in

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -5  

  மௌனம் -5

              தீபுவின் உடல்  வந்திறங்கியதும் அனைவரும் அவள் உடலைக் கண்டு கதறி விட்டார்கள். ஆனால் குமரனோ  அழக்கூட  திராணியற்று அவள் உடலை வெறித்தவாறு நின்றிருந்தான்..
திருமணமாகாத கன்னிப் பெண் என்பதால் அதற்குண்டான சடங்குகள் மட்டும் செய்யப்பட்டு தீபுவின் உடல் வீட்டில் இருந்து மயானம் நோக்கி கிளம்பியது.  அனைவருக்கும் முன்பாக குமரன் தான் தன்னவளது  உடலை முதலில் தூக்கி தன் தோளில் வைத்தான். அவனைத் தொடர்ந்து தேவ் ஒருபுறமும், ஹரிஷூம், ஆதர்ஸூம் மற்ற இருபுறமும் தூக்கிக் கொள்ள தீபுவின் உடலுக்கான இறுதிச்சடங்கு ஊர்வலம் துவங்கியது. நல்ல முறையில் தீபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இங்கோ வீட்டில் பெண்கள் வீட்டை கழுவித் துடைத்து தலைமுழுகி விட்டு தீபுவின் படத்திற்கு மாலையிட்டு அதன் முன்பு விளக்கேற்றி வைத்துவிட்டு அமர்ந்திருக்க. இடுகாடு சென்றிருந்த ஆண்கள் அனைவரும் குளித்து முடித்து விளக்கு முகம் பார்த்து விட்டு வந்து அமர்ந்தார்கள்..

         அதே நேரம் அனைவரும் குடிப்பதற்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்த இசையிடம் “எல்லாருக்கும் நீயே சமையல் பண்ணிடு இசை” என்று சொன்ன சிபியை நிமிர்ந்தும் பார்த்திடாது அங்கிருந்து நகர்ந்த இசை குமரனுக்கு டீ குடுத்திட. அவனோ டீ வேண்டாமென்று மறுத்ததோடு ஹாலில் மாட்டப்பட்ட இருந்த தீபுவின் புகைப்படத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். அவனது வலி, வேதனை, ‌ வருத்தம் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தாலும், புரிந்தாலும் அவனை சமாதானப் படுத்தும் வழியறியாது தவிப்புடன் நின்றிருந்தனர். அவனது நினைவுகளோ முதன் முதலாக அவளைச் சந்தித்த தினத்தை நினைவடுக்குகளில் இருந்து மீட்டு மீண்டும் அவன் மனக்கண் முன் கொண்டு வந்து  நிறுத்தின.

          திவாகர்- குழலி இருவருக்கும் ஹரிஷ் பிறந்ததற்கு பிறகு வாழ்க்கை நல்ல முறையில் தான் சென்றது.. அதன் பிறகு நான்கு, ஐந்து வருடம் கடந்த பிறகும் அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்காது இருக்க, அடிக்கடி குழலியின் உடல்நிலையும் சரியில்லாமல் போனது. இன்னுமொரு குழந்தை வேண்டியும், அவளது உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் மருத்துவமனை சென்று முழுப்பரிசோதனை செய்ய.  இடியாய் வந்து இறங்கியது அந்த செய்தி. குழலியின் கர்ப்பப்பை பலவீனமாக இருந்ததால் அவளால் மற்றொரு குழந்தைக்கு தாயாக முடியாது என்ற காரணத்தை மருத்துவர்கள் சொல்ல. ஒரு மருத்துவருடன் நிறுத்தாமல் அஞ்சாறு மருத்துவர்களை தொடர்பு கொண்ட பிறகும் அனைவரும் அதையே சொல்ல. அதோடு அவர்கள் அந்த ஆசையை விட்டுவிட்டனர். இதையறிந்த இசை தான்,“நாம ஒரு குழந்தை இருந்தாலுமே இன்னொரு குழந்தைக்காக ஏங்குறோம் ஆனா எத்தனையோ குழந்தைங்க அம்மா அப்பா இல்லாம நிராதரவான நிலையில எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்கிறாங்க. அப்படிப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாமே!”என்று சொல்ல. அவள் சொன்ன யோசனை சரியென்று பட்டதால் திவாகர் குழலி இருவரும் மூன்று வயது நிரம்பிய தீபுவை தத்தெடுத்தனர். அப்போது ஹரீசுக்கு ஐந்து வயதும் இசைக்கு இரண்டு வயதும், குமரனுக்கு ஐந்தரை வயதும், சுதன் தேவ்கு நான்கு வயதும் நடந்து கொண்டிருந்தது. 

