in

மௌனத்தின் மனசாட்சி -29&30

அத்தியாயம் 29

கிருஷ்ணா இதயா கல்யாணம் நிச்சயம் ஆனதும், திருமணம் முடிக்கிற வரை எங்களோடு இரு என்று அவளது பெற்றோர் அவளை அழைத்து சென்று விட்டனர். லீவு கிடைக்காது, என்று கூறியவளிடம் வேலையை விட்டு விடு,  வேண்டுமானால் கல்யாணத்திற்கு பிறகு மாப்பிள்ளையின்  ஆசைப்படி அங்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்..

சென்னையில் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று பிரபாகரன் சொல்லிவிட அவர்களும் சம்மதித்தனர்.. கல்யாணத்திற்கு நகை, பட்டுப்புடவை எடுக்க என்று இதயாவை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோர் வந்திருந்தனர்.

“என்ன மதினி மாப்பிள்ளை வரலையா.? அவருக்கு பிடித்தது அவர் எடுத்துக்க வேண்டாமா..?”

“சொல்லி இருக்கேன்.. ஏதோ லீவு கிடைக்கலன்னு சொன்னான். பாப்போம் இன்னைக்கு நைட் வரானான்னு..” அத்தை  சொன்னதைக் கேட்டு கொண்டு இருந்தாள் இதயா. அவர்கள் பேசிக்கொள்ள, அந்த இடத்தை விட்டு நைசாக நழுவி வாசலுக்கு வந்தாள். தனது எண்ணிலிருந்து கிருஷ்ணாவை அழைத்தாள்.

“ஏய் சர்ப்ரைஸா இருக்கு.. இத்தனைநாள் இல்லாம இன்னைக்கு கூப்பிட்டு இருக்கே..?”

“அப்போ இத்தனை நாள் நான் போன் பண்ணுவேன்னு எதிர் பார்த்தீங்களா  என்ன..?”

“அப்படியும் இருக்கலாம்..!”

“புரியலையே..?”

“உங்க வர்க்கம் எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே, போனும் கையுமாத்தான் இருக்காங்க. நீயும் அப்படி இருப்பேன்னு நினைச்சேன்..!”

“போன் பண்ணி இருந்தா நீங்க அட்டென்ட் பண்ணி இருப்பீங்களா..!”

“நிச்சயமா..!”

“அடடா மிஸ் பண்ணிட்டேனே..! ஓகே இனிமே பேலன்ஸ் பண்ணிடறேன்.. டிரஸ் எடுக்க நீங்க வரலையா..?”

“நிறைய வேலை இருக்கு லீவு இல்ல..”

“உங்களுக்கு டிரஸ் எப்படி செலக்ட் பண்றது..?”

“நான் வேணா இங்கேயே எடுத்துடவா..?”

“எனக்கு சாரி யார் செலக்ட் பண்ணுவா..?”

“நீதான கட்டப்  போற, நீயே செலக்ட் பண்ணு..”

“நோ நோ நீ வர்ற..!”

“என்ன இது மரியாதை எல்லாம் பலமா இருக்கு..?”

“நீயா வந்து இருந்தா மரியாதை பலமா இருந்திருக்கும். இப்ப வம்படியாக நான் தானே  கூப்பிடுறேன். அதனால இவ்வளவு தான் மரியாதை. நீ கிளம்பி வர்றியா அல்லது நான் அங்க வரட்டுமா..?”

“எப்படி வருவ..?”

“சொல்லாம கொள்ளாம பஸ் ஏறி மதுரையில் வந்து இறங்கி உன் பெயரைச் சொல்லி கேட்க வேண்டியதுதான்…”

‘ஐயோ, இவ செஞ்சாலும் செஞ்சிடுவா.. வீட்ல நமக்கு டின் கட்டிடுவாங்க..’ பழைய ஞாபகங்கள் அவனது நிலைமையை உணர்த்தியது..

“ஏய் அப்படி எதுவும் செஞ்சு தொலைஞ்சிராதடி. நானே வந்துடறேன்..” அலறியடித்து பதில் சொன்னான்..

“அது..” என்று வில்லி ரேஞ்சுக்கு பதில் சொன்ன வரப்போகும் மனையாட்டியை மனதுக்குள் திட்டிக்கொண்டே இரவு கிளம்ப முடிவு செய்தான்.

மறுநாள் காலை மகன் வந்ததும் புவனாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. சற்று நேரம் ரெஸ்ட் எடுத்து வருவதாக கூறி தனது அறைக்குள் தஞ்சம் அடைந்தான்..

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரபாகரன், தாத்தா, பாட்டி தவிர எல்லோரும் கடைக்கு கிளம்பி இருந்தனர். அரசு மயூரா கூட கிளம்பி வந்துவிட கிருஷ்ணா மட்டும் வரவில்லை..

“என்ன மதினி அப்போதே மாப்பிள்ளை வந்துட்டாங்கன்னு சொன்னீங்க.. இன்னும் காணோம்..?”

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்னு சொன்னான். இதயா  நீ போய் அவனை எழுப்பி கூட்டிட்டு வா. நாங்க எல்லாரும் முன்னாடி போறோம். கிளம்பும்போது போன் பண்ணுங்க, எந்த கடைக்கு வரணும்னு சொல்றோம்..” மருமகளை மாடிக்கு அனுப்பிவிட்டு மற்றவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினாள். குடும்பம் குடும்பமாக நான்கு கார்களில் சென்றனர்..

மாடியில் கிருஷ்ணாவின் அறைக்கு சென்ற இதயா கதவை தட்ட பதில் இல்லாது போகவே திறந்துகொண்டு உள்ளே சென்றாள். பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க, கட்டிலில் உட்கார்ந்து தன்னுடைய போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

குளித்து விட்டு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன், அறையில் அவளை எதிர்பார்க்கவில்லை..

“ஏய் நீ இங்க என்ன பண்ற..?”

“சாரி, அத்தை தான் உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க…” அவன் முகத்தைப் பார்க்க சங்கடப் பட்டுக் கொண்டு திரும்பிக் கொண்டு பதில் கூறினாள்.

சிரித்துக்கொண்டே, “சரி சரி ஒரு பத்து நிமிஷம் தனியா விட்டா, கிளம்பி சீக்கிரம் வந்துடுவேன்.. இல்லேன்னா நேரமாகும்..”

“சரியா பத்து நிமிஷம் தான் டைம்.. அதுக்கு மேல நேரமாச்சு.  நேரே வந்துருவேன்..” மிரட்டி விட்டு வெளியே சென்றாள்..  

சற்று நேரத்தில் படு ஸ்மார்ட்டாக கிளம்பி வந்தவனை பார்த்தவளுக்கு, சற்று முன் தான் கண்ட தோற்றமும் மனதில் வர சிரிப்பும் வெட்கமும் சேர்ந்தே வந்தது.

“என்ன நீயாவே சிரிச்சிட்டு வர..?” காரை ஓட்டிக்கொண்டே அவளிடம் கேட்டான்.

“அரை மணி நேரமா மேக்கப் பண்ணி கிளம்பி வந்து இருக்கியே, அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது..”

“நாங்களாவது அரைமணிநேரம்.. உங்களுக்கு மூணு மணி நேரம்..” அவளை வாரினான்.

“ஒரு குழாய மாட்டுறதுக்கு அவ்வளவு நேரம் ஆகுது.. எங்களுக்கு யோசிச்சு பாரு, 6 மீட்டர்ல சேலை பிளவுஸ் இத்யாதி இத்யாதி. இதப்பாரு கல்யாணத்துக்கு மட்டும் தான் சாரி கட்டுவேன். அப்புறம் சாரி கட்டணும்னு சொன்னே, இருக்கு..!” ஒற்றை விரல் காட்டி மிரட்டினாள்.

“எனக்கு நீ ட்ரெஸ்ஸே போடாட்டி கூட பிரச்சனை இல்லை. ஆனா வீட்ல எல்லார் முன்னாடியும் ஏதாவது போட்டுட்டு நடமாடு..” என்றவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்..

“ஏய், கிள்ளாதடி ராட்சசி..” இருவரும் சண்டைக்கோழிகளாக நின்றனர்.. ஆனாலும் அவர்களுக்கு இடையே இருந்த நட்பு அப்படியே இருந்தது. அவர்களால் இலகுவாக ஒன்றி கொள்ள முடிந்தது..

