in , ,

21 – கனவே கலைவதேனோ?

அத்தியாயம் 21

ஆதவிடம் பேசிவிட்டு தன் தந்தையிடம் வந்த மதுவந்தி, “தெரியாம பண்ணிட்டான்பா அவன் சின்ன பையன் தான. சரி எது தப்பு எதுனு சொல்லிக் கொடுக்க வேண்டியது பெரியவங்களோட கடமை…” என்றவளை அவர் வேதனையோடு பார்க்க,

“இனி அவனை பத்தி கவலைப்படாதிங்க. அவனை குற்றவாளி மாதிரியும் ட்ரீட் பண்ண வேணாம். நான் பேசி அவனுக்கு புரிய வச்சிட்டேன். அவனுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அவனும் புரிஞ்சிப்பான்…” என்றவள் மகேஷ்வரியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து நகரவும் ராஜசேகர் அவளை தடுத்தார்.

அவளின் மேடிட்ட வயிறை ஒரு முறை பார்த்தவர் பின் வேதனையோடு, “இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை என்கிட்ட சொல்லக் கூட உனக்கு தோணலையாம்மா, அந்தளவுக்கு நான் வேண்டாதவனா போய்ட்டனா?” என பரிதவிப்போடு கேட்டவரிடம் பதில் சொல்ல முடியாமல் அழுதபடி அங்கிருந்து நகர்ந்தவளை கைப்பற்றி நிறுத்தியவர் அதிரூபனை பார்த்தார்.

“உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல ரூபன்…” ஆதங்கத்தோடு சொல்ல,

அவனோ அவரை கண்டுகொள்ளாது மனைவியிடம், “வந்த வேலை முடிஞ்சிடுச்சுனா நாம கிளம்பலாம் மதி…” என்றான்.

அதில் பொறுமையிழந்தவர், “நான் அவளோட அப்பான்றத மறந்துடாத…” கோபக்குரலில் சொல்லவும்,

அவனோ அவரை நக்கலாக பார்த்தவன், “அது முதல்ல உங்களுக்கு நியாபகத்துல இருக்கா?” என்றான்.

“போதும் ரூபன்,  என் மனைவி பண்ணது பெரிய தப்புன்றதுனால தான் இவ்ளோ நாள் நான் என் மகளை விட்டு விலகி இருந்தேன். இனியும் என்னால முடியாது. நாளைக்கு அவளுக்கு வளையகாப்பு வச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன். அது முடிஞ்சதும் என் மகளை என் வீட்டுக்கு தான் கூட்டிட்டு வர போறேன்…” என அதிகாரமாக சொல்லவும் ரூபனின் பொறுமை காற்றில் பறந்தது.

“இப்படி பேச உனக்கே வெட்கமா இல்லை?” ஆத்திரத்தில் மரியாதையின்றி பேசவும் மதுவந்தி ‘ரூபன்’ என பதறினாள்.

அவளை ஆவேசமாக தன் பக்கம் இழுத்தவன், “ஒரு வார்த்தை பேசுன பொண்டாட்டினு கூட பார்க்காம வெட்டி போட்டு போய்ட்டே இருப்பேன்…” என சீறியவன் அதே வேகத்தில் ராஜசேகரிடமும் பாய்ந்தான்.

“எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு அவளுக்கு அப்பானு சொல்லிக்கிற? சட்டப்படி தத்தெடுத்துட்டதால அவளுக்கு அப்பா ஆகிட முடியும்னு நினைச்சியா? அவளை மகளா நினைச்சு வளர்த்துருந்தா அவ பட்ட கஷ்டம் கொஞ்சமாது உனக்கு தெரிஞ்சிருக்கும். உன் பொண்டாட்டி அவளை எப்படி எல்லாம் கொடுமை படுத்திருக்காங்கனு உனக்கு தெரியுமா?” என்றவன் மதுவந்தியின் அருகில் குனிந்து காலருகில் அவள் புடவையை சற்று தூக்கவும் அதை கண்டவர் அதிர்ந்து போய் மகளை பார்த்தார்.

காலில் தெரிந்த தீக்காயங்களைக் கண்டு மகள் பட்ட வலியை எண்ணி துடித்தவர் அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் முற்றிலும் நொறுங்கிப் போனார்.

