in , , , ,

எனை கொ (வெ)ல்லும் மௌனமே -8

மௌனம் -8
         அவர்களது கார் கண்ணிலிருந்து மறையும் வரை நின்று இருந்தவர்கள் அதன் பிறகு மற்றவர்களை கவனிக்க உள்ளே செல்ல முன்றபோது தான் அனைவருக்கும் சுதன் தேவ்வைப் பற்றியும் அவனது திடீர் திருமணம் பற்றியும் நினைவு வந்தது..வேகமாக அவன் அருகில் சென்ற புகழ்,
“என்ன ஆச்சு சுதன்? நீ ஏன் இப்படி பண்ணுன?  ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியா இருக்க வேண்டிய நீயே இப்படி பண்ணலாமா? உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா அதை நீ முன்னாடியே சொல்லி இருக்கலாமே! அப்பெல்லாம் வாயைத் திறந்து எதுவும்  சொல்லாம அமைதியா இருந்துட்டு, திடீர்னு இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு வந்துருக்க! நீ செஞ்ச காரியத்தால இப்ப என்ன ஆச்சுன்னு பார்த்தியா? யாரோ ஒருத்தரை திடீர் மாப்பிள்ளையா மாத்தி, நின்னு போகயிருந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சு, நம்ம வீட்டு பொண்ணை வேற ஒரு வீட்டுக்கு அனுப்புற மாதிரி ஆயிடுச்சு. அதுவும் நம்ம பொண்ணுக்கிட்ட எந்த சம்மதமும் கேட்காமையே இந்த கல்யாணம் நடந்துருக்கு. நம்ம வீட்டு பொண்ணு மனசுல என்ன இருந்துச்சுன்னு கூட நமக்கு தெரியாது. ஏதோ இது கட்டாயக் கல்யாணம் மாதிரி நடந்து முடிஞ்சிடுச்சு” என்று சொன்னவரின் பார்வை இறுதி வரிகளைச் சொன்னபோது சிபியை தொட்டு மீண்டது…

      சுதன் தேவ் அப்போதும் அமைதியாகவே இருக்க. அவனது அமைதி மற்றவர்களுக்கு அதிக கோபத்தைத் தான் கொடுத்தது. சிபியோ, ‘கண்டிப்பாக இதுவும் தன் மாப்பிள்ளையான தேவாவின் வேலையாகத்தான் இருக்கும்’ என்று யூகித்தவாறு நின்றிருக்க அவனது யோசனையும் எண்ணமும் உண்மை என்பது போலான தகவலையே இதழ் திறந்து சொன்னான் தேவ்..

       “நான் வேணும்னே எதையும் பண்ணல. இன்னும் சொல்ல போனா நாங்க ரெண்டு பேரும் விரும்பக்கூட இல்லை. எங்க கல்யாணம் என்ன மாதிரியான சூழ்நிலையில நடந்துச்சுன்னு தெரியாம நீங்களா எதையும் சொல்லாதீங்க?” என்றவன் கண்களை இறுக மூடி திறந்து தன்னை சமன் செய்து கொண்டவாறு,“உங்களுக்கே தெரியும் நம்ம வீட்டு பொண்ணான தீபுவோட கேஸை நான்தான் எடுத்துப் பார்க்குறேன்னு. அது சம்மந்தமா நான் விசாரிச்சுட்டு இருக்கும் போது தான்,‌ இந்த பொண்ணுக்கும் எனக்கும் பழக்கமாச்சு. தீபு யார் யார் கிட்ட கடைசியா பேசியிருப்பாங்குறதை தெரிஞ்சுக்குறதுக்காக அவளோட பிரண்ட்ஸ் சர்க்கில் லிஸ்ட்டை அலசி ஆராய்ஞ்சதுல தெரிஞ்சது, இவங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சுருக்காங்கன்னு. அது மட்டும் இல்ல பிரண்ட்ஸாவும் இருந்துருக்காங்க. அதனால தான் இந்த பொண்ணு எங்க இருக்குன்னு போன் பண்ணி விசாரிச்சுட்டு மீட் பண்ண போனேன்..  அப்படி தான் எங்களுக்குள்ள பழக்கமாச்சு.
நான் அவங்களைப் பார்த்து பேசும் போது அவங்க தீபுவ நெனச்சு ரொம்ப அழுதாங்க. நான் தீபுவைப் பத்தி விசாரிக்கும் போது, பேச்சு வாக்குல தீபு எங்க வொர்க் பண்ணுனான்னு தெரியுமான்னு கேட்டதுக்கு அவங்க ரொம்ப கோவப்பட்டாங்க. கோபத்துல இவங்க எங்கிட்ட ஒரு விடயம் கேட்டாங்க.  ‘எந்த நம்பிக்கையில உங்க வீட்டு பொண்ணு எந்த ஆபீஸ்ல வேலை செய்யறான்னு கூட கேட்காம நீங்க இப்படி அசால்ட்டா விட்டீங்க’ன்னு கேட்டாங்க.  அப்ப நான் சொன்னேன்,  எங்க வீட்டு பொண்ணுங்களுக்கு எல்லாத்துலையும் சுதந்திரம் இருக்கு. அவங்க எந்த தப்பும் பண்ணமாட்டாங்க, எப்பவுமே தடுமாறி, தடம்மாறிப் போக மாட்டாங்கங்குற நம்பிக்கையில அவங்க எடுக்குற எந்த முடிவுக்குமே நாங்க குறுக்க நின்னது கிடையாது. படிக்கிற படிப்பாகட்டும், செய்யிற செயலாகட்டும், போடுற டிரஸ், சாப்புடுற சாப்பாடுன்னு , எதுலையுமே நாங்க அவங்களுக்கு கண்டிஷன் போட்டது கிடையாது. எல்லாத்துலையுமே அவங்க விருப்பம் தான். அவங்கள நாங்க கண்ட்ரோல் பண்ணனும்னு இதுவரைக்கும் நெனைச்சது கிடையாது. அதே மாதிரிதான், தீபுவும் வேலைக்கு போறேன்னு சொன்னதும் நாங்க தடுக்க நினைக்கலை போக தான் சொன்னோம். ஆனா தீபுவோ நான் எதையாவது சாதிச்சதுக்கு அப்பறம் தான் எங்க ஒர்க் பண்றேன்னு சொல்லுவேன், அதுவரைக்கும் வீட்டுல யார்கிட்டயும் இதை சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா. அதான் எதைப்பத்தியும் கேட்காம அனுப்பி வெச்சோம். அதுவும் எங்க வீட்டு பொண்ணு மேல இருந்த நம்பிக்கையில தான் இதுபோல பண்ணுனமே தவிர எப்படியோ போன்னு தண்ணி தெளிச்சு விடலைன்னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் இவங்க எனக்கு உதவி பண்றதுக்கே ஒத்துக்கிட்டாங்க.

