in , ,

20 – கனவே கலைவதேனோ?

அத்தியாயம் 20

அதிரூபனுக்கு அழைப்பு விடுத்த அந்த மர்ம நபர் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் அதிரூபனும் அதிரதனும் தவித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அவனிடமிருந்து எந்த அழைப்பும் வாராதிருக்க அது யாராக இருக்கும் என யூகிக்கவும் முடியவில்லை.

அதே நேரம் தனக்கு அழைத்தவன் மதுவந்திக்கும் அழைத்து விடுவானோ என்றெண்ணி அவளின் அலைபேசியில் புதிய எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை தடை செய்திருந்தான்.

தங்களுக்குள் நடப்பது அவனுக்கு எப்படி தெரிந்தது என குழம்பியவன் எதோ தோன்ற கோபத்தோடு தன் அறைக்குள் நுழைந்து அனைத்தையும் களைத்து எதையோ தேட அவன் தேடியது கிடைக்கவே இல்லை.

அதில் எரிச்சலுற்று படுக்கையில் அமர்ந்தவன் ஆவேசமாக தலையணையைத் தூக்கியெறிய அங்கே வந்த மதுவந்தியின் மீது அது விழவும் அதிர்ந்தவன் வேகமாக அவளை நோக்கி வந்தான்.

“சாரி மதி, டென்ஷன்ல தூக்கி போட்டேன், அடிப்பட்டுடுச்சா?” என பதற, அவளோ அவனை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை கவனியாதவன், “அடி எதுவும் படல தான? பார்த்து வர கூடாதா? எதாவது ஆகியிருந்தா என்ன பண்றது?” என்றபடி அவளை அழைத்து வந்து படுக்கையில் அமர வைக்க,

“எதுக்கு இப்போ டென்ஷனாகுற ரூபன்? அது பில்லோ தான? அதனால எனக்கு என்ன ஆகிடப்போகுது?” என்றவள் அறையை சுற்றி நோட்டமிட அவள் பார்வையை கவனித்தவன் அடுத்து அவள் கேட்கப் போகும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென தெரியாது திருதிருவென்று விழிக்க,

அலங்கோலமாய் இருந்த அறையை கவனித்தவள், “அப்படி என்ன தேடுன? எதுனாலும் என்கிட்ட சொன்னா நான் எடுத்து தரமாட்டனா? எதுக்கு இப்படி டென்ஷன் ஆகிட்டு உட்கார்ந்திருக்க?” என்றதும்,

“என் பர்ஸ காணும்?” வாய்க்கு வந்ததை உளர,

“பர்ஸா?” என்றவள்,

அங்கே ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த அவனது பேண்ட் பாக்கெட்டை கவனிக்க அதில் லேசாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அவனது கறுப்பு நிற பர்ஸைக் கண்டு அவனை முறைக்கவும்,

அவளையே கவனித்து கொண்டிருந்தவன் சமாளிக்க முடியாமல் அசடு வழிய அவளோ, “உனக்கு என்ன ஆச்சுனே தெரியல, உன் கவனமும் வேற எங்கேயோ இருக்கு…” என்றவளுக்கு ரூபனை எண்ணி கவலை எழத் தான் செய்தது.

முன்பு போல் இல்லாமல் எதைப் பற்றிய சிந்தனையிலோ மூழ்கியிருப்பவனுக்கு அப்படி என்ன பிரச்சினை என்பதை அவளால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.

அவனிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைக்காது என்பது தெரிந்ததால் தன் கவலையைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்டு கலங்கியவளின் கரத்தை அழுந்தப் பற்றியவன், “நீ என்னை பத்தி யோசிச்சு யோசிச்சு  உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத மதி. இந்த மாதிரி நேரத்துல சந்தோஷமா இருக்கணும்…” என்றவனை வேதனையோடு பார்த்தாள்.

அவளின் சந்தோஷமே அவன் தான் எனும் போது அவன் இப்படியிருக்க அவளால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?

பொதுவாகவே பெண்களின் மனம் தங்கள் கர்ப்ப காலத்தில் கணவனை தான்  அதிகம் நாடும். அப்படியிருக்க மதுவந்தி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

குழந்தையைப் பற்றிய கனவுகளிலே மூழ்கியிருப்பவளுக்கு அவனிடமும் அதை பகிர்ந்து கொள்ள மனம் ஏங்கியது தான். ஆனால் அதற்கு தான் வழியே இல்லாதது போல் முப்பொழுதும் ஏதோ சிந்தனையிலே மூழ்கியிருக்கிறானே.

