in

மௌனத்தின் மனசாட்சி -27

 

அத்தியாயம் 27

வரவேற்பு விமர்சையாக நடந்து முடிந்தது. பதற்றத்தில் இருந்த மயூராவுடன்  ஆரபி, சுரபி என்று மாற்றி மாற்றி நின்றனர்.. வந்தவர்களை கிருஷ்ணாவும், விஷ்ணுவும் உபசரித்து மணமக்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். 

வீட்டுப் பெரியவர்களோடு சேர்ந்து மயூராவின் பெற்றோரும்  விஷேசத்தை கண்டுகளித்தனர். அடிக்கடி கண்கலங்கிய அம்மாவிடம் அப்பா ஏதோ சொல்வதையும், அதைக்கேட்டு அம்மா சிரித்த முகமாக இருக்க முயற்சிப்பதையும் பார்த்த மயூராவிற்கு,  அவர்களது நிலைமையை நன்கு விளங்கியது.

பெற்றவர்களைப் பார்க்கும்போது முகம் மாறிய மனைவியின்  பக்கம் லேசாக சாய்ந்து பேசினான் அரசு. “கொஞ்சம் முகத்தை சிரிச்சாபோல வச்சுக்கோ.. சொந்தக்காரங்க நிறைய பேர் இருக்காங்க. அதுபோக தொழில், வேலை நிமித்தம் தெரிஞ்சவங்க அதிக பேர். யாராவது ஒருத்தர் கவனிச்சாலும் சங்கடம்..” உதடு பிரியாமல் பேசும் வித்தையை கற்று வைத்திருந்தான்.

அதன் பின்னர் முகம் மாறாமல் இருக்க கற்றுக் கொண்டாள். ரிசப்ஷன் முடிந்து வர நள்ளிரவு ஆயிற்று. மண்டபத்திலிருந்து கிளம்புகிறேன் என்று சொன்ன அம்மா, அப்பாவை வற்புறுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்..

எல்லோருக்குமே அலுப்பாக இருக்க படுக்க சென்றுவிட்டனர். மயூராவின் பெற்றோருக்கு விருந்தினர் அறையை காட்டிவிட்டு சுரபி செல்ல,  அவர்கள் கூடவே வந்த மயூராவும் உள்ளே நுழைந்தாள்.

“என்ன எங்க பின்னாலேயே வந்துட்டே?”

“அம்மா டிரஸ் சேஞ்ச் பண்ணனும். இந்த தலை அலங்காரம் எல்லாம் அவுத்து விடு..” என்று கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அப்பா கட்டிலில் படுத்து விட, அம்மா மகளின் கூந்தலை கலைத்து ஹேர்பின்களை எடுக்க ஆரம்பித்தாள்.

“மயூ இங்கே எல்லாரும் எப்படி பழகுறாங்க..? எதுவும் பிரச்சினை இல்லையே..?”

“அதெல்லாம் எதுவும் இல்லமா..!”

“மாப்பிள உன்கிட்ட எப்படி இருக்கார்..?” சாதாரணமாக ஒவ்வொரு அம்மாவும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம் அது. அதுவும் தனது மகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, கல்யாணம் ஆனதே பெரிது என்று தெரிந்தாலும் மகளின் வாழ்க்கை சுபிட்சமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் கேள்வியை அவளை கேட்க வைத்தது.

“ம்ம்..”  என்று சொல்லி நிறுத்தினாள் மயூரா.

“சரி மேல மாப்பிள்ளை கூட போய் படுத்துக்கோ..!”  

“அம்மா உன் புடவை ஒன்று கொடு.. பேசாம இங்கேயே படுத்துக்குறேன்.”

“ஏய் என்னடி..?”

“புரியாம பேசாதம்மா. இந்த வீட்டுக்கு நான் இன்னைக்கு தான் வந்து இருக்கேன். அவர் எங்க இருக்கிறார்னு  எனக்கு தெரியாது. எல்லாரும் அவரவர் ரூமுக்கு போயாச்சு. எனக்கு யார்கிட்ட போய்  கேட்க முடியும்..?” ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி தப்பித்தாள்.

