in , , , ,

எனை கொ (வெ)ல்லும் மௌனமே -7

தேவதை -7
     
          தாலி கட்டி முடிந்ததும் முறைப்படி அனைத்து சடங்குகளும் செய்ய வேண்டும் என சிபி சொல்ல. அனைவரும் ஏன்? சிபி இப்படி சொல்கிறானென்று புரியாமல் குழப்பத்துடன் சிபியையே பார்த்திருக்க. சிபியின் விழிகளோ, மாப்பிள்ளையை மட்டுமே குறுகுறுவெனப் பார்த்தவாறு இருந்தது.. அதுலையே அனைவருக்கும் ஏதோ புரிவது போல் இருக்க, அதன் பிறகு யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். மாங்கல்ய தானம் முடிந்ததும் மணமகளின் நெற்றியில் செந்தூரத் திலகமிட வேண்டுமென ஐயர் சொல்ல. வேண்டாவெறுப்பாக தன் கைகளில் குங்குமத்தை எடுத்து மாப்பிள்ளையானவன் அவள் தோள்களின் மீது தன் கைகள் படாதவாறு சற்று தள்ளியே தன் வலது கையை அவளைச் சுற்றி கொண்டு சென்று அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டு சற்று நகர்ந்து அமர்ந்து கொண்டான். அதன்பிறகு மணமகன் மணமகள் இருவரும் எழுந்து நின்று அக்னியை வலம் வந்தார்கள்.. அக்னியை வலம் வந்து முடித்ததும் பெண்ணவளின் பொற்பாதங்களில் மெட்டி அணிவித்து விடும் சடங்கை ஐயர் செய்யச் சொல்ல.

          அதற்கும் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டவன் வெறுப்பாகவே கீழே குனிந்தான். ஆனால் அவள் பாதத்தைத் தான் தொடுவதா?, என்ற எண்ணத்தில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.  சொல்லப்போனால் அப்போதுதான் அவள் முகத்தையே பார்க்கிறான். அவள் பேரழகு என்று சொல்ல முடியாது தான். ஆனால் பெண்களுக்குண்டான அத்தனை அம்சங்களுடன் கொஞ்சம் கொஞ்சமே அழகாகத் தான் இருந்தாள்.  ஆனால் அந்த அழகை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.‌ அவளை எரிக்கும் பார்வை பார்த்தவன், ‘என்னால இதை செய்ய முடியாது’ என்பதுபோல் சிபியை ஒரு பார்வை பார்க்க.

         சிபியோ தன் அலைபேசியை ஒருமுறைக்கு இருமுறை வலப்புறமும் இடப்புறமும் திரும்பி திரும்பி பார்த்தவன் எதையோ அதில் சுட்டிக் காட்டியவன், ‘என்ன இப்ப செய்யறியா? இல்லையா?’ என்பது போல் இதழ் அசைவில் கேட்டு வைக்க. அதன்பிறகு தன்னையே நொந்து கொண்டவன், அவள் மீதான உச்சகட்ட வெறுப்பு அனைத்தையும் அவளிடம்  செலுத்திவிடும் எண்ணத்துடன் அவளை முறைத்துப் பார்த்தவாறே அவள் பாதத்தை எடுத்து அம்மியில் வைத்து மெட்டி அணிவித்து விட்டான்..

          அதன் பிறகு பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி வாங்க வேண்டுமென ஐயர் தெரிவித்ததும் சுருதி அங்கிருந்து அனைவரையும் நோக்கி நகர, மாப்பிள்ளையானவனோ அழுத்தமாக அதே இடத்தில் நின்றிருந்தான்.  சிபியோ,
‘இவ்வளவு நேரம் அவனை பொம்மை போல் நடத்தியது போதும்! மறுபடியும் இதை செய், அதை செய் என்று ஏதாவது சொன்னால் கோபத்தில் கொந்தளித்தாலும் கொந்தளித்து விடுவான் என்பதை உணர்ந்தவர் வந்திருந்த அனைவரையும் உணவருந்த அனுப்பி வைத்தார். இப்போது குடும்பத்தார்கள் மட்டும் நின்றிருக்க அனைவரையும் எரிக்கும் பார்வை பார்த்த மாப்பிள்ளையானவன் சிபியை நெருங்கி, “நெனச்சதை செஞ்சு முடிச்சுட்டேன்னு ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு சிபிக்கு மட்டும் கேட்கும் குரலில்..

