in , ,

இன்று அன்றி(ல்)லை 37

தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே தெரியாமல் மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி இருந்தாள் ரம்யா. ரம்யாவின் வீட்டினருக்கு அவள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தெரிவிக்க படவில்லை. முற்றும் முழுவதுமாக ரம்யாவை தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தான் குமார். அவளிடம் மிக மிக அன்பாக நடந்து கொண்டிருந்தான். ரம்யாவுக்கு தன் கண்களை சிறிது கூட நம்ப முடியவில்லை. தன்னிடம் இவ்வளவு ஈடுபாட்டுடன் தன் கணவனால்  நடந்து கொள்ள முடியும் என்பதை அந்த பேதை அப்பொழுது தான் அறிந்து கொண்டாள். தன்னை தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

 தன்னை பார்க்க தன் வீட்டினர் யாரும் வரவில்லை என்பது அவ்வளவு இதமாக  மனதிற்கு இல்லை ரம்யாவுக்கு. தன் அம்மாவை இந்த நொடியே பார்க்க வேண்டுமென்று அவளது உடலின் ஒவ்வொரு அணுவும் துடியாய் துடித்தது. என்னதான் குமார் அன்பாக நடந்து கொள்வது போல் தோன்றினாலும் தன் மனதில் இருப்பதை பற்றி அவனிடம் சொல்வதற்கு அவளுக்கு தயக்கம் அதிகமாயிருந்தது.

 தயக்கம் என்ற வார்த்தையை சொல்வதைவிட பயம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் அவன் அவளைக் கொடூரமாக எந்தத் துன்புறுத்தலும்  செய்திருக்கவில்லை. ஆனால் எப்படியோ அவள் மனதில் பயம் என்ற ஒன்றை குமார் விதைக்க தவறவில்லை.

மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தும் ஆயிற்று.அவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள் ஓடிக்கொண்டிருந்தது.தனக்கு அடிக்கடி மயக்கம் வருவது ஏன்? உடல் சோர்வாக தோன்றுவது என்பது இயல்பான விஷயம் இல்லையே போன்ற பல கேள்விகள் அவள் மனதை கிழித்து கொண்டிருந்தது. விடை சொல்வார் தான் யாருமில்லை.

 திடீர் என்று மனதிற்குள் மின்னல் அடித்தது. ரம்யா எப்பொழுதுமே குமார் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவது வழக்கம். சில சமயங்களில் தான் சாப்பிட்டு முடித்த தட்டில் சாப்பிட வற்புறுத்தவதும் உண்டு. அசூசையாய் உணர்ந்தாலும் அவள் மறுத்ததில்லை.

ஏதோ ஒன்றை ரம்யாவின் உணவில் குமார் கலப்பதை ஒரே ஒருமுறை கண்டிருந்தாள். இது தொடர்ந்து நிகழ்கிறதா என்று ரம்யா கவனித்துக் கொண்டிருந்தாள் ஆனால் ஏனோ குமார் அதுபோன்ற செய்கையை மீண்டும் செய்திருக்கவில்லை.

 தன் சந்தேகம் அர்த்தமற்றது என்று ரம்யா அதை ஒதுக்கி விட்டாள். ஆனால் இப்போது யோசிக்கும்போது அந்த நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்க வேண்டும்… எது என்ன என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை குமார் அடிக்கடி தனது உணவில் கலந்திருக்க வேண்டும் தேவையற்ற உடல் சோர்வு மயக்கம் அதனால் தான் வந்திருக்க வேண்டும். காலம் கடந்த ஞானோதயம்.

 மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்த பின் இரண்டு மாதங்களுக்கு வேறு ஏதும் ரம்யாவுக்கு உடல் உபாதைகள் இல்லை. அதனால் மனது கொஞ்சம் அமைதி நிலைக்கு திரும்பி இருந்தது. ஆனால் அந்த அமைதிக்கு அற்பாயுள் என்பதை அவள் புரிந்து கொண்டாள், நான்காம்  மாதத்தில்.  மூன்று மாதங்களாக மாதவிலக்கு வரவில்லை என்பதற்காக ரம்யா ஒரு பெண் மருத்துவரை அணுக, அவரோ நீ மூன்று மாதங்களாய் கர்ப்பமாக இருக்கிறாய் என்று மின்னாமல் முங்காமல் தலையில் பெரிய இடியை இறக்கினார்.