“ஒரு அப்பன்கிட்ட இந்தளவுக்கு தான் காட்ட முடியும்…” என்றதுமே அவருக்கு புரிந்து போனது மகளின் தேகத்திலும் மனைவி அவள் கைவரிசையைக் காட்டியிருக்கிறாள் என்று.

நிற்கக் கூட முடியாமல் தொய்ந்து அமர்ந்தவரைக் கண்டு பதறி மது நகரவும் அவள் கரத்தைப் பற்றியவன் அவளை முறைத்தான்.

“ப்ளீஸ் ரூபன், அப்பா பாவம்…” தந்தையை எண்ணி அவள் கலங்க,

“அவரா பாவம்? உனக்கு என்ன கொடுமை நடக்குதுனு கூட தெரியாம இருந்துருக்காரே அவரை அப்பன்னு சொல்லாத. இதுவே அவர் பெத்த பொண்ணா இருந்துருந்தா இப்படி எனக்கென்னன்னு இருந்துப்பாரா? எங்கேயோ இருந்து வந்தவ தான நீ, அதான் இந்த அலட்சியம்…” என்றான் ஆத்திரம் குறையாது.

மது கலங்கி நிற்க ஆதிராவும் ஆதவும் அதிர்ந்து நின்றனர். ஆதிராவுக்குமே இப்பொழுது தான் அதிரூபனின் கோபத்திற்கான முழுக்காரணம் புரிந்தது. தன் தமக்கையின் தேகத்திலிருக்கும் தீக்காயங்களைப் பற்றி அவளுக்குத் தெரியாதே.

தன் தமக்கை அனுபவித்த வலிகளை எண்ணி கலங்கியவளுக்கு அதிரூபனின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்தாள். அதே நேரம் தனக்கு கூட தமக்கை அனுபவித்த வலி தெரியவில்லையே என தன்னையே நொந்து கொண்டாள்.

ஆதவோ மதுவந்தி தத்தெடுக்கப்பட்டவளா என அதிர்ந்து நின்றான்.

தன் அன்னைக்கு மது மீதிருக்கும் வெறுப்பு எதனால் என்பது இப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது. அவளை அவர் துன்புறுத்தும் போதெல்லாம் குதூகலித்த அவன் மனம் இப்பொழுது ஏனோ ரணமாக வலித்தது.

“ஒவ்வொரு நாளும் மனதளவுலயும் உடலளவுலயும் நோகடிச்ச உங்ககிட்ட என் மனைவியை எப்படி விட சொல்றீங்க? இந்த நரகத்துக்கு அவளை திரும்ப அனுப்புறதுக்கு என் கையாலே அவளை கொல்றது எவ்வளோ மேல்…” என ஆத்திரத்தோடு சொல்லவும் தன் மகள் அனுபவித்த வேதனைகளை எண்ணி உருக்குலைந்து போனார் அவர்.

“ஏற்கனவே சொன்னது தான், உங்களுக்கும் அவளுக்கும் எந்த உறவுமில்லை…” என்று சொல்லிவிட்டு மகஷ்வரியை அற்பப்பதிரை பார்ப்பது போல பார்க்கவும் அவர் தலைகுனிந்தார்.

அதுவரை தனக்குள்ளே துடித்துக் கொண்டிருந்த ராஜசேகரோ ஆவேசமாக எழுந்து வந்து மகேஷ்வரியை அடிக்க முதலில் திணறியவர் பின் ஆத்திரத்தோடு கணவனை தடுத்தார்.

“என்னய்யா உன் மகளை கஷ்டப்படுத்திட்டனேனு உனக்கு ஆத்திரம் வருதா? எனக்கு துரோகம் பண்ணியே அதை நினைச்சு எனக்கு எவ்ளோ ஆத்திரம் வரணும் உன் மேல?” என்று சீற்றம் குறையாது கேட்டவரை ராஜசேகர் புரியாது பார்த்தார்.

“என்ன உளர்ற?”

“நான் உளர்றனா? அவளுக்கு ஒன்னுன்னா துடிக்கிறியே அது ஏன்? அவ உன் சொந்த ரத்தம்ன்றதுனால தான?” நக்கலாக சொல்லவும் ராஜசேகருக்கு அப்பொழுதும் புரியவில்லை. அங்கிருந்த மற்றவர்களுக்கும் அவரின் பேச்சு சுத்தமாக புரியவில்லை.

