in , , ,

27. எனதழகே[கா]


அத்தியாயம் 27


உடன்பிறப்புகள் இருவரும் பேசி முடித்து, மழையில் நனைந்தவாறே வீடு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குச் சில நொடிகள் முன்னதாக வந்த நந்தன், தமக்கையிடம் அர்ச்சனை வாங்கிக் கொண்டே தலையைத் துவட்டிக் கொண்டிருந்தான்.

கணவனை விடுத்துச் சத்யாவை முறைத்த மஹா, “இவ்வளவு நேரமா என்ன தான் பேசினீங்களோ? நேரத்தோட வராம, இப்பப் பாருங்க மழையில நனைஞ்சிக்கிட்டு. நாளைக்கு ஊருக்கு வேறப் போகணும், நியாபகம் இருக்கா இல்லையா? இந்தாங்க டவல், போய்ச் சர்ட்டை மாத்துங்க சத்யா..” என்றவள் அவனிடமும் மனோவிடமும் துவாலையைக் கொடுத்துவிட்டு அறையை நோக்கி நடந்தாள்.

“இது உனக்கும் சேர்த்துதான்..” எனத் தமையனின் காதில் கிசுகிசுத்த சத்யா, “என்னடா மாப்பிள்ள உன்னையும் அர்ச்சனைப் பண்ணீட்டாளா உங்க அக்கா.?” என்றவாறே நந்தாவின் தோளில் கையிட்டு, அவனோடு பேசியப்படி நடந்தான்.

“அதெல்லாம் ஆச்சு ஆச்சு. ஏற்கனவே என்னை வறுத்ததால, உங்க மேல விழுந்த அனலோட தாக்கம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அதுனால தப்பிச்சீட்டீங்க மாமா..”

“சரி சரி விடுடா, மாமாக்காக இதுக்கூடச் செய்யக் கூடாதா? இந்நேரத்துல நீ எங்கப் போன?”

“மேகலா பிள்ள பால் கேட்டு வந்திச்சு, அதான் துணைக்குப் போய் விட்டுட்டு வந்தேன்..” என்றவனைச் சத்யா நம்பாமல் பார்க்க, “அட நிசமா மாமா..” என்றான் அவன். “சரி, வா நம்புறேன். என்ன இருந்தாலும் நாளைக்கு மச்சினன் ஆகப் போறவன். மலை ஏறப் போனாலும் மச்சினன் துணை வேணுமே..?” என மஹாவின் அறையை ஓரக்கண்ணால் பார்த்தவாறே அவன் கூற, அனிச்சையாய்ச் செவிகளில் விழுந்த இவர்களின் பேச்சை ஆராய்ந்து கொண்டிருந்தாள் மஹா.

தம்பியின் செயலைக் கண்டு சிரித்தவாறே மனோ அறைக்குள் நுழைய, கணவனுக்கான உடையை நீட்டினாள் அவள். படுக்கை வெறுமையாய் இருப்பதைப் பார்த்தவன், “ஶ்ரீ எங்க?”

“அத்தை மாமாக்கிட்ட இருக்கா. மழை வேற பெய்யிது, ஒரே ரூம்ல எப்படிப் படுத்துப்பீங்கன்னு கேட்டேன். பரலாயில்ல அட்ஜஸ்ட் செஞ்சிக்கிறோமுனு அத்தைச் சொல்லீட்டாங்க. அம்மா அப்பா எல்லாரும் ஒண்ணா தான் இருக்காங்க..”

“அப்ப சத்யா..?” எனக் கேள்வியாய்ப் பார்த்திட, “நந்தாக்கூடத் தங்கிக்குவாங்க. நீங்க பால் எதுவும் குடிக்கிறீங்களா? மழையில நனைச்சது, பசிக்க வேற செய்யும்ல..?” என்றவளுக்குத் தலையசைப்புடன் கூடிய புன்னகையைப் பதிலாகக் கொடுக்க, வெளியேறினாள் மஹா.

