in ,

1 – 💙உறங்காத நேரமும் உன் கனா பாகம் 2

பொன்னிறமாய் பூமிதனில் தன் கீற்று சிறகுகளை வீசிய கதிரவன், சிறிது சிறிதாய் சூழ்ந்திருக்கும் பனி மூட்டங்களை ஆக்கிரமிக்கும் இளங்காலை பொழுது. 

முந்தைய நாள் நேர்ந்த வேலைப்பளு காரணமாக மருத்துவமனையில் இருந்து விட்டு, அப்பொழுது தான் மகிழுந்தில் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான் யுவன். 

செல்லும் வழியில் அவன் கண்ட காட்சியில் தன்னிச்சையாக பிரேக்கை அழுத்தியவனின் கால்கள் சாலையோரத்தில் நின்றிருந்த இரு பெண்களை நோக்கி நடையிட்டது.

அவர்கள் ஸ்கூட்டியில் கொண்டு வந்த ஒரு அட்டைப்பெட்டி ஏதோ ஒரு கார்காரன் இடித்ததில் கீழே விழுந்திருக்க, இரு பெண்களும் அதனை தூக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

யுவன் தான் அவர்களை நெருங்கி, “என்னமா ஆச்சு? நீங்க தள்ளுங்க நான் தூக்குறேன்” என்று அவர்கள் கேட்கும் முன் உதவி செய்ய விழைந்தான். அதில் ஒருவள் சிறு புன்னகையுடன் “தேங்க்ஸ் சார்…” என்று ஆரம்பிக்கும் போதே மற்றொருவள், “தேவையில்லை சார். நாங்களே பார்த்துப்போம்!” என முகத்தில் அடித்தது போல் கூறி, அவளின் தோழியிடம் “தூக்குடி!” என்று பணித்தாள்.

பின் இருவருமாக அந்த பெட்டியை வண்டியில் வைத்து விட்டு, இவனை திரும்பி பாராமல் பறந்து விட்டனர். யுவனுக்கு தான் சிறிதாய் புன்னகை மலர்ந்தது. அதே புன்னகையுடன் வீட்டிற்கு வந்து ஷூவை கழட்டிக்கொண்டிருந்தவனின் இதழ்கள் தன்னிச்சையாக “சிங்கப்பெண்ணே” பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. 

உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இணையாதே

அக்கினி சிறகே
எழுந்து வா
உலகை அசைப்போம்
உயர்ந்து வா
அக்கினி சிறகே
எழுந்து வா….ஆ….ஆஅ…..

என்று தன் போக்கில் சற்று சத்தமாகவே பாடிட, அப்பொழுது தான் உறக்கம் கலைந்து வெளியில் வந்து அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்த யுவனின் செல்லப் பெண் ஷிவனியா, “ம்ம்க்கும்… இங்க தூக்கத்துல இருந்து எந்திரிக்கவே கடுப்பா இருக்காம்… இதுல எழுந்துவா எழுந்துவான்னு ஏன் டாடி காலையில கத்திட்டு இருக்கீங்க…” என்றாள் கன்னத்தில் கை வைத்து.

அதில் பதின்மூன்று வயதேயானாலும் அவ்வீட்டில் அனைவர்க்கும் மதி மந்திரியாய் திகழும் தன் மகளை லேசாய் முறைத்தான் யுவன். 

“சரி எதுக்கு இந்த மோட்டிவேஷனல் சாங்?” என அவள் வினவ, அக்கேள்வியில் மீண்டும் அவன் இதழ்களை விரித்து, “அதுவா… வரும் போது ஒரு பொண்ணை பார்த்தேன். அந்த பொண்ணை பார்த்ததும் இந்த பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு…” என்றான் எதார்த்தமாக.

