in

மௌனத்தின் மனசாட்சி -25

 

 

அத்தியாயம் 25

நடு இரவுக்கும் மேல் வந்த கணவனிடம் பேச முடியாமல் போகவே அதிகாலையிலேயே அவனை தேடிக் கொண்டு வந்து நின்றாள்..

ஒரு நாளும் இல்லாத திருநாளாய் காபியுடன் வந்து கதவை தட்டிய மனைவி பார்த்து வியந்தவன் அவசரமாய் கதவை விரிய திறந்தான்..

“என்ன விஷயம்? ஏதும் உடம்பு சரி இல்லையா..?”

“அதெல்லாம் ஒன்றும் இல்ல. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..”

அவள் கூறியது ஆச்சரியமாக இருந்தாலும், பதிலேதும் கூறாமல் அவளை உள்ளே வரச் சொன்னான். தயங்கி கொண்டே உள்ளே நுழைந்தவள் அவனது அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள்.. 

 அவளது அறையை விட சற்றே பெரிதாக இருந்தது. எல்லா வசதிகளும் அவளுக்கு இருந்தது போலவே இருந்தது. சராசரி ஆண்களின் அறை போல் குப்பையாக இல்லாமல், எல்லாமே ஒரு வித ஒழுங்குடனும் நேர்த்தியுடனும் அடுக்கப் பட்டிருந்தது

“ஒரு நிமிஷம் உக்காந்து இரு. முகம் கழுவிட்டு வரேன்..” என்று அவன் சொல்லி விட்டு போக, அங்கிருந்த சேரில் அமர்ந்தாள். எப்படி பேசுவது என்று மனதளவில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க, அவள் எதிரில் கட்டிலில் அமர்ந்தான்.

“சொல்லு என்ன விஷயம்..?”

“நீங்க முதல்ல காபி எடுத்துக்கோங்க..” அவனுக்கு நினைவு படுத்தி விட்டு, முன்தினம் அவனது அப்பா வந்து பேசி சென்றதை கூறினாள்.

முதலில் திடுக்கிட்டாலும், அவள் சமாளித்த விதத்தில் திருப்தியுற்றவன், முழு விஷயத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டான்..

“சரி, இவ்வளவு தானே..? இதுக்கு எதுக்கு காலையிலேயே வரணும்..? கீழ சாப்பிட வரும்போது சொல்ல வேண்டியது தானே..?”

“அவர் சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப உறுத்தலாக இருந்தது.. அன்னைக்கு சொன்ன, அதே பிரச்சனை தானே..? அந்த விவகாரத்தை ரொம்ப தீவிரமா விசாரிக்கிறதா சொன்னார். நடந்தது நடந்து போச்சு. எதையும் மாற்ற முடியாது. நம்ம சட்டத்துகிட்ட போகல. கோர்ட் தண்டனை கொடுக்காமல், நாமளே சட்டத்தை எடுத்துகிட்டது தப்புதானே..?”

“தப்புதான்.. ஆனா கோர்ட்டும் போலீஸும் ஞாயமா இருக்குதுன்னு நம்பறியா..?”

“இல்ல. நேர்மையான வழியில் தண்டனை வாங்கிக் கொடுக்காமல் குறுக்கு வழியில் போகிறது தப்புதானே…?”

அவளது கேள்வி அவனது முகத்தில் அறைந்தது. நேர்மையான ஆசிரியரின் மகளான அவளுக்கு அடிப்படையிலிருந்தே, நீதி, நேர்மை, நியாயம், என்றே வளர்க்கப்பட்டு இருந்ததால் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

அவனுக்கும் அது ஒப்புதல் இல்லை என்றாலும், அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளிவராமல் 24மணி நேரமும் கரைந்து கொண்டிருந்த அவளது வருத்தம் அவனை தாக்கியதாலும், தம்பி மற்றும் தன்னுடைய வாழ்க்கை  தலைகீழாக மாறியது அவர்களால்தான் என்ற ஆத்திரமும் சேர்ந்து தான் அவனை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது..

