in , ,

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 18

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி

அத்தியாயம் : 18

ஸ்ரீதரின் பேச்சைக் கேட்ட அஸ்வினி ஒரு கணம் திடுக்கிட்டாள். ‘அச்சச்சோ இவங்க கூடப் போனால் பிறகு ரிஷி ம்ஹூம் அந்த ஏசிபிக்கு பதில் சொல்ல முடியாது பேசாமல் உறக்கம் வருதுனு சொல்லி ஆவ்னு வாயை பிளந்திட வேண்டியது தான்’ மனதிற்குள் நினைத்தவள் அது போல செய்திட முனைந்தாள்.

“இல்லை ஸ்ரீதர் எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் தூங்கப் போறேன் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க!” வராத கொட்டாவியை வர விட்டுக் கொண்டு எழுந்தாள்.

“ஏன் அஸ்வினி அதான் காலையில் நல்லா தூங்கி எழுந்தியே பிறகென்ன வாடா போயிட்டு வரலாம் நீ கேட்ட ஐஸ்கிரீம், பாப் கார்ன் , சாக்லெட், ஜூஸ் எல்லாம் வாங்கித் தரேன்!” என்று ஆசை காட்டினான்.

“ஏய் ஸ்ரீ என்னை என்ன பச்சை குழந்தைனு நினைச்சியா நான் வருங்கால ஏசிபி ஒழுங்காக பேசு!” கன்னத்தை தோளில் இடித்துக் கொண்டு எழுந்து சென்றாள். அவளது பேச்சை கேட்டிருந்த அனைவரும் சிரித்தனர்.

“ஏன்டி தூக்கம் வருதுனு சொல்லிட்டு தூங்காமல் நைட் புள்ளாக யூ டியூப்ல படம் பார்த்திட்டு காலையில் கிடந்து தூங்குவ இதில் ஏசிபியா?, நல்லா தான் கனவு காணுற. உன்னோட பகல் கனவு பலிக்காதுடி!”

தாயாரை  பார்த்து முறைத்த அஸ்வினி தந்தை அருகில் சென்றாள். ” பாரு ராகவா உன் பொஞ்சாதி என்ன சொல்றானு. இப்படி ஒரு வாயாடி உனக்குத் தேவையா?, பேசாமல் காயுவை டைவர்ஸ் பண்ணிடு. நான் உனக்கு ஏத்த மாதிரி மாடல் பிகராக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!” மகளது பேச்சைக் கேட்ட தந்தை விடாமல் சிரித்தார். அதைப் பார்த்த தாயார் துடைப்பத்தை எடுத்து துரத்தினார் அவள் வீட்டை சுற்றி ஓட ஆரம்பித்தாள்.

“ஏய் காயு இதெல்லாம் ரொம்ப தப்பு வயசான காலத்தில் இப்படி ஓடி விழுந்து வச்ச அப்புறம் உனக்குத்தான் கஷ்டம். பாவம் என் ராகவன் ஒழுங்கா நின்னுடு!” தாயாரை சீண்டிக் கொண்டு ஓடினாள்.

“கீழே விழுந்தால் நாங்கப் பார்த்துப்போம். நீ ஒண்ணும் கவலைப்பட வேணாம். ஆனால் இன்று உனக்கு ரெண்டு கொடுக்காமல் விடப் போவதில்லை!” விடாமல் துரத்தினார்.

“இளங்கன்று பயமறியாது காயு ஏதோ பாவம் பார்த்து உபதேசம் பண்ணினால் ரொம்ப தான் எகிருற. அப்படியே நில்லு காயு பேபி என் காயு செல்லம்!” மகளது பேச்சைக் கேட்டவர் படுக்கட்டில் அமர்ந்து விட்டார்.

ஓடிச் சென்று அவரது முகத்தை துப்பட்டாவினால் துடைத்து விட்டாள். “சாரி காயு டார்லிங்!, இனிமேல் உன்னை இப்படி துரத்த விட மாட்டேன். வேணும்னா ரெண்டு அடி கொடுத்துக்கோ நான் வாங்கிக்குறேன்!” தன்னுடைய வலது கரத்தை தாயாரை நோக்கி நீட்டினாள்.

