in , , ,

26. எனதழகே[கா]


அத்தியாயம் 26


வருடம் 2006

காலை நேர அவசரத்தில் ராஜனின் வீட்டில் இருப்போர் இயங்கிக் கொண்டிருக்க.. வாயிலில் நின்றபடி நிதானமாய், “அய்யா.. அய்யா..” என அழைத்தார் இளவரசு.

ஒலிக் கேட்டு வெளியே வந்தவர், “என்னடா காலையிலேயே வந்திருக்க..?” என்றிட.. மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தவர், “செய்தி சொல்லீட்டுப் போகலாமுனு தானுங்கய்யா..”

பள்ளிக்குத் தயாராகி வெளியே வந்த சத்யா, “வாங்க மாமா..” என்று அவசரக் கதியில் வரவேற்றுவிட்டு, “ஸ்கூலுக்கு நேரமாச்சு, நான் கிளம்புறேன்..”என அவரின் மறுமொழிக்குக்கூடக் காத்திருக்காது வெளியேறினான்.

“என்ன செய்தி அரசு?” என ராஜன் வினவிட, “லெட்சுமி பிள்ளைப் பெரிய மனுஷி ஆகியிருச்சுங்க அய்யா. எங்களுக்கு உங்களைத் தவிர்த்து யாரும் இல்லைங்களே? ஆசிர்வாதம் வாங்குறதுக்குப் பிள்ளையவே கூட்டிட்டு வந்திருப்பேன், ஆனா தலைக்குத் தண்ணி ஊத்தாம வெளியக் கூட்டிட்டுப் போகக்கூடாதுன்னு சொல்லீட்டாக. ஒரு எட்டு வந்து, பிள்ளைய ஆசிர்வாதம் செஞ்சீங்கன்னா என் மனசுக்குச் சந்தோஷமா இருக்கும். வர்றீங்களா அய்யா..?” என எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் வினவிட, “அறிவிருக்கா உனக்கு, ஆளான பிள்ளைய இம்புட்டுத் தொலைவுக் கூட்டிவர நினைச்சியாக்கும்..?” என்று கடிந்தார் ராஜன்.

அசடு வழிந்த அரசு, “நமக்குத்தான் இந்தச் சடங்குச் சம்பிரதாயம் எல்லாம் தெரியாதுங்களே! எனக்கு அப்பன் ஆத்தா கூட இருந்து வளர்த்து எதுவும் சொல்லித்தரல, நான் கட்டிட்டு மகராசிக்கும் அந்தக் கொடுப்பினை இல்ல. ஏதோ நீங்களும், சுத்தி இருக்கிறவங்களும் சொல்லுறதைக் கேட்டு நடந்துக்கிடுறோம்..” என்றிட, “நல்லா நடந்த போ..!” என்றவர் மனைவியை அழைத்தார்.

ருக்குக் கேள்வியாய்ப் பார்த்திட.. விபரம் உரைத்த ராஜன், “என்னென்ன எப்படி எப்படிச் செய்யணும்னு இவனுக்குக் கொஞ்சம் சொல்லி விடுமா..” எனக் கூற, பட்டும் படாமல் செய்ய வேண்டிய முறைகளை உரைத்தார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டவர், “நன்றிங்க அம்மா..” எனக் கைக்கூப்பிட, “நீ பிள்ளைக்குத் தண்ணிய ஊத்து அரசு, நான் குடும்பத்தோட வர்றேன்!” என்று வாக்களித்து அனுப்பி வைத்தார் ராஜன்.

“நாம போகணுமாங்க..?” என்ற வினாவிலேயே ருக்கு தன் விருப்பமின்மையைக் காட்ட, “ஆசைக்கு ஒத்தப் பொம்பளைப் பிள்ள வேணும்னு நினைச்சேன். ஆனா நீ எனக்கு ஆம்பளைப் பிள்ளைக தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சு, நினைச்சதைச் சாதிச்சிட்ட! அதுவும் நம்மப் பிள்ள மாதிரிதான், போயிட்டு வந்திடலாம்!” என்ற கணவரின் சொல்லை மறுக்க இயலாது தலையசைத்தார்.

“அம்மா.. இந்தாங்க காய், இதை வச்சு ஒரு ரெண்டு நாளைக்குச் சமாளிங்க. ஒரு கூட்டு இல்லையினா பொரியல் ஏதாவது ஒண்ணுச் செய்யிங்க போதும். ரெண்டு மூணெல்லாம் வேண்டாம், உங்களுக்கும் வேலை தான? ஞாயித்துக்கிழமை கறி, மீன் ஏதாவது வாங்கிக்கலாம்..” எனத் தான் வாங்கி வந்த பையைக் கொடுத்தான் மனோ.