          அவனைக் கேலியான  புன்னகையுடன் எதிர்கொண்ட சிபி‌, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுங்குறதை அதுக்குள்ள மறந்துட்டீங்களா மாப்பிள்ளை..” என்று அந்த ’மாப்பிள்ளை’யில் அழுத்தம் கொடுத்து சொல்லிட.  சுறுசுறுவென்று கோபம் தலைக்கு ஏறியது மாப்பிள்ளையானவனுக்கு..
அவனது முகத்தைப் பார்த்த சிபிக்கு ஒருபுறம் புன்னகை வந்தாலும் மறுபுறம் தன் மகளின் வாழ்வு என்னாகுமோ? என்ற பயமும் வரத்தான் செய்தது.
அந்த மாப்பிள்ளையானவனுக்கு  அளவுக்கு அதிகமாக கோபம் வந்தாலும் அதை யார் மீதும் காட்ட முடியாத அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் தான் இருப்பதை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து மணமகனின் அறைக்குள் சென்று சேரில்  அமர்ந்து விட்டான். ஆனால் அவனது நினைவுகளோ சற்று நேரத்துக்கு முன்பு நடந்தவைகளை சத்தமில்லாமல் அசை போட்டது..

சரியாக ஒருமணி நேரத்திற்கு முன்பு….

          “இந்த கல்யாணம் நடக்குமா? நடக்காதா? எனக்கு ஒரு இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு. நீங்க இன்விடேஷன் வச்சு கூப்பிட்டதால தான் எங்க அப்பா கண்டிப்பா இங்க போயே ஆகணுனும்னு கட்டாயப்படுத்தி  சொன்னதால தான் நான் இங்க வந்திருக்கேன்” என்று சொன்னான் அவன்..

     இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று தெரிந்து கொள்வதற்காக காத்திருந்த அனைவரும் அவன் சொன்னதை கேட்டு தாங்களும் தங்கள் பங்கிற்கு அதையே கேட்டு வைக்க. கோவத்தில் அவர்கள் புறம் திரும்பிய சுதன், “இந்த கல்யாணம் நடக்காது..  நடக்கவே நடக்காது, அதான் மாப்பிள்ளையான நானே வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டனே அதுக்கு அப்புறம் எப்படி இந்த கல்யாண நடக்கும். முதல்ல இங்க இருந்து எல்லாரும் கிளம்புங்க” என்று சொல்ல.

            சிபியோ, “யாரும் இங்க இருந்து போகக்கூடாது. இப்ப இந்த நிமிஷம் இந்த கல்யாணம் நடக்கும், யாரு தடுத்தாலும் நடந்தே தீரும்” என்றான் அழுத்தம் திருத்தமாக.. சிபி சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்வுடன் நின்றிருந்தனர்.
       
           ‘இந்த கல்யாணம் நடக்குமா? நடக்காதா?’ என்று கேட்டவனின் அருகில் நெருங்கிய சிபி, “உங்கக்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும். கொஞ்சம் எங்கூட வர முடியுமா?” என்றான். திடீரென தன்னிடம் வந்து சிபி அவ்வாறு கேட்டதும் தலையை ஒருக்களித்து , இதழ் சுளித்துப் புன்னகைத்த அவன்,
“பேசலாமே சார். எனக்கொன்னும் பிரச்சனை இல்ல”  என்று சொல்ல. அடுத்த இரண்டு நிமிடத்தில் அவர்கள் இருவரும் தனித்து ஒரு அறையில் அமர்ந்து இருந்தனர். அலைபாய்ந்த தன் எண்ணங்களை நிதானத்திற்கு கொண்டு வந்த சிபி, “இப்ப நடந்தது எல்லாமே உங்க தலையீடு இல்லாம நடந்துருக்க வாய்ப்பில்லை.‌ உங்க பிளான்படி எல்லாமே நடந்துச்சுருச்சுன்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் தேவேந்திர சக்கரவர்த்தி” என்றிட.

