in , , ,

60. எனதழகே[கா]


வணக்கம் ஃப்ரண்ட்ஸ்..

நான் அடுத்த வாரம் கதையை முடிக்கப் பிளான் பண்ணியிருந்தேன். இனி 10 to 12 எபி வரலாம். பட் ரெண்டு பாப்பாக்கும் திரும்பவும் ஃபீவர் வந்திடுச்சு. பிளட் டெஸ்ட் எடுத்ததுல டைபாய்டுனு சொல்லியிருக்காங்க. பெரியவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு ஈவ்னிங் தான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். இன்னும் ஒன் வீக் ஹாஸ்பிடலுக்குச் செக்கப் க்கு வரச் சொல்லியிருக்காங்க.

நல்லவேளை சின்னதுக்கு அந்த அளவுக்குப் போகல. இன்ஜக்ஷன் டானிக்கோட அனுப்பீட்டாங்க. சோ ரெகுலரா யூடி கொடுக்க முடியாது, முன்ன பின்ன ஆகும். டைம் கிடைக்கிறப்ப ஏற்கனவே டைப் பண்ணி வச்சதை மட்டும் கரெக்ஷன் பண்ணி அப்டேட் போடுறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

அப்புறம் இன்னொரு விசயம்..

என்னுடைய எல்லா ஸ்டோரிஸூம் அமேசான்ல 10.6.2021 (வியாழன் மதியம்) 12 PM முதல் 12.6.2021 (சனி மதியம்) 11.59 AM வரை ஃப்ரீ கொடுத்திருக்கேன் ஃப்ரண்ட்ஸ். விருப்பப்படுறவங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க. ஸ்டோரி லிக்ன் வேணும்ன்னா இன்பாக்ஸ்ல மெசேஜ் பண்ணுங்க, சென்ட் பண்ணுறேன்.

அத்தியாயம் 60


நந்தா தன் சென்ற வேலையை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பும் போது மணி மதியம் மூன்றைக் கடந்திருந்தது.  நடுக்கூடத்தில் தன்னை மறந்து உடை விலகியிருப்பது கூட அறியாது, குழந்தையாய்த் தூங்கிக் கொண்டிருந்த மேகலாவைக் கண்டதும் மனம் கனத்தது அவனுக்கு.

பத்மா உயிரோடு இருக்கும் பொழுது, எப்பொழுதும் அன்னையின் கைகளை விடாது பற்றிக்கொண்டு அவருடன் செல்லம் கொஞ்சிக் கொண்டே இருப்பாள். ஈன்றவரின் மறைவிற்குப் பின் அவளின் குழந்தைத்தனம் முற்றிலும் தொலைந்து போய், தனக்குப் பின்னே பிறந்தவர்களுக்காக.. வயதை விட அதிகப்படியான பொறுப்புகளில் தன்னைப் பொருத்தி, கல்லை வைத்து மாங்காயைக் கனிய வைப்பது போல்.. மனதை முதிர வைத்துக் கொண்டாள்.

ஏழு வயதில் இருந்து அவளிடம் கண்ட மாற்றங்களை எண்ணிப் பெருமூச்சை விட்டவன்.. சிறுமிக்கு அணைப்பாய்ப் போர்வையைப் போர்த்தி, கையில் புத்தகங்களுடன் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

அரசு, ஈஸ்வரி, மதி மூவரும் வீட்டிற்குள் நுழையும் பொழுது.. நிசப்தம் சப்தமாய் அவர்களது செவியை ஊடுருவியது. தமக்கையானவள் அவர்களைப் பார்த்துவிட்டு விழித்திருந்த தம்பியிடம், “என்னடா?” என்றிட, “ஸ்ஸூ உன் சத்தத்தைக் குறை! எத்தனை நாள் தூங்கலைன்னு தெரியல. நல்லா அடிச்சுப் போட்ட மாதிரிப் பசியைக் கூட மறந்திட்டுத் தூங்குறா. கத்தி எழுப்பி விட்டுடாத!” எனக் குரல் தாழ்த்தி உரைத்தான் நந்தன்.

சின்னதாய்ச் சிரித்தவள், “எப்ப வந்தா.?” என வினவ, “அந்தச் செல்வநாயகியையும், கருவேலனையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணதுமே நேரா இங்க வந்திட்டா!”

“இவளோட அப்பா ஒண்ணும் சொல்லலையா.?”

“இந்நேரம் எந்தக் கடையில சாராயத்தைக் குடிச்சிட்டு உருண்டிட்டு இருக்காரோ!”

“அது சரிதான், பிள்ளையை எதுவும் சொன்னாரா ராசா..?” ஈஸ்வரி மகனிடம் வினவ, “பெரிசா எதுவும் சொல்லல ம்மா, உன்னைப் பெத்தவளைப் பத்தித் தெரிஞ்சா எவனும் கட்டிக்க வரமாட்டான்னு ஏதோ சொன்னாரு!”

அரசு மற்றும் ஈஸ்வரியின் முகம் அந்தச் சொற்களில் வாடிவிட, “சரி நீ கிளம்பலையா?” என்றாள் மதி.