தலையசைப்புடன் அதை வாங்கிக் கொண்ட ருக்கு உள்ளே சென்று விட, அவனும் கல்லூரிச் செல்லத் தயாரானான்.

“ராஜா..” என்ற தந்தையின் அழைப்பில் நிதானித்தவனிடம், “ஒரு ரெண்டாயிரம் பணம் வேணும், உன்கிட்ட இருக்குமா ப்பா..?” என வினவிட, “என்னப்பா விசயம்?” என்றான் மனோ.

அரசு வந்து சென்ற செய்தியைச் சொன்னவர், “சும்மா வெறும் கையோட போக முடியாது. ஒரு சேலைத்துணி எடுத்துப் பேருக்காவது தட்டு வைக்கணும். இப்பதான் எனக்கும் கொஞ்சம் பரவாயில்ல இல்ல, ஊருக்குப் போயிட்டு வந்ததும் நானும் ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாமுனு இருக்கேன். அந்தக் காசை ஈடு கட்டிடலாம்..” என மகனிடம் கேட்பதற்குத் தயங்கி அவர் சமாதானமும் உரைக்க.. தந்தையின் அருகே வந்து அவரின் கைகளைப் பற்றிக் கொண்ட மனோ மெலிதாய்ப் புன்னகைத்தான்.

“உங்களுக்கு வேலைக்குப் போக விருப்பம்னா போங்கப்பா. என்கிட்டக் கேட்கிறதுக்குத் தயங்கிப் போக நினைச்சீங்கன்னா, வேண்டாம்! இல்லாத நிலைமையிலக்கூட என்னோட அப்பாவை இதுவரைக்கும் நான் கம்பீரமா பேசித்தான் பார்த்திருக்கேன். இப்படி அழுத்தமில்லாம ஒருநாளும் உங்க குரல் வந்ததில்ல. ரெண்டாயிரம் தான, நான் ரெடி பண்ணிடுறேன். அரசு மாமாக்கு நாம செய்ய வேண்டிய கடமையும் இருக்கு! அன்னைக்கு அவர் கொடுத்த பணத்துல தான், படுத்துக்கிட்டு இருந்த உங்களை எழுந்திருக்க வைக்க முடிஞ்சது!” என அவன் உரைத்திட, “சந்தோஷம் ராஜா..” என்றவரின் முகம் அடுத்த நொடியே வாடிவிட்டது.

“என்னாச்சு ப்பா..?”
“ஒண்ணுமில்ல அந்த மஹா பிள்ளைய நினைச்சுதான்..”
அவன் புரியாமல் பார்க்க, “அதுக்குப் படிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம், ஆனா இனி பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாது!”
“ஏன்..?”

ஊர் பழக்கத்தை உரைத்த ராஜன், “அரசு எப்படி அந்தப் பிள்ளைகளைக் கரைச் சேர்க்கப் போறான்னு தெரியல. சும்மாவே சீதனம் அது இதுன்னு கேட்பாங்க, ஊர்ப்பக்கம். இதுல ஈஸ்வரியும் அரசுவும் கல்யாணம் செஞ்ச விபரம் தெரிஞ்சா, எவருமே அவங்க வீட்டுல பொண்ணு எடுக்க மாட்டாங்க..” எனப் பெருமூச்சு விட, என்ன உரைப்பதென்று புரியாது அமைதியாய்க் கிளம்பினான் மனோ.

பேருந்திற்காகக் காத்திருந்தவனின் கண்களில் அரசு பட.. சிந்தனையுடனே அவரருகே சென்றான்.

“சின்னய்யா..” என்று அவர் முகம் மலர, “நீங்க எங்க மாமா இங்க..?”
அவர் விபரத்தைக் கூற, “அப்பா சொன்னாரு. இவ்வளவு நேரம் ஆச்சு, இன்னும் பஸ் ஏறாம இருக்கீங்க.?”

“அது ஒண்ணுமில்லங்க அய்யா, கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியிருந்துச்சு. பிள்ளைக்குப் புதுத்துணியையும், அப்படியே எசமானி அம்மா சொன்னதையும் வாங்கிக்கிட்டுப் போகலாமுனு!”

