in

மௌனத்தின் மனசாட்சி -24

அத்தியாயம் 24

புதிய டிஜிபி, சசியின் இடமாறுதல், நண்பனும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்று விட  கிருஷ்ணா மட்டும் அதே இடத்தில் அதிகாரியாக இருந்தான்.. சின்னச்  சின்ன விஷயத்துக்கும் புதிய கமிஷனர் இவனை குறை சொல்லிக்கொண்டே இருக்க, ஏதோ ஒரு பிரச்சனைக்கு இது ஆரம்பம் என்பதை புரிந்து கொண்டான்..

டிபார்ட்மென்ட்டிலேயே மோசமானவர் என்று பெயர் எடுத்த ஒரு அசிஸ்டன்ட் கமிஷனரிடம் ஐந்து பேர் இறந்த கேஸ் மாற்றி விடப்பட்டு இருந்தது. எந்தவிதமான வில்லங்கம் வேண்டுமென்றாலும் அவரைத்தான் அரசியல்வாதிகள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்தவகையில் எல்லா அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பெற்றிருந்த அவர், பயங்கர கெடுபிடியாக விசாரிப்பதும் இவனது காதுக்கு வந்துவிட்டது.

அவனுக்கு பர்சனலாக உதவி செய்த காவலர் ஒருவர் இந்த செய்தியை தெரிவித்து இருந்தார். எத்தனை யோசித்தாலும் எங்கோ ஒரு இடத்தில் நெருட போகிறது என்பது அவனது உள்ளுணர்வு எச்சரித்தது.

பலவித யோசனைகளில் வீட்டுக்கு வந்தவனை, அப்பாவின் உயர்ந்த குரல் வரவேற்றது.. முன்னறையில் இருந்த தாத்தாவிடம், “எல்லாவனும் பெரிய மனுஷன் ஆயிட்டான். எதையும் என் கிட்ட கேட்கிறது இல்லை.. எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்..” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“நீ சொல்றது சரிதான். ஆனால் அவன் ஆரம்பிச்ச கம்பெனி. விக்கிறதுக்கு அவனுக்கு உரிமை இருக்கு..?”

“இப்ப என்ன அவசியம் வந்ததுங்கிறேன். அப்படி ஏதாவது தேவை இருந்தால்  எத்தனை சொத்து இருக்கு. அதுல ஏதாவது நமக்கு உபயோகமில்லாததை வித்து இருக்கலாமே. நல்லா போயிட்டு இருந்த கம்பெனி. இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய அளவில் போகும்னு நான் எதிர் பார்த்திட்டு இருந்தேன். கிட்டத்தட்ட நாலு வருஷமா அதை மேலே கொண்டு வர அவன்தான் நாயா, பேயா உழைச்சு இருக்கான்..”

“அவன் உழைப்பு தானே..? வேணும்னா இன்னொரு ஒரு கம்பெனி ஆரம்பிச்சு பெரிய அளவில் கொண்டு வந்துட்டுப் போறான்..”

“நான் சொல்றதே உங்களுக்கு புரியல.  அவனால முடியும். ஆனா இன்னொரு அஞ்சு வருஷம் வேஸ்ட் தானே. அதுக்கு சொன்னேன். பணத்தேவை இருந்தா என் கிட்ட கேட்டா கௌரவம் என்ன குறைந்தா போய்டும். ம்ம்.. சொல்லாம கல்யாணம் பண்றது, இஷ்டத்துக்கு கம்பெனியை விக்கிறது. அப்போ உண்மையிலேயே இந்த வீட்டுல இருக்கிற யாரும் தேவையில்லைன்னு  அர்த்தம் அப்படித்தானே..”

“நீ கொஞ்சம் கோபப்படாமல் இரு. நான் என்னென்னு அவன் கிட்ட கேட்டு பார்க்கிறேன்..” மருமகனின்  கோபத்தை தணிக்க முயன்றார்.

“என்னவோ போங்க.. வர வர எனக்கு ஒன்னுமே பிடிக்கல.. நான் பேசாம வீட்ல உக்காந்துடறேன. பேசாம விஷ்ணுவும், அரசுவும் மட்டும் கம்பெனி பார்க்கட்டும்.. கிருஷ்ணாவோட பங்குக்கு அவன் எப்படி கம்பெனி மேனேஜ் பண்ண போறான் கேட்டு சொல்லுங்க..?” என்றவர் மாமனாரின் அறையை விட்டு வெளியேறினார்..

