in

தீர்ப்புகள் திருத்தப்படலாம் -1

 

 தீர்ப்புகள் திருத்தப் படலாம் 

 

அத்தியாயம் 1

“மிஸ். சக்தி யூ ஆர்  செலக்டட்..” அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை அவளுக்கு.. 

“தேங்க்யூ தேங்க்யூ சோ மச் சார்..” கைகுவித்து நன்றி சொன்ன அந்த சிறிய பெண்ணை பார்த்து  “காம் டவுன்.. யூ டிஸர்வ் இட்..” என்ற வார்த்தைகள் வந்தது நடுவர் இடமிருந்து..

மாவட்ட தலைமையகத்தில் வைத்து நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரில் அவளும் ஒருத்தி..  கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் என்பது எல்லா விதக் நிறுவனங்களிலும் அடிப்படை தேவை என்பதால் சிறு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய ஆட்களை தேர்வு செய்ய வந்து இருந்தன

ஓரளவு பெயர் பெற்ற ஆல்பா கம்ப்யூட்டர் டிசைனர்ஸ் என்ற நிறுவனம் குறைந்த அளவு சம்பளத்தில் வேலையாட்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அங்கு வந்திருந்தது.. 

அவர்கள் நடத்திய இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்றவள் தான் சக்தி.. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திருவிழாவிற்கு  அப்படித்தான் அந்த நிறுவனம் வந்து இருந்தது. தகுதி பெற்ற ஐந்து நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

“உங்க எல்லோருக்கும் அழைப்பு வரும். அதுக்குள்ளே  நீங்க கடைசி செமஸ்டர் தேர்வு எல்லாம் பாஸ் பண்ணி இருக்கணும்..” என்று கூறி மற்றவர்களின்  முகவரியை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார் அந்த நிறுவன் மேலாளர்.. சக்தியிடம் “நீங்க படிச்சது ஈவினிங் காலேஜ்.. அப்படித்தானே..?”

“ஆமா சார்.. முடிச்சு ஆறு மாசம் ஆச்சு.. எல்லாம் சர்டிபிகேட்டும் கொண்டு வந்திருக்கேன் சார்..”

“எஸ் பார்த்தேன். உங்களுக்கும் ஒரு வாரத்துல தகவல் சொல்றேன்..” என்று கூறி அனுப்பி வைத்தார்.

சுட்டெரிக்கும் வெயிலில் டவுண் பஸ்சுக்கு காத்து நின்று ஏறி வீடு வந்து சேர்ந்த போது மணி நான்காகி இருந்தது.. அவளது வீடு இருப்பது, தஞ்சாவூரின் எல்லைப் பகுதி.. நகரம் விரிவடையும் போது முளைத்த காலனியான ராஜேந்திர சோழன் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் அவர்களது ஒண்டுக் குடித்தனமும் ஒன்று.. கீழே வீட்டு உரிமையாளர் குடி இருக்க மாடியில் இருக்கும் மூன்று அறைகள் கொண்டது தான் அவர்களது வீடு..

“உஸ் அப்பாடா..” என்ற பெருமூச்சோடு உள்ளே நுழைந்தவளின் அரவம் தூங்கிக் கொண்டிருந்த தம்பி  தேவகரணை ஒன்றும் செய்யவில்லை.. ஆனால் அலுப்புடன் சாய்ந்து இருந்த  அம்மாவை எழுப்பி உட்கார வைத்தது.

“என்னடி இவ்வளவு நேரம்..? சாப்பிட வா..”  என்றழைத்து விட்டு சாப்பாடு எடுத்து வைத்தாள்.

“இண்டர்வியூ நல்லா செஞ்சியா..? என்ன சொன்னாங்க..? பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்  மகள் முகத்தை பார்த்தாள்.

“நல்லா செஞ்சேன்.. போய் சொல்றேன்னு சொல்லி இருக்காங்க..” என்றவள் மௌனமாக சாப்பிட்டு எழுந்தாள்.

“ம்கூம் கிடைச்சாலும் உடனே சொல்லிடவா போறே..?” என்ற  முணுமுணுப்புடன் உள்ளே சென்ற அம்மாவை பார்த்து வெறித்தாள் சக்தி..