         சிபியின் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த தேவா மென்னகையுடன்,
“பரவாயில்லையே சிபி சார். இதுக்கெல்லாம் காரணம் நான் தாங்குறதை கண்டுபிடிச்சுட்டீங்க போல. நீங்க என்ன நெனச்சீங்க? உங்க பொண்ண என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னா? இல்ல நான் பட்ட அவமானங்களை அப்படியே தொடச்சு போட்டுட்டு போயிடுவேனுன்னா? இல்ல அந்த பிரச்சினை விட்டுட்டு அமைதியா இருந்துருவேன்னு நினைச்சிங்களா? உங்க பொண்ணால என் குடும்பம் எந்த அளவுக்கு அவமானப்பட்டுச்சோ அந்த அளவுக்கு உங்க குடும்பமும் அவமானப்படும், அதுக்காக தான் இப்படியெல்லாம் பண்ணுனேன். நீங்க யாருக்கும் தெரியாம உங்க பொண்ண மறைச்சு வச்சா? என் கண்ணுல இருந்து அவளை தப்பிக்க வெச்சுடலாம்னு நெனச்சீங்களா! அதெப்படி நான் இருக்க வரைக்கும் நீங்க நெனச்சதை நடக்க விடுவேன். பார்த்தீங்கல்ல கடைசி நேரத்துல என்னவெல்லாம் நடந்துச்சுன்னு. இப்படியெல்லாம் நடக்கும்னு நீங்க எதிர் பாக்கலைல்ல‌, எதிர் பார்த்துருக்க மாட்டீங்க.

         அதான் நிச்சயம் முடிஞ்சுதே இவனால என்ன செய்ய முடியுங்குற தெனாவெட்டுல, தைரியத்துல இருந்துருப்பீங்க, இப்படியொரு திருப்பம் வரும்னு கண்டிப்பா நீங்க எதிர்பார்த்துருக்க வாய்ப்பே இல்லை.!  ஆமா இப்ப இப்படியாகி போச்சே என்ன பண்ண போறீங்க சார்? எப்படி என் கல்யாணம் நின்னுச்சோ அதேபோல உங்க பொண்ணோட கல்யாணமும் நின்று போச்சு. ச்ச்சு….பாவம் நீங்க? உங்களால  முடிஞ்சா உங்க கௌரவத்தை மட்டுமில்ல, உங்க பொண்ணோட வாழ்க்கையையும் காப்பாத்துங்க பாக்கலாம். இப்ப மட்டும் இல்ல எப்பவுமே உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது. நான் உயிரோட இருக்குற வரைக்கும் அவளோட கல்யாணத்தை நடக்க விடமாட்டேன்.‌ நல்லா ஞாபகம் வச்சுக்கங்க நான் இருக்கிற வரைக்கும் உங்க மகளோட வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்கவே நடக்காது” என்றவன் அதே தோரணையுடன் விருட்டென்று எழுந்து நின்றவன்,
“ஊருக்கு நல்லது செய்யலாம், உலகத்துக்கு நல்லது செய்யலாம். அன்னை தெரசா மாதிரி சமூகத்துக்கு சேவை கூட பண்ணலாம் தான். ஆனா தன்னோட செயலால யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. உங்க மகளால எவ்வளவோ நல்லது நடந்துருக்கலாம். ஆனா அவளால எனக்கு நல்லது நடக்கல, கெட்டது தான் நடந்துச்சு. அதோட பிரதிபலனை அவ அடையிறதுக்குள்ள, நான் எப்படி அவளுக்கு சந்தோஷம் கிடைக்க விடுவேன். இதுக்கு மேலையும் உங்க மகளை நான் சும்மா விடமாட்டேன்.ஜஸ்ட் இப்ப நடந்ததெல்லாம் சேம்பில் தான். இதுக்கே நீங்க அதிர்ச்சியானா எப்படி? இனிமே தானே என்னோட மெயின் ஆட்டத்தையே  பார்க்கப் போறீங்க!  இன்னும் போகப்போக நீங்க என்னவெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ! யாருக்கு தெரியும்..! எதுக்கும் கொஞ்சம் பிரிப்பேர்டாவே இருந்துக்கங்க சார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்..

             மண்டபத்தின் வாசலை கூட அவன் அடைந்திருக்க மாட்டான் அவன் அலைபேசி சத்தம் கொடுத்ததில், மகிழ்வுடன் அழைப்பை ஏற்று காதில் பொருத்தியவனுக்கு அந்தப்பக்கம் சொன்ன செய்தியில் கோபம் தலைக்கேறியது..

       “அப்பா! என்ன சொல்றீங்க? அதெல்லாம் என்னால செய்ய முடியாது” என்றவன் சொல்ல.