துடைப்பத்தில் இருந்த இரண்டு குச்சியை எடுத்து மகளின் விரலைப் பார்த்து  ஓங்கிய அடுத்த கணம் ஸ்ரீதரின் கைவளைவிற்குள் வந்திருந்தாள் அஸ்வினி.

” என்ன அத்தை இது இதுக்கு போய் இப்படி பண்ணுறீங்க. அஸ்வினி கிட்ட பேசும் போதும் சிரிக்கும் போதும் அவள் அடிக்கிற கலாட்டாவ பார்க்கும் போதும் எவ்வளவு சந்தோசமாக நிறைவா இருக்கும் தெரியுமா? நீங்கள் எல்லோரும் மறுபடியும் போன பிறகு இங்கு இருக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். அவள் இங்கு இருக்கும் வரையிலாவது அவள் விருப்பம் போல் இருக்கட்டும் அத்தை !” மெய்யான வருத்தத்துடன் சொன்னான்.

” அப்போ நீயே உன் அஸ்வினிய வச்சுக்கயேன். இந்த வாயாடிய கட்டி மேய்க்க உன்னால் மட்டும் தான் முடியும்!” கேலியாகத் தான் அவளது தாயார் சொன்னார். ஆனால் நெஞ்சுக்குள்ளே வைத்து பூஜிப்பவனுக்கு இந்த வார்த்தை பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

“தாராளமாக விட்டுட்டு போங்க அத்தை. என் அஸ்வினிக்கு ஒரு குறையும் இல்லாமல் நான் பார்த்துக்குறேன்!” அவளைப் பார்த்து சிரித்தான்.

ஸ்ரீரின் தன் மீதான அன்பை நினைத்து சிலிர்த்த அஸ்வினி அவனது கரத்தை விலக்கினாள்.

” ஏய் ஸ்ரீ அப்படி எல்லாம் உங்கப் பேச்சை கேட்டு அடங்கி இங்கே இருப்பேனு நினைக்காதே என் உலகம் சற்று வித்தியாசமானது அதில் நான் எப்போதும் சுதந்திரப் பறவை தான் கூண்டுக் கிளி அல்ல. சிங்கம் போல கம்பீரமும், சிறுத்தையின் வேகமும், யானையின் தைரியமும் பெற்று தனிக் காட்டு ராஜாவாக இருக்கவே விரும்புகிறேன். …..  இங்கே உட்கார்ந்து அடுப்பங்கரை வேலை பார்ப்பதற்கு அல்ல!” சும்மா சொல்கிறாளா நிஜமாக சொல்கிறாளா என்று தெரியாமல் அவன் விழித்தான். அதைப் பார்த்துக் கண் சிமிட்டியவள் தந்தையின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தாள்.

அஸ்வினியின் குறும்புத் தனமான பேச்சைக் கேட்டு இப்போது துரத்துவது ஸ்ரீதரின் முறையானது.

” ஏய் நான் ஈவ்னிங் தான் குளிச்சு ப்ரெஷ் ஆனேன் இப்போ அத்தை மருமகன் இருவராலும் என்னுடைய மேக்கப் ,பவுடர், கிரீம் எல்லாம் போச்சு.  முடி எல்லாம் பறக்க வியர்வை பிசு பிசுப்புக்கள் வர ஆரம்பித்து விட்டன. உடனே சென்று ஒரு குளியல் போட்டு சந்திரிகா சந்திரிகா ஆ.ஹஹா ஓஹஹோ என்று ஒரு ஆட்டமுடன் தூங்கப் போறேன்!” என்றாள் கரங்கிக் கொண்டு விளம்பர பாணியில். அவளது சேட்டைகளை அத்தனை நேரம் அமைதியாக ரசித்திருந்த அனைவரும் கலகலத்து  சிரித்தனர்.

