in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 5

இரவு வீட்டுக்குள் இருக்காமல் சுபாஷினி வெளியே அமர்ந்து இருந்தாள். சுஜியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவிதாவை கண்காணித்துக் கொண்டிருந்தாள். ஜீவிதாவிற்கு சிரிப்பு வந்தது.

அவளிடம் சென்றவள் “நான் சும்மா தான் சொன்னேன். போறது னா பகல்ல தான் போவேன். நீங்க போய் தூங்குங்க” என்றாள்.

“இல்ல. நான் நம்ப மாட்டேன். உன் அம்மா கிட்ட சொல்லிட்டு போறேன்”

“அவங்க சொன்னா நான் அடங்கிடுவேன் னு நினைக்கிறீங்களா? கடந்த பதினஞ்சு வருசமா அவங்கள அம்மா னு ஜஸ்ட் கூப்பிட மட்டும் தான் செய்யுறேன். அவங்க பேச்சுக்கு அடங்குற ஆளு நான் கிடையாது. நாளைக்கு காலையில அந்த வீட்டோட எக்ஸாக்ட் லொகேஷன் கிடச்சுடும். அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்”

“எப்படி? உனக்கு எப்படி கிடைக்கும்?”

“அதெல்லாம் கம்பெனி சீக்ரட்ஸ். நீங்க கவல படாம தூங்குங்க”

“என்னமோ சொல்லுற… சரி போ”

“ஒரு நிமிசம். மூணு பொண்ணுங்களும் செத்த தேதி வேணும். கிடைக்குமா?”

“தேதியா?”

“ஆமா.. கரெக்ட்டான டேட் வேணும்”

“சரியா தெரியல. யோசிச்சுட்டு நாளைக்கு சொல்லுறேன். இல்லனா யாரு வாயவாச்சும் கிளறி பார்க்குறேன். வந்துடும்”

“ஓகே. கம்ப்ளைண்ட் பண்ண டேட் கண்டிப்பா வேணும்”

சுபாஷினி தலையாட்டி விட்டு சுஜியையும் அவளது தங்கையையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

*.*.*.*.*.*.

ஜீவிதா இன்றும் வேலை செய்ய வெளியே அமர்ந்து கொண்டாள். இன்றும் எதாவது காரின் சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேலை வேகமாக முடிந்து விட தூக்கம் வராததால் அங்கேயே அமர்ந்து இருந்தாள். இன்று காரின் சத்தம் எதுவும் கேட்கவில்லை. நேரம் கடந்து செல்ல மரங்களின் அசைவு சத்தம் தாலாட்டாக கேட்டது.

மெல்லிய காற்று உடலை தழுவிச் செல்ல அவளையும் அறியாமல் தூக்கம் வந்தது. அதை நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

என்றாவது உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது தான் அவளையும் அறியாமல் தூங்குவாள்.‌ மற்ற நாள் எல்லாம் மாத்திரை தான் உதவும். இன்று தூக்கம் இதமாக வர எழுந்து உள்ளே வந்தாள்.

கதவை அடைத்து விட்டு தூங்க போக போன் மௌனமாக அதிர்ந்தது. எடுத்து பார்த்தாள். அவளுடைய தோழி ஒருத்தியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

“சொல்லு மெலினா. என்ன இந்நேரத்துல?”

“நீ எப்போ கிளம்பி வர்ர?”

“ஏன்?”

“நாலு நாள் தான். திரும்ப வந்துடுவேன் னு சொன்ன. இப்போ மூணு நாள் முடிஞ்சது. நாளைக்கு நீ இங்க இருக்கனும்”

“இல்ல லினா. இங்க ஒரு வேலையில மாட்டிக்கிட்டேன்.‌ நேத்து தான் மெயில் போட்டேன். ஒரு மாசத்துக்கு எனக்கு லீவ் வேணும் னு.”

“பார்த்தேன்.”

“அத பார்த்துட்டு தான் பொங்குறியா?”

“ஒரு மாசம் அங்க இருந்தா இங்க வேலை என்னாகுறது?”

“என்னால முடிஞ்ச வரை இங்க பார்த்து அனுப்புறேன். அட்ஜஸ்ட் கரோ”

“அப்படி‌ என்ன அங்க முக்கியமான‌ வேலை?”

