in

தேவை ஒரு தேவதை -6

அத்தியாயம் 6..

இரவு 11 மணிக்கு வசந்திக்கு சக்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. “என்ன ஆபீஸ்ல இருந்து பேசுறீங்களா..?”

ஆமா.. ரெண்டுநாள் ஒரே மீட்டிங். இன்னைக்கு மதியம்தான் மீட்டிங் அதான் உனக்கு கால் பண்ணினேன். சவீதா அன்னைக்கு அம்மா கூட ஆஸ்பத்திரிக்கு போனியா என்ன..?”

போகணும்னு நெனச்சேன். பிரகாஷ் கிட்ட சொல்லி வச்சேன். முதல் நாள் ஓகே சொல்லிட்டுஅப்புறம் காலையில போன் பண்ணி இன்னைக்கு டீம் மீட்டிங் இருக்கு கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டான். அதான் போக முடியல. ஈவனிங் போய் பார்த்தேன் சக்தி. அம்மா பரவாயில்லை..” மனதார பொய் கூறினாள்,..

ஓகே லீவ் இட். நம்ம பீல்டுல இதெல்லாம் சகஜம். கம்பெனிக்கு தேவை நம்ம உழைப்பு மட்டும்தான்..

ஓகே.. என்னோட ரெஸ்யூம் உங்களுக்கு அனுப்பி இருந்தேன் இல்ல. நீங்க அங்க எதுக்காவது அப்ளை பண்ணீங்களா..?”

இல்லை இனி தான் பார்க்கணும். எனக்கு என்னவோ ரெண்டு வருஷம் முடிஞ்சதும் இந்தியா வந்துடலாம்னு தோணுது.. ஒரு குண்டை தூக்கி போட்டான்..

ஏன் சக்தி, இப்ப வேற உங்களுக்கு ரொம்ப செலவாகியிருக்கும். எல்லாத்தையும் காம்பன்சேட் பண்ணனும்.. நாளைக்கு நம்ம பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டாமா. ஒரு பத்து வருஷம் இருந்துட்டு இங்க வந்துடலாம்..” ‘பத்து வருஷம் இருந்த பிறகு யார் இங்கு வருவது..‘ மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டு அவனிடம் பேசினாள்.

அதுதான் ரொம்ப யோசனையா இருக்கு. இப்பவே ஒரு அஞ்சு லட்சம் காலி ஆயிடுச்சு. இன்னும் மேரேஜ் வேற இருக்கு. ஓகே.. நீ சொல்றதும் சரிதான்..” என்றவன் சற்று நேரம் பேசி இருந்து விட்டு போனை வைத்தான்.

ஆனால் அவனது மனதில் சென்னையில் நல்ல வேலை கிடைத்தால் போய் விடலாம் என்பதுதான் எண்ணமாக இருந்தது. இன்னும் மூன்று மாதம் கழித்து திருமணத்திற்கு பதினைந்து  நாட்கள் விடுமுறை எடுத்தாயிற்று. போயே ஆக வேண்டும். பிளைட் டிக்கெட் போக வர எப்படியும் இரண்டு லட்சம் ஆகிவிடும். 

இங்கு லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும்ஊருக்கு போக வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக சேமிக்க வேண்டும்.. அனாவசியமாக செலவழிக்க முடியாது. செல்ஃப் குகிங்செல்ப் டிரைவிங்அதெல்லாம் தெரிந்தால்தான் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ முடியும்.

அவனும் இங்கு வேலைக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. கம்பெனியில் தனக்கு மேலதிகாரியிடம்சார் நான் இந்தியா போகலாம்னு நினைக்கிறேன். நோட்டீஸ் கொடுக்கணும்னா எத்தனை மாசம் முன்னாடி கொடுக்கணும்..?”

“டூ இயர்ஸ் கம்ப்ளீட்டா ஒர்க் பண்ணியிருக்கணும். அதுக்கப்புறம் நோட்டீஸ் கொடுத்துட்டு ஆறு மாசம் கழிச்சு தான் ரிசைன் பண்ணிட்டு போகமுடியும்…” ஏற்கனவே அக்ரிமென்டில் இருந்தது தெளிவாக கூறினார்.

