in

மௌனத்தின் மனசாட்சி -22

 அத்தியாயம் 22

 

அரசு சொன்னது போல் மறுநாள் காலையிலேயே யோகா சொல்லி கொடுக்க ஒரு பெண் வந்திருப்பதாக கூறி  சீதம்மா அழைத்து வந்தார்.

புன்முறுவல் பூத்த முகத்துடன் பின்னாலேயே நுழைந்த இளம் பெண்ணை அதிசயமாக பார்த்தாள் மயூரா.

“ஹாய் ஐ அம் நிவிதா..” சரளமாக வந்து அவளிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டாள்.

தன் பெயரைக் கூட சொல்லத் தோன்றாமல், இமை தட்டி விழித்த வளிடம், “சார் சொல்லலையா..?” என்றாள்.

அவள் வெறுமனே தலையாட்டியதும் தான் வந்தவளுக்கு சந்தேகம் வந்தது. தனது அலைபேசியை எடுத்து அரசுவிடம் பேசினாள்.

அடுத்த சில நிமிடங்களில் அறைக்குள் நுழைந்தவன், “இவங்க தான் நான் சொன்ன யோகா டீச்சர்.. பார்க்க சின்ன‌ பொண்ணா இருக்காங்கன்னு நினைக்காமல் கத்துக்கோ. இவங்க மாஸ்டர் ரொம்ப பெரிய ஆள். நான்தான் லேடி மாஸ்டர் வேணும்னு கேட்டேன்.  அதான் இவங்களை அனுப்பி இருக்காங்க..” 

அவன் சொன்னதற்கும் தலையாட்டல் மட்டுமே வந்தது. கேள்வியாக நோக்கிய நிவிதாவிடம், 

“ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. கொஞ்சம் வெளியில வாங்க..” 

“என்ன சார்..?”

“அவங்ககிட்ட இன்னிக்கு கொஞ்சம் ஃப்ரெண்ட்லியா பேசுங்க. யோகா மூலம் மைண்ட் எப்படி மாத்தலாம்னு சொல்லுங்க. ஒரு ரெண்டு நாள் பேசி தான் அவங்களை சம்மதிக்க வைக்கணும். ட்ரை பண்ணி பாருங்க..”

“ஓகே சார் முயற்சி பண்றேன். ஆனா ரொம்ப டிப்ரஸா இருக்கிற மாதிரி தெரியுது..”

“ஆமா. ஆனால் அந்த ரீசன் மட்டும் கேட்காதீங்க..” குறிப்பு காட்டினான்.

உள்ளே வந்த நிவிதா அவளுக்கு எதிரே அமர்ந்தாள். சீதாம்மா இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். 

“உங்க பெயர் சொல்லுங்க..?”

“மயூரா..”

“நைஸ் நேம். இன்னைக்கு முதல் நாள். யோகா பத்தி எனக்கு தெரிஞ்சத சொல்றேன். மனதை அலையவிடாமல் ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி.  உடலை ஆரோக்கிய படுத்துவது மட்டுமல்லாமல், மனதையும் தெளிய வைக்கும் முயற்சி. பிளஸ் டூ படிக்கும்போது என்னோட ஒரே ஆசை மெடிக்கல் படிக்கணும்கிறது தான். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி படிச்சேன். ஆனா மெடிக்கல் சீட் கிடைக்கல. அதுல மனசு உடைஞ்சு போய்  ஒரு ஆறு மாசம் நான் நானாவே இல்லை.

எங்க அம்மா, அப்பா என்னை மாற்ற நிறைய முயற்சி செய்தாங்க. கடைசியா அப்பாவோட நண்பர் ஒருத்தர் சொல்லி அவருக்கு தெரிஞ்ச யோகாசன பயிற்சியாளர் கிட்ட என்னை சேர்த்து விட்டாங்க.

ஆரம்பத்தில் நானும் இப்படித்தான். இதுல பெருசா இன்ட்ரஸ்ட் காட்டாம சும்மாவே இருந்தேன். ஆனா எனக்கு சொல்லிக் கொடுத்தவர் ரொம்ப பொறுமையா எனக்கு இதைப் புரிய வச்சு, செய்ய வைத்தார். 