“வந்து சொல்லுறேன் னு சொன்னேன் ல?”

“என்னவோ போ. என் ட்யூட்டி முடிஞ்சது. தூங்க போறேன். நீயும் தூங்கு”

“ஆமா.. செம்மயா தூக்கம் வருது”

“பார்ரா.. அவுல் ஜீவிதா மேடம்க்கு தூக்கம்‌ எல்லாம் வருது. சரி குட் நைட்”

அழைப்பை துண்டித்து விட்டு படுக்க போனாள்.

ஒரு மாதம் விடுமுறையை நீடித்து கொடுக்க கேட்டிருக்கிறாள்.‌ இங்கு இருக்கும் வேலையை முடிக்க வேண்டும். அதே‌ நேரம் அந்த இறந்த பெண்களை‌ பற்றி தகவலை‌ சேகரித்து உண்மையை கண்டு‌பிடிக்க வேண்டும்.

அந்த கிணறு இருக்கும்‌ இடத்தை அறிந்து கொண்டாள். நாளை‌ பகலில் தான் போக வேண்டும். இப்படி எதை எதையோ யோசித்துக் கொண்டு தூங்கிப் போனாள்.

*.*.*.*.*.*.

இயற்கையான தூக்கம் என்பதால் காலையில் சீக்கிரமே விழித்து விட்டாள் ஜீவிதா. குளித்து முடித்து அவள் வர வள்ளியம்மை சமையல் வேலையில் மும்முரமாக இருந்தார்.

ஜீவிதாவிற்கு சுட்டு போட்டாலும் சமைக்க தெரியாது. அதை கற்றுக் கொள்ளும் ஆர்வம் வரவில்லை. அது தான் முதல் காரணம்.

காலையிலேயே வெளியே அமர்ந்து ஊர் வம்பு பேசிக் கொண்டிருந்தார் தங்கமணி.

“ஆமா ஆமா. அந்த மூணு புள்ளைங்களும் கிணத்துக்குள்ள விழுந்து நிம்மதியா செத்துடுச்சுங்க. இங்க நம்மல வந்து போலிஸ் கேள்வி கேட்டுட்டு‌ இருக்கு‌” என்று யாரோ கூற “செத்தவளுங்களுக்கு தான் தெரியும் ஏன் கிணத்துல குதிச்சாளுங்க னு. நம்மல கேட்டா எப்படி தெரியும்?” என்றார் தங்கமணி.

“ஒவ்வொரு மாசமும் இப்படி யாராவது கிணத்துல விழுந்தா ஊருல எப்படி மனுசங்க வாழுறது?”

“அதுக்கு தான் பூட்டி கிடக்குற கோயில திறங்க னு சொன்னேன். யாரு கேட்டா?”

“அதான… சாமி குத்தமாகிடும் வேணாம் வேணாம் னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டோம். எங்க கேட்டானுங்க. அவனுங்க வீம்புக்கு அடைச்சு வச்சுட்டு.. இப்போ பாரு வயசு புள்ளைங்க போய் கிணத்துல விழுந்து சாகுதுங்க”

“நாம என்ன பேசி என்ன பிரயோஜனம். ஊருல இருக்க பெரியவக எல்லாம் ஒரு முடிவுக்கு வர மாட்டிதுங்க. இன்னைக்கு என் மகன் பேசுறேன் னு சொல்லி இருக்கான். என்ன சொல்லுறாங்க னு பார்க்குறேன்”

“எனக்கும் கேட்டு சொல்லு”

இருவரும் பேசிக் கொள்வதை வாசலில் நின்று கேட்க ஜீவிதா சாப்பிட வந்த நிலவனை பிடித்துக் கொண்டாள்.

“இந்த ஊருல கோவில் இருக்கா?”

“ஊரு னு இருந்தா கோவில் இருக்காதா கா.. நிறைய இருக்கே”

“இல்லடா. எதோ ஒரு கோவில பூட்டிட்டீங்களாமே”

“அது பெரிய கோவில். யாருக்கு முதல் மரியாதை னு சண்டை வந்து பிரச்சனை முடியுற வரை மூடி இருக்கட்டும் னு சொல்லிட்டாங்க”

“இது வேறயா?”