அதற்கப்புறம் நாட்கள் விரைவாக சென்றது. சரஸ்வதி தேன்மொழியின் கவனிப்பில் நன்கு தேறி எழுந்தார். இடையில் தேன்மொழியின் அம்மா சிவகாமி, “தேனு உன்னை  ரொம்ப தேடுது. ஒரு ரெண்டு நாள் லீவு கேட்டு வீட்டுக்கு வந்துட்டு போயேன்..” என்று அழைக்க.. மெதுவாக சரஸ்வதியிடம் லீவு கேட்டாள்.

அவள் போய்விட்டு அப்படியே இருந்து கொண்டால் என்ன செய்வது என்ற நினைப்பில் சரஸ்வதி தயங்கசாந்தினி தான் அம்மாவிடம் சொல்லி லீவு வாங்கிக் கொடுத்தாள்.

அம்மா அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க. நம்மளோட சௌகரியத்திற்காக ஓருத்தங்களை நிறுத்தி வைப்பது தப்பு.. ரெண்டு நாள் தானே நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் அனுப்பி வை..” என்று சொல்லவும்ஆயிரம் தடவை வந்துடு..” என்று சொல்லியே அனுப்பி வைத்தார்.

தனியாக ஊருக்கு போக தெரியாதென்று சாந்தியிடம் சொல்லஅம்மாவுக்கு தெரியாமல் சாந்தியே டிக்கெட் புக் செய்து அவளை ஏற்றி அனுப்பி வைத்தாள்..

ரிட்டன் டிக்கெட் போட்டு மெயில் ஐடிக்கு அனுப்புறேன். அங்கு உள்ள ஜெராக்ஸ் கடையில் எடுத்துக்கோ..” என்று சொன்ன சாந்தினிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிவிட்டு ஊருக்கு கிளம்பினாள். மகளைப் பார்த்த சிவகாமிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உண்மையிலேயே தேன்மொழி இங்கு இருந்ததைவிட அங்கு மிகவும் சிறப்பாகவும், அழகாகவும் இருந்த மாதிரி தோன்றியது..

வேலை அதிகம் என்றாலும் சத்தான ஆகாரங்களும்சாந்தினியின் நட்பும்அந்த வீட்டுச் சூழலும் பொருந்திப் போக தேன்மொழி மகிழ்ச்சியாகவே இருந்தாள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல் அவளது மகிழ்ச்சி உடம்பிலும் மினுமினுப்பாக தெரிய, “தேனு அங்க உனக்கு பிடிச்சிருக்கா..?”

ஆமாம்மா.. வேலை ஜாஸ்திதான், ஆனா அவங்க பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி, என்னை சொந்த அக்கா மாதிரி பார்த்துக்கிட்டா. அதனால்தான் என்னால் அங்கே இருக்க முடிஞ்சது. இன்னும் மூணு மாசம் தானேமா, கல்யாணம் முடிஞ்சதும் சரஸ்வதி அம்மா வேலைக்கு போயிடுவாங்க. அதுக்குள்ள நானும் வேற வேலைக்கு முயற்சி பண்ணி போயிடலாம் நினைக்கிறேன். அப்பதான் கொஞ்சமாவது நம்ம குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும்…” சொன்ன மகளை கன்னம்  வழித்து திருஷ்டி கழித்தாள் சிவகாமி..

தங்கம்உன்னை மகளாய் பெற்றெதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். சூழ்நிலை அறிந்து அந்த வேலையை வேண்டாம் என்று சொல்லாமல்ஒத்துகிட்ட பாரு.. இன்னொரு பிள்ளைனாநான் படிச்சிருக்கேன் எதுக்கு வீட்டு வேலை செய்கிறேன்னு  சொல்லியிருக்கும். எனக்கும் வருத்தமா தான் இருக்கு. பரவாயில்லை. நேர்மையான வேலை தானே, பாரும்மா.. உன்னோட நல்ல மனசுக்கு கடவுள் ஏதாவது வழி வைப்பான்..” மகளை நல்லது சொல்லி மனதார ஆசீர்வதித்தார் அந்தத் தாய்..

இரண்டு நாட்கள் அம்மாவிடம் சீராடி விட்டுசாந்தினி சொன்னபடியே சென்னை வந்து சேர்ந்தாள்.  ஆனால் அவள் இல்லாமல் சாந்தினி ஒற்றையில் சிரமப்பட்டு போனாள். அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..