“கிளம்பணும் க்கா, நேரமாச்சு! இவளை எப்படித் தனியா விட்டிட்டுப் போறது, அவங்க வீட்டுல இருந்தாலும் பரவாயில்ல. நீங்க வர்றதுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்!”

அவள் சின்னதாய்ச் சிரித்து, “ஊர்க்காரவங்க இப்படி நினைப்பாங்களா? வெளியத் தெரிஞ்சா உன்கூட இவளைச் சேர்த்து வச்சுக் கதைக்கட்டி விட்டிடுவாங்க!”

மகளின் சொற்களில் பெற்றவர்கள் திகைப்புடன் ஏறிட, “அட நீ வேற ஏன்க்கா? பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாத ஆளுங்க. அப்படியே வித்தியாசம் தெரிஞ்சாலும் வம்புக்குன்னு மாத்திச் சொல்லுவானுங்க சில பேரு! அவனுங்க வாய்க்கு அரைக்க ஒரு செய்தி வேணும். அது நானோ, நீயோ, மேகலாவோ, பேச்சியப்பன் அய்யாவோ.. யாரோ ஒருத்தர்! அதை எல்லாம் கண்டுக்காம போயிடணும், நின்னு விளக்கம் சொன்னா, நம்மளை குற்றவாளி ஆக்கிடுவாங்க. அவனுங்களோட புத்தி அப்படி, கோணல் மாணலா தான் இருக்கும்!”

“பரவாயில்லயே டா, ரொம்பத் தெளிவா பேச ஆரம்பிச்சிட்ட!”

சின்னதாய்ச் சிரித்தவன், “விபரம் தெரிய ஆரம்பிச்சிடுச்சுல. நல்லது கெட்டது, சரி தப்பையும் சொல்லிக் கொடுத்திருக்கீங்க.  அது போதாதா.? ஆனா நீ கொஞ்சம் கோபத்தைக் குறைச்சிக்க அக்கா..!”

“ஏன்டா.?”

“எல்லாரும் சத்யா மாமா மாதிரியே விட்டுக்கொடுக்க மாட்டாங்க பாரு!” என்றவன் தன் அறைக்குச் சென்றான். தன் உடமைகளைத் தயார் செய்து கொண்டிருந்தவனின் அருகே வந்த மதி, “உனக்கு எப்படிடா தெரியும்?”

“அதான் கன்னத்தில நாலு வரி விழுந்திருந்திச்சே! நேத்து மேகலா பிரச்சனையில யாரும் அதைப் பெரிசா கண்டுக்கல!”

“அம்மா அப்பா, அத்தை, மாமாக்கு எல்லாம் தெரியுமா?”

“ம்ம்..”

“அச்சச்சோ!”

“நீ இல்லாத நேரமா பார்த்து, ஆளாளுக்கு மாத்தி மாத்தி மாமாக்கு அட்வைஸூ!”

“நம்ம அம்மா அப்பாவுமா.?”

“இல்ல அத்தை மாமா, அத்தான் அக்கா மட்டும் தான். இவங்க ரெண்டு பேரும், அவங்க எஜமான் மகனை எதிர்த்து எதுவும் பேசிடுவாங்கன்ற..?” எனச் சிரித்தான் இளையவன்.

அவளும் சிரித்து, “என்ன காரணம்னு தெரியுமா?”

மறுப்பாய்த் தலையசைத்தவன், “இல்லக்கா யார் கேட்டும் மாமா சொல்லலையாம். இனிமே இப்படிச் செய்யக்கூடாதுன்னு மட்டும் சத்தம் போட்டிருக்காங்க..!”

“தப்பு என்மேல தான்டா!”

“அதான் தெரியுமே!”

அவள் கேள்வியாய்ப் பார்க்க, “எப்பவும் பொறுமையா இருக்கிற மாமா, கைநீட்டுற அளவுக்குப் போயிருக்காருன்னா.. நீ வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டன்னு புரிஞ்சிடுச்சு! இருந்தாலும் எப்படி அடிக்கலாம்னு கேட்டிருக்காங்க. இனிமேல் அப்படி நடக்காதுன்னு வாக்குக் கொடுத்தாராம்!”

“உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்.?”

“மஹா அக்காக்கிட்டப் பேசுறப்ப சொன்னாங்க!”

“பாரேன் அங்கேயே இருந்த எனக்குத் தெரியல, உனக்கு விசயம் தெரிஞ்சிருக்கு..?”

சின்னதாய்ச் சிரித்தவன், “தூரமா உள்ளவங்களுக்குத்தான் செய்தி சொல்லுவாங்க. அங்கேயே இருக்கிறவங்களுக்கு எதுக்கு? அதுவும் நீ இருக்கிறப்பச் சொல்லி, உனக்கு இன்னும் ரெண்டு கொம்பு முளைக்கவா..? சும்மாவே தையத்தக்கான்னு ஆடுவ, இதுல சப்போர்ட்டுக்கு ஆள் இருக்குன்னு தெரிஞ்சிட்டா.? உன்னை எல்லாம் சமாளிக்க முடியுமா? மாமா தான் பாவம்!”