“சரி சரி வாங்க..” என அழைத்தவன், தேநீர் விடுதியில் அவருக்கு ஒரு குவளையை வாங்கிக் கொடுத்து’ மெதுவாய்ப் பேச்சைத் துவக்கினான்.

“உங்க பொண்ணு என்ன படிக்கிது மாமா..?”
“ஏழாங்கிளாசு சின்னய்யா.. என்ன இனி அம்புட்டுத்தான் படிப்பு. அதுக்கு ஸ்கூலுக்குப் போறதுன்னா ரொம்ப இஷ்டம், ஆனா இனி எங்க அனுப்புறது?”
“ஏன், அனுப்பினா என்ன?”
“ஊருல பழக்கம் இல்லைங்களே.?”

“ஊருக்காக நாம வாழ முடியாது மாமா, நமக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்யணும்! உங்களுக்கு நடந்த கல்யாணம் கூட, அதுவரைக்கும் ஊருல நடக்காதது தான். ஆனா இப்ப உங்களுக்கான வாழ்க்கையை நீங்க வாழல? அப்படியிருக்கும் போது, உங்க பொண்ணோட உரிமையை மட்டும் ஏன் பறிக்க நினைக்கிறீங்க? அப்பா சொன்னாரு, வளர்ந்து கல்யாணப் பேச்சு வரும் பொழுதுப் பிரச்சனை வரும்னு. பொண்ணுங்கிறப்ப இந்தச் சமுதாயம் ரொம்ப ஈசியா அவளைக் காயப்படுத்தி, ஒடுக்கி வச்சிடும். அதைக் கடந்து போகணும்னா, அதுக்குப் பகுத்தறிவும் துணிச்சலும் வேணும். அதைப் படிப்புக் கொடுக்கும். ஒருவேளை எதிர்காலத்துல கல்யாணம்னு ஒண்ணு நடக்காம போனாலும், படிப்பு அவளுக்குக் காலம் முழுக்கத் துணையா இருக்கும். படிக்க வைங்க மாமா..” என்றவனின் சொற்கள் பாதிக்கு மேல் அவருக்குப் புரியாவிடினும், மறுக்கத் தோன்றாது.. உரைத்தது தன் எஜமானனின் மகன் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே, “சரி..” என்று தலையசைத்துவிட்டுக் கிளம்பினார் அரசு.

விசேஷ தினத்தன்று தாய்த் தந்தையர் மற்றும் உடன் பிறந்தவனை முதலில் அனுப்பி வைத்த மனோ, தான் பணத்தோடு வருவதாய்க் கூறியிருந்தான். எங்கு முயன்றும் கிடைக்காது போக, மீண்டும் சரவணன் அறிமுகம் செய்து வைத்த கந்து வட்டிக்காரரிடமே பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

ருக்கு எழுதிக் கொடுத்த பொருட்களை வாங்கியவன், மீதமிருந்த பணத்தில் வேறுவழியின்றி விலைக் குறைவாய்ச் சந்தன நிறத்தில் பெயருக்கென்று ஜரிகை வேலைபாடு செய்தப் புடவையோடு.. முதன்முதலாய் மந்தாரங்குடி மண்ணில் கால் வைத்தான்.

அரசுவின் பெயரைச் சொல்லி விசாரித்திட.. “மஹாக்கா வீடா?” என்று விளையாடிக் கொண்டிருந்த தெருக் குழந்தைகள் அவனை வீட்டிற்கே அழைத்து வந்தனர்.

மனோ உள்ளே நுழையும் போது விழா துவங்கியிருக்க.. பொருட்களைத் தாய்த் தந்தையரிடம் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான். ஏனோ அரசுவைத் தவிர, அக்குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவருடனும் அவனால் இயல்பாய்ப் பேச முடியவில்லை.

ஒருசில அக்கம் பக்கத்தினருடன்.. அரசு மற்றும் ராஜனின் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். விழாவும் நன்முறையில் எளிமையாய் நடந்தேறியது. தான் அழைத்ததற்காக வந்திருந்த எஜமானைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த அரசு.. ராஜன் மாமனாய் முறையும் செய்ததில் நெகிழ்ந்துதான் போனார்.

பெரியவர்கள் ஒருபுறம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. கூடத்தில் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த உலக்கைக்கு ஒருபுறம் மஹாவும் மறுபுறம் சத்யாவும் அமர்ந்திருந்தனர்.