         முதல்முறை அந்த அனாதை இல்லத்திற்கு அவர்கள் சென்ற போது உறவுகள் யாருமின்றி தீபூவைப் போல் எண்ணற்ற சிறு  பிள்ளைகள் அங்கே தவித்திருக்க அவர்களைக் கண்டு அனைவரும் உள்ளம் கலங்கினர். அவர்களுள் தீபுவை இசைக்கு மிகவும் பிடித்து விட.. தீபுவை வாஞ்சையாக அணைத்துக் கொண்டவள், தானே திவாகர் குழலி இருவரிடமும் அவளை சட்டப்படி மகளாய் மாற்றி ஒப்படைத்தாள். அவர்களோ தீபுவோடு முதலில் வந்தது இசையின் வீட்டுக்கு தான். அக்குழந்தைக்கு தீப்திஷாவென்று பெயரிட்டது கூட இசைதான்‌ அதனால் தான் தீபுவின் ரோல்மாடல் இசையாக மாறிப்போனாளா?. தான் எதிர்காலத்தில் இசையைப் போல் வர வேண்டும் என்பதே அவளது விருப்பமாக இருந்ததோ? என்னவோ? 

         அதிலும் சிறு பிள்ளையவள் புதியவர்களைக் கண்டு மிரண்டு விழித்தவாறு இசையின் வீட்டிற்குள் நுழைந்த போது சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக ஓடி ஆடி விளையாடி கொண்டிருக்க.  தவறுதலாக ஹரீஸ் தீபுவை இடித்துவிட, அதில் தடுமாறி கீழே விழுந்தவளை கவனித்து, அவளை முதலில் எழுப்பி நிற்கவைத்து சமாதனப்படுத்தியது குமரன் தான். அதிலும் அவளது மிரண்ட விழிகளும், பயந்த சுபாவமும் அவனை அவள் மேல் அதிக அளவு அன்பை காட்ட வைத்தது. அதன் பிறகு அவளது ஒவ்வொரு விடயத்திலும் மற்றவர்கள் அறியாமல், ஏன் அவளே அறியாமல் அவளுக்கு துணை நின்றது குமரன் தான். அவன் பருவ வயதை எட்டிய போதும் அவள் மீது அவனுக்கிருந்த  அன்பும், அக்கறையும் அதிகமானதே தவிர காதல் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை.‌ ஆனால் ஒரு கட்டத்தில் அவனது அக்கறையும் அன்பும் பெண்ணவளுக்கு அவன் மேல் காதலை தோற்றுவித்திட அதை மறைக்காமல் இசை போல் நேரடியாக அவனிடம் தெரிவித்து விட்டாள். எந்தவொரு உறுத்தலும் இல்லாமல், பயம் இல்லாமல் தெளிவாக தைரியத்துடன் தன் காதலை தெரிவித்தவளின் காதல் கைகூடிய பின்னும் அவளது வாழ்வு இப்படி பாதியிலேயே முடித்து போனதை விதியென்று சொல்வதா? இல்லை மற்றவர்களின் சதி என்று சொல்வதா? முதன் முதலில் தீபுவை சந்தித்ததில் இருந்து அதன்பின் நடந்த அனைத்தையும் சிந்தித்தவாறு அவள் படத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த குமரனை நெருங்கிய தேவ், “நீங்களே இப்படி உடைஞ்சு போயிருந்தா எப்படி மச்சான்?” என்றதும் விதிவிதிர்த்து நிமிர்ந்த குமரன் தேவ்வைத் திரும்பி பார்த்து,
“எந்த உரிமையில என்னை மச்சான்னு கூப்பிடுற தேவ்?” என்றான்.