அவளைப் பற்றி இழுக்க சென்ற ஸ்ரீதரிடம் மாட்டாமல் ஓடிய அஸ்வினி கதவடைத்து கீழே சொன்னதை செயலில் ஆரம்பித்தாள்..

“வயசு இருபத்தி ஒண்ணு ஆகுது இன்னும் சின்ன பிள்ளைனு நினைப்பு. எப்போ பாரு வம்பு பண்ணிட்டு இருக்கா. இவளை கட்டிக்கப் போகிற என் மருமகன் பாவம்!” மகளை செல்லமாக கடிந்த தாயார் கணவரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஏனோ அது தன்னையே சொன்னது போல உணர்ந்த ஸ்ரீதர் இதழ்களில் புன்னகையை சிதற விட்டான்.

குளியலை முடித்து வெந்தய நிற லாங் டாப்,  மெருண் நிற லகின்ஸ், துப்பட்டா அணிந்து தயாரான அஸ்வினி நேரம் பத்து மணி கடந்ததும் மெதுவாக கீழிறங்கி நேற்றைய இடத்திற்கு சென்றாள்.

வருவேன்  என்றவனை காணது போக சுற்றும் முற்றும் விழிகளை ஓட்டிக் கொண்டு நிற்கும் போது வேகமாக வந்த இரு சக்கர வாகனம் அவளருகில் வந்து நின்றது. விரைந்து எழுந்த அஸ்வினி துப்பட்டாவால் முகத்தை மறைத்துக் கொண்டு அதில் ஏறிட முயன்றாள்.

தன்னவளை பார்த்து சிரித்த ரிஷி ஒரு ஹெல்மெட்டை எடுத்து அவளது தலையில் அணிவித்து விட்டான். புன்னகையுடன் ஏறி அமர்ந்து அவனது இடையோடு கையிட்டு தோளில் முகத்தை பதித்து கண்ணாடி வழி அவனது முகத்தைப் பார்த்தாள். அவளது தலையில்  தன்னுடைய ஹெல்மெட்டை மோதி சிரித்தான்.

” என்னடா போகலாமா?”

“ம்ம்!”

வேகமாக பைக்கை கிளப்பிய ரிஷி “ரொம்ப நேரமாக காத்திருந்தியாடா!”

“ஆமாம் ஆனால் இந்த வீட்டில் இருக்கிறவங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லை சாப்பிட்ட உடனே தூங்க போகாமல் சதா அரட்டை அடிச்சிகிட்டு, என்னை சீண்டி பேசி, துரத்தி, கிண்டல் பண்ணி மறுபடியும் குளிக்க வச்சு ரொம்ப படுத்துறாங்க!” கடிந்தவளைப் பார்த்து சிரித்தான்.

“உனக்கு வெளியில் வருவதற்கு அவங்க தூங்கணுமா?”

“பின்னே எப்படி வர்றதாம்? நீங்கள் தானே சொன்னிங்க, வந்திரு நான் வெயிட் பண்ணுறேனு பிறகு எப்படி கோவப்படாமல் இருப்பது!”

“சரிடா சரி அதை விடு!” என அவளை கூலாக்கி வேறு கதைகளை சிரித்து பேசி அவளையும் கலாட்டாவாக பேச வைத்தான்.

” ஏன்டா என்னோட மாமியார வயசான காலத்தில் இப்படியாடா ஓட விடுவ, பாவம் ஓட முடியாமல் மூச்சு வாங்க உட்கார்ந்திட்டாங்க சரியான வாயாடி!” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“உங்களுக்கு எப்படித் தெரியும் நீங்க பார்த்திங்களா!” கண்ணாடி வழி அவனது முகம் பார்த்தாள்

“ஆமாடா ரொம்ப நேரமாக உங்க சேட்டை ஓட்டம் பாட்டு கரக்கம் துரத்தல் உன்னுடைய குளியல் எல்லாம் பார்த்துட்டு தான் இருந்தேன்!” அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

தன்னுடைய ஹெல்மெட்டை தளர்த்திய அஸ்வினி “குளியல்?”