காரிலிருந்து இறங்கி உள்ளே வந்ததுமே  அரசு நேரே  மாடிக்கு சென்று விட்டான். அந்த வீட்டில் இருவருக்கும் தனித்தனி அறை. அங்கு அவர்கள் மட்டும் இருந்ததால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் இங்கு அப்படி இல்லை. ஏற்கனவே அதை நினைத்து பயந்து கொண்டே வந்தவள், அம்மா அப்பாவை கூட்டிக்கொண்டு சுரபி செல்லவும் பின்னாலேயே வந்து விட்டாள்.

சுரபியும் அதைப் பற்றி யோசிக்காமல் சென்றுவிட, அவளுக்கு வசதியாக போய் விட்டது. அம்மாவின் பையிலிருந்து ஒரு புடவையை உருவி சுற்றி கொண்டவள் மேலும் கேள்வி கேட்கும் முன் தரையில் ஒரு பெட்ஷீட்டை எடுத்து விரித்து படுத்து விட்டாள்.

இதற்குமேல் பேசி கணவரின் தூக்கத்தை கலைக்க விரும்பாத அவளின் அம்மாவும் மகளின் அருகிலேயே படுத்து விட்டாள். ஆனால் தூக்கம் மட்டும் வரவில்லை. மகளின் வாழ்க்கை பாதி மலர்ந்தும் மலராத மொட்டு போலிருக்கிறதே. முழுவதும் மலர்ந்து மணம் வீசுவது எப்போது என்று புரியாமல் பெருமூச்சு விட்டாள்.

தன் அறைக்கு வந்த அரசு பின்னாலேயே அவள் வருவாள்  என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டான்.  சற்று நேரம் கழித்து கதவைத் திறந்து பார்க்கும்போது ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் அறைக்கு சென்று விட்டனர்

முதலில் மயூராவை கீழே இறங்கி தேடலாமா என்று நினைத்தவன் அவளது அம்மா, அப்பா வந்து இருப்பது நினைவுக்கு வரவும் அவர்களுடன் சென்று இருப்பாள் என்ற முடிவுக்கு வந்தான்..

தனது அறையில் தங்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்திருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. மாலை நடந்த வரவேற்பிறகும், இப்போது இருக்கும் நிலைமையையும், யோசித்தபோது அவனது வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே  நின்றது.

‘எல்லாம் சரியாக வேண்டும். சரியாகிவிடும்.’ என்ற நம்பிக்கையில் கிருஷ்ணாவின் நிச்சயத்தையும், தங்களின் திருமண வரவேற்பையும் நடத்திய பெற்றோரின் நம்பிக்கை எந்த அளவு சாத்தியமாகும் என்று யோசித்தான்.

கிருஷ்ணா, இதயா கல்யாணம் கூட ஒருவிதத்தில் தங்களுடைய திருமணத்தை ஒட்டியே நிச்சயிக்கப்பட்டது என்பது அவனுக்கு தெளிவான எண்ணம். தன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் தம்பியுடைய வாழ்க்கையாவது நன்றாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு படுக்கையை தஞ்சமடைந்தான். அதிக அளவு அலைச்சல் தன்னை மீறிய தூக்கத்தை கொடுத்தது.

மறுநாள் காலையிலேயே கிளம்பிய அம்மா அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள் மயூரா. கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள் புவனா. 

“நீ இங்கேயா இருக்க..? அரசு உன்னை தேடுறான். போய் என்னன்னு கேளு..” என்று அவளை அனுப்பிவிட்டு சம்பந்தார் பக்கம் திரும்பினாள்.

“என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க..?”

“கிளம்ப வேண்டியது தான் மதினி. அதான் விசேஷம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே..”

“ரெண்டு நாள் இருந்துட்டு போகலாமே..

“இன்னொரு சந்தர்ப்பத்தில் வர்றோம்.. திடீர்னு கூப்பிட்டதனால இவர் டியூஷனுக்கு ரெண்டு நாளைக்கு லீவ் சொல்லியிருக்கார். பசங்க வந்து தேடுவாங்க. அப்புறம் மதினி உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..” என்று மென்று முழுங்கினாள்.

“சொல்லுங்க..!”

“முறைப்படி இந்த கல்யாணம் நடக்கல. நாங்க எந்தவிதமான சீரும் செய்யல. இதையெல்லாம் பெருசா எடுத்துக்காம நீங்க எல்லாரும் எங்க பெண்ணையும், எங்களையும் ஏத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.  வேற ஒண்ணும் எனக்கு சொல்ல தெரியல..” புவனாவின் கையைப் பிடித்துக்கொண்டு அழுத ரமாவை ஆறுதலுடன் அணைத்துக் கொண்டாள்.

