in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 15 (Final)

ஜீவிதா நேராக அலரின் வீட்டுக்கு வந்து விட்டாள். அலர் அவளை நல்ல முறையிலேயே வரவேற்றார். தீஷாவின் திருமண ஏற்பாடுகளை பற்றி அவளிடம் கூறினார். அவளும் அலரின் கணவரும் பேசி அந்த பையன் எப்படி பட்டவன் என்று விசாரித்தனர்.

பிறகு எல்லாம் சரியாக வர “கல்யாணம் வைங்க. என்னால முடிஞ்சத தீஷாக்கு நான் செய்வேன்” என்று கூறி விட்டாள்.

அன்று இரவு நான்கு பேரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டிருந்தனர். பெரியவர்கள் இட்லி சாப்பிட தீஷாவும் ஜீவிதாவும் தோசை சாப்பிட்டனர்.

“ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே?” என்று தீஷா கேட்க “கேட்குறத பொறுத்து” என்றாள்.

“இல்ல. எனக்கு இவ்வளவு செய்யுறியே‌ உன் தங்கச்சி கோச்சுக்கலயா?”

“அவளா என் கூட வளர்ந்தா? இல்ல அவளுக்கு அக்காவா நான் இருந்தானா? ரெண்டும் கிடையாது. அப்புறம் அவளுக்கு கோவ பட எங்க இருந்து உரிமை வந்துச்சு?”

“என்ன இருந்தாலும் அவள தான சொந்த தங்கச்சி னு சொல்ல முடியும்?”

“உனக்கு தெரியாது தீஷா. நான் இந்த வீட்டுல இருந்து போய் மறுபடியும் ஸ்கூல்ல சேரும் போது என்ன சொன்னேன் தெரியுமா? எனக்கு அப்பா அம்மா இல்ல. கார்டியன் மைமூன் அக்கா தான். அவங்க செத்துட்டாங்க னு சொல்லிட்டேன். அவங்களே எனக்கு யாரும் இல்லாதப்போ அவங்க பெத்த பிள்ளைங்க என் கூட பிறந்தவங்களா?”

“உயிரோட இருக்கும் போது இப்படிலாம் பேசாத ஜீவி” என்று அலர் அதட்ட “அதெல்லாம் அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. அவங்களால எனக்கு ஆகாம இருந்தா சரி” என்றாள்.

சாப்பாடு நேரம் முடிந்ததும் எல்லோரையும் அமர வைத்து நடந்த கதைகளை எல்லாம் கூறி விட்டாள்.

“ச்சே.. பாட்டியா இப்படி? அப்படி பெத்தவங்க கிட்ட இருந்து பிள்ளைய பிரிச்சு தான் உசுர காப்பாத்திக்கனுமா? இங்க பாருமா.. இனி அந்த கிழவி இந்த வீட்டுக்கு வரவும் கூடாது. பேசவும் கூடாது. அது உசுருக்காக என்ன கூட எதாவது செஞ்சுடும்” என்று தீஷா பொரிந்து தள்ளினாள்.

அலருக்கு அன்னை பாசம் இருந்த போதும் ஜீவிதாவின் இடத்தில் இருந்து தான் இப்போது யோசித்தார். தன் மகளை இப்படி பிரித்து இருந்தால் மன்னிப்போமா என்ற கேள்வியே முதலில் வந்தது.

அப்போதே தங்கமணியை அழைத்து இனி உனக்கும் எனக்குமான உறவு விட்டு போனது. எனக்கும் அண்ணனுக்கும் இருக்கும் உறவு மட்டுமே போதும் என்று கூறி விட்டார்.

சிறு வயதில் தானும் பண கஷ்டத்தில் வரும் கோபத்தை ஜீவிதாவின் மீது காட்டி விட்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. ஜீவிதாவிடம் உடனே மன்னிப்பும் கேட்டு விட்டார். ஜீவிதா அதை புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள்.

அலர் இடத்தில் யாராக இருந்தாலும் இப்படி தான் செய்வார்கள். தன் பிள்ளைக்கு போக தான் தனக்கு என்று வாழும் காலத்தில் இன்னொரு பிள்ளையை அவரால் வளர்க்க முடியவில்லை. சேந்தன் பணத்தை கொடுக்க ஆரம்பித்த பின் ஓரளவு பண பிரச்சனை தீர்ந்தது. ஆனால் அவ்வப்போது பண பிரச்சனை வர தான் செய்யும்.