உங்களுக்கு என்ன மனசு கஷ்டம்னு எனக்கு தெரியாது. உடம்பால கஷ்டப்படுவது ஒருவகை. வலி வேதனை, அதைக்கூட மருந்து மாத்திரை சாப்பிட்டு குணப் படுத்திடலாம். ஆனா மனசுல ஏற்பட்ட ரணம் மாற கொஞ்ச நாள் ஆகும். அதுக்கு யோகா ரொம்ப உதவி பண்ணும். கொஞ்சம் முயற்சி பண்ணிப் பாருங்களேன்..” அவளது பேச்சுக்கு நல்ல பலன் இருந்தது..

“உண்மையா சொல்றீங்களா அல்லது எனக்காக சொல்றீங்களா..?”

“என்னை பத்தி சொன்ன விஷயம் 100% உண்மை.. உங்களுக்காகவும் பேசினேன் தான்..”

“சரி இப்ப நான் என்ன செய்யணும்..?”

“நாளைக்கு காலையில இதே நேரம் வரேன். ரெடியா இருங்க. சூரிய நமஸ்காரத்தில் இருந்து ஆரம்பிப்போம்..” சொல்லிவிட்டு விடை பெற்றாள்.

மறுநாளிலிருந்து நிவிதாவின் உதவியோடு மயூராவின் காலைப் பொழுதுகள் சுறுசுறுப்பாக ஆரம்பித்தது. முதல் ஒரு வாரம் ஏனோ தானோ என்று கற்றுக் கொண்டவள், நிவிதாவின் அணுகுமுறையால் முறையோடு செய்ய ஆரம்பித்தாள். உடற்பயிற்சியும், சில நிமிடங்களே செய்ய கற்றுக்கொண்ட தியானமும் அவளது மனநிலையை முற்றிலும் மாறுபடுத்தியது..

இதற்கிடையில் ஏற்கனவே சந்தித்த மருத்துவரை பார்த்து விட்டு வந்தனர். பெரும்பாலான காயங்கள் ஆறி விட்டதாக கூறி  விட்டமின் மாத்திரைகள் உடன், ஒரு சில அறிவுரைகளையும் கூறி அனுப்பி விட்டார்..

மயூராவின் மனதை திசை திருப்பியவன், தன்னுடைய மீதி வேலையை முடிக்க, என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அலுவலகம் சென்றதும் குமணன், தாங்கள் விற்க முயற்சி செய்யும் கம்பெனியை  வாங்குவதற்கு சிலர் முன் வந்திருப்பதாகக் கூறினான்.

“அவங்களை நான் தனித்தனியா பார்க்க ஏற்பாடு பண்ணு..?”

“இன்னைக்கு பார்க்கலாமா சார்..? அவங்க தான்  கேட்டாங்க..?”

“எத்தனை பேர்..?”

“ரெண்டு பேர்.. காலையில ஒருத்தரை  மீட் பண்ணுவோம். சாயங்காலம் இன்னொருவர்…”

“ஓகே. வேற, வேற ப்ளேஸ்ல பிக்ஸ் பண்ணு..” 

குமணன் செய்த ஏற்பாட்டின்படி இருவரையும் சந்தித்து பேசினான். இரண்டாவதாக வந்தவரின் விலை படிய அவருக்கு தருவதாக ஒப்புக் கொண்டான்.. 

“மிஸ்டர் அகர்வால் ஐம்பது பர்சென்ட் வொயிட் மீதி பிளாக்ல குடுங்க..”

“ஓகே, சார் என்னைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வெச்சுக்கலாம்..?”

“நெக்ஸ்ட் வீக்.. உங்களுக்கு ஓகேவா..?”

“எஸ், மிஸ்டர் அரசு பார்க்கலாம்..” பேசி முடித்ததும் அது சம்பந்தமான வேலைகளை பார்க்க தனது பிஏவிடம் உத்தரவிட்டான்.

சேவாக்கை நெருங்குவதற்கு ஏதாவது ஒரு வழி கிடைக்குமா என்று  யோசிக்க ஆரம்பித்தான்.