“அடப்பாவி அடி வாங்கினது நான்டா..!”

“சரி எதுக்கு அடிச்சாரு?”

அவள் அமைதிக் காக்க, “பார்த்தியா உனக்கே தெரிஞ்சிருக்கு, யார் பாவம்னு.!”

“நீ ஒருத்தனே போதும்டா, என்னை டேமேஜ் பண்ணுறதுக்கு!”

அவன் சிரித்துவிட்டு பையை எடுத்துத் தன் தோளில் மாட்டிக் கொள்ள, “ஊருக்குப் போயிட்டதால உனக்குப் பலகாரம் எதுவும் செய்ய முடியல, இந்தத் தடவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..”

“அட விடுக்கா அடுத்தத் தடவை உன்னோட கல்யாண பலகாரத்தைக் கொண்டு போறேன்..” எனச் சிரித்தவன், “மேகலா கிட்ட சொல்லிடு, நான் கிளம்புறேன்..!”

“நானே சொல்லீடவா..?” கேலியாய்க் கேட்டவளிடம், “கேட்டா மட்டும் சொல்லு, இல்லையினா பேசாம இரு!” என்றவன் பெற்றோரிடம் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றான்.

சமையலை முடித்த ஈஸ்வரி, உண்பதற்காக மேகலாவை எழுப்ப.. உணவை முடித்தவள் எதுவும் பேசாது கிளம்பிச் சென்றாள். “ஏய் குட்டி, எங்கனப் போற? தம்பி தங்கச்சிப் பள்ளிக்கூடத்துல இருந்து வரட்டும். இங்கேயே இருந்திட்டு ராவுக்கு வீட்டுக்குப் போங்க..” என அவளைப் பெரியவர் தடுத்து நிறுத்த, “இல்ல அத்தை நான் கிளம்புறேன், இங்க இருந்து என்ன செய்யப் போறேன்!”

“ஏன்டி இப்படிப் பேசுற, முகம் பாரு எப்படி வீங்கி இருக்குன்னு? ராவுல அழுதுக்கிட்டே இருந்தியா..?” என்றதும் அவளின் கண்களில் மீண்டும் நீர்த் துளிர்த்தது.

“என்னத்துக்குடி இப்ப அழுகிற?” என அவர் பதற, “நீங்க எல்லாம் துணைக்கு இருக்கிற நம்பிக்கையில தான.. நானும், தம்பி, தங்கச்சியும் இருக்கோம். நேத்து அந்த இக்கட்டான சூழ்நிலையில ஃபோன் போட்டா, வரவே இல்லையில அத்தை நீங்க? அம்மாவுக்குப் பொறவுல உங்களைத் தான அம்மாவ நினைச்சு, இங்க வந்து போறேன்..? நீங்களே இப்படிச் செஞ்சிட்டீங்களே அத்தை! ராவுல பன்னெண்டு மணிக்குக்கூட எவருக்கும் தெரியாம.. நீங்க வந்திருப்பீங்க, மதி அக்கா எல்லாத்தையும் பார்த்துப்பாங்கன்னு நினைச்சு வந்தேன், ஆனா..” என மேலும் பேச இயலாது தேம்பித் தேம்பி அழுதவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டார் ஈஸ்வரி.

“என்னடி இப்படிப் பேசுற? நான் உன்னை என் பிள்ளையா தான்டிப் பார்க்கிறேன். நேத்து விபரம் தெரிஞ்சதும் கிளம்பிட்டோம். ஆனா இந்த நந்தா பையன் தான்.. நானே பார்த்துக்கிறேன் நீங்க மெதுவா வாங்கன்னு சொல்லீட்டியான். உன் அத்தைக்காரி வேற எங்களைக் கண்டா சும்மா இருக்க மாட்டா. என்னத்தையாவது பேசி வம்பு வழக்கை இழுத்து வச்சுப்புடுவா. அதுனால தான் பிரச்சனை எல்லாமும் ஓஞ்சதுக்குப் பொறவுல வரலாமுனு இருந்தோம்!” என அவளின் தலையை வருடி ஆறுதல் உரைக்க.. காலையில் செல்வநாயகி உரைத்த ‘சாணியைக் கரைச்சு ஊத்திப்புடுவேன்!’ என்ற சொல் நினைவில் வர, மேலும் பொங்கிய வந்த  அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

சிறியவளின் வலியைக் காணச் சகியாத அரசு அமைதியாய் எழுந்து வெளியே சென்றுவிட, “போதும் போதும் அழுகாச்சிப் படம் ஓட்டுனது. ரொம்பத்தான் பிழிஞ்சு பிழிஞ்சு அழுகுறீங்க, ரெண்டு பேரும்! வந்து உட்காருங்க, ஏய்க் குட்டி இந்தா உனக்கு நெய் மைசூர்பாகுப் பிடிக்குமுனு, மஹா அக்கா வாங்கிக் கொடுத்து விட்டுச்சு!” என்றபடி ஈஸ்வரியின் அணைப்பில் இருந்த மேகலாவைப் பிரித்து இழுத்து வந்து, அவளின் வாயில் இனிப்பை வைத்தாள் மதி.