ஹாலிலேயே நின்று அனைத்து பேச்சுக்களையும் கேட்டவன் தாத்தாவின் அறைக்குள் சென்றான்.. இவனைக் கண்டதும், “என்னடா.. என்ன விஷயம்..? டிரஸ் கூட மாத்தாம என்னோட ரூமுக்கு வந்து இருக்க..?”

“ஆமா எதுக்கு அப்பா சத்தம் போட்டுட்டு இருக்கார்..”

“உங்க அண்ணன் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கம்பெனி ஆரம்பிச்சான் இல்ல. அதை உங்க அப்பா கிட்ட சொல்லாம வித்துட்டான் போல இருக்கு. விஷயம் இப்ப தான் தெரிஞ்சிருக்கு… அதுதான் கோபம்..”

அண்ணன் எதற்கு கம்பெனியை வித்திருப்பான் என்பது கிருஷ்ணாவுக்கு விளங்கியது. “அதுல என்ன பிரச்சனை தாத்தா.. அவன் பேர்ல தானே இருக்கு..?”

“ஆனால் முதலீடு வீட்ல இருந்து கொடுத்தது தானே..?”

“அப்படின்னு அப்பா சொல்றாங்களா..?”

“அப்பா சொல்லல.. ஆனால்..” என்றவர் “உனக்கு இது பத்தி ஏதாவது தெரியுமா..?” அவனிடம் விசாரித்தார்.

“இல்ல தாத்தா.. நானே வேற கவலையில் இருக்கேன். சொத்து தானே போனா போகுது..” விட்டேத்தியாய் சொல்லிவிட்டு சென்றான்.

குடும்பத்துக்கு மூத்தவராக இருப்பதால் அனைவரும் தனது கஷ்டங்களை மட்டுமல்லாமல் கோபதாபங்களையும்  சேர்த்து அவரிடம் காண்பித்து சென்றனர்.. 

மூத்த பேரனிடம் போன் செய்து விசாரிக்க, “தாத்தா ஏகப்பட்ட பணம் செலவாயிடுச்சு. அது எல்லாருக்கும் பொதுவானது. நான் மட்டும் அவ்வளவு பணம் எடுத்துக்கிட்டா அது நல்லா இருக்காது. நாளைக்கு மாமா, விஷ்ணு, கிருஷ்ணா இவங்க எல்லாருக்கும் பதில் சொல்லணும்ல.. அதனால தான் கம்பெனியை கொடுத்துட்டேன்.. அது ஆரம்பிக்க அப்பா கொடுத்த முதலீடும் பேங்க்ல போட்டாச்சு..”

“அது நீ கஷ்டப்பட்டு உருவாக்கினது.. அதைப் போல இன்னொரு கம்பெனி உருவாக்க எவ்வளவு நாள் ஆகும்..? அப்பா கிட்ட கொஞ்சம் பணம் கடன் வாங்கிட்டு திருப்பி அடைத்து இருக்கலாம்ல..?”

“கோடிக்கணக்கில் கடன் வாங்க முடியாது தாத்தா..?”

“அவ்வளவுக்கு என்னடா செலவு..?”

“சில விஷயங்களை சொல்ல முடியாது.. என்னோட கல்யாணத்துக்கு ஆயிடுச்சுன்னு வச்சுக்கோங்க.. இதோட இந்த பேச்சை விட்டுடுங்க. நான் செய்தது தப்புதான். கல்யாணம் பண்ணிட்டு வந்ந்தது தப்பு தானே, அதோட  இந்த தப்பையும் சேர்த்துக்க சொல்லுங்க..” என்றவன் தாத்தா பேசும் முன் போனை வைத்து விட்டான்.

மறுநாள் காலையில் மருமகளிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, “விட்டுடு, ஏதோ ஒரு பிரச்சினை வச்சுக்கிட்டு அவனே கஷ்டப்பட்டுட்டு இருக்கான்.. வீட்ல இருந்து எடுத்த ரூபாய் அத்தனையும் திருப்பி கொடுத்துட்டான். இனி நீ ஏதாவது பேச போக நம்ம கம்பெனியில் இருந்து வெளியில் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நிலைமைக்கு கொண்டு வர வேண்டாம். இப்போதைக்கு விட்டு பிடி..” என்றார்.