தாத்தாவின் நண்பரான போலீஸ் அதிகாரி கொடுத்த லிஸ்ட்டில் உள்ள அதிகாரிகளில் சென்னையில் உள்ளவர்களை நேரில் சென்று கிருஷ்ணாவும், சத்தியஜித்தும் சந்தித்தனர்.

அவர்களில் சிலருக்கு  உயர் அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்க வேண்டியது. நேர்மையின்  காரணமாக அப்படியே இருந்தனர். மேலிடத்தின் பாரபட்சமும், தங்களுடைய வேலையின் மீது இருந்த தீராத தாகமும் அவர்களை கிருஷ்ணாவுக்கு உதவியாக செயல்பட சம்மதிக்க வைத்தது.

தாங்கள் கண்டுபிடித்த விஷயங்களை கோடிட்டுக் காட்டி, அவர்களுடைய உதவியை கேட்டான்.

“அவனுக்கு எதிராக நிறைய கேஸ் இருக்கு. ஆனா அப்பாவவோட செல்வாக்கு வச்சு அவன் தப்பிச்சி கிட்டே இருக்கான்..”

“சார் சாதாரண மக்களுக்கு எதிராக உள்ள கேஸ்ல அவனை சிக்க வைக்க முடியாது. வேற ஏதாவது பண்ணனும். எங்ககிட்ட ஒரு பிளான் இருக்கு. அதை செய்தால் அவன் கண்டிப்பா மாட்டிப்பான்..”

“சொல்லுங்க பாப்போம்..” என்றதும் தங்களுடைய பிளானை விவரித்தனர்.  கேட்ட அதிகாரிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்..

“தம்பி இது ரொம்ப ரிஸ்க்..!”

“சார் என்கிட்ட இருக்கிறது நம்பிக்கையான ஆள். ஏற்கனவே சேவாக் கிட்ட இருந்தவன். அவனுக்கு ஒரு லவ் அஃபயர்.  ஏதோ ஒரு பிரச்சனையில் வெளியே வந்துட்டான். அவனுக்கு பணம் பாதுகாப்பு  ரெண்டும் தேவை. அவனை நம்ம யூஸ் பண்ணிக்கலாம். என்ன பிரச்சினைனா டீலிங் முடிஞ்சதும் வெளிநாட்டுக்கு அவனை அனுப்பி வைக்கணும்..”

“அது எப்படி முடியும்..? அவனும் குற்றவாளி தானே..?”

“ஆனா நம்ம கூட சேர்ந்து அப்ரூவராக மாறிடறான். அவனுக்கு இப்போ தன்னோட லவ்வர் கூட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு ஆசை இருக்கு. இந்த சரணடையற வேலை கூட அந்த பொண்ணு சொல்லி தான் செய்றான். ஒரு பெரிய வலைப் பின்னலின் ஆரம்ப முடிச்சு  சேவாக் தான். அவனை அறுத்து விட்டுட்டா வலையை தனித்தனியா பிரிச்சுடலாம். சுறாவே மாட்டும் போது நமக்கு எதுக்கு சார் சின்ன விலாங்கு மீன்..? நழுவிட்டு போட்டும். எப்ப வேணா தூண்டில் போட்டு பிடிச்சுக்கலாம்..”

“சரி இதுல நாங்க என்ன செய்யணும்..?”

“அவன் செய்யக்கூடிய வேலை உங்க ஏரியாவில கவர் ஆகுது. கம்ப்ளைன்ட் உங்களுக்கு தான் வரும். நீங்க சந்தேகத்தை சேவாக் மேல் கிளப்பணும்..”

“எவிடன்ஸ் இருந்தா அது ரொம்ப ஈசிதான்..”

“எவிடன்ஸ் கிடைக்கும் படியா நான் ஏற்பாடு பண்றேன்..” அத்துடன் பேச்சு முடிந்தது என்று இருவரும் கிளம்பி சென்றனர்.

“டேய் எதுக்காக இப்படி பண்ற..?”

“அவனைப் பத்தி நீயும் தான்  விசாரிச்சு இருக்க. எத்தனை பொண்ணுங்க கேஸ்.. அவனை தூக்கிட்டா ஓரளவு போதை மருந்து நடமாட்டம் குறைஞ்சிரும்..”

