in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 10

இரவு முழுவதும் ஜீவிதாவின் வீட்டில் யாருக்கும் தூக்கம் வரவில்லை. சிலருக்கு ஜீவிதா நறுமலரிடம் நடந்து கொண்டதை நினைத்து கோபம். சிலருக்கு யாதவ்வை ஜீவிதா சந்தேக பட்டதற்காக கோபம்.

நாளை முதல் விடுதலை என்ற உணர்வுடன் நன்றாக தூங்கியது ஜீவிதா மட்டுமே.

காலையில் ஒரு புத்துணர்வுடன் எழுந்தாள். நேற்றே எல்லாம் எடுத்து வைத்து விட்டதால் இன்று எதுவும் பெரிய வேலை இல்லை. குளித்து உடை மாற்றி விட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

வீட்டில் வழக்கமாக இருக்கும் சத்தம் எதுவும் இல்லை. எல்லோரும் ஒரு அமைதியுடன் தங்களது வேலையை பார்த்தனர்.

நறுமலரும் நிலவனும் தான் முதலில் ஜீவிதாவை கவனித்தனர்.

“அக்கா நிஜம்மாவே போறீங்களா?” என்று நறுமலர் அதிர்ச்சியோடு கேட்க வேகமாக வள்ளியம்மை சமையல் அறையிலிருந்து வெளியே வந்தார்.

“ஆமா…”

“ஏன் கா? போகாதீங்க. உங்க குடும்பம் இங்க தான இருக்கோம்?”

“நறுமலர் என்ன பேச வைக்குற. ஆனா இத சொன்னா தான் நீ அமைதியாவ. சோ.. என்ன இங்க இருக்க சொல்லுற உரிமை உனக்கு கிடையாது.”

“உரிமை இல்லயா? நான் உங்க தங்கச்சி”

“அப்படியா?”

ஜீவிதா நக்கலாக கேட்டு விட்டு திரும்பிக் கொண்டாள். நறுமலர் பேச முடியாமல் வாடிப்போக சேந்தனுக்கு கோபம் வந்தது.

“எங்க போற?” என்று சேந்தன் கேட்க “அத நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லபா” என்றாள்.

“ஜீவிதா.. பார்த்து பேசு… அப்பா கிட்ட இப்படி தான் பேசுவியா?”

வள்ளியம்மை அதட்டலோடு முன்னால் வந்தார்.

“கடந்த இருபத்து ரெண்டு வருசமா அப்பா னு யாரு கிட்டயும் நான் பேசலமா”

வள்ளியம்மைக்கு சுருக்கென தைத்தது.

“என்ன விட்டா வாய் நீளுது? உன் ராசி விளங்களனு தான் பிரிச்சு வச்சோம். நீ இல்லாத வர நிம்மதியா தான் இருந்தோம். நீ வந்த.. இல்லாத பிரச்சனை எல்லாம் வந்துடுச்சு. எங்களுக்கு தான் பீடையா இருப்பனு பார்த்தா அந்த யாதவ் பையனுக்கும் பிரச்சனையா இருந்து தொலச்சுட்ட. இப்படி னு தெரிஞ்சுருந்தா உன்ன ஊருக்குள்ள காலெடுத்து வைக்க விட்ருக்க மாட்டேன்”

தங்கமணி பொங்க ஜீவிதாவிற்கு சிரிப்பு வந்தது.

“நீங்க கூப்பிட்டதால நான் வந்தேன் னு நினைச்சீங்களா? நானா தான் இந்த ஊருக்கு வரனும் னு முடிவு பண்ணேன். ஏன் வந்தேன் தெரியுமா? உங்க மேல பாசத்த கொட்ட ஒன்னும் வரல.” என்றவள் எதையோ எடுத்து அங்கிருந்த மேசையில் வைத்தாள்.