அடுக்களை, அதற்கு அடுத்து ஒரு ஹால் ஹாலில் இருந்து மொட்டை மாடிக்கு ஒரு கதவு.. இந்த பக்கம் ஒரு படுக்கை அறை.. மொட்டை மாடியில் தனியாக பாத்ரூம், டாய்லெட் வசதி செய்து இருந்தார்கள்.. மொட்டை மாடியில் காற்று வரும் என்பதால் சாயந்திரம் ஆனதும் அங்கு வந்துவிடுவாள்.. சேரை போட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க உட்கார்ந்து விட, உள்ளே தம்பியும்  அம்மாவும் பேசும் சத்தம் கேட்டது..

“அம்மா ரூபா கொடு..”

“என்னடா சும்மா ரூபா கொடு கொடுன்னு கேட்டுட்டு இருக்கே..? யார் கிட்ட இருக்கு ரூபா..?”

“ஏன் அந்த மகாராஜா கொடுத்த பணம்  எல்லாத்தையும் நீ செலவழிச்சு இருக்க மாட்டியே..? உன் பெரிய மகளுக்கு கொஞ்சம் எடுத்து வைச்சு இருப்பியே.. அதுலே இருந்து கொடு..!”

“அதெல்லாம் இல்ல போடா.. டேய் உனக்கே இது நியாயமா இருக்கா..? ஒழுங்கா காலேஜ் படிச்சு முடின்னு சொன்னேன். அதுவும் கேட்கலை.. சம்பாதிச்சு நீ தரவேண்டியது போக என் கிட்ட ரூபா கேட்க..?”

“நான் எதுக்கு சம்பாதிக்கணும். அதுக்குத்தான் உன் தத்து புத்திரன் இருக்கானே..? அவன் சம்பாதிச்சு நிறையவே தரானே..? அக்கா  கல்யாணத்தை கூட அவன் கொடுத்த ரூபாயில் தான் முடிச்சே..? அப்புறம் என்ன..?”

“அது அவனோட கடமை.. அதனாலே செஞ்சான்..!”

“எதும்மா அவன் கடமை..? அவன் கிட்ட ரூபா வாங்ககாதீங்கன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன். கேட்கவே மாட்டியா நீ..?” இடையில் ஒலித்தது சக்தியின் குரல்..   

‘வந்துட்டாயா நம்ம வீட்டு நீதிபதி..” முணுமுணுத்த தம்பியை  பார்வையால் எரித்தாள்.

“கரண் நீ செய்யறது கொஞ்சம் கூட நல்ல இல்லை.. இது வரைக்கும் அவன் கிட்ட பணம் வாங்கினதே தப்புன்னு நான் சொல்றேன். இன்னும் நீ வாங்க சொல்லிட்டே இருக்கே.. அம்மா அக்கா கல்யாணம் தான்  முடிஞ்சாச்சு இல்ல..I இனி அவன்கிட்ட காசு வாங்கக் கூடாது.. ஆமா சொல்லிட்டேன்..”

“சரி வாங்க வேண்டாம். அப்ப நீ தருவியா..?” எகிறினான் கரன்..

“வீட்டுக்கு ஆம்பள புள்ள நான் தான்னு அப்பப்ப சவடால் விடுவியே. முதல்ல குடும்பத்தை காப்பாற்ற வழி பாரு. அம்மா உங்க கிட்டதான்  சொல்றேன், இது வரை அவங்கிட்ட வாங்கின பணம்  நியாயப்படி திருப்பிக் கொடுக்கணும். போனது போகட்டும் இனியாவது வாங்கறது நிப்பாட்டுங்க..”

“நாம என்ன வேணும்னா வாங்குறோம்..? நம்ம சூழ்நிலை அப்படி.. உன்னோட கல்யாணத்தை அப்புறம் எப்படி பண்றது..? இன்னும் இவன் படிப்பை முடிக்கணும். அவனுக்கு ஒரு வேலை கிடைக்கணும்.. அதுவரை அவன் கொடுத்துதான் ஆகணும்..”