“இன்னும் எத்தனை நாளைக்கு என்னை ஏமாத்தலாம்னு நினைக்கிற? நீ எனக்கு பண்ண துரோகம் எனக்கு எப்பவோ தெரிஞ்சிடுச்சு. உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா உனக்கும் அந்த பார்வதிக்கும் பிறந்த குழந்தைய என் கையாலே தத்தெடுக்க வச்சி சீராட்டி வளர்க்க வச்சிருப்ப? உன் மேல இருந்த ஆத்திரத்துல தான் அவளை அந்தளவுக்கு அழ வச்சி வேடிக்கை பார்த்தேன்…” என்றவரின் வன்மம்படிந்த பேச்சில் அனைவரும் ஸ்தம்பித்து நிற்க ராஜசேகரோ நொறுங்கிப் போனார்.

இதுநாள் வரை மகேஷ்வரிக்கு மதுவந்தியை பிடிக்காமல் போனதற்கான காரணம் அவள் தங்கள் உதிரத்தில் பிறக்காதது தான் என்றெண்ணியிருந்தவருக்கு மகேஷ்வரியின் கூற்று பேரதிர்ச்சியைத் தான் கொடுத்தது.

தன்னை தவறாக எண்ணி தான் மதுவந்தியை அவள் வதைத்திருக்கிறாள் என்பதை அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையே.

அவர் மகேஷ்வரியை உருகி உருகி காதலிக்கவில்லை என்றாலும் மனதால் கூட அவரை தவிர வேறொரு பெண்ணை அவர் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

அப்படிப்பட்டவரை அவருக்கு துரோகம் செய்ததாகக் கூறியது மட்டுமல்லாது அதனால் தான் மதுவந்தியையும் வதைத்திருக்கிறார் என்று கூறினால் அவராலும் தான் அதை எப்படி தாங்க முடியும்?

மதுவந்திக்கோ மகேஷ்வரி அவளை படுத்திய கொடுமைக் கூட பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இறந்து போன தன் அன்னையையும் தன்னை வளர்த்தவரையும் இணைத்து கலங்கப்படுத்திவிட்டார்களே என துடிக்க அவளை ஆதரவாக தோளில் சாய்த்துக் கொண்டான் அவள் கணவன்.

ஆவேசமாக பேசிய மகேஷ்வரியோ கதறி அழத் தொடங்கினார்.

“நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? எதுக்காக எனக்கு இப்படியொரு துரோகத்த பண்ண? எனக்கு குழந்தை இல்லனு ஊரே பேசுனப்ப கூட எனக்கு என் புருஷன் உறுதுணையா இருக்காரேனு சந்தோஷப்பட்டேன். ஆனா நீ எனக்கே தெரியாம வேறொருத்தி கூட…” என சொல்ல முடியாமல் கதறியவர்,

“நீ எனக்கு துரோகம் பண்ணனு தெரிஞ்சும் என்னால உன்னை வெறுக்கவும் முடியல, அதே சமயம் நீ பண்ணத மறக்கவும் முடியல. அதனால தான் என் கோபத்தை அவ மேல காட்ட ஆரம்பிச்சேன்…” என்றார் ஆத்திரத்தோடு.

‘இது தான் தன் மனைவி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா?’ என உள்ளுக்குள்ளே உடைந்தவரோ மனைவியிடம் தன்னை நிரூபிக்க துளியும் முயலவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட தன் மகளை எண்ணி அவரால் கண்ணீர்வடிக்க மட்டுமே முடிந்தது.

ஒரு வார்த்தை பேசுவதற்குக் கூட திராணியின்றி அமர்ந்திருந்தவரைக் கண்ட மற்றவர்களுக்கு அவர் துரோகம் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது.

என்னதான் மதுவை சித்திரவதை செய்ததற்கு மகேஷ்வரி காரணம் சொன்னாலும் ரூபனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவருக்கு அவர் கணவர் துரோகம் செய்ததாக எண்ணியிருந்தால் அதற்கு அவரிடம் தானே வெறுப்பையும் கோபத்தையும் காட்டியிருக்க வேண்டும். எந்த தவறும் செய்யாத தன் மனைவியை எதற்காக வதைக்க வேண்டும்? என்ற ஆத்திரம் மேலோங்க அங்க நிற்கக் கூட பிடிக்காமல் மனைவியின் கரத்தைப் பற்றினான்.