“இது ஏ.டி.எம் கார்ட். இது பேங்க் பாஸ் புக். இதுல முப்பது லட்சம் இருக்கு. நான் பிறந்ததுல இருந்து என் பத்து வயசு வர நீங்க செலவளிச்ச பணம். இவ்வளவு பண்ணி இருக்க மாட்டீங்க. ஆனா அதுக்கு வட்டி சேர்க்கனும்ல. இத கொடுக்க தான் வந்தேன். கொடுத்தாச்சு . கிளம்புறேன்”

“ஏய் நில்லு.. யாருக்கு வேணும் உன் காசு? பெத்த பிள்ளையாச்சே னு பார்த்தா ஓவரா பேசுற? நீ என்ன வேணா பண்ணிக்க யாதவ் கிருஷ்ணன எதுக்காக போலிஸ் கிட்ட பிடிச்சு கொடுத்த னு சொல்லு. அவர வெளிய எடுத்து விட்டுட்டு எங்க வேணா போ”

வள்ளியம்மை பொங்கி விட்டார். அவர் முன்னால் வந்து நிதானமாக கையை கட்டிக் கொண்டு அவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள்.

“என்ன கேள்வி கேட்க நீங்க யாரு? உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்லனும்?”

“அக்கா.. அம்மா கிட்ட என்ன பேசுறீங்க?” என்று நிலவன் கோபமாக கேட்டான்.

“யாருக்குடா அம்மா? உனக்கும் உன் தங்கச்சிக்குமா?”

“அக்கா வேணாம். உங்களுக்கு நடந்தது தப்பு தான் அதுக்காக எல்லாரையும் நோகடிக்காதீங்க”

“என்ன டா நோகடிச்சுட்டேன்? என்ன பெரிய நோகடிச்சுட்டேன். இந்த இருபத்தி ரெண்டு வருசத்துல எத்தனை தடவ நான் காய்ச்சல் வந்து அம்மா னு அழுது இருக்கேன் னு உன் அம்மாவுக்கு தெரியுமா? நான் எத்தனை தடவ கீழ விழுந்து எந்திரிச்சு காயத்தோட துடிச்சுருக்கேன் னு தெரியுமா? அதெல்லாம் விடுடா. நான் சிரிச்சா எப்படி இருப்பேன் அழுதா எப்படி இருப்பேன் னு உங்கம்மாவால வித்தியாசம் காட்ட முடியுமா?”

நிலவன் எதோ பேச வர “உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல நிலா. நடுவுல பேசி நீயும் காயப்படாத” என்று கூறி விட்டு வள்ளியம்மையிடம் திரும்பினாள்.

“நீங்க எனக்கு அம்மா வா? நீங்க எப்படி பட்ட அம்மா னு ஒரு எக்ஸாம்பிள்… உதாரணம் சொல்லட்டுமா? வாழ்க்கையில எனக்கு பிடிக்காத ஒரே சாப்பாடு எது தெரியுமா? இட்லி. இட்லிய சாப்டுறத விட பட்னியா இருக்கலாம் னு போயிடுவேன். ஆனா இங்க வந்ததும் முதல் சாப்பாடு என் தட்டுல விழுந்தது இட்லி தான். இப்போ சொல்லுங்க நீங்க எப்படி பட்ட அம்மா? பெருசா பெத்தேங்குறீங்க? பெத்த பிள்ளைக்கு எது பிடிக்கும் பிடிக்காது னு கூட தெரியாத நீங்க உங்கள எனக்கு அம்மா னு சொல்லிக்கிறீங்க?”

வள்ளியம்மைக்கு கண்ணீர் பெருகியது. அதே நேரம் ஜீவிதாவுக்கும் லேசாக தொண்டை அடைத்தது. தொண்டயை செறுமி அதை சரி செய்து கொண்டாள்.