        அலைபேசியின் அந்த பக்கம் பேசிய அவனது தந்தை,
“தேவா! என்னை நீ மதிக்கிறது உண்மையா இருந்தா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு..இல்லைன்னா இனி எப்பவுமே நான் உங்கிட்ட பேசமாட்டேன்.”

    ‌        “அப்பா.. நீங்க தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அவளால தான் என் கல்யாணம் நின்னுச்சு. அவளால தான் நம்ம குடும்பத்துக்கு அவ்வளவு பெரிய தலைகுனிவு வந்துச்சு. அவளைப் போயி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? என்னால முடியவே முடியாதுப்பா”

        “இங்க பாரு தேவா நீ என்னென்ன பண்ணுன? அங்க என்ன நடக்குது? எல்லாமே எனக்கு தெரியும். யாரும் வேணும்னே தப்பு பண்றது கிடையாது. நீ தானே அன்னைக்கு பிரஸ் மீட்ல சொன்ன, திடீர்னு சொந்தத்துல ஒருத்தர் இறந்ததால மேரேஜ் நின்னுடுச்சுன்னு. அப்புறம் என்ன? அதான் அதுக்கப்புறம் யாரும் இதைப்பத்தி பேசலையே!”

        “நான் சொல்றது புரியுதா இல்லையாப்பா! நான் அந்த பிரச்சினையை சால்வ் பண்ணிட்டேன் தான் இல்லைங்கலை. ஆனா எனக்கு கிடைச்ச அவமானம் மாறிடுமா? நான் அவமானப்பட்டது அவமானப்பட்டது தானே! உங்களுக்கே தெரியும் நான் எல்லாத்துலையும் பர்பெக்டா இருப்பேன்னு. அப்படி இருக்கும் போது என்னையே ஒருத்தி ஏமாத்தி, என் வாழ்க்கையிலையே குளறுபடி பண்ணுவா! நான் அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கிட்டு சும்மா இருப்பனா? நீங்க என்ன சொன்னாலும் சரி சத்தியமா அவளை நான் சும்மா விடமாட்டேன்” என்று தேவா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது தந்தை சுரேந்திர சக்ரவர்த்தியிடம் இருந்து அவனது தாய் அன்னக்கொடியின் கைக்கு அலைபேசி இடம்மாறியது.

          “தேவா அப்பா சொல்றது சரிதான்பா. ஆண்களுக்கு எவ்வளவு தான் பிராப்ளம் வந்தாலும், அவமானம் வந்தாலும் அதை எப்படியாவது அவங்க சமாளிச்சு தொடச்சுப் போட்டுட்டு போயிடுவாங்க. ஆனா பொண்ணுங்களுக்கு அது பெரிய பிரச்சனையா வந்துரும்பா. வேணாம் ஒரு  பொண்ணோட பாவத்தை வாங்கிக்காதப்பா! அப்பா சொல்றது சரிதான் நீ அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் சரியா வரும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எங்க கிட்ட அந்த பொண்ணோட அப்பா பேசுனாரு. அவர் சொன்னத வெச்சு நான் புருஞ்சுக்கிட்டது, வேணும்னே அந்த பொண்ணு உன் கல்யாணத்தை நிறுத்தலை. அவளுக்கு வந்த தகவல்படி, அந்த மண்டபத்துல கட்டாய கல்யாணம் நடக்குதுன்னு அவ கேள்விப்பட்டு, அதை தடுக்கத்தான் அந்த பொண்ணு அங்க வந்துருக்கா. அதுக்கப்புறம் அவ நடந்துக்கிட்டதெல்லாம் தப்பாவே இருந்தாலும் அவ நல்ல எண்ணத்துல தான் செஞ்சுருக்காப்பா. அதேபோல உன் அத்தை பொண்ணுக்கிட்டையும் உன்னைப் பத்தி தப்பு தப்பா யாரோ சொல்லி இருக்காங்க அதனால தான் அவளும் கல்யாணத்தை நிப்பாட்டியிருக்கா! புரிஞ்சுக்க கண்ணா! யாரும்  வேணும்னே, யாரையும் கஷ்டப்படுத்த நெனைக்கலை. அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுப்பா  அதுதான் நம்ம குடும்பத்துக்கும் சரி,  அவங்க குடும்பத்துக்கும் சரி கௌரவமா இருக்கும். கூடவே நீ செஞ்ச தப்புக்கு பிராய்ச்சித்தம் செய்ற மாதிரியும் இருக்கும்.  அம்மா சொன்னா நீ கேட்பேங்குற நம்பிக்கையில இதையெல்லாம் சொல்லிட்டேன் இதுக்கு மேல உன் விருப்பம்” என்றிட.