“அம்மா என்ன  நியாயம் இது..? அவனுக்கும் அம்மா அப்பா இருக்காங்க.. கூட பிறந்த தங்கச்சி இருக்கா. கடமை இருக்கும்மா.. உன் சின்ன மகன் படித்து முடிப்பான்னு கனவுல கூட நினைக்காத.. கிடைச்ச வேலைய பாக்க சொல்லு.. எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்.. நிச்சயமா அவன் பணத்துல நான் பண்ணிக்க மாட்டேன்.. முதல்ல நான் ஒரு வேலைக்கு போகணும்.. அதுதான் என்னோட முடிவு..”

“நீ வேலைக்கு போய் இந்த குடும்பத்தை நடத்த பணத்தை  கொடுக்க பாரு. அதுக்கப்புறம் வேணா அவன் கொடுக்கிற பணத்தை வாங்கிக்கலை, போதுமா..!” எளிதாக சொல்லிவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.

கோணல் சிரிப்புடன் பின்னாலேயே சென்று அம்மாவை தொணப்பி ரூபாய் வாங்கிக்கொண்டு வெளியே சென்ற தம்பியை  பார்த்தாள்.. ‘திருந்தாத ஜென்மங்கள்’ அத்தனை ஆத்திரம் வந்தது. ஆனால் ஒன்றும் செய்ய  இயலவில்லை..

‘முதலில் வேலையில் சேர்ந்து கொள்வோம்’ என்று முடிவெடுத்தவள் தனது கையில் இருந்த புத்தகத்தில் கவனத்தை  செலுத்தினாள்.

தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில் உள்ள என்.ஜி.ஓ குடியிருப்பு காலனி. அதில் உள்ள தென்றல் இல்லம்.. 

சென்னையில் இருந்து அதிகாலையில் வந்து இறங்கிய சோமேஸ்வரன் என்ற ஈஸ்வர் மாடியில் இருந்த ஒற்றை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தான்..

அப்பா தரணிநாதன் ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர் உத்தியோகம். இந்த வருடம் ரிடையர்மென்ட்.. தங்கை மைக்ரோபயலாஜி போஸ்ட் கிராஜுவேட் இரண்டாம் ஆண்டு.. இன்னும் ஒரு வருசத்தில் அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் வீட்டில்.. அம்மா மணிமாலா இல்லத்தரசி..

இரவு வேலை பார்த்து விட்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தார் தரணிநாதன். அடுக்களையில் வேலையாக இருந்த  மாலா மகளிடம் காபியை கொடுத்து விட்டார்.  துண்டினால் முகத்தை துடைத்துக் கொண்டே காபியை வாங்கிக் கொண்டவர் மகளிடம் விசாரித்தார் . 

“என்னம்மா  உன்னோட அண்ணன் வந்து இருக்கானா..?”

“ஆமாப்பா, எப்படி தெரியும்..? அண்ணன் அதுக்குள்ளே இறங்கி வந்துருச்சா..?”

“அதான் வாசல்ல செருப்பு இருக்குதே..” என்றதும் ‘அதானே’ என்பது போல் பார்த்துவிட்டு திரும்பி  சென்றாள்.   

பதினோரு மணிக்கு கீழே இறங்கி வந்த மகனைப்  பார்த்து கேட்டாள் அம்மா.

“என்னடா சாப்பிடுறியா..?”

“முதல்ல காபி குடுங்க.. அப்பா வந்தாச்சா..?”

“ஆமாண்டா இப்பதான் வந்தார்.. சாப்பிட்டு படுத்து தூங்கியாச்சு.. உன்னை  தான் எதிர் பாத்துட்டு இருந்தாரு..!”

“எதுக்குமா..?”

“நம்ம நிரஞ்சனாவுக்கு ரெண்டு மூணு வரன் வந்திருக்கு.. அது விஷயமா உன்கிட்ட பேசணும்னு சொன்னார்..”

“அவளுக்கு படிப்பு முடிய இன்னும் மூணு மாசம் இருக்கேமா..”

“இப்ப பாக்க ஆரம்பிச்சா எப்படியும் ஒரு வருஷம் ஆயிடும்.. அதுக்குள்ள அவ படிப்ப முடிச்சிடமாட்டா..?”