“கோர்ட்ல ஒரு சைட் கேஸ் போட்டு விட்டாங்க. அதுனால கவர்மென்ட் ஆளுங்களே வந்து பூட்டிட்டு போயிட்டாங்க”

“எங்க இருக்கு அது?”

“இங்க இருந்து இடது பக்கம் போகனும். அம்மாவ வழி காட்ட சொல்லுங்க”

“இல்ல இல்ல வேணாம். பூட்டுன கோவில பார்த்து என்ன செய்ய போறேன்.”

“அதுவும் சரி தான். வாங்க சாப்டலாம்” என்று அழைத்துச் சென்றான்.

நிலவன் நண்பர்களை பார்க்க கிளம்பி விட சேந்தன் வேலைக்கு கிளம்பி விட்டார். வள்ளியம்மையும் தங்கமணியும் தொலைகாட்சி தொடர்களை பார்க்க அமர்ந்து விட்டனர்.

இது தான் சரியான நேரம் என்ற முடிவுக்கு வந்த ஜீவிதா தனக்கு தேவையானவற்றை சிறு கைப்பையில் போட்டு எடுத்துக் கொண்டாள்.

“ம்மா.. நான் ஊர சுத்தி பார்த்துட்டு வரேன்” என்று கூறி விட்டு வெளியே வந்து விட்டாள்.

போனை கையில் எடுத்துக் கொண்டவள் அந்த கிணறு இருக்கும் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மனதில் பல விசயங்கள் ஓடிக் கொண்டிருக்க கால் வேகமாக அந்த இடத்தை நோக்கிச் சென்றது. பேருந்து நிலயத்திருந்து பிரிந்து போன வேறு பாதையில் வேகமாக செல்ல அவளுக்கு பின்னால் ஒரு ஜீப் வந்தது. அந்த சத்தத்தை முதலில் ஜீவிதா கவனிக்கவில்லை.

சில நிமிடங்களில் அது அருகில் வந்து விட திரும்பி பார்த்தாள். ஜீப் அவளருகில் நின்று விட்டது. உள்ளே இருந்தவன் இறங்கி அவள் முன்னால் வந்தான்.

அவனது தோற்றத்திலேயே தெரிந்தது. காவல்துறையில் வேலை செய்பவன் என்று.

“ஒரு நிமிஷம். யாரு நீங்க? இந்த பக்கம் எங்க போயிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

‘என்ன டா இது புது சோதனை?’ என்று நினைத்தவள் “நீங்க யாரு?” என்று திருப்பி கேட்டாள்.

“போலிஸ் ஜீப் பார்த்து தெரியலையா?” என்று ஜீப்பின் முன் பாகத்தை கை காட்டினான்.

எட்டி பார்த்தவள் “போலீஸ் ஜீப்ல வந்தா போலீஸ் னு சொல்லிடுவாங்களா? திருடிட்டு கூட வந்து இருக்கலாம்” என்றாள்.

அவளுக்கு ஒரு சிறந்த பதிலை சொல்ல அவகாசம் தேவை பட்டது. அதை யோசிக்கவே பேச்சை வளர்த்தாள். அவனோ அவளை மேலும் கீழும் பார்த்து வைத்தான்.

“சரி தான் மேடம்.‌ நான் இளமாறன். எஸ்.ஐ” என்று கூற ‘இவன் தானா அது’ என்று நினைத்து நன்றாக பார்த்தாள்.

காவல்துறையினருக்கான அத்தனை லட்சணங்களும் அவனிடம் இருந்தது. ஆனால் அவனது தோளிற்கு கீழ் வெள்ளையாக ஒரு கட்டு தெரிந்தது. அந்த கட்டு புதிதாக இருந்தது ஜீவிதாவின் கண்ணை உறுத்தியது.

தலைமுடியை சரி செய்யும் போது தூக்கிய கையில் லேசாக தெரிந்த கட்டு கையை கீழே போட்டதும் மறைந்து கொண்டது.

ஜீவிதா கட்டை பார்த்து விட்டதை உணர்ந்து அவசரமாக கையை கீழே போட்டு விட்டான்.

“கேட்டதுக்கு பதில் வரலையே?” – இளமாறன்.

“ஊருக்கு நான் புதுசு சார். ஊர சுத்தி பார்க்க போறேன்”

“ஊரு இந்த பக்கம் இல்லையே?”