அவனுடைய வேலை பற்றி சொல்லிக் கொண்டே  வர சுவராசியமாக கேட்டுக் கொண்டு வந்தாள். அவளது வேலையை விசாரித்தான்.

“இப்போதைக்கு வேண்டாம். மதுரை போய் பாத்துக்கோன்னு அப்பா சொல்லிட்டாங்க…”

“ஓ அப்படியா..?”

“நீ என்ன சொல்ற..?”

“என்னோட நிலையில், நீ வேலைக்கு போறது சரிப்பட்டு வராது. என்னால உனக்கு எந்த விதத்திலேயும் ஹெல்ப் பண்ண முடியாது. ரெண்டு வருஷத்துல திருப்பி சென்னை வந்து விடலாம். அப்ப நீ நம்ம ஆபீஸ் போய்க்கோ. ஓகேவா..”

“புரியுது..”

“வேலைக்கு போக வேண்டாம்னு சொல்றது உனக்கு வருத்தம் இல்லையே..?”

“அதெல்லாம் எதுவும் கிடையாது. ஆனா உன்னோட பாக்கெட் காலி ஆயிடும் பரவாயில்லையா..?” என்று கேட்டாள்.

“அது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானே..?” பேசிக்கொண்டே கடைக்கு வந்து சேர்ந்தனர்..

அதன் பின்னர் புடவை எடுப்பதற்குள் அவனை படுத்தியதோடு மட்டுமல்லாமல், மயூராவிற்கும் புடவை செலெக்ட் பண்ண அரசுவையும் அழைத்தாள்..

“ஐயோ எனக்கு அதெல்லாம் தெரியாது..!”

“இனிமே தெரிஞ்சுக்கோங்க. பாத்தீங்களா உங்க தம்பியை, எவ்வளவு அழகாக புடவை செலக்ட் பண்ணினான்.  நீங்களும் அதேமாதிரி உங்க ஆளுக்கு செலக்ட் பண்ணுங்க..” விடாப்பிடியாக அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தாள்..

“என்னடி, உனக்கு அத்தானை செலக்ட் பண்ண சொல்லட்டா..?” அவளது அதிரடியில் ஏற்கனவே மிரண்டு போன மயூரா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“ஏய் அவங்கள அக்கான்னு  கூப்பிடணும்..” என்று அவள் அம்மா சொல்ல, “அம்மா என்னால் அதெல்லாம் முடியாது..” என்று உடனே பதிலடி கிடைத்தது..

அவளது விருப்பப்படியே இரண்டு ஜோடிக்கும் அவர்களே மாற்றி மாற்றி செலக்ட் பண்ணி புடவை வேஷ்டி சட்டை எடுத்துக்கொண்டனர்

மற்றவர்கள் தங்களுக்கு வேண்டியதை பார்த்துக் கொண்டிருக்க, இவர்கள் நால்வரும் சுடிதார், வெஸ்டர்ன்  உடைகள் கிடைக்கும் இடம் சென்றனர். தனக்கு வேண்டியதை இதயா எடுத்துக்கொள்ள, மயூரா  வேடிக்கை பார்த்து நின்றாள்.

“நீயும் செலக்ட் பண்ணு..” அருகில் வந்து அரசு கூறினான்..

“வேண்டாங்க..! எதுக்கு..?” அவள் கூறியதை பொருட்படுத்தாமல் தானே அவளுக்கு நிறைய புது உடைகள் வாங்கினான்..

“கல்யாணத்துக்கு விதவிதமா போட்டுக்கோ…” என்றான். அவளின் மௌனம் பார்த்து, “நான் வாங்கி கொடுத்தது பிடிக்கலையா..?” என்று யார் காதிலும் விழாதவாறு கேட்டான்.

“அய்யோ அப்படி இல்லைங்க..” சொல்லும் போத குரல் கமறியது. தனக்காக பார்த்து, பார்த்து செய்யும் அவனிடம் தன்னை அறியாது ஒரு பாசம் தோன்றியது. அதன் பின்னர் அவள் எதையும் மறுக்கவில்லை.. அவனுக்கு டிரஸ் எடுக்கும்போது நன்றாக இருக்கிறதா என்று கேட்டதற்கு தன்னுடைய அபிப்பிராயம் கூறினாள். உடனே மாற்றிக் கொண்டு அவள் சொன்னதை எடுத்த அவனது செயல் அவளை சந்தோஷப்படுத்தியது..

திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்ததால் எல்லோருக்குமே வீட்டில் வேலை இருந்தது.. “உனக்கு தேவையான நாள் லீவு எடுத்துக்கோ.. மற்ற நாள் அலுவலகம் வந்தால் போதும்..” என்று அரசு சொல்லிய போதும், அவனுக்கு அதிகம் வேலை வைக்கக்கூடாது என்று அவன் கூடவே அலுவலகம் சென்றாள்.

இப்போது அவள்தான் பிஏ என்பதால் அவனுடைய அனைத்து வேலைகளையும் பொறுப்புடன் செய்து வைத்தாள். வேலையின் நேர்த்தியும் அவளது அக்கறையும் அவள் மேல் மிகுந்த மதிப்பையும் அன்பையும் அவனுக்கு விதைத்தது..

தன்னுடைய அறையிலேயே அவள் இருந்ததால், போன் பேசும் போதும், மற்ற நேரங்களிலும் அவள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டே இருப்பது அவனது வழக்கமாயிற்று. அவளுக்காகவே மதியம் சாப்பாடு வீட்டிலிருந்து அனுப்ப சொல்லி அம்மாவிடம் கூறினான்.

இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். எப்போதுமே அவனது அருகில் இருக்கவும், கணவனின் திறமையும், உழைப்பும் புரிந்தது. வீட்டிலும் தானாகவே அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்ய ஆரம்பித்தாள்

யோகா, உடற்பயிற்சி செய்து வரும் முன் அவனது உடைகள் கட்டிலில் தயாராக இருக்கும். அலுவலகம் கொண்டு போக வேண்டிய பைல்கள் சூட்கேசில் அடுக்கி வைத்து விடுவாள்.

தான் குளித்துவிட்டு சீக்கிரமே கிளம்பி அவனுக்கு பரிமாறிவிட்டு, தானும் அள்ளிப்போட்டு கொண்டு பின்னாலேயே ஓடுவாள்.. 

புவனா கூட “எதுக்கு இப்படி கஷ்டப்படுற..? பேசாம வீட்ல இரு. அவன் பார்த்துப்பான்..” என்று மருமகளிடம் கூறினாள்.

“இருக்கட்டும். படிச்ச படிப்பு அவருக்கு உதவினால் நல்லதுதானே..?” என்று கூறிவிட்டாள். அவளது உண்மையான உழைப்பில் மனமகிழ்ந்து அரசு அவளிடம் உண்மையை கூறி விட்டான்.

“உன்னோட மனநிலை மாறணும்னு  குமணனுக்கு சும்மா லீவு கொடுத்து இருக்கேன்..” என்று கூறியதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆயிற்று..

“அப்போ நான் இனிமேல் ஆபிஸ்க்கு வர வேண்டாமா..?”

“இப்போ உன்னோட ஒர்க்கு பார்த்ததும் எனக்கு உண்மையான திறமை புரியுது. நான் வேற ஒரு ஐடியா வச்சிருக்கேன். ஜே.எம்.டி போஸ்ட் கிரியேட் பண்ணி அதுல உன்னை உட்கார வைக்க போறேன். உனக்கு உதவியா ஒரு பொண்ணு செலக்ட் பண்ணிக்கோ. குமணன் பழையபடி ஆபீஸ் வரட்டும். நம்ம கம்பெனி விரிவு பண்ற திட்டம் மனசுக்குள்ள ரொம்ப நாளாய் இருக்கு. அதுக்கு  நீ உதவி பண்ணு..” என்று முடித்து விட்டான்..

தன்னுடைய பிரச்சனையை மறக்க அவள் வேலையில் மூழ்குவது அவனுக்கு புரிந்து இருந்தது. தாத்தாவிடமும் அப்பாவிடமும், கம்பெனி விரிவு பற்றி பேச, கல்யாணம் முடிந்ததும் அதைச் செய்யலாம் என்று அனுமதி அளித்தனர்.

கிருஷ்ணா, இதயாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.  விஷ்ணு, சுரபி, ஆரபி மூவரும தங்களுடன் மயூராவையும் சேர்த்துக் கொண்டனர்.