அதே இடத்தில் கிருஷ்ணா இருந்தாலும் இதுதான் செய்திருப்பான் என்பதால் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் கிருஷ்ணாவிற்கு பதவி இருக்கிறது. அவன் செய்திருந்தால் அது என்கவுண்டர் லிஸ்டில் சேர்ந்திருக்கும். இவன் தனி மனிதன் என்பதால் பதில் சொல்ல முடியாமல் அவள் முன் தலை குனிந்து நின்றான்.

“நான் செய்தது சரியா தப்பா என்று எனக்கு உன்கிட்ட விவாதம் செய்ய விருப்பமில்லை. இது தப்புதான் நீ சொன்னா என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்..”

இப்படி சொல்பவரிடம் என்ன பதில் சொல்வது என்று அவள் விழித்தாள்.. எதுவுமே பேசாமல் அவள் திரும்பி வாயிலை நோக்கி செல்லவும், அவள் இடம் கேட்டான்.

“இப்ப நான் என்ன செய்யணும்..? ஒத்துகிட்டு சரண்டர் ஆகவா..?”

“ஐயோ அப்படி எல்லாம் சொல்லல..” அவள் பதறினாள்.

“இதோ பாரு.. எந்த விதி உன்கிட்ட அன்னைக்கு என்னை கொண்டு வந்து சேர்த்ததோ. அதே விதிதான் அவங்க விஷயத்தையும் தீர்மானித்து இருக்கு. இனி உன்னோட வாழ்க்கையில எந்த சந்தர்ப்பத்திலும் அவங்கள நேருக்கு நேரா பார்க்கக்கூடாது. அது மட்டும் இல்ல. மினிஸ்டர் பையன்கிறதுனால டிவி பேப்பர்ல கூட அவன் முகம் தெரிய கூடாதுன்னு நினைச்சேன். 

அவனுக்கே அப்படிப்பட்ட தண்டனை கொடுக்கணும்னு முடிவு பண்ணின பிறகு இவனுங்க எல்லாம் எம்மாத்திரம்..? என்ன அவன் முடிவு என் கையில் இல்லை. என் தம்பி கையால முடிஞ்சிருச்சு..” 

அவனது விளக்கம் அவளது வாயை அடைத்தது.. “சாரி..” ஓற்றை சொல்லுடன் அங்கிருந்து அகன்றாள். ‘விதி வழியே வாழ்க்கை செல்லும் என்றாலும், இனி என்னவெல்லாம் வைத்து காத்திருக்கிறதோ..?’ இருவரின் எண்ணமும் அதுவாக இருந்தது.

பிரபாகரன் தனது மாமனாரிடம் கலந்து ஆலோசித்து, தங்களுக்கு வேண்டிய அரசியல் நண்பரை வரவழைத்துப் பேசினார். ஆளுங்கட்சியின் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்த நண்பர், இவர்கள் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார்.

பிரபாகரன் நினைத்திருந்தால் அரசியலில் சேர்ந்து மிகப்பெரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் அதை எளிதாக உதறிவிட்டு,  அவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அத்துடன் நில்லாது கட்சிக்கு தாங்கள் கொடுக்கும் வழக்கமான நிதி உதவியும் மறுக்காமல் செய்தனர்.

அவர்களது செல்வாக்கும் நிறைய ஓட்டுகளை சேகரித்து தர, எளிதில் அமைச்சரானார்.  விஷயத்தை சூசகமாக சொன்னதுமே புரிந்து கொண்டவர் அவர்கள் முன்னாலேயே அந்த கேஸை விசாரிக்கும் அதிகாரி முதல் அரசியல்வாதி வரை தகுந்த முறையில் கவனிக்க ஏற்பாடு செய்தார்..

அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட, அரசியல்வாதிக்கு  வேறு முறையில் எச்சரிக்கை அளிக்கப்பட்டது..

கட்சிக்கு தேவையான நிதியும் அளிக்கப்பட்டது.. ஒரே நாளில் விஷயம் தலைகீழாக மாற கிருஷ்ணாவுக்கு நிம்மதி ஆயிற்று. மற்றவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் கிருஷ்ணாவிற்கும் இடமாற்றம் செய்து இருந்தனர்.

“அப்பா பிரச்சனையை சுலபமா முடிச்சிட்டீங்க..! ஆனா என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க…!”