அவளோ தந்தை இருக்கும் நிலையில் அவரை இப்படியே எப்படி விட்டு வர முடியும்? என கலங்க அதிரூபனோ ஆதவைப் பார்த்தான்.

அதுவரை அதிர்ச்சியில் இருந்த ஆதவோ அதிரூபனின் பார்வையில் தந்தையின் அருகே சென்றவன் அவரை அழைத்துக் கொண்டு அவர் அறை நோக்கிச் சென்றான்.

தன் பார்வையைப் புரிந்து கொண்டு செயல்பட்ட ஆதவை எண்ணி அதிரூபன் வியந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது மனைவியிடம், “இது கணவன் மனைவி பிரச்சினை அவங்க தான் பேசி தீர்த்துக்கணும். வேற யாரும் தலையிட தேவையில்லை, நீ வா…” என்றதும் ஆதிராவும் அவர்கள் அருகே வந்தாள்.

ஏனோ அவளுக்கு அந்த வீட்டில் இருப்பது ஒரு வித அச்சத்தைக் கொடுக்க அதை புரிந்த ரூபனும் மதுவும் அவளுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லி தான் புரிய வைக்க வேண்டுமென்று அவளையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.

மூவரும் ஒவ்வொரு மனநிலையில் வந்தனர்.

ரூபனின் மனமோ சிறு பிள்ளைப்போல் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. மனைவியிடம் எத்தகைய மாற்றத்தை எதிர்பார்த்து இத்தனை வருடங்களாக காத்திருந்தானோ அதற்கு பலனாக அவன் மனைவி இன்று அந்த மாற்றத்திற்கான அடிதளத்தை போட்டிருக்கிறாளே அந்த மகிழ்ச்சியில் தான் துள்ளி குதித்துக் கொண்டிருந்தான்.

அவளின் இந்த அதிரடியை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணத்தை அவன் ஓரளவு யூகித்திருந்தாலும் அவன் மனதில் இருக்கும் மகிழ்ச்சி மட்டும் துளியும் குறையவில்லை. அவனின் மகிழ்ச்சியில் மற்ற பிரச்சினைகள் கூட பின்னுக்குத் தள்ளப்பட்டது.

வீட்டில் நுழையும் நேரம் அவர்களை எதிர்க்கொண்ட அதிரதனைக் கண்டவன் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் அவனை அணைத்துக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட,

காரணம் தெரியாமலே தமையனின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டாலும் தமையனை சீண்டும் பொருட்டு, “டேய் உன் பொண்டாட்டி நான் இல்லை அங்க நிக்கிறா பாரு…” என கன்னத்தைத் துடைத்தப்படி சொல்ல,

அவனை முறைத்தவன் மீண்டும் கட்டிக் கொள்ளும் நேரம் அங்கே அவனின் தந்தை வரவும் தம்பியை விடுத்து தந்தையை தாவி அணைத்துக் கொண்டவன் அவர் கன்னத்திலும் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் கூட அவனை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்க அவனோ அதை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தந்தையை அணைத்தப்படியே தன் மனைவியை காதல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுள் உண்டான மகிழ்ச்சியை வார்த்தையால் வெளிப்படுத்த தெரியாததால் செயலில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

ரூபனின் செயலுக்கான காரணம் முதலில் புரியவில்லை என்றாலும் புரிந்ததும் அவனை வியப்போடு பார்த்தாள்.

அவளது இந்த சிறு மாற்றமே அவனுள் இத்தகைய மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறதென்றால் அவன் அவளிடம் எந்தளவு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

மனதில் எதை எதையோ யோசித்தவள் எதுவும் பேசாது அமைதியாக அறைக்குள் சென்று விட அவளையே பார்த்திருந்தவனுக்கு ஆதிராவின் நினைவு வரவும் அவளருகில் வந்தான்.

அவள் தலையை ஆதூரமாக வருடியவன், “நீ பயந்தளவுக்கு ஆதவ் இல்லை, சோ எதை பத்தியும் யோசிக்காம போய் ரெஸ்ட் எடும்மா. கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு அறையை நோக்கி நகர்ந்தான்.