அலுவலகத்திற்கு வந்தாலும் அப்பாவும் மகனும் நேரடியாக பேசிக் கொள்வதில்லை. விஷ்ணுவின் மூலமாகவே எல்லா விஷயங்களையும் நடத்திக் கொண்டனர். தன்னுடைய கம்பெனியை கவனிக்கும் அதிகப்படி வேலை குறைந்ததால் வீட்டிற்கு சற்று நேரத்துடனே வர ஆரம்பித்தான் அரசு.

வீட்டில் இருக்கும் நேரங்களில் புதிய கம்பெனி ஆரம்பிக்க ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிப்பதில் ஈடுபட்டான். அன்று மாலை சற்றே பரபரப்புடன் வந்தவன் நேராக மயூராவின் அறைக்கதவை தட்டினான்.

மாலை யோகா செய்து கொண்டிருந்தவள் நிறுத்தி விட்டு கதவை திறந்தாள். யோகா செய்வதற்கு வசதியாக பைஜாமா, குர்தி அணிந்திருந்தாள். பாதியில் வந்ததன் அடையாளமாக நெற்றியில் லேசாக மினுமினுத்த வியர்வையும், கலைந்திருந்த முடியும், அவனுக்கு விஷயத்தை தெரியபடுத்தியது.

“ஓஹ் சாரி நீ யோகா பண்ணிட்டு இருப்பேங்கிறதை மறந்துட்டேன்.. சந்திரகுமார்ஜியோட  சொற்பொழிவுக்கு ரெண்டு டிக்கெட் இருக்கு.. போலாமா..?”

“யாரு அவரு..?”

“இப்பதான் கொஞ்சம் பிரபலமாகிட்டு வர்றார். ஆன்மீகம், மனவளம், எல்லாம்  பேசுவார். நான் ஒரு ரெண்டு தடவை கேட்டு இருக்கேன். வரியா போயிட்டு வருவோம்..? உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்..”

“ம்ம்..”

“ஓகே அரை மணி நேரத்துல ரெடியாகு. ஆறு மணிக்கு அங்க இருக்கணும்..” சொல்லிவிட்டு தான் ரெடியாகி வர மாடிக்கு சென்றான்.

கூட்டம் அதிகமாக இருந்தது.  எல்லாவித வயதினரும் இருந்தனர். ஆன்மிகச் சொற்பொழிவு என்றதும் வயதானவர்களையும், ஆத்திகர் களையும் எதிர்பார்த்தவளுக்கு இளவயது ஆண்களும், பெண்களும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

“ஆன்மிகச் சொற்பொழிவுன்னீங்க..! இங்கே வந்து பாத்தா நம்மள மாதிரி நிறைய பேர் வந்திருக்காங்க..”

“இந்த காலத்துல எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கு. இவர் ஸ்பீச் மனசுல உள்ள அழுத்தத்தை குறைக்கும். அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் ஜாஸ்தி..” பேசிக்கொண்டே தங்களது இருக்கையில் சென்று அமர்ந்தனர்..

குருஜி எளிமையான தமிழில் முதலில் ஆன்மீகம் என்றால் என்ன என்பதை பேசத்தொடங்கினார். (இந்தப் பகுதி ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையிலிருந்து எடுத்தாளப்பட்டது நன்றி.)

இந்த உலகத்தில் இன்று மிகவும் சீர்குலைக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளில் ஒன்று. ஆன்மீகம்! பல லட்சம் வழிகளில் இந்தச் சொல், அறியாமையாலோ, அலட்சியத்தாலோ, சரியாகவும் தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, ஆன்மீகம் என்பதே அவசியமா இல்லையா என்று கேள்விகளும் குழப்பங்களும் எழுந்திருக்கின்றன.