அந்த கோபத்தை ஜீவிதாவின் மேல் காட்டியதை நினைத்து வருத்தப்பட தான் முடிந்தது. ஜீவிதா அவருக்கு ஆறுதல் கூறி விட்டு அமைதியாகி விட்டாள்.

விசயம் அடுத்த நாள் வள்ளியம்மையின் காதுக்கும் மற்றவர்களுக்கும் சென்று சேர்ந்தது. நறுமலருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ஏன் பாட்டி உங்க சுய நலத்துக்காக பெத்த தாயையும் பிள்ளையும் பிரிச்சு இருக்கீங்களே? நீங்க எல்லாம் பொம்பள தானா?”

“நறு இல்லடாமா.. உனக்கும்…”

“நடிக்காதீங்க? அதெப்புடி அம்மா அப்பா இருக்க வரை நல்லா இருப்பனாம். உங்க கிட்ட விட்டுட்டு போனா மட்டும் எதாவது ஆகிடுமாம். அக்காவ பிரிக்க நீங்களே என்ன எதாவது பண்ணிருக்க மாட்டீங்க னு என்ன நிச்சயம்?”

“நறு அப்படிலாம் இல்லமா…”

“நீங்க சொல்லுறத இனியும் நம்ப நான் உங்க மருமக இல்ல” என்றவள் வேகமாக அங்கிருந்து நகர தங்கமணி அவள் கையை பிடித்தார்.

“ச்சே..” என்று தட்டி விட்டவள் “தொடாதீங்க. எனக்கு உங்க கிட்ட பேசவே பிடிக்கல” என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டாள்.

வள்ளியம்மை சேந்தனுடன் மருத்துவமனையில் தான் இருந்தார். நறுமலரும் நிலவனும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து செல்ல வந்திருந்தனர். மனம் பொறுக்காமல் நறுமலர் கேள்வி கேட்டு விட்டு வேகமாக வெளியே சென்று விட்டாள்.

யாதவ் மூலமாக கணிகனுக்கும் நிலவனுக்கும் விசயம் தெரிந்தது. அதை நறுமலருக்கும் வள்ளியம்மைக்கும் இருவரும் கூறி விட்டனர்.

நறுமலரின் உதாசினத்தில் தங்கமணிக்கு மனம் உடைந்தது. அதில் இரத்த அழுத்தம் எகிற மூச்சு விட முடியாமல் மயங்கி போனார். நிலவன் பார்த்து விட்டு வேகமாக தண்ணீரை தெளித்து எழுப்பினான்.

நறுமலருக்கு பாசம் துடித்த போதும் ஜீவிதாவின் வலிகள் மனதில் உறுத்தியது. அழுது கொண்டே வீட்டின் நடுவில் நின்று அவள் கேட்ட கேள்விகளை செத்தாலும் நறுமலரால் மறந்து விட முடியாது.

அத்தனை வலிக்கும் இந்த ஒருவரின் சுயநலம் தான் காரணம். ஒரு வேளை ஜீவிதா கண்காணாமல் போகவில்லை என்றால் தங்கமணியே அவளை பலி கொடுக்க செய்து இருப்பார். நறுமலருக்கு கண்ணீர் தான் வந்தது. அதிலும் தீஷாவை தங்கை என்று கூறிய ஜீவிதா நறுமலரை அருகில் நெருங்க கூட விடவில்லையே.

அக்கா பாசம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் வளர இவர் தானே காரணம். நறுமலர் மயங்கியவரை பார்த்து விட்டு பதறாமல் நிற்க நிலவன் மட்டுமே தண்ணீரை தெளித்து எழுப்பினான்.

கண் விழித்த பிறகும் அவருக்கு மூச்சு விடுவது சிரமமாக இருக்க கார்த்திக்கிடம் உதவி கேட்டான். அவன் காரை எடுத்து வர தங்கமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கார்த்திக்கிற்கு நிலவன் மீது கோபம் எதுவும் இல்லை. ஆனால் அவனது பாட்டியை பற்றி ஜீவிதா சொன்னது எல்லாம் ஒரு வெறுப்பை உருவாக்கி இருந்தது. ஆறுதலாக கூட பேசாமல் காரை மட்டுமே ஓட்டிச் சென்றான்.

மருத்துவமனையில் தங்கமணிக்கு சிகிச்சை பார்க்கபட்டது. வள்ளியம்மை வந்து ஒன்றுமே பேசாமல் அமைதியாக நின்றிருந்தார். மருத்துவர் சோதித்து மருந்து கொடுத்து விட்டு செல்ல அவரோடு நறுமலரும் வெளியே வந்தாள்.

