in

மௌனத்தின் மனசாட்சி -20

அத்தியாயம் 20

சென்னையிலிருந்து பத்து கிலோமீட்டர் அவுட்டோரில் அந்த தோப்பு இருந்தது. யாரோ ஒரு விஐபியின் பண்ணை வீடும் தோப்பும். தோப்பில் இருந்து வெளியே வரும் பாதை மெயின் ரோட்டில் இணைந்தது. மெயின் ரோடு சற்று மேடாகவும், தோப்பும் அதனைச் சுற்றியுள்ள இடமும் சற்று பள்ளமாக இருந்ததால், பாதையும் சற்று சரிவாகவே இருந்தது.

தோப்புக்கு, ரோட்டுக்கும் இடையில் உள்ள தூரம் நிச்சயம் ஐம்பது  மீட்டருக்கு மேல் இருக்கும். தோப்பின் ஆரம்பத்தில் இருந்த மிகப் பெரிய புளிய மரத்தில் அந்த கார் மோதி நின்றது. முன் பாகம் முழுவதும் சிதிலடைந்து இருந்ததால் உள்ளிருந்த ஆளின் முகம் நன்றாக நசுங்கி விட்டது.

நன்றாக வெளிச்சம் பரவியதும் கூட்டம் கூடிவிட, இன்ஸ்பெக்டரும் மற்ற கான்ஸ்டபிள்களும் சேர்ந்து, காரின் முன் கதவை திறந்து  பாடியை  வெளியே எடுத்தனர். முகம் அடையாளம் தெரியாததால்,  ஆள் யாரென்று கூற முடியவில்லை. உடலின் அமைப்பை பார்த்து வயது முப்பதுக்குள் தான் இருக்கும் என்று தீர்மானித்தனர்.  

யாருடைய தோப்பு என்று விசாரித்ததில் மினிஸ்டரின் பினாமி   யாரோ ஒருவரை கூறினர். பாடியை வண்டியில் ஏற்றிவிட்டு சுற்றி இருந்தவரிடம்  கேட்டுவிட்டு, இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் கிளம்பினர். வண்டியில் இருந்த ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் வைத்து இறந்தவன் பெயர் டேனியல் என்பது தெரிந்தது.

ஒரு மரம் அறுக்கும் தொழிற்சாலையும், ஏற்றுமதி தொழிலும் செய்பவர் அவனது தந்தை. இப்போது புதிதாக டூ வீலர் ஷோ ரூம் ஒன்றும் அதை சேர்ந்த பைனான்ஸ் கம்பெனி ஒன்றும் ஆரம்பித்து மகன் கையில் கொடுத்து உள்ளார்.  பிசினெஸ் பாதி நேரம், மீதி நேரம் தனது நண்பர்கள் என்று மகன் இருந்தாலும், தொழிலில் நஷ்டம் இல்லாததால் அவனைப் பற்றி பெரிதாக  அக்கறை கொள்ளவில்லை அவர். 

முந்தின நாள் இரவு வெகுநேரம் வரை வராமல் இருக்க, வீட்டில் கேட்க, அவன் அடிக்கடி இப்படி வராமல் இருப்பது வழக்கம்தான் என்று மனைவி சொல்லிவிட்டார். சரி மறுநாள் வந்து சேருவான் என்ற நினைப்பில் வீட்டில் எல்லோரும்  இருக்க, காலை 9 மணிக்கு மேல்  இந்த செய்தி இடியாக வந்து சேர்ந்தது.

பதறித் துடித்து ஸ்டேஷனில் போய் விசாரிக்க, அவர்கள் மார்ச்சுவரிக்கு. கொண்டு சென்றுவிட்டதாக தகவல் கூறினர். எப்படி என்ன என்று விசாரித்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“சார் உங்க பையன் இரவு முழுவதும் எங்க இருந்தான்னு தெரியுமா…?”

”தெரியல சார். அவன் அடிக்கடி இப்படி பிரெண்ட்ஸ் கூட வெளியில தங்கிடுவான், அதனால நாங்க அதை பெருசா கவனிக்கிறது இல்லை.  எப்படி சார் இப்படி ஆச்சு,?”