      சொன்னது மாதிரியே எனக்கு உதவியும் செஞ்சாங்க. அவங்க மூலமா தீபு எந்த கம்பெனியில வேலை பாத்தாங்குற வரைக்கும் கண்டுபிடிச்சிட்டேன்.ஆனா நாங்களே எதிர்பார்க்காத விடயம் என்னன்னா அது சின்ன கம்பெனியா இருந்தது மட்டுமில்லாம அங்க தீப்திஷாங்குற பேர்ல யாரும் இல்லன்னு சொன்னதைத் தான். அதுக்கப்பறம் தீபுவோட போட்டோவை வெச்சு விசாரிச்சதுக்கு அப்புறமும் அங்க எந்த தகவலும் கிடைக்கல. அந்த கம்பெனிக்கு வெளிய இருக்க ஜுஸ் கடையில விசாரிக்கும் போது தான், நம்ம தீபு அங்க தீப்திஷாங்குற பேர்ல வேலைக்கு சேராம தீபிகாங்குற பேர்ல வேலைக்கு சேர்ந்து, இத்தனை நாள் ஒர்க் பண்ணிருக்கான்னு தெரிய வந்துச்சு. ஆனா ஏன் எதனால இப்படி பேர் மாத்தி சேர்ந்தாங்குற விடயத்தை இப்ப வரைக்கும் என்னால கண்டுபிடிக்க முடியல. அதை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு தெரியாம அன்னைக்கு நான் யோசிச்சுட்டு இருந்தப்ப இவங்க தான் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாங்க..
அவங்களே கேட்கும்போது நாம மறுப்பா எதையும் சொல்ல வேணாம்னு தான் சரின்னு சொன்னேன். இவங்க நானும் இதே கம்பெனியில வேலைக்கு சேர்ந்து, இங்க என்ன நிலவரம்? தீபு சொன்ன மாதிரி எதாவது பிரச்சனை இருக்கான்னு கண்டுபிடிச்சு சொல்றேன்னு சொன்னாங்க.‌ ஆனா அப்பவே நான் வேணா இதெல்லாம் ரொம்ப ரிஸ்க்னு சொன்னேன் ஆனா அவங்க கேக்கவே இல்ல. அவங்களும் அங்க வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட பத்து நாளுக்கு மேல ஆச்சு, ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு எந்த விதமான தடயமும் கெடைக்கலை. தீபு சொன்ன மாதிரி அங்க எந்த பிரச்சினையும் இல்ல, எல்லாமே நார்மலா தான் இருந்துச்சு. திடீர்னு நேத்து நைட் ரிசப்ஷனுக்கு முன்னாடி இவங்கக்கிட்ட இருந்து எனக்கு கால் வந்துச்சு. ‘இங்க ஏதோ ஒரு இல்லீகல் பிராப்ளம் இருக்க மாதிரி தோணுது சார்.  எனக்கு என்னமோ இது சரியா படலை நீங்க கொஞ்சம் இங்க வர முடியுமான்னு கேட்டாங்க. 

     நான், ‘எனக்கு விடிஞ்சா  மேரேஜ், இப்ப நிச்சயம் முடிஞ்சு ரிசப்ஷன் போகுதுன்னு இவங்கக்கிட்ட சொன்னேன். அதனால இவங்களும் எனக்கு திருமண வாழ்த்து சொல்லிட்டு என்னை வர வேணாம்னு சொல்லிட்டாங்க. ஆனா எனக்குத்தான் மனசு கேட்கல. நமக்கு உதவி செய்ய முன்வந்த ஒரு பொண்ணு அவசரம்னு சொல்லி கூப்புட்டும் நான் போகாம இருக்குறதை நெனச்சு எனக்கு ரொம்ப கில்ட்டியா பீல் ஆச்சு. கூடவே அவங்களுக்கு எதாவது பிரச்சினையோன்னு நெனச்சு எனக்கு ரொம்ப டென்ஷனா வேற இருந்துச்சு. ரிசப்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு தூக்கமே வரல. நான் அவங்களுக்கு மெசேஜ் பண்ணலாம்னு யோசிக்கும் போதே, திடீர்னு இவங்களோட நம்பர்ல இருந்து மெசேஜ் வந்துச்சு. ‘நான் ஆபத்துல இருக்கேன் காப்பாத்துங்கன்னு’. அடுத்த நிமிடம் நான் எதைப்பத்தியும் யோசிக்காம இங்கிருந்து கிளம்பி போயிட்டேன்..” என்று சொல்லி நிறுத்தியவன் அனைவரையும் தயக்கத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆதிலட்சுமியைப் பார்க்க அவளோ கண்களில் குளம் கட்டியிருந்த தண்ணீரை உள்ளிழுத்துக் கொள்ள முடியாமல் தவிப்புடன் தலை குனிந்து நின்றிருந்தாள். 