நீங்கள் நினைப்பதெல்லாம் ஆன்மீகம் ஆகாது. நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்தாலும் அது ஆன்மீகச் சிந்தனை அல்ல. ஏனெனில், சிந்தனை என்பதே ஆன்மீகம் சார்ந்தது அல்ல. அது உளவியல் சார்ந்தது. உடல், மனம், உணர்வுகள் ஆகியவை வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்கள். அவற்றைச் சரியென்றும் தவறென்றும் வரையறுத்துவிட முடியாது.

உங்கள் ஸ்தூல எல்லைக்கு உட்பட்டது அல்ல ஆன்மீகம். மனஅமைதியைத் தேடுவதற்கு ஆன்மீகம் என்று பெயரல்ல. அமைதி என்பது உடல் மற்றும் மன எல்லைகளைச் சார்ந்தது மட்டும்தான். உடலுக்கும்  மனதுக்கும் உங்களால் சில இடையூறுகளை ஏற்படுத்த முடியும். இந்த இரண்டையும் சாராத ஒன்றுக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்த இயலாது. எனவே ஆன்மீகம் என்பது அமைதியைத் தேடுவதும் இல்லை. ஆன்மீகத்துக்கு அமைதி தேவையும் இல்லை..” என்று தொடங்கியவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  சொற்பொழிவை நிகழ்த்தினார். 

யோகக் கலையின் பரிமாணங்கள் பற்றி பேசியவர், மன அமைதிக்கு யோகக்கலை எப்படி உதவுகிறது என்பதையும் விலாவாரியாக கூறினார்..

அவர் பேசி முடித்ததும் நிறைய பேர் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.. அதற்கு தகுந்தவாறு பதில்கள் கூறினார்.. 

நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது இருவருக்குள்ளும் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஏதோ ஒரு வகையில் அவரது பேச்சு மனதுக்கு இதத்தை தர, இதுநாள் வரை தனக்கு நடந்ததை இழிவாக நினைத்து தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு மனதிற்குள் மருகிக் கொண்டிருந்தவள், அந்த செயலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டாள்.

இன்டர்நெட்டில் அவரது ஆடியோக்கள் வீடியோக்கள் அனைத்தையும் தேடித்தேடி கேட்க, அவளுக்குள் ஒரு புதிய உலகம் விரிந்தது.

விருப்பத்துடன் யோகா மற்றும் தியானத்தை செய்ய ஆரம்பித்தாள்.. அவளுடைய விருப்பத்தைக் கேட்டு கராத்தே கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தான்.

“எப்போதும் யாரும் கூடவே வர முடியாது..? இந்த காலத்துல வீட்டுக்குள்ளே அடைஞ்சு  கிடக்கிறது  சரி வராது. அவசரத்துக்கு வெளியில் போக வேண்டாமா..? உன்னோட பயத்துக்கு இது ஒரு பாதுகாப்பு..” என்று சொல்லவும் ஒத்துக்  கொண்டாள்.

வெளியே நாலு பேரை பார்த்து பழகும் போதுதான்  மனது இன்னும் விசாலம் அடையும். சாதாரணமாக எல்லோரும் வளைய வருவது போல் அவளை மாற்ற வேண்டும். தைரியமும் தன்னம்பிக்கையும் மீண்டு விட்டால் அடுத்து  அவளது வாழ்க்கையை அவளே தீர்மானித்து கொள்ளக் கூடும்.

ஒருவேளை இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற நினைத்தால் கூட, அதை செயலாற்ற பழையபடி அவள் மாறுவது அவசியம் என்பது அவனது நினைப்பாக இருந்தது.

அலுவலகத்தில் தன்னை சந்திக்க வந்த இளைய மகனை பார்த்து ஆச்சரியம் அடைந்தார் பிரபாகர். முக்கியமான காரணம் இல்லாமல் அலுவலகம் வரை வருபவன் கிடையாது. அதுவும் வீட்டுக்கும் அந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று நினைத்தால் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பேசுவான். 

உதவியாளரிடம் காபி சொல்லி அனுப்பி விட்டு மகனின் முகத்தை ஆவலுடன் பார்த்தார். சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான். அண்ணன் மயூரா விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்று கோடிட்டு காட்டிவிட்டு, அதன்பிறகு நடந்தவைகளையும் கூறினான். குறுக்கே பேசாமல் அனைத்தையும் கேட்ட பிரபாகர் கடைசியில் அவனிடம் தனது சந்தேகத்தை கேட்டார்.