         “எதை சொன்னா நான் சமாதானம் ஆகுவேன்! எதை சொன்னா நான் உங்க பேச்சை கேட்பேங்குறதை நீங்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க அம்மா.  உங்களுக்காக நான் எதை வேணாலும் செய்வேன். இப்ப என்ன அவளை நான்  கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தானே? பண்ணிக்கிறேன். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி என் வாழ்க்கை இருக்காது, அதை போகப் போக நீங்களே புரிஞ்சுக்குவீங்க” என்றவன் சலிப்பாகச் சொல்ல..

          “ஸ்ஸப்பா..! உன்னை சமாதானம் பண்ணி ஓகே சொல்ல வைக்கிறதுக்கு தம்கட்டி உன்கிட்ட மூச்சுவாங்கப் பேசவேண்டியதா இருக்குது. எப்படியும் நாங்க எங்க பையன் கல்யாணத்தை நேர்ல, பக்கத்துல இருந்து பார்க்க முடியாது. அதனால வீடியோ கால்லையாவது பார்க்கிறோம் அதுக்கு ஏற்பாடு பண்ணுப்பா சரியா! கூடவே கொஞ்சம் சிரிச்ச முகமாவே எல்லாத்தையும் செய்வியாம் ஓகேவா!” என்று சொன்ன அன்னக்கொடி அந்த பக்கம் சிரிக்கும் சத்தம் இங்கே தேவாவுக்கும் கேட்டது..

         “நீங்க சொன்னதெல்லாம் செஞ்சு தொலைக்கிறேன். எல்லாம் என்னோட தலைவிதி என்ன பண்ணுறது?”  என்று கடுப்புடன் அலைபேசியை அணைத்தவன்‌, மணமகனின் அறைக்குள் நுழைந்தான்.  ஏற்கனவே அவசர அவசரமாக சிபி ஏற்பாடு செய்திருந்த உடை அந்த அறையில் வைக்கப் பட்டிருக்க, தான் போட்டிருந்த கோட்டு சூட்டைக் கழட்டி எறிந்து விட்டு வெள்ளை நிற பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்தவன் இறுக்கமான முகபாவனைகளோடு மணமேடையில் வந்து அமர, அதேநேரம் முழுதாய் அலங்கரிக்கப்பட்டிருந்த சுருதி அவன் அருகில் அமர வைக்கப்பட்டாள். என்ன நடக்கிறது என்று யாருக்கும் சொல்லப்படவில்லை. ஆனால் மாப்பிள்ளை மாறி விட்டார் என்ற செய்தி மட்டும் மண்டபம் முழுவதும் பரவியது. அதன்பிறகு துரிதமாக அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்டு இதோ இப்பொழுது திருமணமும் நிறைவாக நடந்தேறிவிட்டது..

        அவ்வளவு நேரம் காணொளி அழைப்பு வழியாக தங்கள் மகனின் திருமணத்தை பார்த்திருந்த சுரேந்திர சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தார்கள் அனைவரும் மனமகிழ்ந்து நெகழ்ச்சியுடன் அமர்ந்திருக்க. நான்கு ஜோடி விழிகள் மட்டும் பொறாமையை ஏந்திய வண்ணம காணொளியில் புன்னகை மறந்து, புதுமணப்பெண்ணாய் எழில்மிகு அழகுடன் வீற்றிருந்த சுருதியை பார்த்திருந்தன..

       தேவா அங்கிருந்து நகர்ந்து மணமகன் அறைக்கு சென்றதும் காணொளியில் இருந்த சுரேந்திர சக்கரவர்த்தியிடம்,
“மன்னிச்சிடுங்க சம்மந்தி இப்படி ஒரு சூழ்நிலையில கல்யாணம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. சொல்லப் போனா நான் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும்.நான் சொன்னதைப் புருஞ்சுகிட்டு எங்களோட குடும்ப மரியாதையை மட்டுமில்ல, என் பொண்ணோட வாழ்க்கையையும் காப்பாத்திக் கொடுத்துருக்கீங்க. ஆயுசுக்கும் நீங்க செஞ்ச இந்த உதவியை மறக்க மாட்டேன்..” என்று உணர்ச்சி வசத்தில் இரு துளி கண்ணீர் கசிந்த வண்ணம் சிபி பேச…