     “தீபு எனக்கு தங்கச்சின்னா நீங்க எனக்கு மச்சான் தானே வேணும். அதை விட முறைப்படி நாம மாமன் மச்சானுங்க தான் மச்சான். இருந்தாலும் உங்க விடயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னால எப்படி உங்களை பேர் சொல்லி கூப்பிட முடியும். நீங்க என்ன தான் முறைச்சாலும் சரி நான் மச்சான்னு தான் கூப்பிடுவேன் நீங்க அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் வேற வழி இல்ல. ஆமா இப்படியே எவ்வளவு நேரம் உட்காந்து இருக்குறதா முடிவு செஞ்சுருக்கீங்க?  எல்லாரும் உங்கள தான் கவலையோட பார்த்துட்டு இருக்காங்க” என்றதும் நொடியில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன் அனைவரையும் பார்த்து,
“எனக்காக யாரும் வருத்தப்பட வேணாம். என்ன சில பேருக்கு ஒரு தலைக்காதல் இருக்கும். சில பேர் அந்தக் காதலை சொல்லி, அந்த பொண்ணு  முடியாது நோங்குற பட்சத்துல சில பேருக்கு அவங்களோட காதல் தோல்வியில முடிந்ததா இருக்கும். என்னோட சொல்லாத காதலும் தோல்வியில முடிஞ்சதாவே நெனைச்சுக்கிறேன். சீக்கிரமே இதுல இருந்து நான் மீண்டு வந்துருவேன். ஆனா என்னைக்குமே அவளோட நினைப்பு என் நெஞ்சை விட்டுப் போகாது. முதல் காதல் உயிரோட இருக்குற வரைக்கும் மறக்க முடியாது.‌ இதுக்கு மேல என்னால என்னை பாத்துக்க முடியும் அதனால என்னை நெனச்சு யாரும் கவலைப்பட வேணாம் ஆக வேண்டியதை பாருங்க” என்றவன்,‌ தங்களது மில்லை நோக்கி நடையைக் கட்டினான், ஏனோ அவனுக்கு தன் வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை..
தன் தந்தையைப் போலவே கல்லூரி படிப்பை படித்து முடித்தவன் குமரன்.  2 டிகிரி முடித்த கையோடு தந்தைக்கு உதவி செய்கிறேன் என்று தோப்புகளையும், ரைஸ் மில்லையும் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான்.. 

         குமரன் சென்ற பிறகும் வெகுநேரம் அனைவரும் அதே நிலையிலேயே அமர்ந்திருந்தனர். அந்த சூழலில் இருந்து முதலில் தன்னிலையடைந்தது சிபி தான். அனைவரையும் பார்த்து,“நமக்கு கஷ்டமாவே இருந்தாலும் உண்மைய ஏத்துக்கிட்டு தான் ஆகணும். சில விடயங்கள் நடந்துருக்கக் கூடாது ஆனா நடந்துருச்சு என்ன பண்றது.  கஷ்டமா இருந்தாலும் மனசை தேத்திக்கிட்டு தான் ஆகணும். இதை சும்மா விடமாட்டேன், முடிஞ்சவரைக்கும்  இதுக்கெல்லாம் யாரு காரணம்னு விசாரிக்க முயற்சி பண்றேன்” என்றவன் தன் மகளைப் பார்க்காது வேறு திரும்பியவாறு இசையிடம், “உன் பொண்ணு கிட்ட அவ என்னென்ன கம்பெனியை தீபுக்கிட்ட சொன்னான்னு கேட்டு சொல்லு” என்றதும் சடாரென்று தன் தந்தையைத் திரும்பி பார்த்தாள் சுருதி. தன் பாசமிகு தந்தைக்கு தன் முகத்தைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லையா? என்று எண்ணியவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் யார் முன்னாலும் பலவீனமாகி அழக் கூடாது என்ற வைராக்கியம் தடுத்து நிறுத்த இழுத்து பிடித்த பொறுமையோடு தன் தாயை பார்த்தவள் தான் என்னென்ன கம்பெனி பெயரைச் சொன்னனோம் என்பதை தெளிவாக எழுதிக் கொடுத்தாள். அன்று அவசரத்தில்,
என்னென்ன பெயர்களையெல்லாம் சொன்னாளோ! இன்று அதையெல்லாம் தெளிவாகவும் அதேநேரம் மறக்காமலும் எழுதிக் கொடுத்தாள் தான். ஆனால் அவள் சொன்ன ஒரு கம்பெனியில் துருவ் சைலன்ட் பார்ட்னராக இருப்பான் என்றோ? இதற்கெல்லாம் அவன் தான் காரணம் என்றோ அவள் மட்டுமல்ல யாரும் அறிந்திருக்கவில்லை. அதை அவர்கள் அறிந்துகொள்ளும் நேரம் வரும்போது அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளும், அதிர்ச்சிகளும் எத்தகையது என்பதை விதி ஒன்று மட்டுமே அறியும்..