“ப்ரஸர் கூடிருச்சு. இந்த வயசுக்கு மேல இதெல்லாம் சகஜம்னாலும் அவங்கள கவனமா பார்த்துக்கோங்க” என்று கூறி விட்டு மருத்துவர் சென்று விட்டார்.

“இந்தாமா.. நீயே உன் மாமியார பாரு. நான் திரும்ப ஊருக்கு போறேன்” – நறுமலர்.

“ஊருக்கா?”

“ஆமா.. நாளைக்கு அப்பாவுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சதும் கிளம்ப போறேன். அங்க என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு க்ளீனிக் ஸ்டாராட் பண்ண போறாங்களாம். அவங்க கூட பார்ட்னரா கூப்பிடுறாங்க. போக போறேன்.”

“படிப்ப முடிச்சதும் இங்க தான இருக்க போறதா சொன்ன?”

“அப்போ சொன்னேன் தான். ஆனா இங்க நடக்குறத எல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் மனுசன் இருப்பானா? அதுவும் உன் மாமியார் மூஞ்சில எல்லாம் இனி முழிக்க முடியாது. அவங்க இல்லாதப்போ வந்துக்கிறேன்.”

“நறு என்ன பேசுற?” என்று வள்ளியம்மை அதட்ட “இப்ப எதுக்கு பொங்குறீங்க? உங்க மூத்த பொண்ணு.. உங்கள முதல் முதல்ல அம்மா னு கூப்பிட்ட பொண்ண உங்க கிட்ட இருந்து பிரிச்சது மறந்து போச்சா? அக்கா நீ எல்லாம் ஒரு அம்மாவா னு கேட்டுட்டு போனது மறந்துடுச்சா?

எனக்கு மரியாதை சொல்லி தரீங்களா? நான் ஒன்னும் ஊருல இருக்க எல்லாரையும் திட்டல. இந்த வீட்டுல இருக்க எல்லாருக்கும் துரோகம் பண்ணவங்கள திட்டுறேன். என்ன வேணா பண்ணிகோங்க. நாளைக்கு ஆப்ரேஷன் முடிஞ்சு அப்பா கண் முழிச்சதும் நான் கிளம்பிடுவேன்.”

வள்ளியம்மைக்கு எதுவும் பேச முடியவில்லை. மௌனமாக நின்றார். நிலவனும் அப்படியே.

“நீ வா நாம போய் அப்பாவ பார்ப்போம்.‌ நாளைக்கு என்னலாம் பண்ணனும் னு டாக்டர் கிட்ட கேட்கனும்” என்று கூறி நிலவனை நறுமலர் அழைத்துச் சென்று விட்டாள்.

நறுமலர் பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தங்கமணிக்கு கண்ணீர் வடிந்தது. அவரது கண்ணீரை துடைக்கவோ கேட்கவோ யாரும் அருகில் இல்லை. இளமையில் தனிமை கொடுமை அல்ல. முதுமையில் சுற்றமும் உறவும் இருந்தும் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத தனிமை தான்‌ மிகக் கொடுமை.

தனிமையில் ஜீவிதா அனுபவித்த வலி இன்று தங்கமணிக்கு பரிசளிக்கப்பட்டது. கண்ணீர் வடித்தபடி அவர் படுத்து இருக்க வள்ளியம்மை அதை பார்த்து விட்டு ஒன்றுமே பேசவில்லை. அத்தையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத மருமகள் இன்று அத்தை சாகட்டும் என்று மகள் சொல்வதை கேட்டுக் கொண்டு அமைதியாய் நின்றார்.

தங்கமணிக்கு மனம் வெறுத்து போனது. எல்லாம் இருந்தும் அனாதையாக இருப்பதை இன்று அவர் உணர ஜீவிதாவோ தீஷாவுடன் பொழுதை நன்றாக கழித்துக் கொண்டிருந்தாள்.

சேந்தன் வார்த்தைக்கு வார்த்தை ஜீவிதாவை பற்றியே விசாரிக்க நறுமலர் முடிந்த வரை உண்மையை கூறாமல் சமாளித்தாள்.

“நாளைக்கு ஆப்ரேஷன் முடிஞ்சு நீங்க வந்ததும் அக்கா இருப்பாங்க” என்று கூறி சேந்தனை அன்று தூங்க வைத்தாள்.