“ரோட்டு மேல போயிட்டு இருந்த காரை பின்பக்கம் ஏதோ ஒரு வண்டி மோதி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இடித்துக்கொண்டே சென்று அந்த மரத்தில் மோதி இருக்க வேண்டும். எப்படி என்பது விளங்கவில்லை…? ஆனால் கட்டாயம் கொலைதான். உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா..?” காவலர் அவரை விசாரிக்க ஆரம்பித்தனர்.

“தெரியல. வளர்ந்த பையன் கொஞ்சம் சொல் பேச்சு கேட்க மாட்டான். நாள்  ஆனா சரியாயிடும் நினைச்சேன்.  ஆனா இப்படி அற்பாயுசுல  போவான்னு நினைக்கல…” பெற்றவர் கண்ணீர் விட்டு அழுதார்.

“கண்டிக்க வேண்டிய வயசுல கண்டிக்காமல் இருந்துட்டு இப்ப அழுது என்ன சார் பிரயோஜனம்…? போங்க போய் ஆக வேண்டியதை பாருங்க..!” இன்ஸ்பெக்டர் கோபத்துடன் கூறினார். 

விசாரித்ததில் ஒரு லாரி ஒரு கார் இரண்டும் சேர்ந்து முன்னும் பின்னுமாக மோதி,  வண்டியை திசைதிருப்பி தோப்புக்குள் தள்ளிவிட்டு இருக்கவேண்டுமென்று யூகம் செய்தனர். ஆனால் அதையும் உறுதியாகக் கூற முடியவில்லை..  காரணம் அந்த ஏரியாவில்  சிசிடிவி கேமராவோ,  அல்லது பார்த்த சாட்சிகள் இல்லை.

கடந்துபோன மற்ற வண்டிகளும் எதற்கு  வம்பு என்ற நிலைமையில் ஒதுங்கிக்கொள்ள போலீசார் திணற வேண்டியதாயிற்று. அடுத்த இரண்டு நாட்களில் இன்னொரு விபத்தில் பஷீர் இறந்து போக முதன் முதலாக மீதம் இருந்த இருவருக்கும் குளிர்  பிறந்தது..

சென்னை நீலாங்கரையில்  கடற்கரையோரம் நவீன மாடலில்  கட்டப்பட்ட ஒரு பங்களா. மாடியில்  உள்ள ஒரு அறையில்  வெறி பிடித்தாற்போல் சேவாக் அங்குமிங்கும்   நடந்து கொண்டிருந்தான். அவன் எதிரில் தலைகுனிந்து சந்தோஷ், சம்பத் இருவருமே நின்றிருந்தனர்..

“எப்படி..?  யாருன்னு விசாரித்தீர்களா…?” 

“தெரியல அண்ணே,  எதுக்குன்னு தெரியலை..?”

“நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீங்க ஐந்து பேரும் சேர்ந்து சுற்றாதீங்கன்னு,  கேட்கவே இல்லை. அதுக்காக தான்  நான் உங்கள வெளியில எங்கேயும் சந்திப்பதே இல்ல. ஏற்கனவே  போதை மருந்து,  காணாமல் போன பொண்ணுங்க விவகாரம் எல்லாத்தையும் புதுசா வந்திருக்கிற கமிஷனர் நோண்டிட்டு இருக்கான் . அவனை சரி கட்டவே பெரும் பாடாய் இருக்கு.  இதுல இப்ப இந்த பிரச்சனை வேற..”

“அண்ணே எனக்கு என்னவோ இது கடைசியா நடந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மாதிரி தோணுது….”

“நானும் அப்படி தான் யோசித்தேன்..  பார்ப்போம்.  அன்னைக்கு  தப்பிச்சவ  இப்ப எங்க இருக்கான்னு தெரியுமா..?”

“இல்லண்ணே,  தெரியல.  அவங்க அம்மா அப்பாவும் இங்கே இல்லை.  அதனால குடும்பத்தோட எங்கேயோ போயிட்டாங்க.  அப்படி தான் தோணுது..”

“எங்க போய் இருப்பாங்க விசாரிங்க..  அங்க அவங்க கூட அந்த பொண்ணு இருக்கான்னு பாருங்க..”