சசிசேகரனும், அரசுவும், சுரபி கணவனும் சேர்ந்துகொள்ள கச்சேரி களை கட்டியது.. அவர்கள் இருவரும் தங்கள் மனைவிமாரை வாருவதில் குறியாக இருந்தனர். ஆனால் அரசு வாய் திறக்கவில்லை..

“என்ன சிஸ்டர் ஆபீஸ்ல ரொம்ப ஹெல்ப் பண்றீங்கன்னு சொல்றான்.. உண்மையாவா..?” வேண்டுமென்றே சசி மயூராவிடம் கேட்டான்.

“சும்மா அவங்க சொல்றாங்க. எனக்கு தெரிஞ்ச வேலையை செஞ்சு கொடுக்கிறேன்..” அடக்கமாக கூறினாள்.

“அவளுக்கு என்னடா தெரியும்.. அவளோட திறமை பற்றி அவளுக்கு தெரியல..” மனைவியை தாங்கி பேசினான்.

“என்னடா அதுக்குள்ள சரண்டரா..?” நண்பனின் வயிற்றில் குத்திவிட்டு சசி கேலியாக கேட்க, அவனுக்கு முகத்தில் மென்னகை படர்ந்தது.

“ஏண்டா, நீ எப்படி இருந்த? நான் சொல்லட்டுமா..? இப்பவும் அப்படியா இல்லையான்னு வேணும்னா டெஸ்ட் பண்ணிடுவோம்..” என்றவன் மாமன் மகளை அழைத்தான்..

“என்னத்தான்..?”

“சசி என்னமோ சொல்றான். கேட்டுட்டு போ..”

“என்னது..?”

“அவனைக் கண்டாலே நடுங்கும்படியா மிரட்டி வைத்திருக்கிறதா சொல்றான்.. உண்மைதானா..?”

“ஆமாத்தான், நான் கூட சொல்லணும்னு நெனச்சேன். ரொம்ப மிரட்டுறார். பேசாம இங்கு ஒரு ரெண்டு மாசம் இருக்கலாமான்னு அப்பா கிட்ட கேட்கலாம். ஆனா அவங்க பயப்படுவாங்க. நீங்க சொல்றீங்களா அத்தான். நான் ஒரு ரெண்டு மாசம் இருக்கிறேனே. அப்படியே சுரபி கிட்ட சொன்னா அவளும் இருப்பா. அண்ணி, இதயா, நீங்க, கிருஷ்ணா விஷ்ணு எல்லாரும் ஜாலியா இருக்கலாம்..” என்றாள்.

“படுபாவி.” என்று சசி அலற..

“அத்தான் என்ன இது..?” சுரபியின் கணவனும் அலறினான்..

“கூட்டணி பலமா இருக்கு. நாம தனியா இருக்கோமேன்னு கொஞ்சம் யோசனை இருக்கணும்..” நண்பனை பார்த்து சொல்ல, உன்னை வந்து கவனிச்சுக்கிறேன் என்கிற மாதிரி பார்த்து விட்டு மனைவியின் பின்னால் சென்றான் சசி..

“சுரபி..”

“ம்ம்..”

“என் செல்லம்ல..”

“யாரு உங்க பையன் தானே..”

“அவனும் தான். ஆனா  நீ தான் ஃபர்ஸ்ட்..” கன்னத்தை பிடித்து கொஞ்சினான்.

“ஏங்க எல்லாரும் பாக்குறாங்க..” அவள் வெட்கப்பட்டாள்..

“அதெல்லாம் நீ ஒரு ஓரமா தான் நிக்கிறே..”

“இல்லை. அத்தான், விஷ்ணு எல்லாரும் அந்தப் பக்கமிருந்து இங்கேயே பாக்குறாங்க..”

‘படுபாவிப் பயலுக..’ மனதுக்குள் வைதாலும், “என் பொண்டாட்டி நான் கொஞ்சுறேன். எவன் பார்த்தா எனக்கு என்ன..?”

“இவ்வளவு இருக்கிறவர் அத்தான் கிட்ட ஏன்அப்படி சொன்னீங்க..?”

“நான் எங்கடி சொன்னேன்..? அதுவும் உங்க வீட்டு ஆள்கள் முன்னாடி அதை சொல்ல முடியுமா..? அவனை  ஒரு வார்த்த கேட்டுட்டேன்.. அதுக்கு இந்த அளவு மாட்டி விட்டுட்டான்..” மனைவியை தாஜா செய்ய முடிந்த அளவு இறங்கி பேசினான்..

வேண்டுமென்றே அரசு, விஷ்ணு இருவரும் அருகே வந்து சற்று தள்ளி நின்று கொண்டனர். அந்தப் பக்கமாக வந்த சுரபி “என்னண்ணா நடக்குது..? அண்ணா என்னமோ ஆரபிட்ட சொல்லிட்டு இருக்காரு..?”

“அது எனக்கு தெரியாது. ஆமா உன் வீட்டுக்காரர் எங்க..? நீ அவரை சரியாக கவனிக்கிறது இல்லையா..?” தங்கையை ஏற்றிவிட்டான்..

அடுத்த நொடி கணவனின் அருகில் சென்றவள் அவனை கையுடன் இழுத்துக் கொண்டு அண்ணனின் அருகில் வந்தாள்..

“ஏய் என்ன ஆச்சு..?”

“நான் உங்களைக் கவனிக்கிறது இல்லைன்னு அண்ணன் சொல்றாரு. அவர்கிட்ட சொல்லுங்க..” 

“உங்க வீட்டுக்காரர் தான் சொன்னாரு..” என்று மாப்பிள்ளையை மாட்டிவிட, அங்கே இன்னொரு சீன் ஆரம்பமாகியது. இது அனைத்தையும் மயூரா  அங்கே இருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து  பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு தானும் அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் அரசு.

ரெண்டு பேரும் தங்கள் மனைவியிடத்தில் கெஞ்சி கொண்டிருக்க, விஷ்ணு அருகில் நின்று முடிந்த அளவு ஏற்றி விட்டுக் கொண்டிருந்தான்..

“என்ன நீங்க..? ஏன் இப்படி பண்ணுறீங்க..?”

“நீ வேற. ரெண்டு பேரும் பொண்டாட்டி தோப்புக்கரணம் போடச் சொன்னா போடுவாங்க. அவ்வளவு வீரத்தை வச்சுக்கிட்டு நம்மகிட்ட பேசக்கூடாது இல்ல..”

“அப்ப நீங்க பொண்டாட்டிக்கு பயப்பட மாட்டீங்களா..?” தன் போக்கில் அவள் கேட்டுவிட..

“நாங்க யாரு.. நம்ம கிட்ட அதெல்லாம் நடக்குமா..?” என்று ஆரம்பித்தவன், அவளது பார்வையைக் கண்டதும், “ஏய் சும்மா ஜாலிக்கு சொல்லுறது. நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்..” என்றான். 

“ஆனா அப்படி ஒரு காலம் வருமான்னு தெரியல..!” என்ற பெருமூச்சுடன் அவன் எழுந்து செல்லவும், அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. 

மற்ற சடங்குகள் எல்லாம் சிறப்பாக நடக்க எல்லோரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். மணமக்களின் ஜோடிப் பொருத்தமும், அழகாய் பேசிக் கொண்ட விதமும் பார்த்து மயூரா  நிம்மதி அடைந்தாள்.

மணமக்களின் தனிமைக்கும் திருமண நாளே உகந்தது என்று ஜோசியர் குறித்து கொடுத்ததால், வீட்டுப் பெரியவர்கள் அதற்கும் ஏற்பாடு செய்து இருந்தனர். சுரபி, ஆரபி அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு, கிருஷ்ணாவின் அறைக்கு இதயாவை சிம்பிளாக அலங்கரித்து அனுப்பி வைத்தனர்.

பால்வண்ண மேனியில் லெமன் எல்லோவில்  அடர்ந்த சிவப்பு நிற பூக்கள் போட்ட விலை உயர்ந்த ஷார்ஜெட் சாரியும், சிவப்பு நிற பிளவுசும் அவளது அழகை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.. 