“எங்களுக்கும் எதுவும் தெரியாது. ஆனா அரசு முடிவு எடுத்தா அதுல ஒரு ஞாயம் இருக்கும்னு மட்டும் தெரியும். கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாயிடும்..”

“அந்த நம்பிக்கையில்தான் ஊருக்கு போறோம் மதனி. ஒரு நல்ல விஷயம்னா சொல்லி அனுப்புங்க..” பூடகமாக சொல்லிவிட்டு கிளம்பினர்.

“சாப்பிட்டு தான் போகணும், கொஞ்சம் இருங்க. உங்க மருமகனும் இப்போ கீழே வந்துருவான்..” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு சென்றாள்.

அரசுவின் அறைக்கு வந்ததும்  தனது  சூட்கேஸ் அங்கே இருப்பதை கண்டாள். எதுவுமே கேட்காமல் மௌனமாகவே அவன் இருப்பதை பொறுக்கமாட்டாமல், “சாரி, அம்மாவை கெஸ்ட் ரூம்ல விட போனேன். வெளியில் வந்து பார்த்தால் உங்களை காணும். யார் கிட்டயும் கேட்க முடியல. அதான் அம்மா கூடவே தங்கிட்டேன்..” என்றாள்.

“சீக்கிரம் குளிச்சிட்டு வா. அப்பவே அம்மா கீழே வரச் சொன்னாங்க..” 

“இதோ பத்தே நிமிஷம்..” என்றவள் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அரை மணி நேரத்தில் இருவரும் கீழே இறங்கி டைனிங் ஹாலுக்கு சென்றனர்.

அங்கு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் அமர்ந்திருக்க பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர். அப்பாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் ஒரு நாற்காலி இருக்க அதில் சென்று அரசு அமர்ந்தான். 

“குட் மார்னிங்..ணா..”

“குட் மார்னிங்.. என்னடா அதுக்குள்ள ஊருக்கு கிளம்புன மாதிரி தெரியுது..?”

“ஆமா.. லீவு கிடையாது. இதுவே பயங்கர ரெகமெண்டேஷன்ல தான் வந்து இருக்கேன்..”

“யாரோட ரெகமெண்டேஷன்..?”

“வேற யாரு, எல்லாம் அப்பாதான். யாரை பிடிச்சார்னு  தெரியல..”

“என்னடா அண்ணனும், தம்பியும் ரகசியமா பேசுறீங்க..?”

“ஒண்ணும் இல்லப்பா..”  அவசரமாக தம்பி  சொன்னதும் அண்ணன் கவனமாக மாமனாரிடம் பேச ஆரம்பித்தான்.

“நல்லா தூங்குனீங்களா மாமா..? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாமே..?” அவர் கிளம்பி இருப்பதை பார்த்து கேட்டான்.

“நல்லா தூங்கினேன்.. உங்க எல்லோர் பொறுப்பிலேயும் என்னோட மகளை கொடுத்திருக்கும் போது  எனக்கு என்ன கவலை..? ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. இன்னொரு தடவ வரும்போது இரண்டு நாள் இருக்கிறோம்..” என்றார்.

சரி, என்பதாக தலையசைத்தவன் அவர்களை  பேரூந்து நிலையம் வரை கொண்டு போய் விடச் சொல்லி கார் டிரைவரிடம் ஏற்பாடு செய்தான்.

அலுவலகம் செல்ல கிளம்பிய மகனை பிடித்துக் கொண்டாள் புவனா.  ஏற்கனவே மகன் இன்னும் சரியாக பேசாசதில் கடுப்பாக இருந்தவள்,  “டேய் இன்னைக்கு ஆபிசுக்கு போக வேண்டாம். அந்த வீட்டை காலி பண்ணி இங்க வர்ற வேலையே பாரு…” என்றாள்.

திடுக்கிட்டவன் “அம்மா இன்னைக்கு ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்.. அதுவும் போக அங்க காலி பண்ண என்ன இருக்கு..?”