தம்பி, கொழுந்தன் என அவர்களுக்கும் கொடுத்துவிட்டு, மனோவிற்கும் எடுத்து வந்தாள். இன்னும் தலையையே துவட்டிக் கொண்டிருந்தவனிடம், “சட்டையை மாத்தீட்டுத் துடைங்க..” என்றவள் அங்கிருந்த மேஜையில் பால் குவளையை வைத்துவிட்டு, அறையைத் தாளிட்டுவிட்டுத் திரும்ப.. அவளை உரசியவாறு நின்றிருந்தான் மனோ.

“ஏ.. எ.. என்ன வேணும்?” என நாக்குக் குழற வினவியவளை ரசித்தவன், “நான் ஒண்ணுக் கேட்கிறேன் பதில் சொல்லுறியா..?”

கேள்வியாய்ப் பார்த்தவளின் சம்மதம் உணர்ந்து, “நான் உன்னை விட்டு விலகாம நெருங்கினக் காரணத்தைக் காலையில சொல்லீட்டேன். நீ ஏன், என்னோட தொடுகையை ஏத்துக்கிட்டன்னு சொல்லவே இல்ல..?”

மஹா அவனைத் திணறலுடன் பார்க்க, “நம்ம கல்யாணத்தப்ப தான் ரெண்டு பேரும் முதன்முதலா மீட் பண்ணோம், ரைட்?அதுக்கு முன்னாடிச் சின்னப் பிள்ளையில பார்த்தது, பெருசா எதுவும் பேசிக்கவும் இல்ல. சோ நியாபகம் இருக்க வாய்ப்பில்ல. என்கூடப் பேசிப் பழகாம, எதுவுமே தெரிஞ்சிக்காம உன்னால எப்படி அந்த லைஃப்ப அக்செப்ட் பண்ணிக்க முடிஞ்சது?”

அவள் அவனையே பார்த்திருக்க, “என்ன பதிலைக் காணோம்..?” என்ற மனோவின் சுவாசம் அவளின் முகத்தில் பட்டு, கழுத்தில் வழிந்து, தேகம் முழுவதும் பரவி சிலிர்ப்பூட்டியது. பாவையின் இமைகள் தானாய் கவிழ்ந்து கொள்ள, இமையோரம் ஒருதுளி நீர் வெளியேறிய நொடி அவ்விடம் தன் இதழ்களை ஒற்றினான் மனோ.

கணவனது தீண்டலைத் தாங்கிட இயலாது, “பரணி ப்ளீஸ்..” எனச் சற்றே அழுகைக் கலந்த அவளின் குரல் வெளிவர.. அந்தப் பிடிவாதக்காரனோ, “எனக்குப் பதில் வேணும்!” என்றான். அதற்கு மேல் அவன் அவளை நெருங்கவும் இல்லை, ஆனால் விட்டு விலகவும் இல்லை.

ஆசைகள் இருந்தாலும் மனதோடு சேர்த்துத் தேக உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருந்தான். ஐந்தாண்டுக் காலத் தனிமை, கனவில் மட்டுமே அவளுடன் கழிந்த நிமிடங்கள் என ஆடவனை உணர்வுகளின் எழுச்சியில் தொலைந்து விடாமல், தன்னிலையை விட்டு இறங்கிடாமல் திடத்தோடு எந்தச் சூழலையும் கையாளும் வலிமையை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

“சுமி..” என்றவனின் அழைப்புச் செவியைத் தாண்டி அவளின் உயிரை ஊடுருவ, பட்டென்று கண்களைத் திறந்தாள். கண்களில் சிரிப்புடன் அவன், “பதில்..?” என்றிட.. இயலாமையும் சினமும் ஒன்றுக்கொன்று அவளின் முகத்தில் போட்டியிட, “நீங்க என்னோட புருஷன். கழுத்துல இருந்த கயிறும், அந்த உறவும் போதுமானதா இருந்திச்சு. வேற எதுவும் தெரியணுமா..?” என அவனைத் தள்ளிவிட்டுச் செல்ல, சிரிப்புடன் நின்றிருந்தான் மனோ.