“ஓ…” என தன் உதட்டை குவித்த ஷிவனியா, “என்ன அந்த பொண்ணுக்கு நம்ம அம்மா வயசு இருக்குமா?” என அவனை ஆழம் பார்த்தாள். அவனோ “நான் சொன்னது சின்ன பொண்ணு. உன் அம்மா ஆண்ட்டி ஷிவா…” என்றான் குறும்பாக. அவளோ சற்றே முறைத்து, “ஹோ… அப்போ என் வயசு இருக்குமா?” எனக் கேட்டாள் விடாமல்.

யுவன் தான் நன்றாக சிரித்து, “ஷிவா… நான் பேசுறது பொண்ணை பத்தி அந்த லிஸ்ட்ல நீயும் உன் அம்மாவும் வரமாட்டீங்க டியர்…!” என நக்கலடிக்க, ஷிவனியா மனதினுள் கறுவிக்கொண்டாள்.

“சரிய்ய்… அப்போ நம்ம சரண் அண்ணா வயசு இருக்குமா?” என பல்லைக்கடித்து வினவ, அவனும் “ம்ம் இருக்கும்” என்று விட்டு அறைக்கு சென்றான்.

“டோராம்மா… டோராம்மா! நான் சொல்றதை கேளுங்களேன். ப்ளீஸ்” என தன் தாய் மாயா மோகனாவின் பின் சற்றே கெஞ்சியபடி டிராக் ஷூட் சகிதம், இறுகிய மார்புகளுடனும் குறும்பு பார்வைதனையும் ஒருங்கே கொண்டு ஜாகிங் சென்று கொண்டிருந்தான் சரண். 

அவனின் ஆறடி உயரமும், கட்டுக்கோப்பான தேகமும், வழித்து ஷேவ் செய்த தாடியும் சற்றே முறுக்கான மீசையுமே தான் ஒரு போலீஸ்காரன் என்று பறைசாற்ற, “மா…” என்று மீண்டும் அழைத்தான்.

அதில் ஓட்டத்தை நிறுத்த மாயா, “என்னடா அம்மா அம்மான்னு ஏலம் விட்டுட்டு இருக்க…? நீ பண்ண வேலைக்கு உன்ன தூக்கி போட்டு மிதிக்கணும்…” என்றாள் சற்றே கோபமாக.

அவனோ சிறு வயதில் பார்த்தது போன்றே, முகத்தை தாழ்த்தி விழியை மட்டும் உயர்த்திக்கொண்டு அவளை பாவப்பார்வை ஒன்றை பார்க்க, அதில் அவளுக்கு தான் கோபத்தையும் மீறி சிரிப்பு பீறிட்டது. 

“இத்தனை வருஷம் ஆகியும் இந்த பார்வையை மட்டும் மாத்த மாட்டியா நீ?” என அவன் காதை பிடித்து திருகியவள், “கஷ்டப்பட்டு நீ எடுத்த முதல் கேஸ்லயே நகை கடையில கொள்ளை அடிச்சவனை ஸ்மார்ட்டா கண்டுபிடிச்சுட்டு, கடைசியில அவன் சூழ்நிலை அதான் கொள்ளையடிச்சான்னு நீயே அவனுக்கு லாயர் ஏற்பாடு பண்ணி அவனை பெயில்ல எடுத்திருக்க. ஆர் யூ மேட்?” என விழிகளால் எரித்தாள்.

அவன் பதில் கூறாமல் நின்றதில், மேலும் கடுப்பானாவள், “உன்னை டிரான்ஸ்பர் பண்ணனும் டிபார்ட்மென்ட்ல பேசுனாங்க. நான் தான் அதை ஸ்டாப் பண்ணி வைச்சிருக்கேன். நீ இப்படி பதில் சொல்லாம நின்னா நானே உன்னை ஏதாவது தண்ணியில்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ண வேண்டியது இருக்கும் சரண்” என்று அழுத்தமாய் எச்சரித்தாள்.

