in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 13

“ஜீவி இவ்வளவு நடந்து இருக்கு. இன்னும் இங்க இருக்க ஏன் அடம்பிடிக்குற?” என்று மைமூன் கேட்க “நான் இப்போ என் உயிர் தான் முக்கியம் னு போயிட்டா அவங்க விட்ருவாங்களா? இந்த மாதிரி இன்னும் பலர் சாவாங்க கா. என் வாழ்க்கையில அவங்க விளையாடி இருக்காங்க. எப்படி சும்மா விட்டுட்டு உயிருக்கு பயந்து ஓடுறது?” என்று கேட்டாள் ஜீவிதா.

“இல்ல ஜீவி.. உன்னையும் அந்த மாதிரி மயக்கம் வர வச்சு ஏமாத்திட மாட்டாங்களா?”

“நான் மயங்கவே மாட்டேன் னு சொல்லல. ஆனா அவங்க என்ன பண்ணாலும் என்ன காப்பாத்த ஆறு பேரு இருக்காங்க. அந்த ஆறு பேரும் இத போல பல கேஸ்ஸ பார்த்தவங்க. எனக்கு எந்த பாதிப்பும் இல்லாம உங்க கிட்ட ஒப்படைச்சுடுவாங்க. நீங்க கவல படாதீங்க”

“என்ன சொன்னாலும் எனக்கு பயமா தான் இருக்கு”

“இதுக்கு தான் என்ன சொல்லுறேன்னா.. நீங்க முதல்ல ஊருக்கு கிளம்புங்க. நான் ஒரே வாரத்துல வந்துடுறேன்”

“உன்ன விட்டுட்டு நான் மட்டும் போறதா? முடியாது”

“அப்போ ஜாஃபர் கிட்ட என்ன சொல்லுறது?”

“அவன் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான்.”

“ப்ச்ச்.. அக்கா நீங்க இங்க இருக்கது உங்களுக்கு ஆபத்துல தான் முடியும். என்ன காய படுத்துறதா நினைச்சு உங்கள எதையும் செய்வாங்க. என் மேல நம்பிக்கை இல்லனா கூட என் ஃப்ரண்ட்ஸ் மேல நம்பிக்கை வைங்க. அதுல இருக்க எல்லாருமே சிபிஐ சிஐடி டாக்டர்ஸ் இன்டலிஜனட்ஸ். இந்த மாதிரி க்ரைம் ‌நிறைய பார்த்து இருக்காங்க. சோ ப்ளீஸ் நிலமைய புரிஞ்சுக்கோங்க”

“எல்லாம் புரியுது. ஆனாலும் பயமா இருக்கே”

“என்ன அந்த குடும்பத்துல விட பயப்படலாம். கொலை காரன விட கொடுமையானவங்க அவங்க தான். இப்போ ஏன் பயம்?”

“அடி வாங்க போற பாரு. இப்படிலாம் பேசுறது தப்பு”

“என்ன தப்பு? இப்பவும் ஜீவிதாவ பலி கொடுத்தா தான் நறுமலருக்கு கல்யாணம் நடக்கும் னு சொன்னா யோசிக்காம ரெடியாகிடுவாங்க. “

“ஜீவி போதும்” என்று மைமூன் அதட்ட “ஏன் இப்படிலாம் பேசுறீங்க?” என்று யாதவ்வும் அதட்டலோடு கேட்டான்.

“நான் உண்மைய தான் சொல்லுறேன். அது அவ்வளவு கசப்பா இருக்கு. நான் என்ன பண்ணுறது?”

“பேசுனது போதும். இப்போ என்ன முடிவுல இருக்க?”

ஜீவிதா பேசும் முன் போன் இசைத்தது. கார்த்திக்கின் பெயரை பார்த்து விட்டு வேகமாக எடுத்தாள்.

“எங்க இருக்க?” என்று கார்த்திக் கேட்க காரை விட்டு இறங்கி அவனுக்கு கை காட்டினாள். அவன் வந்ததும் அவனிடம் உடைமைகளை வாங்கிக் கொண்டாள்.

“எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ணுறியா?”

“என்ன?”

“இவங்கள ஊருக்கு அனுப்பி வைக்கனும்”

“இப்போவேவா?” – மைமூன்.