கையை பின்புறம் கட்டி பால்கனியில் நின்றிருந்த கிருஷ்ணா கதவு தாளிடும் சத்தம் கேட்டு உள்ளே வந்தான். புதிதாய் பிறந்த வெட்கத்துடன் அங்கு நின்ற இதயாவை பார்த்தான். ஏற்கனவே அவள் தன்னை கேட்டது நினைவுக்கு வந்தது. அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது அவனுடைய கடமையாக இருக்கும்.  அதே தானே இவளுக்கும்.

இனி இதுதான் தனது வாழ்க்கை. இதை சந்தோஷமாக தொடங்குவது தன் கையில் தான் இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. எல்லாவற்றையும் கனவென உதறிவிட்டு படுக்கையில் அமர்ந்தான்..

மௌனமாக அவள் கொடுத்த பாலை அருந்தினான். பால் சொம்பை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு, இனி என்ன செய்வது என்பது போல் திரும்பாமல் அங்கேயே நின்றவளின் தயக்கம், அவனது முடிவை உறுதி படுத்தியது.

எழுந்து அவளருகில் சென்று வலது தோளில் தனது கையை வைத்தான். அவளது மேனி சிலிர்ப்பை அவனது கைகள் உணர்ந்தது. பேச்சற்ற மௌனமே அவர்களின் மனதை இணைக்கும் பாலமாக அமையும் என்று உணர்ந்து விளக்கை அணைத்து விட்டு அவளை தன் கைக்குள் கொண்டு வந்தான்

ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதால் எவ்வித தயக்கமும் இல்லை. அவளுடைய மௌனமும் சம்மதத்தை சொல்ல,  இயற்கையாக அந்த வயதுக்குரிய உணர்வுகளும் தூண்டுகோலாக அமைய அவர்களது தாம்பத்தியம் இனிதே அமைந்தது..

மனதிலுள்ள கசடுகள் போக, இனிதான உணர்வுகள் அவனுக்கும் முழு திருப்தியை தர, மனைவியை அணைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கினான். மறுநாள் காலையில் எழுந்தது முதல் தன்முகம் பார்க்க வெட்கி கீழே மற்றவர்கள் இடையே சுற்றிக்கொண்டு இருந்தவளை கண்டும் காணாது போல் அவனது கண்கள் ரசித்தது.

மறுநாளே  எல்லோரும் மறுவீடு சென்றனர். அரசு மட்டும் தனக்கு வேலை இருக்கிறது என்று வர மறுத்துவிட்டான். இதயாவின் வற்புறுத்தலால் மயூரா அவர்களுடன் சென்றாள். காலையில் போய்விட்டு இரவு திரும்பி விட்டனர்..

இரண்டு நாள் கழித்து வேலையில் சேரவேண்டும் என்று கிருஷ்ணா சொல்ல புவனா, பிரபாகரன் மற்றும் இதயாவின் பெற்றோர் அவர்களுடன் சென்று தனிக்குடித்தனம் வைத்துவிட்டு திரும்பி வந்தனர்..

இதயாவின் அம்மா மட்டும் ஒரு வாரம் இருந்து மகளுக்கு எல்லா வேலையும் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்துவிட்டு வந்து சேர்ந்தார். கிருஷ்ணாவுக்குமே வாழ்க்கை புதிதாக மாறியது போல் இருந்தது. ஒரு பெண்ணின் வரவு இந்த அளவு தன்னை மாற்றுமா, என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.  தன்னால் முடிந்த அளவு சந்தோஷமாக அவளுக்காக நேரம் ஒதுக்க முனைந்தான்..

சில சமயங்களில் அவனது வேலைப்பளு புரிந்துகொண்டு, ஆதரவாக அவள் இருக்க, அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை சினிமாவுக்கு செல்லலாம் என்று அவளிடம் கூறி இருந்தான். ஐந்து மணிக்கு அலங்காரம் செய்துகொண்டு அவனையும் கிளம்ப சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, அவனுக்கு ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்துவிட்டது.. 

இதோ வருகிறேன் என்று போனவன் வரவே இல்லை. இரவு 12 மணிக்கு வர, எதுவுமே சொல்லாமல் அவனுக்கு உடை எடுத்துக் கொடுத்து சாப்பாடு வைத்தவளை பார்த்து அவனுக்கு தான் பாவம் ஆகி போயிற்று..

“சாரிடி..” அவன் இறங்கிய குரலில் கூறினான். அவன் தலையை செல்லமாக கலைத்தவள், “உன்னோட வேலை அப்படி.. இது கூடத் தெரியாதா என்ன..? இதுக்கு போய் எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம்..!” என்றாள். தன்னை சரியாக புரிந்து வைத்திருக்கும் மனைவியின் பால் அவனது மனம் முழுதாய் சாய்ந்தது. அந்த வகையில் இதயா கணவனின் மனதை ஜெயித்து, அவனை முழுவதும் தனக்கு உரியவனாய் ஆக்கிக் கொண்டாள்.

அரசு, மயூராவின் வாழக்கை வழக்கம் போல சென்றது.. அவனுடனே ஒட்டிக் கொண்டு அலுவலகம் செல்வது, வீட்டிற்கு வந்த பின்பு மாமியார் கூட கொஞ்ச நேரம் இருந்து விட்டு பின்னர் தன் அறைக்குள் அடைந்து கொள்வது என்று ஒரு வட்டத்துக்குள் தன்னை வழமைப் படுத்திக் கொண்டாள்

அரசுவும் புதுக் கம்பெனி ஆரம்பிக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ஒருவகையில் அது இருவருக்கும் வசதியாக இருந்தது. கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும், அவனுடன் சிரித்து பேசவும், அலுவலக விஷயங்களை அலசி ஆராயவும் தயங்காதவள் தன்னுடைய மனக்கதவை மட்டும் பூட்டிக் கொண்டாள்.

உடைத்து உள்ளே போகத் தோன்றாமல் தானாக கதவு திறக்கும் என்று காத்து நின்றான் இளவல்.

வீட்டில் உள்ள பெரியர்களுக்கு இவர்களின் நாடகம் புரிந்தது. மனதுக்குள் கவலைப்பட ஆரம்பித்தனர்.

அத்தியாயம் 30

நான்கு மாதங்கள் விரைந்து ஓடியது. அன்று அதிகாலையிலேயே கிருஷ்ணா போன் செய்து  தாங்கள் அம்மா அப்பா ஆகப் போகும் நற்செய்தியை சொல்ல, பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்

“இதயாவை சீக்கிரமே கூட்டிட்டு வர சொல்லணும்..!” என்றாள் புவனா.

“அவசரப்படாதே. முதல்ல அவங்க அம்மா ஒரு பத்து நாள் போய் இருக்கட்டும். நம்ம அனு கிட்ட, அவங்க செக் பண்ணின டாக்டர் கிட்ட கேட்டுட்டு வரச் சொல்லலாம்..”

“யாருப்பா வரப்போறா..?” கேட்டுக் கொண்டே டைனிங் ஹாலுக்கு வந்தான் அரசு. அவன் பின்னாலேயே  மயூராவும் வந்தாள். கணவனுக்கு தட்டில் பரிமாறிவிட்டு, தனக்கும் வைத்துக் கொண்டு அவனது அருகில் உட்கார்ந்தாள்

“இதயாதான். அவளுக்கு குழந்தை பிறக்கப்போகுது. நாலு மாசம் ஆகுதுன்னு டாக்டர் சொன்னாங்களாம். வேலை செய்ய முடியல, கஷ்டப்படுறான்னு சொன்னான். நான் வரட்டான்னு கேட்டேன். வேண்டாம்மா, அவங்க அம்மா வரேன்னு சொல்லி இருக்காங்கன்னான். ஒரு மாசம் கழிச்சு இங்க கூட்டிட்டு வந்துடுன்னு சொல்லி இருக்கேன். இங்கே நம்ம ஹாஸ்பிடல் இருக்கு. எல்லாரும் இருக்கோம், பாத்துக்கலாம்..” என்றாள்.

அப்படியா என்பது போல் கேட்டுக் கொண்டு, ஒரு பதிலும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து கிளம்பினான். அவனது பின்னாலேயே மயூராவும் அவசரமாக சென்றாள்.

காரில் செல்லும்போது, “அத்தை சொன்னதுக்கு ஒரு பதிலும் சொல்லாம வந்துட்டீங்க. சந்தோஷம்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல.” என்றாள்.

அவன் பதிலே பேசாமல் வந்தான்.  அவனது மௌனம் அவளது மனதை உறுத்த, “சாரி..” என்றாள்.