சரணோ, “டோராம்மா. சட்டம் வெறும் தப்பு பண்றவங்களை தண்டிக்க மட்டும் தானா? அவங்களை திருத்துற கடமையும் நமக்கு இருக்கு தான? வெறும் தண்டனை மட்டும் வாங்கி குடுத்து ஜெயில்ல போட்டு, அவன் வெளியில வந்ததும் மறுபடியும் பெரிய தப்பு பண்ண நினைக்க மாட்டானா? சூழ்நிலையால தப்பு பண்றவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படி தன்னை மீறி, தன் குடும்பத்தை காப்பாத்த நினைச்சு தப்பு செஞ்சவங்களை நான் தண்டிக்க நினைக்கல. நியாயமான காரணம் இருந்தா…” என அவன் தன் கம்பீர குரலில் பேசிக்கொண்டே போக, மாயா அவனை தடுத்தாள்.

“லுக் சரண்! யுவா பையன் மாதிரி பேசாத. ஐ பி எஸ் ஆபிசர் மாதிரி பேசு. தெரிஞ்சு பண்ணாலும், தெரியாம பண்ணாலும் சின்னதா பண்ணாலும் பெருசா பண்ணாலும் தப்பு தப்புனு தான். அன்னைக்கு ஒரு பொண்ணை டீஸ் பன்னுன்னான்னு ஒருத்தனை போட்டு நாய் அடிக்கிற மாதிரி அடிச்சீல. அதே மாதிரி தான் எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணனும். அதென்ன நியாயமான தப்பு நியாயம் இல்லாத தப்புன்னு பிரிச்சு பாக்குறது…?” என்று அவள் பேச பேச, சரணின் முகம் தான் இறுகியது. 

ஏதேதோ நினைவுகள் அவனை வாட்ட, அவன் முக மாற்றத்தை உணர்ந்த மாயா, சட்டென “சரி அதை விடு! எனக்கு ஏதோ சப்ரைஸ் இருக்குன்னு சொல்லிட்டு இருந்த என்ன அது?” என பேச்சை மாற்றினாள்.

அதில் அவனும் அடுத்த கணம் தன் பாவனையை மாற்றிக்கொண்டு குறும்பாக, “அஸ்கு புஸ்கு அதை இப்போ சொல்ல மாட்டேனே” என வீட்டை நோக்கி ஓட, “டேய் டேய்… சொல்லுடா. என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது. ப்ளீஸ்” என கெஞ்சிக்கொண்டே வீட்டிற்கும் வந்து விட்டாள்.

யுவனின் குடும்பத்தினர், மீண்டும் அமெரிக்காவில் வியாபாரம் செய்ய கிளம்பி இருக்க, பாட்டி காமாட்சியும் அவர்களுடன் பாதி மாதமும் இந்தியாவின் பாதி மாதமும் இருந்து விடுவார். இப்போது தான் அவரும் அமெரிக்கா சென்றிருக்க, தன் மனைவியும் மகனும் வருவதை கண்ட யுவன், “என்ன ரெண்டு பேரும் ஓடி ஓடி நல்லா இருந்த ரோடை பள்ளமாக்கிட்டு வந்துட்டீங்களா?” என கேலியாய் வினவ, மாயா தான் அவனை முறைத்தாள். 

“ப்ச்… யுவா. இவன் சர்ப்ரைஸ் என்னன்னு சொல்லவே மாட்டுறான். நீயாச்சு கேளுடா” என முகத்தை சுருக்க, யுவனோ “ஏன்டா என் டோராவை கெஞ்ச வைக்கிற. ஒழுங்கா சொல்லு” என்றான் சரணை கண்டு. 