“ஹாங் குளியல், ஆடை மாற்றுதல், அலங்கரித்தல் , கிளம்புதல்….!”

“ஆனால் எப்படி!” தயக்கத்துடன் கேட்டவளை பார்த்த ரிஷி “அப்படி அப்படி!” என்று வேகத்தை அதிகப் படுத்தினான்.

“ஏன்டா அது யாருடா உன்னை கடைசியாக துரத்தியது?”

“ஓ… அதுவா என்னோட ஸ்ரீதர்!” மனதில் எதுவும் நினையாமல் சொன்னாள்.

“அப்போ நான்?”

“ஹாங் என்று யோசனை செய்வது போல நடித்த அஸ்வினி நீங்கள் என் உயிர். என் எதிர்காலம். என் ஆத்மார்த்தமான காதலுக்கு சொந்தக் காரன். என் உள்ளங் கவர் கள்வன். இன்றைய காதலன்.  நாளைய கணவன்.  எனது  வாரிசுகளின் தந்தை. ஆயுசுக்கும் என்னை காவல் காப்பவன் !” மனப்பூர்வமாக சொல்லி அவனை அணைத்து முதுகில் முகம் பதித்தாள்.

அஸ்வினியின் பேச்சைக் கேட்டிருந்த ரிஷி அப்படியே மெய் மறந்த நிலையில் அவளது கரத்தை எடுத்து நெஞ்சோடு அழுத்தி தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் சாலை ஓரத்தில் நிறுத்தி சூடான சாயா வடை சமோசா வாங்கி கொடுத்து தானும் உண்டு முடித்து மறுபடியும் பயணத்தை துவங்கினான்.

தன் இடையை கட்டிக் கொண்டு முதுகில் முகத்தை பதித்து இருந்தவளை பார்த்த ரிஷியின் உள்ளம் தடதடக்க ஆரம்பித்தது.

“வினிம்மா!, வினிச் செல்லம் !”

“என்ன ஏசிபி சார்…!”

“நான் பாவம் இல்லைடா கொஞ்சம் நகர்ந்து உட்காருடா!”

என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தவள் புரிந்ததும் நாணி அவனது முதுகில் அடித்தாள்.

பின்புறம் சற்று நகர்ந்து அமர்ந்து கம்பியை பற்றிக் கொண்டு சுற்றிலும் விழிகளை சுழற்றிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்த்த ரிஷி தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

‘ஏண்டா அறிவு கெட்டவனே அவளே ஒண்ணும் பீல் பண்ணாமல் எவ்வளவு அழகா சாய்ந்து அணைச்சிட்டு இருந்தா இவரு பெரிய புத்தரு மாதிரி உபதேசம் பண்ணி துரத்தி விட்டுட்டு இப்போ ஏங்குறாரு’

“வினிம்மா!”

“என்ன ஏசிபி சார்!, நான் தான் விலகி வந்திட்டனே பிறகென்ன, ஒருவேளை இன்னும் பின்னாடி போகணுமோ!”

” அதில்லடா!”

“வேறென்ன!”

“வந்து … நீ முன்பு போலவே இருடா எனக்கு ஏதோ தனியாக போறாப்ல பீலாக இருக்கு!” தட்டுத்தடுமாறி ஒரு வழியாக சொல்லி முடித்தான்.

ரிஷியின் மனதை புரிந்து கொண்ட வினி கரத்தை மட்டும் தோளில் பற்றி அப்படியே அமர்ந்திருந்தாள். அதை கண்டு பொறுக்காத ரிஷி தன்னை நோக்கி இழுத்தான். மொத்தென்று தன் மீது மோதி சரிந்தவளை பார்த்தவன் வேகமாக பைக்கை நிறுத்தினான்.

” என்னங்க இது ஏன் இப்படி வம்பு பண்ணுறீங்க. நடு ரோட்டில் அதுவும் உச்சியில் பெளர்ணமி நிலா காயும் நேரம் பார்த்து இப்படி செய்றீங்க. யாராவது பார்த்திடப் போறாங்க சீக்கிரம் பைக்கை கிளப்புங்க போகலாம்!”