சரஸ்வதிக்கு அவள் வந்ததே திருப்தியாக இருந்தது. அடுத்து இரண்டு செக்கப்பில் சரஸ்வதியின் உடல்நிலை சற்று முன்னேற்றம் தெரியஇதே மாதிரி டயட் மருந்து எல்லாமே மெயின்டெயின்  பண்ணுங்க. அதிக ஹீட் உள்ள இடத்தில் இருக்க வேண்டாம். கிச்சன் வேலை கொஞ்ச நாள் வேண்டாம்…” டாக்டர் சொல்லி அனுப்பினார்..

கல்யாணத்திற்கு இருபது நாள் இருக்கமறுநாள் சக்தி வருவதாக இருந்தது. தேன் மொழிசாந்தினி இடம், “எனக்கு இங்கு உள்ள தனியார் ஹாஸ்பிடல்ல வேலை கிடைக்குமா..எப்படி அப்ளை பண்ணனும்..கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. கல்யாணம் முடிஞ்சதும் நான் ஊருக்கு போக விரும்பல. இங்கேயே ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டு ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன்..

சாந்தினிக்கும் அது சரி என்றே தோன்றியது. நன்கு படித்து விட்டு எதற்கு இப்படி கஷ்டப்பட வேண்டும். அம்மாவுக்கு குணமாகிவிட்டது என்றால் சமாளித்துக் கொள்ளலாம். மனதிற்குள் நினைப்பு ஓடஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோ. உனக்கு நான் ஒரு ஏற்பாடு பண்றேன்..” என்று கூறினாள்.

மறுநாள் சக்தி வந்துவிட எல்லோர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அம்மாவைப் பார்த்து விசாரித்தவனுக்குசற்றே மன நிம்மதி தோன்றியது. அம்மா தேறி இருப்பது புலப்படஜெட் லாக் போக நிம்மதியாக படுத்து உறங்கினான்.

பகல் முழுவதும் தூங்கி விட்டு மாலை எழுந்து குளித்து விட்டு  அம்மாவின் அறைக்கு வந்தான். அப்பாவும் வந்துவிடஅப்பாவுக்கும் அவனுக்கும் சேர்த்து சாந்தினி டிபன் காபியை அறைக்குள் கொண்டு வந்தாள்.

மகன் வந்திருப்பதால் வடையும், கேசரியும் செய்யச் சொல்லி இருந்தார் சரஸ்வதி. வடையை சாப்பிட்டதும்தங்கையை பார்த்து, “சூப்பரா இருக்கு.. நீ எப்படி இப்படி சமைக்ககத்துகிட்டே..?” தங்கையை கேலி செய்தான்..

அம்மாவின் முன்னால் எதுவும் சொல்ல முடியாமல் லேசாக சிரித்துவிட்டுசென்றுவிட்டாள் சாந்தினி..

அம்மா இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு..?”

பரவாயில்ல. ஹீமோதெரபி முடிஞ்சிருச்சு. இனி சாப்பாடு மாத்திரை இரண்டும் தான். ரெஸ்ட் எடுக்கணும் சொல்லி இருக்காங்க..

ஓகே, மா சரியாயிடும்.. கவலை படாதீங்க..

நீ வந்துவிட்டது சவீதாக்கு தெரியும்தானே. நாளைக்கு நீங்க எல்லாரும் போய் ட்ரஸ் எடுத்துட்டு வரீங்களா..?”

“ஓகேமா, நீங்களே சொல்லிடுங்க. எனக்கு கொஞ்சம் மெயில்ல வேலை இருக்கு…” தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனது அறைக்குள் நுழைந்த சாந்தி “அண்ணா நான் கேட்ட மொபைல் வாங்கிட்டு வந்தியா..?”

ஆமா. இந்தா.. அப்புறம் இது  உனக்கு டேப்..” 

“தேங்க்யூ அண்ணா..” என்று கிளம்ப போனவளிடம், “ஆமா தேன்மொழி எங்க..? அம்மாவை பாத்துக்கறாங்க இல்ல. நான் ரூம்ல இருக்கும்போது வரவே இல்லை..