 சாத்தியமில்லாத ஒன்று நிகழ்ந்திருப்பது எவ்வாறு என்பது ரம்யாவிற்கு புரியவில்லை.  ஆனால், விதி செய்த சதி என்னவென்றால் அந்தப் பெண் மருத்துவரிடம் கூட்டிச் சென்றது குமார் தான். ஏற்கனவே அவரது மருத்துவமனையில் தான் ரம்யா அனுமதிக்கப்பட்டிருந்தாள். குமாரை மீறி பெண் மருத்துவரிடம் எதையும் கேட்கவும் முடியவில்லை. வேறு மருத்துவ மனைக்கு செல்லவும் முடியவில்லை.எல்லா இடத்திலும் குமாரின் பணம் குமாரின் செல்வாக்கு, அதிகாரம் பேசியது.

 குமாரின் உடல் நிலை நன்கு தெரிந்த பின்னர் இவ்வாறு நிகழ்ந்திருக்க எந்த வழியும் இல்லை.பின்பு எவ்வாறு இப்படி?

 குமாரிடம் கதறிக் கதறி கேட்டு, அவனோடு சண்டையிட்டு, எதுவுமே பிரயோஜன படாமல் போய்விட்டது. அவள் தன் கழிவிரக்கத்தில் இருந்து வெளிவர இந்த அதிர்ச்சியிலிருந்து மீள ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.

குமாரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. குமார் மீண்டும் மீண்டும் சொல்லியது உன் வயிற்றில் வளர்வது  என் குழந்தை. இதை அழிக்க நான் விடமாட்டேன். இந்த குழந்தை எனக்கு நிச்சயம் வேண்டும்.

ரம்யா தொடர்ந்தாள், “எனக்கு இந்த சூழ்நிலையில் இருந்து எவ்வாறு வெளியில் வரவேண்டும் என்பது நிச்சயம் தெரியவில்லை. ஐந்து மாதங்களாக வளரும் கரு அல்ல அல்ல அது வெறும் கரு அல்ல, என் குழந்தை. ஆனால் அந்த குழந்தையின்  தந்தை யார்? அது குமார் அல்ல என்பது எனக்கு நிச்சயம் தெரியும். ஆனால் நடந்தது என்ன என்பது தான் எனக்கு தெரிந்திருக்கவில்லை. இன்றும் கூட அது எனக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் என்னை நானே தேற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. எனக்கு குமாரிடம் இருந்து எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. குழந்தையின் தந்தை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள என் மனம் அரித்தது. ஆனால் அதற்கான விடை குமாரிடம் மட்டுமே உண்டு. அது தெரிந்து கொள்ளாமல் குமாரை விட்டு விலகுவது சாத்தியமல்ல. அதுமட்டுமல்ல நேராக என்னிடம் எந்த ஒரு  வக்கிரத்தையும் குமார் வெளிப்படுத்தாவிட்டாலும், இரண்டரை வருடங்களில் குமாரின் நடத்தைகளின் மூலம் குமாரின் மன ஆழம் என்ன, பலம் என்ன, குமாரின் குணநலன்கள், குமார் எதுவரை செல்லக்கூடும், என்பதை பற்றிய ஊகங்கள் என் மனதில் உண்டு. இதை நான் அறிந்தும் கொண்டிருந்தேன்.குமாருக்கு வேறு வித தொடர்புகள் இருக்கலாம். சில சமயங்களில் வீட்டிற்குக்கு அடியாட்கள் வருவதை என் அறை ஜன்னல் வழியே பார்த்திருக்கேன்.

குமார் என்னை திருமணம் செய்து கொள்ள என்ன காரணம் என்று தெரியல…

மனதை என் குழந்தை, வயிற்றில் வளரும் சிசு என் குழந்தை என்று சொல்லி மட்டுமே  தேற்றிக் கொண்டேன். ஆனாலும் மன உளைச்சல், என் உடலை வெகுவாக பாதித்தது. ரத்த அழுத்தம், ஏறியது.

குமார் தனது வேலையை விட்டு விட்டதாக ஒருநாள் வீடு வந்ததும் சொன்னார். ஏன் என்றெல்லாம் என்னால் அவரிடம் கேட்க முடியாது.

 எங்கேனும் ஒரு வழியில் உண்மையை தெரிந்து கொள்ளவும் நான் தவித்தேன்.

ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் வளைகாப்பு என்று என் வீட்டினரை அழைத்து இருந்தான் குமார். என் வீட்டினருக்கு நிச்சயம் பெரிய அதிர்ச்சி. இத்தனை நாளாக நான் கர்ப்பமாக இருப்பது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கவில்லை. என்னாலும் சொல்ல முடியவில்லை… ஏன் என்றால் அது அப்படித்தான்…

ஆனால் அண்ணா அண்ணியை அழைத்துக்கொண்டு நிச்சயம் வருவதாகவும், குமார் வீட்டில் யாருமே இல்லாததால் பிரசவத்திற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் என் அம்மா  ஸ்திரமாக இந்தமுறை பேசிவிட்டார். குழந்தை நல்லபடியாக வெளிவரவேண்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ குமாரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இத்தனை நாளில் அவருக்கு ஒன்று புரிந்திருந்தது என் மன பிரச்சனைகளைப் பற்றி யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ள மாட்டேன். அது எனக்கு நானே வைத்துக்கொள்ளும் சூனியம். இதுபற்றி வெளியில் நான் யாரிடமாவது சொன்னால் அவர்கள் நிச்சயம் எனது நடத்தையை பற்றி தப்பான அபிப்ராயம் கொள்வார்கள். இதே வார்த்தையை சொல்லி குமார் என்னை மிரட்டவும் செய்தார்.

உள்ளுக்குள் எல்லாவற்றையும் முழுங்கிக்கொண்டேன்.

ஏனென்றால் எனக்கு இதுவரை குழந்தையின் தந்தை பற்றி தெரிந்திருக்கவில்லை.

கடவுள் ஏனோ எனக்கு சகாயம் செய்ய நினைத்திருப்பார் போலும்… வளைகாப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. வீட்டில் உள்ளறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ பேசும் சப்தம் கேட்டு விழிப்பு தட்டியது. நான் தூங்கி கொண்டிருந்த அறைக்கு அடுத்த அறையில் குமார் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். குமாரின் நண்பன் சொன்னது இதுதான்… “நீ சொன்னது மாதிரி உனக்கு ஒரு குழந்தைக்கு அப்பா என்னும் பெயரை உலகிற்கு முன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டேன். பிறக்கப் போகும் குழந்தை எப்படி உனக்கும் எனக்கும்  சொந்தமோ, எப்படி அந்த குழந்தை உன் பெயரை இனிஷியல்லா போட்டுக்கிட்டு உலகத்திற்கு முன்னாடி வலம் வருமோ, அதே மாதிரி  உன் பொண்டாட்டியும் நாம ரெண்டு பேருக்கும் சொந்தம். அவள நீ நிச்சயம் என்னோட பங்கு போட்டுக்கணும். அவள் வேணும்னா உன்னோட பெயரை தன் பெயரோடு சேர்த்துகட்டும்.   ஆனா படுக்கையிலே அவ எனக்கு மட்டும்தான் சொந்தம்…அவளுடன் இரவு என் வெகு நாளைய கனவு “ரம்யாவுக்கு கனவோ என்று தோன்றினாலும் அந்த வார்த்தைகள் நிஜம்தான்.

அறையிலிருந்து வெறும் குரல் மட்டும்தான் கேட்டிருந்தது ரம்யாவுக்கு.தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவளுக்கு ஒரு ஊகம் உண்டு .

நிச்சயம் பேசிக்கொண்டிருக்கும் ஆணின் உயிரணு தன்னுள் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அந்த நபர்  குமாரின் நெருங்கிய நண்பனாக இருந்திருக்க வேண்டும். குமாருடன் பேசிக்கொண்டிருந்த நபரின் குரலை ரம்யா அன்று வரை கேட்டதில்லை. இது வேறு யாரோ புது நபர். தான் யாராலும்   தாழ்த்தி நடத்தப் படவில்லை என்று அவள் மனம் அடித்து சொன்னது.

 குழந்தை பிறப்பதற்காக மட்டுமே குமார் தனது மனைவியை பங்கு போட்டுக் கொள்ளாமல் காத்திருக்கிறான் என்பது ரம்யாவிற்கு தெளிவாயிற்று. அந்த நிமிடம் வயிற்றில் இருக்கும்  குழந்தைக்கு ரம்யா பலகோடி முறை  நன்றி  சொன்னாள்.

ரம்யாவின் உடல் சூறையாடப் படாமல் காப்பாற்றிக் கொண்டு இருந்தது அந்த குழந்தைதான். கர்ப காலம் அவளை காப்பந்து செய்து கொண்டிருக்கிறது.

ரம்யா எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவள் மனம் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

வளைகாப்பு முடிந்து எப்பொழுது அம்மா வீட்டுக்கு செல்வோம் என்றே காத்திருந்தாள்.