“இவன் போனா இன்னொருத்தன் முளைப்பான்..”

“அவனையும் புடுங்குவோம்.. களை பிடுங்க தானே நாம இருக்கோம்.. டேய் இந்த உலகம் இருக்கிற வரைக்கும் குற்றங்களும் இருக்கத்தான் செய்யும். நம்ம வேலையை நாம செய்யாம இருந்தா, அவங்கள மாதிரி ஆட்களுக்கு இன்னும் துளிர் விட்டுப் போய்விடும்..”

“ஆனா இதுல சிக்கவைக்க போறது இன்னொரு மினிஸ்டர்..”

“இருக்கட்டும்டா, முள்ள முள்ளால தான் எடுக்கனும்..  இவர் ஆந்திர பிரதேச சென்ட்ரல் மினிஸ்டர். டெல்லியில் அதிக அளவு செல்வாக்கு பெற்றவர். அவர் பொண்ணு இங்க படிக்குது. போதை மருந்து பழக்கம் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு. இது போதுமே நமக்கு..”

“சரி பிளான் என்னைக்கு..?”

“அடுத்த வாரம்.. அந்த பொண்ணோட வழக்கமான அலுவல்கள் நமக்கு தெரிய ஏற்பாடு பண்ணியிருக்கேன். அது தெரிஞ்சதும் அடுத்த மூவ்..” நண்பனை இறக்கிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டான்.

எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. வீக் எண்ட் என்பதால் தனது தோழிகளுடன்  அவள்  ஸ்டார் ஹோட்டல் சென்றாள். நண்பர்களுடன் குடித்து கும்மாளமாக  பொழுதை கடத்திக் கொண்டிருந்தபோது  அவளுக்கு ஒரு தகவல் வந்தது..

அவளும் இன்னும் இரு தோழிகளும் மட்டும் கிளம்பி வெளியே வர, டிரைவர் அடுத்த கடையில் நின்றவன் அவசரமாக ஓடி வந்தான். ஆனால் வண்டியை எடுக்க முடியாமல் டயர் பஞ்சர் ஆகி இருக்க, அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்த கால் டாக்ஸி ஒன்றில் கிளம்பினாள். 

கால் டாக்சி  டிரைவர் சேவாக்கின் குரூப்பில் உள்ளவன். அவனுக்கு சேவாக் இடமிருந்து வெளியே வந்திருந்த ஆளிடமிருந்து செய்தி வந்திருந்தது. இந்தப் பெண்களை அவர்களின் ரகசிய இடத்திற்கு கொண்டு போகச் சொல்லி. அதை கச்சிதமாக அவன் செய்தான்.

அங்கு இருந்த மற்ற கை ஆட்களும் தலைவன் சொல்லி தான் இந்த ஏற்பாடு என்று நினைத்துக்கொண்டு பெண்களை மயக்க படுத்தி கட்டி வைத்தனர்.

இவளின் ட்ரைவர் பஞ்சரான வண்டியை சரி பண்ணி எடுத்து கொண்டு அவள் சொன்ன இடம் சென்றபோது அங்கு அவள் இல்லை என்பது தெரியவந்தது. அதற்குள்  இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அதன் பின்தான் அவள் கடத்தப்பட்டு இருக்கும் விஷயம் வெளியில் தெரிந்தது.   

இடையில் நடந்த பிரச்சினைகளால் பெண்கள் பக்கமே போகாது இருந்த சேவாக்குக்கு அவனது அடிமை ஒருத்தன் போன் பண்ணி விஷயத்தை சொல்ல, தன்னை அடக்கி கொள்ள முடியாமல்  அவர்களது வழக்கமான இடத்தை அடைந்தான்.

ஏற்கனவே போதையில் இருந்த பெண்களை கை கால்களை கட்டி உருட்டிவிட்டு இருந்தனர்.

“டேய் பார்த்தா பெரிய இடத்து பார்ட்டிங்க மாதிரி தெரியுது. எதுவும் பிரச்சனை இல்லையே?”

“இல்ல பாஸ்.. நம்ம கிட்ட சரக்கு வாங்க வந்தாங்க.. குட்டிங்க அழகா இருந்ததும் இங்க தூக்கிட்டு வந்துட்டோம். சிங்கள் டோஸ் வேற கொடுத்து இருக்கோம். அதனால் பிரச்சனை இல்லை..”