“டேய் இவ்வளவு அளப்பறையை பண்ணிட்டு விஷயம் என்னன்னே சொல்லாம போறியே, இது நியாயமாடா?” பாவமாய் அதிரதன் கேட்க,

“முதல்ல போய் என் பொண்டாட்டிய கொஞ்சிட்டு வர்றேன்…” என நிற்காமல் சென்று விட அதிரதனோ தந்தையை முறைத்தான்.

“உங்க மகன் இருக்கானே! ஏன் சொல்லிட்டு போனா என்னவாம்? அவன் வரவரைக்கும் நான் என்ன ஏதுனு மண்டைய பிச்சிக்கிட்டு அலையணும்…” என கடுப்பாக சொன்னவன் ‘இவன் வேற சீக்கிரம் வந்து தொலைய மாட்டானே’ என தனக்குள்ளே புலம்பினான்.

கேசவமூர்த்திக்கோ பெரிய மகனின் மகிழ்ச்சி ஒருவித நிம்மதியைக் கொடுக்க இளையவனின் பேச்சைக் கண்டு கொள்ளாது தன் வேலையைக் கவனிக்க சென்றுவிட்டார்.

ஆதிராவின் முகத்தில் இருந்த கவலையை அப்பொழுது தான் கவனித்தவன் என்னவென்று விசாரிக்க அவளோ பதில் சொல்லாமல் நிற்கவும் என்ன தோன்றியதோ தெரியவில்லை மற்றொரு அறையை காட்டியவன், “போய் ரெஸ்ட் எடு ஆதிரா, ரூபனும் மதுவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க…” என்றதும் அவளும் அமைதியாக நகர்ந்தாள்.

அதிரதனுக்கோ குழப்பம் தான் மிஞ்சியது. தமையனின் மகிழ்ச்சிக்கும் ஆதிராவின் கவலை தோய்ந்த முகத்திற்கும் காரணம் தெரியாமல் குழம்பியவன் தமையனின் வருகைக்காக காத்திருந்தான்.

படுக்கையில் அமர்ந்திருந்த மதுவந்தி எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க அவள் கரமோ வயிற்றிலிருக்கும் குழந்தையை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது.

அவளருகில் வந்தமர்ந்தவன் அவளை தன் தோளில் சாய்த்துக்கொள்ள அதற்காகவே காத்திருந்தவள் போல் அவனை ஒன்றியவள் கதறி அழுதாள்.

அவனும் அவள் அழுகையை நிறுத்த முயலவில்லை, அழுது முடிக்கும் வரை காத்திருந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அழுகை குறையவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஏன் ரூபன், என் தங்கச்சிக்கு ஒரு பிரச்சினைனதும் அவ என்னை தேடி வர்ல? அவ அக்கா அவளுக்கு உதவ மாட்டேன்னு நினைச்சிட்டாளா? என்ன ஏதுனு கூட கேட்க முடியாத கோழைனு என்னை முடிவு பண்ணிட்டாளா?” என்று தேம்பியவளை அவனும் தான் என்ன சொல்லி தேற்றுவான்?

சிறு வயதிலிருந்தே ரூபன் ஆதிராவிற்கு பழக்கம் தான் என்றாலும் அவளுக்கு அவள் தமக்கை மதுவந்தி மேல் தான் அளவுகடந்த பாசம் இருந்தது. 

ஒரு பிரச்சினை என வரும் போது பாசமும் உரிமையும் அதிகமுள்ள மதுவந்தியிடம் வாராது ரூபனிடம் சென்றிருக்கிறாள் என்றால் (இத்தனைக்கும் அவள் அவன் மீது கோபத்தில் இருந்தாள்) தன்னால் அவளுக்கு உதவிபுரிய முடியாது என்று எண்ணியிருக்கிறாள் என்பது தானே அர்த்தம்.

தன் அக்கா ஒரு கோழை, அவளுக்காகவே ஒரு வார்த்தை துணிந்து பேசிராதவள் தனக்காக என்ன செய்துவிட போகிறாள் என்று தானே தோன்றியிருக்கும். அதில் ஒன்றும் தவறில்லையே. ஏனெனில் நானும் அது போல தானே வாழ்ந்திருக்கிறேன் என்றெண்ணி மனதளவில் உடைந்து போனாள்.

தனக்கொரு பிரச்சினை என்றால் முதலில் தேடுவது தன் குடும்பத்தினரை அல்லது மனதிற்கு நெருக்கமானவரை தான். அது மனித இயல்பு.