“அவகிட்ட கேட்டீங்களா..?”

“இதுல கேட்க என்ன இருக்கு..? மாப்பிள்ளை அவளுக்கு பிடிச்சு இருக்கான்னு கேட்க வேண்டியதுதான்.. கல்யாணம் எப்ப பண்ணனும்னு  நாம தான் முடிவு பண்ணனும்.. அப்பா ரிட்டையர்ட் ஆக இன்னும் எட்டு மாசம் தான் இருக்கு. அதுக்குள்ள கல்யாணத்தை முடித்து விடலாம்னு பார்க்கிறார்..”

“சரிம்மா.. அப்பா எழுந்ததும் பேசுவோம்..” என்றவன் தனது வேலையை பார்க்கச் சென்றான்.

மாலையானதும் மகனை அழைத்த தரணிநாதன் “தம்பி எப்ப வந்த..?” என்று வாஞ்சையுடன் வினவினார்.. அவர் மகனை அழைப்பதே ‘தம்பி’ என்ற விளிப்பில் தான்.. ஒரு நாளும் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது.. 

பிள்ளைகள் மேல் அளவு கடந்த வாத்சல்யம் கொண்ட நாதன் மகளை ‘கண்ணு’ என்றுதான் அழைப்பார்.. ‘அப்பா பிரெண்ட்ஸ் முன்னாடி கண்ணுன்னு கூப்பிட்டு மானத்தை வாங்காதீங்க..’ என்று சொன்னாலும் அவரது அழைப்பு அப்படித்தான் இருக்கும்..

“கண்ணு, அவங்களுக்கு என்ன தெரியும்..? நீ என் அம்மாடா..” என்று சொல்லி விடுவார்..

“எப்படி இருக்கீங்கபா..?”

“நல்லா இருக்கேன்.. உக்காரு உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..”

“சொல்லுங்கப்பா..!”

“தம்பி பாப்பாவுக்கு ரெண்டு மூணு ஜாதகம் வந்திருக்கு.. அதுல ஒருத்தங்க ரொம்ப விரும்பி வர்றாங்க.. மாப்பிள்ளை அரசாங்க அதிகாரி உத்தியோகம். பர்ஸ்ட் க்ரூப் எழுதி அதுல கிடைத்த வேலை. பெரிய உத்தியோகம்.  எனக்கும் பிடிச்சிருக்கு.. ஜாதகம் பார்த்துட்டு பொருந்தி  இருந்தா பொண்ணு பார்க்க வரச் சொல்லலாம்னு நினைக்கிறேன்.. நீ என்னப்பா சொல்ற..?”

“தங்கச்சிக்கு பிடிச்சிருந்தா செய்யுங்கப்பா..”

“தம்பி என்னை  பத்தி உனக்கு தெரியும்.. நீ வேலைக்கு போன  நாள் முதலா உன்கிட்ட நான் எதுவும் கேட்டது கிடையாது.. என்ன சம்பளம்..? அதை நீ என்ன செய்ற..? அப்படின்னு.. எதைப் பத்தியும் விசாரித்தது கிடையாது.

ஏதோ என்னால முடிஞ்சது, என்னோட சம்பாத்தியத்தில் ஒரு வீடு கட்டி இருக்கேன்.. உங்க ரெண்டு பேரையும் படிக்க வைச்சிருக்கேன்.. பாப்பாவுக்கு முப்பது  பவுன் நகை வாங்கி வைத்து இருக்கேன்.. கல்யாணச் செலவுக்கு ஓரளவு பணம் இருக்கு.. இதை வைத்து சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.. உனக்கும் இந்த விவரம் எல்லாம் தெரிஞ்சு இருக்கணும். அதான் சொல்றேன்..”

“உங்களைப் பத்தி எனக்கு தெரியாதாப்பா..?  இதுக்கும் மேல என்ன செலவு வந்தாலும் பாத்துக்கலாம்பா.. என் கிட்டேயும் கொஞ்சம் பணம் இருக்கு.. எதுக்கும் நிரஞ்சனா கிட்ட கேட்டுட்டு செய்ங்கப்பா..”