“எதுக்கு..?”

இப்போது மௌனம் அவளது முறை ஆயிற்று. கனத்த இதயங்களுடன் அலுவலகத்தை அடைந்தவர்களை அவர்களது வேலை விழுங்கிக் கொண்டது.

ஒரே மாதத்தில் இதயாவை அழைத்து வந்துவிட்டனர். அதன்பிறகுதான் உண்மையிலேயே  மயூராவுக்கு சோதனைகள் ஆரம்பமாயிற்று. தோழி வந்தது சந்தோஷமாக இருந்தாலும், மாமனார், தாத்தா இவர்களைத் தவிர மற்றவர்கள் பார்வையில் இவள் மேல் தெரிந்த குற்றச்சாட்டு அவளைப் பாடாய்படுத்திற்று..

இதயாவை வீட்டினர் அனைவரும் தாங்க, கிருஷ்ணா வாராவாரம் மனைவியை பார்க்கவென்று சென்னைக்கு வந்தான். எப்போதும் வேலை முக்கியம் என்று நினைப்பவன் ஞாயிறு முழுவதும் மனைவியை பிரியாமல், அவளுக்கு சிறுசிறு சேவைகள் செய்வதிலும், மாலை அவளுடன் தோட்டத்தில் நடப்பதிலும் பொழுதை கழித்தான்

சில சமயங்களில் விஷ்ணு, அரசு, எல்லோரும் சேர்ந்து கொள்ள ஒரே அரட்டையும், சிரிப்புமாக நேரம் செல்லும். அந்த சமயங்களில் எல்லாம் மயூரா ஒதுங்கி வேலை இருக்கிறது என்று சென்று விடுவாள்.

இதை கவனித்துக் கொண்டிருந்த இதயா ஒரு நாள் மயூரா மட்டும் தனியாக அவளுடன் இருந்த பொழுது வாங்கு, வாங்கு என்று வாங்கிவிட்டாள்.

“நீ என்னதான் உன் மனசுல நினைச்சுட்டு இருக்கே..?” 

“என்னடி திடீர்னு இப்படி கேக்குற..?”

“வேற எப்படி கேப்பாங்க..? கொஞ்சமாவது அத்தானை பத்தி நினைச்சு பார்த்தியா..? உன்னாலே அவர் வாழ்க்கையும் பாழாகுது..”

“எனக்கு புரியுது. ஆனா என்னால முடியல. வேற கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு அவர் கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன்…”

“உங்க குடும்பத்துக்கு கல்யாணமெல்லாம் விளையாட்டா போச்சா..? உங்க அப்பா கல்யாணம் பண்ணுன்னு  சொல்லுவாரு. நீ டைவர்ஸ் பண்ண சொல்றியா. அவர் உன்னை மனசாரத்தானே ஏத்துக்கிட்டு இருக்காரு. அப்புறம் உனக்கு என்ன..?” என்று திட்டவும் அழுதுகொண்டே தனது அறைக்கு சென்று விட்டாள்.

லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவன் அழுதுகொண்டே வந்த மனைவியை பார்த்தான்.

“என்னாச்சு ஏன் திடீர்னு அழறே..? யார் என்ன சொன்னா..?” என்று விசாரித்தான்.

பதிலே சொல்லாமல் கண்ணீர் விடவும், “அம்மா அல்லது பாட்டி ஏதாவது சொன்னாங்களா.? நான் போய் கேட்கவா..?” என்று கிளம்பினான்..

“ஐயோ இல்ல. போகாதீங்க நான் என்னை நினைச்சுதான் அழறேன்..”

“இத்தனை நாள் இல்லாமல் இன்னைக்கு என்ன புதுசா..?”

“எல்லாம் என்னால தான். அதான் எனக்கு அழுகையா வருது..”

“அப்படின்னு யார் சொன்னா..? உன்னோட பிரண்டா..?” சரியாக கேட்டான்..

“யார் சொன்னா என்ன..? அது உண்மைதானே..? ப்ளீஸ். என் மனசாட்சி எனக்கு உறுத்துது.. உங்களுக்கு குழந்தை வேணும்னா ஆசை இல்லையா..?”

“யார் இல்லைன்னு சொன்னா..? ஆனா அதுக்காக எல்லாம் வேற யோசிக்க முடியாது..” 

“இந்த ஜென்மத்துல அப்போ உங்களுக்கு குழந்தை வேண்டாம்.. அப்படித்தானே..?” என்று அவள் கேட்கவும்,  அருகில் வந்து அவளை உற்றுப் பார்த்தான்.

“நீ எப்பவும் என்னை  தனியாவே பிரிச்சு பார்க்கிறே. நான் உன்னை  சேர்த்தே தான் பார்க்கிறேன். எனக்கு வாழ்க்கை இல்லைன்னா உனக்கு மட்டும் தனியா வாழ்க்கை இருக்கா என்ன..? உனக்கு இல்லாதது எனக்கு வேண்டாம் மயூ..” என்று சொல்லவும் அவள் உடைந்தாள்.

விக்கலும் பொருமலுமாய் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதவளை அணைத்து கொண்டான். வெகு நேரமாயிற்று அவளது அழுகை அடங்க..

நெஞ்சில் இருந்து முகத்தை நிமிர்த்தி, “உங்களுக்கு என் மேல கோவமே வரலையா.?” என்று கேட்டாள்.

“எதுக்கு கோபப்படணும்..? நீ என்ன தப்பு பண்ணின..? யாரோ செய்த தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்கிற!”

“எனக்கு சரி. உங்களுக்கு ஏன் தண்டனை..?”

“இந்த ஜென்மத்துல நீதான் என் மனைவின்னு எழுதி வைத்திருக்கும் போது, உன்னோட நல்லது, கெட்டது எல்லாத்திலேயும் எனக்கும் பங்கு இருக்கு. அதனால நான் அதை ஏத்துக்க தான் வேணும்..”

“நீங்க இவ்வளவு நல்லவராக இருந்து இருக்க வேண்டாம்..” என்றவள் மீண்டும் அழுதாள்..

“அழுறதை நிறுத்து.. அவ கேட்டதையே நான் கேட்கிறேன்..? என்னோட வாழ்வதில் உனக்கு என்ன தயக்கம்..?” என்றதும் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள். அவளது முகம் சீரிய சிந்தனைக்கும் சென்றது. தனது பதிலை எதிர்பார்த்து காத்து இருப்பது புரிய மனதில் உள்ளதைச் சொல்ல தயாரானாள்.

“எனக்கு என்னவோ அந்த சம்பவம் நடந்ததிலிருந்து  ‘அது’ மேலேயே ஒரு வெறுப்பா இருக்கு. என்னால் அதை கற்பனை பண்ணி கூட பார்க்க முடியவில்லை. அதையும் மீறி உங்களை பற்றி யோசிக்கும் போது அந்த நினைவு வந்தால், கையில இருக்குறத வெச்சு அடிக்கணும் போல தோணுது. உங்களுக்கு  சம்மதம் சொல்லிட்டு, எங்கே என்ன மீறி உங்களை தாக்கி விடுவேனோன்னு  பயமா இருக்கு. என்னால அதுக்கு உடன்படும் மனைவியா இருக்க முடியும்னு தோணலை.  ப்ளீஸ்..”

“என்னை பிடிக்கலையா..?”

“ஐயோ உங்களை பிடிக்கலைன்னு நான் எங்கே சொன்னேன்..?” 

“சரி பயப்படாதே. இதை பற்றி அப்புறம் யோசிக்கலாம்..” என்று ஆறுதல் படுத்தினான். சற்று நேரம் பேச்சை மாற்றி, பல விஷயங்கள் அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.

அன்று இரவு அவளிடம், “இங்க பாரு  மயூ, என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல..” என்று கேட்டான்.

“ஆமாம்..”