அப்படியிருக்க தன் தங்கை தன்னை தேடவில்லையே என்ற ஆதங்கம், தான் அதற்கு தகுதியானவள் இல்லையோ என்ற இயலாமை.

அதனால் தன் மேல் உண்டான கோபத்தில் தான் அவள் ஆதவை அடித்தது. (மற்றப்படி ஆதிரா பயந்தது போல அவன் தன் உடன்பிறந்தவளையே தவறான எண்ணத்தில் பார்த்திருப்பான் என்றெல்லாம் நினைக்கவில்லை.) அந்த கோபம் மட்டும் அவளுள் எழவில்லை என்றால் அவனிடம் பொறுமையாகவே எடுத்து சொல்லி அவனுக்கு புரிய வைக்க முயன்றிருப்பாள்.

முதலிலே பொறுமையாக எடுத்து சொல்லியிருந்தால் அவன் காது கொடுத்து கேட்டிருப்பானா என்பது சந்தேகமே. ஏனெனில் சில நேரம் அதிரடி தான் மாற்றத்தைக் கொண்டு வரும்.

அது ரூபனுக்கும் புரிந்திருந்தது.

தன் தங்கையே இப்படி என்றால் நாளை என் குழந்தையும் அவளுக்கு நேரும் பிரச்சினைகளை நான் சரி செய்வேன் என்று நம்ப மறுப்பாளோ? என தனக்குள்ளே துடித்துப் போனாள்.

மனைவியின் வலி புரிந்தாலும் இந்த வலியே அவளுக்குள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமென முழுமையாக நம்பினான் ரூபன்.

அவளிடம் நடந்ததைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆறுதலாக அவளருகிலே இருந்து அவளை உறங்க வைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளுக்கு போர்த்திவிட்டு வெளியே வந்தான்.

ஆதிராவைப் பார்க்க அடுத்த அறைக்குள் சென்றவன் அவளும் உறங்கியிருக்க தம்பியைத் தேடிச் சென்றான்.

கிணற்று மேட்டில் அமர்ந்தப்படி இவனுக்காக காத்திருந்த அதிரதனோ ரூபனை கண்டதும் வியப்பாக, “என்னடா எப்படியும் நீ வர விடிஞ்சிடும்னு நினைச்சேன், பரவாயில்லையே சீக்கிரம் வந்துட்ட…” என கேலி செய்ய,

“அவ தூங்கிட்டா…” என்றதும் அதிரதன் சத்தமாக சிரித்தான்.

“தம்பிய காக்க வச்சிட்டு போனா இப்படி தான் பல்பு வாங்க வேண்டிவரும்…” என கேலி செய்தவனை முறைத்தவன்,

“உனக்கொரு சந்தோஷமான விஷயத்தை சொல்லலாம்னு நினைச்சேன், சரி விடு…” என நகரவும்,

அப்பொழுது தான் நினைவு வர, “டேய் டேய் சொல்லுடா யோசிச்சி யோசிச்சு மண்ட காயுது…” என்று கெஞ்சலில் இறங்க,

சிறிது நேரம் போக்கு காட்டியவன் ஆதிராவின் வீட்டில் நடந்ததை சொல்லவும் அதிரதன் நம்ப முடியாது பார்த்தான்.

“என்னடா சொல்ற? மதுவா அவனை அடிச்சா?” இன்னமும் நம்ப முடியாமல் கேட்க ரூபனும் ஆமாம் என்று புன்னகையோடு தலையசைக்க அதிரதனும் மகிழ்ந்தான்.

ஆனால் முழுதாக மகிழ முடியாது ஆதவை எண்ணி ஆத்திரம் எழ, “அவனை சும்மாவா விட்ட?” என்றான் இறுகிய முகத்தோடு.