அழுகையை அடக்கி சிரிக்க முயன்றபடியே அதை உண்டவள், “அத்தை, நானா ஏன் அம்மா மேல இம்புட்டு வெறுப்பா இருக்காங்க. அப்படி என்ன தப்புச் செஞ்சிட்டாங்க..? செத்துப் போயிட்டா அவங்க சாமிக்குச் சமானமுனு நீங்க தான எனக்குச் சொல்லிக் கொடுத்தீங்க? அவங்களை அசிங்கமா பேசுறது தப்பில்லயா..?” என வினவ, “என்னடி என்னென்னமோ கேட்கிற, என்னாச்சு?” என்றார் அவர்.

பத்மாவைப் பற்றிச் சொக்கன் உரைத்ததை வார்த்தை மாறாமல் ஒப்பித்தவள், “அம்மா அசிங்கம் பிடிச்சவங்களா அத்தை..?” என வலியுடன் வினவ, “அசிங்கம் பிடிச்சது உங்க அம்மா இல்லடி, அவ பிறந்த வீட்டு ஆளுங்களோட மனசுடி! உன் அப்பாருக்கு விபரம் தெரியாது, அதை முழுசா பத்மாக்கிட்டக் கேட்டும் தெரிஞ்சிக்கல. அரையும் குறையுமா கேட்டிட்டு, இவராவும் ஒண்ணை நினைச்சி.. அவளையும் வார்த்தையால கொன்னு, உங்களையும் வதைச்சு, தானும் அழிஞ்சிக்கிட்டு இருக்காரு!

இந்த உலகத்துல தப்புச் செய்யதாவன் யாருன்னு சொல்லு! பத்மா, உங்க அப்பாருக்கிட்ட நிசத்தைச் சொல்லத் தைரியம் இல்லாம, அமைதியா இருந்திட்டா. அது மட்டும் தான், அவ செஞ்சத் தப்பு. பத்மா தப்பானவ இல்லடி, உன்னைப் பெத்தவளை நீயே அப்படி நினைச்சிடாத! இதைக் கேட்டா அவளோட ஆத்மாக்கூட நொந்து போவும்டி!”

“என்னதான் நடந்திச்சு அத்தை?” என அவள் வினவ, “உங்க அம்மாக்குப் பூர்வீகம் ஆந்திரா. கூட்டம் கூட்டமா ஒவ்வொரு ஊருக்கும் காண்டிராக்ட் போட்டுக் கட்டிட வேலைக்குப் போவாங்க. அப்படி வேலைக்குப் போன இடத்துல ஒருத்தவங்க மேல ஆசைப்பட்டிருக்கா. வீட்டுல இருக்கிறவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு, எவருக்கும் தெரியாம கல்யாணம் கட்டிக்கிட்டு வேற ஊருக்குப் போயிட்டா.

ஆனா அவளைப் பெத்தவங்க கௌரவம் போச்சுன்னு சொல்லி.. தேடிக் கண்டுப்பிடிச்சு அந்தப் பையனைக் கொன்னுப்புட்டு, உங்கம்மாவை வயித்துப் பிள்ளையோட கூட்டிக்கிட்டு வந்திட்டாங்க. பிறந்த பிள்ளையைக் கண்ணுலக்கூடக் காட்டல, செத்துப் போச்சுன்னு சொல்லீட்டாங்க. அந்தப் பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.

உங்க அப்பாரு கட்டிட வேலைக்காக வெளியூர் போன இடத்துல, உங்க அம்மா மேல ஆசைப்பட்டுக் கல்யாணம் கட்டிக்கக் கேட்டிருக்காரு! அவங்கக் கூட்டத்துல ஏற்கனவே கல்யாணம் ஆனவளை யாரு கட்டிப்பாங்கன்னு, உங்க அப்பா கேட்டதும்.. நடந்த எதையும் இவருக்கிட்டச் சொல்லாம உடனே கட்டிக் கொடுத்திட்டாங்க.

எப்படி உண்மையைச் சொல்லுறது, சொன்னா அதைப் புரிஞ்சிப்பாங்களானு பயந்து உங்க அம்மாவும் சொல்லாமலேயே இருந்திட்டா. உங்க அப்பாவையும் சும்மா சொல்லக்கூடாது குட்டி, தங்கமா தாங்குவாரு பத்மாவை! நாங்க எல்லாரும் அதைக் கண்ணாரக் கண்டிருக்கோம்.