“சரிங்க அண்ணே..” என்று கிளம்பியவர்களை, “டேய் ஒரு நிமிஷம் நில்லுங்க .. எதுக்கும் நீங்களும் ஜாக்கிரதையாய் இருங்க…!  அந்த கடைசி விவகாரம் என்றாலும் அவங்க மூணு பேர் தான் குற்றவாளி,  நீங்க கூடத்தான் இருந்தீங்க.   அதனால நமக்கு சம்பந்தம் இல்லைன்னு தைரியமாய் இருக்காதீங்க. கொஞ்சம் எச்சரிக்கையாகவே  இருங்க..!” தலையாட்டிவிட்டு இருவரும் சென்றனர்.

தங்கள் காரில் ஏறி வெளியில் வந்ததும், “டேய் முதலிலேயே சொன்னோம்.  இந்த  மருந்து கடத்துவதோடு நிறுத்திக்கணும் அப்படின்னு,  ஆனா அவனுக எங்க கேட்டாங்க..? புதுசு புதுசா பொண்ணு பார்க்கணும்னு  இவர் கூட சேர்ந்து எல்லா அட்டூழியம் பண்ணுனாங்க.  இன்னைக்கு காலி..  பேசாம கொஞ்ச நாளைக்கி தலைமறைவாய் ஆயிடலாம். என்ன சொல்றே..?”

“எங்க போறது..?”

“சரி இன்னைக்குள்ள நான் விசாரிச்சிட்டு சொல்றேன்..” இருவரும் தங்கள் காரை ஒரு ஆட்டோ பின்தொடர்வது கவனிக்காமல் பேசிக்கொண்டே வந்து சேர்ந்தனர்.  அவர்களின் ஏரியா வந்ததும் ஒருவன் இறங்கிக்கொள்ள மற்றொருவன்  காருடன் சென்று விட்டான்.  பின்தொடர்ந்து வந்தவன் போனில் யாரிடமோ பேச, “  நீ கார்ல போறவனை  ஃபாலோ பண்ணு, மற்றவனை  பிறகு பார்த்துக்கலாம்..”  அனுமதி கிடைத்ததும் அவனைத் தொடர்ந்தான்..

இறங்கியவன் அங்கே ஒரு டாக்ஸி பிடித்து இன்னொரு இடத்திற்கு சென்று அங்கிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றான். இப்போது புதிதாக அவனை ஒரு வாகனம் தொடர்ந்தது..

கிருஷ்ணாவின் அலுவலகம். அவனது அறையில்  இரண்டு  இன்ஸ்பெக்டர் முன்னால் இருந்தனர்.. “சார் நீங்க சொன்ன மாதிரி அவங்க மூணு பேரையும் ஃபாலோ பண்ணினோம்.  அப்படி இருந்தும்  ஒருவன் விபத்தில் மாட்டிக்கிட்டான். இப்ப இருக்கிறது இரண்டு பேர்தான் சார்..”

“இவர்களையும் விடாம ஃபாலோ பண்ணனும் சொல்லி வச்சிருக்கீங்க இல்ல…?”

“ஆமா சார் நம்பர் ஏழு, எட்டு ரெண்டுபேரும் ஃபாலோ பண்றாங்க..?”

“நான் எந்த நிமிடம் கேட்டாலும் போர்ஸ் ரெடியா இருக்கணும். என்னோட கணக்குப்படி ரெண்டு நாளைக்கு உள்ள அவங்க வெளிநாடு போவதற்கு முயற்சி பண்ணலாம். அவங்க ஏர்போர்ட் போறதுக்கு முன்னாடி நம்ம கஸ்டடிக்கு வரணும்..”

“சார் அரஸ்ட் பண்ணனுமா…?”

“வேண்டாம்.  தூக்கி நான் சொல்ற இடத்துல கொண்டு போய் உட்கார வையுங்க. யாருக்கும் தெரிய கூடாது.  என் கூட இருக்குற உங்களுக்கு மட்டும்  தான் தெரியணும். அதனாலதான் நான் உங்கள அந்த ஸ்டேஷனில் இருந்து என்னோட நேர் பார்வைக்கு கொண்டு வந்திருக்கேன்…!”

“ஓகே புரியுது சார்…”

“யார் கேட்டாலும்  உண்மையான பதில் வரக்கூடாது..”

