என்னம்மா ஏன் இப்படி, எதிர்ல வர ஆள கூட பாக்க முடியாத அளவுக்கு அப்டி என்ன ரோசனை (யோசனை).” என்று அவர் கேட்டதும். 

“அப்படியெல்லாம் ஏதும் இல்ல மாமா.” என்று அவள் சொல்ல அதற்கு மாறாய் அவள் கண்கள் கட்டி வைத்திருந்த கண்ணீரை எல்லாம் கொட்டி தீர்த்தது. இப்படி நடு வழியில் நின்று அவள் அப்படி கலங்குவது அவர் மனதை கலங்கடிக்க, துடிதுடித்து போனவர். 

“அம்மாடி  அழுகாதடா… பொம்பள பிள்ளைங்க மனம் நொந்து அழுதா வீடு விருத்தி ஆகாது. அழுகாத முத்து.” என்றவர் “இங்க வாமா” என்று ஊரணி ஓரம் இருந்த ஆலமரத்தடிக்கு கூட்டி சென்று, விழுதுகளின் நடுவே அமர்ந்து கொண்டு அவளையும் அமர சொல்ல, அவரின் கீழ் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் அவள்.

பொதுவாக படங்களிலும், கதைகளிலும் போல, நமக்குள் நம் குடும்பங்களுக்குள்  ஆறுதலுக்காக கட்டி அணைத்து கொள்வதெல்லாம் கிடையாது. கிராமங்களில் இன்னும் அப்டி ஒரு ஆறுதலான அணைப்பு கணவன் மனைவிக்கு இடையில் கூட பெரும்பாலும் இருப்பதில்லை. கணவன் மனைவிக்குள்ளேயே இப்படி என்றால், அப்பா பிள்ளை, அம்மா பிள்ளை, அண்ணன் தங்கைகள், எல்லாம் இன்னும் அதிகம். அதிகபட்ச ஆறுதல் மொழி, தோளில் தட்டி கொடுப்பதுதான். அதற்கும் மேல், நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று சொல்வதன் வெளிப்பாடு, தலையில் கைவைத்து வருடி கொடுப்பதாக தான் இருக்கும். மதியழகனும் அதையே செய்தார். தனக்கு கீழே அமர்ந்திருக்கும் அழகியின் தலையை அவர் வாஞ்சையாய் வருட, அதில் ஆயிரம் ஆயிரம் ஆறுதல் மொழி உணர்ந்தவள், தான் இளைப்பாற இந்த ஆலமரம் தான் சரி என்று நினைத்தவள், அவர் மடியிலேயே புதைந்து தேக்கி வைத்த கண்ணீரை எல்லாம் கொட்டி தீர்த்தாள். அவரும் அவள் அழுது முடிக்கும் வரை அப்படியே அவள் தலையில் வருடி கொண்டு மட்டுமே இருந்தார். அழுது முடித்த அவள். கண்களை துடைத்து கொண்டு. 

“மாமா அப்பா பேசினத்துக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் மாமா. மன்னிச்சிடுங்க.” என்று கை எடுத்து கும்பிட்டு கேட்க.

“கிறுக்கு பிள்ளையா நீ. அவன் யாரு என் மச்சினன் தான. அவன் பேசிட்டு போறான்மா, அதுக்கெல்லாம் நீ ஏன் மன்னிப்பு கேக்குற. அம்புட்டு பெரிய மனுஷியா நீ. உங்க அப்பனுக்காக மன்னிப்பு எல்லாம் கேக்குற. நான் மட்டும் என்ன சும்மாவா இருந்தேன். பதிலுக்கு நானும் தான பேசிட்டேன். என்ன இருந்தாலும் நானும் அப்டி பேசி இருக்க கூடாதுன்னு இப்ப தோணுது. நான் பேசினதும் தப்பு தான்.” என்றவரிடம்.

“நீங்க பேசினதுல எத மாமா தப்புன்னு சொல்றீங்க,  என்னய உங்க வீட்டு மருமகளா கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்களே அதையா” என்று அவள் கேட்க.

“ஆமா முத்து, என்ன இருந்தாலும் ஒரு பரிசம் போட்ட பிள்ளைய அப்டி சொல்லி இருக்க கூடாதுல.” என்று அவர் சொல்ல.

“மாமா அப்போ என் மனசு முக்கியம் இல்லையா மாமா. என் மனச விடுங்க, தென்னரசு மாமா வீட்ல நான் நல்லா இருப்பேன்னு உங்களுக்கு தோணுதா மாமா. அங்க நான் எப்டி இருப்பேன்னு தெரிஞ்சும் எதுவும் கேக்க மாட்டீங்கள,  உங்களுக்கு உங்க வீராப்பும் மரியாதையும் தான் முக்கியம். எனக்காக எங்க அப்பாகிட்ட பேசினா அது போயிடும் அப்டிதான மாமா.” என்று அவள் கேட்டதும்.

“என்ன பிள்ளை இப்டி பேசிபுட்ட பொசுக்குன்னு, உனக்கு மேல என்ன இருக்கு. அப்டி எதுவுமே இல்ல முத்து, உனக்கு விருப்பம் இல்லன்னு எனக்கு தெரியாது. இப்போ சொல்லு நான் போய் உங்க அப்பன்கிட்ட பேசட்டுமா. எனக்கு நீதான் முக்கியம். உனக்கு முன்னாடி என் வீராப்பு பெருசு இல்ல. சொல்லுமா பேசட்டுமா, என்ன பேசணும் என் பிள்ளை முத்தழகிக்கு இந்த கல்யாணம் வேணாம்டா மச்சான்னு பேசுறேன். வா போவோம்” என்று அவர் சொல்ல.

“இல்ல மாமா, அப்டி பேச கூடாது. அழகிக்கு என் மகன் இன்பரசன தான் கட்டி வைக்கணும். அழகி என் வீட்டு மருமகனு சொல்லணும். முடியுமா மாமா,” என்று அவள் சொன்னதும், உறைந்து விட்டார் மதியழகன்.

//////மீண்டும் சந்திப்போம்///////
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

அன்பின் அரசனே… 44

நேசம்….