அவன் தான் உதட்டைக்கடித்து வசீகரமாய் புன்னகைத்துக்கொண்டு, “சரி சரி ரெண்டு பேரும் அழுவாதீங்க சொல்லிடுறேன். அடுத்த மாசம் உங்களோட 15த் வெட்டிங் டே வருதுல. அதை க்ராண்ட் ஆ செலெப்ரெட் பண்ணலாம்ன்னு இருக்கோம். வைபவ் மாமாவும் பிரணவ் மாமாவும் அந்த வேலையில தான் பிசி…” என்று கண் சிமிட்டனான்.

அதில் யுவன் விழி விரிக்க, மாயாவோ “அடிச்சு மூஞ்சை திருப்பிருவேன்… யாரை கேட்டு 15 த் வெட்டிங் டே ன்னு சொல்ற…” என்று கோபத்தில் பெருமூச்சுக்கள் வாங்க, சரணோ திரு திருவென விழித்தான். 

“நான் பத்தாவது இருந்து அவனை லவ் பண்றேன். ஒழுங்கா 25 த் வெட்டிங் டேன்னு சொல்லு” என்று சிலுப்பிக்கொண்டு கரெக்ஷன் செய்ய, யுவனோ ‘இவளை வைச்சுக்கிட்டு’ என தலையில் அடித்தான். சரண் தான் கேலியாய் புன்னகைக்க, அப்போது அங்கு ஷிவனியா, “ஆமா… நீங்க தான் சொல்லிக்கணும் 25த் அனிவர்சரின்னு. நீங்க வெட்டிங் டேக்கு பிளான் பண்றீங்க அப்பா அவரு வெட்டிங்க்குல பிளான் பண்றாரு…” என்ற இடுப்பில் கை வைத்து யுவனை மாட்டி விட்டாள்.

மாயா தான் புரியாமல் பார்க்க, “ம்மா… அப்பா காலையில ஏதோ பொண்ணை பார்த்தாராம். அதுவும் உன்னை மாதிரி என்னை மாதிரி இல்லையாம். அவங்க மட்டும் தான் பொண்ணாம். இதெல்லாம் நீ கேட்காம இப்போ தான் படம் ஓட்டிட்டு இருக்க…” என்று நாரதர் வேலையை பார்த்தவள், “சரண் அண்ணா, உனக்கு அப்பா பொண்ணு பார்த்துருப்பாருன்னு பார்த்தா, அவருக்கு பாக்குறாரு நீ விட்டுடாத…” என நல்ல பிள்ளையாய் கூறி விட்டு யுவன் அடிக்கும் முன் அவளறைக்கு ஓடி விட்டாள்.

 மாயா, சரணின் பார்வை தான் யுவனை கூர்மையாக மொய்த்திட, “ஏய்… நீங்க ரெண்டு பேரும் ஏன் என்னை இப்படி பாக்குறீங்க. டோரா… உனக்கு தெரியாதா நான் ஆஞ்சிநேயர் பக்தன்டி” என முதல் முதலில் அவளை பார்த்த போது சொன்னதை கூற, அவளுக்கு தான் புன்னகை அரும்பியது.

“தேஜு… உனக்கு டைம் ஆகுதுல. இன்னும் என்ன பண்ற?” என்ற குரலில் “இதோ கிளம்பிட்டேன் ஷிவ்…” என்ற தேஜுஸ்ரீ அவசரமாக கைப்பையை எடுத்தாள். 

அதற்குள் அங்கு வந்த அவர்களின் நண்பன் தர்ஷன், “தேஜு! ஃபர்ஸ்ட் ஷோ நல்லா பண்ணு டென்ஷன் ஆகாத. சரியா…” என்று தைரியம் கூற, “அப்போ செகண்ட் ஷோ டென்ஷனா பண்ணா பரவாயில்லையா தர்பூஸ்…” என கேலி செய்த படி அங்கு வந்தான் யாதவ். அவர்களின் மற்றொரு நண்பன்.