“நிச்சயமாக வராது சார்..  உங்க  முயற்சி எங்களுக்கு பிடிச்சிருக்கு. இந்த காலத்துல இப்படியும் சில ஆபீஸர் வேணும்.  உங்களுக்கு துணையா நாங்க இருக்கோம் சார்..”

“ஓகே போயிட்டு வாங்க. என் கூட காண்டாக்ட்ல இருக்கிற போன்ல யார்கிட்டயும் பேசாதீங்க..”  சொல்லி அவர்களை அனுப்பினான். அவர்கள் சென்ற பத்து நிமிடத்தில் கிளம்பி கமிஷனர் ஆபீஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ள சென்றான்..   மீட்டிங் மெயின் பில்டிங்கில் என்பதால் டிஜிபி முதல் அனைத்து பெரிய அதிகாரிகளும் இருந்தனர். கூடவே மத்திய அமைச்சர் சேவாக்கின் தந்தை மதுகர் சேவாக், அவரும்  இருந்தார். மாநில உள்துறை அமைச்சர் நித்தியானந்தம்  முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது..

“இப்ப நடந்த மூன்று கொலைகளை பற்றி தெரிஞ்சுக்க தான் மத்திய மந்திரி வந்திருக்கிறார்..  என்ன சொல்றீங்க…?”   அமைச்சர் நித்யானந்தரின் கேள்வி  எல்லா  அதிகாரிகளையும் நோக்கி பாய்ந்தது.

“முதல் கேஸ்  சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆக்சிடென்ட் தான் சார்.  மத்த ரெண்டு கேஸ் விசாரிக்கச் சொல்லி இருக்கேன்..” கமிஷனர் கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டே பதில் கூறினார்.

“அது எப்படி..?  அவங்க மூணு பேரும் நண்பர்கள் என்று விசாரிச்சதுல தெரியுது…?”

“அது மட்டும் இல்ல சார், அவங்களுக்கும் போதை மருந்து கடத்தலும் சம்பந்தருக்கு. அதுபோக சிட்டில  நிறைய பெண்கள் காணாமல் போன கேஸ்ல  அவங்க பெயர் இருக்கு. ஆனா என்னோட சந்தேகம் என்னன்னா இதில் அவங்களுக்கு மட்டும்தான் சம்பந்தம் இருக்கா, அல்லது இவங்களுக்கு மேல ஏதாவது பெரிய கை இருக்கான்னு யோசிச்சிட்டு இருக்கேன், பேசும்போதே கிருஷ்ணாவின் பார்வை மத்திய மந்திரியை தொட்டு மீள, உணர்ச்சியற்ற பாவத்துடன் அவனை கவனித்துக் கொண்டிருந்தார்..’

“அப்ப ஏன் அவர்களை கைது பண்ணல..?” டிஜிபி  ஒன்றும் தெரியாததுபோல் விசாரிக்க..

“ஆதாரம் வேணும்ல சார்..  அதைத்தான் சேகரிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அது  அது கிடைச்சதுனா  அவங்க குற்றவாளின்னு  ப்ரூப் ஆயிடும்..”

“செத்தவங்க குற்றவாளியா,  அல்லது அவர்களை கொலை பண்ணவங்க குற்றவாளியான்னு  அப்புறம் முடிவு பண்ணலாம்.. முதல்ல  அவங்க யார்னு கண்டுபிடிங்க…”

“அதுக்கும்  முயற்சி செஞ்சுட்டு  தான் சார் இருக்கோம்.  எங்க முயற்சிக்கு  தடைக்கல்  பொதுமக்கள் கிடையாதே,  பதவியில் இருக்கிற பெரிய மனுஷங்க தான்.  அதை நீங்க பார்த்துகிறேன் சொல்லுங்க.  நான் இப்பவே என்னோட நடவடிக்கையை   தயங்காம பண்றேன்..” கிருஷ்ணா பயப்படாமல் பதில் சொன்னான்.