          அனைத்தையும் முடித்துக் கொண்டு அவரவர் அவரவர் வீட்டுக்கு வரும்போது இரவு வெகு நேரமாகி இருந்தது. அதுவும் அவர்களைத் தனியாக விட்டுட்டு வர மனமில்லாத இசை  குழலி, திவாகர் மற்றும் ஹரீஷ் மூவரையும் தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டாள்.  எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே எதிரில் இருப்பவரை எப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் பார்த்துக் கொள்ளும் ஹரீஷ் அமைதியே உருவாய் அமர்ந்திருந்தான். அவனுக்கு தன் தங்கையின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேதனையில் துவண்டு போனவனை தேற்றி சகஜமாக்குவதே சரணின் வேலையாகிப் போனது.. 

         ஆதி சொன்னது போலவே சுருதியை தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான். எப்போதும் வாய் ஓயாமல் தொணதொணவென்று பேசிக் கொண்டு அனைவரையும் வம்பிழுத்துக் கொண்டிருக்கும் சுருதி தன் வீட்டிற்கு வந்த பிறகும் எதுவும் பேசாமல் அமைதியாக கண்மூடி அமர்ந்திருப்பதைக் கண்டு ஆதிக்கு என்னவோ போலிருந்தது. அவள் அருகில் சென்று அமர்ந்தவன் ஆதரவாக அவள் தலையை வருடிக் கொடுத்தவாறு, “என்னாச்சுடா பாப்புமா” என்று கேட்டது தான் தாமதம். அவன் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். அவள் அழ ஆரம்பித்து வெகு நேரம் கடந்த பின்னும் அவள் அழுகையை நிறுத்தாமல் இருக்க. எங்கே அதிக நேரம் அழுது கொண்டிருந்தால் பிள்ளைக்கு காய்ச்சல் கண்டு விடுமோ? என்று பயந்த கண்மணி வேகமாக அவளை நெருங்கியவள் அவனிடமிருந்து  சுருதியை பிரித்து எழுப்பி நிற்க வைத்தாள். 

          தன் முந்தானையைக் கொண்டு அவள் முகத்தை அழுந்தத் துடைத்து விட்டு,
“எதுக்குமே நீ அழக்கூடாது சுருதி. அவங்க உன்னை எதுவேணா சொல்லலாம் ஆனா நாங்க உன்னை எதுவுமே சொல்லவும் மாட்டோம், யாரையும் இனிமே சொல்லவும் விட மாட்டோம். இனிமே நீ எங்கேயும் போகவேணாம் கல்யாணம் முடிஞ்சு நீ புகுந்த வீட்டுக்கு போற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும். இது இந்த அம்மாவோட ஆர்டர் சரியா?” என்றதும் அவளது தலை தன்னிச்சையாக சரியென்று அசைந்தது. 

        பின் கண்மணியின் வற்புறுத்தலாலும், ஆதியின் கண்டிப்புக் கலந்த அன்பான பேச்சாலும், அப்போது தான் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த குமரனின் அக்கறையாலும் ஏதோ சிறிதளவு உணவை உண்டவள் எதுவும் பேசாமல் மேலேறியவள் இங்கு வந்தால் தான் எப்போதும் தங்கும் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட சென்ற வேளையில் கீழே இருந்து.“கதவை தாழ் போடாம தூங்கு சுருதி” என்ற கண்மணியின் குரல் கேட்டதும் எதுவும் பேசாமல் கதவைத் தாழிடாமலேயே சென்று படுத்துக் கொண்டாள். விட்டத்தைப் பார்த்தவாறே படுத்திருந்தாளே தவிர உறக்கம் தான் அவளை தழுவ மறுத்தது. ஏதேதோ எண்ணங்கள் அழைக்கழிக்க சிறிது நேரத்திற்கு பிறகு தன்னையும் அறியாமல் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.. 