       அவளது அந்த நிலையே அவனுக்கு குற்ற உணர்வை உண்டாக்கிட. அவளது கைவிரல்களை தன் கைவிரல்களுடன்  இறுக்கமாக பிணைத்துக் கொண்டவன் ஆழ மூச்செறிந்தவாறு, “நான் அங்க போகும்போது டைம் 1மணிக்கு மேல ஆயிடுச்சு. மெசேஜ் எங்கிருந்து வந்துச்சுன்னு கண்டுபிடிச்சு நான் அந்த இடத்துக்கு போனபோது அங்க யாருமே இல்லை. சொல்லப் போனா அது ஆதிலட்சுமி ஒர்க் பண்ணுன ஆபிஸே கிடையாது.  அது ஏதோ ஒரு வீடு மாதிரி இருந்துச்சு.‌ அதைப் பார்த்ததும் என்னால வேற எதையுமே யோசிக்க முடியல. தப்பு தப்பா ஏதேதோ தோணவும் ரொம்பவே பயந்துட்டேன். உடனே எதைப்பத்தியும் யோசிக்காம அந்த வீட்டுக்குள்ள போனேன். கதவு பூட்டப்படலை, சும்மா வெறுமனே சாத்தி தான் இருந்துச்சு. நான் இருந்த மனநிலையில எதைப் பத்தியும் யோசிக்கவே இல்லை.‌ ஆபத்துன்னு மேசேஜ் வந்துச்சு, இங்க வந்து பார்த்தா யாரையும் காணோம். கூடவே வீடு ஏன் பூட்டவேயில்லைங்கிறதை எல்லாம் நான் யோசிச்சுப் பார்த்திருந்தா இவ்வளவு தூரம் இந்த பிரச்சனை பெருசாகியிருக்காது. ஆனா அந்த நேரத்துல என் மூளை எதையுமே யோசிக்கவே இல்ல. நான் பாட்டுக்கு உள்ள போயிட்டேன், ஆனா அங்க உள்ள போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது என்னை சிக்க வைக்கிறதுக்கு தான்  டிராப் ஏற்பாடு பண்ணியிருக்காங்கன்னு. நான் உள்ள போனதும் வெளிய இருந்து கதவை யாரோ லாக் பண்ணிட்டாங்க.. இவங்க அங்க கை, காலு கட்டப்பட்ட நிலையில பாவமா உட்காந்திருந்தாங்க. உடனே அவங்களோட கட்டுக்களை அவிழ்த்து விட்டுட்டு அங்கிருந்து வெளிய போக வழி தேடுனேன். எவ்வளவு முயற்சி பண்ணியும் அங்கிருந்து எங்களால தப்பிக்கவே முடியல.  எல்லா பக்கமும் கதவு லாக் ஆயிருந்துச்சு.நானும் கடைசியா கதவை உடைக்க முயற்சி பண்ணுனேன் அப்ப சரியா ஒரு மூணு மணி இருக்கும். வெளிய  யாரோ நிறைய பேர் பேசுற குரல் கேட்டுச்சு. அவங்க பேசுறதை வெச்சு பார்த்ததுல  எப்படியும் இருபது பேருக்கு குறையாம இருப்பாங்கன்னு தோணுச்சு. சப்போஸ் அவங்க உள்ள வந்தா பிரச்சினையாகும். அவங்களால எனக்கு ஏதாவது ஒன்னுன்னா பரவால்ல‍, ஆனா எனக்கு உதவி செஞ்ச பாவத்துக்காக  இந்த பொண்ணுக்கு ஏதாவது வந்துட்டா என்ன பண்றது! அதான் அந்த பொண்ண கூட்டிட்டு அங்கிருந்த ரூமுக்குள்ள போயி ஒளிஞ்சுக்கலாம்னு அவங்களை கூட்டிட்டு போனேன். அந்த ரூம்ல கல்யாணத்துக்கு தேவையான அத்தனை பொருட்களும் இருந்துச்சு.  அதையெல்லாம் பார்த்துட்டு நாங்க ரெண்டு பேரும் ஷாக்காகி அதுல இருந்து வெளிய வர்றதுக்குள்ளையே நாங்க இருந்த ரூம் கதவையும் லாக் பண்ணிட்டாங்க. நாங்க கதவைத் தட்ட நான் முயற்சி பண்ணும் போது தான் வெளியில போலீஸ் வண்டி வர்ற சவுண்ட் கேட்டுச்சு. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இதெல்லாம் எதேச்சையா நடக்கல‍, அத்தனையும் திட்டமிட்ட சதின்னு.எங்க ரெண்டு பேரையும் இந்த நேரத்துல இப்படி பார்த்தா வேற மாதிரி ஏதாவது சொல்ல கூட வாய்ப்பு இருக்குன்னு தோணுச்சு. பதட்டத்துல விடிஞ்சா எனக்கு கல்யாணங்குறதைக் கூட மறந்துட்டேன். என்னைப் பொருத்த வரைக்கும் மேரேஜ் பண்ணிக்காம ஒரு பொண்ணும் பையனும் அந்த அன்டைம்ல ஒரே ரூம்ல இருந்தா நானே வேற மாதிரி தான் நெனப்பேன். அப்படியிருக்கும் போது அந்த போலீஸ்காரங்க எங்களை இந்த நிலமையில பார்த்தா என்ன நினைப்பாங்க,  சத்தியமா தப்பா தான் நினைப்பாங்க. என்னால ஒரு பொண்ணுக்கு கெட்ட பேர் வரக்கூடாது, களங்கம் வரை கூடாதுனு நினைச்சேன். அதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவெடுத்தோம். நீங்க சொல்லலாம் நீயும் போலீஸ் தானே அப்புறம் ஏன் அவங்கக்கிட்ட உண்மைய சொல்லக்கூடாதுன்னு. நான் போலீஸாவே இருந்தாலும் ஏதாவது பிரச்சனையின்னா மேலதிகாரிங்கக்கிட்ட இன்பாஃர்ம் பண்ணிட்டு தான் எதுவா இருந்தாலும் பண்ண முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில நான் மட்டும் தனியா ஒரு பொண்ணை காப்பாத்த வந்தது தெரிஞ்சா எனக்கு தான் திட்டு விழும். கூடவே நான் சொல்றதை அவங்க நம்பவும்  மாட்டாங்க. அதனால தான் வேற வழியில்லாம நாங்க ரெண்டு பேரும் அங்கிருந்த குளியலறையில ஒருத்தர் மாத்தி ஒருத்தர் டிரஸ் மாத்திக்கிட்டோம்.  தாலி கட்டுறதுக்கு ஒரு நிமிஷம் வரைக்கும் எனக்கு கொஞ்சம் பதட்டமாவே தான் இருந்துச்சு. ஏதோ தப்பு செய்யறமோன்னு தோணுச்சு, ஆனா ஒரு பொண்ணோட மானத்தை காப்பாத்துறதை விட வேற எதுவும் பெருசா தெரியல அதான் துணிஞ்சு முடிவெடுத்தேன். இவங்க கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி, ‘,இப்போ எந்த சூழ்நிலை நான் உங்களுக்கு தாலி கட்ட போறேன்னு உங்களுக்கும் தெரியும். ஆனா இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில கல்யாணம் நடந்தாலும் கடைசி வரைக்கும் உங்களை நல்லா பார்த்துப்பேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கான்னு கேட்டேன், இவங்களும் இருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் தாலி கட்டுனேன். தாலி கட்டி முடிச்சு ரெண்டு நிமிஷம் கூட ஆகல, திமுதிமுன்னு கதவை திறந்து உள்ளே வந்த போலீஸ்காரங்க என்னைப் பார்த்துட்டு, ‘நீங்க எங்க சார் இங்கன்னு’ கேட்டாங்க.