மற்றவர்கள் முன்னிலையில் அமைச்சரையும் விட்டுக்கொடுக்க முடியாமல்,  தங்களது டிபார்ட்மென்ட்டையும்  குறை சொல்ல முடியாமல் டிஜிபி, “நீங்க முதல்ல கண்டுபிடிங்க.  கண்டுபிடிச்சது உண்மைன்னா, அது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் டிபார்ட்மெண்ட் உங்களுக்கு துணை நிற்கும்…” பொதுவில் பூசி மெழுகினார். ஓகே என்று விறைப்பாக சல்யூட் வைத்த கிருஷ்ணாவை சசிசேகரணும், சத்யஜித்தும் பார்த்தனர்.

பலவித விவாதங்களின் பின்னர் கூட்டம் முடிவுற்றது. எல்லாரும் வெளியே சென்றபின் உள்துறை  அமைச்சர், டிஜிபியிடம்  “என்ன அந்த பையன் ரொம்ப பேசுறான்…?” என்று விசாரிக்க..

அவர் பெயர் கிருஷ்ணா. துடிப்பான இளம் அதிகாரி, காலேஜ் படிக்கும்போதே அவங்க காலேஜ்ல புழங்கிக் கொண்டிருந்த போதை மருந்தை கண்டுபிடித்து கொடுத்தவர். பணத்துக்காக வேலைக்கு வந்தவர் இல்லை.

உண்மையிலேயே, மக்களுக்கு சேவை செய்யணும்னு நோக்கத்தோடு வேலைக்கு வந்தவர்…” என்று கூறியதும் மத்திய அமைச்சருக்கு பொறி தட்டியது போல் நினைவுக்கு வந்தது.

“என்ன பெயர் சொன்னீங்க..?”

“மிஸ்டர் கிருஷ்ணா…”

“ம்ம்” என்று தலையாட்டிய மந்திரி இறுகிய முகத்தோடு விடைபெற்று செல்ல, நித்யானந்தர் டிஜிபியிடம் வந்தார்..

“ஏன் சார்..? புதுசா வந்துருக்கா ஆபீஸர் கிட்ட இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கீங்க..? ஆர்வக்கோளாரில் ஏதாவது செஞ்சு, யார் கிட்டயாவது மாட்டிக்காம…!” என்று எச்சரித்து விட்டு சென்றார்.

டிஜிபி வழியாக விஷயம் சசிசேகரனுக்கு  வந்தது.. “மிஸ்டர் கமிசனர்  இந்த மூணு பேர் கேசுல குற்றவாளியை மட்டும் கண்டுபிடிங்க.. வேற எதுவும் வேண்டாம்.. பெட்டர் நீங்க ஆள மாத்துறது…” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் அவரும் தலையாட்டும்படி ஆயிற்று..

தனக்கு அழைப்பு விடுத்த கமிஷனரின் முன்னால் கிருஷ்ணாவும் சத்தியஜித்தும் அமர்ந்திருந்தனர்.  கிருஷ்ணா  இந்த கேஸ்ல இனிமே நீ கன்டினியூ பண்ண வேண்டாம். சத்யஜித் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிடு..”

“எதுக்கு…?”

“எதுக்குன்னு   எனக்கு தெரியல. ஆனால் டிஜிபி ஆர்டர்..”

“ஓகே…” என்றான். அவன் உடனே ஒத்துக் கொண்டதும், அவருக்கு  ஆச்சரியம் ஆயிற்று.

“நீ மாட்டேன்னு சொல்லுவேன்னு  நெனச்சேன்…” என்றவரிடம்

“நீங்கதான் போதைமருந்து விஷயம் பற்றி ரகசியமாக விசாரிக்க சொன்னீங்க. இப்ப நீங்களே வேண்டாம்னு சொல்றீங்க. செத்த மூணு பேரும் தியாகி ஒன்றும் கிடையாது. ஒண்ணாம் நம்பர் பொறுக்கி, ரவுடி, வேண்டாத வேலையெல்லாம் செஞ்சிருக்காங்க. சோ எதுக்காக செத்தாங்கன்னு  யாருக்கு தெரியும். தாராளமா இந்த கேஸ் நீங்க யார்கிட்ட வேணா குடுங்க..” என்று கூறி சல்யூட் ஒன்றை வைத்து விட்டு கிளம்பி விட்டான்.