‘நீயே அவளைக் கூப்பிடு..” என்றதும் அவளை அழைத்து வந்தான்.

“கண்ணு, அண்ணன் உன் கிட்ட சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். நீ என்னம்மா சொல்றே..?”

“நீங்க என்ன சொன்னாலும் சரிப்பா.. ஆனால் நான் படிப்பு முடிக்கணும்..”

‘கண்டிப்பாம்மா, நானும் அப்படித்தான் சொல்லப் போறேன்.. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே.. சாயந்திரமா அவங்களை வரச் சொல்லலாம்னு நினைக்கிறேன்..”

“ஏம்பா வீட்டுக்கு எதுக்கு வரச் சொல்லணும்..? பெரிய கோவிலுக்கு வரச்சொல்லுங்க.. நாம எல்லோரும் அங்கே போகலாம்.. ஒருத்தரை ஒருத்தர் முதல்ல பார்க்கட்டும். பிடிச்சு இருந்தா அதுக்கு அப்புறம் முறையா வீட்டுக்கு அழைச்சு பேசுங்க..”  

‘சரிப்பா அப்படியே சொல்லிடறேன்..” என்றவர் அவன் முன்னாலேயே அழைத்து சொல்லி விட்டார்.

வாரத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை என்றதும்  காலையில் தான் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் நினைவுக்கு வந்தது.

காலை சாப்பிட்டதும் அம்மாவிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.

“அம்மா ஒரு வேலையா வெளிய போயிட்டு வரேன். எதுவும் வாங்கிட்டு வரணுமா.? அப்படின்னா இப்பவே சொல்லிடுங்க, வரும்போதே வாங்கிட்டு வந்துடறேன்..” அம்மா கொடுத்த லிஸ்டை வாங்கி வைத்துக் கொண்டான்.

அப்பா வண்டி எடுத்து சென்று இருக்க நடந்து சென்று டவுன் பஸ்ஸில் ஏறி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றான்..

அதிகாலையிலேயே சக்தி வேலைக்கு கிளம்பி சென்று இருக்க, இரவு இரண்டாவது சோ படம் பார்த்துவிட்டு வந்த கரண் தூங்கிக் கொண்டிருந்தான். இப்போதைக்கு சமையல் பண்ண வேண்டாம் என்பதால் டிவி பார்த்துக் கொண்டிருந்த  சம்பூர்ணம் வாசலில் நிழலாடவும் திரும்பி பார்த்தாள்.. 

“வாப்பா ஈஸ்வர்..” புன்னகையுடன் வரவேற்றாள்.

“அம்மா நல்லா இருக்கீங்களா..?”

“ஏதோ இருக்கேன்பா.. உக்காருபா.. நீ நல்லா இருக்கியா..? எப்ப வந்த..?”

“நேத்து காலையில வந்தேன்.. இந்தாங்க இந்த மாச பணம்..”

பணத்தை அவன் வெளியில் எடுத்ததும் அவளது முகம் சந்தோசத்தில் மலர்ந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாள்.

“வேண்டாம்பா.. எப்ப பாத்தாலும் என் சின்ன பொண்ணு உன்கிட்ட ஏன் பணம் வாங்குறீங்கன்னு சத்தம் போடுது..!”

“பரவாயில்லை, வாங்கிக்கோங்க, அவங்களை இது பத்தி கவலைப் படாம படிக்க சொல்லுங்க.. கரண் எப்படி இருக்கான்…? அவன் காலேஜ் போறானா..?”

“போறான்பா.. நீ காபி குடிக்கிறியா..?” 

“வேண்டாம் கிளம்புறேன்..” என்று அவன் எழுந்திருக்கவும் உள்ளறையில் இருந்து கரண் எழுந்து வந்தான்.. ஈஸ்வரை கண்டு கொள்ளாமல் தன்னிடம் காப்பி கேட்டவனை சம்பூர்ணம் கடிந்து கொண்டாள்.

“டேய் ஈஸ்வர் தம்பி வந்து இருக்கு.. வாங்கன்னு சொல்லு..” அம்மா சமாளிப்பது தெரிந்தது.