“சரி சரி நீங்க போங்கடா நான் முடிச்சுட்டு கூப்பிடுறேன்..” என்றவன் இன்னும் கொஞ்சம் சுதி ஏத்த முனைந்தான்.

டிரைவர் முதலாளி அம்மா சொன்ன இடத்திற்கு வந்ததும் தகவல் தெரிவிக்க போன் செய்தான். ஸ்விட்ச் ஆஃப் என்று வரவே, அந்த இடத்தில் இறங்கி விசாரிக்க, அவள் அங்கே வரவே இல்லை என்று தெரிந்தது.

எதற்கு மேலிடத்து பொல்லாப்பு என்று அடுத்த நொடியே, அவன் அவள் வீட்டுக்கு தகவலை தெரிவித்து விட்டான். வீட்டிலும் முயன்று பார்த்துவிட்டு அவளைப் பிடிக்க முடியவில்லை என்றதும்  அமைச்சருக்கு தகவல் தெரிவித்தனர்.

மனைவி போனில் விஷயத்தை கூறியதும், அடுத்த நொடியே சென்னை கமிஷனருக்கு அழைத்தார்.

அமைச்சரின் பெண் என்றதும், போலீஸ் டிபார்ட்மென்ட்டில் பெரிய பதவியில் உள்ள அனைவருக்கும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

டிஜிபி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே பெண்கள் காணாமல் போகிறது சம்பந்தமா விசாரிச்சுட்டு இருந்தீர்களே என்ன ஆச்சு..? என்று கமிஷனரிடம் கேட்கப்பட்டது.

கமிஷனர் கிருஷ்ணாவை கேள்வியாக நோக்க, “சார் அது சம்பந்தமா நிறைய தகவல் கிடைச்சிருக்கு. ஆனால் லீகலா ஆக்ஷன் எடுக்க முடியாதபடி சிக்கல்  இருக்கு சார். போதை மருந்து, பெண்கள் இரண்டு விஷயத்தையுமே ஒரே நெட்வொர்க் ஆட்கள்தான் செய்யறாங்க. பெரிய கை.. இந்த விஷயத்திலே எனக்கு அவங்க மேல தான் டவுட் இருக்கு. ஆனா ஸ்டெப் எடுத்து வைக்க முடியாது சார்..” 

காணொளி காட்சி மூலம் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் நேரடியாக கிருஷ்ணாவிடம் பேசினார்..

“மிஸ்டர் கிருஷ்ணா என்னோட பொண்ணு விஷயத்துல உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய சொல்கிறேன். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுத்துக்கோங்க. நான் பார்த்துக்கிறேன். எனக்கு என் பொண்ணு முழுசா வேணும். மிஸ்டர் டிஜிபி வேண்டியதை அவருக்கு செஞ்சு கொடுங்க.. என்னோட செல்வாக்கு பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்..”

“தெரியும் சார். நீங்க சொல்லனும்னு அவசியம் இல்லை. உங்க பொண்ணை மீட்டுக் கொடுக்க வேண்டியது எங்க டிபார்ட்மெண்ட் கடமை..” அவருக்கு இசைவான பதிலைக் கொடுத்தார்.

“கிருஷ்ணா உனக்கு தேவையான போர்ஸ் யூஸ் பண்ணிக்கோங்க. கூட எந்த ஆபீஸர் வேணும்னாலும் நீங்க அழைத்துக் கொள்ளலாம். நமக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டால் சரிதான். நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்..”

“ஷ்யூர் சார்..” என்றவன் நண்பனுடன் விரைந்து கிளம்பினான். ஏற்கனவே போட்ட பிளான் என்பதால் கச்சிதமாக அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மற்றும் பரிவாரங்களுடன் சரியான நேரத்திற்கு அங்கு சென்றனர்.

சேவாக் மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து அந்த பெண்களை தவறாக உபயோகப்படுத்தி கொண்டிருக்க, வெளியே காவலுக்கு இருந்தவர்களுடன் மோதல் ஏற்பட்டது..