அவன் கிளம்பியதும் சத்தியஜித்தை பார்த்து “இதுவரைக்கு கிருஷ்ணா எந்த அளவு விசாரிச்சு இருக்காருன்னு பாருங்க. இதற்கு மேலும் நமக்கு வேண்டியது செத்தவர்களை பற்றிய டீடெய்ல்ஸ் இல்ல, அவர்களை கொன்றவர்கள் பற்றிய டீடைல்ஸ்.

“ஓகே சார்..” என்று கூறி அவரிடம் விடைபெற்று வெளியே வந்தான். அவனுக்காக வெளியிலேயே காத்து நின்ற கிருஷ்ணா “டேய் அவர் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய். மத்தத நான் பாத்துக்கறேன். நமக்கு தெரிஞ்ச எல்லா விஷயத்தையும் சொல்லணும்னு அவசியம் கிடையாது. புரியுதா…?”

“டேய் அவரு உனக்கு அண்ணன் தானே, அவர்கிட்ட எதுக்கு ஒன்றும் சொல்லக்கூடாதுன்னு சொல்றே..!”

“காரணமாத்தான். அதையெல்லாம் பின்னால சொல்றேன்…” என்றவன் தனது ஜீப்பில் ஏறி சென்றான்.

“இவங்க ரெண்டு பேருக்கும் இடையில நான்  மாட்டிண்டு முழிக்க வேண்டி இருக்கு…” வாய்விட்டு முனங்கிக் கொண்டே சத்யஜித் கிளம்பி சென்றான்.

எல்லோரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க அமைச்சர் தனது மகனை அழைத்து விசாரித்தார். “டேய் எனக்கு தெரியாம ஏதாவது வேலை பண்றியா நீ..?”

“என்னப்பா என்ன விஷயம்..?

“மூணு பிரண்ட்ஸ் இறந்ததை பற்றி நீ விசாரிக்கச் சொன்னதும்,  நான் உனக்கு வேண்டியவங்கன்னு   நெனச்சேன். ஆனா அப்படி இல்ல போல இருக்கே. உனக்கும் அதில் பங்கு இருக்கா…?”

“என்ன திடீர்னு கேட்கிறீங்க..?”

“காரணமாத்தான் கேட்கிறேன். ஏன்னா இந்த கேசை விசாரிக்கிற ஆபீஸர் கிருஷ்ணா. உன்னோட பழைய எதிரி..”

“தெரியும்பா. தெரிஞ்சுதான் நான் உங்ககிட்ட போலீசுக்கு பிரஷர் கொடுக்க சொன்னேன்…”

“என்ன நடந்தது…?”

‘”அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்..? இந்த விஷயத்தில கிருஷ்ணா எதிரியா இருந்தா சமாளித்துவிடலாம். ஆனா முகம் தெரியாத எதிரி,  எதிரே இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது…?”

“அப்படியா…? சரி என்ன என்ன நடக்குனு அப்பப்ப சொல்லு…” சொன்னவர், தனக்கு மிகவும் விசுவாசியான ஒருவரை மகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

“என்ன உதவி கேட்டாலும் செய்யுங்க. மத்ததை நான் பார்த்துகிறேன்..” என்ற கட்டளையோடு மகனுக்கு அறிமுகம் செய்யப்பட்ட நபர் சமூகத்தில் அனைத்து விதமான கெட்ட செயலையும் செய்வதற்கு என்றே ஒரு பெரிய நெட்வொர்க் வைத்திருக்கும் மாமனிதர்.

ஆனால் இவர்கள் எதிர்பார்த்தபடி அடுத்த ஒரு வாரத்திற்கு எதுவுமே நடக்கவில்லை. “டேய் நாம தான் தேவையில்லாம பயந்திட்டோம். ஒரு பிரச்சனையும் இல்லை…” என்று மகிழ்ந்து வெளியே தலை காட்டிய சம்பத்தும், சந்தோஷும் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.

அவர்கள் காணவில்லை என்பதே, இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் சேவாக்குக்கு தெரிந்தது. தனது ஆட்களை விட்டு அவர்கள் புழங்கும் இடத்தில் எல்லாம் தேட வைத்தான். எங்கு தேடியும் அவர்களது இருப்பிடம் பற்றிய தகவல் கண்டுபிடிக்க முடியவில்லை…

தனது தந்தையின்  செல்வாக்கை பயன்படுத்தி போலீசிடம் விசாரிக்கலாம் என்றால் அவர்களுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு என்பதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் மௌனம் காத்தான்.