“எந்த ஊருக்கு..?”

“மதுரைக்கு..!”

“பரவாயில்லை ஒரு வருஷம் அங்கே இரு.. அதுக்கப்புறம் பாத்துக்கலாம்..” என்றார் அப்பா.

குறுக்கே பேச வந்த மாமாவை  கண்ணாலேயே எச்சரித்தவர் மகன் சென்றபிறகு மாமனாரிடம் பேசினார்.

“மாமா கொஞ்ச நாள் இவன் இந்த வீட்டை விட்டு வெளியே இருக்கட்டும். அப்பதான்  மூத்தவனை வீட்டுக்குள்ள இழுக்க முடியும்..”

மருமகனின் திட்டம் அறிந்ததும் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து கிருஷ்ணாவும் தன்னுடைய ஜாகையை மாற்றிக் கொண்டு சென்றுவிட, பெரிய மகனிடம் நேராக வந்தார்..

எல்லா விஷயமும் தனது நண்பன் சசி மூலம் அறிந்திருந்தவன் அப்பாவை தர்மசங்கடத்துடன் பார்த்தான்.

“சாரிப்பா..”

“பரவாயில்லை விடு..”

“வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டீங்களா..?”

“அதெல்லாம் யாருக்கும் தெரியாது தாத்தா. எனக்கு கிருஷ்ணா மூணு பேருக்கு மட்டும்தான் தெரியும். அத பத்தி பெருசா நினைக்க வேண்டாம்.. நான் இப்போ உன்கிட்ட பேச வந்தது வேற ஒரு விஷயம்..”

வாயைத் திறந்து பதில் பேசாவிட்டாலும் ‘என்ன விஷயம் சொல்லுங்க’ என்பதுபோல் பார்த்தான்.

“கிருஷ்ணாவும் ஊருக்கு போனது வீட்ல எல்லாருக்கும் ஒரு மாதிரி இருக்கு. நீயும் இல்லை அவனும் இல்லை வீடு வீடா இல்லை.. உங்கம்மா நேத்துல இருந்து புலம்ப ஆரம்பிச்சுட்டா.. நீயும் மருமகளும் கொஞ்ச நாள் அங்க வந்து இருக்கலாமே…!”

அப்பா கேட்டதும் சற்று நேரம் யோசித்தான். ‘அங்கு போனால் எல்லோரும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.. தன்னைப் பற்றிப் பிரச்சினை இல்லை. ஆனால் மயூரா..?’

“என்னடா ரொம்ப யோசிக்கிறே?”

“அது இல்லப்பா. எங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு இன்னும் வீட்ல யாருக்கும் தெரியாது.. அதனால ஒரு வேளை அவளை தப்பா யாராவது பேசிட்டா..?”

“இவ்வளவுதானே. ஒரு ரிசப்ஷன் கிராண்டா கொடுத்திடலாம். நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு சொல்றேன்..”

“அப்பா மயூரா..”

“நானே என் மருமக கிட்ட பேசிக்கிறேன்..” சுலபமாக கூறியவர் அவனிடம் அவளது நம்பரை வாங்கி தனது அலைபேசியில் இருந்து அழைத்தார்.

எடுத்த எடுப்பிலேயே அவளிடம் விஷயத்தைக் கூறி அனுமதி வேண்டினார்.. அவரிடம் பதில் சொல்ல முடியாமல் “மாமா அவங்க கிட்ட தான் கேக்கணும்..” என்றதும்..

“இதோ அவனே இருக்கான்.. அவன்கிட்டே சொல்லு..” என்று அலைபேசியை அவனிடம் கொடுத்தார்..

அவர் முன்னால் விளக்கமாக எதுவும் கேட்க முடியாமல், “கல்யாணம் பெருசா பண்ணல, அதனால ரிசப்ஷன் வைக்கலாமான்னு அப்பா கேக்குறாங்க..?”

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..”

“எதுவா இருந்தாலும் சொல்லு உன்னோட விருப்பம் தான் முக்கியம்..”

எதிரே அவனுடைய அப்பா இருக்கும்போதே தன்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவன் கேட்கவும், அவளது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது‌. 