“அப்ப நான் சொல்றதை கேளு. எதுக்கும் பயந்துகிட்டே இருந்தா, நாம அதுல ஜெயிக்க முடியாது. உன்னோட சம்மதத்தோட நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு  நினைக்கிறேன். ஒருவேளை இடையிலே உனக்கு விருப்பமில்லை என்றால் உன்னை வற்புறுத்த மாட்டேன். ஆனா அது எந்த ஸ்டேஜில் என்பது நமக்கு தெரியணும்

தெரிஞ்சாதான் அதை குணப்படுத்த முடியும். இது ஒரு வியாதி தான். வேற எதுவும் இல்லை. பிடிக்காத ஒரு நிகழ்வோட வெளிப்பாடு.  விட்டால் பெரிய அளவு மன நோயாக மாறிவிடும். உன்னோட குற்றவுணர்ச்சி பிளஸ் இயலாமை இரண்டு சேர்ந்து உன்னை மன நோயாளியா மாற்றி விடும். இதுவரைக்கும் எனக்கு விஷயம் தெரியாததால் நான் பேசாம இருந்துட்டேன். இனி அப்படி இருக்க முடியாது. உன்னை குணப்படுத்தியே ஆகணும். அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு வேண்டும்.. சரியா..?” என்று கேட்டான்.

அவளது கண்கள் வியப்பில் விரிய, அதில் அவனது முதல் முத்திரை எழுதப்பட்டது. கவித்துவமாக மாறியவன் அவளுடைய அழகை வாய் விட்டு புகழ ஆரம்பித்தான்.   கண்கள், கன்னம் மூக்கு, உதடு என்று வர்ணனையோடு அவளுக்கு கிடைத்த முத்திரைகள் அவளது நினைவை எங்கோ கொண்டு சென்றது.

“நான் மட்டும்தான் உன்னை வர்ணிக்கணுமா..? என்னை பத்தி சொல்ல எதுவும் இல்லையா என்ன..?” என்று அவளிடம் கேட்க வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்.

“நோ இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்..”

“எனக்கு உங்களை மாதிரி கவிதையாய் எல்லாம் பேச வராது..”

“சரி பேட்டை தமிழ்ல சொல்லு.”

“பேட்டை தமிழா..”

“அதான் மெட்ராஸ் பாஷை..  கூவம் பாஷை..?”

“அது எப்படி பேசுவாங்க..?”

“என்னா நயினா படா ஷோக்கா கீறயே. இப்படி சொன்னா ரொம்ப அழகா இருக்கிறதா அர்த்தம்..” அவன் சொன்னதும் வாய்விட்டு கலகலவென்று சிரித்தாள். அவளது சந்தோஷத்திலேயே கவனம் செலுத்தி மேலும் முன்னேறினான்

சின்ன சின்ன சீண்டல்கள், வருடல்கள் அவளது உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்ய, கண்களை மூடினாள்.. 

அந்த தைரியத்தில் மேலாடைகளை அவன் விலக்க முற்படும் போது, அவளது உணர்வுகள் மாறுவதை அவனது தேகம் உணர்ந்தது. அதுவரை இளகிப்போய் இருந்த தேகம் விறைப்புற அவளது மூச்சு வேகமாக வர ஆரம்பித்தது. கைவிரல்களை கொண்டு படுக்கையை இறுகப்பற்றி,  தன்னை அடக்கிக்கொள்ள போராடினாள்.

என்னதான் நடக்கும் என்று பார்த்து விடுவோமே என்ற தைரியத்தில், மேலாடையை நீக்கி, அவள் மேல் கவிழ்ந்தான். அடுத்த நொடி என்ன நடந்தது என்பது தெரியவில்லை. தன்னையறியாமல் வேகமாக அவனைத் தள்ளி விட்டாள். எதிர்பார்த்தே இருந்ததினால், ஒரு சிறிய தடுமாற்றத்தோடு கட்டிலிலிருந்து கீழே உருண்டு விழுந்தான்

தனது புடவையை எடுத்து போர்த்திக் கொண்டவள் கைகால் நடுக்கத்துடன், “என்னை விடு விடு விடு..” என்ற வார்த்தையோடு கதற ஆரம்பித்தாள். ஒரே தாவலில் கட்டிலுக்கு வந்தவன் அவளை அணைத்து ஆறுதல் படுத்த முற்பட, அவனுக்கு அடங்காமல் கையை வைத்து அவனது நெஞ்சில், முகத்தில் கீறி விட்டாள். அவளை பலமாக உலுக்க நிதர்சனத்திற்கு வந்தவள் கணவனைப் பார்த்து அதிர்ந்தாள்.

அவனது காயங்களை பார்த்தவள், தன்னுடைய தலையிலேயே அடித்துக் கொண்டாள். “இதுக்கு தான் சொன்னேன்.. என்ன விட்டுடுங்க. நீங்க ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க..” பழைய பல்லவியை பாட, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

குமுறிக் குமுறி அழுத மனைவியின் வேதனை அவனுக்குப் புரிந்தது. எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத நிலை. ஆனால் வந்துவிட்டது. சரி பண்ணி தானே ஆக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தான்..

அதற்குள் தன்னை திருத்திக் கொண்டு எழுந்தவள் அவனுடைய காயத்திற்கு மருந்திட்டாள். “நான் பாவி. எப்படி கீறி வைச்சிருக்கேன் பாருங்க. நாளைக்கு எந்த முகத்தோடு நீங்க வெளியில எல்லார் முன்னாடியும் போவீங்க. என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க..” என்று அழுதாள்..

“உஷ் அதெல்லாம் நான் சமாளிச்சுக்கறேன். முதல்ல நாளைக்கு என்கூட டாக்டர் கிட்ட வா..” என்றான்.

அவனது முகம் வெளிறியது. “டாக்டர்கிட்டயா..?”

“ஆமா எனக்கு ரொம்ப தெரிஞ்ச டாக்டர்தான் விஷயம் வெளியில் போகாது. கவலைப்  படாதே..” என்றவன் அப்பொழுதே பேசி அப்பாயின்மென்ட் வாங்கி வைத்தான்.

மறுநாள் கவனமாக கன்னத்தில்  பேண்ட் எய்ட் போட்டுக்கொண்டு வெளியே சென்றான். எல்லோரும் கேட்டதற்கு சேவிங் பண்ணும் போது, பூச்சி பறந்து  முகத்தைச் சுற்றி வர, கை தடுமாறி காயம் பட்டு விட்டது என்று கூறிவிட்டான்.

அலுவலகம் செல்கிறோம் என்று கூறிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அவன் சென்றது நேரே டாக்டரிடம்.. அந்த மனோதத்துவ டாக்டர் ஒரு பெண்மணி. இவனை வெளியில் அமர வைத்துவிட்டு அவளிடம் மட்டும் தனியாக ஒரு மணி நேரம் பேசினார். எல்லா விஷயங்களையும் சொன்னதோடு நேற்று நடந்ததையும் சொல்லி அழுதாள்..

“கவலைப்படாதே.. உனக்கு நடந்த பாதிப்புக்கு இந்த அளவு பிரச்சனை என்பது ரொம்ப சாதாரணம்.. சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்..” என்று ஆறுதல் அளித்தார். அவனை அழைத்து பேசினார்.

“வாரம் ஒரு சிட்டிங். கூட்டிட்டு வாங்க. கவுன்சிலிங் கொடுக்கலாம். ஒரு ரெண்டு மூணு மாசம் வரவேண்டியிருக்கும். அவ்வளவுதான்..” என்று சொல்லி சில விட்டமின் மாத்திரைகளை எழுதி கொடுத்தார்.

திரும்பி வரும்பொழுது, “குணம் ஆயிடுமா..?” என்று கணவனிடம் கேட்டாள்.

“குணம் ஆகணும். என்னோட சந்தோஷமாக வாழணும்னு நீ நினை. அந்த எண்ணம் தான் உன்னை குணப்படுத்தும்..” என்றவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஐ லவ் யூ..” வாய் வார்த்தைகளை உதிர்க்க கண்கள் கண்ணீரை சொரிந்தன.

“என்னடா..?  அழாதே. உன்னோட கண்ணீரை நான் இனி பாக்கவே கூடாது. நல்ல விஷயங்களை வாழ்க்கையில மறக்கவே கூடாது அப்படின்னு சொல்ற மாதிரி, கெட்டதை நினைக்கவே கூடாது. ஆனா நாம எல்லோருமே நல்லதை உடனடியா மறந்துடறோம். தீமையை எப்போதும் நினைச்சுக்கிட்டே இருக்கோம். இனி அது கூடாது. சரியா..?” என்று கேட்டான்.