     அதுக்கு நான் தான், “நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.‌ அதுனால வீட்ல ப்ராப்ளம் அதான் இந்த வீட்டுல இருக்கோம்’னு சொல்லி சமாளிச்சேன். அப்பவும்  அவங்க எங்களை சந்தேகமாகத்தான் பார்த்தாங்க.‌ அப்புறம் இவங்க தாலியை எடுத்து காட்டுனதும் தான் நம்புனாங்க.‌ கூடவே அந்த ரூம் முழுக்க பூவு, பழம், ஸ்வீட், மாலையெல்லாம் இருக்கவும் தான் அவங்க அமைதியா அங்கிருந்து போனாங்க. இல்லன்னா எங்க ரெண்டு பேரையும் விபச்சாரங்குற பேர்ல கைது பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு.‌நான் மட்டும் அப்படி பண்ணலன்னா நம்ம குடும்பத்துக்கு கெட்ட பேர் வந்திருக்கும்,அதேபோல இவங்களோட குடும்பத்துக்கும் தீராத களங்கம் வந்துருக்கும்.. இப்ப சொல்லுங்க நான் செஞ்சதுல எதாவது தப்பு இருக்கா?” என்று கேட்டுவிட்டு அமைதி காக்க. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிபிக்கு இப்போது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது இதெல்லாம் யாருடைய பிளானென்று..

       அதனால் எதுவும் பேசாமல் அமைதி காத்தவன் பின்பு ஏதோ முடிவெடுத்தவனாக,“நடந்தது நடந்து போச்சு. அதைப்பத்தி  பேசி என்னாகப் போகுது. எல்லாமே விதிப்படிதான் நடக்கணும்னு இருக்கு அதுக்கு நாம என்ன செய்ய முடியும். அதான் ஒரு ஜோடியை அனுப்பி வச்சுட்டமே, இப்பவாவது இன்னொரு ஜோடியையும் மத்தவங்களையும் கவனிக்கலாம் வாங்க” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர மற்றவர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர்.  வந்திருந்த உறவினர்கள் அனைவரையும் ஒரு வழியாக அனுப்பி வைத்துவிட்டு பெரியவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க. 

         அனைவரையும் விட்டு சற்று தள்ளி தனியாக இருக்கையில் அமர்ந்திருந்த ஆதிலட்சுமியை நெருங்கிய தேவ் அவளருகே  சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், அவளது கவனம் முழுவதும் கையிலிருக்கும் அலைபேசியில் இருப்பதை உணர்ந்து, “என்னாச்சுங்க எதுக்கு இப்படி அமைதியா உட்காந்திருக்கீங்க.  அதுவும் தனியா வேற வந்து உட்கார்ந்திருக்கீங்க, யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று சற்று அக்கறையுடன் கேட்க.

       குனிந்து அலைபேசியில் விழிகளைப் பதித்திருந்தவள் அவன் குரலில் சடாரென்று அவனை நிமிர்ந்து பார்த்து, “இல்ல… யாரும் எதுவும் சொல்லலை. ஆமா  நீங்க எப்படி கரெக்டா அந்த டைம்கு அங்க வந்தீங்க? அங்கேயே  அதை கேட்கணும்னு நினைச்சேன். ஆனா நம்மளால பேசிக்கக் கூட முடியல” என்றிட.

         “இதையே தான் நானும் கேக்கனும்னு நெனச்சேன். யாருங்க உங்களை கடத்துனது?உங்களோட நம்பர்ல இருந்து தான் எனக்கு மெசேஜ் வந்துச்சு, எனக்கு ஆபத்து காப்பாத்துங்கன்னு அதான் நான் உங்களைத் தேடி வந்தேன். நீங்க என்னடான்னா இப்படி கேட்குறீங்க?” என்றவன் குழப்பத்துடன் கேட்க.