அவர்கள் திருமணம் நடந்த விதத்திற்கு இன்னொரு வீட்டினராக இருந்தால் ஒன்று அவளை விரட்டி இருப்பார்கள் அல்லது இருவரையுமே ஒத்து கொள்ளாமல், பிரிந்திருப்பார்கள்.

மகன் மட்டும் போதும் என்று நினைக்காமல்  மருமகளும்  வேண்டும் என்று எண்ணும்  மாமனாரின் பெருந்தன்மையும், உன்னுடைய நிலைமைக்கு உனக்கு வாழ்வு கொடுத்ததே பெரிது என்று முகக் குறிப்பில் கூட காட்டாது ஒவ்வொரு விஷயத்துக்கும் அவளது விருப்பத்தையும் கேட்டறியும் கணவனின் அன்பும் அக்கறையும் அவளை சம்மதம் சொல்ல வைத்தது.

“உங்க விருப்பம் தான் என்னுடைய சம்மதமும்..” அவள் சம்மதித்ததும் ஆசுவாச பெருமூச்சு விட்டான். 

“என்னடா சொல்றா என் மருமக..?” 

வாய் வார்த்தைக்கு கூட உன் மனைவி என்று சொல்லாமல் என் மருமகள்  என்று கொண்டாடும் அப்பாவைப் பார்த்து புன்முறுவல் புரிந்தான்.

“சம்மதம் சொல்லிட்டா.. ஆனா கிருஷ்ணா..?”

“அதுக்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றவர் கிளம்பினார்.

வீட்டில் பெரியவர்கள் மட்டுமே இருக்க அன்று இரவு சாப்பிடும் பொழுது மெல்ல விஷயத்தை ஆரம்பித்தார்.

“சின்னவன் டிரான்ஸ்பர் ஆகி வெளி ஊருக்கு போயாச்சு.. பெரியவனை வீட்டுக்கு கூப்பிடலாம்னு இருக்கேன்..” என்றதும் மனைவியும், மச்சினனும் அவரது முகம் பார்த்தனர்.

“நல்லா இருக்கே உங்க நியாயம். எப்படா இவன் போவான் காத்துட்டு இருந்தீங்களா..? இப்ப மட்டும் அவன் கூப்பிட்டா வந்திருவானா..? நம்ம எல்லாரும் வேண்டாம்னு போனவன் அவன். அவனா தான் வரணும். நம்ம என்ன கூப்பிடுறது..?” அம்மாவுக்கு தன் பெரிய மகன் தன்னை வார்த்தைகளால் சுட்டது மறக்கவில்லை.

“இப்படி ஒருத்தரை ஒருத்தர் வீம்பு பாராட்டிட்டு இருந்தா குடும்பம் எப்படி ஒற்றுமையாகும்..? இப்ப என்ன..? நீ கூப்பிட வேண்டாம். நான் கூப்பிடுறேன். அவன் வருவான். அந்த பொண்ணு வரும். தேவை இல்லாம யாரும் அந்த பொண்ணை பேசக் கூடாது..” என்றவர் மற்றவர்கள் பேசுமுன் எழுந்து சென்றுவிட்டார்.

“என்னப்பா இது..? இவர் இப்படி பேசிட்டு போறார். கிருஷ்ணா இப்ப இங்க இல்ல. அதுக்காக லீவு நாள் வராமல் போயிடுவானா..? வரும்போது அவளை பார்த்தா அவனோட மனசு என்ன பாடுபடும்..? அவங்க இங்க இருக்கிற தெரிஞ்சா அவன் வராமலேயே போய்ட்டா..? இவனுக்காவது கல்யாணம் ஆகி தனியா போனான்னு நாம மனசை சமாதானப் படுத்திக்கிட்டோம். ஆனா அவன் நிலைமை..? யாருக்குன்னு பார்க்கிறது.. எனக்கு தெரியல..” என்றவள் அழ ஆரம்பித்தாள்.

கோமதி நாயகத்துக்கு மகள் அழுவதை பார்க்க தாங்க முடியவில்லை. அவள் சொல்வதும் சரி என்பதால் மருமகனிடம் இது விஷயமாக பேச வேண்டுமென்று முடிவு எடுத்துக் கொண்டார்.