 ஒருமுறை இந்த வீட்டை விட்டு சென்று விட்டால் மீண்டும் இங்கு வராமல் இருப்பது எவ்வாறு என்று அவள் மனம் தீவிரமாக சிந்தனை செயல் ஆயிற்று. குமார் எனும்  அசுரனிடம் மாட்டிக்கொண்டு விட்டேன் தப்பும் வழி சொல்லு கடவுளே!என்று என் மனசு வேண்டாத நாள் இல்லை…

அந்த நாட்களை மீண்டும் உணர்ந்தவளுக்கு உடல் முழுவதும் வியர்வையில் நனைந்தது.

ஆனந்த் குறுக்கிடவில்லை. வலிக்க வலிக்க அவள் மன காயத்தை சரி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் அவன். அவள் மனதில் உள்ளவை அனைத்தும் வெளியே வராவிட்டால் அவளால் இந்த விஷயங்களில் இருந்து மீளவே முடியாது வாழ்நாள் முழுவதும்…என்பதை அவன் மிக நன்றாக அறிந்திருந்தான்.

ரம்யா மீண்டும் தொடரலானாள்… நல்லபடியா வளகாப்பு முடிஞ்சு என் வீட்டில் இருந்து அம்மா வந்து என்னை பிரசவத்திருக்காக  பிறந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. இப்ப நிம்மதியா உணர்ந்தேன்.

குமார் அடிக்கடி வந்து வந்து பார்த்துட்டு போனாரு. என்பதறிந்து என்னோட உடல் ஆரோக்கியத்தை விட விஷயங்கள நான் வெளியில சொல்லிட்டேனான்னு தெரிஞ்சுக்க ஆர்வம் தான் அவர் அடிக்கடி வர காரணம்னு எனக்கு தெரியும்.அம்மாவும் ஆகட்டும், அண்ணா அண்ணி ஆகட்டும், அவர்கிட்ட ஒன்னும் மூஞ்சி காண்பிக்கவே இல்லை. அதனால அவர் பண்ண அநியாயங்கள் என் காதுகளில் அன்று வரை எட்டவில்லை.

பிரசவ நாளும் வந்தது. விஷயம் தெரிந்த உடனேயே குமார் ஹாஸ்பிடல் வந்துட்டாரு. ராகவி பொறந்துட்டா. ராகவியை கையில் வாங்கின குமார் ரொம்ப அழுதாராம்… பிறகு ராகவி பிறந்த கொஞ்ச நாளிலேயே குமார் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்தாச்சு. அப்படி இறந்த பிறகு அவருடைய துரோகத்தை என்னால மன்னிக்க முடியல. அவருடைய நடத்தைப் மாதிரியே அவருடைய இறப்பும் கூட மர்மம்தான்!

அவர் இறப்புக்கு போயிட்டு யாரோ மூணாவது மனுஷன் மாதிரி இருந்துட்டு நானும் கிளம்பிட்டேன். என்னால அவருடைய நடத்தையையும் துரோகத்தையும் மன்னிக்கவே முடியாது. அவர் மனைவியா மத்த சடங்குகளை செய்ய நான் விருப்பம் கொள்ளல…என் வீட்ல எல்லோரும் என்னை குறை சொன்னாங்க.

ராகவி பிறந்த உடனேயே குமார் எல்லா சொத்தையும் என் பெயரில் எழுதி வச்சிட்டாராம். அந்த சொத்தை நான் வாங்கி அனுபவிக்கலன்னு என்னோட அம்மா வீட்டில் எல்லோருக்கும் என் மேல கோவம். இப்போதுதான் கொஞ்சநாள் முன்னாடி எல்லாத்தையும் சரி செய்தேன். என்னால கண்டிப்பா குமாரோட சொத்திலிருந்து ஒரு நயா பைசா கூட அனுபவிக்க முடியாது. பேசப் பேச அவள் கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டே இருந்தது. பேசி முடித்தவளின் கண்கள் ஆனந்திடம் எதையோ யாசித்தன.

அவளுக்கு மருந்தாய் இருக்க வேண்டிய டாக்டர் ஏனோ அவளுக்கு எந்த ஆறுதலும் சொல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு மௌனம் காத்தான். அவன் மனக் கணக்கு என்னவோ?

இனி நடக்கப்போவது என்ன தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் உண்டு. இணைந்திருங்கள்.

உங்கள் தோழி சுகீ 

.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Suba Geetha

Story MakerContent AuthorYears Of Membership

மௌனத்தின் மனசாட்சி -21

காதல் துளிரே -11