           இசையின் வீட்டிலோ அனைவரையும் ஒருவாறு மிரட்டி சாப்பிட வைத்த இசை எப்போதும் தங்கள் அறைக்கு செல்வது போல் செல்லாமல் தன் மகளின் அறையில் கதவை தாழிட்டு படுத்துக்கொள்ள. வெகுநேரம் அவளுக்காக கண்விழித்துப் பார்த்திருந்த சிபி அவளைக் காணவில்லை என்றதும் வீடெங்கும் தேடிக் களைத்தவன் கடைசியாக சுருதியின் அறைக்கதவு  தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு புரிந்து கொண்டான் தன் மனையாள் அங்கு தான் இருக்கிறாள் என்று. ஆனாலும் அவளைத் தொந்திரவு செய்ய விரும்பாதவன் எப்போதும் போல் தன் அறையில் சென்று உறங்க ஆரம்பித்தான்.

         மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவரவர் தங்களது வேலையை கவனிக்க செல்ல.‌ ஹரீஷ்கு தான் தீபுவின் இழப்பு பெரும் பேரிடியாக இருந்ததால் அவனது சுபாவமே மாறிவிட்டது‌. அவனை இந்த நிகழ்வில் இருந்து வெளியே கொண்டு வர அவனது நண்பர்களிலிருந்து, உறவுகள் வரை அனைவரும் பெரும் முயற்சி செய்ய வேண்டியதாக இருந்தது..
               ஆதியின் வீட்டில் எப்போதும் போல் கல்லூரிக்கு கிளம்பிய சுருதி குளித்து முடித்து தனக்கென்று ஆதியும் கண்மணியும் பார்த்துப் பார்த்து வாங்கி வைத்திருந்த உடைகளில் ஒன்றை அணிந்து கொண்டாள்‌. ஆதியின் வீட்டிலும் சரி மற்றவர்களின் வீட்டிலும் சரி தன் பிள்ளைகளுக்கு உடை எடுப்பதோடு மட்டுமின்றி, எப்போதும் மற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் எடுத்துக் கொடுப்பார்கள்.

        தனக்கென்று எடுத்திருந்த உடைகளில் ஒன்றை அணிந்து கொண்டவளுக்கு தயாரான பிறகு தான் தன்னுடைய கல்லூரிப் பள்ளியில் இருந்து அனைத்தும் தன் வீட்டில் இருப்பது நினைவுக்கு வர தயக்கத்துடன் படியில் அமர்ந்து விட்டாள். ஏனோ மீண்டும் அங்கே செல்ல வேண்டுமென்று அவளுக்குத் தோணவில்லை. தன் தந்தையின் புறக்கணிப்பு அவளை வெகுவாக வாட்டியெடுத்தது.  அதேநேரம் வீட்டிலிருக்கப் பிடிக்காமல் தனிமை வேண்டி மில்லுக்கு செல்ல கிளம்பி வந்த குமரன் சுருதியைப் பார்த்து விட்டு அவளருகே வந்தான். அவளோ குமரனைக் கவனிக்காமல் எதையோ யோசித்தவாறு அமர்ந்திருக்க, காலையிலேயே அவள் வீட்டுக்கு சென்று அவளது உடமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்திருந்த குமரன் அதை அவளிடம் கொடுத்து,“நான் காலையிலையே வீட்டுக்கு போய் இதை எடுத்துட்டு வந்துட்டேன்டா. இந்தா உன்னோட ஃபேவரிட் பேக், பாப்புமா நான் வேணா  உன்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிடவா?” என்று கேட்டதற்கு.