சேந்தன் அமைதியாக நிற்க “நீங்க என்னவோ அதிகாரம் பண்ணுறீங்களே… நீங்க எனக்கு அப்பாவா? நான் என்ன படிச்சு இருக்கேன் னு தெரியுமா? நான் இந்த உலகத்துல யாரு தெரியுமா? பெத்த அம்மாவ விட அப்பாவுக்கு தான் ஆயிரம் கடமை இருக்கு. எத நிறைவேத்துனீங்க? உங்க மக முகம் வாடுதுனு கோபம் பொத்துகிட்டு வருது.. எத்தனை நாள் கதறி இருப்பேன் என்ன கூட்டிட்டு போங்க னு. அந்த கதறல கால்ல உதச்சுட்டு போனீங்க. இப்போ எங்க இருந்து வந்துச்சு அப்பா உரிமை?” என்று கேட்டு விட்டு மேலும் தொண்டையை சரி செய்து கொண்டாள்.

“உங்கள எல்லாம் என் குடும்பம் னு நினைச்சது பத்து வயசுக்கு முன்னாடி. இப்போ நீங்க எல்லாரும் எனக்கு யாரோ. எந்த உரிமையில என்ன திட்டுறீங்க? என்ன கேள்வி கேட்குறீங்க? பெத்தா மட்டும் போதுமா? வளர்க்கனும். பெத்தவங்க எல்லாம் அப்பா அம்மாவா ஆகிட முடியாது. அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் நீங்க தான்”

வள்ளியம்மை சேந்தன் இருவரையும் பார்த்து கூறி விட்டு நிலவன் பக்கம் திரும்பினாள்.

“நீ கேட்குறல… நீ கேட்ட கேள்விக்கு இன்னைக்கு பதில் சொல்லுறேன். நான் யாரு தெரியுமா? நான் படிச்ச படிப்பு என்ன தெரியுமா? ஆர்டிஃபீஸியல் இன்டலிஜன்ட். இவங்களுக்கு புரியாது. உங்க ரெண்டு பேருக்கும் புரியும்ல? இருபது வயசுக்குள்ள எம்.இ முடிச்சு எனக்கு தேவையான எல்லாத்தையும் படிச்சு முடிச்சேன். அப்போ நான் யாரு? ஒரு ஜீனியஸ். இந்த குடும்பம் ராசி இல்ல னு தூக்கி போட்ட நான் வருசத்துக்கு அரை கோடி சம்பாதிக்கிற ஜீனியஸ். எங்க வேலை பார்க்குறேன் தெரியுமா? பெங்களூர். இஸ்ரோ.. ஸ்பேஸ் ல வொர்க் பண்ணுறேன். அதுவும் கடந்த மூணு வருசமா வொர்க் பண்ணுறேன். பெங்களூர் ல என்னோட வீட்டுல என் பெட்ரூம் சைஸ் இந்த மொத்த வீட்ட விட பெருசு. இப்போ சொல்லு. என் அடையாளம் உங்கள தலை குனிய வைக்கிற மாதிரியா இருக்கு? அப்புறம் ஏன் டா உன் குடும்பம் என்ன பெத்ததே அபசகுனமா நினைக்குது?”

கடைசி வார்த்தையில் ஜீவிதா உடைந்து விட்டாள்.

“வாய திறந்து இப்போ பேசுடா… எத்தனை நாள் எத்தனை மாசம் எத்தனை வருசம்… இவங்க கால பிடிச்சு கதறுனேன். என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க னு. இரக்கமே இல்லாம என் கைய எடுத்து விட்டுட்டு திரும்பி கூட பார்க்காம போவாங்க டா”

ஜீவிதாவின் கண்ணில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது.