அவனுக்காகவாது தான் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அதன் பிறகு இருவரும் தனிமையாக இருக்கும் பொழுது அவளாகவே விரும்பி அவனை தொட்டாள். அவனது தோளில் சாய்ந்து கொள்வது, நெருங்கி அமர்வது, அவனுடைய கையை பிடித்துக் கொண்டே பேசுவது என்று தன்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தாள். அவளது எண்ணம் புரிந்து முடிந்தவரை தனிமையில் இருக்கும்போது அவளை தன் கை வளைவுக்குள் நிறுத்திக் கொண்டான்.

சினிமா, கோவில் என்று அவளை அழைத்துச் சென்றான். அலுவலக வேலைகளை ஒதுக்கி விட்டு அவளுடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தான். சுரபி, ஆரபி கூட அவர்களை கேலி பண்ணும் அளவுக்கு மனைவியை சுற்றி சுற்றி வந்தான்.

“என்னத்தான் என் வீட்டுக்காரரை அந்த ஓட்டு ஓட்டுவீங்க.. இப்ப நீங்களே அப்படித்தான் இருக்கிற மாதிரி இருக்கு..!” என்றாள் ஆரபி

“இப்ப என்ன பிரச்சினை உனக்கு? அவன் உனக்கு தோப்புக்கரணம் போட வேண்டாமா.  சரி நான் சொல்லிடறேன்..” என்றதும் அவள் அலறினாள்.

“உங்க வழிக்கே வரலை.. இப்ப என்ன..? அக்கா கூட நீங்க எப்படி வேணா ரொமான்ஸ் பண்ணுங்க. நாங்க கண்ணை முடிக்கிறோம். அல்லது பார்த்தா கூட பார்க்காதது மாதிரி போயிடறோம்..” சாஷ்டாங்கமாய் அடிபணிந்தாள்.

“ஹா..ஹா..ஹா..” அவன் சிரித்த சிரிப்பை பார்த்து கிருஷ்ணாவுக்கு கண்கலங்கியது. தனது அண்ணன் இப்படி சிரித்து வெகு நாட்கள் ஆகி விட்டது என்பது அவன் அறிவான்.

தம்பியின் பார்வையைக் கண்டு ‘என்னடா..?’ என்று விசாரித்தான்

“என்னோட பழைய அண்ணாவை இன்றைக்கு தான் பார்க்கிறேன்..” என்ற தம்பியை அணைத்துக்கொண்டான்.

“உன் பையன் என்னடா சொல்றான்..?”

“அவதான் பையன் சொல்றா.. நான் பொண்ணு தான் வேணும்னு நினைக்கிறேன்..” என்றான் சிறிது வெட்கத்துடன்.. 

“பொண்ணு பிறந்தால் பொறுப்பு வரும்.. மூத்தது பொண்ணு, இளையது பையனும் பிறந்தால் நல்லது..” என்றாள் புவனா.

“ஏன்மா அப்படி சொல்றீங்க..?”

“மூத்தது பொண்ணா இருந்தா, அப்பா நடுத்தர வயசு, நல்ல திடகாத்திரமாக இருக்கும் போதே கல்யாணம் பண்ணி கொடுத்து பொறுப்பு முடிச்சிடலாம்.. அவர்கள் தளரும்போது பையன் தாங்கி நிற்பான்.‌ இதெல்லாம் 25 அல்லது 26 வயசுல பையனுக்கு கல்யாணம் பண்ணினா  நடக்கும். ஆனா இப்ப எல்லாரும் கல்யாணம் பண்றதே முப்பது வயசுக்கு மேல தான்..”

“இந்த காலத்துல எல்லாரும் செட்டிலான பிறகு தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறார்கள். அதுல தப்பு எதுவும் இல்லம்மா..” என்றான் கிருஷ்ணா.

“இதயா டியூ டேட் என்னைக்கு..?”

“மூணு மாசம் இருக்கு..” என்றான்.

“டேக் கேர்..” என்றான் தம்பியின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி

நாலைந்து சிட்டிங்லேயே ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது. சதா அதைப்பற்றி நினைத்துக் கொண்டு மற்றவர்களிடம் ஒதுங்கிப் போகும் பழக்கத்தை விடுத்து பேசிப் பழகலானாள்

சுரபி, ஆரபி குழந்தைகளுடன் நன்கு விளையாடவும், அவர்களுடனும் மனம் விட்டு பேசவும் செய்தாள்.  இதயாவிடம் அவளது குழந்தையை பற்றி பேசி தெரிந்து கொண்டாள். அவளது உடல் நிலை மாற்றம் பற்றி நிறைய கருத்து கேட்டாள்.

“என்னடி இதெல்லாம் கேட்குற..? சொல்லி புரியாது. இது எல்லாம் அனுபவிச்சு பாக்கணும். தாய்மை, பத்து மாசம் சுமக்கிறது எல்லாம் ஒரு அனுபவம். ஒரு சுகம். பிடித்த கணவனை நெஞ்சில் சுமந்து, குழந்தையை வயிற்றில் சுமக்கிறப்போ, புருஷன் கொண்டாடினா  அதுதான் சொர்க்கம். உனக்கும் அது கிடைக்கணும். அத்தான் ரொம்ப நல்லவர். நீ அவரோட வாழ முயற்சி பண்ணு. உனக்கே புரியும்..” மிருதுவாக கூறினாள்..

அன்றிரவு கணவனிடம், “உங்களுக்கு என்ன குழந்தை பிடிக்கும்..?” என்று கேட்டாள்

“தள்ளி இருந்து கேட்டா பதில் கிடையாது பக்கத்துல வா சொல்றேன்..”

“ம்ம், வந்தாச்சு, சொல்லுங்க..” என்றவளை அவள் கழுத்தில் மாலையாக தன் கைகளை போட்டு முன்னால் இழுத்து அவளது நெற்றியில் முட்டினான்..

“உன்னைப் போல ஒரு சின்ன தேவதை பிறந்தா அழகா இருக்கும்..”

“ம்கூம்.. உங்களைப்போல அன்பா ஒரு பையன்..”

“இல்ல நான் சொன்னது தான்..”

“முடியாது நான் சொன்னதுதான்..” இருவரும் சற்று நேரம் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டனர். இறுதியில் அவளது வாயைத் தன் இதழ் கொண்டு மூடியவன், “இரண்டும் ஒரே சமயத்தில் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்..” என்றான்.

“இப்பதான் நான் கொஞ்சம் பரவா இல்லையே.. ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..?”

“முழு ட்ரீட்மெண்ட் முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்..” என்றவன் அவளை சும்மா அணைத்துக் கொண்டு தூங்கினான். பத்தாவது சிட்டிங் முடிந்ததும் மருத்துவர் அவனை அழைத்து அவள் முற்றிலும் குணமாகிவிட்டதை உறுதிப்படுத்தினார்.

“உங்க மனைவி பரிபூரணமாக குணமாகிட்டாங்க. தாராளமா நீங்க ரெண்டு பேரும் உங்களோட வாழ்க்கையைத் தொடங்கலாம்..” என்று கூறி அனுப்பி வைத்தார்.

சந்தோஷத்தோடு வீட்டிற்குத் திரும்பும் போதே இதயாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியை கிருஷ்ணா கூறினான். நேராக மருத்துவமனை சென்று குழந்தையை பார்த்தனர்.

ரோஜாப்பூவுக்கு கை கால் முளைத்தது போல் இருந்த பாப்பாவை பார்க்க, மயூராவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தோழிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு குழந்தையை தொட்டுப் பார்த்தாள். அதன் மென்மையான ஸ்பரிசம் அவளை  சிலிர்க்க வைத்தது. கணவனை நிமிர்ந்து பார்க்க, அவன் அர்த்தத்துடன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

இரண்டே நாளில் மனைவியை அழைத்துக்கொண்டு மொரிசியஸ் தீவுகளுக்கு ஹனிமூன் சென்றான்

“மத்தவங்க யாரும் ஹனிமூன் போனதா தெரியலை. நீங்க மட்டும் ஏன் கூட்டிட்டு வந்தீங்க..?”

“அவங்க கல்யாணம் எல்லாம் பிளான் பண்ணி நடந்தது. நம்ம கல்யாணம் அப்படி இல்லையே. என்ன பிரச்சினைன்னு தெரியாட்டாலும் நமக்குள்ள ஏதோ இருக்குன்னு எல்லாருமே யூகிச்சு இருப்பாங்க. அது வெளிப்படையாக தெரிஞ்ச மாதிரி இதுவும் தெரியும். அது ஒருவளை உன் மனசை பாதிக்கலாம். அதான் எல்லாருக்கும் தெரியிற மாதிரி ஹனிமூன் என்று சொல்லியே கூட்டிட்டு வந்துட்டேன். இங்கே உனக்கு ப்ரீயா இருக்கும்..” என்றான்..