        “இல்லைங்க சார் நான் மெசேஜ் அனுப்பவே இல்லையே.  எனக்கும் உங்க நம்பர்ல இருந்து இந்த இடத்துக்கு சீக்கிரம் வந்துருங்கன்னு மெசேஜ் வந்துச்சு. ஏதோ முக்கியமான விடயமா இருக்கும் போல அதான் இந்த நேரத்துல வர சொல்றாருன்னு நெனச்சுட்டு நானும் அடிச்சு பிடிச்சு அந்த வீட்டுக்கு வந்தேன். வந்தா  என்னைக் கட்டி போட்டுட்டாங்க‌‌. அதுவும் நைட் ஷிப்ட் முடிஞ்சு அப்ப தான் வீட்டுக்கு கிளம்புனேன் அதனால தான் என்னால அங்க வர முடிஞ்சுது. இதுல நான் உங்களை வர சொல்லவே இல்லையே” 

        “என்னது நீங்க எந்த மெசேஜூம் பண்ணலையா?  இருங்க… இருங்க,  அப்படின்னா நம்ம ரெண்டு பேத்தையும் ஒன்னா அங்க வர வைக்கணும்னு ஏற்கனவே பிளான் பண்ணி இந்த மாதிரி பண்ணி இருக்காங்க. அதனால தான் அந்த மேரேஜ் செட் அப்ல  இருந்து டிரஸ் வரைக்கும் எல்லாமே அங்க இருந்துச்சு. யார் எதுக்காக இதை பண்ணுனாங்கன்னு ஒன்னும் தெரியலையே?” என்றவன் யோசனையுடன் சொல்லும் போதே அவர்கள் இருவரையும் மொத்த குடும்பமும் நெருங்கியிருந்தது. அவர்களைக் கண்டு மிரண்ட ஆதிலட்சுமி அவனிடம்‍, “எல்லாரும் இங்க தான் வர்றாங்க” என்று மெல்லிய குரலில் கூறியதோடு எழுந்து நின்று கொள்ள.  தேவும் எழுந்து நின்றான்.

      அவர்கள் இருவரையும் யாரும் எதுவும் சொல்லவில்லை. வீட்டின் மூத்தவராய் மருதமுத்துவே பேசத் தொடங்கினார்.
“என்னதான் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில  நீங்க கல்யாணம் பண்ணியிருந்தாலும் அந்த பொண்ணு வீட்ல என்ன நிலவரமோ நமக்கு தெரியாது. திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு வேற நமக்கு தெரியாது.‌அதனால நம்ம எல்லாரும் இப்பவே அவங்க வீட்டுக்கு போயி இதை பத்தி நேர்லையே பேசலாமா?”என்றிட..

        அவசரமாக அதை மறுத்த ஆதிலட்சுமி, “நீங்க நினைக்கிற மாதிரி எங்க ஃபேமிலி இந்த ஊர்ல இல்ல. அது வந்து… அது வந்து எப்படி சொல்றது”  என்று தயங்கியவள், “இப்ப உங்க வீட்டு பொண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கீங்களே டிசி, அவர் என்னோட மாமா பையன்.  எனக்கும் அவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாணம் தான் நின்னு போச்சு. இன்னும் சொல்லப் போனா நான் தான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி நடக்க இருந்த கல்யாணத்தை நிப்பாட்டிட்டேன். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு,‌ நான் வேணும்னே எங்க பேமிலிய அசிங்கப்படுத்த நெனைக்கலை.  எங்க வீட்டு கடைசி பொண்ணை யாரோ கடத்தி வச்சுக்கிட்டு என்கிட்ட டீல் பேசுனாங்க, நான் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துனா தான் எங்க வீட்டு பொண்ணை விடுவேன்னு சொல்லிட்டாங்க. அப்பவும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, என் கூட ஒர்க் பண்ற பொண்ணுக்கு இந்த மாதிரி இஸ்யூ வந்தப்ப அவங்க உங்க பொண்ணு மெம்பரா இருக்க சோசியல் குரூப்கு கால் பண்ணி சொன்னதும், அவங்க அந்த பொண்ண அந்த இக்கட்டுல இருந்து காப்பாத்திட்டாங்க. நானும் அது போலவே செஞ்சா  இதுல நான் தலையிடாத மாதிரியும் இருக்கும், அதே மாதிரி இந்த கல்யாணமும் நின்னுடும்னு தோணுச்சு.‌ அதனாலதான் அதே பொண்ணுக்கிட்ட நம்பர் வாங்கி ஆள் வச்சு, நானே எனக்கு பிரச்சினைங்குற மாதிரி பேச வெச்சேன். ஆனா மறைமுகமா வராம நேரடியா உங்க பொண்ணே இதுல தலையிடுவாங்கன்னு நான் நெனச்சுக்கூட பாக்கலை‌. கூடவே கல்யாணத்தை நிப்பாட்டுறதுக்காக உங்க பொண்ணு இந்த மாதிரி ஒரு வழியை தேர்ந்தெடுப்பாங்கன்னு நான் யோசிச்சுக்கூட பார்க்கலை. ஏன்னா நான் யாருக்கிட்ட இது மாதிரி பேச சொன்னனோ, அவங்ககிட்ட நான் சொன்னது விருப்பமில்லாம கட்டாயக் கல்யாணம் நடக்குது எப்படியாவது காப்பாத்திடுங்கன்னு  மட்டும் தான் சொல்ல சொன்னேன். ஆனா அவங்க என்ன சொன்னாங்கன்னு எனக்கு சத்தியமா தெரியாது. நான் எப்பவும் போல இந்தக் கல்யாணம் நின்னுடுங்குற நம்பிக்கையில தான் ரெடியானேன்.நான் நெனச்ச மாதிரியே கல்யாணம் நின்னுடுச்சு, அதே போல  சத்தமில்லாம எங்க வீட்டு பொண்ணைக் கொண்டு வந்து பத்திரமா விட்டுட்டாங்க. அதுக்கப்புறமுமா கோவத்துல இருந்த எங்க மாமாவ நானே கண்டபடி திட்டுனேன். அவரு மனசு வருத்தப்பட கூடாதுங்குறதுக்காகவும், என்னை தப்பா நெனைக்கனுங்குறதுக்காகவும். என்னை நானே கெட்டவளா காட்டிக்கிட்டு தான் அந்த வீட்டை விட்டு வெளிய வந்தேன். இப்ப நாங்க அங்க இல்ல,எங்க ஊருக்கே போயிட்டோம். அவங்களவுக்கு நாங்க வசதியும் கிடையாது.‌ நான் வேலைக்கு போனா தான் நாங்க வயிறார சாப்ட முடியுங்குற நிலைமையில  தான் எங்க குடும்பம் இருக்கு.  அம்மா, அப்பா சென்னையில  இருக்காங்க, நான் இங்க ஒர்க் பண்ணுனேன். அதுக்கு காரணம் காரணம்?” என்று சொல்லி தயங்கியவள் பின்னர் எதையோ மென்று முழுங்கியவளாய்,      “என்னத்துக்கு அந்த காரணம்.  இப்ப தான் எல்லாமே முடிஞ்சிடுச்சே. இந்த பிரச்சனைக்கு அப்புறம் நான் சென்னையில் தான் இருந்தேன், இவங்க ஹெல்ப் கேட்டு என்னை பாக்க வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இங்க வந்தேன். ஏன்னா இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்.‌ திடீர்னு இந்த வேலையை விட்டுட்டு என்னால சென்னைக்கும் போக முடியாது. அதே மாதிரி திடீர்னு வேற ஒரு வேலையையும் தேட முடியாது. அதான் இன்னொரு வேலை கெடைக்கிற வரைக்கும் மறுபடியும் இங்கையே வேலைக்கு வந்தேன்.‌ இவங்க தீபுவைப் பத்தி சொல்லும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் அவங்க வேணாம்னு சொல்லியும் கேட்காம ஹெல்ப் பண்ண முடிவெடுத்தேன். ஏன்னா தீபுவ எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். அவளோட இந்த நிலைமைக்கு யார் காரணம்னு கண்டுபுடிக்கிறதுல என் பங்கும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் உதவி செய்யப் போனேன். ஆனா அது இப்படி உங்க குடும்பத்துக்கு உபத்திரமா வந்து நிக்கும்னு நான் எதிர்பார்க்கல. என்னை மன்னிச்சுடுங்க என்னால தான் உங்க பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு.‌ நான் வேணும்னே எதையும் பண்ணல” என்றவள் இரு கைகளையும் கூப்பி மன்னிப்பை யாசித்திட.‌ அவ்வளவு நேரம் அவள் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்திருந்த மொத்த குடும்பமும் அவளது இந்த வார்த்தையிலும், செய்கையிலும் நெக்குருகிப் போனார்கள்.