“அங்க உள்ள வேலை ஆட்கள் எல்லாம் நிப்பாட்டி வாட்ச்மேன் கிட்ட வீட்டு சாவி கொடுத்திட்டு, உங்க எல்லா சாமான், ஆபிஸ் சமாச்சாரம் எல்லாம் எடுத்திட்டு வந்து சேரு..” என்றாள் ஒரு முறைப்புடன். அம்மாவின் கோபத்தின் வெளிப்பாடு எதனால் என்பது அவனுக்கு புரிந்தது. ஆனால் இன்று அவனுக்கு  மிகவும் முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அப்பாவின் முகத்தை பார்த்தான். கருமமே கண்ணாக சாப்பாட்டில் கவனமாக இருப்பவரை  பார்த்து சிரிப்புதான் வந்தது. மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனாமாக விளங்கும் பிரபாகரன் மனைவி விசயத்தில் பசுவாக மாறிவிடுவார்.. அடுத்து தாத்தா..

அவனது பார்வையை பார்த்து விட்டு ஏளனமாக, “என்னடா பெரிய மீட்டிங்.. என் மக சொல்றதை கேளு..” என்றார்.  

“தாத்தா ப்ளீஸ்..” அவரிடம் கெஞ்சினான். மயூராவுக்கு தனது கணவனை பார்க்க வியப்பாக் இருந்தது. குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் அவன் காட்டும் அன்பும், மரியாதையும், பதிலுக்கு அவர்கள் காட்டும் பாசமும், இப்படி ஒரு குடும்பத்தில் தான் வந்து சேர்ந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல தோன்றியது. மயூரா பார்ப்பதை அறிந்து அவளிடமே உதவி கேட்கலாம் என்று முடிவு செய்தான்.

“மயூரா நீ சுரபியை கூட்டிட்டு அந்த வீட்டுக்கு போயி அம்மா சொன்ன எல்லாத்தையும் செய்துட்டு வர்றியா..?”

“உங்க திங்ஸ் எதெல்லாம் எடுக்கணும்னு எனக்கு எப்படி தெரியும்..?”

“நீ அங்க போய் போன் பண்ணு. நான் சொல்றேன்..” 

“சுரபி, அண்ணி கூட கொஞ்சம் போயிட்டு வந்துடேன்..” தங்கையிடம் சொல்லி விட்டு தனது பொறுப்பு முடிந்தது என்று தப்பித்துக் கொண்டான்.

அடுத்த நொடி போனை காதில் வைத்துக் கொண்டே வெளியே சென்றுவிட, மயூரா தயக்கத்துடன் அத்தையை பார்த்தாள்.

“சுரபி வேண்டாம். நானே வரேன்…” என்று கூறி மருமகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றாள்..

அங்கு வேலை பார்க்கும் வேலைக்காரியை அழைத்து சம்பளத்தை கொடுத்து, வேறு வேலை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, மீதமிருந்த பலசரக்கு சாமான்களையும் அவளுக்கே கொடுத்து விட்டாள். காலியான  சாமான்களையெல்லாம் துடைத்து வைக்கச் சொன்னாள்.

அவள் வேலை செய்து கொண்டிருக்கும்போது மருமகளின் அறைக்கு  சென்று அவளது பொருட்களை எடுத்துக்கொள்ள உதவினாள்..

“ஆமா உன்னோட டிரஸ் மட்டும் தான் இருக்கு.. அவனோட சாமான் எதையுமே காணோம்..?”

“அவர் ரூம் மாடியில இருக்கு அத்தை..?”

“மாடிலேயா..?”

“ஆமாம்..” என்று பதில் சொன்ன மருமகளை வித்தியாசமாக பார்த்தாள். மாடியில் மகனின் அறைக்கு சென்று அங்கு உள்ள அனைத்து பொருட்களையும் தன்னுடைய பார்வையிலேயே எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்..

எல்லாவற்றையும் இந்த வீட்டில் உள்ள அரசுவின் அறையில் வைத்துவிட்டு மருமகளிடம், “உனக்கு இங்க வேற ரூம் வேண்டுமா அல்லது இங்கேயே இருந்துப்பியா..?” என்று கேட்டாள். மாமியார் கேட்ட விதம் அப்பொழுதுதான் உறைக்க, உதட்டை கடித்து சமாளித்தவள், “இந்த ரூம்ல தான் இருக்க சொன்னார்..” என்று பதில் கூறினாள்.

அதற்கும் எந்தவிதமான அபிப்பிராயமும் சொல்லாமல் அத்தை கீழே சென்று விட, மயூராவால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது..