“தெரியும் சார். ஊருக்குள்ள பார்க்க பெருசா எதுவும் இல்ல. அதான் ஊருக்கு வெளிய காட்ட பார்க்க வந்தேன்”

“இந்த பக்கம் சேஃப் இல்ல மேடம். கிளம்புங்க”

“ஏன் சார்?”

“அத நீங்க ஊருக்குள்ள போய் விசாரிங்க”

“நீங்க சொல்ல மாட்டீங்களா?”

“இந்த இடத்துக்கு தனியா போக வேணாம். அவ்வளவு தான் சொல்லுவேன். கிளம்புங்க”

“தனியா போனா தான பிரச்சனை? நீங்களும் கூட வாங்க”

ஜீவிதா அவனை உடன் அழைப்பாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. பதில் சொல்ல ஒரு நொடி அவன் யோசிக்க “உங்களுக்கு கூட பயமா? நிஜம்மாவே பேய் இருக்கா சார்” என்று நக்கல் குரலில் ஆச்சரியம் போல் கேட்டாள்.

அவளது கிண்டல் புரிய இளமாறனுக்கு முறைக்க தோன்றியது. ஆனால் தெரியாத பெண்ணை முறைத்து வைக்க அவனுக்கு மனம் இல்லை.

“நீங்க பயந்தா பயப்படுங்க. எனக்கு பேய பார்க்கனும் னு ஆசையா இருக்கு. நான் போறேன்”

“பேயாவது பூதமாவது?” என்று இளமாறன் எரிச்சலாக கூற “அப்போ ஏன் பயப்படுறீங்க? நான் போறேன். நீங்க வந்தா வாங்க இல்லனா போங்க” என்று நடக்க ஆரம்பித்தாள்.

“நில்லுங்க மேடம். பேய் இல்லனா அந்த இடத்துல ஆபத்து இருக்காதா?”

“நீங்க உண்மையிலயே போலீஸ் தானா?” என்று கேட்டு அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்.

“ஹலோ.. நக்கலா?”

“பின்ன பிரச்சனைக்கு இவ்வளவு பயப்படுறீங்க. இப்ப தான் தெரியுது. நீங்க ஏன் இன்னும் எஸ்.ஐ வே இருக்கீங்க னு” என்று கூறி வைக்க இளமாறனுக்கு கோபம் வந்து விட்டது.

“எல்ல மீறி பேசுறீங்க” என்று இளமாறன் எச்சரிக்க “உண்மைய சொன்னேன். சரி உங்களுக்கு பயம் னா வராதீங்க. நான் திரும்பி வர்ர வர இங்கயே நில்லுங்க. ” என்று கூறி விட்டு வேகமாக முன்னால் நடந்தாள்.

இளமாறனுக்கு கோபம் வந்து விட்டது. அவள் யாரென்று தெரியவில்லை. பெயரையும் சொல்லாமல் மற்ற விசயங்களை பேசி விட்டு தனியாக செல்கிறாள்.‌ அப்படியே விட்டு விட்டு போகவும் அவனுக்கு மனம் இல்லை.

“என் விதி” என்று விதியை நொந்து கொண்டு அவள் பின்னால் நடந்தான்.

“மேடம் நில்லுங்க” என்று கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினான்.‌ ஜீவிதா நிற்கவில்லை. வேகமாக ஓடி அவளை அடைந்தான்.

“என்ன சார்? பயம் போயிடுச்சா?”

“முதல்ல உங்க பேர‌ சொல்லுங்க”

“ஜீவிதா”

பெயரை கேட்டதும் யாரென்று அவனுக்கு சட்டென புரிந்து விட்டது.‌ ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் “உங்க குடும்பம் எங்க இருக்கு?‌இந்த ஊருக்கு எதுக்கு வந்தீங்க ?” என்று குறுக்கு விசாரணை செய்தான்.

“நான்‌ ஒரு ஜெர்னலிஸ்ட் சார்.‌ இந்த ஊருல இது வரை மூணு பொண்ணுங்க மர்மமான முறையில செத்துருக்காங்க னு எங்களுக்கு நியூஸ் வந்துச்சு. போலிஸ் அத பத்தி எந்த ரெக்கார்ட்டும் காட்டல. அதான் அந்த நியூஸ்ல இருக்க உண்மைய தெரிஞ்சுக்க நானே வந்தேன்”

இளமாறனுக்கு பக்கென்று இருந்தது.‌ அதே நேரம் கோபமும் வந்தது.