“நீ யோசிச்சு பாரேன். வெறும் மூன்றரை வயசு பச்ச மண்ணு. நம்ம சுஜி தங்கச்சி ஸ்ருதி வயசு தான் அப்போ எனக்கு. அந்த பச்ச மண்ண ஒரு வீட்டுல வேலைக்காரியா அனுப்பிட்டாங்களே.. இவங்கள்ளாம் மனுசங்களா? மூன்றரை வயசுல நான் எப்படி துடிச்சுருப்பேன்? அத பத்தி எல்லாம் இவங்களுக்கு என்ன கவலை? அவங்களுக்கு அவங்க பொண்ணு நல்லா இருக்கா. நான் எப்படி போனா என்ன? இதுக்கு இவங்க அந்த மூணு வயசுல கழுத்த திருகி என்ன கொண்ணு போட்ருக்கலாம்”

கடைசி வார்த்தையில் கோபம் தாங்காமல் மேசையில் ஓங்கி அடித்தாள்.

நறுமலர் தாங்க முடியாமல் வாயை மூடிக்கொண்டு விசும்ப ஆரம்பித்தாள். வள்ளியம்மையின் கண்ணில் கண்ணீர் கொட்ட தரையில் அமர்ந்து விட்டார்.

“அய்யோ அழாத மா… உன்ன அழ வச்சுட்டேன் னு உங்க பாட்டி என்ன கழுத்தறுத்து கொண்ணுடும்” என்று நறுமலரிடம் கூற நறுமலரின் அழுகை அதிகமானது.

“நீ அழுதா உன் அண்ணனுக்கு மனசு துடிக்குது பாரு. நான் இத்தனை வருசம் அழுதனா சிரிச்சனா னு கூட தெரியாத குடும்பம் இன்னைக்கு உன் அழுகைக்கு துடிக்குது பாரு. அழாத மா அழாத… அழாத னு சொன்னேன். அழாத டி”

கடைசி வார்த்தையில் ஜீவிதா சத்தத்தை கூட்ட நறுமலர் பயந்து போய் பார்த்தாள்.

“இப்போ எதுக்கு டி அழுகுற? என் கஷ்டத்த நினைச்சா? அதுக்கு நீ ஏன் அழனும்? நான் தான் அழனும். நீ இவங்க வயத்துல வந்ததும் நான் உனக்கு பிரச்சனையா இருக்கேன் னு அத்த வீட்டுக்கு வேலைக்காரியா அனுப்பிட்டாங்க. இத்தனை வருசமா நான் மரண வேதனையில இருந்துருக்கேன். சொல்லு என்னால உனக்கு ராசி இல்லாம போச்சா? உன்னால எனக்கு ராசியில்லாம போச்சா?”

நறுமலருக்கு அழுகை பொங்கியது.

“சொல்லுடி… யாரு யாருக்கு கெட்டத கொண்டு வந்தா? நீ பிறந்ததால நான் நரகத்துல வாழ்ந்துருக்கேன். நியாயமா பார்த்தா உன் மேல எனக்கு கொலை வெறியே வரனும். ஆனா வரல. நீ அப்போ எதுமே தெரியாத கரு மட்டும் தான். இதோ இவன் அக்கா அக்கா னு கூடவே சுத்துன அறியாப்பிள்ள. ஆனா மத்தவங்க? எல்லாம் தெரிஞ்ச பாவிங்க. தெரிஞ்சே என்ன வதச்ச அரக்கிங்க”

வள்ளியம்மையின் அழுகை கூட நறுமலரின் அழுகையும் கூட ஆரம்பித்தது.

“இவ உங்க வயித்துல இருந்தப்போ இவ தான் முக்கியம் னா எனக்கு விசத்த கொடுத்து கொன்னுருக்கலாமே? அத விட்டுட்டு ஏன் மா இப்படி என்ன தண்டீச்சீங்க? நான் அப்படி என்ன மா பாவம் பண்ணிட்டேன்? மூணு வயசு பிள்ளய தானா குளிக்க சொன்னா குளிக்கும் தானே துணிய துவச்சுக்க சொன்னா எப்படி தெரியும்? நான் பண்ணேன் மா. இன்னைக்கு வர என் கை எத்தனை சோப்பால வெந்து போயிருக்கு னு உங்களுக்கு தெரியுமா? மூணு மாசத்துக்கு ஒரு தடவ வந்து ஒரு மணி நேரம் பார்த்துட்டு போவீங்களே. அப்போலாம் என்ன விட்டுட்டு போகாதீங்க னு கதறுனனே. ‌ஒரு தடவ கூடவா உங்க மனசு இளகவே இல்ல?”