அவனை முறைத்துவிட்டு மஹா படுத்துக் கொள்ள, ஆடவனும் பாலை அருந்திவிட்டு  மேலுடையை அணியாமலேயே படுக்கையில் விழுந்தான்.

மனோவிற்குத் தன் தேகத்தில் இருக்கும் தழும்புகளைப் பெற்றவர்களிடம் கூடக் காட்ட விருப்பம் இல்லை. அதனால் ஓரளவு விபரம் தெரியத் துவங்கியதும்.. ஐந்து வயதில் இருந்து தானே குளித்துக் கொள்வான். உதவுவதாக உரைக்கும் தாய்த் தந்தையரை என்றும் அவன் அனுமதித்ததில்லை.

குளியலறையில் இருந்து உடையுடன் வெளிபருபவன், இடைப்பட்ட நேரத்தில் அதை மாற்றக்கூட மாட்டான். அப்படியே மாற்றும் தேவையெனினும் ஓய்வறையோ அன்றி எவரும் அற்ற அறையோ அவனுக்கு வேண்டும். திருமணத்திற்கு முன் சத்யாவும் அவனும் ஒரே அறையைப் பகிர்ந்திருந்தாலும், இரவில் கூட மேல் சட்டையுடனே உறங்கும் வழக்கம் கொண்டவன், அனல் கக்கும் அக்னி நட்சத்திர நாட்களில் கூட!

இன்று வரையுமே அப்படித்தான் மனோ. திருமணம் முடிந்த புதிதில் ஆசைக்கொண்ட மனம் தன் கட்டுக்குள் இருந்து வெளிவரத் துடிக்க, மனைவியின் முதல் பார்வையிலேயே வலியுடன் மீண்டும் கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டது.

அன்று காலையில் மஹாவிடம் பேசியதும், தம்பியுடனான உரையாடலுமாய் அவனுக்குள் இருந்த இறுக்கத்தைத் தளர்த்தியிருக்க.. மனைவியுடான தனிமையில் தன்னின் இயல்புடன் இருந்தான்.

சத்யா நந்தாவிடம் கூறியிருந்த வார்த்தைகளே மஹாவின் மனதிற்குள் ஓட, கணவனின் புறம் திரும்பினாள். வழக்கத்திற்கு மாறாய் உடையில்லாது இருந்தவனைக் கண்டு குழப்பம் எழுந்தாலும் அதை விலக்கி வைத்துவிட்டு, “என்னங்க..”

வெறுமனே மூடியிருந்த இமைகளைப் பிரித்தவன் அவளின் புறம் திரும்ப, “உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணும்..”

பார்வையில் கேள்வித் தொக்கி நிற்க, “சத்யாவைப் பத்தி, அவ.. அவரு.. நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல. அவரு மதியை விரும்புறாரு. ஆனா..” என்றவளின் பேச்சில் இடைநுழைந்தவன், “உனக்கு எப்படித் தெரியும்.?”

“அவர் மதிக்கூடப் பேசுறப்பக் கவனிச்சிருக்கேன். பார்வையும், பேச்சும் ஒருவிதமா உரிமையோட இருக்கும். அவளைப் பேச வைக்கிறதுக்காகவே வேணும்னே ஏதாவது வம்பிழுப்பாரு..”

மெலிதாய்ச் சிரித்தவன், “சரி, அதுக்கென்ன இப்ப..?”

“எனக்கு மதியை நினைச்சா தான். என்ன செய்யிறதுன்னு தெரியல..”

“ஏன் மதிக்குச் சத்யாவைப் பிடிக்காதா?”

“பிடிக்கும்! ஆனா ஏதோ ஒரு கோபம் அவர் மேல. வெளியக் காட்டிக்கல, அவ்வளவுதான்..!” என்றவளைப் பார்த்துச் சிரித்தவன், “என்ன கோபம்?”
“தெரியல..” என்றாள் அவன் முகம் பாராமல்.