“ஆமா கிளம்புங்க. நீங்க இருக்க ஒவ்வொரு நிமிசமும் பிரச்சனை கூடும். உங்களுக்கு பிரச்சனை வந்தா எல்லாம் சொதப்பிடும். கார்த்திக் இவங்கள ட்ரைன் ஏத்தி மட்டும் விட்ரு ப்ளீஸ்”

“ஆனா..”

“எந்த னா வும் இல்ல. இப்போ கிளம்புறீங்களா இல்லையா?” 

ஜீவிதா அதட்ட வள்ளியம்மையிடம் சொல்லிக் கொண்டு மைமூன் கிளம்பி விட்டார். கார்த்திக்குடன் மைமூன் ஒரு பக்கம் கிளம்ப யாதவ்வுடன் ஜீவிதா ஒரு பக்கம் கிளம்பினாள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த யாதவ் ஜீவிதாவை திரும்பி பார்க்க “என்ன?”‌ என்றாள்.

“யார் இவங்க?”

“அவங்க பேரு மைமூன். பத்து வயசுல எனக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆச்சு. அதுல இவங்க தான் என்ன காப்பாத்துனாங்க”

“ஓ… இவங்க கூட தான் இவ்வளவு நாள்‌ இருந்தீங்களோ?”

“ம்ம்…”

“இவங்க ஃபேமிலி எப்படி உங்கள அக்சப்ட் பண்ணிகிட்டாங்க?”

“இவங்களும் என்ன போல ஒரு துரதிர்ஷ்டசாலி தான். பத்தொன்பது வயசுல கல்யாணம் பண்ணி இருபது வயசுலயே ஹஸ்பண்ட பறி கொடுத்துட்டாங்க. கையில ஒரு மாச குழந்தையோட படிச்சுட்டு இருந்த படிப்ப முடிச்சுட்டு சொந்த ஊருக்கு வந்துருக்காங்க.

அங்க தான் நான் ஆக்ஸிடண்ட் ஆகி கிடந்தேன். ஹஸ்பண்ட்டோட பி.எஃப் பணத்த செலவழிச்சு தான் என்ன காப்பாத்துனாங்க. அதுக்கப்புறம் அவங்க பெத்த வீட்டுலயும் அவங்கள ஏத்துக்கல. ஹஸ்பண்ட் வீட்டுலயும் ஏத்துக்கல.

அவங்க வீட்டுக்காரோட பென்ஷன் பணத்த மட்டும் போராடி வாங்கிட்டு வேற ஊருல செட்டில் ஆனோம். முதல்ல என் செலவுக்கும் தம்பி செலவுக்குமே பணம் காலி ஆகிடுச்சு.

ஒரு வருசம் வேற என்னால நடக்க முடியல. அதே போல தான் ஜாஃபரும் குழந்தை. ரெண்டு பேரையும் முகம் சுளிக்காம நல்லா பார்த்துகிட்டாங்க.

என் கால் சரியானதும் வேற ஊருக்கு போனோம். ஒரு சின்ன ஊருக்கு. அங்க ஸ்கூல் டிச்சரா வேலை செஞ்சாங்க. நானும் அதே ஊருல படிச்சேன். மூணு வருசம் அங்கயே படிச்சுட்டு திரும்ப வேற ஊருக்கு மாறுனோம்.

அங்க தான் நான் க்ளாஸ் ஸ்கிப் பண்ணி டென்த் ட்வெல்த் எக்ஸாம எல்லாம் சீக்கிரமா முடிச்சேன்.

அப்புறம் ஆசை பட்டத படிச்சேன். நிறைய ஸ்காலர்சிப் வந்தது. அக்காவோட சம்பளம் பென்சன் பணம் எல்லாமே ஓரளவுக்கு உதவுச்சு . தம்பியும் படிச்சுட்டு இருந்தான்.

என் ட்ரீம் ஜாப் கிடச்சதும் பெங்களூர்ல ஒரு வீடு வாங்கி இவங்களயும் கூடவே கூட்டிட்டு போயிட்டேன்”

“க்ரேட்ல. தன்னோட கஷ்டத்துலயும் உங்கள காப்பாத்தி கூடவே வச்சுருக்காங்க.”

“ம்ம்.. என்ன விட பத்து வயசு தான் பெரியவங்க. இல்லனா அம்மா னு கூப்பிட்டுருவேன். மாமியார் வீட்டுல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அதான் பிரிய சான்ஸ் கிடச்சதும் என்னோட வந்துட்டாங்க.”