வள்ளியம்மை வாய் விட்டு அழுக ஜீவிதாவின் குரலும் உடைந்தது.

“பத்து வயசுல பெரிய பொண்ணானனே. வந்து ஏன் னு பார்த்தீங்களா? என்னனே புரியாம அம்மா அம்மா னு அழுதனே. எங்க மா போனீங்க? ஏன் வரல? இதோ உங்க மகளுக்கு அப்போ காய்ச்சல். அவள விட்டுட்டு என்ன பார்க்க வர கூட முடியாது னு சொல்லிட்டீங்க. அவ தான் வேணும் னா என்ன பெத்துருக்க வேணாமே? இல்ல பெத்த கையால கொண்ணுருக்கலாமே. நிம்மதியா செத்துருப்பனே. இப்படி தினமும் நெருப்புல நின்னு இருக்க மாட்டனே?

நீ சொல்லு டி. நீ பெரிய பொண்ணானப்போ உனக்கு ஒன்னும் தெரியாம அழுதப்போ இந்த அம்மா உன்ன பார்க்க கூட முடியாது னு சொல்லி இருந்தா எப்படி வலிச்சு இருக்கும்? அங்க அப்போ வெறுத்தேன் டி இந்த குடும்பத்த. அடி மனசுல இருந்து வெறுத்தேன். இவங்கள பார்க்கவே பிடிக்கல. பார்த்தாலே அப்ப பட்ட கஷ்டம் எல்லாமே கண் முன்னாடி வந்து நிக்கிது.”

நறுமலருக்கு வார்த்தைகளே வரவில்லை. கேவல் தான் வந்தது.

“இத்தனை பேரையும் விட்டுட்டு நிலா னு உன் கிட்ட பேசுறேன். உன்ன ஒரு வயசு வர பார்த்த பாசம் இன்னும் விடல. அத தவிர வேற எதுவுமே இல்ல.”

நிலவனிடம் கூறியவள் சேந்தனை திரும்பி பார்த்தாள்.

“என்ன பா நினைச்சுருக்கீங்க? மூணு மாசத்துக்கு ஒரு தடவ வந்து காச கொடுத்துட்டு போனா உங்க கடமை முடிஞ்சதா? நான் நல்லா படிச்சப்போ பாராட்ட வந்தீங்களா? இல்ல முதல் தடவ பஸ்லயும் சைக்கிள்லயும் போகும் போது பாதுகாப்பா வந்தீங்களா?”

வேகமாக நிலவன் பக்கம் திரும்பியவள் “பத்து வயசுக்கப்புறம் நான் அத்த வீட்டுல இல்ல. ஓடிப் போயிட்டேன் னு சொல்லி இருப்பாங்களே?” என்று கேட்டாள்.

நிலவன் அமைதி காத்தான்.

“ஓடி எங்க போனேன் தெரியுமா?” என்று கேட்டவள் தன் காலில் பேன்ட்டை சற்று மேலே ஏற்றி காட்டினாள்.

கணுக்காலுக்கு மேல் தையல் தழும்பு தெரிந்தது.

“இது என்ன னு பார்த்தா தெரியுதா? தையல் தழும்பு. இது ஆரம்பம். இந்த தையல் கால் முழுசுமே இருக்கு. இதோ இங்க பாரு” என்று தோளை காட்டினாள்.