அப்படி இருந்தும் பெற்றோர் கொடுத்த புகாரின் படி போலீஸ் தனது தேடலை ஆரம்பிக்க, கடத்தப்பட்ட காரணமோ, கடத்திய நபர்களை பற்றிய குறிப்போ எதுவும்  கிடைக்காமல் போலீஸ் திணறியது..

டிஜிபி கமிஷனரை  அழைத்து விசாரிக்க அவர் கிருஷ்ணாவை கேட்டார். “மீதி ரெண்டு பேரை கடத்துனது யாருன்னு தெரியுமா..?”

“தெரியாது..” மொட்டையாய் பதில் சொல்லியவனை முறைத்தார்.

“என்ன  தெரியாதுன்னு கூலா பதில் சொல்றீங்க..!”

“உண்மைதானே சார், இந்த கேச நான் விசாரிக்கலையே, அது  சத்தியஜித் கைக்கு போய் பத்து நாளைக்கு மேல் ஆச்சு.  நான் வேற கேஸ் தான் பாத்துட்டு இருக்கேன்…” அவன் சொன்னதும் தான் சத்யஜித் இடம் பொறுப்பை ஒப்படைத்தது நினைவுக்கு வந்தது. ஆனாலும் மனதுக்குள் இவன்   இந்த கேசில் இருந்து விலகி இருக்க மாட்டான் என்ற சந்தேகமே அவருக்கு அவனை விசாரிக்க செய்தது.

அவனிடம் கேட்டபோது  அதுவரை நடந்த விசாரணையின் தொகுப்புகளை மட்டும் அவரிடம் கூறினான்.  எந்த வகையிலும் முன்னேற்றம் இல்லாமல் பாதியிலேயே தொங்கிக்கொண்டிருந்த அந்த ஐந்து நண்பர்களின் கதை ஒருவனுக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது.

தாத்தாவும் அவரது நண்பரும் சேர்ந்து நடத்திய ஆசிரமத்தின் புதிய கட்டிடங்கள் ஊருக்குள் மாறிவிட, பழைய கட்டடமும் அந்த தோட்டமும் கேட்பாரற்ற கிடந்தது. அது இவர்கள் வீட்டு பூர்வீக இடம் என்பதால் அதை விற்கவும் முயலவில்லை. 

ஏதோ ஒரு சமயம்  தாத்தா அதை பற்றி அரசுவிடம் கூறி அந்த இடத்தை சற்றே சீரமைத்து வைக்குமாறும், தேவைப்பட்டால் விற்று அந்த பணத்தை ஆசிரமத்திற்கு கொடுத்து விடும்படியும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து வைத்திருந்தார். 

சில காரணங்களால் அந்த வேலையை ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தான் அரசு. இப்போது அந்த இடத்தை நோக்கி அவனது கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. கூட குமணனும் இருந்தான்.

“சார் இதுவரை நீங்க ஃப்ரேமில் வரலை. இப்ப எதுக்கு வர்றீங்க…?”

“இப்பவும் நான் நேரடியாக வரலை. அங்கு காவலுக்கு இருக்க பசங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும். நமக்கு  நேரம் கம்மியா தான் இருக்கு. என்னோட குறி இவங்க கிடையாது.. அங்க போனது உனக்கு புரியும்..” அதற்குமேல் ஒரு வார்த்தை பேசாமல் காரை விரட்டினான்.

ஆசிரமம் இருந்த இடம் என்பதால் உள்ளே இருந்த கட்டிடம் பெரிதாகவே இருந்தது. அதில் கடைசியில் இருந்த அறைகளில் ஒன்றில் சம்பத் சந்தோஷ் கட்டப்பட்டு உருட்டி விடப்பட்டு கிடந்தனர்.

அவர்களுக்கு அருகில் இருவரும் வெளியில் இருவரும் காவல் இருந்தனர். இதுபோக ஒருவன் தோட்டத்தில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். இவர்களையும் காரின் வெளிச்சத்தை பார்த்ததும் முன்னேற்பாடாக துப்பாக்கியை உருவி கொண்டு ஒரு ஓரமாக பதுங்கி நின்று வருவது யாரென்று பார்த்தான்.