சம்பாதிக்கிற காசை அப்படியே கொண்டு வந்து அவக் கையிலக் கொடுத்திடுவாரு. செலவுக்கு வேணும்னா கூட, பத்மாக்கிட்ட இருந்துதான் வாங்கிட்டுப் போவாரு. கல்யாணத்துல இஷ்டமில்லைனாலும், உங்க அப்பாரு குணத்தைப் பார்த்து மனசு மாறிட்டா பத்மா. இங்க வந்ததுக்குப் பொறவுல, ஒரு தடவைக்கூடப் பெத்தவங்களைப் போய்ப் பார்க்கல. அம்புட்டு வைராக்கியமா இருந்தா!

யாரு கண்ணு பட்டுச்சோ.. பத்மாவோட அம்மா அவளைப் பார்க்க வந்து, அவங்கப் பழசைப் பத்திப் பேசினதெல்லாம் உங்க அப்பாரு காதுல விழுந்து.. அதுக்குப் பொறவுல அவ வாழ்க்கையே நரகமாயிடுச்சு!

‘என்னடி ஆச்சு, ஏன் உன் புருஷன் இப்படி மாறிட்டாரு’ன்னு விசாரிச்சப்பக்கூட வாயைத் திறக்கல. என்ன நினைச்சாளோ, பிரசவத்துக்கு இருபது நாள் முன்னுக்க வந்து.. என்கிட்டக்க மனசுல மூடி வச்சிருந்த எல்லாத்தையும் கொட்டி அழுதிட்டுப் போனா.

சாகப் போறோமுனு தெரிஞ்சிடுச்சோ என்னமோ, ‘என் பிள்ளைக நாளைக்கு என்னைய தப்பாப் பேசிட்டா, நான் அப்படிப்பட்டவ இல்லையினு நீயாவது ஒத்த வார்த்தைச் சொல்லுக்கா!’ ன்னு கெஞ்சினா. ஆனா இப்படி மொத்தப் பொறுப்பையும் தூக்கி என்கிட்டக் கொடுத்திட்டுப் போவான்னு நான் கொஞ்சமும் நினைக்கலடி!” என அவர் கண்களைத் துடைத்துக் கொள்ள, ஈஸ்வரியின் மடியில் முகம் புதைத்தப்படிப் படுத்திருந்தாள் மேகலா.

கோலாகலாய்ப் புலர்ந்தது அன்றைய காலைப் பொழுது. குடும்பத்தார் அனைவரும் ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டிருக்க.. பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அரசுவின் இல்லம்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது முறையல்ல என்பதால், ராஜனின் தோட்டத்தில் இருந்த பழைய வீட்டை மணமகளுக்கென ஒதுக்கிவிட்டு.. அரசு தற்போது குடியிருக்கும் இடத்தில் மணமகனை தங்க வைத்தனர்.

வாயிலில் வண்டிச் சத்தம் கேட்டதும் சகோதரிகள் இருவரது கவனமும் அங்குத் திரும்ப.. அடுத்தச் சில நொடிகளில் மனோவும், சத்யாவின் தோழி வாஹினியும் உள்ளே நுழைந்தனர்.

“என்ன மதி டைம் ஆகிடுச்சா..?” என்றபடியே வந்தவள், மணமகளுக்கான அலங்காரத்தைத் துவங்க, கொண்டு வந்திருந்த பழச்சாறை மூன்று பெண்களுக்கும் குவளையில் ஊற்றி ஆளுக்கொன்றாய்க் கொடுத்தான் மனோ.

“வாஹி நீ பேசாம, மேக்கப்ன்ற பேருல மூஞ்சியில எதையாவது தடவி விட்டுடாத. ஏற்கனவே உன் ஃப்ரண்ட் என்னை ரௌடின்னு தான் கூப்பிடுவான், இதுக்கு அப்புறம் பேய்னு கூப்பிட்டுற போறான்..!”

“அடடா.. போதும்! மூணு நாளா இதே பாட்டைத்தான் பாடிக்கிட்டு இருக்க நீ! அதான் ஏற்கனவே மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுத்து, ஃபைனல் பண்ணியாச்சுல.?”

“அதைப் பார்த்துட்டு தான் அவன் பேய்னு சொன்னான்!”

“உன்னை வம்பு இழுக்கிறதுக்காக வேணும்னே சொல்லியிருக்கான், அந்த எருமை!”

“ஓய் என்ன, சைடு கேப்புல என் ஆளை மரியாதை இல்லாம எருமைன்னு சொல்லுற?”

“ஓஹோ, அப்ப அவன் என்னை லூசு, பேய், பிசாசு, காட்டேரின்னு எல்லாம் சொல்லுறது என்னவாம்.?”

“அதை எப்படி நான் கேட்க முடியும், உன் ஆளுதான் கேட்கணும்.?”

“பார்த்தீங்களா மாமா உங்க மச்சினிச்சிக்குத் தெளிவை.!” எனக் கேட்டவாறே திரும்பிய வாஹி.. மனோவைக் கண்டு பல்லைக் கடித்தப்படி, “மாமா..”

அவன் மனைவிக்கு உணவு ஊட்டுவதில் கவனத்துடன், “என்ன ம்மா..?”

“இங்க ரெண்டு பேரு இருக்கோமே, நியாபகம் இருக்கா.?”