“ம்ம்…”

“என் ஃப்ரண்ட்ஸ் எதாவது கேட்டாங்களா?”

“கேட்டாங்க. உங்க பார்ட் தவிர மத்தத மட்டும் சொன்னேன்”

“ஏங்க சொன்னீங்க? அதுங்க தான் அக்காவுக்கு‌ போன் பண்ணி போட்டு கொடுத்துடுச்சுங்க”

“நீங்க சொல்லல னு எதிர் பார்க்கலையே”

“சரி விடுங்க. அக்கா வீட்டுக்கு‌ போயிடுவாங்க. அடுத்த ப்ளான பார்க்க வேண்டியது தான்*

“என்ன ப்ளான்?”

“நிச்சயமா உங்க கிட்ட சொல்ல மாட்டேன்”

“ஏன்?”

“நீங்க இன்வால்வ் ஆக கூடாது. உங்களுக்கு தெரியவும் கூடாது. அதான் ப்ளானுக்கு‌ நல்லது”

“ரொம்ப நல்லது”

நேராக ஹோட்டலுக்கு சென்று இறங்கினர். யாதவ் கோபத்துடன் தன் அறைக்கு சென்று விட ஜீவிதா தனக்கென ஒரு அறை எடுத்து தங்கினாள்.

*.*.*.*.*.*.*.*.

காட்டு மரங்கள் செழித்து வளர்ந்த பகுதி. இயற்கை அன்னை அள்ளி கொடுத்த அழகிய பசுமையில் பறவைகள் நிம்மதியாக கூடு கட்டி வாழ்ந்த அந்த காட்டு பகுதியில் சருகுகள் மிதிபடும் சப்தம் கேட்டது.

யாரோ வேகமாக அந்த காட்டுக்குள் நடந்து செல்லும் சப்தம் தான் அது. பாதை தவறாமல் சரியாக சென்றவன் பல முறை வளைந்து சென்றான்.

தூரத்தில் சிறு குகை போன்ற அமைப்பு இருந்தது. வாசலில் ஒருவன் பைத்தியகாரனை போல் படுத்து இருந்தான்.

அவனை பார்க்கவே பயமாக இருந்தது. ஜடா முடி தரித்தது போல் முகமெங்கும் முடியால் மறைத்து இருந்தான். கிழிந்த உடையால் உடலை முடிந்த அளவு மூடிக் கொண்டு தரையில் படுத்து இருந்தான்.

அவனை தூரத்தில் இருந்து யார் பார்த்தாலும் பயந்து அங்கிருந்து பல தூரம் ஓடி போவார்கள். வந்தவனோ ஓடாமல் அவனிடம் நேராக சென்றான்.

தூங்கிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பி எதோ கூற அவன் குகைக்குள் எழுந்து சென்றான். அவன் பின்னாலே வந்தவனும் குனிந்து உள்ளே சென்றான். சில நொடிகளுக்கு பிறகு அந்த பைத்தியம் போல் இருப்பவன் மட்டும் வெளியே வந்து பழையபடி படுத்துக் கொண்டான்.

உள்ளே போனவனோ சுரங்க பாதை போல் இருந்த அமைப்புக்குள் வேகமாக சென்றான். குகைக்குள் கல்லால் ஆன அமைப்பில் படிக்கட்டுகள் இருந்தது. அதனுள் செல்ல செல்ல அங்கங்கே தீபந்தம் கொழுந்து விட்டு எரிந்தது.

பார்ப்பதற்கு எதோ ராஜ காலத்து அரண்மனை சுரங்க பாதை போல் இருந்தது. அதையும் தாண்டி அவன் உள்ளே சென்றான். பாதையின் முடிவில் கதவு ஒன்று இருக்க கையால் எதோ சப்தத்தை எழுப்பினான்.

உடனே கதவு திறக்கப்பட்டது. அந்த கதவின் வழியாக அவன் உள்ளே செல்ல கதவு மீண்டும் மூடிக் கொண்டது.

சுரங்க பாதையில் இருந்த இருட்டுக்கு தலைகீழாக அந்த இடம் ஜகஜோதியாக ஜொலித்தது. பிரம்மாண்டமான மண்டபம் போல் இருந்த பகுதியில் எங்கும் விளக்குகள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது.

மண்டபத்தின் நடுநாயகமாக ஒருவர் அமர்ந்து கண்ணை மூடி தியானம் செய்து கொண்டிருந்தார். வந்தவன் சத்தம் செய்யாமல் அவருக்கு நேரே சென்று நின்றான். சில வினாடிகளில் கண்ணை திறந்தார்.