            வேகமாக மற்றவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிய இசை ஆதிலட்சுமியை அணைத்துக்கொண்டு, “உண்மையாவே நீ ரொம்ப நல்ல பொண்ணுமா.உன் பேச்சுலையே தெரியுது நீ எப்பேர்பட்ட குணம் கொண்டவன்னு. நீ எங்க வீட்டுக்கு தான் மருமகளா வரணும்னு ஆண்டவன் எழுதி இருக்கான் போல அதனால தான் என்னென்னமோ நடந்திருக்கு.‌ பரவால்லை விடும்மா நடக்குறது எல்லாம் நல்லதுக்குன்னே நெனச்சுக்குவோம்.இப்ப உங்க பேரண்ட்ஸ்   கிட்ட   எப்படி   நாங்க  பேசுறது? ” என்று கேட்க.

         “இல்ல ஆன்ட்டி. எங்க வீட்ல நீங்க யாரும் பேச வேணாம். முதல்ல இந்த விடயத்தை நான் எங்க அம்மா கிட்ட சொல்றேன்.  அவங்க இதை எப்படி எடுத்துக்குறாங்கங்குறதை பொறுத்து தான் நாம எதா இருந்தாலும் செய்ய முடியும்.  ஆனா அதையும் இப்போ பேச முடியாது, முதல்ல வீட்டுக்கு போலாமா?”  என்றவள் தயக்கத்தோடு அனைவரையும் பார்க்க.

         “போலாம்மா” என்று சொன்ன இசை அனைவரும் பார்த்து கண் ஜாடை காட்ட‌. அனைவருக்கும் அதுவே சரியென்றும் பட்டது. அனைத்து பொருட்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு மண்டபத்துக்குண்டான பணத்தை செலுத்திவிட்டு தாங்கள் வந்த வாகனத்திலேயே அனைவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். வழியிலேயே சுரேந்திர சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுத்த சிபி தயக்கத்துடன்,“பசங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டாங்களா? சம்மந்தி” என்று கேட்டதற்கு.

       “இன்னும் வரல சம்மந்தி. நீங்க எதை நினைச்சும் கவலைப் படாதீங்க, அவங்க ரெண்டு பேரும் வரட்டும் நான் எல்லாத்தையும் பேசி புரிய வைக்கிறேன். அப்புறம் மறக்காம நாளைக்கு காலைல ஃபேமிலியோட நீங்க இங்க வந்துடணும் சரியா!”  என்று அன்பு கட்டளை விடுக்க.

      “கண்டிப்பா வந்துடுறோம் சம்மந்தி வச்சிடறேன்” என்றவாறே அழைப்பை துண்டித்த சிபிக்கு சற்று நெருடலாகத் தான் இருந்தது. ‘தன் மகளுக்கும் எக்கச்சக்கமாக கோபம் வரும், மாப்பிள்ளையும் அதே ரகம் எப்படி சமாளித்து, எப்படி இருவரும் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தி வாழ்க்கையில் ஒன்றாக வாழ போகிறார்களோ?’ என்று நினைத்தவனுக்கு தன் மகள் தன் முகத்தை கூட பார்க்காமல் சென்றது இன்னும் அதிக வலியைக் கொடுத்தது..