மனைவியின் மனதை அறிந்தவன், “சரிவிடு.. சத்யா மதியோட விருப்பம் எல்லாம் இருக்கட்டும். உனக்கு இது சரியா வரும்னு தோணுதா..?”

அவள் கேள்வியாய்ப் பார்த்திட, “உனக்குத்தான் ரெண்டு பேரையும் பத்தி நல்லா தெரியும் சுமி. நான் கிளம்பிப் போறப்ப மதி சின்னப் பொண்ணு. சத்யாவும் வெளியுலகத்தைப் பத்தி அவ்வளவா தெரியாதவன். நீதான் அஞ்சு வருசமும் இங்க கூடவே இருந்து அவங்களோட வளர்ச்சியையும் மாற்றங்களையும் பார்த்திருக்க. அதோட அம்மா, அப்பா, அத்தை, மாமா இவங்களோட மன ஓட்டத்தையும் உன்னால ஈசியா கணிக்க முடியும். அதுனாலதான் கேட்கிறேன்!”

இரண்டு நிமிடங்கள் சிந்தித்தவள், “பெரியவங்களைப் பத்திப் பெருசா யோசிக்க ஒண்ணுமில்லைங்க. நம்ம ரெண்டு பேர் வீட்டுலயுமே பிள்ளைங்களோட விருப்பத்துக்கு மறுப்புச் சொல்ல மாட்டாங்க. அத்தையும் கூட இப்ப எல்லாம் ரொம்பவே மாறிட்டாங்க. மதிதான்..?” என அவள் நிறுத்த, “சரி, அப்ப நீ மதிக்கிட்டப் பேசிப்பாரு!”

“இல்ல, நான் மாட்டேன்!” என அவசரமாய் மறுத்தவளை வியப்புடன் நோக்கியவன், “ஏன்?”

“உன் கொழுந்தனுக்காக வந்து என்கிட்டப் பேசாதன்னு பட்டுன்னு சொல்லிடுவா..!”

“அப்ப யாருதான் பேசுறது?”

“சத்யா தான், நீங்களே அவர்கிட்டச் சொல்லிப் பேசச் சொல்லுங்க!”

“ஏன் உன் ஃப்ரண்ட் தான அவன், நீ சொல்லுறது?”

“ஹான், அவரு என்னையே பேசச் சொல்லுவாரு!”

“அதுக்காகத்தான் என்னைக் கோர்த்து விடுறியா நீ? இப்ப என்ன அவசரம், அவனுக்குத் தேவைன்னா அவனே பேசட்டும்!”

“இப்ப அவசரம் இல்லதான். ஆனா அந்தச் சூழ்நிலைச் சீக்கிரமே வரலாம்..” என்றவள், பேச்சியப்பன் மதியின் திருமண விசயத்தைப் பற்றிப் பேசிவிட்டுச் சென்றதைக் கூறினாள்.

அவன் அதில் பெரிதாய் ஆர்வம் காட்டாது, “ம்ம்..” என்றிட.. அதை உணர்ந்தவள், “எனக்குச் சத்யாவோட மனசு தெரியலைன்னா, பேசாம இருந்திருப்பேன். ஒரு வேளை நாளைக்கு மதிக்கு வேற வரன் அமைச்சு, பேசி முடிச்சிட்டாங்கன்னா.. அவரோட நிலைமை? என்னால யாருக்கு ஆதரவாவும் பேச முடியாது, எதிராவும் நிக்க முடியாது. சத்யா தன்னை வேறொரு லைஃப்க்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிட்டா சரிதான், இல்லையினா நமக்குத்தான் வருத்தம்? தெரிஞ்சிருந்தும் ஒண்ணுமே செய்யாம விட்டுட்டோமேன்னு, மனசு உறுத்திக்கிட்டே..” என்றவளின் பேச்சு அவனின் அணைப்பில் நின்று போனது.

சில நொடிகள் அப்படியே நகர்ந்திருக்க, “நீ ஏன் எல்லாத்தையும் இவ்வளவு தூரம் யோசிக்கிற சுமி? நடக்கணும்னு இருக்கிறதை, காலம் தானா நடத்திக்கும்!”