அதை கவனித்தவன் “அவளுக்கு காரியம் அரியமாயிருன்னு” என்று கூறினான்.

அவரிம் எந்த மாற்றமும் இல்லை என்றதும் மேலும் “அவளை காணுநில்லா” கூறினான்.

திடீரென அவரின் பார்வை மாறி வாயில் எதோ முணுமுணுத்தார். உடனே விசயத்தை சொல்லிக் கொண்டிருந்தவன் தானாக சென்று தூணில் முட்ட ஆரம்பித்தான்.

அதிகமாக முட்டி தலையில் இரத்தம் சொட்ட மயங்கி விழுந்தான். அவன் விழுந்த பிறகு இவரின் வாய் முணுமுணுப்பை விட்டது. கீழே விழுந்தவனை வேகமாக இருவர் வந்து தூக்கிக் கொண்டு சென்றனர்.

மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். சில நிமிடங்கள் கழித்து வேறு பாதையில் ஒருவன் வந்தான். அவன் வந்து ஜீவிதா இருக்கும் இடத்தை அறிந்து கொண்டதாக கூறினான்.

அதற்கும் அவர் எதோ முணுமுணுக்க வேகமாக வெளியேறினான். சில மணி நேரங்களில் ஹோட்டல் அறையில் இருந்து பின் வாசல் வழியாக யாரையோ தூக்கி வந்து காரில் போட்டனர்.

அந்த கார் உடனே புயல் வேகத்தில் கிளம்பி விட அதன் பின்னால் குறிப்பிட்ட தூரத்தில் இரண்டு பைக் தொடர்ந்தது. சில தூரத்திற்கு பிறகு கார் ஒன்று தொடர ஆரம்பித்தது.

வளைந்து நெளிந்து பல பாதைகளை கடந்த பின்னும் கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. நேராக கேரள மாநில எல்லையில் ஒரு காட்டின் முன்பு நின்றது.

இடையில் பின் தொடர்ந்து வந்த கார் அவர்களை தவற விட்டது. இரண்டு பைக்கும் முடிந்த வரை வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும் முன் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு சிலர் காட்டுக்குள் நுழைந்து விட கார் வேகமாக வேறு இடத்தில் சென்று மறைந்து போனது.

பின்னால் வந்தவர்களுக்கு கார் நின்ற இடத்தை கண்டு பிடிக்க சிரமமாக தான் இருந்தது. தேடித்தேடி அவர்கள் கண்டு பிடிக்க அவர்களின் ஒருவனின் போன் இசைத்தது.

“சொல்லு டா”

“நீங்க இருக்க இடத்துல இருந்து லெஃப்ட் போங்க”

“சரி”

தேடி கொண்டிருந்தவர்கள் இடது பக்கம் காட்டுக்குள் நுழைய ஆரம்பித்தனர்.

அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு போனவர்கள் வேறு ஒரு பாதை வழியாக அந்த மண்டபத்தில் வந்து சேர்ந்தனர்.

கையில் வைத்திருந்த பெண்ணை கீழே போட்டு விட்டு அவளது கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டனர்.

அவளை தூக்கி இருவர் அமர வைக்க முன்னால் இருந்தவர் கண்ணை திறந்து பார்த்தார். பார்த்த இரண்டாவது நொடியே தலையை இரண்டு பக்கமும் லேசாக அசைத்தார்.

அந்த அசைவில் சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியோடு பார்க்க “அட சீக்கிரமே கண்டு பிடிச்சுட்டீங்க” என்று தாரண்யா ஆச்சரியமாக கூறினாள்.

இப்போதும் அவர் எதுவும் பேசாமல் வாயில் முணுமுணுக்க சுற்றி நின்றிருந்த ஒருவன் முன்னால் வந்தான்.

“யார் நீ?” என்று கேட்க தாரண்யா பதில் சொல்லாமல் தன் கையை கட்டியிருந்த கையிறை அவிழ்க்க பார்த்தாள். அதை பார்த்து விட்டு அவன் மீண்டும் அந்த குருவை பார்க்க எதோ முணுமுணுத்தார்.

வேகமாக அவளது கை கட்டை எடுத்து விட அவளே காலில் இருந்த கட்டையும் கழட்டினாள். எழுந்து நின்று கை காலை உதறிக் கொண்டாள்.