“இதோ அந்த தழும்பு வயிறு வர இருக்கு. இன்னும் நிறைய இருக்கு. இது எப்போ வந்தது தெரியுமா? நான் பெரிய பொண்ணாகி உங்க அம்மா பார்க்க கூட வராம இருந்தப்போ அந்த வீட்ட விட்டு போகனும் னு நினைச்சிட்டேன். அத நினைச்சுட்டே ரோட்டுல போனப்போ ஒரு லாரி என்ன அடிச்சு தூக்கி போட்ருச்சு.

அந்த நிமிஷம் என்ன நினைச்சேன் தெரியுமா? ஹப்பாடா.. சாக போறோம் இனி யாருக்கும் பிரச்சனை இருக்காது னு தான் நினைச்சேன். பத்து வயசு பிள்ள லாரில அடி பட்டு விழும் போது செத்தா நிம்மதி னு நினைச்சா னா அவ எவ்வளவு வலிய அனுபவிச்சு இருப்பா? தாங்கவே முடியாம ஒரு வலில நான் செத்துடனும் னு நினைச்சேன்டா”

கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டாள்.

“ஆனா.. லாரி தூக்கி எறியும் போது அம்மா னு தான்டா கத்துனேன். அப்ப எங்க போனாங்க உன் அம்மா? துடிச்சப்போ தூக்கிட்டு போக வரலயே உன் அப்பா. செத்து போகனும் னு நினைச்சப்போ எங்க இருந்தீங்க எல்லாரும்? இப்போ மட்டும் வந்து எனக்கு‌ அட்வைஸ் பண்ணுறீங்க?

நான் நோகடிக்குறனா? நான் அனுபவிச்ச வலில இது பாய்ண்ட் ஒன் பர்ஸண்ட் கூட கிடையாது. இதுக்கு இவங்க என்ன ஒரு அனாதை ஆசிரமத்துல சேர்த்து இருக்கலாம். எனக்கு‌ யாருமே இல்ல னு நினைச்சுட்டு நிம்மதியா வாழ்ந்து இருப்பேன். அந்த நிம்மதி கூட கிடைக்கல.

எனக்கு அப்பா அம்மா தம்பி தங்கச்சி எல்லாரும் இருக்காங்க. பேரு சொல்ல குடும்பம் இருக்கு. ஆனா நான் சாக கிடந்தா யாரும் என்ன தேடி வர மாட்டீங்க. அப்புறம் எதுக்கு இந்த குடும்பம்? எதுக்கு நீங்கள்ளாம் எனக்கு ?

யாரும் வேணாம். நீ , நீ , நீங்க , நீங்க யாருமே வேணாம். உங்கள இப்போ நான் பார்க்க வந்தது இந்த பணத்த கொடுக்க தான். இந்த பணம் நீங்க என்ன பத்து வயசு வர படிக்க வச்சதுக்கு. என்ன பெத்ததுக்கு. உங்க பேர என் சர்டிபிகேட் ல போட்டதுக்கு.

மத்தபடி நீங்க பாசம் அன்பு கண்டிப்பு வளர்ப்பு னு எதுவுமே எனக்கு கொடுக்கல. அதெல்லாம் விலை மதிக்க முடியாதது னு உங்க மகளுக்கு தான் அள்ளி கொடுத்தீங்க. அதுனால அத தவிர இதுல எல்லா பணமும் இருக்கு.‌ நீங்க எடுத்துகிட்டாலும் சரி. இல்ல தூக்கி குப்பையில போட்டாலும் சரி. நான் கவல பட மாட்டேன். இதோட உங்களுக்கும் எனக்கும் இருந்த எல்லாமே முடிஞ்சு போச்சு”

“ஏன் கா இப்படி பேசுறீங்க? அம்மா பாவம் கா. தினமும் உங்கள நினைச்சு தான் வருத்தப்படுவாங்க” என்று நறுமலர் அழுகையுடன் கூற “இப்போ என் கண்ணு முன்னால இவங்க அழும் போது கூட எனக்கு தாய் பாசம் வரலயே நறுமலர். எனக்கு தெரியாம அழுறது பத்தி பேசி என்ன ப்ரயோஜனம்?” என்று கேட்டாள்.