“எல்லாம் சரி இப்ப வந்த விஷயம் என்ன..?” 

தான் சொல்ல வந்த விஷயத்தை சரியாக புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் தன்னுடைய வருகைக்கு காரணத்தையும் ஆராய்ந்து கேட்ட தந்தையை மெச்சுலுடன் பார்த்தான்.

“அண்ணனுக்கு எதிரா ஏதாவது நடக்கும்னு என்னோட உணர்வு சொல்லுதுப்பா. அதை முதலிலேயே கிள்ளி விட வேண்டும்..!”

“என்னென்னு தெரிஞ்சா தானே செய்ய முடியும்..!”

அண்ணனுக்கு எதிரா அந்தக் கேசை நோண்டிட்டு இருக்காங்க.. அதை  இல்லாம பண்ணனும்..”  என்றவன்  “என்கிட்ட இன்னொரு வழி இருக்கு. போன தடவை எலக்சன் சமயம்  உங்களுடைய நெருங்கிய நண்பர் மூலமா ஆளுங்கட்சி மினிஸ்டர் கட்சி நிதி கேட்டார். நீங்களும் பெரிய அளவு கொடுக்கலைன்னாலும், ஓரளவு கொடுத்தீங்க.. அவரு உங்க கிட்ட இன்னும் கொஞ்சம் கொடுத்தா உங்களுக்கு மினிஸ்டர் பதவியை வாங்கி தருவதாக சொன்னார்.  அப்போ உங்களுக்கு அதுல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டீங்க. 

ஆனா இப்போதைக்கு நீங்க அந்த கட்சியில் சேரலாம்கிறது என்னோட அபிப்ராயம். எப்படியும் அடுத்த வருஷம் எலக்ஷன் வரும்போது மினிஸ்டர் பதவியை வாங்கிக்கலாம்..” 

மகன் சொல்லவருவது பிரபாகருக்கு புரிந்தது. ஆனால் அவருடைய குணத்திற்கு, அரசியல் என்பது சரி வராத ஒன்று. அதனால்தான் அவர் தயங்கியது.

“அரசியலில் சேர்ந்து தான் எதையும் சாதிக்கணும்னு  அவசியமில்லை.. என் கிட்ட சொல்லிட்ட இல்ல. இனி நான் பாத்துக்குறேன். முதலிலே விஷயம் தெரிந்திருந்ததுனா இது வேற மாதிரி முடித்திருக்கலாம்..”

“அப்பா உங்களுக்கு அந்த அளவு ஆட்கள் தெரியுமா..?”

“எனக்கும் தெரியும் உன்னோட தாத்தாவுக்கும் தெரியும். எல்லாம் சரி கல்யாணம் எப்படி நடந்தது..? அது பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா..?”

“தெரியலைப்பா.. அந்த நேரத்துல அண்ணன் எப்படி அங்கே போனார் என்கிறது தெரியல..?”

சற்றே யோசித்த பிரபாகர் “உங்க அண்ணன் கிட்ட பேசினா தான் இதுக்கு ஒரு வழி கிடைக்கும்..” என்றார்.

மகன் சென்றதும் நெடுநேரம் ஆலோசித்தவர், ஒரு முடிவுக்கு வந்தவராய் அலுவலகத்தை விட்டு கிளம்பினார். வீட்டுக்குச் செல்லாமல் நேராக அவர் சென்றது மூத்த மகனின் வீடு. அலுவலக விஷயமாக அவன் பெங்களூர் சென்று இருந்தான். இரவு தான் வருவேன் என்று அவன் கூறி இருக்க இடையில் வந்த மாமனாரை எப்படி வரவேற்பது என்று தெரியாமல் விழித்தாள் மயூரா.

சமையல்கார அம்மா வந்து கூறியதும் தனது அறையிலிருந்து வெளி வந்தவள் ஹாலில் உட்கார்ந்திருந்த மாமனார் முன்னால் மவுனமாக வந்து நின்றாள்.

“என்னம்மா எப்படி இருக்க..?”

“நல்லா இருக்கேன்.. ஆனா அவர் இல்லையே..” என்றாள் மெதுவாக.