விஷ்ணுவை அழைத்து மாமா எங்கே என்று கேட்க மொட்டை மாடியில் அவர் இருப்பதாக கூறினான். தள்ளாத வயதிலும் மருமகனை தேடி அவர் அங்கு சென்றார். அங்குள்ள ஒரு பெஞ்சில் யோசனையோடு சாய்ந்திருந்த மருமகனின் அருகில் சென்று அமர்ந்தார்.

“என்ன மாமா என்ன விஷயம்..? போன் பண்ணி இருந்தா நானே கீழ வந்து இருப்பேன். எதுக்கு மாடி ஏறி கஷ்டப்படுறீங்க..?”

“நீ சொன்ன விஷயத்தை பத்தி கேக்க தான்.. பெரியவனை வீட்டுக்கு கூப்பிடனும் சரிதான். ஆனா அண்ணன் தம்பி இரண்டு பேருக்கு இடையிலே இன்னும் எதுவும் சரியாகலையே..”

“உண்மைதான் இதுவரை சரியாகலை. ஆனா இப்ப சரி பண்ணி விடலாம் என்கிற நம்பிக்கை வந்திருக்கு..” என்று சொன்ன மருமகனை உற்றுப் பார்த்தார்.

“ஆமா மாமா யோசிச்சு பாருங்க. எல்லா விஷயமும் கிருஷ்ணாவுக்கும் தெரியப்போய் தான் நம்மகிட்ட வந்து அண்ணனை  காப்பாற்றுவதற்கு வழி கேட்டான். அப்படின்னா அண்ணன் மேல தப்பு இல்லைன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அதனால அவன்  மேல இனிமே கோபம் இருக்க வாய்ப்பில்லை. அதனால அண்ணன் வீட்டுக்கு வர்றதுக்கு அவன் தடை சொல்ல மாட்டான்னு  நான் நினைக்கிறேன்..”

“நீ சொல்றது சரிதான். கோபம் வேணா போய் இருக்கலாம். ஆனா ஏமாற்றம் இருக்குமே..”

“கோபத்தை சரி பண்றது கஷ்டம். ஏமாற்றத்தை சரி பண்றது ஈஸி.. அதைவிட மேலான வாழ்க்கை அவனுக்கு காத்து இருக்குன்னு சொன்னா புரியாமலா இருக்கும்..” 

“புரிஞ்சா சரிதான்..” என்றார் ஒரு பெருமூச்சுடன்..

“கவலைப்படாதீங்க மாமா.. அவனுக்கு ஒரு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன்..”

“புதுசா ஒரு பொண்ணு பாக்குறதுக்கு நம்ம இதயாவை பார்த்தா என்ன..? எப்படியும் அவளுக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கும். கூடவே வளர்ந்தவ.. முதல்ல அந்த பொண்ணு கிட்ட கேட்போம். ஓகேன்னா அவ அம்மா அப்பா கிட்ட பேசலாம்..” 

மாமனார் கூறியது அவருக்கும் பிடித்து இருக்கவே ஒப்புதல் ஆக தலையசைத்தார். “நீங்களே அந்த பொண்ணுகிட்ட விசாரிங்க..” பொறுப்பையும் மாமனார் இடமே கொடுத்தார். மேலும் சற்று நேரம் அது விஷயமாக பேசி இருந்து விட்டு இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

மறுநாளே இதயாவை அழைத்துக் கேட்டார். திடீரென்று தாத்தா தன்னிடம் கிருஷ்ணாவை மணமுடிக்க கேட்டதும் திகைத்துப் போனாள்..

“தாத்தா நானா..?”

“ஏம்மா உனக்கு என்ன குறைச்சல்..? அழகா இருக்க, படிச்சிருக்க.. எல்லாத்தையும் விட முக்கியமா சின்ன வயசுல இருந்து அவனை உனக்கு தெரியும்.  இதைவிட வேற என்ன வேணும்..?”

அவர் சொன்னது உண்மைதான் என்றாலும், மயூராவை கிருஷ்ணா காதலித்தது தனக்கும் தெரியும் என்பதால் பேசாமல் இருந்தாள். அவள் பதில் சொல்லாததை   பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார்..