என்னதான் அவன் அவளை அவளருகிலே இருந்து கவனித்துக் கொண்டாலும் அவளிடம் மனம் விட்டு பேசுவதையே தவிர்த்திருந்ததால் அவள் மனதில் வெறுமை சூழ்வதை அவளாலும் தவிர்க்க முடியவில்லை.

சிறுவயதிலிருந்து சண்டையிட்டு கொண்டிருந்தாலும் அவளிடம் அவன் எதையும் மறைத்ததில்லை. அவனை பற்றிய சிறு சிறு விஷயங்கள் கூட அவளுக்கு அத்துப்படி.

அப்படியிருக்க அவன் மனைவியாய் முழு உரிமையோடு அவனருகில் இருக்கும் நேரம் அவன் மனதிலிருப்பதை சொல்லாமல் மறைக்கிறானே. தனக்குத் தெரியக் கூடாதென நினைக்குமளவிற்கு அப்படியென்ன பிரச்சினை?

சோகம்படிந்த அவளின் முகத்தையே கவனித்திருந்தவன் அவள் நெற்றியில் செல்லமாக முட்டி, “இப்படி நீ சோகப்பதுமையா சுத்திட்டு இருந்தா நம்ம பாப்பாவும் ஃபியூச்சர்ல உன்னை மாதிரியே அழுது வடியும்…” என சலித்துக் கொள்ள,

“பாப்பாவா?” என திகைத்தவள்,

“எனக்கு பாப்பா வேணாம், தம்பி தான் வேணும்…” என பிடிவாதம் கொள்ள,

“ஏன்டி, பாப்பாக்கு என்ன குறை? எனக்கு பாப்பா தான் வேணும் அதுவும் உன்னை மாதிரியே…” என அவள் மூக்கைப் பிடித்து செல்லமாக ஆட்ட,

‘அதனால் தான் வேண்டாம் என்கிறேன்’ என்றவளை புரியாமல் பார்த்தான் அவன்.

“என்னை மாதிரி பாப்பா வேணாம் ரூபன். என்னை மாதிரி ஒருத்தி யாருக்கும் மகளா பிறக்க வேண்டாம்…” என்றதும் அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்பது புரியவும் அவளை முறைக்க,

அவளோ அதை கவனியாது, “என் குழந்தை அவன் அப்பா மாதிரி தான் இருக்கணும். அன்பான மகனா, பொறுப்பான அண்ணனா, மனைவிய கண்ணுக்குள்ள பொத்தி வச்சி பாதுகாக்கிற காதல் கணவனா இருக்கிற என் ரூபன் மாதிரி ஒரு மகன் தான் எனக்கு வேணும்…” என்றாள் உறுதியாக.

“அன்பான மகன், பொறுப்பான அண்ணன் கூட ஓகே. ஆனா அந்த காதல் கணவன்? நான் உன்னை காதலிக்கிறேனு உனக்கு யார் சொன்னது?” என்று பொய்யாக முறைக்கவும்,

“யாரு சொல்லணும்? உன் மனசுல இருக்கிற காதலை புரிஞ்சிக்க முடியாதளவுக்கு நான் மக்கு இல்லை…” என முறுக்கிக் கொண்டவளைக் கண்டு புன்னகைத்தவன்,

“அப்படினா என் மதிக்கும் கொஞ்சம் மதி இருக்குன்றத ஒத்துக்கிறேன்…” கேலி போல சொல்லியவன் அவளை காதலோடு அணைத்துக் கொண்டு அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான்.

தான் சொல்லாமலே தன் மனதிலிருக்கும் காதலை புரிந்து கொண்டவளை எண்ணி வியந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி, “நான் இதுவரைக்கும் என் காதலை உன்கிட்ட சொன்னதே இல்லையே உனக்கு வருத்தமா இல்லையா மதி?” என்றதும்,

மறுப்பாகத் தலையசைத்தவள், “வெறும் வாய் வார்த்தையா சொல்லிட்டு இருக்காம செயல் மூலமா உன் காதலை ஒவ்வொரு நொடியும் எனக்கு உணர்த்திட்டு இருக்கியே அது போதும் ரூபன்…” என்றாள் நிறைவான மனதோடு.

சில நொடி அவளையே பார்த்திருந்தவன், “எனக்கு உன்கிட்ட பிடிக்காத விஷயங்கள் சிலது இருக்கு தான் மதி. அதுக்காக உன்னை மாதிரி ஒரு குழந்தை வேணாம்னு நினைக்கிறது முட்டாள்தனம்.