     அந்த உயர்ந்த ரக கார் கோயம்புத்தூரில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த தேவாவின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை. கடுகடுவென்று முகத்தை வைத்திருந்தவனின் முகமே சொல்லாமல் சொன்னது அவன் எதையோ தீவிரமாக சிந்திக்கிறான் என்று.  அதே போல் பின்புறம் அமர்ந்திருந்த சுருதியோ கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தாள். அவள் மனதிலும் ஏகப்பட்ட எண்ண ஓட்டங்கள்.. அதிலும் தற்போது அவளது பெரிய பிரச்சினையே யாரென்றே தெரியாத ஒருவரது வீட்டுக்கு சென்று எப்படி இருப்பது என்பது பற்றித்தான். அந்த சிந்தனையில் இருந்தவள் கார் கண்ணாடி வழியாக தன்னை ஒருவன் கொலை வெறி கொண்டு முறைப்பதை கவனிக்கவில்லை. யோசனையில் இருந்து வெளியே வந்த தேவா கண்ணாடி வழியாக அவளை முறைத்துப் பார்த்தான். அவள் சலனமின்றி கண் மூடி அமர்ந்திருப்பது ஏனோ அவனுக்கு மேலும் கோபத்தைக் கொடுத்திட, மெல்ல இதழ் திறந்தான்.

     “ஆமா உனக்கு இது எத்தனாவது கல்யாணம்?” என்றான் மொட்டையாக.‌ அவனது வார்த்தைகள் அவளது செவியைத் தீண்டவில்லை போலும், சலனமற்று இன்னும் கண்மூடி அதே நிலையிலேயே அமர்ந்து இருந்தாள் சுருதி.

     அவள் பதிலளிக்காதது இன்னும் அவனது சினத்தை அதிகப்படுத்திட சற்று குரலை உயர்த்தி, “ஏய் உன்னைத்தான் கேட்குறேன், இந்த கல்யாணம் உனக்கு எத்தனாவது கல்யாணம்?” என்றான் நக்கலாக.. 

     அதேநேரம் அவனது வார்த்தைகளை உள்வாங்கியவளோ வெடுக்கென்று திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள். கூடவே “உங்களுக்கு இது எத்தனாவது கல்யாணமோ?  அதேபோல எனக்கும் அது அத்தனையாவது கல்யாணந்தான்” என்று வெடுக்கென்று மூஞ்சியில் அடித்தாற் போல் பதிலளித்தவள் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள போக. 

      “எனக்கு இது பத்தாவது கல்யாணம்.‌ அதே போல நீயும் எனக்கு எத்தனாவது பொண்ணோ? அது எனக்கே தெரியல. அந்த அளவுக்கு எனக்கு பொண்ணுங்களோட பழக்கம் இருக்கு போதுமா! சரி சரி  இப்ப சொல்லு உனக்கு இது எத்தனாவது கல்யாணம்?” என்றவன் மீண்டும் அதே கேள்வியையே கேட்டு வைக்க. 

        அவன் சொன்ன பதிலில் முதலில் அதிர்ந்தவள் பின்பு ஏளனமாக உதட்டை வளைத்து, “ஆமா… ஆமா உங்களுக்குதான் ஏகப்பட்ட பொண்ணுங்களோட பழக்கம் இருக்கே! இதுல நானெல்லாம் எத்தனையாவது பொண்ணோ? ம்ம்.. மொதல்ல அப்பாவி பொண்ணுங்களோட பழக வேண்டியது, ஊர் சுத்த வேண்டியது, அப்புறம் அவங்க லைஃப்ப நாசமாக்கி கை கழுவி விட்டுட்டு வீட்டுல சொல்றவங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வேண்டியது. ஏன்னா வீட்டுக்கு வெளிய ஏகப்பட்ட இல்லீகல் உறவுகள் இருந்தாலும், வீட்டுக்குள்ள லீகலா ஒரு உறவு பொண்டாட்டிங்குற பேர்ல தேவைப்படுது இல்லையா! உங்ஙளோட இந்த கேரக்டராலையும், குணத்தாலையும் தானே உங்களோட கல்யாணம் நின்னு போச்சு”  என்றிட.

         அவளைக் கூர் விழிகள் கொண்டு ஆராய்ந்தவன்,
“அப்ப தெரிஞ்சு தான் என் கல்யாணத்தை நிப்பாட்டுன அப்படித்தானே?” என்று கேட்க.

        அவளோ மீண்டும் இதழ்களை ஏளனமாக வளைத்து சிரித்தவள், “உன்ன மாதிரி கேடு கெட்டவங்கிட்ட எல்லாம் சிக்கி எந்த பொண்ணும் சீரழிய கூடாதுன்னு நினைச்சேன்.  ஆனா என்னோட அன் லக்கி எதிர்பாராதவிதமா நானே உங்கிட்ட மாட்டிக்கிற மாதிரி ஆயிடுச்சு. இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்ல, மத்த பொண்ணுங்க மாதிரி அழுது வடியிற ரகம் நான் கிடையாது. உன்னை மட்டும் இல்ல,  மத்தவங்களையும் எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும்..”என்று திமிராக சுருதி சொல்ல.

       அவள் சொன்ன வார்த்தைகள் கடுகடுவென்று இருந்த அவன் முகத்தை இன்னும் அதிகமாய் கடுமையாக்க. காரை ஓரம்கட்டி நிறுத்தியவன் காரை விட்டிறங்கி அவள் புறம் இருந்த கதவை திறந்து, பின்புறம் வந்து அமர்ந்தான். அவனது இந்த செய்கையை எதிர்பாராத சுருதி திடுக்கிடலுடன் சற்று தள்ளி நகர்ந்தமர. அவனும் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த அவள் தலைமுடியை பின்புறம் கொத்தாகப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன்,
“என்ன சொன்ன, நீ மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாதா? இல்லையே பார்த்தா அப்படி தானே தெரியிற. நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான் இருக்க. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்னும் உன்கிட்ட ஸ்பெஷலா எதுவும் இல்ல.‌ அப்புறம் என்ன சொன்ன, என்னை மட்டும் இல்ல எல்லாரையும் எப்படி சமாளிக்கணும்னு தெரியுமா?”  என்று சொல்லி சத்தமிட்டு சிரித்தவன், “இப்ப இங்க நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம். முடிஞ்சா என்னை சமாளிச்சுருடி பாக்கலாம்” என்று சொன்னவன்  அவள் என்னவென்று உணரும் முன்பே பெண்ணவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்திருந்தவன் அவள் திமிரலைப் பொருட்படுத்தாது,
அவள் இரு கரங்களையும் தன் ஒற்றை கரத்துக்குள் வளைத்து அடக்கி பின்னோக்கி பிடித்து சிறையிட்டவன், தன் வலது கரத்தால் சட்டைப்பையில் இருந்து எதையோ எடுத்தான். 