“சின்ன பையன் தான. தெரியாம தப்பு பண்ணிட்டான். அதுக்காக அவனை என்ன வெட்டவா முடியும்? மதியும் அவனுக்கு பேசி புரிய வச்சிட்டா. அண்ட் ஆதிரா பயந்த மாதிரிலாம் எதுவும் இல்லை. அதனால தான் நான் எதுவும் அதுல தலையிடல…” என்றவன்,

“அவன் மதிகிட்ட வெறுப்பா நடந்துக்கிட்டது கூட அவன் அம்மாவால தான். அதுக்கு அவனை மட்டும் குறை சொல்லி என்ன பண்றது?” என்று மகேஷ்வரி சொன்னதையும் சொல்ல,

அதை கேட்டு ஆவேசமடைந்த அதிரதனோ, “அந்த அம்மாலாம் என்ன ரகம்டா? உண்மையாவே அவங்க புருஷன் துரோகம் பண்ணியிருந்தாலும் அதுக்கு மதுவ ஏன் சித்திரவதைப்படுத்தணும்? அவ என்ன பாவம் பண்ணா? அவங்கள ஏன் சும்மா விட்டு வந்த?” என பல்லைக் கடிக்க,

“என்ன பண்ணாலும் நடந்தத மாத்த முடியாது. இனி அதை பத்தி பேசவும் வேணாம். அந்த உறவே அவளுக்கு வேணாம்னு தான் கூட்டி வந்தேன். ஆனா அவ விருப்பப்பட்டு அங்கே போனாலும் நான் தடுக்க போறதில்ல. என் மதியோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என்றான் தெளிவாக.

நடந்த அனைத்தையும் தம்பியிடம் சொன்னவனோ மதுவின் தேகத்தில் இருக்கும் தீக்காயத்தைப் பற்றி மறந்தும் சொல்லவில்லை. அது தெரிந்தால் அவன் எவ்வளவு வேதனைப்படுவான் என்பது ரூபனுக்கும் தெரியும்.

“நீ என்ன சொன்னாலும் அவங்கள சும்மா விட்டத என்னால ஏத்துக்க முடியல. எந்த பாவமும் அறியாத அவ ஏன் தண்டனை அனுபவிக்கணும்? மது பாவம்டா. நல்லது பண்ணா நல்லது தான நடக்கும்னு சொல்லுவாங்க. ஆனா எல்லாருக்கும் நல்லது நினைக்கிற அவ வாழ்க்கையில மட்டும் ஏன் கஷ்டங்களே வந்துட்டு இருக்கு?

அந்தம்மா தான் இப்படி பண்றாங்கனா எவனோ ஒருத்தன் எங்கேயோ இருந்துட்டு அவ வாழ்க்கையில விளையாடியிருக்கான். நீ மட்டும் அவளோட புருஷனா இல்லனா இன்னேரம் அவ கதி?” என அதை நினைக்கும் போதே அதிரதனின் கண்கள் கலங்கியது.

ரூபனுக்கும் ஏதோ தோன்ற அதிரதனிடம், “அன்னைக்கு போன் பேசுனவன் கூட மதிய நான் சந்தேகப்பட்டு கஷ்டப்படுத்துலயேன்ற மாதிரி தான்டா பேசுனான். அவனோட நோக்கம் மதி கஷ்டப்படணும். ஆனா அவன் யாரு? அவனுக்கும் அவளுக்கும் அப்படி என்ன பிரச்சினை இருந்துருக்கும்னு தான தெரியல…” என்றதும் அதிரதனும் யோசனையில் ஆழ்ந்தான்.

சிறு வயதிலிருந்தே அவளோடு வளர்பவர்களுக்கு அவளுக்கு எதிரி இருப்பான் என்பதே நம்ப முடியாத ஒன்று.

அவள் யாரிடமும் கடிந்து பேசி கூட அவர்கள் பார்த்ததில்லை. அவர்களை விட்டு தனியாக கூட எங்கும் சென்றதில்லை. அப்படியிருக்க தங்களுக்கு தெரியாமல் அவளுக்கு இருக்கும் எதிரி யார்?

“அவன் ஏன் அமைதியா இருக்கானும் தெரியல. எப்ப வேணாலும் வெளிய வரலாம். ஆனா இதுலாம் மதுக்கு தெரியறதுக்கு முன்னாடி அவனை நாம கண்டுபிடிச்சு ஆகணும்…” அதிரதன் சொல்ல,

ரூபன் அமைதியாக இருக்கவும் அவனிடம், “அந்த அம்மாவுக்கு யாருடா சொல்லியிருப்பா அவங்க புருஷனுக்கும் மது அம்மாவுக்கும் தொடர்பு இருக்குனு? அது தெரிஞ்சாவாது எதாவது க்ளூ கிடைக்கும்…” என்று கேட்கவும்,

“அது தான் எனக்கும் தெரியல. அவங்ககிட்ட பேசவே பிடிக்காததுனால நான் கேட்கவுமில்லை. அப்புறமா ஆதிரா மூலம் விசாரிக்கிறேன்…” என்றான்.