“அப்படிலாம் இல்ல கா. அம்மாவும் அப்பாவும் உங்கள பத்தி பேசிட்டே இருப்பாங்க கா” என்று நிலவன் கூற ஜீவிதா ஒரு மூச்சு விட்டாள்.

“ஒரு விசயம் நடக்கும் நிலா. இந்த பொங்கல் தீபாவளி எல்லாமே வரும். அப்போ அத்த அவங்க மகளுக்கு நல்ல துணியும் எனக்கு விலை கம்மியா ஒன்னும் எடுத்து கொடுக்கும். எனக்கு பல வருசமா அது தெரியாது. ஆனா அந்த துணிய சந்தோசமா அன்னைக்கு போட்டுக்குவேன். அந்த பொங்கல் எல்லாம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு அத்த அவங்க மகளுக்கு எடுத்து கொடுத்த விலையிலயே இவங்க எனக்கு ஒன்னு எடுத்துட்டு வருவாங்க. சத்தியமா இது வரை இவங்க எடுத்துட்டு வந்த எந்த டிரெஸ்ஸும் நான் போட்டதே இல்ல. ஒன்னும் பெருசா இருக்கும் . இல்லனா பத்தாது. ரெண்டயுமே தீஷா கிட்ட கொடுத்துருவேன். அவ தான் போட்டுப்பா. எனக்கு பங்சன் முடிஞ்சு வர்ர அந்த டிரஸ்ஸ பார்க்கவே பிடிக்காது.

இங்க பண கஷ்டம் னு எல்லாம் பொய் சொல்லாத. சத்தியம் பண்ணி சொல்லு உங்களுக்கு எடுக்கும் போது எனக்கும் சேர்த்து டிரஸ் எடுக்கல னு? உங்களுக்கும் எனக்கும் ஒன்னா தான் எடுத்து இருப்பாங்க. ஆனா அத பங்சனுக்கு முன்னாடியே கொடுக்க மனசு வராது. வந்து என்ன பார்த்துட்டா இவ காய்ச்சல் ல விழுந்துடுவாளே. அதுனால நீங்க எல்லாம் சந்தோசமா எல்லா விழாவும் கொண்டாடி முடிச்சுட்டு கடைசியில போனா போகுது னு எனக்கு டிரெஸ்ஸ கொண்டு வருவீங்க.

நினைச்சு பார்க்கவே கேவலமா இல்ல? ஆனா இந்த வகையில அத்தைக்கு கோவிலே கட்டலாம். அத்தைக்கு அன்னைக்கு பணம் இல்ல. இருந்திருந்தா என்னயும் நல்லாவே பார்த்து இருக்கும். எவ்வளவு பண பிரச்சனை வந்தாலும் எனக்கு ஒரு டிரஸ் வாங்காம இருக்காது. வெறு நூறு ரூபாய்க்கு வாங்கினாலும் அது எனக்கு அவ்வளவு சந்தோசத்த கொடுக்கும்.

நான் கீழ விழுந்துட்டா என்ன திட்டும். ஆனா கால் சரியாகுற வர என்ன தூக்கிட்டு தான் நடக்கும். என்ன பிடிக்கல னு எல்லாம் இல்ல. அவங்களுக்கு என்னயும் வச்சு வளர்க்குற அளவு வசதி இல்ல. அந்த கோபத்த தான் அடிக்கடி என் மேல காட்டும். அது முதல்லயே புரிஞ்சு இருந்தா நான் அத்தய விட்டு இந்த வீட்டுக்கு வரேன் னு அழுதுருக்க மாட்டேன்.