மதி இடைநுழைந்து, “அதான…!”

அவன், “ஏன் இல்லாம அதெல்லாம் நல்லாவே நியாபகம் இருக்கு!”

“இப்படி உங்க பொண்டாடிக்கு மட்டும் ஊட்டிக்கிட்டு இருக்கீங்க..?”

“நான் என் பொண்டாட்டிக்கு ஊட்டுறேன், உங்களுக்கு வேணும்னா அவங்க அவங்க ஆளைக் கூப்பிடுங்க..!”

“எங்க.. எனக்கு வாய்ச்சதுக்கு நான்தான் கல்யாணம் ஆன நாளுல இருந்து ஊட்டிக்கிட்டு இருக்கேன்!” என வாஹி குறைபட்டுக் கொள்ள, “ஆத்தி அவனைக் கூப்பிட்டா வாயால ஊட்டுறேன்னு சொல்லிக் கடிச்சு வச்சிடுவான். போன வாரம் கடிச்சக் காயமே இன்னும் ஆறல, நான் மாட்டேன் ப்பா..!” என்று மனதிற்குள் பேசுவதாய் நினைத்து மதி வாய்விட்டே உரைத்துவிட, மூவரும் அவளைத் திகைப்புடன் பார்த்தனர்.

“ஏய் மதி, எங்க திரும்பு!” எனத் தங்கையின் முகம் பற்றித் திருப்பிய மஹா, “என்ன காயம்னு கேட்டதுக்கு, கதவுல இடிச்சிக்கிட்டேனு சொன்ன? இப்ப என்ன புதுசா வேற என்னமோ கதைச் சொல்லுற..?”

“அது கதையில்ல நிஜம்!” என்ற மனோவை முறைத்தவள், “சேச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா. ஏதோ நியாபகத்துல எதையோ சொல்லியிருப்பேன்!” எனச் சமாளித்தாள்.

“அப்படியா..?” என அவள் நம்பாமல் கேட்க, “கிளிக்கிட்டக் கடி வாங்கினவன், இப்பக் கிளியையே கடிக்க ஆரம்பிச்சாட்டானா..?” என்று அவன் கேலியாய் வினவ, “என்ன மாமா சொல்லுறீங்க..?” என்றாள் வாஹி.

சத்யா மற்றும் மதியின் கடிக்காதலைப் போட்டு உடைத்தவன், “கடிக்கிறதோட நிப்பாட்டிக்கோங்க, ரெத்தத்தை எதுவும் ஊறிஞ்சிடாதீங்க! அப்புறம் அது வேம்பயர் லவ் ஆகிடப்போகுது..!”

“போங்க அத்தான்!” என மதி சிணுங்க, “அட வெட்கப்படக் கத்துக்கிட்டப் போல..!” மஹாவும் தன் பங்கிற்குக் கேலிச் செய்ய, இடம் கலகலப்பானது.

சிறிது நேரத்தில் மனைவிக்கான ஊட்டச்சத்துத் திரவத்தைக் கொடுத்த மனோ, “இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கு. அதுக்குள்ள ரெடி பண்ணீடு வாஹி, சரவணன் ஃபேமிலியோட பெண் அழைக்க வர்றோம்! இப்ப நான் கிளம்புறேன்..” என விடைபெற, ‘நானும் உங்கக்கூட வர்றேன் பரணி. இங்க சும்மாவே உட்கார்ந்திருக்க ஒருமாதிரி இருக்கு!” என்றாள் மஹா.

“நீ அங்க வந்தா சும்மா இருக்க மாட்டியே, ஏதாவது ஒரு வேலையைச் செய்யிவ! அப்புறம் உடம்புக்கு ஒத்துக்காமப் போயிடும்! இன்னும் வாமிட் வர்றது வேற உனக்குச் சரியாகல. அதுனால சொல் பேச்சுக் கேட்டு, நல்ல பிள்ளையா இங்க அமைதியா உட்கார்ந்துக்கிட்டு இரு! நான் போய் வேலை எல்லாம் பார்க்கிறேன். வாஹி இவ மேலயும் ஒரு கண்ணை வச்சிக்கோமா! கண்ணம்மா உள்ள இருக்கிற பிள்ளையும், நீயும் கவனமா இருக்கணும், ஓகே!” என்றவன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கிளம்ப, “பரணி தனு..?” என்று குரல் கொடுத்தாள் மஹா.

“எல்லாப் பசங்களும் நந்தன் கிட்ட இருக்காங்க. அவன் பார்த்துப்பான், நீ கவலைப்படாம இரு!” எனப் பதிலுரைத்து விட்டுச் சென்றான் மனோ.