அண்ணா நான் உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லட்டுமா..?” கேட்ட சாந்தி அனைத்து உண்மைகளையும் கூறினாள்..

அவங்கதான் பஜ்ஜி, கேசரி எல்லாம் போட்டுக் கொடுத்தது. வீட்டு வேலையும் பார்த்துட்டு அம்மாவையும் பொறுப்பா கவனிச்சிட்டாங்க. ஹீமோ கொடுத்ததில அம்மாவோட உடம்பு ரொம்ப டவுன் ஆயிடுச்சு. பாடி ஹீட் தாங்காமல், வாய் பேச முடியல வயிறு புண்ணாகி லூஸ் மோஷன், வாமிட்  பல பிரச்சனை. டெய்லி கஞ்சி, ஜூஸ், காரம் இல்லாமல் பத்திய சாப்பாடுஎங்களுக்கு தனி சமையல் எல்லாம் செஞ்சு கொடுத்து கவனிச்சிட்டாங்க..

நாங்க யாரும் எதுவுமே சொல்லல. அவங்களே  செஞ்சாங்க. சம்பளம் கூட அம்மா அதிகமாக கொடுக்கல. பேசின சம்பளமும் சமையலுக்கு நாலாயிரம்  ரூபாய் கொடுத்தாங்க. ஆனால் தேன் செஞ்சதுக்கு  நம்ம சம்பளமே பேசக்கூடாது அண்ணா..

தன்னோட அம்மா மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அந்த மாதிரி மனசு யாருக்கும் வராது. உன்னோட கல்யாணம் முடிஞ்சதும் அவங்க வேற வேலை தேடிட்டு போகிறதா இருக்காங்க. அதான் ஒரு போன் இருந்த வசதியா இருக்கும்னு நெனச்சு உன்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்..

இங்கதான் நிறைய ஹாஸ்பிடல் இருக்குல்ல, அதுல ஏதாவது ஒன்றிலே நர்ஸ் வேலை கிடைச்சுடும். அப்ளிகேஷன் இப்ப எல்லாரும் ஆன்லைன்ல தான் பண்ண சொல்றாங்க. அதுக்கு தான் இந்த ஸ்மார்ட்போன்..” விரிவாக தங்கை சொல்ல ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டான்.

ஏற்கனவே கொஞ்ச நாட்களாக அவனுக்கு தன்னுடைய கல்யாணத்துக்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதில் சற்றே கவலை இருந்தது..

இருவரும் ஐடி பீல்டு, வேலைக்கு சென்றால் பிள்ளையை வளர்ப்பது எப்படி..? வீட்டில் உள்ள பெரியவர்களை பார்த்துக் கொள்வது எப்படி..? எல்லாவற்றிற்கும் வேலையாட்களை நம்பி இருக்க வேண்டும். அம்மாவுக்கு இப்பவே முடியவில்லை. இதேபோல் நாளைக்கு நாமும் பணம், பணம் என்று இருந்து விட்டு ஆரோக்கியத்தை தொலைத்து விட்டால், தங்களை பார்த்துக் கொள்ளபிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள எதற்கும் ஆளே இல்லாத சூழ்நிலையும்அதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்து போயிற்று.

இருவர் வேலைக்குப் போக வேண்டும் என்ற அத்தியாவசியம் உள்ள குடும்பங்களுக்கு அது சரி. தனக்கு நல்ல சம்பளம் இருக்கிறது. இன்னொரு சம்பளம் வந்தால் அதிகப்படியான செலவு தான். ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு பணத்தை சேர்த்து வைத்து என்ன பண்ண..?” என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான். அதிலும் வெளிநாட்டில் இருந்தால் இங்கே குடும்பத்தைக் கவனிக்கவே முடியாது..

அங்கும் குழந்தைகளை வளர்க்க தன்னுடைய பெற்றோரால் முடியாது. சவீதாவின் அம்மா அப்பாவையே  சார்ந்திருக்க வேண்டும்.

அதை விட இந்தியா வந்து விட்டால் இங்கே இருவர் பெற்றோரும் இருப்பதால் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். நாளைக்கு சவீதாவை பார்க்கும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 11 சராசரி: 4.6]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

24) என்னுயிர் நீதானே

5 – 💙 உறங்காத நேரமும் உன் கனா இரண்டாம் பாகம்