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனைக் கண்ட மஹா, “என்னாச்சு?” எனச் சிரிப்புடன் வினவ, “குட்டியா இருக்கிற உனக்குப் போய்ச் சேரிக் கட்டி விட்டிருக்காங்க. எங்க அண்ணனோட கலர் செலக்ஷனைப் பாரு, உன் கலர்லயே சேரி எடுத்திட்டு வந்திருக்கான்! ஹய்யோ..” என அழுத்துக் கொள்ள, “அப்ப சேலையை உங்க அம்மா வாங்கலையா சத்யா?” என்றாள் மஹா.

“இல்ல..” என்றவன் தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாய் உரைத்தான். செவிகள் அவனின் சொற்களை உள்வாங்கிட, பாவையின் கண்கள் மனோவைத் தேடியது. சற்றுத்தள்ளி அரசுவிடம் நின்று பேசிக் கொண்டிருந்தான் அவன். பின்பக்கத்தை மட்டுமே காண முடிந்தது. மஹாவின் பார்வையில் முதலில் பட்டது, ஆடவன் பின்பக்கமாய்க் கட்டியிருந்த கைகளில் தெரிந்த நிறம் மங்கிய தழும்புகள் தான்.

நிமிடங்கள் நகர்ந்தும், ஏனோ அவனின் முகத்தைக் காண இயலவில்லை. அரசு மகளிடம் உரைத்திருந்தார்.. ‘தன் எஜமானின் மகன், அவரைப் போலவே இருப்பான் என்று!’

தாய்த் தந்தையரின் மூலமாய் அவர்களின் கடந்த கால வாழ்வினை ஓரளவிற்கு அறிந்திருந்தாள். அதனால் ராஜனிடம் மரியாதை கலந்து அன்புண்டு அவளுக்கு. அந்த அன்பே, அவரின் மகனையும் அறிந்து கொள்ளத் தூண்டியது. ஆனால் கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.

“அக்கா இவனைப் பாரு சாப்பிட மாட்டிறான்..” எனப் புகார் வாசித்த தங்கை மதியின் குரலில் அவளின் கவனம் கலைய.. எதிரே நின்றிருந்த ஆறு வயது நந்தாவிடம், “என்னடா?” என்றாள்.

“காரமா இருக்குக்கா..” என்று அவன் முகம் சுருக்க, “வா உட்காரு..” என உலக்கையின் மறுபுறம் சத்யாவின் அருகே அமரவைத்தவள், “நீ சாப்பாடுல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்திட்டு வா மதி..” எனத் தங்கையிடம் கூறிட.. அவள் கொண்டு வந்து தரவும், தம்பிக்கு ஊட்டிவிடத் துவங்கினாள் மஹா.

சத்யா, “ஆமா இது என்ன கட்டை, இதை எதுக்கு இங்க வச்சிருக்காங்க?” என இருவருக்கும் இடையே இருந்த உலக்கையைக் காட்டி வினவ, “அதுவா எனக்கு எல்லைக்கோடு போட்டிருக்காங்க. இதைத்தாண்டி நானும் வரக்கூடாது, மத்தவங்களும் வரமாட்டாங்களாம்..” என அவள் சிரிக்க, “அதெப்படி ஒரே இடத்துல நாள் முழுசும் உட்கார முடியும்?” என்றான் அவன்.

“ஏது ஒரு நாளா, ஏற்கனவே ஒரு வாரம் ஆகிப்போச்சு. ஸ்கூல்ல மாசப்பரிட்சை வேற வருது சத்யா. புக் எதுவும் தரமாட்டிறாங்க படிக்க. நேத்து என்னன்னா பக்கத்து வீட்டு அக்கா, இனிமேல் ஸ்கூல் போக முடியாதுன்னு சொல்லுறாங்க..”

“ஏன்?” என அவன் புரியாமல் வினவ, “தெரியல, அம்மாவும் அப்படித்தான் சொன்னாங்க..” என்றவளின் குரல் மெலிந்து முகமும் வாடிப்போனது. மதியும் நந்தனும் தமக்கையையே பார்த்திருக்க, அவர்களின் அருகே வந்தார் ராஜன்.

“என்ன மாமா, இப்பக் கால் எல்லாம் எப்படி இருக்கு?” எனத் தன் நிலையைத் தூரம் விலக்கி, மஹா அவரின் நலம் விசாரிக்க.. “அதெல்லாம் சரியாகிப் போச்சு மா. இதுக்குக் காரணம் நீயும், உன் அப்பனும் தான்..”

“நாங்க என்ன செஞ்சோம்..?” என அவள் புரியாமல் வினவிட, “உனக்காகச் சேர்த்து வச்சப் பணத்தைத்தான் உன் அப்பன் எனக்குக் கொடுத்திட்டான்..”