அன்றிரவு மதுவந்தியும் ரூபனும் ஆதிராவிடம் பேசி அவளுக்கு புரிய வைத்தனர். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டாலும் ஏனோ அவளுக்கு தன் வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை. ஏதோவொன்று தடுத்தது.

அது அவர்களுக்கும் புரிய, “உன் தம்பியோட பார்வை உன்மேல தப்பான எண்ணத்துல படிஞ்சதில்லைனு உனக்கு புரியணும்ன்றதுக்காக தான் சொன்னோம். அதுக்காக நீ அங்க போகணும்னு அவசியமில்லை. இதுவும் உன் வீடு தான்…” என்றதும் இருவரையும் கட்டிக்கொண்டாள்.

மறுநாள் மதுவந்திக்கு அவர்கள் வீட்டிலே வளைகாப்பு நடத்தினர். ஊர் மக்கள் அனைவரும் வந்து அவளை ஆசீர்வதித்தனர். தாய் வீட்டு சார்பாக அங்கே ஆதிராவைத் தவிர அவளுக்கு யாருமில்லை.

அதை நினைத்து கவலைக்கொண்டால் தன் கவலை தன் கணவனையும் வருத்துமே என்று எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை.

ராஜசேகருக்கு மகளை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் அவர் அங்கே செல்லவில்லை. தான் தத்தெடுத்த ஒரே காரணத்திற்காக இதுவரை அவள் பட்ட கஷ்டங்களே போதுமென விலகியே இருந்துவிட்டார்.

விசேஷத்திற்கு வந்தவர்களும் பெரிதாக அவள் வீட்டினரைப் பற்றி கேட்டு அவளை சங்கடப்படுத்தவில்லை.

ஒவ்வொருவராக அவளுக்கு சந்தனமிட்டு வளையல் அணிவித்து ஆசீர்வாதம் செய்ய அங்கே தயங்கியப்படியே ஆதவ் வந்து நின்றான்.

அவன் கையிலிருந்த தட்டில் கொஞ்சம் வளையல்களும் பூக்களும் இருந்தன. தாய் வீட்டு சீதனமாக ஏதோ தன்னால் முடிந்ததைக் கொண்டு வந்தவன் தயங்கியப்படியே மதுவின் அருகில் வந்தான்.

அவனை கண்ட ரூபனும் கோபத்தை காட்டவில்லை என்றாலும் அவனிடம் பேசவுமில்லை. ஏனோ அவ்வளவு எளிதில் அவனால் ஆதவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக பழைய கோபங்கள் இருக்கிறதாவென்றால் அதுவுமில்லை.

ஆதவைக் கண்ட மதுவின் கண்கள் கலங்கினாலும் அதை வெளிக்காட்டாது மறைத்தப்படி அவனை பார்க்க, அவளருகில் வந்தவன் அவள் அனுமதியைக் கூட எதிர்பார்க்காது அவளது கரத்தை எடுத்து அதில் வளையல்களை அணிவித்தவனின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் அவள் கரத்தில் படவும் அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க அவனோ திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.

அவன் கண்ணீர் அவளை ரொம்பவே பாதித்தது. அவனிடம் பேசினால் முன்பு போல மரியாதையின்றி பேசிவிடுவானோ என்ற பயமெல்லாம் இல்லை. தானாக பேசி அவனை மேலும் குற்றவுணர்வில் வதைக்க அவள் விரும்பவில்லை.

அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்த அதிரூபனோ, “எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும் மதி…” என்றதும் அவளும் மெல்லிய புன்னகையோடு தலையசைத்தாள்.

அன்றைய தினம் நல்லபடியாகவே முடிய அடுத்த நாளோ அதிர்ச்சியோடே விடிந்தது. காரணம் மதுவந்தியும் ரூபனும் இணைந்திருந்த போட்டோவை மதுவின் வீட்டில் வைத்தது யாரென்று மகேஷ்வரியின் மூலம் தெரிய நேர்ந்தது.

அவர் யாரென்று அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

**********

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Selva Rani

Story MakerContent AuthorYears Of Membership

20 – கனவே கலைவதேனோ?

அன்பின் அரசனே… 44