தயவு தாட்சண்யம் பார்க்காமல் துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பிக்கவும், அடியாட்கள் பயந்து பின்வாங்கினர்.. கிருஷ்ணாவும் இன்னொரு போலீஸும் அந்தப் பெண்களைத் தேடி மாடிக்கு சென்றனர்.

கீழே ஏதோ சத்தம் கேட்கவும் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கதவுக்குப் பின்னால் ஒளிந்தான் சேவாக். கதவை மோதித் திறந்து கொண்டு முதலில் நுழைந்த போலீசை அவன் சுட்டுவிட, பின்னால் வந்த கிருஷ்ணா அவனை சுட்டான். அதை எதிர்பார்த்து குனிந்து தப்பித்துக் கொண்டவன், எதிர்பார்க்காதது சுட்ட வனை. தனது பழைய எதிரியை  கண்டதும் வெறியில் சுட ஆரம்பித்தான். அவனது குண்டு கிருஷ்ணாவின் வலது தோள்பட்டையில் பாய, துப்பாக்கியை இடது கைக்கு மாற்றி சரமாரியாக அவனது நெஞ்சில் சுட்டான்..

ஐந்து குண்டுகள் பாய்ந்ததில் அந்த இடத்திலேயே சேவாக் உயிரிழந்தான். அடுத்து மடமடவென்று காரியங்கள் நடந்தேறின.

அந்தப் பெண்களும், அடிபட்ட போலீஸ் ஆட்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். நடந்த ஆபரேஷன் முழுவதும் நேர்மையான அதிகாரி மூலம் நடந்ததாக கூறி அவருக்கு பதவி உயர்வு கொடுக்க வைத்தான் கிருஷ்ணா. போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதாக கூறி பைலை குளோஸ் செய்தனர்.

சேவாக்கின் தந்தைக்கு விஷயம் தெரிந்து போலீஸை விசாரித்த போது ஆந்திரப்பிரதேச மினிஸ்டரே குறுக்கே வந்தார். விவகாரத்தை இதற்குமேல் கிளறினால் கட்சியிலும் ஆட்சியிலும் பதவியை காலி செய்து விடுவேன் என்று மிரட்ட, பிரச்சனை அப்படியே அடங்கிப் போயிற்று.

தோளில் பாய்ந்த குண்டை ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டு கட்டுப்போட்டு இருந்தனர். விஷயம் தெரிந்ததும் வீட்டிலிருந்து எல்லோரும் பதறிக் கொண்டு வந்து பார்த்தனர்.

“என்னடா இது..? இந்த வேலை வேண்டாம். நம்ம தொழிலைப் பாருன்னு  அப்பா சொன்னார். அதை கேக்கல. இப்ப பாரு என்ன ஆச்சுன்னு..?”

“இந்த வேலையில் இதெல்லாம் சகஜம்மா..”

“அதுக்காக ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக பயந்துகிட்டே இருக்க முடியுமா..? நான் மட்டுமில்லாமல் வர்றவளும் சேர்ந்து பயப்படணும்..” இதைச் சொன்னதும் அவன் முகம் மாறிய விதத்தை பார்த்து பிரபாகர் மனைவியை அதட்டினார்.

“விடு எந்த நேரத்துல எது பேசணும்னு கிடையாதா..? அடிபடணும்னு நேரமிருந்தால் படத்தான் செய்யும். சரியாயிரும். தைரியம் சொல்றத விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கே. வீட்டுக்கு கிளம்பு..”

“அவன் கூட நான் இருக்கேனே..?”

“அதெல்லாம் வேண்டாம் விஷ்ணு பார்த்துப்பான். அவங்க ஆபீஸ் செக்யூரிட்டி வேற இருக்காங்க. சாப்பாடு மட்டும் கொடுத்துவிடு..” என்றவர் மகனின் தோளில் ஆறுதலாக தட்டிவிட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர்கள் சென்றதும் அயர்ச்சியுடன் கண்களை மூடிக் கொண்டான். மிச்சமிருந்த மயக்க மருந்து வேலை செய்ய கண்களைத் தூக்கம் தழுவியது. வெகுநாட்களாக மனதை  உறுத்திக் கொண்டிருந்த உணர்வு நீங்கிய நிம்மதியுடன் தூங்க ஆரம்பித்தான்..