“நீங்க எங்களுக்குச் செஞ்சதை விடவா மாமா? இதைப் போயிப் பெருசா சொல்ல வந்திட்டீங்க? ஆமா உங்க வீட்டுக்காரம்மா எப்படி வந்தாங்க, எங்களை எல்லாம் சேர்த்துக்க மாட்டாங்களே..?”

“அவளை அப்படி வளர்த்திட்டாங்க. மத்தப்படி ருக்கு குணமானவதான்..” என ராஜன் மனைவிக்குப் பரிந்து பேச, ‘ஆம்’ என்பதாய்த் தலையசைத்து, “அம்மா சொல்லியிருக்காங்க” என்றாள் மஹா.

“எல்லாத்தையுமே சொல்லீட்டாங்களா, உன்னைப் பெத்தவங்க..?” அவள் புன்னகையைப் பதிலாகக் கொடுக்க, மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜன்.

நேரம் நகர்ந்துவிட, அனைவரும் கிளம்பத் தயாராகினர். அதுவரை தனது நாளைய தினத்தைப் பற்றி மறந்திருந்த மஹாவிற்கு, மீண்டும் அதனைப் பற்றிய சிந்தனை எழுந்தது. ஒவ்வொருவராய் விடைப்பெற்றுக் கிளம்பிட, இறுதியாய் அவளிடம் சொல்வதற்காக வந்தான் மனோ.

இருவருமே முதன்முதலாய் அப்பொழுது தான் பார்த்துக் கொண்டனர். இரு கன்னங்களிலும் சந்தனம் பூசித் தெளிவில்லாத முகத்துடன் நின்றிருந்தவளிடம் சம்பிரதாயமாய், “போயிட்டு வர்றோம்..” என்று விட்டு நகர்ந்தவன், சற்றே நிதானித்து மீண்டும் அவள் புறம் திரும்பினான்.

அவனின் பார்வை உணர்ந்து மஹா நிமிர, அரும்பு மீசையுடன் பத்தொன்பது வயசு வாலிபனாய் ஒல்லியான தேகத்தில் அவளைப் பார்த்துச் சின்னதாய்ச் சிரித்தான். ஆனால் அவளோ கலக்கத்துடன் இருந்தாள்.

முகத்தின் வழியே அகத்தின் எண்ணமதை உணர்ந்தானோ என்னவோ, “இப்ப எதுக்கு நீ மூஞ்சியை இப்படி வச்சிருக்க? ஒரு ரெண்டு நாள் தான், அப்புறம் நீ எப்பவும் போல ஸ்கூல்  போகலாம்!” என்றவனை அவள் வியப்பும் குழப்பமுமாய்ப் பார்த்திட, “ஏய் நிஜமா..” என்றான்.

“நிஜமாவா..?” என நம்பாது கேட்டவளுக்கு அவன் விடையளிக்கும் முன்னரே, “ராஜா வாப்பா..” என்ற தந்தையின் குரலில் திரும்பியவன், அவசரமாய் அவளிடம் தலையசைப்பில் ‘ஆம்’ என்பதாய்ப் பதிலளித்து விட்டுச் சென்றான்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனைச் சத்யாவின் குரல் நிகழ்வுக்கு இழுத்து வர, “அதுக்கு அப்புறம் அப்பாக்குத் துணையா நான் ஊருக்கு வர்றப்ப எல்லாம், மஹா உன்னைத்தான் முதல்ல விசாரிப்பா. என்ன செய்யிற, எப்படிப் படிக்கிற, நைட்டெல்லாம் வேலைப் பார்ப்பியா, இன்னும் உன் உடம்புல பழைய காயமெல்லாம் இருக்கா, அது உனக்கு வலிக்குமா? என்ன பிடிக்கும், பிடிக்காது, வீட்டுச் செலவெல்லாம் எப்படிச் சமாளிக்கிற? இன்னும் இப்படி நிறைய நிறைய உன்னைப் பத்திதான் என்கிட்ட முக்கால்வாசிப் பேச்சு இருக்கும். அப்ப எல்லாம் எனக்கு ஏன் அப்படிக் கேட்டான்னு எதுவுமே புரியல ண்ணா. ஆனா கல்யாணம் முடிஞ்சு நீ வெளிநாட்டுக்குப் போனப்பப் புரிஞ்சிக்கிட்டேன்..”