சொந்த வீட்டிற்குக் குடி பெயர்ந்த ஒரு வாரத்திலேயே கணவனும் மனைவியும் இணைந்து, குடும்பத்திற்குப் புதுவரவு ஒன்று வரப் போவதை.. இரு வீட்டாரிடமும் தெரிவித்துவிட்டனர். அதன்பின்பு மஹாவை எவரும் தரையில் கால்பதிக்க விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மனைவியின் வயிற்றை நிறைப்பதில் இருந்து அவளுக்கு மருந்து கொடுப்பது வரை அனைத்தையும் தானே கவனித்துக் கொண்டான் மனோ. தனுவிற்கும் தன்னுடன் விளையாடுவதற்கு ஒரு பாப்பா வரவிருப்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சி. தந்தையோடு இணைந்து அவளும் அன்னையைக் கவனித்துக் கொள்ளத் துவங்கிவிட்டாள்.

அரசுவின் வீட்டு வாயிலின் முன்பு இருந்த இடத்தில் பந்தலிட்டு மணமேடை அமைத்திருந்தனர். பேச்சியப்பன் உட்பட ஊரின் முக்கியமானவர்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்க.. சத்யாவை அழைத்து வந்தான் அண்ணாமலை.

அனைவரையும் கைக்கூப்பி வணங்கிவிட்டு அவன் மணமேடையில் அமர, தமக்கை மற்றும் தோழிக்கு இடையினில் நடந்து வந்தாள் மதி. மணமேடையில் கால்பதித்தவளின் கைப்பற்றி நிறுத்திய ருக்கு, “ஈஸ்வரி பிள்ளைக்கு மிஞ்சியைப் போட்டிட்டுதான் மணவறையில உட்கார வைக்கணும்!”

“லெட்சுமி பிள்ளைக்கு அப்படி எதுவும் செய்யலயே ம்மா..?” என அவர் புரியாது வினவ, “ராஜா கல்யாணம் கோவில்ல நடந்துச்சு ம்மா, அதுனால எந்தச் சம்பிரதாயமும் பார்க்காம.. அவனையே மிஞ்சியைப் போட சொல்லிட்டோம்!”

“சரி இப்ப யாரு போடுறது..?” என அரசு வினவ, “நாத்தனார் முறையில இருக்கிறவங்க தான் போடணும்!” என்றார் ராஜன்.

பார்வையைச் சுழற்றிய ஈஸ்வரி, “ஏய் குட்டி.. இங்கன வா!” என மேகலாவை அழைத்து, “இவ என்னையும் அவங்களையும், அத்தை மாமான்னு தான் கூப்பிடுவா. முறைச் சரியாதான இருக்கும்?” என்று வினவ, “போட்டு விடச் சொல்லு ம்மா..” என மெட்டியை ஈஸ்வரியின் கையில் கொடுத்தார் ருக்கு.

நாத்தனார் முறையில் மதிக்கு மெட்டியை அணிவித்த மேகலா, பெரியவர்களின் சொல்லைக் கேட்டு மணமேடையிலேயே நின்று கொண்டாள்.

சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் நடைபெற, விருந்தினர்களை அண்ணாமலை கவனித்துக் கொண்டிருந்தான். அவனிடம் தெரியும் மாற்றங்களை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தார் பேச்சியப்பன். முன்பு இருந்த சினமும், ஒதுக்கமும் இல்லாது.. ஓரளவு இயல்பாகப் பார்க்கத் துவங்கியிருந்தார் தம்பியின் மகனை!

“அக்கா..” என்று அழைத்தபடி, மேகலாவை நோக்கி பாலா செல்ல, “டேய் எங்கடா போற?” எனத் தடுத்து நிறுத்தினான் நந்தன்.

“அக்காக்கிட்டப் போகணும் அண்ணே!”

“எதுக்குடா?”

“வேட்டி அவுந்துக்கிச்சு, எனக்கு அதை மாட்டத் தெரியல..”

“அடப்பாவி பதிமூணு வயசாகுது, தெரியலைங்கிற..?”

“என் வயசுல நீங்க வேட்டிக் கட்டுனீங்களா.?”

“அது..” என நந்தன் திணற, “எதுக்கு எனக்கு வேட்டி எடுத்தீங்க, பேண்ட் எடுத்துக் கொடுத்திருக்கலாமுல..?”

“எல்லாருக்கும் ஒண்ணு போல எடுக்கலாமுனு எடுத்தாச்சுடா. அங்கப்பாரு சரவணன் அண்ணனோட ஒரு வயசுப் பையன் வேட்டி கட்டியிருக்கான். உனக்கு என்னடா பிரச்சனை.?”

“ஹான்.. அவனை யாராவது ஒருத்தர் தூக்கிக்கிறாங்க. ஆனா நான், தானா தான நடக்க வேண்டியிருக்கு. நடந்தா இது அவுந்திடு!” எனக் குறைப்பட்டவனைப் பார்த்துச் சிரித்தவன், “சரி வா, அதான் நான் இருக்கிறேன்ல.?” என்றபடி அழைத்துச் சென்றான்.