“ஏற்கனவே அவன் காதலிச்சது, ஆனா அது கைகூடாமல் போனது மட்டுமில்லாமல், அந்த பொண்ணு இப்போ அண்ணியா இருக்கிற சூழ்நிலை இதெல்லாம் யோசிச்சுதான் உன் கிட்ட பேசறேன்மா.. 

இதெல்லாம் தெரிஞ்ச நீ அவனுக்கு மனைவியாக வந்தா குடும்பத்தில் புயல் வீசாதுன்னு நினைக்கிறேன். உன்னோட சினேகிதியையும் கிருஷ்ணாவையும் நல்லா புரிஞ்ச நீ அவர்களோட புது உறவுக்கு பாலமாக இருப்பேன்னு நினைக்கிறேன்..

இப்படி ஒரு பிரச்சனை வந்ததுனால மட்டும்தான் என்னை  பண்ணிக்கச் சொல்லி கேட்கிறீர்களா..? அப்படின்னு நீ நெனச்சா எனக்கு   அதுக்கு பதில் சொல்ல தெரியல. ஆனா இப்போதைக்கு எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல. எனக்கு இதுக்கு பதில் உடனே சொல்ல வேண்டாம். நல்லா யோசிச்சு சொல்லு. ரெண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ..” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

கிருஷ்ணாவை அவளுக்கு பிடிக்கும் தான். இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் தன்னுடைய வாழ்க்கை என்று வரும்பொழுது முழுமனதோடு அவன் அவளை ஏற்காவிட்டால், என்ன செய்வது என்ற பயமும் தோன்றியது..

அவளைப் பொறுத்தவரை இந்தக்காலத்தில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு அன்பு அல்லது காதலை தாண்டி தான் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க முடிகிறது. ஒரு சிலருக்கு அதிர்ஷ்டவசமாக காதலித்தவர்களையே திருமணம் முடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலோருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் அதை மறைத்து வேறு திருமணம் முடித்துக் கொள்கின்றனர்.

ஆதலால் அவனை மணமுடித்துக் கொள்வதில் இவளுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவனின் மனநிலை என்ன என்பது தெரியாமல் ஒத்துக் கொள்ளவும் மனதில்லை. ஏனெனில் இவளுக்கு எல்லா விஷயமும் தெரியும் அல்லவா..?

இரண்டு நாள் கழித்து அலுவலகத்தில் இருந்து நேராக மயூராவை சந்திக்க சென்றாள். தன்னை அன்புடன் வரவேற்ற தோழியை அணைத்துக் கொண்டாள்.

“என்ன இன்னைக்கு சண்டே கூட இல்லை.. திடீர்னு வந்து இருக்க..?” என்ற தோழியை வியப்புடன் பார்த்தாள்.

“பரவாயில்லையே இந்த அளவு மாறிட்ட. உன்னை இப்படி பார்க்கும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..” என்று கண்கலங்க கூறினாள் இதயா.

“ஆமா, சந்திரகுமார்ஜி கருத்தரங்கம் போயிருந்தேன். அவருடைய பேச்சு எனக்கு நிறைய மாறுதலை கொடுத்தது. அதுக்கப்புறம் அவருடைய எல்லா சொற்பொழிவுகளும் ஆடியோ கேட்டேன். அதுல இருந்து ஒரு சின்ன தெளிவு..”

“வெரி குட்.. இப்படி தான் இருக்கணும். நான் ஒரு முக்கியமான விஷயமா உங்ககிட்ட பேச வந்தேன்..” என்றவள் தாத்தா தன்னிடம் பேசியதை கூறினாள்.

அடுத்த நொடி கண்ணீருடன் தோழியின் கையை பிடித்துக் கொண்ட மயூரா, “தாத்தாவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. எனக்காக நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. அவரோட வாழ்க்கை என்னால பாழாயிடுமோன்னு என் மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கு.  நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட கவலை தீர்ந்தது. எனக்கு முன்னாடியே உனக்கு அவரை நல்லா தெரியும். அவரோட குணங்களெல்லாம் உனக்கு அத்துப்படி ஆயிருக்கும். அதனால அவரோட மனசு உன்பக்கம் திருப்புவது ரொம்ப சுலபம். ப்ளீஸ் இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லு..” என்று வேண்டி கேட்டுக் கொண்டாள்.