மனோ புரியாது, “என்னடா சொல்லுற?” என்றிட, “நான் படிக்கிறதுக்காகத் தினமும் மாடிக்குப் போவேன் ண்ணா. ரூம் சுவரோட வெளிப்பக்கம் தான் உட்கார்ந்திருப்பேன். உள் பக்கமா மஹா உட்கார்ந்திருப்பா. தினமும் பேசுவா, உன்கிட்டப் பேசுறதா நினைச்சு. கொஞ்சம் எட்டிப் பார்த்தா ரூம்ல இருக்கப் பால்கனி தெரியும். அப்படி ஒருநாள் பார்த்தப்ப, உன்னோட ஃபோட்டோ அவளோட மடியில இருந்தது. உன்னை எந்தளவுக்கு நேசிக்கிறான்னு அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிக்கிட்டேன். தினமும் மாடிக்குப் போறது பழக்கமாச்சு. அப்படித்தான் ஒருநாள்..” என அவன் நிறுத்த, எதிர்பார்ப்புடன் தம்பியை நோக்கினான் அவன்.

“மஹா ப்ரக்னெண்டா இருக்கிறதை, உன்னோட ஃபோட்டோவைப் பார்த்துச் சொல்லிக்கிட்டு இருந்தா..” என்ற சத்யா, “அதுனாலதான் மறுநாள் ஃபோன் போட்டு அவக்கிட்டப் பேசுன்னு உன்கிட்டச் சொன்னேன். ஆனா நீ தான் பேசல..” எனத் தன் ஆதங்கத்தை உரைக்க, மெலிதாய்ப் புன்னகைத்தான் மனோ.

“என்ன ண்ணா சிரிக்கிற, உன்னால எப்படி இப்படி இருக்க முடியிது..?”
“உனக்குத் தெரியுமா நான் பேசலைன்னு..?”
“என்ன சொல்லுற, அப்பப் பேசினியா? பொய்ச் சொல்லாத, ஃபோன் பேசும் போது நானும் மஹா பக்கத்துல தான் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் பேசவே இல்ல..”

“வாயில இருந்து வார்த்தை வந்தாதான் பேசினதா அர்த்தமா சத்யா.?” என்றவனை அவன் கேள்வியாய்ப் பார்க்க, “சரி எங்களை விடு, நான் சுமிக்கிட்டப் பேசிக்கிறேன். உனக்கும் மதிக்கும் இடையில என்ன பிரச்சனை?”

“அவளுக்கு என் மேலக் கோபம்!”
“என்ன கோபம்?”
“மஹாவோட டெலிவரி டைம்ல நீ வரலைன்னு!”
“அதுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்?”

“என் அக்கா உன்கிட்ட தான நம்பிக்கை வச்சுக் கேட்டா, நீ செய்யிவன்னு. ஏன் உன்னால உங்க அண்ணனை வர வைக்க முடியல. அவர் வரலையினா, நீ நேர்ல போயாவது கூட்டிட்டு வந்திருக்கணும்னு சொல்லிக் கொஞ்சம் ஓவரா பேசிட்டா. அது என்ன சேலத்துக்கும் மந்தாரங்குடிக்கும் வந்து போகிற மாதிரி அவ்வளவு ஈசியான வேலையான்னு நானும் பதிலுக்குப் பேசிட்டேன். அப்படியே என்கிட்டப் பேசுறதை நிறுத்திட்டா..”

“இதுக்குக் காரணமும் நான்தானா?” என வருத்த முறுவலொன்றை உதிர்த்த மனோ, “அப்புறம் எப்படித் திரும்பப் பேசினீங்க?”

“ஒரு மாசத்துலயே பேசிட்டோம் அண்ணா, மஹாவால தான். இங்க ஊருல நந்தாவைத் தத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுப் பெரிய பிரச்சனை ஆகிடுச்சு..” என்றவனிடம் மனோ திடுக்கிடலுடன், “என்னடா சொல்லுற, நம்ம நந்தாவையா..?”

“ஆமாண்ணா..”
“ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல?”
“நீயே அங்க தனியா என்ன கஷ்டப்படுறியோ, இதெல்லாம் நாமளே பார்த்துக்கலாமுனு மஹா சொல்லிட்டா..”
“சரி, எப்படி அதைச் சரி பண்ணீங்க?”