ஆனால் இரவு சாப்பாடு முடிந்ததும் மகனின் பின்னாலேயே அவனது அறைக்குள் புவனா நுழைய, கேள்வியுடன் அம்மாவை பார்த்தான்.

“எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நீ கொஞ்ச நேரம் கீழே போய் சுரபிட்ட பேசிட்டு இரு..” மருமகளை கீழே அனுப்பி வைத்தாள்.

“என்னம்மா..?”

“ஏண்டா நான்தான் பிடிக்காத அம்மாவா போயிட்டேன். ஆசைப்பட்டு கட்டிட்டு வந்த பொண்டாட்டி கூடவா பிடிக்காமல் போயிட்டா..?” குத்தலுடன் மகனிடம் கேட்க பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான்.

“அம்மா சாரிம்மா. அன்னைக்கு வேணும்னு தான் அப்படி பேசினேன்..  எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. ஆனா ஏதாவது ஒருவிதத்தில் நீங்க எல்லாரும் என் மேல கோபமா இருக்கணும். இந்தக்  கல்யாணத்தை பத்தி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, அப்படின்னு நினைச்சேன்…”

“ஏன்..? உன் கல்யாணத்துல என்ன பிரச்சனை..? நீயா ஆசைப்பட்டு தானே கட்டிக்கிட்ட..?”

“அது இப்ப வேண்டாம்மா. நான் பேசினது தப்பு. அதுவும் உங்களை அப்படி பேசியிருக்க கூடாது. வெரி சாரி மா.. என்றவன் கண் கலங்க அம்மாவின் கையை பிடித்துக் கொண்டான்.

“எனக்கு அம்மான்னு அறிமுகமானதே நீங்கதான். நீங்க சொல்லித்தான் நான் உங்க அக்கா பையன்னு எனக்கு தெரியும். சொல்லப்போனா கிருஷ்ணா, சுரபியை விட நீங்க என் மேல தான் பாசமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். உங்ககிட்ட கெட்ட பெயர் வாங்க எனக்கு வேற வழி தெரியலம்மா..”

“நீ ஆயிரம் தான் பேசினாலும் உன்னை கெட்டவன்னு எனக்கு நினைக்க முடியல. உங்க அப்பாவும் அதைத்தான் சொன்னார். இப்ப கிருஷ்ணா கூட அமைதியாய் இருப்பதை பார்க்கும்போது, ஏதோ வெளியில் சொல்லக்கூடாத ரகசியம் உனக்கு இருக்கு. பரவாயில்லை. அதை நான் கேட்கல. ஆனா வீட்டுக்கு வந்த மருமகள் கண்கலங்க கூடாது. அந்த வீட்ல இருந்த மாதிரி அவ ஒரு திக்கும், நீ ஒரு திக்கும் பார்க்கிற வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கா ஒன்றாய் இருந்து குடித்தனம் பண்ண பாருங்க. என்ன சரியா..?” என்று மகனை மிரட்ட வேறு வழியில்லாமல் தலையசைத்து வைத்தான்.

“சரி நான் போய் அவளை வரச் சொல்றேன்..” என்றவள் மகனின் தலையை அன்புடன் கோதிவிட்டு கீழே இறங்கி சென்றாள். பேரன் பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த மயூராவை அழைத்தாள்.

“கூப்டீங்களா அத்தை..?”

ஆமா இங்க வா.. ஆமா பகல் ஃபுல்லா அங்க வேலை பார்த்துட்டு வந்து இருக்கே, அப்படியே கசகசன்னு அவன் முன்னால போய் நிப்பியா..? போய் மேலுக்கு ஊத்திட்டு வேற டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா..”

“அது வந்து அத்தை.. டிரஸ் மாடில..” அவள் பேசும் முன் குறுக்கே கையை காட்டி நிறுத்தியவள், “சுரபி உங்க அண்ணிக்கு இன்னும் சில டிரஸ் எடுத்தேல்ல, அதுல இருந்து நல்லதா ஒரு சாரி எடுத்துடுவா..” என்றதும் மகள் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இந்தா, இங்கேயே குளிச்சிட்டு இத கட்டிட்டு வா..” என்று கதவை சாத்திவிட்டு செல்ல, செய்யும் வகை அறியாமல் சற்று நேரம் நின்று கொண்டிருந்தாள்..