“காலம் நமக்காக வச்சிருக்கிறதை ஏத்துக்கிற மனோதைரியம் வேணும்ல? விதியை மதியால வெல்லலாமுனு சொல்லுவாங்க. அது நிஜமான்னு தெரியல, ஆனா முயற்சிச் செய்யலாமே? எதையும் முன்கூட்டியே யோசிக்கிறது தப்பில்லையே, நம்ம குடும்பத்தோட எதிர்காலத்துக்காக! ஏன், நீங்களும் அப்படித்தான யோசிக்கிறீங்க இப்ப வரைக்கும்..!”

அவளை விட்டு விலகியவன் மஹாவின் முகத்தைக் கேள்வியாய்ப் பார்த்திட, “வெளிநாட்டுக்குப் போனதுக்கான காரணம் அதுதான? இன்னும் அஞ்சு வருஷம் மீதி இருக்கு, நீங்க அதிலிருந்து பின்வாங்க நினைக்கலையில..?” என்றவள் இயல்பாய் உரைக்க முயன்றிருந்தாலும், அவனுடனான பிரிவின் வலியில் குரல் லேசாய்க் கரகரத்தது.

மெலிதாய்ப் புன்னகைத்தவன், “எல்லாத்தையும் இப்பவே பேசணுமா என்ன? முதல்ல ஶ்ரீயோட ஃபங்ஷன் முடியட்டும், அப்புறம் பார்த்துக்கலாம். மதி, சத்யா விசயத்தைத் தவிர வேற ஏதாவது பேசணுமா உனக்கு..?”

பதில் சொல்ல மறந்து அவனை எதிர்பார்ப்புடனும் கலக்கத்துடனும் நோக்கியவனின் முகம்.. நான்கு வருடங்களாய் அவனின் நினைவுகளில் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டிருந்த பதின்மூன்று வயது சிறுமியைக் கண் முன்னே காட்டிட, மனைவியின் நெற்றியில் மென்மையாய் இதழ் ஒற்றினான் மனோ.

கணவனது அணைப்பில் தன்னையும் இணைத்துக் கொண்ட மஹா, அவனின் முதுகினில் கைகளைப் படரவிட்டாள். இவ்வளவு நாள் இருந்த இடைவெளியும், தவிப்பும் அடங்கிவிட.. சிறிது நேரத்திலேயே இருவரும் உறக்கத்தைத் தழுவினர்.

“எந்தப் படுபாவி இப்படிச் செஞ்சானோ? அவனெல்லாம் நல்லா இருப்பானா, நாசமா போயிடுவான்! என் குடும்பத்தையே வேரறுக்கப் பார்த்திருக்கானே, அவனோட குடும்பம் தழைக்காமப் போயிடும். இது என்னோட சாபம்! அய்யோ அய்யோ, என் பிள்ளை இப்படிப் படுத்திருக்கானே? மாமன் மகளைக் கட்டிக்கணும்னு எம்புட்டு ஆசையா இருந்தான், இப்ப இப்படி ஆகிப் போச்சே! பிழைச்சு வருவானான்னு தெரியலையே, தம்பி உன் பொண்ணு வாழ்க்கை இப்படியா ஒண்ணுமில்லாமப் போவணும்? என்னைய மன்னிச்சிரு தம்பி, என் மகனுக்கு உன் பொண்ணைக் கட்ட முடியாமப் போகப் போகுதே..!” என்று நொடி ஓயாது விடிந்ததில் இருந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த தமக்கையை, இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சொக்கன்.

மதுக் கடையிலேயே அவரின் முதல்நாள் இரவு கழிந்துவிட, காலை விழிப்பு வந்ததும் அரைப் போதையிலேயே தனது வீட்டை நோக்கிக் கிளம்பினார். ஒற்றையடிப் பாதையில் நடந்தவரின் வழியை இடையில் படுத்திருந்தவன் தடைசெய்ய, குருதியில் நனைந்திருந்த அவனின் உடை, சொக்கனின் மது போதையை முழுமையாய்த் தெளிவித்தது.