அதற்கு பதில் சொல்லாமல் இவள் மௌனமாக இருக்கவும், “அவருக்கு என்னை பிடித்திருந்தது. எங்கிட்ட நேரடியா சொல்லாவிட்டாலும் எனக்கு அது தெரியும். ஆனாலும் கூட நான் ரொம்பநாள் பதிலே சொல்லல. காரணம் எங்க வீடு. சுலபத்தில் எங்க அப்பா ஒத்துக்க மாட்டார் என்று எனக்கு தெரியும். ஆனா விதி சேவாக்  ரூபத்தில் வந்தது. அவனுக்கு பயந்து தான் நான் கிருஷ்ணாவோட காதலுக்கு சம்மதம் சொன்னேன். ஆனா அதுலயும் அவன்தான் ஜெயிச்சுட்டான். 

இப்படித்தான் எனக்கு நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் அவரோட காதலுக்கு சம்மதம் கூடச் சொல்லியிருக்க மாட்டேன். நடக்கிற படி நடக்கட்டும்னு  பேசாமல் இருந்து இருப்பேன். இப்போ என்னால அவர் வாழ்க்கை அந்தரத்திலே நிக்கற மாதிரி ஒரு ஃபீலிங். 

அவருடைய விருப்பத்திற்கு சம்மதம் சொன்னேனே தவிர, தேவை இல்லாம ரொம்ப பேசிக்கிட்டது கூட கிடையாது. போன்ல பேசுவார் அவ்வளவுதான். சந்திக்கவும் நிறைய வாய்ப்பு இல்லை. அவர் வெளியூர் போய்ட்டார். எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு ஈர்ப்பு இருந்தது. அது ஆழமா வேரூன்றி காதலா பரிணமிக்க தேவையான நேரம் கிடைக்கல. அது ஒருவகைக்கு நல்லதுதான்.

ஒருவேளை இப்படித்தான் நடக்கணும் என்கிறதால அப்படி நடக்கலையோ என்னவோ..? எல்லாத்தையும் நல்ல விதமாக யோசிக்கலாம் இதயா. நீ அவரோட காதலை அடைய முயற்சி பண்ணு. என்னோட நட்புக்கு நீ செய்யக்கூடிய உதவியா உன்கிட்ட நான் யாசகம் கேட்கிறேன்..” என்று கண்ணீருடன் கையேந்திய தோழியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ஏய் பைத்தியம், நீ சாதாரணமா சொன்னாலே செய்வேன். அதுக்காக இத்தனை தூரம் நீ இறங்கி பேசணுமா என்ன..? தாத்தா என் கிட்ட கேட்டதும் உன்னோட அபிப்ராயம் எனக்கு முக்கியமா தோணுச்சு. அதனால கேட்க வந்தேன். ஆனா ஒரே ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லிடறேன்.. நான் சம்மதம் சொல்லி விட்டாலும், தாத்தா கிட்ட அவர் சம்மதமும் கேட்க சொல்லிடுவேன்..” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

இதையா தாத்தாவிடம் தன்னுடைய சம்மதத்தை கூறினாள். மகிழ்ச்சியை தெரிவித்த அவரிடம் “ஆனா ஒரு விஷயம். என்னோட சம்மதத்தை அவரிடம் சொல்லாமல், நீங்களா கேட்கிற மாதிரி அவர் கிட்ட முதல்ல சம்மதம் கேளுங்க. அவர் ஓகே சொன்னா மட்டும், என்னுடைய முடிவை சொல்லுங்க. இல்லாத பட்சம் இந்த மாதிரி ஒரு பேச்சு நடந்ததாகவே காட்டிக்க வேண்டாம். இதுதான் என்னோட நிபந்தனை..” என்றாள்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 16 சராசரி: 4.8]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

14,15,முதல் முதலாய் மயங்குகின்றேன்…!

16,17'18,முதல் முதலாய் மயங்குகின்றேன்…!