“மாமா மாமா.. பாக்ஸ் பாக்ஸா ஐஸ் அடுக்கி வச்சிருக்காங்க. எனக்கு ஒண்ணு எடுத்துக் கொடுங்களேன்..!” என்றபடி தனு ஓடிவர, தமக்கை மகளுக்காக, அவள் கேட்டதைச் செய்தான் நந்தன். அதைப் பார்த்துவிட்டு தேவியின் முகம் வாடிவிட, அவளின் கையிலும் ஒன்றைக் கொடுத்துச் சிரிப்பை வரவைத்தவன்.. அனைத்துக் குழந்தைகளையும் அழைத்து ஒன்றுதிரட்டி விளையாட அழைத்துச் சென்றான்.

சிறிது நேரத்தில் மச்சினன் முறைச் செய்வதற்காக நந்தனுக்கு அழைப்பு வர, குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பைப் பாலா ஏற்றுக் கொண்டான்.

சம்பிரதாயங்கள் முடிந்ததும்.. சத்யாவின் கையில் மங்கல நாணைக் கொடுத்த புரோகிதர் கெட்டிமேளத்திற்குக் கட்டளைப் பிறப்பிக்க.. மந்திர ஒலியும் இசையும் இரண்டறக் கலந்து மணமக்களின் மனதில் அவர்களின் உறவுக்கான பொருளை உணர்த்த.. வான்மதியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டான் சத்யா.

அதன் பின்பான வைபவங்கள் ஒவ்வொன்றாய் நடந்தேற.. விருந்தினர்களுக்கு உணவளித்து உபசரிப்பதற்காக அழைத்துச் சென்றனர் ஆண்கள் அனைவரும். பெண்கள் மணமேடைகளில் மிச்சமிருந்த கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வெண்ணிலவன் இரவு கவிதையைத் தென்றலுடன் இணைந்து மௌனமாய் வாசிக்க.. இரண்டாம் முறையாக அடியெடுத்த வைத்த தங்களின் அறையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் மதி.

நல்ல நேரம் பார்த்துப் பெரியவர்கள் பாவையை அறைக்கு அனுப்பி வைத்திருக்க, காதல் மொழி பேச வேண்டிய மன்னவனோ.. பால்கனியில் வேறு எவருடனோ காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தான்.

பத்து, இருபது, முப்பது என நகர்ந்து ஐம்பது நிமிடங்கள் முழுதாய்க் கடந்து விட்டது. ஆடவன் இன்னும் உள்ளே வந்த பாடில்லை. இயல்பாகவே மதிக்கும் பொறுமைக்கும் அடுக்கடுக்காய் ஏணி வைத்தால் கூட எட்டாத தூரம். திருமணமான அன்றே, முடிந்த மட்டும் மனைவியைச் சோதித்துக் கொண்டிருந்தான் சத்யா.

அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாது கணவனைத் தேடிச் செல்ல.. இடக்கையால் நெற்றியைத் தேய்த்தபடி, கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் அவன்.

“சத்யா..” என்றவளின் அழைப்பிற்கு அவனிடம் பிரதிபலிப்பு இல்லாது போக, ஆடவனின் எதிரே சென்று நின்றாள் மதி.

கைப்பேசியை விலக்கி, “ஒரு ஃபைவ் மினிட்ஸ்..” என்றவனிடம், “ஆல்ரெடி ஒரு மணி நேரம் ஆகிடுச்சு!”

சற்றே திகைத்தவன், “ஸாரி ஸாரி, ப்ளீஸ் ஃபைவ் மினிட்ஸ் மட்டும்!” எனக் கேட்டுக் கொண்டு, தனக்குக் கீழ் பணிபுரிபவனுக்கு வரிசையாய்க் கட்டளைகள் பிறப்பிக்கத் துவங்கினான் சத்யா. ஐந்து நிமிடங்கள் கடந்து ஆறாவது நிமிடத்தின் துவக்கத்தில் பேசுவதற்கு ஆடவனின் இகழ்கள் அவன் வசமில்லை. உரிமையானவள் தனதாக்கிக் கொண்டாள்.

இதுவரை பாவையிடம் இருந்து கிளிக்கடியின் வலிக்கலந்த சுகத்தை மட்டுமே பெற்றுப் பழகியவன், முதன்முதலாய் முத்த சுவையை அறிந்தான். விரல்கள் தானாய் கைப்பேசியை அணைத்து ஓரமாய்ப்
போட்டுவிட, கைகளானது தன் தேடலைத் துவக்கியிருந்தது பெண்மையிடத்தில்!

தொடர்ந்த நீண்டடு கொண்டிருந்த துயிலற்ற இரவில் காக்காய்க் கடிகள் மட்டுமே நிறைந்திருக்க, ஆடவன்.. இடம், பொருள், ஏவல் என்று எதையும் பாராமல் தனக்கு விருப்பமான இடங்களில் எல்லாம், மனையாளுக்குக் கடிகளைப் பரிசளித்திருந்தான். எப்பொழுதும் அவனிடம் சரிக்குச் சரியாய் நிற்கும் பெண்மை, இம்முறை முதலில் அடங்கி.. இறுதியில் தன்வசமாக்கிக் கொண்டது ஆண்மையை..!

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 7 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

29 நினைவைத் தேடும் நிலவே

20 – கனவே கலைவதேனோ?