“உங்களுக்கு யாரு பர்மிஸன் கொடுத்தது?”

“யாரு கொடுக்கனும்? எங்களுக்கு எந்த பர்மிஸனும் தேவை இல்ல”

“நீங்க வேலை பார்க்குற பத்திரிக்கை பேர சொல்லுங்க. நான் வெரிஃபை பண்ணிக்குறேன்”

“சாரி சார். வேலை முடியுற வரை என்னால பேர சொல்ல முடியாது”

“அப்போ நீங்க இங்க இருக்க முடியாது”

“அதுக்கும் சாரி. நீங்க என்ன பண்ணாலும் என்ன இந்த ஊர விட்டு துரத்த முடியாது. ஏன்னா என் மொத்த குடும்பமும் இங்க இருக்கு. நான் பிறந்த ஊரு இது. அவ்வளவு ஈசியா போயிடுவேன் னு நினைக்காதீங்க”

ஜீவிதா பேச்சு பேச்சாக இருந்த போதும் சரியான பாதையில் நடந்து சென்றாள்.

அவளை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் இளமாறன் அவள் பின்னால் சென்று கொண்டிருந்தான்.

“என்ன மேடம் முன்னுக்கு பின் முரணா பேசுறீங்க?”

“நானா?”

“நீங்க தான். வேற யாரு? அந்த பேயிங்களா?”

“அப்படி என்ன மாத்தி சொல்லிட்டேன்?”

“இந்த ஊருக்கு புதுசு ஊர சுத்தி பார்க்க போறேன் னு சொன்னீங்க. அடுத்து ஜெர்னலிஸ்ட் விசாரிக்க வந்துருக்கேன் னு சொல்லுறீங்க. கடைசியில உங்க குடும்பம் இந்த ஊருல இருக்கு னு சொல்லுறீங்க”

“ஆமா அதுக்கென்ன?”

“இந்த ஊருல உங்க குடும்பம் இருந்தா நீங்க இந்த ஊருக்கு புது ஆளா எப்படி இருக்க முடியும்? அப்படி புது ஆளா இருக்க முடியாத பட்சத்துல இந்த ஊருல இப்படி ஒரு ஜெர்னலிஸ்ட் இருக்கதா எனக்கு தெரியவே தெரியாது. இதுல எது உண்மை?”

“எதுவுமே உண்மை இல்ல”

“அப்போ பொய் சொன்னதுக்கு உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?”

“பொய் சொன்னா கூட தண்டனை னு ஒரு சட்டம் இருக்கா?”

“சொல்லுற பொய்ய பொறுத்து தண்டனை மாறும்”

“ஓ… இப்போ எப்படி கேஸ் எழுதுவீங்க? ஒரு பொண்ணு ஜெர்னலிஸ்ட் னு பொய் சொல்லிட்டு ஊருக்கு வெளிய சுத்திட்டு இருந்தா னா? இல்ல பிறந்த ஊருக்கு புதுசு னு சொல்லுறானா?”

இளமாறன் பதில் சொல்லாமல் அவளை புருவம் சுருக்கி பார்த்தான்.

“நீங்க எப்படி வேணா கேஸ் எழுதுங்க. அதுக்கு முன்னாடி அங்க பாருங்க”

ஒரு வீடு கண்ணுக்கு அறை குறையாக தெரிந்தது. புதர்கள் அதை பாதி மறைத்து இருந்தது.

“இங்க தான கிணறு இருக்கும்? வாங்க பார்ப்போம்” என்றவள் குட்டியாக வைத்திருந்த கேமராவை எடுத்துக் கொண்டாள்.

இளமாறன் தடுக்கும் முன்பே படங்களை எடுத்துக் கொண்டு முன்னால் சென்று விட்டாள்.