தர்ஷன் தான், “உனக்கு செருப்படி குடுத்தா பரவாயில்லையா?” என முறைக்க, சிரிப்பை அடக்கிய தேஜு “சரி சரி சண்டையை ஆரம்பிக்காதீங்கடா… ஷோ கேட்டு முடிச்சதும் எனக்கு போன் பண்ணி சொல்லிடுங்க. இல்லைன்னா எனக்கு படபடன்னு இருக்கும் ஓகே வா?” என்றவளின் குரலில் லேசாக பயம் தெரிந்தது.

அதில் இருவரும் அவளை சமன் செய்திட, “சரி நான் கிளம்புறேன்” என்றவள், “ஷிவ் நான் கிளம்பிட்டேன்…” என்று அறை நோக்கி கத்தினாள். அவள் அழைப்பில், “ஹே இரு இரு தேஜு…” என்றபடி வெளியில் வந்தாள் ஷிவ் என அழைக்கப்பட்ட ஷிவானி. 

செந்நிற காட்டன் புடவை பொன்னிற மேனியை தடவி இருக்க, அப்போது தான் குளித்து இருந்தவளின் கூந்தலில் இருந்து சொட்டு சொட்டாய் சிந்திய சிறு நீர் துளிகள் அவளின் பளிங்கு முகத்தில் பரவி மேலும் வனப்பை கொடுத்தது. 

புன்னகைக்க கூட விரிய விரும்பாத இதழ்கள். தன் நண்பர்களிடம் மட்டுமே இன்முகம் காட்டும் மலர்ந்த குறுநகையுடன் தேஜுஸ்ரீயிடம் வந்தாள். 

அவள் நெற்றியில் திருநீர் வைத்து விட்டு, “பயப்படாம பேசு தேஜு. உனக்கு பேசவா சொல்லி தரணும் அதெல்லாம் சூப்பரா பண்ணிடுவ. ஆல் த வெரி பெஸ்ட் சோல் மேட்!” என அவளை கட்டிக்கொண்டாள் ஷிவானி. 

அதில் யாதவ், “ஷிவ் எனக்கு திருநீர் வைக்கல?” என உதட்டை பிதுக்கி கேட்க, “நீ மொதோ குளிச்சியா?” என போலியாய் கடிந்தவள், சிரிப்புடன் அவனுக்கு திருநீர் இட, தர்ஷன் தான், “இப்ப எதுக்கு நீ இவ்ளோ பயபக்தியா இருக்க?” என வினவினான்.

யாதவோ, “பின்ன இப்ப தேஜு பேசப்போற விஷயத்துக்கு, அமைதியே உருவா இருக்குற ஷிவானி கொஞ்ச நேரத்துல நமக்கும் சேர்த்து தான மந்திரிச்சு விட போறா. அதான் இப்பவே பிரிப்பேர் ஆகுறேன்” என்றான் காலரை தூக்கி விட்டு.

அக்கூற்றில் தர்ஷனுக்கும் வயிற்றில் புளியை கரைக்க, “ஷிவ் எனக்கும் திருநீர் வைக்கணும்!” என தலையை அவளருகில் நீட்டினான். அவள் தான் இவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்து “என்ன ஆச்சு இவனுங்களுக்கு?” என குழம்பியபடி திருநீரை வைக்க, தேஜு வோ “ஓவர் ஆக்ஷன் பண்ணி எல்லாத்தையும் கெடுத்துடாதீங்க… வெண்ணைங்களா!” என அடிக்குரலில் மிரட்டி விட்டு சென்றாள்.

 “ஹாய்! ஹலோ! வெல்கம் தோழமைகளே…!  இது சென்னை எஃப்.எம் நூற்றி மூன்று புள்ளி ஏழு… உங்ககிட்ட பேசுற நான் உங்க தேஜு! லேசாய் மேகம் வெளுத்திருக்கும் இந்த சில்லென்ற காலை வேளையில ஏழு தேஜூன்னு ரைமிங்கோட என்னோட முதல் ஷோவை ஆரம்பிக்கிறேன்.