சென்ட்ரியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு விஷ்ணு காபி குடித்து வர அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்றான்.

என்னென்னவோ நினைவுகள், தான் கண்டுபிடித்த விஷயங்கள்,  என்று கோர்வை இல்லாமல் ஒரு சில காட்சிகள் அவனது கனவாக வர, நெற்றியைச் சுருக்கிக்கொண்டு கண் இமைகளை பிரிக்க, பிரயத்தனம் செய்தவனின் நெற்றியை ஜில்லென்ற ஒரு வலிய கரம் தடவிக் கொடுத்தது.

புருவத்தின் முடிச்சுகளை நீவிவிட்டு தலையை கோதி, நெற்றியை வருட அந்த இதத்தில்  கண்கள் சொருகியது. ஆனாலும் வந்திருப்பது யார் என்று உள்ளுணர்வு உந்த, தான் நினைப்பது சரிதானா என்பதை பார்க்க கண்களைத் திறந்தான்.

தனது முகத்துக்கு நேரே குனிந்து கண்கள் கலங்க நின்றிருந்த அண்ணனை பார்த்ததும் அவனையும் அறியாமல் பாசத்தில் கண்களில் நீர் துளிர்த்தது.

“உன்னை ஜாக்கிரதையா பார்த்துக்க சொல்லி அப்பா கிட்டயும் சசி கிட்டயும் சொன்னேனே..? இதுதான் அவங்க ரெண்டு பேரும் உன்னை பார்த்துக்கிற லட்சணமா..?” என்றவனின் கேள்வியில் கோபத்தை விட வேதனை அதிகம் இருந்தது.

பதில் சொல்லாமல் அண்ணனையே தீர்க்கமாக பார்த்த தம்பியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவனது கண்கள் தாமாக வேறு திக்கு நோக்கியது..

“இத்தனை நடந்திருக்கு..? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லணும்னு உனக்கும் தோணாம போச்சு, இல்லையா. அந்த அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன்..? சொல்லு. அவதான் இந்த குடும்பத்தை சேர்ந்தவ இல்லை. ஆனா நீ என்னோட அண்ணன் தானே. நீ ஏன் சொல்லல..?”

“இந்தக் கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. நடந்த விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சதா இருக்கலாம். நாங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டும் இருக்கலாம். ஆனால் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவு பண்ண வேண்டியது அவதான். அதனால் தான் என்னால வாயைத் திறக்க முடியாமல் போச்சு. ஐ அம் வெரி சாரிடா. உன்னோட வாழ்க்கையை  நான் பறிக்கலை. இது மட்டும் தான் என்னால இப்போதைக்கு சொல்ல முடியும். யார்கிட்டயும் இதைப் பற்றி மூச்சு கூட விடாத.. அதுக்கப்புறம் அவளை உயிரோட பார்க்க முடியாது. எல்லாரையும் பாத்துக்கோ..” என்றவன் பொங்கி வந்த குமுறலை அடக்கிக்கொண்டு வெளியே சென்று விட்டான்.. 

அவன் அறையை விட்டு வெளியே செல்லும்போது காரிடாரில் அந்தப்பக்கமாக வந்த விஷ்ணு அத்தானை கண்டு கொண்டான். விரைந்து வந்து பிடிப்பதற்குள் சென்றுவிட, வியப்புடன் அறைக்குள் நுழைந்தான்.

“என்னடா அத்தான் வந்துட்டு போற மாதிரி தெரியுது..? உன்னை பார்க்கத்தான் வந்தாரா..? எதுவும் சொன்னாரா..?”

“ம்ம்..”

“என்னடா ம்ம், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. இங்கதான் வந்தாரா அல்லது வேற யாரையும் பார்க்க வந்தாரா..?”

“எனக்கு தெரியாது..?” என்றவனின் பதிலில் குழம்பினான்.. ‘இந்த அறையில் இருந்து தானே வெளியே போனார். இவன் என்னடான்னா தெரியாதுன்னு சொல்றான். எதுவும் பிரச்சனை ஆகியிருக்குமோ..?’ தனக்குள் மண்டையை குடைந்து கொண்டான்.