“நான் அவனைத் தேடி வரலைம்மா. உன் கிட்ட தான் கொஞ்சம் பேசணும்.. உட்காருமா..”

அவர் பேசணும் என்றதும் திடுக்கிட்டுப் போனாள். எதைப் பற்றி கேட்பாரோ என்ன சொல்வது என்ற பயம் வந்தது. பதில் சொல்லாமலும் முடியாது. இதே கேள்வியை கொஞ்ச நாள் முன்னாடி வந்து கேட்டிருந்தால் அழுகையைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பதிலாக அவளுக்கு கொடுத்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது சுவாமிஜியின் போதனைகள் அவளுள் மிகப்பெரிய மாற்றத்தை விதைத்து இருந்தது. தயங்கிக்கொண்டே அவரது எதிரில் உட்கார்ந்தாள்..

சமையல்கார பெண்மணியை அழைத்து அவளது கையில் ரூபாயைக் கொடுத்தவர் சற்று தள்ளி இருக்கும் கடையை குறிப்பிட்டு அதிலிருந்து பிஸ்கட், கேக், பழங்கள் வாங்கி வரச் சொன்னார். அவள் வெளியேறியதும் மருமகளிடம் அவளது அம்மா அப்பாவைப் பற்றி விசாரித்தார்.

அவள் பதில் சொன்னதும் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார். அவளின் வியப்பு பன்மடங்காகியது..

“உன்னை அவங்க கடத்துன பின்பு  அரசுவுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது..?”

“என்னை  கார்ல ஏற்றும்போது பார்த்த கிருஷ்ணாவோட  பழைய நண்பன் அவருக்கு தான் முதல்ல போன் போட்டு இருக்கான். அவர் ட்ரெய்னிங்கில் இருந்ததுனால செல் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அவன் உடனே கம்பெனி நம்பர் ட்ரை பண்ணி கிருஷ்ணா பத்தி கேட்டதும், ரிசப்ஷனிஸ்ட் இவருக்கு கனெக்சன் கொடுத்துட்டாங்க. அதனாலதான் இவர் வரதுக்கு கொஞ்ச நேரம் ஆயிடுச்சு. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் இவரும் வந்தார்.. இவர் தற்காப்புக்காக துப்பாக்கி எடுத்துட்டு வந்ததுனால அவங்க எல்லாரும் இவரை பார்த்ததும் ஓடிட்டாங்க. என்ன காப்பாற்றிக் கொண்டு போய் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிட்டு வீட்டுக்கு தகவல் தெரிவிச்சாரு.. 

அம்மாவும் அப்பாவும் பதறிட்டு வந்தாங்க. அவங்களுக்கு முழு விஷயமும் தெரிஞ்சதும் எங்க அப்பா சொன்ன ஒரே வார்த்தை, எல்லோருமே ஒரேடியா போயிடலாம் என்கிறது தான். அதைக் கேட்டு இவர் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தார்.. தம்பி வந்ததும் சொல்லி கல்யாண ஏற்பாடு பண்ணுவதாக சொன்னார். ஆனா எங்கப்பா நம்பவே இல்லை.. இதையே அவமானம்னு நினைக்கிறேன். இன்னும் எத்தனை பேர் கிட்ட இதை சொல்லி, எங்களை அவமானப்படுத்துவீங்க..? தயவு செய்து எங்களை விட்டுடுங்க சார்னு சொல்லி எங்க அப்பா ஒரேடியா சாதிக்கவும், எங்க குடும்பத்த காப்பாத்த வேற வழி இல்லாம தானே கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னார்..

அப்படின்னா உடனே நடக்கட்டும்னு எங்க அப்பா பிடிவாதமா சொன்னதுனால அங்கேயே தாலி கட்டி மனைவியாக்கிக் கிட்டார்

உண்மையிலேயே எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் உயிரோடு இருப்பதே பிடிக்கல. அதுதான் உண்மை. அதனால அங்க என்ன நடந்ததுன்னு முழுசா உணர்வதுக்குள்ள என்னென்னமோ நடந்து போச்சு.. 