எனக்கு பொண்ணு தான் வேணும். ஒரு பொண்ணு எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்படுறனோ அதே மாதிரி அவளை நாம வளர்க்கணும். வேணும்னா அடுத்ததா ஒரு பையனை பெத்துக்கலாம்…” என அவன் கண்ணை சிமிட்ட அதில் முகம் சிவந்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

மனைவிக்காக வெளியே சிரித்து பேசினாலும் அவன் மனமோ வலியில் துடித்துக் கொண்டிருந்தது.

என்னதான் அந்த குழந்தையை அவன் குழந்தையாக ஏற்றுக்கொண்டாலும் மதுவந்தி குழந்தையைப் பற்றி ஆவலோடு பேசும் பொழுதெல்லாம் அவனையும் மீறி அவன் மனதில் வலி எழத் தான் செய்கிறது அந்த கயவனை இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கிறோமே என்று.

எவ்வளவு அழகாக நகர வேண்டிய தருணங்கள் அனைத்தும் அந்த கயவனால் நரகமாகிப் போனதே என தனக்குள்ளே துடித்தான்.

அனைத்திற்கும் மேலாக இந்த உண்மை ஒரு பொழுதும் தன் மதிக்கு தெரிந்து விடக் கூடாதே என பரிதவித்தான்.

அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவன் எதற்காகவும் அவளை இழக்கத் தயாராயில்லை.

சிறிது நேரம் அவனோடு ஒன்றியிருந்தவள் அறையை ஒதுங்க வைப்பதற்காக எழவும் அவளை தடுத்தவன், “நீ இரு, நானே க்ளீன் பண்றேன்…” என்றதும்,

“வேணாம் ரூபன், நான் பார்த்துக்கிறேன்…” என்றவளை பிடிவாதமாக தடுத்து,

“மிக்சி சத்தம் கேட்குது, அப்பா உனக்கு தான் ஜூஸ் போட்டுட்டு இருக்காருன்னு நினைக்கிறேன். போய் குடி…” வலுக்கட்டாயமாக அவளை அனுப்பி வைத்துவிட்டு கதவை சாத்தியதும் அறை முழுவதும் பார்வையை செலுத்தியவன் ஏமாற்றத்தோடும் எரிச்சலோடும் படுக்கையில் விழுந்தான்.

அவன் தேடியது கிடைக்காமல் போன எரிச்சல் ஒருபுறம் இருக்க அது இல்லை என்றால் வேறெப்படி தங்களைப் பற்றி தெரிந்து கொண்டான் என்ற குழப்பம் ஒருபுறம் அவன் பொறுமையை சோதித்தது.

நாட்கள் தான் நகர்ந்ததே தவிர அந்த கயவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அவனையும் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. நிம்மதியின்றி திரிந்து கொண்டிருந்தான் அதிரூபன். அதிலும் அதை மனைவியிடம் மறைப்பதற்கு பெரும்பாடுபட்டான்.

ஏழாம் மாதம் ஒரு நன்னாளில் மதுவந்திக்கு வளைகாப்பு செய்வதற்கு நாள் குறித்திருந்தனர். ஆதிராவை அழைத்து மதுவந்திக்கு துணையாக இருக்க சொன்ன கேசவமூர்த்தி அதிரதனை அழைத்துக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பே ஊருக்குச் சென்றுவிட்டார்.

“அப்பாவ வளைகாப்புக்கு கூப்பிடுவிங்களாக்கா?” தயக்கத்தோடு ஆதிரா கேட்க,

அவளோ கணவனை எண்ணி மறுப்பாகத் தலையசைத்தவள் கலங்கிய கண்களை தங்கையிடம் இருந்து மறைப்பதற்காக அங்கிருந்து நகர்ந்துவிட ஆதிரா கவலைக்கொண்டாள்.

ஆதிரா தங்கள் அன்னையை அழைக்காததற்கு கூட பெரிதும் கவலைக் கொள்ளவில்லை. ஏனெனில் அவரால் தன் தமக்கை அனுபவித்திருக்கும் துன்பங்களை அவள் அறிவாளே.

ஆனால் அவள் தந்தையை அழைக்காதது தான் அவளை அதிகம் வருத்தியது.

அவர் மதுவந்தியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது அவளுக்கும் தெரியும். இதுபோன்ற நேரத்தில் அவரை ஒதுக்கி வைப்பது அவரை எந்தளவு வேதனைப்படுத்தும் என எண்ணும் போதே அவள் கண்கள் கலங்கியது.