“ம்ம். வாங்க..” ஒப்புக்கு கேட்டான். அவனது அலட்சியம் புரிந்தாலும் ஈஸ்வர் தன்மையாகவே அவனிடம் பேசினான்.

“கரண் எப்படி இருக்க..? நல்லா படிக்கிறியா..?”

“ஆங் இருக்கேன்.”

“இது எத்தனாவது வருஷம்..?” அவனது கேள்வி கரணை எரிச்சல் படுத்தியது.

“கரண் நீ சீக்கிரமே டிகிரி முடிச்சிட்டு ஓரு வேலை தேடிக்கோ. அதுதான் உங்க குடும்பத்துக்கு நல்லது..”

“நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்.. எவன் வேலை தரேன்னு சொல்றான்.. என்ன படித்தாலும் வேலை கிடைக்க மாட்டேங்குது..”

“நீ நல்ல முறையில் படிச்சி முடிச்சேன்னா கண்டிப்பா வேலை கிடைக்கும்.. நல்ல மார்க் ஸ்கோர் பண்ண பாரு..”

“சும்மா அதையே சொல்லிட்டு இருக்கீங்க..? நீங்க பணம் கொடுக்கிறதுனாலேயா..? அது என்ன சும்மாவா கொடுக்குறீங்க..? நீங்க செஞ்ச தப்பை இப்படி பணத்தை கொடுத்து மறைக்கப் பார்க்கிறீங்க.. நாங்க மட்டும் நல்ல நிலையில இருந்தா உங்க பணத்தை வாங்கியா இருப்போம்..? மத்தவங்களுக்கு புத்தி சொல்றதுக்கு முன்னாடி அதுக்குள்ள தகுதி இருக்கான்னு முதல்ல நீங்க யோசிச்சு பாருங்க..” அவனது தெனாவெட்டான பதிலில் ஈஸ்வரின் முகம் கருத்தது..

“டேய் போய் முதல்ல முகம் கழுவிட்டு வா.. பேசத் தெரியாமல் பேசிட்டு..” மகனை விரட்டிய அம்மா, ஈஸ்வரை சமாதானம் செய்தாள்.

“சின்ன பையன் தம்பி.. கூறுகெட்டாப்ல பேசுறான்.. நீ மனசில் வெச்சுகாதே இந்த காபி குடி..” என்றவளிடம் மறுத்து விட்டு  வீட்டை விட்டு வெளியே வந்தான்..

கரணின் பேச்சினால் விளைந்த கோபம் மனமெங்கும் ஆக்கிரமிக்க, தனக்கு இது தேவையா என்று ஒரு பக்கம் மனம் இடித்துரைத்தது..

செய்து கொடுத்த சத்தியம் கையை  கட்டி போட்டது. கரண் வாயினால் பேசுவதை சக்தி இருந்திருந்தால் கண்ணாலேயே எரித்திருப்பாள்.. இவன் முதன் முதலாக பணம் கொடுக்க சென்றபோது அவள் பேசிய பேச்சுகள் இன்றும் ஓலிப்பது போலிருந்தது.. யாரிடம் இருந்தோ தப்பித்துக் கொள்வது போல் விரைந்து நடந்து பஸ் ஏறி கடைத்தெரு பக்கம் சென்றான். அம்மா கேட்ட சாமான்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றான்..

அவனது வாடிய முகத்தை பார்த்துவிட்டு தங்கை தான் கேலி செய்தாள்.

“என்னண்ணா..? அதுக்குள்ள சோக கீதம் வாசிக்கிற..? எப்படியும் கல்யாணத்துக்கு ஒரு வருஷம் ஆகும்.. அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போகமாட்டேன்…” 

“ஏய் வாயாடி, அப்பா முன்னாடி எதுவும் சொல்லாதே.. படித்து முடித்து வேலைக்குப் போன பிறகு கல்யாணம் வைக்கலாம்.. முக்கியமா பையனை  உனக்கு பிடிக்கணும்.. அதை மட்டும் பாரு. மத்ததை நாங்க பார்த்து  பாத்துக்குறோம்..” பாசக்கார அண்ணனாக சொல்லி விட்டு உள்ளே சென்றான்.