         “இல்லண்ணா பரவால்ல. நான் பஸ்லையே  போயிக்கிறேன் உங்களுக்கெதுக்கு சிரமம், நானே போயிக்கிறேன் அண்ணா.”‌ என்றவள் மளமளவென்று கண்மணி குடுத்ததை கஷ்டப்பட்டு விழுங்கி விட்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டாள். குமரனிடம் அவள் சொன்னது போலவே கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரிக்கு பேருந்தில் தான்  கிளம்பினாள்.  அவள் பேருந்தில் செல்வதை அறிந்து அவளது ஜீனியரும், தோழியுமான ஆதர்ஷினியும் அவளுடன் பேருந்திலேயே வர அதைக் கண்ட பிறகும் எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் சுருதி.  அவள் அருகில் இடம் கேட்டு அமர்ந்த ஆது,“என்ன ஆச்சு அண்ணி? ஏன் இப்படி இருக்கீங்க? நீங்க உம்முன்னு வர்றதை பாக்கவே கஷ்டமா இருக்கு” என்று கேட்டதற்கு. பதில் ஏதும் சொல்லாமல் ஜன்னலின் புறம் தன் பார்வையை திருப்பியவள் கல்லூரி வந்து சேரும் வரையிலும் ஆதுவிடம் எதுவும் பேசவில்லை.  ஆதுவுமே தீபு இறந்ததால் அந்த வருத்தத்தில் தான் இப்படி இருக்கிறாள் என்பதை உணர்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.
மாலை கல்லூரி முடிந்து வெளியே வருகையில் அவளை அழைத்துச் செல்ல குமரன் வந்திருந்தான். கூடவே சுருதியைப் பார்க்க வீரவேலன், மருதமுத்து, கோதை மூவரும் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்தாலும் எதுவும் பேசாமல் சின்ன தலையசைப்புடன் குமரனுடன் சென்று விட்டாள். எப்படியாவது அவளைப் பேசி சமாதானப்படுத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில்தான் பெரியவர்கள் வந்து இருந்தார்கள். ஆனால் சுருதியோ எதுவும் பேசாமல் சென்றது அவர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியது. இருந்தாலும் நாளடைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று எண்ணியவாறே வீட்டிற்கு வந்தனர். ஆனால் அது ஒருபோதும் சரியாகாது என்பதை நாட்கள் நகர நகர அனைவரும் தெரிந்து கொண்டனர். சிபியின் குணத்தையும், இசையின் பிடிவாதத்தையும் சேர்த்து பெற்றவளாயிற்றே அவர்களது மகள். பிறகெப்படி தன்னுடைய பிடிவாதத்தையும் எண்ணத்தையும் விட்டுக்கொடுப்பாள்..

         கடந்து சென்றபத்து நாட்களும் இதே தான் தொடர்ந்தது. பேருந்தில் கல்லூரி செல்வதும் வருவதுமாக இருந்த சுருதியிடம் பெருத்த மாற்றமாக மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதோடு நிறுத்திக் கொண்டவள் தானாக எதுவும் பேசாமல் அமைதியைக் கடைபிடித்தாள்‌.  நாட்கள் அதன் போக்கில் ரெக்க கட்டி பறக்க ஒரு மாதமாக கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடந்து சென்றிருந்தது. கடைசி வருடம் என்பதாலும், முதலில் பிராஜக்ட் அடுத்து தேர்வு என்பதாலும் அதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியிருந்த சுருதிக்கு  தீபுவின் நினைவும் அடிக்கடி வந்து அவளை கஷ்டப்படுத்தியது‌. அப்போதெல்லாம் தன்னால் தான் அவளுக்கு இப்படி ஒரு நிலை வந்து விட்டதோ? தான் தான் அவளது இந்நிலைக்கு காரணமோ? என்றெண்ணி உள்ளம் கலங்க தொடங்கியிருந்தாள்.. 

            சுதன் தேவிடம் தீபுவின் கேஸை கமிஷனர் தானே அழைத்துக் கொடுத்ததும் முதலில் அதிர்ந்தவன், பின்பு தன் வீட்டு பெண்ணின் இந்த நிலைக்கு காரணமானவனை தானே கண்டுபிடிக்க வேண்டும் என்றெண்ணி அதை ஏற்றுக் கொண்டவனாய் தீவிரமாகவும் அதேநேரம் தன் முழுகவனத்தையும் அதில் செலுத்த ஆரம்பித்தான். முதலில் திருப்பூரில் இருக்கும் அனைத்து அலுவலங்களையும் சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து விட்டு அடுத்ததாக சுருதி கொடுத்திருந்த கம்பெனியின் பெயரையும் அலசி ஆராய்ந்தான். அவன் தேடிய வரையிலும் தீபு என்ற பெயரில் எந்த பெண்ணும் அங்கு வேலை செய்யவில்லை என்ற தகவலே பெரும்பாலான இடங்களில் கிடைக்க சோர்வோடு தான் தினமும் வீட்டுக்கு திரும்பி வந்தான். இப்படியே ஒரு மாதம் கடந்து சென்றிருக்க அவனது இன்வெஸ்டிகேஷன் ஆரம்ப கட்ட நிலையில் இருந்து தாண்ட முடியாமல் தடுமாறியவாறு நின்றிருந்தது..