அந்த நேரம் அங்கே வந்த அதிரூபன் அவளின் கலங்கிய விழிகளைக் கண்டு அவளருகே வந்தமர்ந்தவன் என்னவென்று விசாரிக்க அவளோ கோபமாக முகத்தைத் திருப்பிக் கொள்ள,

அதை கண்டு சிரித்தவன், “ஆதிராகுட்டிக்கு என் மேல அப்படி என்ன கோபம்?” என அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்ப,

“என்கிட்ட பேசாதிங்க மாமா…” என முறுக்கிக் கொண்டாள் அவள்.

“ஏன்? நான் என்ன பண்ணேன்?” புரியாது அவன் கேட்க,

“நீங்க ஏன் அக்காவோட வளைகாப்புக்கு அப்பாவ கூப்பிடல?”

ஒரு நொடி அவன் முகம் இறுகினாலும் அதை அவளிடம் காட்டாது மறைத்தவன், “உங்கப்பாவ கூப்பிட கூடாதுனு நான் சொல்லலையே…” என்றான்.

“நீங்க கூப்பிடவும் சொல்லலையே…” என்றவளை அவன் பார்க்க,

“உங்களுக்கு பிடிக்காதுனு தான் அக்கா கூப்பிடல, இல்லனா அக்கா கூப்பிடுவாங்க. அப்பா இருந்தா அக்காவுக்கும் சந்தோஷமா இருக்குமே…” என்றாள்.

அவளிடம் எதுவும் சொல்ல விரும்பாதவன், “உன் அக்கா ஆசைப்பட்டா உன் அப்பாவ வர சொல்லட்டும் நான் தடுக்கமாட்டேன்…” என்று எழுந்து சென்றுவிட ஆதிராவோ கவலையோடே அமர்ந்திருந்தாள்.

அதிரூபனின் விருப்பத்தை மீறி மதுவந்தி எதுவும் செய்யமாட்டாள் என்பதை அறிந்திருந்தவளுக்கு இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது தோன்றவும் தன் கவலையை மறைத்துக் கொண்டு தமக்கையை கவனிக்கத் தொடங்கினாள்.

மதுவந்திக்கு தங்கையின் வருத்தம் புரியாமலில்லை. அதிரூபனின் கோபம் நியாயமானது என்றாலும் அதற்காகத் தன் தந்தையை ஒதுக்கி வைக்க அவளாலும் முடியவில்லை தான்.

எனினும் கணவனுக்குப் பிடிக்காததை செய்து அவனை வருத்த அவள் மனம் விழையாததால் தன் விருப்பத்தைத் தனக்குள்ளே புதைத்துக் கொண்டாள்.

அதிரூபனோ அந்த விஷயத்தில் தலையிடாது தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தவன் மனைவியையும் ஆதிராவையும் அழைத்துக் கொண்டு ஊருக்குச் சென்றான்.

அவர்கள் சென்ற கார் மதுவந்தியின் வீட்டை கடக்கும் நேரம் அவளின் கண்கள் அனிச்சையாக வீட்டைப் பார்க்க அதிரூபன் அதை உணர்ந்தாலும் அவளை கண்டுகொள்ளவில்லை.

ஆதிரா தங்கள் வீட்டிலே இறங்கிக் கொள்வதாகக் கூறவும் அவளை அங்கே இறக்கிவிட்டு மனைவியோடு தன் வீட்டிற்குச் சென்றவனை உறவினர்கள் மகிழ்வோடு வரவேற்றனர்.

சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தவன் மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் வந்து அவளை ஓய்வெடுக்கும்படி சொல்ல அவளும் உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுக்கும் நேரம்,

‘மாமாஆஆ’ என அங்கே ஓடி வந்த ஆதிரா ரூபனைக் கட்டிக் கொண்டு அழவும் அவள் கண்ணீரைக் கண்டு பதறிய மதுவந்தி முதலில் தங்கள் அறைக்கதவை மூடினாள்.

இப்பொழுது தானே அவர்கள் வீட்டிற்குச் சென்றாள். அதற்குள் என்ன நேர்ந்தது? என குழம்பிய அதிரூபனோ அவளை தேற்ற முயன்றான்.

“என்ன ஆச்சு ஆதிரா? எதுக்கு அழற?”

பதில் சொல்லாது அழுது கொண்டிருந்தவளை ஒருவழியாகத் தேற்றி, “சொல்லும்மா, என்ன நடந்துச்சு? உங்கம்மா எதாவது திட்டுனாங்களா?” என்றதும்,

“அம்மாவும் அப்பாவும் வீட்டுல இல்லை ஆதவ் மட்டும் தான் இருந்தான்…” என்றாள்.