இவர்களை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் ஜீவிதா தீஷாவுடனும் அலருடனும் வேறு வேலைகளில் ஈடு பட்டு இருந்தாள்.

அறுவை சிகிச்சை முடிந்ததும் அலருக்கு செய்தி வந்தது. அதை பற்றி ஜீவிதாவிடம் அவர் கூற “அது எதுக்கு எனக்கு? யாரு நல்லா இருந்தா என்ன இல்லனா என்ன?” என்று கேட்டு விட்டு சென்று விட்டாள்.

ஒரு வார்த்திற்கு பிறகு ஜீவிதா அங்கிருந்து கிளம்பினாள். விமானத்தில் கிளம்பியவள் வானை வேடிக்கை பார்த்தாள். 

திடீரென கார்த்திக்கின் நியாபகம் வந்தது. கார்த்திக் அவளை விமானத்தில் ஏற்றி விட வந்து இருந்தான். அவளது நண்பர்களும் வந்து இருந்தனர்.

கார்த்திக் ஒரு நல்ல நண்பன். அவனிடம் பேசி விட்டு யாதவ்விடமும் விடை பெற்றுக் கொண்டாள்.

“உங்க கொள்கையில தப்பு இல்ல. ஆனா உங்க அம்மா உங்கள பிரிய ஆசைபடல. அவங்க ஆசைய புரிஞ்சுகிட்டு உள்ளூர்லயே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்று கூறி விட்டு புன்னகையுடன் விடை பெற்றாள்.

அவளது நண்பர்கள் அந்த குருவை விசாரித்து விசயத்தை வாங்கி இருந்தனர்.

குரு பிறவியிலேயே நடக்க முடியாமல் இல்லை. அவனுக்கு வேறு ஒருவர் மந்திர தந்திரங்களை கற்று கொடுத்து இருக்கிறார். அதிக பலம் பெற்றதும் சொல்லிக் கொடுத்த ஆசானிடமே தன் மந்திரங்களை பயன்படுத்தி இருக்கிறான்.

அதற்கு அந்த ஆசான் சாகும் முன்பு சாபம் கொடுத்து விட்டு இறந்து விட்டார். அதனால் அவனால் நடக்க முடியாது. கையும் வேலை செய்யாது. வாயும் கண்ணும் தான் அவனுக்கு ஆயுதமாக இருந்தது.

இந்த சாபத்தை போக்க தான் ஜீவிதாவை பலி கொடுக்க முடிவு செய்தான். அதன் பின் எட்டு பெண்களை பலி கொடுத்தான். பிடிபட்ட பின் அவனை மந்திரம் சொல்ல முடியாமல் நாக்கையும் வெட்டி விட்டனர்.

இறந்த பெண்களின் குடும்பம் வழக்கு பதிவு செய்ய ஒப்புக் கொண்டனர். இனி மற்ற வேலைகளை அவர்கள் பார்த்து கொள்வார்கள். அவளுக்கு இனி வேலை இல்லை.

அப்போது தீஷா விடை பெறும் போது கேட்ட கேள்வி நியாபகம் வந்தது.

“என் கல்யாணத்துக்கு வருவியா?”

“மாட்டேன். தாய் மாமன் னு அந்த குடும்பம் வரும். அவங்கள இனி ஜென்மத்துக்கு பார்க்க கூடாது னு இருக்கேன். சோ உன் கல்யாணத்துக்கு என் பங்கு இருக்கும். பட் நான் இருக்க மாட்டேன்”

தீஷா அவளை வற்புறுத்தவில்லை. அவளது வலிகளை விவரம் தெரிந்த வயதில் இருந்து தீஷா கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளது முடிவு நூறு சதவீதம் சரியென்று தோன்றியது.

ஜீவிதா அவளுக்கு பிடித்த எல்லோரையும் திரும்ப பார்ப்பாள். ஆனால் இந்த ஊரில் இல்லை. வேறு எங்கு வேண்டுமானாலும் சந்திக்கலாம். சந்திக்க முடியவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டாள்.

ஒரு பெரும் இருளில் தொலைந்து இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறாள். இனி வாழ்வில் இருளை சந்திக்கவே மாட்டாள். சன்னல் வழியாக சூரியனை பார்த்தாள். சூரியன் மெல்ல மெல்ல மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தது.

இனி அவள் வாழ்வில் அஸ்தமனம் என்றால் அது சூரியனுக்கு தான் அவளுக்கு இல்லை.

முற்றும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

18. எனதழகே[கா]

அன்பின் அரசனே… 34