இன்னைக்கு ரொம்பவே ஸ்பெஷலான நாள். வாழ்க்கையில 100 ல 90 பேர் இந்த நாளை தன்னையே அறியாத ஒரு சிலிர்ப்போட கடப்போம். அதாங்க! 

நண்பர்கள் தினம். ஃப்ரெண்ட் ஷிப் டே…! சொல்லும் போதே நம்மளோட நினைவுகள்ல புதைஞ்ச பல நட்பு முகங்கள் நம்ம கண்ணு முன்னாடி ஒரு செகண்ட் வந்துட்டு போவாங்க இல்ல? 

இப்போ நம்ம பேச போறதும் நம்ம நண்பர்களை பத்தி தான். அதாவது நம்மகிட்ட இருந்து தொலைஞ்சு போன நண்பர்களுக்கான தேடல் பயணத்தை பத்தி தான் நம்ம பேச போறோம்.

 உடனே நான் ஸ்கூலுக்கே போகல… காலேஜே முடிக்கல… எனக்கு ஃப்ரெண்ட்ஸ்ஸே இல்லைன்னு நினைக்காதீங்க தோழமைகளே. உங்க வாழ்நாள்ல யாரோ ஒருத்தரை மனசுல வெறும் நட்போட மட்டும் கடந்து இருப்பீங்க. 

அது ரயில் ஸ்நேகமா இருக்கலாம். ட்யூசன் பிரெண்ட்ஸ்ஸா இருக்கலாம். வேலை பார்த்த இடத்துல இருந்து திடீர்னு காணாம போன நண்பரா இருக்கலாம். 

ஸ்கூல் பிரெண்ட், காலேஜ் ப்ரெண்ட், அப்படின்ற வகையான நண்பர்கள் மட்டும் நம்ம மனசுல ஒரு அலையை அடிச்சுட்டு போறது இல்ல. இதெல்லாம் தாண்டியும்  சில நட்பு வகைகள் இருக்கு” என இனிமையான குரலில் தேன் சிந்த தன் பேச்சில் கேட்பவர்களை கட்டி  இழுத்துக்கொண்டிருந்த ரேடியோ ஜாக்கி தேஜுஸ்ரீயின் வார்த்தைகள் இப்போது சற்றே தேய தொடங்கியது.

“எங்கயோ ஒரு முறை பார்த்த முகமா இருக்கலாம். ச்சே இவரு கூட நம்ம ஃப்ரெண்ட் ஷிப் வச்சுக்கணும்ன்னு உங்களை நினைக்க வைச்சவங்களா இருக்கலாம். உங்களோட கஷ்டமான நேரத்துல உங்களுக்கு உறுதுணையா இருந்து இருக்கலாம். ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கு உதவி செஞ்சவங்களா இருக்கலாம். அந்த உதவி உங்க வாழ்க்கையில பெரிய  மாற்றத்தை குடுத்து இருக்கலாம். 

இப்போ வரை அந்த நண்பரோட அறிமுகம் உங்க மனசுல ஒரு மெல்லிய சாரலை கூட கொடுக்கலாம். அப்படிப்பட்ட யாரோ ஒருத்தர் உங்க வாழ்க்கையில ஒரு நாளாவது உங்களை கடந்து போயிருப்பாங்க. உங்களை ஏங்க வைச்சுருப்பாங்க. தினம் தினம் அவங்களை பார்க்க மாட்டோமோன்னு, ஒரு தேடலை உருவாக்கி இருப்பாங்க.

வாங்க நட்புகளே… உங்களோட தேடல் பயணம் யாரோடதுன்னு என்னோட பகிர்ந்துக்கோங்க. நம்ம முதல் ஷோவோட முதல் காலரை பார்க்கறதுக்கு முன்னாடி ஹாரிஸ் ஜெயராஜ் இசையில நண்பன் படத்தில இருந்து ஒரு பாடலை கேட்டு முடிங்க. நான் பேசிட்டு இருக்குறது உங்க தேஜு ஃப்ரம் நூற்றி மூன்று புள்ளி ஏழு…” என பாடல் டிராக்கில் மாற்றி விட்டவள் சீட்டின் பின்னால் சாய்ந்து ஆசுவாசமானாள். கண்ணில் ஒரு துளி நீர் துளிர்த்தது.