இவங்க வந்து பார்த்துட்டு போனதும் எனக்கு காய்ச்சல் வந்துடும். என்ன திட்டிக்கிட்டே கூட மாத்திரைய கொடுத்து தூங்க வைக்கும். அலர் அத்த மட்டும் இல்லனா என்ன ஆகி இருக்குமோ…

உங்க முகத்துல காச விட்டு எறிஞ்ச மாதிரி அத்த மேல என்னால எறிய முடியாது. அத்தைக்கு நான் கடம பட்டு இருக்கேன். ராசி இல்லாதவ னு நீங்க தூக்கி எறிஞ்ச பொண்ண பாதுகாத்து வளர்த்தவங்க அவங்க. நான் வேலைக்கு போனதும் முதல் மாச சம்பளத்துக்கு அப்புறம் இன்னைக்கு வர தீஷா படிப்பு செலவு என்னோடது.

அத்த வேணாமே வேணாம் னு சொன்னாங்க. நான் கெஞ்சி சம்மதிக்க வச்சேன். அவங்க கிட்ட உங்களுக்கு என்ன பத்தின எதுவும் சொல்ல கூடாது னு கேட்டுகிட்டு தான் தீஷாவ படிக்க வச்சேன்.

இன்னைக்கும் அவளோட முழு செலவும் என்னோடது தான். அவள என் மனசு தங்கச்சியா ஏத்துகிச்சு. அத்தைய அம்மாவா பார்க்க சொன்னா கூட பார்ப்பேன்.

பிடிக்கலனாலும் எப்படி பழகனும் னு மரியாதை னா என்ன னு சொல்லி கொடுத்தது அத்த தான். பாசம் னா என்ன அக்கா தங்கச்சி போட்டினா என்ன னு சொல்லி கொடுத்தது தீஷா தான். நான் பெரிய பொண்ணானப்போ எனக்கு ஒரு சேலைய கட்டி அவங்க நகைய போட்டு அலங்கரிச்சு பார்த்தாங்க அத்த.

அப்போ புரிஞ்சது நான் அந்த இடத்துல பாரமா இருக்கவும் தான் அத்த இப்படி பேசுது. இல்லனா பாசம் இல்லாம இப்படி அலங்கரிக்குமா னு… அத்த சுமைய குறைக்க தான் வீட்ட விட்டு போகனும் னு நினைச்சேன். அதுக்கு தான் அந்த ஆக்ஸிடண்ட் ஆச்சு.

நடுரோட்டுல துடிச்சுட்டு இருந்தப்போவே நான் செத்து இருக்கனும். ஆனா கடவுள் உன் சோதனை காலம் எல்லாம் முடிஞ்சது. இனி உன் வாழ்க்கை சொர்க்கம் னு எழுதி வச்சுட்டார். இந்த வீட்டுக்கு வர்ர வர சொர்க்கத்துல தான் இருந்தேன். இனிமேலும் அங்க தான் இருப்பேன். இந்த நரகம் எனக்கு வேணாம்.”

தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.

“அக்கா போகாதீங்க கா” என்று நறுமலர் வேகமாக வந்து அவள் கையை பிடிக்க வர சட்டென விலகினாள்.

“என்ன தொடாத. எனக்கு பிடிக்கல”

ஜீவிதா இவ்வளவு நேரமிருந்த இளகிய தன்மையை விட்டு விட்டு இரும்பை ஒத்த குரலில் சொன்னாள்.

நறுமலர் அழுது கொண்டு நிற்க ஜீவிதா நேராக வாசல் நோக்கி நடந்தாள். அப்போது தான் வாசலில் ஒருவர் நிற்பதை கவனித்தாள். அவரை பார்த்ததும் ஜீவிதா அதிர்ச்சியுடன் நின்று விட அடுத்த நொடி கன்னத்தில் அறை வாங்கி தரையில் விழுந்தாள்.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

அன்பின் அரசனே…. 30

அஸ்தமிக்கும் பொழுதுகள் 11