“அவன் உன்கிட்ட சண்டை போட்டானா?” கோபமாக கேட்க,

“இல்லை மாமா, அவன் நான் வந்தது கூட தெரியாம போன் பார்த்துட்டு இருந்தான். நான் அவனை பயமுறுத்தலாம்னு பொறுமையா அவன் பக்கத்துல போனப்ப தான் தெரிஞ்சுது…” என தயங்கியவள் பின் ஒருவழியாக, “அவன் தப்பான வீடியோ பார்த்துட்டு இருந்தான் மாமா…” என்றாள்.

அதைக் கேட்டு மதுவந்தி அதிர்ந்து நிற்க, அதிரூபனோ ஆதவின் வயதுக் கோளாறாக இருக்கும் என்று எண்ணியவன் ஆதிராவிடம் பேச முற்பட,

அதற்குள் அவளோ, “அந்த நேரம் அவன் ஃப்ரெண்டு கூப்பிட்டானு போனதும் அவனுக்கு தெரியாம அவன் போனை எடுத்து பார்த்தேன். அதுல எல்லாமே அந்த மாதிரி வீடியோ தான் இருக்கு…” என்றவளின் உடல் நடுங்கியது.

“அவன் சரியில்லை மாமா. எப்பவும் செல்லுல தான் மூழ்கியிருப்பான். நானும் அப்பாவும் திட்டுவோம் அவன் அம்மாவ சப்போர்ட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவான். அவங்களும் எங்களை தான் திட்டுவாங்க…”

ஆதவினை எண்ணி அதிரூபனுக்கு கோபம் எழுந்தாலும் முதலில் ஆதிராவைத் தேற்ற வேண்டுமென்று, “இது டீனேஜ் பிராப்ளம் ஆதிரா, போக போக சரியாகிடுவான். நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை…” என பொறுமையாக அவளுக்கு எடுத்துரைக்க,

அவளோ, “இல்லை மாமா நான் லீவுக்கு வரும் போதுலாம் வீட்டுல குளிக்கிறப்ப, ட்ரெஸ் மாத்துறப்ப என்னை யாரோ பார்க்கிற மாதிரி தோணும். அப்ப அது என்னோட கற்பனையோனு நினைச்சி யார்கிட்டயும் சொல்லாம விட்டுட்டேன். ஆனா இப்ப?” என அவள் முடிக்க முடியாமல் தவிப்போடு பார்க்க அதிரூபனின் முகம் இறுகியது.

உறைந்து நின்ற மதுவந்தியை ரூபன் உலுக்க அதில் உணர்வுப் பெற்றவள் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

அவளின் மனநிலையை உணர்ந்தவன் நொடியும் தாமதியாது ஆதிராவை அழைத்துக்கொண்டு அவள் பின்னே செல்ல சில நிமிடங்களில் தன் வீட்டை அடைந்தவள் வாசலில் கால் வைக்கும் நேரம் ஒரு நொடி தயங்கி நின்று பின் உள்ளே நுழைவதைக் கண்ட அதிரூபனும் அவள் வீட்டிற்குள் சென்றான்.

சோபாவில் அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்த ஆதவின் அருகே சென்றவள் ஆவேசத்தோடு அவன் போனை பறித்து தூக்கியெறிய அது தூள் தூளாக சிதறியது.

அவளது செயலில் கோபம் கொண்டு அவளை அடிப்பதற்கு கை ஓங்க அவன் கரத்தை ஒரு கரத்தால் தடுத்தவள் மறுகரத்தால் அவன் கன்னத்தை பதம் பார்க்க அவனோ திகைத்து நின்றான்.

மதுவந்தியின் கோபத்தை முதன் முதலாக பார்த்ததில் முதலில் திகைத்தவன் பின் தன்னையே அடிக்கும் அளவிற்கு அவளுக்கு துணிச்சல் வந்துவிட்டதா என்ற ஆத்திரத்தில் அவளை அடிப்பதற்கு மீண்டும் கையை ஓங்க அவன் கையை பற்றி முறுக்கியவள் சரமாரியாக அவனை அடிக்க அதை சமாளிக்க முடியாமல் திணறினான் அவன்.

அதிரூபனுக்குமே அவளை எண்ணி ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் வெளியே சென்றிருந்த மகேஷ்வரியும் ராஜசேகரும் வீட்டிற்கு வந்தனர்.