         இதற்கிடையில் தீபுவுக்கான காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் செய்யப்பட்டிருக்க அனைவரது மனதிலும் அவளது நினைவுகள் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டு சென்றிருந்தன. இன்றோடு தீபுவின் காரியங்கள் அனைத்தும் முடிந்து சரியாக ஐம்பத்தி இரண்டு நாள் கடந்து சென்றிருக்க. அன்று எப்போதும் போல் இரவு வேலைக்கு சென்று விட்டு அயர்வாக வீட்டிற்குள் நுழைந்தான் தேவ்.  வீட்டில் நுழைந்தவனது கண்கள் அதிர்ச்சியை தாங்கியிருக்க, அதிலிருந்து மீண்டு அவன் கேள்வி எழுப்புவதற்கு முன்பாக சிபி இடமிருந்து கட்டளையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
“சீக்கிரம் குளிச்சு ரெடியாகிட்டு வா சுதன்” என்று சிபி சொன்னதற்குப் பிறகு எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றவன் மளமளவென்று குளித்து கிளம்பி வர மற்றவர்களோடு சேர்த்து அவனை அள்ளி போட்டுக் கொண்டு அவர்களது கார் அங்கிருந்து கிளம்பியது..

        அன்று காலையில் எப்போது போல் கல்லூரி கிளம்பிக் கொண்டிருந்த சுருதியின் முன்னால் வந்து நின்ற ஆதி,
“பாப்புமா  உன்கிட்ட கொஞ்சம் பேசணும்?” என்றதும். குழப்பத்துடன் ஆதியை திரும்பிப் பார்த்தவள், “சொல்லுங்க ஆதிப்பா என் கிட்ட என்ன பேசணும்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஆதிப்பா!” என்றாள் தன் கைக்கடிகாரத்தை சரிசெய்தவாறு..

           “இன்னைக்கு ஒரு நாள் காலேஜ்கு லீவு போட முடியுமா பாப்பு மா?”என்று தயக்கத்தோடு ஆதி கேட்க.

          பெண்ணவளோ கூர் விழிகளுடன் அவரையே பார்த்திருந்தவள், “என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?  சொல்லனும்னு விருப்பம் இருந்தா சொல்லலாம். இல்லன்னா நீங்க எதையும் சொல்ல வேணாம் ஆதிப்பா” என்றிட

               “உங்க அப்பா கால் பண்ணி உன்னை லீவ் போட்டுட்டு வீட்ல இருக்க சொன்னாருடா” என்றதும் மறுபேச்சு பேசாமல் தன் கல்லூரி பையை ஓரம்கட்டியவள்,
“எதுக்குன்னு நீங்க சொல்லாமையே எனக்கு புரிஞ்சுருச்சு ஆதிப்பா! சேரி கட்டணுமா? இல்ல சுடி போடணுமா?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க.

             “கண்மணி வருவா அவக்கிட்ட கேட்டுக்கடா” என்றவாறே கதவு வரை சென்றவன் பின்பு தயக்கத்துடன் அவள் புறம் திரும்பி, “அப்பா என்ன முடிவு எடுத்தாலும் சரின்னு சொல்லிருவியா? இல்ல உன் மனசுல வேற ஏதாவது எண்ணம் இருக்குதா?” என்று கேட்க.

             “என் மனசுல எந்த எண்ணமும் கிடையாது ஆதிப்பா. இப்ப என்ன நடக்குதோ அது தாராளமா நடக்கட்டும். அவங்க தானே என்னைப் பெத்தாங்க, என்னைக் கேட்டுட்டா எனக்கு உயிர் கொடுத்தாங்க இல்லை தானே! அப்புறம் என்ன ஆதிப்பா அவங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும். எப்ப என் வாழ்க்கையில எது நடந்தாலும் சரி அவங்களே முடிவெடுக்கட்டும். இப்ப மட்டுமில்ல எப்பவுமே என் வாழ்க்கையில எது நடந்தாலும் அது அவங்க முடிவு எடுத்ததாவே இருக்கட்டும்.‌நான் எதையும் மறுத்து பேச மாட்டேன். நீங்க நிம்மதியா போலாம் ஆதிப்பா!”  என்று சொன்னதும் தான் நிம்மதிப் பெருமூச்சுடன் கீழே இறங்கி சென்றான் ஆதி. மீண்டும் எங்கே மன சங்கடமான நிகழ்வோ? வருத்தமான நிகழ்வோ? நடந்துவிடுமோ? என்று எண்ணி பயந்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது சுருதியின் தெளிவான பதிலைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் கீழே வந்தவன் கண்மணியிடம்,“நம்ம பொண்ணு தெளிவா தான் இருக்கா! இனி எந்த பிரச்சினையும் வராது. நீ போய் பாப்புவ ரெடி பண்ணு” என்றதும் கண்மணியும் மேலே சென்றவள், இளம் ரோஜா நிற புடவையில் ஆங்காங்கே அடர் ரோஜா வண்ணத்தில் கல் பதிக்கப்பட்டு, பூ வேலைப்பாடுகள் நிறைந்த புடவையை நேர்த்தியாக சுருதிக்கு கட்டிவிட்டாள். கொலு பொம்மை போல் அமர்ந்திருந்த சுருதியிடம் எந்த மறுப்பும் இல்லை. 