அவனது அன்பு மழையில் நனைந்தவள், தன்னுடைய காதலை திருப்பி கொடுக்க தயங்கவில்லை.. ஒருவாரம் பிசினஸ், வீடு எதைப் பற்றியும் நினைவு இல்லாமல் வெளியிடங்களில் சுற்றி பார்க்கவும், தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளவுமாக இருந்தனர். மறுநாள் கிளம்புகிறோம் என்றபோது அவ்ள் கேட்டது ஒன்று தான்..

“ஊருக்கு போய் எங்க அம்மா அப்பாவை பார்த்துட்டு வரணும்.. நான் நல்லா இருக்கேங்கிறதையும், அதுக்கெல்லாம் உங்க மாப்பிள்ளை தான் காரணம்னு அவங்க கிட்ட சொல்லணும்..” என்று கூறி கண் கலங்கியவளை அணைத்துக் கொண்டான்.

ஊருக்கு வந்த இரண்டே நாளில் அவள் விருப்பபடி, அம்மா, அப்பாவை பார்க்க சென்றனர். அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்த சந்தோசமும், மகளின் முகத்தில் நிலவிய மலர்ச்சியும், தங்கள் பெண்ணின் வாழ்க்கை சீர் பட்டு விட்டது என்பதை அவர்களுக்கு  தெரிவித்தது. அவர்களின் வற்புறுத்தலுக்காக ஒரு நாள் தங்கியவன் அவளை ஒரு வாரம் இருந்து விட்டு வா, என்று சொல்லி விட்டு சென்றான்.

தனிமையில் மகளிடம் பேச ஆயிரம் விசயத்தை அவர்கள் வைத்து இருந்தனர். தன்னை குணப்படுத்திய விபரத்தை அம்மாவிடம் கூறினாள். “கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். இமயமாய் இறங்கிய பிரச்சனை பனியாய் மறைந்து போயிட்டுது. உன்னோட கவலையே எங்களை கொண்டு போயிடும்னு நினைச்சோம். ஆனா அந்த அம்பாள் எங்களை கைவிடலை. மெட்ராசுக்கு வந்து அவ கோவிலுக்கு ஒரு தடவை போகணும்..” அவளது அம்மா கண்களை துடைத்துக் கொண்டாள்..

நான்கு நாட்களிலேயே அவளைத் தேடுவதாக அவன் போன்  செய்ய, அவள் உடனே கிளம்புவதாக கூறினாள். தாங்களே கொண்டு வந்து விடுவதாக கூறி அவர்களும் கூட வந்தனர். அவளைக் கண்டதும் தூக்கி ஒரு சுற்று சுழற்றினான். அவளது மிரட்சி கண்டு இறக்கி விட்டு அணைத்துக் கொண்டான்

“ஏய் உன்னை விட்டுட்டு இருக்கவே முடியலை.. இன்னைக்கு மட்டும்  நீ வரலை, நாளைக்கு காலையில நானே வந்து இருப்பேன். ஆனாலும் உடனே அப்படி மாமனார் வீட்டுக்கு வர கொஞ்சம் வெட்கமாய் இருந்தது..” 

“வந்து என்ன காரணம் சொல்வீங்க..?”

“ஏதோ சொல்வேன். நமக்கு என்ன பொய்யா சொல்லத் தெரியாது..?” என்று பெருமை அடித்தவனை பார்த்து, “அப்போ இத்தனை நாள் எத்தனை பொய் சொல்லி இருக்கீங்க..?” என்றாள்.

“முதல் பொய், உன்னை விட அழகாய் உலகத்தில் யாருமே இல்லை என்றது..” என்று அவன் சொல்லி விட்டு ரசனையுடன் சிரித்தான். அவனது குறும்பு புரிந்தாலும் பதில் கூறினாள்..

“உங்களைத் தவிர எதுவுமே என் நினைவில் இல்லை.. அதனாலே நானே வந்துட்டேன்..” என்றாள். அவளது பதிலில் அவனுக்கு மனது நிறைந்து போயிற்று. இத்தகைய மாற்றத்தை தான் அவன் எதிர்பார்த்தது. அதை அவள் வாயாலேயே கேட்டதும் பெருத்த நிம்மதி அடைந்தான்

கிருஷ்ணாவின் குழந்தைக்கு மூன்றாம் மாதம் பேர் சூட்டும் விழா. விஷ்ணுவுக்கு மறுநாள் கல்யாணம் நிச்சயம்  ஆகிறது. குடும்பத்தில் எல்லோரும் குழுமி இருக்க, இளையவர்களின் கச்சேரி பலமாய் இருந்தது எல்லா ஆண்களும் சேர்ந்து விஷ்ணுவைட்டிக் கொண்டு இருக்க, அவர்களுக்கு காபி எடுத்துக் கொண்டு மயூரா வந்தாள். கொடுத்து விட்டு திரும்பும் போது தலை சுற்றுவது போல இருக்க தடுமாறியவளை அரசுவின் கரங்கள் தாங்கியது..

“ஏய் என்ன ஆச்சு..?” பதறியவன் பக்கத்தில் இருந்த சோபாவில் அவளை இருக்க வைத்தான்.. 

“ஒண்ணுமில்லேங்க..”

“உனக்கு எதுவுமே தெரியாது. இப்ப நான் மட்டும் இல்லேன்னா நீ கீழே விழுந்திருப்பே..” என்றவன் “ஏய் சுரபி அத்தையை கூப்பிடு..” என்றான்.

சற்று நேரத்தில் அனு அவளை பரிசோதித்து விட்டு சந்தோஷ செய்தியைக் கூறினாள்.

“வாழ்த்துக்கள், அரசு நீ அப்பா ஆயிட்டே..” என்றதும் அவனது மகிழ்ச்சியை வரையறுக்க முடியவில்லை..

அனைவரும் சுற்றி இருக்க அது பற்றி கவலை கொள்ளாது, “தேங்கஸ்டா..” என்று கூறி அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ள, அனைவருக்குமே நிறைவாக இருந்தது. தன் அண்ணனின் வாழ்வும் மலர்ந்ததை கண்டு கிருஷ்ணாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அவனைப் புரிந்து கொண்ட இதயா அவனது கைகளை அழுத்தி ஆறுதல் அழைத்தாள். அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட கிருஷ்ணா நிறைவோடு அண்ணனை பார்த்து புன்னகைத்தான். இரு ஜோடிகளும் தங்களது இணையுடன்  கை கோர்த்து நின்ற காட்சி  பார்த்து பிரபாகரன் நிம்மதி அடைந்தார்

இனி என்றென்றும் தன்னுடைய மகன்களின் ஒற்றுமை குலையாது என்பது அவரது நிம்மதிக்கு காரணம். அதை மாமனாரிடம் சொல்லி அவர் ஆசுவாசப் பட்ட போது, “காலம் எத்தகைய மாற்றத்தையும் கொடுக்கும் மருந்து. ஆனால் அதைப் புரிந்து கொண்டு நாமும் முயற்சிக்க வேண்டும். அந்த வகையில் கிருஷ்ணாவை பாராட்டியே ஆக வேண்டும். நிதரிசனத்தை ஏற்றுக் கொண்டு அவன் மாறியதால் தான், மற்ற எல்லோரும் எளிதாக் தங்களை மாற்றிக் கொள்ள முடிந்தது. காதல் என்பது ஒரு உணர்வு.. அது ஒருவரிடத்தில், ஏதோ ஒரு காரணத்தால்  கிட்டாது போனால், அந்த உணர்வில் தோற்று விட்டதாய் அர்த்தம் இல்லை. அது மீண்டும் யாரிடமாவது கிடைக்கும். அதற்கும் தயாராக இருக்க வேண்டும்..” என்றார்

“உண்மைதான்..” என்ற பிரபாகரன் நிம்மதியுடன் கடவுளை மனதுக்குள் தியானித்தார்.

 

                     நிறைவு பெற்றது.. 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 22 சராசரி: 4.9]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

எனை கொ (வெ)ல்லும் மௌனமே -8

காற்றே என் வாசல் வந்தாய் 4