தன் மகனை அடிக்கும் மதுவந்தியைக் கண்டு கோபம் கொண்ட மகேஷ்வரி அவர்களை நெருங்க அவரைக் கண்ட ஆதவ் ‘அம்மா’ என கதறினான்.

“இங்க பாருங்கம்மா இவ என்னை எப்படி அடிக்கிறாள்னு…” வலியில் துடித்தப்படியே அவன் புகாரளிக்க,

அதற்கும் இரண்டு அடிகளைக் கொடுத்தவளை வேகமாக பிடித்து இழுத்தவர், “என்ன துணிச்சல் இருந்தா என் மகன் மேலயே கையை வைப்ப…” என மதுவை அடிப்பதற்கு கை ஓங்கியவர் அவள் பார்த்த பார்வையில் அப்படியே கையை இறக்கினார். அவளின் பார்வையின் வீரியம் அவரை செயல்பட வைக்காமல் தடுத்தது.

மதுவந்தியின் இந்த அவதாரம் அவருக்கு புதிது. அவருக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே.

“இதுக்கு மேலயும் உங்க மகனை கண்டிச்சு வளர்க்கலனா நாளைக்கு ஊர்ல இருக்குறவன்லாம் அவனை அடிக்க வேண்டிவரும்…” என்றவள் தன் தந்தையை குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தாள்.

தன்னிலை மீண்ட மகேஷ்வரியோ ஆத்திரத்தோடு, “அவனை அடிக்க உனக்கு யாருடி அதிகாரம் கொடுத்தது?” என்று அதட்டியவரை கண்டு கொள்ளாது,

தன் தந்தையிடம் கோபமாக, “அவன் என்ன பண்றான் எங்கே போறான்னு எதையும் கண்டுக்க மாட்டிங்களா?” என்றாள்.

“என்ன பண்ணான்மா?” புரியாது அவர் கேட்க,

தம்பியை முறைத்தவள், “நீ பண்ண வேலையை நீயே சொல்லு…” என்று மிரட்ட,

அதில் அவன் மிரண்டாலும் தந்தையிடம் சொல்லும் துணிச்சல் இல்லாததால், “நான் எதுவும் பண்ணல…” என சொல்லி முடிக்கும் முன்னே மீண்டும் ஒரு அறை வாங்கினான் மதுவந்தியின் கரத்தால்.

மதுவந்தியின் செயலில் மகேஷ்வரிக்கு கோபம் எழுந்தாலும் தன் மகன் பம்மி நிற்பதைக் கண்டு யோசனையோடு அவனை நெருங்கியவர், “அப்படி என்னடா பண்ண? சொல்லி தொலையேன்…” என அதட்டினார்.

அவன் அப்பொழுதும் அப்படியே இருக்க அதுவரை அதிரூபனின் கரத்தைப் பற்றியப்படி பயத்தோடு நின்ற ஆதிரா, வேகமாக அறைக்குள் சென்றவள் எதையோ தேட அங்கே அவள் தேடியது கிடைக்கவும் அதை எடுத்து வந்து தாயின் கரங்களில் திணித்தாள்.

அதைக் கண்டவரின் முகம் அருவருப்பில் சுழிய கையிலிருந்ததை கீழே எறிந்தார்.

எந்த ஆபாச சிடிக்களை மதுவந்தி வைத்திருந்தாள் என்று சொல்லி அவளையும் அதிரூபனையும் ஊரார் முன் அசிங்கப்படுத்தினாரோ இன்று அதுபோன்ற எண்ணிக்கையில்லா சிடிக்கள் தன் மகன் அறையில் இருந்து எடுக்கப்படவும் உறைந்து நின்றார் மகேஷ்வரி.

தன் மகன் இதை வைத்திருப்பான் என்பதையே அவரால் நம்ப முடியவில்லை.

அவை அவனுடையதில்லை என ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டானா? என்ற நப்பாசையில் மகனைப் பார்க்க அவனோ தாயை எதிர்க்கொள்ளும் துணிச்சல் இல்லாது தலைகுனிந்து நின்றான்.

அதில் மொத்தமாக உடைந்து போனவர் பொத்தென்று அமர அவரருகில் வந்த மதுவந்தி, “இது அவனோட வயசு கோளாறுனால நடந்த தப்பு தான். ஆனா அவனை அவன் இஷ்டத்துக்கு விட்டது உங்களோட தப்பு. விவரம் தெரியறதுக்கு முன்னாடியே அவன் கையில போனை கொடுத்தது எவ்வளவு பெரிய தப்புனு இப்பவாது புரிஞ்சிக்கோங்க. இணையதளத்துல நல்லது மட்டும் இல்லை, கெட்டதும் இருக்கு.