மாலை ஆனதும் குடும்பமாக கிளம்பி ஆட்டோ பிடித்து பெரிய கோவிலுக்கு சென்றனர்.. உள்ளே சென்று சன்னதியில் மூலவரை வணங்கி விட்டு வெளிப்பிரகாரம் வந்தனர்.. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சொன்ன நேரத்தில் வந்து விட தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டனர்.

விஜயகுமார் பார்க்க கம்பீரமாக இருந்தான். பதவிக்கு ஏற்ற ஆளுமையும் துடிப்பும் அவனிடத்தில் தெரிந்தது.. 

“ஐ அம் ஈஸ்வர்..” அறிமுகப்படுத்தி கையை நீட்டியதும் பளிச்சென்று சிரித்து தன்னுடைய பெயரை சொல்லி கையை பிடித்துக்கொண்டான். அடுத்து ஒரு கால் மணி நேரம் தங்களுடைய வேலையை பற்றி பகிர்ந்து கொண்டனர்.. 

விஜயகுமார் வீட்டில் அவனும், ஒரு தங்கையும்  என்பதால், தங்கை  வரவில்லை.. அவர்கள் மூவர் மட்டும் டிரைவரை அழைத்துக்கொண்டு வந்து விட்டனர்.

ஆக பெரியவர்கள் தனியாக பேசிக் கொண்டிருக்க இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.. நிரஞ்சனா அம்மாவுடன் நின்றுகொண்டிருந்தாள்..

தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே விஜயகுமாரின் பார்வை அவர்கள்  பக்கம் சென்று மீள்வதை கண்டான்.

“கொஞ்சம் இருங்க இதோ வரேன்..” என்று கூறிவிட்டு அப்பாவின் அருகில் சென்றான்..

“அப்பா ஒரு நிமிஷம் இங்க வாங்க..!”

“என்ன தம்பி..?”

“தங்கச்சியும் மாப்பிள்ளையும் வேணும்னா ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசட்டுமே.. ஒரு ரவுண்டு பிரகாரத்தை சுற்றி வரட்டும். நானும் கூட போயிட்டு வரேன்..” அவன் சொன்னதும் ஒரு நொடி யோசித்த தந்தை அதற்கு ஒப்புதல் அளித்தார். தங்கையின் அருகில் சென்று அவளை அழைத்துக் கொண்டு விஜயகுமார் பக்கம் வந்தான்.

“வாங்களேன், பிரகாரத்தை ஒரு ரவுண்டு சுத்திட்டு வரலாம்..” அவன் அழைப்பது தங்களுக்காக தான் என்பதால் அவனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

“நிரஞ்சனா இது விஜயகுமார்.. உன்னை பொண்ணு பாக்க வந்திருக்கார்..  அந்தக் காலம் மாதிரி பார்த்தவுடனே பிடிச்சு மாப்பிள்ளை சம்மதம் சொல்றது, அதற்கு மறுப்பு சொல்லாமல் பொண்ணு தலையாட்டுவது, இதெல்லாம் இப்ப  சரிப்படாது.. பத்து நிமிஷம் பேசி பாருங்க.. உங்க விருப்பு வெறுப்பு, ரசனை ஒத்துப் போய் பிடிச்சிருந்தா, சம்மதம் சொல்லுங்க.. நீங்க ரெண்டு பேரும் முன்னால போங்க..” என்றவன் அவர்களை முன்னே விட்டு சற்று தள்ளி பின்னே வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்து வந்தான்.

சுற்றுலா தலமென்பதால் எப்போதும் ஓரளவு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று சற்று அதிகமாகவே கூட்டம் இருந்தது.

வடநாட்டிலிருந்து வந்த கும்பல் ஒன்றுக்கு பிரகாரத்தில் நின்றுகொண்டு அந்தக் கோயில் வரலாறு பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள் சக்தி

தெளிவான ஆங்கில உச்சரிப்பில் விளக்க, இடையில்  அவர்கள் ஹிந்தியில் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

பொழுது போக்கிற்காக வேடிக்கை பார்த்தவன் நடுவில் நின்று கொண்டிருந்த சக்தியை பார்த்ததும் சற்றே அதிர்ந்தான். ஓரிரு முறைகள் பார்த்திருந்தாலும் அவளது கோபம் கொண்ட முகம் மட்டுமே அவனுக்கு பரிச்சயம்..