“ச்சே…” என்று அவளை நோக்கி வேகமாக நடந்தான். அதே நேரம் போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அந்த வீட்டை சுற்றி சுற்றி ஜீவிதா படம் எடுத்துக் ‌கொண்டாள். அருகில் செல்ல செல்ல எதோ அழுகிய நாற்றம் வீச ஆரம்பித்தது. கைக்குட்டையால் முகத்தை பாதி மறைத்து கட்டிக் கொண்டாள்.

மேலும் அருகில் செல்ல போக இளமாறன் அவள் முன்னால் வந்து நின்று வழியை மறைத்தான்.

“சொன்னா கேளுங்க. இதுக்குள்ள போறது ரொம்ப ஆபத்து. நீங்க கம்ப்ளைண்ட் கொடுங்க. நான் போலிஸ் ஃபோர்ஸ் ஓட வந்து இதெல்லாம் பார்க்குறேன்”

அவனது வார்த்தையை ஜீவிதா யோசிக்க ஆரம்பித்தாள். அவள் யோசனையை பார்த்தவன் மேலும் பேசினான்.

“இங்க இருக்க ஸ்மெல்லயே தெரியும் எவ்வளவு பெரிய விசயம் நடக்குது னு. யாரும் கம்ப்ளைண்ட் கொடுக்காம இருந்ததால தான்‌ நாங்க உள்ள வர முடியல.‌ நீங்க கொடுங்க. நான் மத்தத பார்த்துக்கிறேன். அப்படி நான் எதுவும் பண்ணல னு தோனுச்சு னு வைங்க நேரா இங்க வந்துடுங்க. நான் ஒன்னும் இந்த வீட்டையும் கிணறையும் தூக்கிட்டு போயிட மாட்டேன்.‌ நம்புங்க”

இரண்டு நிமிட யோசனைக்கு பின் “ஓகே.. கம்ப்ளைண்ட் பண்ணுறேன்.‌ பட் உங்க கிட்ட இல்ல. கம்ப்ளைண்ட் நான் யாரு கிட்ட கொடுக்கனுமோ அங்க கொடுத்துட்டு அவங்களோட வந்து இந்த இடத்த பார்க்குறேன்” என்று கூறியவள் அங்கிருந்தே கிணறயும் படமெடுத்துக் கொண்டு திரும்பி நடந்தாள்.

பேய் காற்று அடித்துக் கொண்டிருந்த போதும் இளமாறனுக்கு வியர்த்து கொட்டியது. அவள் திரும்பி நடக்கவும் தான் மூச்சு வந்தது. அந்த வீட்டை திரும்பி பார்த்து விட்டு ஜீவிதாவின் பின்னால் நடந்தான். அதே நேரம் மீண்டும் ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்தான்.

அதை படித்து விட்டு யாதவன் தலையில் கை வைத்துக் கொண்டான்.

“உன் அக்கா சும்மா இருக்க மாட்டாளா?” என்று கேட்க நிலவன் பதில் சொல்லவில்லை.

“அவ ஜெர்னலிஸ்ட்டு னு ஏன் சொல்லல நீ?” என்று கணிகன் கேட்க “எனக்கே தெரியாது. நான் என்ன வேலை பார்க்குறீங்க னு கேட்டதுக்கு எதுவுமே சொல்லாம போயிட்டாங்க. நீங்க கூட கேட்டீங்களே. எதுவும் சொல்லாம எஸ் ஆகிட்டாங்களே” என்றான்.

“மரியாதையா உன்‌ அக்காவ அடங்கி இருக்க சொல்லு.‌ இல்ல நடக்குறதே வேற” என்று யாதவ் கொந்தளிக்கும் அதே நேரம் எதையோ நினைத்து ஜீவிதாவின் முகத்தில் புன்னகை வந்தது.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

வணக்கம். நான் ஹனி. கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் வரலாற்று கதைகள் என்றால் ரொம்பவுமே பிடிக்கும். "பொன்னியின் செல்வன்" படித்த பிறகு கதைகளின் மீதும் நாவல்களின் மீதும் வந்த ஆர்வம். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். சாதாரண குடும்ப கதைகளும் காதல் கதைகளுமே எனக்கு எழுத தெரியும். அதையே இங்கும் பதிவிடுகிறேன். நன்றி.

Story MakerContent AuthorYears Of Membership

என் நெஞ்சுநேர்பவளே -6

மீனாட்சி உன்னடிமை ஆவேனோ