பெத்தவங்க பிள்ளைங்க என்ன பண்றாங்க என்ன பார்க்கிறாங்கனு எல்லாத்தையும் கவனிக்கணும். செல்லம் கொடுக்கிறேன்ற பேர்ல அவனை நீங்களே கெடுத்துட்டிங்க. ஆரம்பத்துலே கவனிச்சிருந்தா அவனை அடிச்சு திருத்த வேண்டிய அவசியமே வந்திருக்காது.

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. நீங்க நினைச்சா அவனை மாத்த முடியும். அவன்கிட்ட மனசுவிட்டு பேசுங்க. அவனுக்கு சரியானத புரியவைங்க. அவன் புரிஞ்சிப்பான்…” என்றாள்.

ராஜசேகரும் மகனின் செயலால் உறைந்து நின்றவர் அவனிடம், “அன்னைக்கு மது பேக்ல அந்த சிடி வச்சது நீயா?” என்று அதட்டவும்,

“இதுல என்ன சந்தேகம் அவன் தான் வச்சிருப்பான்…” என்ற ஆதிரா, “அந்த போட்டோ தான் எப்படி எடுத்தானு தெரியல…” என்றாள் யோசனையாக.

“போட்டோலாம் நான் வைக்கல…” என்ற ஆதவை அனைவரும் நம்பாதப் பார்வை பார்க்க,

அவனோ மதுவிடம், “நிஜமா தான்கா சொல்றேன். அன்னைக்கு நான் நைட் ஃப்ரெண்டு வீட்டுல இருந்து லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன். அந்த நேரம் அம்மா ரூம்ல இருந்து வெளிய வர மாதிரி தெரிஞ்சதும் எங்கே நான் மாட்டிப்பனோனு ரொம்ப பயந்துட்டேன். ஹால்லயே உன் பேக் இருந்ததுனால அவசரத்துக்கு அதுல மறைச்சு வச்சிட்டேன்.

அம்மாவும் உடனே ரூமுக்கு போகாததுனால என்னால அப்பவே எடுக்க முடியல. காலையில நீ எழறதுக்கு முன்னாடி எடுத்துடலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள அம்மா உன் பேக்க பார்த்துட்டாங்க. ஆனா அந்த போட்டோக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது எப்படி வந்ததுனு கூட தெரியாது…” என்று விளக்கமளித்தான்.

அதில் கோபம் கொண்டவரோ மனைவியை முறைத்தார்.

“உன் மகன் பண்ண வேலையால அப்பாவி பொண்ணை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்திட்டியே பாவி…” என்று கத்த மகேஷ்வரியோ அமைதியாகவே இருந்தார்.

அவருக்கும் அவரின் தவறு புரிந்தது தான். எனினும் மதுவந்தியை மன்னிக்கவோ அவளை ஏற்றுக்கொள்ளவோ தயாராயில்லை. நடந்ததற்கு மன்னிப்பு கேட்கும் எண்ணமும் துளியும் இல்லை.

மகனின் மீது தான் தவறு என்ற போதிலும் மதுவை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டு கோபம் கொண்ட ராஜசேகர் மனைவியைக் கண்டிக்க நினைக்க மதுவோ மறுப்பாகத் தலையசைத்தவள் ஆதவை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றாள்.

முதல் முறையாக தன் தமக்கையின் கோபத்தை பார்த்தவனுக்கோ அவளருகில் நிற்கவே பயம் எழ அதே நேரம் அவன் செய்து வைத்த செயல் வேறு அவனை வதைக்க அவளை நிமிர்ந்து பார்க்கும் துணிச்சலின்றி தலைகுனிந்து நின்றான்.