ஆனால் பத்து நிமிஷத்தில் வாசலில் மாமியாரின் குரல் கேட்கவும் அடித்துப் பிடித்து பாத்ரூமுக்குள் சென்று கதவை சாத்தினாள்.

“என்ன இன்னுமா குளிச்சிட்டு இருக்க..?”

“இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் அத்தை..”

‘ம்கூம், என்ன பொண்ணுங்களோ, எதை எடுத்தாலும் அரை மணி நேரம் ஆக்குதுக..’ புலம்பி விட்டு வெளியே சென்றாள்.

குளித்து புடவையை கட்டிக் கொண்டு வந்து கண்ணாடி முன் நின்றாள்.. அடுத்து சுரபி, ஆரபியுடன் நுழைந்தவள், “இதோ பாருங்கடி, என்ன செய்வீர்களோ தெரியாது இன்னும் அரை மணி நேரத்துல இவளுக்கு அலங்காரம் பண்ணி இருக்கணும்..” என்று உத்தரவிட்டு சென்றாள்.

‘க்ளுக்’ ன்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டவர்கள், அவளைப் பார்த்து, “என்ன அண்ணி, இத்தனை நாள் சுதந்திரமாய் இருந்தீங்க.. இப்ப மாமியார் கொடுமை ஆரம்பிச்சுடுச்சா..? அடுத்து நாத்தனார் படுத்தலை அனுபவிச்சுக்கோங்க..” என்று கூறியபடியே அவளுக்கு அலங்காரம் செய்வித்தனர்..

அம்மா கொடுத்துவிட்டு இருந்த நகைகளையும், பூவையும் வைத்து   அவளை அலங்கரித்தனர். நடப்பதையெல்லாம் விதியே என்று சகித்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளூர கதிகலங்கி கொண்டிருந்தது..

‘இதற்கு தனக்குத் தகுதி உண்டா..? தன்னைப் பார்த்து அவன் என்ன நினைப்பான்..? இக்கோலம், அக்கோலத்தை அழித்து விடுமா..?’ மனதிற்குள் பயமும் சந்தேகமும் போட்டிபோட்டுக்கொண்டு அதிகரித்தது.

ஆரபி வெளியே சென்று பால் செம்பை எடுத்துக் கொண்டு வர இருவரும் சேர்த்து அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று, அவளது அறையில் விட்டு கதவை சாத்தி கொண்டு வந்து சேர்ந்தனர்.

கீழே அதற்காகவே காத்திருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு தங்கள் அறைக்குள் சென்றனர். நடுநிசி கழித்து தங்களது அறைக்குள் வந்த மனைவியை தூக்கக் கலக்கத்தில் பிரபாகரன் பார்த்தார்.

“என்ன இவ்வளவு நேரம்..?”

“எல்லாம் உங்க பெரிய  பையனால் தான். கொஞ்சம் கூட விவரமே இல்லை. தானா கல்யாணம் பண்ணினா போதுமா..?” அவள் சடைத்துக் கொள்ள, முற்றிலும் தூக்கம் விலகியவராய் எழுந்து உட்கார்ந்தார்.

“என்னடி உளர்ற..?”

“ஆமா நான் பேசுறதெல்லாம் உளறலாத்தான் தெரியும்.. மத்தவங்க சொன்னா காவியமாக புரியும்..”

‘அடடா என்ன சொல்றேன்னு கேட்டா, வசனத்தை ஆரம்பிக்கிறாளே, எப்படி தடுத்து நிறுத்துவது..!’ மண்டையை பிய்த்துக் கொண்டவராய், இப்போது அமைதியாக இருப்பதுதான் சாலச் சிறந்தது என்பது புரிந்து, திரும்பவும் படுத்துக் கொண்டார்.

‘கொஞ்சமாவது கவலை இருக்கா பாரேன்..’ அதற்கும் ஒரு பாட்டு அவளிடமிருந்து வர, “கேட்டதுக்கு நீ தான் பதில் சொல்லல.. சரி தூங்கலாம்னு நெனச்சேன்..” என்றார்.

கோபத்துடன் ஒருக்களித்து படுத்துக் கொண்டவளை சமாதானப்படுத்தி விஷயத்தை அறிந்தார்

“ஏய் ஏதாவது அறிவிருக்கா..? நீ இன்னும் எந்த காலத்துல இருக்கே?”