ஒருவேளை இவர் கல்யாணம் பண்ணிட்டு வரலைன்னா, குடும்பத்தோட இதுக்குள்ள தற்கொலை பண்ணிட்டு போய் இருப்போம்.. வலுக்கட்டாயமா என்னை இவர் கூட்டிட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் என்னோட அம்மா, அப்பாகிட்ட இந்த மாதிரி இனிமே யோசிக்கக்கூட கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.

உங்க பொண்ணுக்காகவாவது நீங்க உயிரோட இருக்கணும்னு இவர் சொல்லப்போய் அவங்களும் உயிரோடு இருக்காங்க. இங்கே இருந்தா நிறைய கேள்வி வரும்னு திருச்சி பக்கம் உள்ள சொந்த ஊருக்கு அவங்க போயிட்டாங்க.

நான் யாரையும் ஏமாத்தணும்னு நினைக்கல. இப்ப கூட எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுத்தா அதை வச்சு நான் என்னோட காலத்தைக் கழிச்சிடுவேன். உங்க ரெண்டு மகனுக்குமே நீங்க நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. அதுதான் என்னோட விருப்பமும் கூட.. என்னால ஏற்பட்ட குழப்பத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க..” தன் காலில் பணிந்தவளை தூக்கி நிறுத்தினார்.

“உன்ன விட நல்ல மருமக எனக்கு கிடைக்க முடியாதுமா. ஆனா இப்ப வேற ஒரு பிரச்சனை வந்து இருக்கு. அதுல இருந்து அரசுவை  வெளியில கொண்டு வரணும். அதான் என்ன நடந்துதுன்னு கேட்டுட்டு போக வந்தேன்.. சரிமா இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.. கூடிய சீக்கிரமே நம்ம வீட்ல விஷேசம் நடக்கப்போகுது. அதுக்கு உங்களுக்கு அழைப்பு வரும்.. நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்..”

“நானா…? அங்கேயா…?”

“ஆமா.. எத்தனை நாளைக்குத்தான் இப்படி ரெண்டு பேரும் தனியாவே இருப்பீங்க.. உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டோம். அதுக்கு நான் கேரண்டி. அரசுவோட  பாதுகாப்புக்காக தான் நான் சொல்றேன். திரும்பவும் எங்களோட தான் இருக்கான்னு தெரிஞ்சாலே அவனை நெருங்க நினைக்கிறவங்க பயந்துடுவாங்க. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது. படிச்ச பொண்ணு. உனக்கு நான் இதுக்கு மேல சொல்ல தேவை இல்லைன்னு நினைக்கிறேன்..” 

தன்னுடைய வேலை முடிந்தது என்பது போல் அவரும் கிளம்ப, அவர் சொன்ன சாமான்களை வாங்கிக்கொண்டு சமையல்காரியும் உள்ளே நுழைந்தாள்..

“ஐயா நீங்க சொன்ன சாமான் வாங்கிட்டு வந்துட்டேங்க..”

“இந்த வீட்டு எஜமானி அம்மாக்கு தான்.. அவங்ககிட்டேயே கொடுத்திடு..” என்றவர் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் சென்றதும் பலவித யோசனைகள் அவளை சூழ அங்கிருந்த ஹாலிலேயே அப்படியே அமர்ந்துவிட்டாள்.. ‘அந்த வீட்டுக்கா.. கிருஷ்ணா.. விஷ்ணு எல்லாரும் இருப்பாங்களே..? எப்படி போறது..?’ அந்த நினைவே அவளுக்கு கசந்தது.. 

‘அரசுக்கு வந்திருக்கும் ஆபத்து என்னவாக இருக்கும்.. ஒருவேளை அவள் சம்பந்தப்பட்டதாக இருக்குமோ.’ என்று யோசிக்கையில் அன்று அவன் சொன்ன தகவல் நினைவுக்கு வந்தது.

அந்த விஷயம் உண்மை என்றால், அதன் காரணகர்த்தா தனது கணவன் என்பது புரிந்தது.. இக்கட்டான நிலையிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிய கணவனுக்கு தானும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தன்னுடைய கஷ்டத்திலேயே உழலுவதால் பெரிதாக ஒன்றும் ஆகப் போவதில்லை. இன்று கணவன் வந்ததும் என்ன, ஏது என்று விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 15 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -5  

இறுதி பாகம் (1) – 🎶மூங்கில் குழலான மாயமென்ன