வினியின் பேச்சை ஏற்காத ரிஷி பைக்கை ஓரங்கட்டி அவளை அழைத்துக் கொண்டு கடற்கரை ஓரம் நடை பயின்றான். அவனால் உணர்ச்சிகளின் தடுமாற்றத்தில் இருந்து மீள முடியவில்லை. அதே நேரம் தன்னை நம்பி வந்திருப்பவளுக்கு துரோகம் இளைக்கவும் மனம் வரவில்லை. அதனால் தான் பைக்கை நிறுத்தி விட்டு காற்றாட உலாவி மனதை கட்டுப் படுத்திக் கொள்ளப் பார்க்கிறான்.

பால் நிலா காய்ந்து கொண்டிருக்க, பக்கத்தில் பருவ மங்கை கரம் பற்றி மனதில் ஆசைகளை அடக்கி, மயக்கம் கலந்த மோன நிலையில் மென்மையாக பேசி மகிழ்ந்தவன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நடை பயின்றான்.

அவனது தொடுகை, பேச்சு, உடலில் தெரித்த அக்னியின் வீச்சு, உடலில் தோன்றிய ஒரு வித நடுக்கம் என ரிஷியிடம் தெரிந்த மாறுதல்களை கவனித்த அஸ்வினி , அவனிடம் கேட்க நாணி இரவின் தனிமை மற்றும் மனங்கவர்ந்தவனின் அருகாமைதனை ஆழ்ந்து அனுபவித்து வந்தாள்.

“என்னங்க நைட் டைம் இப்படி வருவது சரியல்ல. யாராவது பார்த்தால் தவறாக நினைச்சிடப் போறாங்க.  அப்புறம் போலீஸ்காரங்க  யாராவது வந்திடப் போறாங்க கிளம்பலாங்க!” அவனது தோளைப் பற்றி சொன்னாள்.

“நானும் போலீஸ்காரன் தான்டா பிறகும் என்ன பயம். நான் பார்த்துக்கிறேன் வா!”

சில நிமிடங்கள் நடந்த ரிஷி மனம் இயல்பாவதை போல உணர்ந்து மறுபடியும் பைக் நோக்கி சென்று பயணத்தை ஆரம்பித்தான்.

ரிஷியின் மனதை புரிந்து கொண்ட அஸ்வினி பட்டும் படாமலும் அவனோடு சேர்ந்து வந்தாள். தன்னை மறுபடியும் கஷ்டப்படுத்த விரும்பாத ரிஷி தானும் அமைதியாக காட்டிக் கொண்டான்.

அப்போது தங்களை தாண்டி வேகமாக ஒரு வாகனம் கடந்து செல்வதை பார்த்த ரிஷி’ இந்த நேரத்தில் என்ன வாகனம் இது ? ஏன் இத்தனை வேகமாக செல்கிறது? ‘ என்ற சந்தேகத்தில் அருகில் இருந்த சோதனை சாவடிக்கு தகவல் அனுப்பி பைக்கை திருப்பினான்.

“என்னாச்சுங்க ஏன் மறுபடியும் அங்கே போறிங்க?”

“கொஞ்ச நேரம் அமைதியாக இரு வினி!” வேகமாக சென்று அந்த காரோட்டியை  மடக்கி விசாரித்து காரை சோதனை செய்ய உத்தரவிட்டான். பரத்தை வரச்செய்து அஸ்வினியை அவளது வீட்டில் கொண்டு விட்டு வர சொல்லி விட்டு வேலையில் கவனமானான்.

” நாளைக்கு பார்க்கலாம் வினி சரிதானா!” சம்மதமாக தலையசைத்து கிளம்பினாள்.

மீன் கொண்டு சென்ற வாகனம் அது. உள்ளே சோதனையிட்டத்தில் மீன்களுக்கு அடியில் கஞ்சாப் பொருட்கள், தங்க கட்டிகள் என பொட்டலம் பொட்டலமாக இருந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்த ரிஷி ராஜசேகருக்கு தகவல் அளித்து இவனை கைது செய்ய ஆணையிட்டான்.