குழப்பமும் பயமும் நடுக்கமுமாய்க் கவிழ்ந்து கிடந்தவனது முகத்தைப் பார்த்தவர் பெரிதும் அதிர்ந்தார்.  “மாப்பிள்ள, டேய் மாப்பிள்ள.. என்னடா இப்படிக் கிடக்கிற.?” எனப் பதறியவர், கருவேலனின் கன்னத்தில் தட்டி நினைவிற்கு இழுத்து வர முயன்றார்.

அவரின் முயற்சித் தோல்வியைத் தழுவ.. பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, உடனே தமக்கைச் செல்வநாயகிக்குச் செய்திச் சொல்லி அனுப்பினார்.

மருத்துமனைக்கு வந்ததில் இருந்து, அவர் மகனை எண்ணிப் புலம்பித் தள்ளிய சொற்கள் தான் மேல் கூறியவை. “அக்கா எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு இருக்க, உன் மகனுக்கு அதெல்லாம் ஒண்ணும் ஆகாது..” எனத் தமக்கைக்குச் சமாதானம் உரைத்த சொக்கன், அவருக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்து அருந்த வைத்தார்.

சிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்த மருந்துவன் அருணனிடம்.. கருவேலனைப் பற்றி இருவரும் விசாரிக்க, “வேணும்னே யாரோ கத்தியால கீறி விட்டிருக்காங்க. காயம் கொஞ்சம் ஆழம்தான், நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருக்கு. ஆனா பெருசா எதுவும் பாதிப்பு இல்ல. ரெண்டு பாட்டில் ரெத்தம் ஏத்தியிருக்கோம். ரொம்பச் சென்சிட்டாவான பாகம்றதால கவனமா இருக்கணும். குறைஞ்சது ஒரு மாசமாவது பெட் ரெஸ்ட் எடுக்கணும். தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர நடமாட வேண்டாம்..!” எனக் கூறி முடிக்க.. செல்வநாயகி சற்றே பயத்துடனும் தயக்கத்துடனும், “என் மகனுக்குக் கல்யாணம் செய்யலாமுல, அதுல எதுவும் பிரச்சனை வந்திடாதே..?” என மறைமுகமாய் வினவினார்.

கருவேலனின் இரத்த மற்றும் ஊடுகதிர் பரிசோதனையின் மூலம்.. மது மற்றும் போதைப் பொருட்களின் உபயோகத்தினால் அவனின் உட்புற உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அறிந்தவன்.. ஏளனப் புன்னகையை உதிர்த்து, “முதல்ல உங்க மகனோட குடிப் பழக்கத்தை நிப்பாட்டுறதுக்கு என்ன வழின்னு பாருங்க. அதுக்கு அப்புறம் அவனுக்குக் கல்யாணம் செய்யிறதைப் பத்தி யோசிக்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம், அப்படியே கல்யாணம் செய்யிறதா இருந்தாலும் இரண்டு வருசம் கழிச்சுச் செய்யிங்க..” என்று முகம் அறியாத யாரோ ஒரு பெண்ணுக்குத் தன்னால் இயன்றதாய் நினைத்துச் சொல்லிச் சென்றான் அருணன்.

நடுங்கும் விரல்களால் தயக்கத்துடன் கணவனின் தேகத்தைப் பட்டும் படாமல் வருடினாள் மஹா. ஆடவன் இன்னும் உறக்கம் கலையாமல் தான் இருந்தான். அரைஇருளில் மட்டுமே கண்டு பழகிய அவனின் தெளிவற்ற அடையாளங்கள், அன்று சாளரத்தின் வழியே உள்நுழைந்த ஞாயிறவனின் கதிர்களில் முதன்முறையாய்க் கருமைத் திட்டுக்களாய் மாறுபட்டத் தோற்றத்தில் காட்சியளித்தது.