அங்கே இருந்த கல்லில் அமர்ந்தவள் அவனையும் அமரவைக்க அப்பொழுதும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவன் முகத்தை நிமிர்த்தி, “ஒரு அக்காவா இத பத்திலாம் உன்கிட்ட பேச தயக்கம் இருந்தாலும் இப்ப பேச வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்…” என்றவள்,

“இந்த வயசுல இந்த மாதிரி வீடியோ பார்க்கிறதுனால உனக்கு சந்தோஷமா இருக்கலாம். நாளாக நாளாக அதை ப்ராக்டிக்கலா பண்ணி பார்த்தா எப்படி இருக்கும்னு உனக்கு தோணும். அதோட விளைவு உன்னை எங்கே போய் நிறுத்தும்னு உன்னால நினைச்சிக் கூட பார்க்க முடியாது…” என்றதும் அவன் தலைகவிழ,

அவன் தலையை நிமிர்த்தியவள், “தப்பு பண்ணாதவங்கனு யாரும் இல்லை. செய்யற தப்பை திருத்திக்கலனா தான் பிரச்சினை. உன்னோட தவறும் திருத்தக் கூடியது தான். ஆனா அது நீ மனசு வச்சா மட்டும் தான் முடியும்…” என்றவளை வேதனையோடு பார்த்தவன், “என்னால முடியலக்கா…” என கலங்கினான்.

அவள் அமைதியாய் பார்க்கவும், “ஃப்ரெண்ட்ஸ்ங்களோட சேர்ந்து தான் பார்க்க ஆரம்பிச்சேன். அப்படியே பழகிட்டேன். நினைச்சாலும் விட முடியல. ஒரு நாள் என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ஆதிரா ட்ரெஸ் சேஞ்ச் பண்றத மறைஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தான்கா. அவனை அடிச்சு துரத்திட்டேன். மத்த ஃப்ரெண்ட்ஸ் கூட பழகுறதையும் குறைச்சிக்கிட்டேன். எல்லாம் இதனால தான் வந்துச்சுனு தூக்கிப் போட நினைச்சாலும் என்னால முடியலக்கா. என்னமோ பண்ணுது…” தவிப்பாய் சொன்னவனின் தலையை ஆதூரமாய் வருடியவள்,

“உன் அக்காவ ஒருத்தன் பார்த்தானதும் உனக்கு கோபம் வருதே. அதே தவறை நீயும் செய்யமாட்டன்னு என்ன உத்திரவாதம்?” என அழுத்தமாக கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான்.

அவன் தன் தவறை உணர்கிறான் என்ற நிம்மதியில், “முடியாததுனு எதுவுமில்ல. உன் மைண்ட படிப்புல விளையாட்டுலனு டைவர்ட் பண்ணு. அதுக்காக மொபைலை கைல எடுக்காத. அது உன்னை இன்னும் அடிமையாக்கும். தேவைக்கு மட்டும் மொபைலை யூஸ் பண்ணா போதும். முதல்ல எது தேவை எது தேவையில்லனு புரிஞ்சிக்க.

இந்த வயசுல எல்லாமே சரினு தோணலாம். ஆனா அது அப்படி இல்லைன்ற உண்மை உனக்கு லேட்டா தான் புரியும்.

உணர்ச்சிகள கட்டுப்படுத்த தெரிஞ்சவன் தான் மனுஷன். நீயும் மனுஷன் தான்னு நான் நம்புறேன்…” என்றவள் இதற்கு மேல் பேசுவதற்கு ஏதுமில்லை என்பது போல எழவும் அவளையே பார்த்தப்படி அமர்ந்திருந்தான் இளையவன்.

இது நாள் வரை தான் வெறுத்த ஒருத்தியை இன்று வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கும் கோபம் வரும். அவளுக்கும் உணர்வுகள் இருக்கிறது என்பதை இன்று தான் தெரிந்து கொண்டான்.

அவள் தன்னை அடித்தாளே என்ற கோபம் கூட இப்பொழுது துளியும் இல்லை. காரணமேயின்றி அவளை வெறுத்தவனுக்கு இன்று அனைத்தும் தலைகீழாக மாறிய உணர்வு.

ஆனால் தான் செய்ததற்கெல்லாம் அவளிடம் மன்னிப்பு கேட்கும் தைரியம் மட்டும் அவனுக்கு வரவேயில்லை. தன் அன்னையோடு சேர்ந்து அத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு இன்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் மன்னிப்பை யாசிப்பது?

என்னதான் பொறுமையாக பேசி தன் தவறை புரிய வைத்தாலும் எப்பொழுதும் தன்னை தம்பி என்று பாசத்தோடு அழைப்பவள் இன்று மறந்தும் அப்படி அழைக்கவில்லை என்பதை அவனும் உணர்ந்திருந்தாலும் அவளிடம் அதைப் பற்றி கேட்கவும் விழையவில்லை.

தன்னை அவன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும் அவனிடம் ஏதும் பேசாமல் வீட்டிற்குள் சென்றாள்.

**********

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Selva Rani

Story MakerContent AuthorYears Of Membership

60. எனதழகே[கா]

21 – கனவே கலைவதேனோ?