“எப்படி இத்தனை இங்கிருந்து போகும் புரியலையே!”  திகைத்த படி கேட்டான் ரிஷி

“அது வேறெங்கு இருந்தாவது கொண்டு வந்திருப்பான் விசாரணை செய்தால் புரிந்து விடும்.!”

“ஆமாம் மிஸ்டர் சேகர், இதற்கு மேலும் சும்மா விடக் கூடாது இவர்களது அராஜகத்தை இத்தோடு அடக்கி ஒடுக்கி இல்லாமல் ஆக்கி காட்டலை நான் காக்கிச் சட்டை போட்டதற்கே அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும்!” கோபத்துடன் சொன்னான்

மறுநாள் விசாரணை செய்ய சென்றனர் அவன் பதில் கூற மறுத்தான். லாட்டியை சுழற்றிய ரிஷி தன்னுடைய பாணியில் விசாரணை செய்தான் அவனும் அப்படியே சொல்ல ஆரம்பித்தான். இருவருக்கும் காவலை பலப்படுத்த சொன்ன ரிஷி வெளியேறினான்.

ஏற்கனவே வேலுவின் கைப்பேசி அவனிடம் தான் இருந்தது ஆனால் அதில் எந்த விதமான அழைப்பும் வரவில்லை. ஆனால் இதற்கு முன் கடைசியாக பேசிய விபரங்களையும் இன்றைய நபரின் பேச்சு கைப்பேசி இரண்டையும் பார்த்த போது இரண்டில் ஒன்று இங்கு தான் அதுவும் அவன் அருகில் இருப்பது போலத் தெரிந்தது. அது அண்ணனா? தம்பியா?

கன்னியா குமரி கடற்கரையோரம் காவல் பலப்படுத்தப் பட்டிருக்க எப்படி இவன் இந்த வழியாக கொண்டு வந்திருக்க முடியும். நெவர் இது வேறு எங்கோ இருந்து கொண்டு வரப்பட்டு வேறு வேறு வாகனங்களில் மாற்றி தான் வரப்பட்டிருக்கிறது. அப்போ என நெற்றியை சுருக்கி யோசனையில் ஆழ்ந்தான்.

இன்று பிடித்த வாகனம் பற்றிய விபரம் அது வந்த வழித்தடங்கள், சோதனை சாவடிகள் பெட்ரோல் பங்கு மற்றும் சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகள் அனைத்தையும் சோதனை செய்து பார்த்தான். இதே கார் போன்ற தோற்றத்தில் வேறு வேறு நிறங்களில் சென்றிருப்பது தெரிய வந்தது.

அப்படியானால் இது எப்படி இது சாத்தியம்?

விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதால் நிச்சயம் கொண்டு வர முடியாது. கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகம் இருப்பதால் முடியாது.  அப்போ ரெயில் அல்லது பேருந்து ஆட்டோ பைக்….. இப்படி போனால் யாரும் அதிக அளவில் சந்தேகப்படுவதில்லை. அத்தோடு கடற்கரைப் பகுதிகளில் காவல் இல்லாத பகுதி மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி, காட்டு பிரதேசங்களை கட்டாயம் சோதனையிட உத்தரவிடணும். அப்போது அங்கு தவறு நடக்கிறதா இல்லையா என்று தெரிந்து விடும் என்று நினைத்தான் .

“முதலில் அவர்கள் வரும் வழி தெரியட்டும் அதற்கு பிறகு அடித்து நொறுக்கி யார் என்று கண்டு பிடித்து என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடலாம் இது போல தேச துரோகிகள் யாருக்கும் தேவையில்லை!” என உதடுகள் துடிக்கச் சொன்னான்.

…..

ஹாய் பிரண்ட்ஸ் தொடர்கதைக்கான கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்,

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 17

1) 💖என்னுயிர் நீதானே 💖