         அவளோ அவனிடம் இருந்து தப்பிக்க. திமிரிக் கொண்டிருக்க. தான் எடுக்க நினைத்தது கிடைத்ததும் தன் நெஞ்சில் இருந்து அவளை விலக்கி, தன் முகம் பார்க்க வைத்தவன்,
“இதையே உன்னால சமாளிக்க முடியல, ஆனா ஓவரா என் கிட்ட பேசுனே. நான் இப்ப நினைச்சாலும் உன்னை என்ன வேணா பண்ண முடியும். ஆனா உன் பக்கத்துல வர்றதுக்கு கூட நான் விரும்பல. ஆனாலும் நீ பேசுன பேச்சுக்கு ஏதாவது சாம்பிள் காட்டணும் இல்லையா? அதுக்காகதான் பிடிக்கலைன்னாலும் இப்படி நடக்க வேண்டியதா இருக்குது” என்றான்.

       பின் தன் கையில் எடுத்த சிகரெட் லைட்டரைப் பற்ற வைத்து அந்த அனலை அவள் முகத்துக்கு முன்னே காட்டியவன்,
“ரொம்ப பேசுன இந்த லிப்ஸ்ல சூடு வைக்கலாமா? இல்ல ஓவரா ஆக்ட்டியூட் காட்டுற இந்த உடம்புல வேற எங்காவது சூடு வைக்கலாமா?” என்றிட. 

        அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவளது விழிகள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் அகல விரிந்தன. அதை மகிழ்வுடன் பார்த்தவாறே,
“இதை..இதைத் தான் எதிர்பார்த்தேன். இந்த அதிர்ச்சியும், உங்கண்ணுல லைட்டா தெரியிற பயமும் தான் எனக்கு வேணும். அந்த பயமே சொல்லும் உன்னால என்னை சமாளிக்க முடியாதுன்னு. அப்படி இருக்கும் போது எதுக்கு ஓவரா சீன் போட்டுட்டு பேசுன?” என்றவன் அவள் ஏதோ பேச வருவதை உணர்ந்து,“வாய மூடு.. எதுவும் பேசாத. நீ எங்கிட்ட பேசவே பேசாத, இப்ப மட்டும் இல்ல எப்பவுமே நான் உன்னோட குரலை கூட கேட்க விரும்பல.  அப்படி என் முன்னாடி நீ பேசுனன்னு வைய்யேன் இதுதான் நடக்கும்”  என்று சொன்னவன் சிகரெட் லைட்டரால் அவளது முழங்கைக்கு கீழே காயம் வரும் அளவிற்கு சூடு வைத்தான். வலி தாங்க முடியாமல் அலறச் சென்ற சுருதி அந்த நிலையிலும் பல்லை கடித்துக் கொண்டு வலியை பொறுத்துக் கொண்டாள்.  ஆனால் அவளது விழிகளோ அனுமதி இன்றி கண்ணீரைக் கொட்டி தீர்த்தது.

    ‌‌ காயம் ஆகும் அளவிற்கு சூடு வைத்தவன் லைட்டரை மீண்டும் தன் பாக்கெட்டுக்குள் போட்டவாறே, “நீ நெனைக்கலாம் இங்க யாரும் இல்ல அதனால தைரியமா நீ எனக்கு இப்படி பண்ணலாம்னு. பட் உன்னோட நினைப்பு தப்பு, யார் இருந்தாலும் நான் இப்படித்தான் நடந்துப்பேன். ஏன்னா நீ மட்டும் இல்ல என்னை வேற யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் ஒன்னும் விருப்பப்பட்டு இந்த கல்யாணத்தைப் பண்ணல. என்னை யாரும் நீ இப்படி இரு! அப்படி இருன்னு சொல்ல முடியாது. இன் கேஸ் இதை நீ உன் வீட்ல சொன்னாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன் அடுத்த நிமிஷமே நீ அவங்களோட போயிட்டே இருக்கலாம். பொண்ணு வாழா வெட்டியா வந்துட்டாங்குறதை  நெனச்சு உன்னைப் பெத்தவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்லையா!” என்றவன் வெடுக்கென்று அவளை உதறி தள்ளி விட்டு ஓட்டுனர் இருக்கையில் சென்று அமர்ந்தவாறு அதிவேகத்தில் காரைச் செலுத்த தொடங்கி இருந்தான்.. 

      காயம்பட்ட இடது கையில் வலி விண்விண்ணென்று தெரிக்க, கூடவே எரியவும் ஆரம்பித்தது. வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சத்தமின்றி அழுதவாறே இருக்கையில் சுருண்டு படுத்து விட்டாள் சுருதி. அவளது நிலையைக் கண்ணாடியின் வழியாகக் கண்டவனுக்கு சிறிதும் ஈரம் சுரக்கவில்லை, கல் போன்ற மனதோடுதான் காரை செலுத்தினான்..

இதுவரை சிந்தித்திடாத
வாழ்வென்ற போதும்..!
சிரிப்பையே தொலைக்கப் 
போகின்ற வருங்காலம் என்றபோதும்..!
எதிர்வரும் எதையும்
எதிர்கொள்ள எண்ணம்
கொண்டிருக்கும் 
பேதையிவளின் 
எதிர்காலம் வினாவினை சுமந்திருக்க..
விடையாக வேண்டியவனே? 
வினையாகிப் போனதேனோ?

      – மௌனம் தொடரும்..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

Story MakerContent AuthorYears Of Membership

எனை கொ (வெ)ல்லும் மௌனமே -7

காதல் துளிரே -19