முதல்நாள் அவனுடன் நடந்த வலிக் கலந்த காரசாரமான உரையாடல்களால், பெண்ணவளின் கவனம் இதிலெல்லாம் பதியவில்லை. தற்போது கிடைத்திருந்த தருணத்தில் அவள் நிதானமாய் வருடி உணர்ந்து அதை உள்வாங்கிட, “என்ன செய்யிற?” என்ற அவனின் வினாவில் சட்டென்று கையை விலக்கிக் கொண்டாள் மஹா.

அருகிலிருந்து விலக எத்தனித்தவளின் செயலுக்குத் தடைவிதித்துத் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்த மனோ, “பதில் சொல்லாம, எங்க ஓடப் பார்க்கிற?”

“பரணி விடுங்க, டைம் ஆச்சு. தனு என்னைத் தேடுவா..” எனச் சிணுங்கியவளை ரசனையுடன் பார்த்தவன், “அது உன் பிரச்சனை. அந்த நினைப்பு உனக்கு முதல்லயே இருந்திருக்கணும். நான் முழிக்கிறதுக்கு முன்னாடிப் போயிருக்கலாம்ல? தூங்கிக்கிட்டு இருந்தவனை, தொட்டுத் தொட்டுப் பார்த்து எழுப்பி விட்டுட்டு, இப்ப ஓடுனா என்ன அர்த்தம்..?”

“அது.. அது ஏதோ தெரியாம செஞ்சிட்டேன். விடுங்களேன்..”

சின்னதாய்ச் சிரித்தவன், “ஶ்ரீக்கு பாவமா மூஞ்சியை வச்சிக்கிற பழக்கம் எங்க இருந்து வந்திச்சின்னு இப்பத்தான் தெரியிது. நேத்து டீ சூடா இருக்குன்னு சொன்னப்ப, குழந்தை மூஞ்சியும் இப்படித்தான் போச்சு. அவளோட கண்ணு, மூக்கு எல்லாமே உன்னை மாதிரியே இருக்கு சுமி!” என்றிட.. அவனின் சொற்களில் சிவந்தவள், “முகம் தான் என்னை மாதிரி, ஆனா பேசுறது, தூங்குறது எல்லாம் உங்களை மாதிரி தான்!” என்றாள் மஹா.

அவன் சற்றே வியப்புடன், “என்னை மாதிரியா..?”

“ஏன் நீங்க இந்த நாலு நாளா கவனிக்கலையா? தூங்குறப்ப, உங்களை மாதிரியே பெரும்பாலும் கவிழ்ந்து தான் படுப்பா. ஒரு பக்கமாப் படுக்கிறப்ப, ஒரு கையைப் படுக்கையில வச்சிக்கிட்டு இன்னொருக் கையை மடக்கிக் கன்னத்துலயும் வச்சிக்குவா. அதுவே இன்னொரு பக்கம் திரும்பிப் படுத்தா ரெண்டு கையும் அப்படியே இடம் மாறும்..”

“தூங்கிக்கிட்டு இருக்கிறப்ப எப்படித் தூங்குறேன்னு எனக்கு எப்படித் தெரியும்? ஆனா உனக்குத் தெரிஞ்சிருக்கு, எத்தனை நாள் நைட் தூங்காம இந்த வேலைப் பார்த்த நீ..?”

அவள் பதிலுரைக்காது அகப்பட்ட குழந்தையாய்த் திருதிருவென விழிக்க, “நாம இதுவரைக்கும் சேர்ந்து இருந்ததே மொத்தம் பதினாறு நாளு தான சுமி? அப்பப் பன்னெண்டு, இப்ப நாலு! இதுல எப்ப..?” என்று அவன் பாதியிலேயே தன் வினாவை நிறுத்தி, விடையை மனைவியின் கண்களில் காணமுயல.. அந்த நொடியைத் தனக்குச் சாதகமாய் மாற்றியவள், ஆடவனின் பிடியிலிருந்து விடுபட்டு விழிகளில் நீரும் இதழ்களில் புன்னகையுமாய் வெளியேறினாள்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

26. எனதழகே[கா]

தேவை ஒரு தேவதை -1