தம்பியை பார்த்துவிட்டு காரில் ஏறி நேராக கமிஷனர் அலுவலகம் சென்றான். நண்பனிடம் தம்பியை கவனித்துக்

“ரிலாக்ஸ். உன்னோட கோபம் எனக்கு புரியுது. இது எதிர்பாராமல் நடந்தது. மேலும் அவர் ஒரு போலீஸ் ஆபீஸர். அவருக்குத் தன்னை பாத்துக்க தெரியாதா..?”

“டேய் நீங்க ரெண்டு பேரும் முதல்ல எனக்கு உறவு. அப்புறம்தான் உங்க போலீஸ் டிபார்ட்மென்ட் எல்லாம். பிரச்சனையோட  தீவிரம் தெரியாம பேசாதே..?”

“ஓ, உங்களுக்கு எல்லாம் தெரியுமோ..?”

இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் நண்பனை வெறித்தான். கோபமும்,  ஆற்றாமையும் ஆக அவனது முகம் மாறிய விதத்தை பார்த்து சசிக்கும் புரிந்தது.

“லன்ச் டைம் தான், வா வெளியில் போகலாம்..” இருவரும் அருகிலிருந்த மெஸ் ஒன்றிற்கு சென்றனர். உள்ளே நுழைந்து உட்கார்ந்த பிறகும் அரசு மௌனமாக இருக்க, கமிஷனர்தான் பேச்சை ஆரம்பித்தார்.

“அண்ணனும்,  தம்பியும் சேர்ந்து நினைச்சதை செய்வீங்க..? என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்க. அட போலீசா தெரிய வேண்டாம்.  உன்னோட ஃப்ரெண்டு தான் நான். என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல. இத்தனை அனர்த்தம் நடந்திருக்காது..?”

“பாதிக்கப்பட்ட பிறகு சொல்லி என்ன புண்ணியம்..? மேலும் தப்பு நடக்காமல் இருக்கணும்னா யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு தோணுச்சு. ஆனா அவனுக்கு எப்படி தெரியும்னு எனக்கு தெரியல..?”

“அதைத்தான் நான் சொல்றேன். நாங்க போலீஸ்காரங்க..” என்று அவன் சொன்னதும் நண்பனின் கண்களை உற்றுப் பார்த்தான்.

“நீ முதல்லே கிருஷ்ணா கிட்ட சொல்லி இருக்கலாம்..”

“சொல்லக்கூடிய  சூழ்நிலை இல்லை..”

“ஆனா எனக்கு ஓண்ணு மட்டும் புரியல.. அந்த சூழ்நிலையில் கல்யாணம் எப்படி நடந்தது..?”

“எனக்கே இன்னைக்கு வரைக்கும் புரியல..”

“ஓகே லீவ் இட் எல்லாம் சரியாகும்.. இப்போதைக்கு இருந்த பிரச்சனையும் தன்னோட புத்திசாலித்தனத்தால் உன் தம்பி தீர்த்து வைச்சுட்டான்.  இனி எந்த கவலையும் இல்லைன்னு என்று நினைக்கிறேன்..”

“ஆனா அப்பா உயிரோட இருக்காரே..? அதுவும் பதவியில..,?”

“அதை தக்க வச்சுக்கணும்னா அவர் அமைதியா இருந்துதான் ஆகணும். ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும். ரெண்டு பேரும் எதைப்பத்தியும் மூச்சு விடாதீங்க. அதுக்குதான் உன்னை வெளில கூட்டிட்டு வந்தேன்..”

“புரியுது..”

“இப்ப அந்த பொண்ணு எப்படி இருக்கா..?”

“கொஞ்சம் பரவாயில்லை.. ஆனால் முழுசா வெளில வரல..”

“அதுக்கு நாளாகும்.. ஆனா அது மட்டும் பிரச்சனை இல்ல உனக்கு.. டேக் கேர்..” நண்பனின் வாழ்க்கையை மனதில் கொண்டு பேசினார்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 11 சராசரி: 4.3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

39 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

அஸ்தமிக்கும் பொழுதுகள் 12