“சொல்லு யார் நீ?”

“ஏன் உங்க மந்திரத்துல அதையும் கண்டு பிடிக்கிறது?”

“அதிகமா பேசாத. எந்த இடத்துல இருக்க னு தெரிஞ்சுட்டு பேசு”

“ஏன் தெரியாம? நல்லா தெரியும். உங்க இடத்துக்கு வர்ர பாதையில நாலா பக்கமும் இப்போ கேரளா போலீஸ் தமிழ்நாடு போலீஸ் எல்லாம் வெயிட்டிங்.”

“என்ன சொல்லுற?”

“எல்லாரும் உங்கள பிடிக்க தான் வந்து இருக்காங்க. அடையாளமே இல்லாம எட்டு கொலை பண்ணவங்களுக்கு மரியாதை பண்ணவா வந்துருப்பாங்க?”

“மரியாதை தானே சிறப்பா கொடுப்போம்” என்று கூறிக் கொண்டே கையில் துப்பாக்கியுடன் ஜீவிதா வந்தாள்.

கண்ணில் கறுப்பு கண்ணாடியும் கையில் துப்பாக்கியும் அவளை படு கம்பீரமாக காட்டியது.

நேராக வந்து அந்த குருவை குறி பார்த்தாள்.

“எவ்வளவு தைரியம் இருந்தா உன் இஷ்டத்துக்கு எட்டு பேர கொல்லுவ? இதுல என்ன வேற கொல்ல ப்ளான் போட்ருக்க?”

ஜீவிதா அவனது நெற்றிக்கு நேராக குறி பார்த்தாள். ஆனால் சுடவில்லை.

“அப்படிலாம் உன்ன சாகடிச்சுட மாட்டேன். எதுக்கு இதெல்லாம் பண்ணுற னு காரணம் வேணும் எனக்கு. அத வாங்கிட்டு அப்புறமா பரலோகம் அனுப்புறேன். போய சேரு.”

அவளது கறுப்பு கண்ணாடியை தாண்டி குருவால் அவளது கண்ணை சந்திக்க முடியவில்லை. அதற்கு பதில் தாரண்யாவினை நேருக்கு நேராக பார்த்து எதோ முணுமுணுத்தார்.

திடீரென தாரண்யா ஜீவிதாவின் மீது பாய ஒரு நொடி ஜீவிதா அதிர்ந்து போனாள். அவளது தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டவள் அவளோடு சண்டை போட ஆரம்பித்தாள்.

ஆனால் அடுத்த நிமிடமே நிலைமை விளங்கியது. தாரண்யாவோடு சண்டை போடுவது வீண் என்று புரிந்தது.

உடனே “சாரி டி” என்ற முணுமுணுப்புடன் அவளது கழுத்தில் கையால் ஒரு வெட்டு வெட்டினாள். தாரண்யா நின்ற இடத்திலேயே மடங்கி விழுந்தாள்.

அவள் விழுந்ததுமே சுற்றி நின்றிருந்த எல்லோரும் ஜீவிதாவை பிடிக்க பாய்ந்தனர். அதற்குள் ஜீவிதா அங்கும் இங்கும் ஓடி தப்பிக்க பார்த்தாள். வாயை குவித்து விசில் அடித்தாள்.

அவளது நண்பர்களுக்கு அந்த விசில் சத்தம் சேரும் முன் அவளை பிடித்து விட்டனர். அவள் கண்ணில் இருந்த கண்ணாடியை வேகமாக கழட்டி விட குரு அவளை பார்த்து எதோ முணுமுணுத்தார்.

அடுத்த‌நொடி ஜீவிதாவின் முகம் மாறியது.‌ உடனே அவளை பிடித்திருந்தவர்கள் விட்டு விட்டனர். கீழே கிடந்த தாரண்யாவை தூக்கி எதோ வாயில் ஊற்றினார்கள். தாரண்யா விழிக்க அவர்களது நண்பர்கள் எல்லோரும் உள்ளே வேகமாக நுழைந்தனர்.

நுழைந்தவர்களில் காவல் துறையினர் எல்லோரையும் சுற்றி வளைக்க ஜீவிதா அவர்களை நோக்கி துப்பாக்கியை வைத்து குறி பார்த்தாள்.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

காதல் துளிரே -15

அஸ்தமிக்கும் பொழுதுகள் 14