“ஏன்..?”

“இதெல்லாம் இந்த காலத்து பசங்க கிட்ட சொல்ல முடியுமா. கல்யாணம் பண்ணி வைக்கவே அவங்க கிட்ட பர்மிஷன் கேட்க வேண்டியிருக்கு. உன் மகன் அதைக் கூட நம்ம கிட்ட கேட்கலை. நீ என்னடான்னா அவனை கேட்காமல் ஏதேதோ பண்ணி இருக்க. என்னாகப் போகுதோ..?”

“என்னாகும்..? எல்லாம் நல்லபடியாக நடக்கும். பேசாம படுங்க..” அவரை அடக்கி விட்டு அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

‘சரி இப்படி ஒரு திருப்பம் இல்லாவிட்டாலும், அவர்களது வாழ்க்கை நேராவது எப்படி..?’ என்ற எண்ணம் ஓட, விஷயம் தெரியாமல் அப்பாவியாக எல்லாவற்றையும் செய்துவிட்டு வந்திருக்கும் மனைவியை ரசித்துப் பார்த்தார்.

அவர் எண்ணியபடியே அங்கும் நிலைமை இருந்தது. கம்ப்யூட்டரில் தனது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தவன் கதவு திறக்கும் சத்தமும், “ஸ்வீட் ட்ரீம்ஸ் அண்ணி..” என்ற சுரபியின் சத்தமும் அவனை திரும்பி பார்க்க வைத்தது. பார்த்தவன் பார்த்தபடி திகைத்து இருக்க, வெளியில் இருந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு தங்கையும், மாமன் மகளும் மறைந்தனர்.

அலங்கார ஓவியமாய் மனைவி நிற்க, அவளது அழகு அவனை பிரமிக்க வைத்தது. தன்னயறியாமல் அவளை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ரசனையோடு பார்த்தான். தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதையே அவனது நினைவில் நிறுத்தி இருக்காதவனுக்கு, அன்று தான் அது உறைத்தது. அது மட்டும் இல்லாமல் இயற்கையான உணர்வுகளும் மனைவி  என்ற உரிமையும் தலை தூக்க, இருந்த இடத்தை விட்டு எழுந்தவன், அவளருகில் வந்தான்..

அதுவரை  அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலை குனிந்து  நின்றவளை, வெட்கம் என்று கருதி, “என்ன இங்கேயே நின்னுட்டே.. உள்ள வா..” கையை பிடித்து அழைத்து கட்டிலுக்கு அருகில் கூட்டி வந்தான். கதவை தாள் போடவில்லையே என்பது நினவு வர, அதையும் செய்தான். கட்டிலில் இருந்த லேப்டாப்பை சட்டவுன் பண்ணிவிட்டு, அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். அப்போதும் அவள் நிமிர்ந்து கூட பார்க்காததும், மடியிலேயே பால் சொம்பை வைத்து இருந்ததும், அவனுக்கு வித்தியாசமாய் இருக்க, அவளது முகவாயை நிமிர்த்தினான்.

அதுவரை பொங்கிக் கொண்டிருந்த கண்கள் கண்ணீரை சொரிய, உதடுகளை அழுத்தி கடித்து உணர்வுகளை அடக்கி வைத்ததால், உதட்டில் இருந்து ரத்தம் கசிய, குங்குமம் என சிவந்து இருந்த முகத்தை பார்த்தவன் பதறிப் போனான்..

“என்னம்மா, என்ன ஆச்சு..?உடம்பு சரி இல்லையா..? அம்மா கிட்ட சொல்லி இருக்கலாமே..!” வரிசையாய் கேள்விகள் அவனிடம் இருந்து புறப்பட்டது. அலங்கார பூஷிதையாய் அவளை தன் அறையில் பார்த்த போது, அவளும் சம்மதித்து தான் வந்து இருக்கிறாள் என்று அவன் நினைத்து தனது கற்பனையை ஓட விட்டு இருக்க, அவளது கண்ணீர், அவளின் மனநிலையை காட்டியது. தீசுட்டாற்போல, கையை எடுத்தவன் சாரி, சாரி என்று கூறிவிட்டு, பால்கனி கதவை திறந்து  கொண்டு வெளியில் சென்றான்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 12 சராசரி: 4.8]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 24

அன்பின் அரசனே…. 35