என் ஃபிரண்ட போல
யாரு மச்சான் 
அவன் ட்ரெண்ட
எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என்ன எண்ணி எண்ணி ஏங்க
வச்சான் நட்பால நம்ம நெஞ்ச
தச்சான் நம் கண்ணில் நீர
பொங்க வச்சான்… 

ஏனோ இவ்வார்த்தைகள் உறைந்திருந்த சில நினைவுகளை தட்டி எழுப்பியது தர்ஷனுக்கும் யாதவிற்கும். இருவருமே காயங்களை மறைத்துக்கொண்டு தேஜுஸ்ரீக்கு போன் செய்தனர்.

“வாவ்… கலக்கிட்ட தேஜு. முதல் ஷோவே அடி பொலி…” என தன் நண்பர்களின் உற்சாக வார்த்தையை கேட்ட தேஜு மகிழ்ந்து “எங்க அவள்…? ஷோ கேட்டாளா?” என்று வினவினாள்.

அதில் முகம் சுருங்கிய தர்ஷன், ஷிவானியின் அறையை ஒரு முறை நோக்கி விட்டு, “ரேடியோவை சத்தமாக தான் வைச்சுருந்தேன் எப்படியும் கேட்டுருப்பா…” என்றிட, அதற்குள் யாதவ் “ஆமா! ஆமா! கேட்டுருப்பா. நீ மறைமுகமா சரண் பத்தி பேசுனதுல செம்ம காண்டுல இருப்பா. அநேகமா இது தான் உனக்கு முதலும் கடைசியுமான ஷோவா இருக்கும்” என கிளுக் என சிரித்து இருவரின் கோபத்தையும் பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

இவர்களின் எண்ணங்களுக்கு காரணமாக ஷிவானி தன் அறையில் கட்டிலில் அமர்ந்து எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள். “என் தேடல் எனக்கு எப்போவுமே முடிவுக்கு வரவேண்டாம். என் வாழ்க்கையில அந்த ஒரு நட்பு திரும்ப வரவே வேணாம். எங்க இருந்தாலும் என்ன தேடி வந்துடாத சரா…!” என தன் எண்ண ஓட்டத்தில் எழுந்த வலியில் கன்னங்கள் ஈரமாகி இருந்தது பெண்ணவளுக்கு. 

அவசரமாய் காக்கி உடையில் உண்டும் உண்ணாமலும் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்த சரணின் ஓட்டம் இந்த ரேடியோ அலை பெண்ணின் வார்த்தைகளால் தடைப்பட்டது. கூடவே, பத்து வயதான அவளது மலர் முகம் அவனின் விழி மணியில் உறுத்தி திரவ அலைகளை உருப்பெற செய்தது. 

“என்னோட தேடல் எப்போ முடிவுக்கு வரும்ன்னு தெரியல. ஆனால் நிச்சயமா நான் தொலைச்ச நட்புகளை மறுபடியும் கண்டுபிடிப்பேன். என் உணர்வுல கலந்தவளை என் வாழ்க்கையாக்குவேன்… எங்க இருக்க என் டெடி பியர்?” என கேள்வியாய் தன் உள்ளங்கையில் இருந்த தழும்பை வருடியவனின் இதழ்கள் லேசாய் ரசனையில் விரிந்தது.

கானா காண்போம் வா! 
மேகா

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 4.5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Megavani

Story MakerContent AuthorYears Of Membership

17) என்னுயிர் நீதானே

காற்றே என் வாசல் வந்தாய் 5