        சுரேந்திர சக்கரவர்த்தியோ,
“இல்ல சம்மந்தி நாங்க தான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கணும். சொல்ல போனா எங்க மருமக மேல எந்த தப்பும் கிடையாது, சூழ்நிலை அப்படி அமைஞ்சுடுச்சு. அதுக்காக என் பையன் பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. இப்ப அவனை வெச்சே அந்த தப்பை சரி பண்ணியாச்சு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க சம்மந்தி யார் யாருக்கு என்னென்ன நடக்கணும்னு தலையெழுத்து இருக்கோ அதுதான் நடக்கும். உங்க வீட்டு இளவரசி தான் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்,  எங்க குல விளக்கா அவ தான்  இருக்கணும்னு ஆண்டவன் முடிவு பண்ணியிருப்பான் போல அதனால தான் என்னன்னமோ நடந்து இந்த கல்யாணமும் நல்லபடியா நடந்து முடிஞ்சுருச்சு. கடவுள் யாருக்கு யாருன்னு முடிச்சு போட்டுருக்கானோ அவங்களுக்கு தானே கல்யாணம் நடக்கும் இதுல நாம மாத்தி அமைக்க எதுவும் இல்லையே! நீங்க எதை நெனைச்சும் கவலைப்படாதீங்க உங்க பொண்ணை நாங்க பத்திரமா பார்த்துக்குறோம். நாங்க இங்கிருந்து கிளம்பினாலும் முகூர்த்த நேரத்துக்கு வர முடியாது அதனால தான் வரல. இப்பவும்  ஒன்னும் பிரச்சனை இல்ல சம்மந்தி இன்னும் ஒரு மாசம் போகட்டும் சின்னதா ரிசப்ஷன் மாதிரி வச்சிடலாம். எப்படியும் இந்த விடயம் நியூஸ் வரைக்கும் போகும், அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு நாங்க யோசிச்சுக்குறோம், நீங்க எதை நெனச்சும் கவலைப்படாதீங்க சம்பந்தி.. அப்புறம் உங்க பொண்ணு இனிமே எங்க வீட்டு பொண்ணு மாதிரி நாங்க நல்லபடியா பார்த்துக்குறோம். நீங்க கவலைப்படாம எங்க மருமகளை அனுப்பி வைங்க” என்று உள்ளப்பூரிப்போடு சொல்ல.

         ‘அவர்கள் தன் மகளை மருமகள் என்று சொன்னதிலேயே உள்ளம் மகிழ்ந்திருந்த சிபி,“எனக்கு உங்களோட இந்த வார்த்தைகள் தான் நம்பிக்கை கொடுக்குது சம்மந்தி.. மாப்பிள்ளை இப்ப கோபமா இருந்தாலும் போகப்போக எல்லாமே சரியாகிடுங்குற  நம்பிக்கையில தான் இந்த கல்யாணத்துக்கே நான் சம்மதிச்சேன். நானும் பிஸ்னெஸ்மேனுங்குறதால அவரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் .அந்த தைரியத்துல தான் பொண்ணைக் கொடுத்துருக்கேன். கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க சம்மந்தி ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு” என்றிட.

         “இதை நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்கணுமா என்ன? எல்லா வீட்டுலையுமே ஒரே பொண்ணுன்னா கொஞ்சம் செல்லம் தானே, சம்பந்தி நாங்க பாத்துக்குறோம் நீங்க கவலைப்படாதீங்க. அப்புறம் அவன் என்ன சொல்றானோ அதை அப்படியே செஞ்சுடுங்க. இந்த மறுவீடு சம்பிரதாயம், மத்ததையெல்லாம் பின்னால பார்த்துக்கலாம்.. ஏன்னா அவன் இப்ப என்ன மாதிரியான மனநிலையில இருக்கான்னு உங்களுக்கே தெரியும்” என்று சுரேந்திர சக்ரவர்த்தி சற்று தயக்கத்துடன் சொல்ல. சிபியும் ஒருவழியாக தலையசைத்து சம்மதம் தெரிவித்து விட்டு அலைபேசியைத் துண்டித்தான்..