“தனு பிறந்து ஒன்றரை மாசம் தான் ஆகியிருந்துச்சு. அம்மா அப்பா மஹாவை அலைய வேண்டாம்னு சொன்னதால, நானும் மதியும் தான் ஊருக்கு வந்து எல்லாத்தையும் பேசி முடிச்சோம். மஹாதான் எங்களைக் கைட் பண்ணா, அப்ப இருந்துதான் எங்களுக்கு அண்ணாமலை பழக்கம். சொன்னா நம்ப மாட்ட, மதி கையால அடி வாங்கினவன் அவன்!” என அன்றைய நினைவில் சத்யா சிரிக்க, மனோ புரிந்தும் புரியாமலும் தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நொடிகளில் தன்னை நிதானித்துக் கொண்டவன், “அண்ணா எனக்கு உன்கிட்ட ஒரு ஹெல்ப் வேணும்”
“என்னடா?”
“எனக்காக நீ மதிக்கிட்டப் பேசணும்..”
“எதைப் பத்தி..?”

“ஐ லவ் ஹர் ண்ணா. ஆனா நான் அதை நேரடியா சொன்னா, பழசை மனசுல வச்சிக்கிட்டு அவ வீம்புக்குக்காகவே நோ’ன்னு சொல்லிடுவா. ப்ளீஸ் ண்ணா..” என்றவனிடம், “என்னடா என்னமோ சட்டை வேணும்ற மாதிரி ஈசியா சொல்லுற? ஆமா இது என்ன லவ்வு, எனக்கு ஒண்ணும் புரியல..” என மனோ ஏற்கனவே அனுமானித்திருந்தாலும்.. சற்று அதிர்ச்சியுடனே வினவ, “எனக்குக் கூடத்தான் உனக்கும் மஹாக்கும் இருக்கிற உறவும், உணர்வும் சுத்தமாப் புரியல!” என்று சற்றுக் கடுப்புடனே உரைத்தான் சத்யா.

மனோ சின்னதாய்ச் சிரித்து, “இதென்ன மோதல்ல வந்த காதலா?”

“தெரியல. ஆனா அவ என்கூட வேணும்னே சண்டைப் போடுறது ரொம்பப் பிடிக்கும். அதுவும் முக்கால்வாசி மஹாக்காகத் தான் இருக்கும். அதுல முழுக்க முழுக்க மஹா மேல அவ வச்சிருக்கிற பாசம் தான் தெரியும்..”

“அப்ப நீ மதியை, மஹாக்காக விரும்புறியா சத்யா..?” என்ற தமையனை அவன் குழப்பத்துடன் பார்க்க, “மதியை அவளுக்காகவே விரும்பினா தான் அது காதல், மஹாக்காக விரும்பினா அது காதல்ல சேராது!” என்றான் மனோ.

“எனக்கு மதிக்கிட்ட ஏற்பட்ட உணர்வுகளோட தொடக்கம் மஹாவா இருக்கலாமே தவிர, மனசுல நிறைஞ்சுப் போன காதலுக்கு அவ காரணமா இருக்க முடியாதுண்ணா. சில விசயங்கள்ல மஹாவும், மதியும் ஒண்ணு போலத் தெரிவாங்க. ஆனா ரெண்டுப் பேருடைய இயற்கைக் குணமும் வேற வேற..!”

“நான் ஏன் அன்னைக்கு மஹாவை விரும்புறியான்னு கேட்டேன்னு உனக்கு இப்பப் புரியிதா சத்யா?” என்றவனை அவன் திகைப்புடன் பார்க்க, “உன்னோட பேச்சுல எப்பவும் முதன்மையா இருக்கிறது மஹாதான். எங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுலயும், நான் திரும்பி வந்த போதும், இப்பவும்! உன்னுடைய பேச்சு வெளிப் பார்வைக்கு அப்படித்தான் தெரியும்..”

“என்ன ண்ணா இப்படி எல்லாம் பேசுற? எனக்கு அம்மாவைப் பிடிக்கும், அதுக்குக் காரணம் எல்லாம் தேவையில்ல. அதேபோலத் தான் மஹாவையும்! அவ என்னோட ஃப்ரண்ட்.. இல்ல அதுக்கும் மேலன்னு கூடச் சொல்லலாம். என் அண்ணனோட மனைவி! எனக்கு எங்களுக்கு நடுவுல இருக்கிற உறவும் தெரியும், நட்போட எல்லையும் தெரியும்!”