           புடவையைக் கட்டி முடித்ததும் அவள் கூந்தலை அழகாக வாரிய கண்மணி நெருக்கமாக கட்டப்பட்டிருந்த முல்லைப் பூவை அவள் தலையில் சூட்டினாள். தனக்கு பிடிக்கும் என்று பார்த்து பார்த்து முல்லைச் செடி வளர்த்து, அதில் பூ வைத்ததும், ஆசையுடன் பறித்து நேர்த்தியாகக் கட்டி தன் தலையில் வைத்து அழகு பார்க்கும் தன் தாயின் நினைவில் கண்கலங்கிய சுருதி நொடியில் தன்னை சீரமைத்துக் கொண்டு, “நகை எதாவது உங்க அக்கா கொடுத்து விட்டாங்களா?  மம்மி?” என்றிட.

            “ஏன் அவங்க கொடுத்து விட்டா தான் என் மகளுக்கு நகை போடணுமா? என்ன? அதெல்லாம் எம்பொண்ணோட நகைங்க  இங்கையே இருக்கு” என்றவள் கையோடு தான் கொண்டு வந்திருந்த நகைகளை அவளுக்கு அணிவித்து விட ஆரம்பித்தார். நெஞ்சு வரை இருக்கும் ஆரத்தையும், கழுத்தை ஒட்டினாற் போலிருக்கும் ஒரு நெக்லஸையும் அணிவித்து விட்டவள், இரு கைகளிலும் தங்க வளையல்களையும் போட்டு விட்டு,‌காதில் கம்மலையும் போட்டு விட்டவர், இடையில் ஒட்டியானம் அணிவித்து விட வர,
“வேணாம் ஐ( கண்) மம்மி இதுவே போதும்” என்ற சுருதி மீண்டும் ஒருமுறை தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து பவுடர் மட்டும் போட்டு பொட்டிட்டவள் கண்மணியிடம் எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று அமர்வதற்கும், கீழே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.  சத்தம் கேட்டதும் கண்மணி கீழே இறங்கி சென்று விட. காரிலிருந்திறங்கிய அனைவரும் உள்ளே நுழைந்தனர். அனைவரும் உள்ளே நுழைந்து சலசலப்புடன் கலகலத்து பேசியவாறு அமர்ந்திருக்க. தேவ்வோ ‘இங்க என்னடா நடக்குது? என்னை ஏன்டா கூட்டிட்டு வந்தீங்க? நைட் டியூட்டி பார்த்தால தூக்கம் வேற வருது. ப்ளீஸ் விட்ருங்கடா’ என்ற மனநிலைதான் அமர்ந்தான்.

எவனோ ஒருவனின்
பழி தீர்க்கும் எண்ணத்திற்கு பழியாகப் போவதென்னவோ 
எந்தன் நல்வாழ்வு தானோ? 

கோதையிவளின் கணவனாகி கடைசிவரை கரம் கோர்த்து 
இல்வாழ்வின் துணையாக..!
அவளின் சரிபாதி உயிராக..!
அவளின் உணர்வுகள்
அனைத்தையும் ஆள்பவனாக.!!
அவளின் சுக துக்கங்களை பகிர்ந்தளித்துக் கொள்பவனாக.!
அவளை அவளிருக்கும் நிலையிலேயே முழுதாய் ஏற்றுக்கொள்பவனாக..!
இருப்பானென எண்ணியவளின் எண்ணங்களனைத்தும் எண்ணங்களாவே முற்று பெற்றிடுமோ? 

             – மௌனம் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

Story MakerContent AuthorYears Of Membership

எனை கொ(வெ)ல்லும் மௌனமே -4

இன்று அன்றி(ல்)லை 38