இதற்குள் அலைபேசியில் குமணனின் எண் திரையில் ஒளிர்ந்தது. “எங்க இருக்கிற துரை..?”

“சார் நீங்க தானா..? இதோ வரேன் என்று மறைவிலிருந்து வெளிவந்தான்…”

“எதுக்கு சார் நீங்க எல்லாம் இங்க வர்றீங்க..?”

“சார் தான் பார்க்கணும்னு  சொன்னாங்க.,” என்றதும் அருகிலிருந்த அரசுவை பார்த்தான்.

“சார் நீங்க எதுக்கு இங்க..? என்னன்னு சொல்லி இருந்தா  நாங்களே செஞ்சு இருப்போமே…?”

“எனக்கு இவங்க கிட்ட இருந்து ஒரு விஷயம் தெரியணும்…? அதை வாங்கின பிறகு தான் இவங்க கதை முடியனும்..”

“என்ன விஷயம் சார்…?”

“மத்திய அமைச்சரோட  பையன் சேவாக், அவனோட ரகசிய இருப்பிடங்கள், வழக்கமான வேலைகள் இதெல்லாம் இவங்க கிட்ட இருந்து வாங்குங்க. இரண்டு  நாளுக்குள்ள கிடைக்கணும் கிடைக்குமா..?”

“எப்படியாவது வாங்கிடறோம் சார்…” அவன் உறுதியளித்தான்.. அதுக்கப்புறமும் இவங்க கதை எப்படி முடிக்கணும்னு உங்களுக்கு தகவல் வரும் அதுபடி செஞ்சா போதும்… என்று சொல்லிவிட்டு மேலும் சில விஷயங்களையும் ரகசியமாக கூறிவிட்டு கிளம்பினர்.

“சார் இதுக்கு எதுக்கு நீங்க வரணும்..?” குமணன் கேட்டான்.

“காரணமாத்தான். இப்ப நான் செய்ற எல்லா விஷயமும் என்னை பொறுத்தவரை நியாயமானதுதான். ஆனா நாளைக்கு இந்த விஷயம் எப்படி மாறும் என்று எனக்கு தெரியாது. அதுக்குள்ள இதற்கெல்லாம் மூல காரணம் ஆனவனை சேர்த்து  முடிக்கணும்.. அதுக்குத்தான்…”

“அதையும் நாம ஏற்கனவே செஞ்ச அவங்க கிட்ட சொன்னா போதுமே…?”

“இல்ல, அந்தக் கதையை நான் வேற விதமா முடிக்கணும்னு  நினைக்கிறேன். இவங்க ரெண்டு பேரோட,  இந்த டீலிங் முடியட்டும். அதற்கப்புறம் இவர்களுக்கும் நமக்கும் எந்த தொடர்பு இருக்கக்கூடாது. கிளியர் கட்.. போன் நம்பரில் இருந்து எல்லாவற்றையும் அழித்துவிடு…” என்றவன் குமணனை வழியிலேயே இறக்கிவிட்டு தான் மட்டும் கடற்கரையை நோக்கி சென்றான். இரண்டு நாளில் அவன் எதிர்பார்த்த விஷயம் சின்ன பென்டிரைவில் கிடைத்தது. அதைக் கொண்டுவந்து கொடுத்த குமணன் சார் அவங்க கதையும் முடிஞ்சது. நீங்க சொன்ன மாதிரி எல்லா விஷயங்களையும் மாத்திட்டேன்..”

“குட்…” என்றவன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.. கள்ளத்தோணியில் வந்து இறங்கிய போதை மருந்து கடத்தும் போது இரண்டு கும்பலுக்கு இடையில் நடந்த பிரச்சனையில் இருதரப்பும் சுட்டுக் கொண்டனர். அதில் இரண்டு பேரின் உயிர் பரிதாபமாக பிரிந்தது. ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து நாளிதழில் ஒரு ஓரமாக வந்த செய்தியை பார்த்துவிட்டு பேப்பரை மூடி ஒரு ஓரமாக வைத்தான்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 12 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

அஸ்தமிக்கும் பொழுதுகள் 6

காவ(த)ல் கொண்டேனடி கண்மணி 16