“இந்தப் புரிதல் உனக்கு இருந்தா சரிதான் சத்யா. ஏன்னா பார்க்கிறவங்கக் கண்ணுக்கு அது தப்பாத் தெரியும். ஊர்ல இருந்து நான் வந்தப்ப.. உன்னையும் மஹாவையும் பார்த்த அந்தச் செகண்ட் எனக்கு அப்படித்தான் தோணுச்சு. ஏன்னா எங்களுக்குள்ள இன்னும் சரியான புரிதல் இல்ல, அதுக்கான வாய்ப்பும் அமையல. அதோட நான் அஞ்சு வருசத்துக்கு முன்னாடிக் கிளம்பிப் போனப்ப நீ ஒரு வார்த்தைச் சொன்னியே, ‘இப்படிக் கல்யாணம் செஞ்சு வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவளைத் தனியா விட்டுட்டுப் போறதுக்கு, நீ கல்யாணமே செஞ்சிக்காம இருந்திருந்திருக்கலாம். பிடிச்ச யாரையாவது கட்டிக்கிட்டு அவ சந்தோஷமா இருந்திருப்பா’ன்னு. அந்த நிமிஷம் என்னோட தம்பியா நீ எனக்குத் தெரியல, மஹாவுக்கானவனா தான் தெரிஞ்ச..”

“அண்ணா..” எனச் சத்யா இடைநுழைய, “இல்லடா நான் தப்பாச் சொல்லல. ஒரு பொண்ணு மேல ஒரு ஆணுக்கு ஏற்படுற அன்புன்றது.. காதலா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. அதைக் கடந்து வேற ஒண்ணாவும் இருக்கலாம். நீ மஹாவை ஃப்ரண்டுனு சொல்லுற. ஆனா உனக்கும் அவளுக்குமான உறவு நட்புன்ற மூணு வார்த்தைக்குள்ள அடங்கிடாது. அதுக்குப் பேரும் வைக்க முடியாது. மாமாவோட இடத்துல இருந்திருந்தா, நீ அவளுக்கு அப்பாவா மாறியிருப்ப! அதுவே நந்தாவோட இடம்னா, தம்பியா இருந்திருப்ப! ஆனா அவளுக்குத் தேவையானது நானா இருந்திருக்கேன்! என்னுடைய இடத்துல இருந்து.. அந்த அன்பை நீ அவளுக்குக் கொடுக்க முயற்சி செஞ்சிருக்க, ஒரு தோழனா..” என்று தன் புரிதலை அவன் உரைக்க, கண்களில் நீருடன் தமையனை அணைத்துக் கொண்டான் சத்யா.

“ஸாரிண்ணா.. நான் உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல. வெளிய ஒரு வார்த்தைக்கூடப் பேசாத மஹாவோட அமைதியும், அவ மனசுக்குள்ளயே படுற வேதனையும்.. என்னை உன்கிட்ட இந்த மாதிரி எல்லாம் பேச வச்சிடுச்சு..”

“நீ ஏன்டா ஸாரி சொல்லுற? நான்தான் தேங்க்ஸ் சொல்லணும். எனக்கு மஹாவோட இன்னொரு பக்கத்தைச் சொன்னதே நீதான். ஆனா உனக்குமே தெரியாம அவளுக்குள்ள இன்னும் ரகசியம் இருக்கு!” என மனோ சிரிக்க, “போ ண்ணா, உங்க ரெண்டுப் பேரைப் பத்தி யோசிச்சாலே எனக்குப் பைத்தியம் பிடிக்குது!” என்று தமையனிடம் இருந்து விலகிக் கொண்டான் அவன்.

மனே மீண்டும் சிரிக்க, “நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு, என்னமோ செஞ்சுத் தொலைங்க. இப்ப என்னோட விசயத்துக்கு வா..!” என்றான் சத்யா.

“ஏன்டா, எனக்கும் மதிக்கிட்ட இருந்து அடி வாங்கித் தர பிளான் போடுறியா நீ?”
“ப்ச் என்ன ண்ணா, நீ பேசினா அவ நிச்சயம் நோ சொல்ல மாட்டா..”

“ஏன் அப்படி..?”
“ஏன்னா, நீ அவளோட அக்கா வீட்டுக்காரன். செல்ல அத்தான்!”

“இது வேறையா, நல்லா கோர்த்துவிடுறடா நீ!”
“என்ன ண்ணா தம்பிக்காக இதுக்கூடச் செய்யக் கூடாதா?”

“வேற வழி, கேட்டுட்ட முடியாதுன்னா சொல்ல முடியும். ம்ம் செய்யிறேன்!” என மனோ சலிப்புடன் உரைக்க, மெலிதாய்ச் சிரித்தான் சத்யா.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

8) என்னுயிர் நீதானே

27. எனதழகே[கா]