         சற்று முன்பு தன் கழுத்தில் மங்கல நாண் பூட்டியவன், தாலி கட்டிய கையோடு தன்னை விட்டு விட்டு சென்றதை கூட உணராதவளாய் ஒரு மூலையில் கிடந்த சேரில் சென்று அமர்ந்தாள் சுருதி. ஏனோ மனம் கனத்துப் போனது போலிருந்தது. தன் தந்தை ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்று விட்டது என எண்ணி மகிழ்வுடன் இருந்தவளின் தலையில் இடியாய் இறங்கியது திடீர் மாப்பிள்ளையின் வரவு. இந்த திருமணம் வேண்டாம் என்று மறுத்து பேசவும் முடியாத அளவிற்கு‌ இது தன் தந்தையின் முடிவு என்பதை உணர்ந்தவள் எதுவும் பேசாமல் கழுத்தை நீட்டி விட்டாள். ஆனால் கட்டினவன் தாலி கட்டிய கையோடு விட்டுவிட்டு தனியே சென்றதை அவளால் உணரவும் முடியவில்லை, அதை உணரும் நிலையிலும் அவள் இல்லை. கண்மூடி அமர்ந்திருந்தவளை
யாரோ உலுக்கிட. அதில் விழி திறந்தவளின் முன்பு பாவமாக நின்றிருந்தாள் கண்மணி. கண்மணியைக் கண்டதும் முட்டிக்கொண்டு வந்த அழுகையைக் கஷ்டப்பட்டு தனக்குள் விழுங்கிக் கொண்டவள் எழுந்து நின்று,
“சொல்லுங்க சித்தி?” என்றாள்.

        எப்போதும் தன்னை ‘ஐ’ மம்மி என்று அழைப்பவள் இன்று சித்தி என்றழைத்ததில் கண்மணியின் விழிகளும் கலங்க, வேதனையோடு சுருதியை ஏறிட்டுப் பார்த்த கண்மணி,
“என்னடா என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று கேட்க.

         முயன்று தன்னை சரி செய்தவள், தன் உணர்வுகளை யாருக்கும் காட்ட கூடாது என்று நினைத்தவளாய்,“ஒன்னும் இல்ல மம்மி சும்மாதான் உட்காந்துருந்தேன் வேற ஒன்னும் இல்ல. வாங்க போலாம்” என்று சொல்லி விட்டு அனைவரும் இருந்த இடத்திற்கு வந்தாள். ஏனோ யாரிடமும் பேச வேண்டுமென்று அவளுக்கு தோன்றவில்லை. ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் தம்பதி சமேதராய் அருகருகே அமர்ந்திருந்த சுதன்தேவ், ஆதிலட்சுமியைக் கண்டவள் அதன் பிறகு அவர்கள் புறம் திரும்பவேயில்லை..  

         பொம்மை போல் நின்றிருந்த அவளின் அருகில் இசை வர, அதை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்து வேறு இடத்தில் சென்று நின்று கொண்டாள் சுருதி.‌ தன் மகள் தான் அருகில் வருவதைக் கூட விரும்பவில்லை என்பதை உணர்ந்த இசை கலங்கிய விழிகளோடு தன்னவனை ஏறிட்டுப் பார்க்க சிபியோ கண்களை மூடி திறந்து ‘எல்லாம் சரியாகிடும்’ என்பது போல் சமிக்ஞை செய்தான்.

        இங்கே மணமகன் அறையில் கண்மூடி அமர்ந்திருந்த தேவாவிற்கு குழப்பங்களை விட கோபமே அதிகமாக இருந்தது. தன் கையைக் கட்டியது போல் அன்பென்ற ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்ய முடியாமல் செய்ததோடு, தாய் பாசத்தை காட்டி கிட்டத்தட்ட மிரட்டி தனக்கு திருமணம் செய்து வைப்பதைப் போல் இந்த திருமணம் நடந்ததை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் தன் கோபத்தை குறைக்க முயன்றான். ஏனெனில் அடுத்தடுத்த நிகழ்வுகள் யாவும் கண்முன்னே காட்சிகளாய் விரிய தன்னை கஷ்டப்பட்டு சமன்படுத்தி கொண்டவனாய் சற்று சாந்தமான முகபாவனைகளோடு அந்த அறையிலிருந்து வெளியே வந்தான்..