பெண்களில் சற்றே அதிகமான உயரம். அதிக வெளுப்பும் இல்லாது சிவப்பும் இல்லாத உடைத்த கோதுமை நிறத்தில், கச்சிதமான உருவ அமைப்பில், திருத்தமான முக வடிவில் பார்க்கும் எவரையும் அழகி என்று ஒத்துக் கொள்ள வைக்கும் தோற்றம். ஆனால் அந்த அழகை மட்டுப்படுத்தி காட்டுவது போல் ஒரு உடை. 

தீர்க்கமான பார்வையும், சுத்தமான ஆங்கிலமும், அறிவார்ந்த பதில்களும் அவளது திறமையை பறைசாற்ற சுற்றியிருந்த கூட்டம் மகுடிக்கு கட்டுண்ட நாகம் போல் அவளது பேச்சை கேட்டு மயங்கி நின்றது.. அவனது பார்வை படாத தூரத்தில் நின்று பேச்சை அவனும் கேட்டான்..

சோழர்கள் வரலாறு, ராஜராஜ சோழன், அவனது சிவபக்தி, அதற்கு ஆற்றிய தொண்டு, கோயில் பிறந்த கதை, அதை கட்டி முடிக்க அவன் ஆற்றிய பணிகள் அனைத்தும் சுருக்கமாக சுவைபட அவள் கூறிய விதம் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

அவள் வேலை செய்து தன்னுடைய சம்பாத்தியத்தில் தான் தன் படிப்பு மற்ற செலவுகளை சமாளித்துக் கொள்கிறாள் என்பது தெரியும்.. ஆனால் இந்த வேலை தான் என்பது இன்றுதான் தெரிந்தது.. தன்னை பார்த்தால் அவளுக்கு வரும் கோபம், அவளது வேலைக்கு இடைஞ்சல் ஆகிவிடக்கூடாது என்று அவள் கவனத்தைக் கவராத வண்ணம் கூட்டத்தைக் கடந்து நடந்தான்.

விஜயகுமாரும் தங்கையும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டே முன்னால் செல்ல, அவர்கள் இருவரும் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர்..  அவர்களை நெருங்கியதும் தங்கையின் பெயர் சொல்லி அழைத்தான்..

“என்ன நிரஞ்சனா பேசவேண்டியது பேசியாச்சா..?” அண்ணனின் நேரிடைக் கேள்விக்கு சற்றே வெட்கத்துடன் கூடிய தலையசைப்பே அவளிடம் இருந்து பதிலாக கிடைத்தது.

“சரி வாங்க போகலாம்..” பொதுவாக மூவரும் பேசிக்கொண்டே நடந்தனர். பெரியவர்கள் நிற்கும் இடம் வந்ததும் தங்கை அம்மா பக்கம் சென்று விட, விஜயகுமார் அவனது அப்பாவிடம் சென்று தனது சம்மதத்தை கூறினான்.

“எங்க பையனுக்கு சம்மதம்.. அப்புறம் இன்னொரு வேண்டுகோள். அது கூட இங்க வந்தப்புறம் தான் எனக்கு தோணுச்சு. எங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கிற விஷயம் தரகர் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன். உங்க பையனை அவளுக்கு பார்க்கலாம்னு நினைகிறேன்..” சுந்தரம் கூறியதும் நாதன் யோசித்தார்.

“இது உடனே பதில் சொல்ற விசயம் இல்லை. நாங்க வீட்டில் போயி கலந்து பேசிட்டு சொல்றேன்..” என்றவர் கைகுவித்து விடை பெற்றார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் விடை பெற்றுக் கொள்ளவும் விஜயகுமார், நிரஞ்சனா பார்வைகள் சந்தித்து மீண்டன.. அதைக் கவனித்த அண்ணனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 8 சராசரி: 4.8]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

16) என்னுயிர் நீதானே

36. எனதழகே[கா]