       அனைவரும் அங்கொருவர் இங்கொருவராக ஓரமாய் நின்றிருக்க, அவர்களனைவரையும் ஓரவிழியால் ஒரு முறை பார்த்து விட்டு தன் தொண்டையை செருமிக் கொண்டவன், “அதான் கல்யாணம் முடிஞ்சுருச்சே நாங்க எங்க வீட்டுக்கு கிளம்புறோம்”  என்று யாரிடமோ சொல்வது போல் சொல்ல.

        மற்றவர்கள் ஏதோ பேச வர அனைவரையும் தன் ஒற்றை பார்வையால் அடக்கிய சிபி,
“கூட்டிட்டு போங்க மாப்ளை” என்ற அடுத்த நிமிடம் சுருதி நின்ற இடத்திற்கு வந்தவன் அவளைச் சொடக்கிட்டு அழைத்தான். குனிந்து நின்றிருந்தவள் அவன் சொடக்கிட்டு அழைக்கவும் சடாரென்று நிமிர்ந்து பார்க்க.

        “பின்னாலையே வா”  என்ற ஒற்றை வார்த்தையோடு அவன் முன்னே செல்ல. மறுபேச்சு ஏதும் பேசாமல், மற்றவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் அவனை பின் தொடர்ந்து சென்றாள் சுருதிலயா தேவேந்திர சக்கரவர்த்தி..
மண்டபத்தின் வாயிலை அவர்கள் நெருங்கியபோது வேக வேகமாக ஓடி வந்த சரண்தேவ், அவளது உடைமைகள் அடங்கிய பையோடு அலைபேசியையும் நீட்ட. அதை ஓர விழியால் கண்ட தேவா நின்று நிதானமாக அவள் புறம் திரும்பி, அவள் கையில் இருந்த பையை வாங்கி மீண்டும் சரணிடமே கொடுத்தான்.

‌.         பின்னர்,“அதான் கல்யாணம் முடிஞ்சுருச்சுல்ல அப்புறம் என்ன! இனிமே உங்க அக்காவுக்கு என்ன வாங்கி தரணும், என்ன வாங்கி தரக்கூடாதுங்குறதை  நான்தான் முடிவு பண்ணுவேன். இதெல்லாம் வேணாம், போனை மட்டும் குடு” என்று சொல்ல. சுருதியும் மறுபேச்சு பேசாமல் அலைபேசியை மட்டும் வாங்கிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்து அவனது காரின் அருகில் சென்றவள் பின் பக்கம் ஏறிக்கொண்டாள்..  சரணின் கலங்கிய விழிகளைப் பார்த்தாலும் எதுவும் பேசாது உள்ளே திரும்பி மற்றவர்களை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்து காரை கிளப்பினான் தேவா.

       சுருதியின் மொத்த குடும்பமும் வாயிலில் நின்று தங்களது மகளை வழியனுப்பி வைக்கக் காத்திருக்க சுருதியோ யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தவள் கார் கிளம்பும் வேளையில் அவசரமாக கண்ணாடியை இறக்கி,“ஆதிப்பா.. மம்மி நான் போயிட்டு வரேன். பத்திரமா இருங்க, எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோங்க” என்றதோடு தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்..  அவள் பெற்றோர்களிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் வருவதைப் பற்றி அவன் என்ன நினைத்தானோ? தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு சுருதியின் மனநிலை நன்றாகப் புரிந்தது. காலம் அனைத்தையும் சரி செய்யும் என்று அவர்கள் எண்ணி இருக்கின்றனர், ஆனால் காலம் எதை சரி செய்யும், எதை சரி செய்யாது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..!

எவனென்றே தெரியாத
ஒருவனுடன் தொடரப்
போகிறது எந்தன் மீதி
வாழ்வு..!
அம்மண வாழ்க்கை
மலர்ந்திடுமா?
அன்று மலராது
மக்கி மண்ணோடு
சேர்ந்திடுமா?

புன்னகைக்க வரம்
கேட்பவன் அவனோ?
புயலுக்குள் புதையல்
தேடுபவன் அவனோ?
விழி கொண்டே
விழி வழி விஷம்
தோய்ப்பவன் அவனோ?
சொல் கொண்டு
சுலபமாக உயிர்
கொள்பவனும் அவனோ?
நித்தமொரு தண்டனை
தந்து என்னை
ஆயுளுக்கும் சிறையிட்ட
கொடுங்காவலனும்
அவனோ..?

-மௌனம் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

Story MakerContent AuthorYears Of Membership

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -6

எனை கொ (வெ)ல்லும் மௌனமே -8