in , ,

என் நெஞ்சுநேர்பவளே -6

                                    6

“ஏய்ய்ய் அவுட்டு…. “என்று தன் கையில் இருந்த பந்தை தூக்கி போட்டு கத்தினான் ஆதிரன்… 

“ஹோ அதெல்லாம் முடியாது அண்ணா… ஒன் பிச் கேட்ச் உங்களுக்கு மட்டும் தான் எங்களுக்கு இல்ல… “என்று மறுத்தான் சிறுவன் ஒருவன்… 

“அதென்னடா உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. அதெல்லாம் முடியாது.. ஒன் பிச் கேட்ச் புடிச்சுட்டேன்.. நீ அவுட்டு… பேட் குடு… “என்று அந்த சிறுவனுக்கு சமமாய் மல்லுக்கட்டி நின்றவனை விழி விரித்து புன்னகை மின்ன ரசித்துக் கொண்டிருந்தாள் ஆரதி…. 

காலை சாப்பிட்டு முடித்ததும் சிவகாமியிடம் கோவிலுக்கு செல்வதாய் சொல்லிவிட்டு வந்திருந்தாள் ஆதியை பார்ப்பதற்காகவே..சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியில் இருந்த மரத்தை சுற்றிலும் போடப்பட்டிருந்த கல் திட்டில் அமர்ந்தாள்… பக்கத்தில் சில சிறுமிகள் பாண்டி விளையாடி கொண்டிருக்க, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது போல் ஆதிரனையும் ரசித்துக் கொண்டிருந்தாள்….. 

இன்னும் சிறுவர்களுடன் வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஆதி.. “டேய் நகுல் பேட் குடு… சீட்டிங் பண்ணாத… “

“நீங்க தான் ஏமாத்தறீங்க… “

“ஆதி விடு சின்ன பையன் தான…”
என்றான் கார்த்தி.. 

“சும்மாடா ஒரு ஜாலிக்கு… சரி இந்தா.. பந்தை பிடி..நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்… “

“ஏன்டா இப்ப எங்க போற… “

“வீட்டுக்கு போறேன் கார்த்தி… “

“ஏனாம் “

“தலை வலிக்குது… “

“இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த…”

“ப்ச்.. நான் வீட்டுக்கு போறேன். நீ விளையாண்டுட்டு வா.. “

“கவின் நீங்க விளையாடுங்க.. நாங்க அப்புறம் வரோம்.. “என்று அந்த சிறுவனிடம் கூறி விட்டு ஆதியை இழுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்தான்… 

“என்ன தான்டா உனக்கு பிரச்சனை.. அந்த புள்ளைய கண்டா ஓடிட்டே இருக்க.”

“லூசு மாறி உளராத… நான் ஏன் அந்த பொண்ண பார்த்து ஓடணும்.. எனக்கு தலை வலிக்குது… அதனால் நான் போறேன்.”

“நம்பிட்டேன்…. “

“நம்பாட்டி போடா.. “என்றுவிட்டு வேகமாய் அங்கிருந்து அகன்றான்… வீட்டை நோக்கி செல்லும் போது ஆரதியை தாண்டி செல்ல வேண்டி இருந்தது… அப்படி போகும் போது அவன் எதாவது பேசுவான் என்று ஆரதி காத்திருக்க அவள் புறம் திரும்பாது கடந்து சென்றுவிட்டான்… 

“ம்கூம்.. இப்படியே விட்டா சரி வராது ” என்று அவன் பின்னே ஓடினாள்…. 

“ஹலோ ஒரு நிமிஷம் நில்லுங்க…” என்று கூறிக்கொண்டே அவன் முன் மூச்சு வாங்க நின்றாள்… 

இவள் இப்படி தன் பின்னே வருவாள் என்று ஆதி எதிர்பார்க்கவில்லை… 

“என்னாச்சு… எதுக்கு நிக்க சொன்ன “

“விளையாடலையா… எதுக்கு பாதில போறீங்க… “

“இத கேக்க தான் நிக்க சொன்னியா “

“இல்ல.. ஆமா.. அது வந்து ” ‘ஹய்யோ ஊரு வாய் அடிக்கிற எனக்கு இவன் கிட்ட மட்டும் தந்தியடிக்குதே.. ‘அவள் தடுமாற்றத்தை தன்னையறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்…. 

“சரி சரி விடு… இப்ப கால் எப்படி இருக்கு “

“சரியாகிடுச்சே “என்று தன் காலை லேசாக தூக்கி அப்பிடியும் இப்படியும் ஆட்டி காமிக்க, வெண்ணிற பாதத்தில் வரிசையாய் முத்துக்கள் கோர்த்த கொலுசும் சேர்ந்து ஆடியதில் அவனும் ஆடித்தான் போனான்… இருந்தும் சமாளித்தான்… 

“சரி நான் வீட்டுக்கு போறேன்…நீ பார்த்து போ  “என்று சொல்ல அவள் முகம் வாடி போனது… 

“சரி “என்று சொல்லும் போதே அவள் குரல் உள்ளே போயிருந்தது… அதை ஏற்க முடியாதவன் “என்னாச்சு ஏன் குரல் உள்ள போயிருச்சு… “

‘என்னனு சொல்வேன் உன்னை விட்டு போக மனசில்லை.. எப்பவும் உன்கூட பேசிட்டே இருக்கனும்னு தோணுதுன்னு எப்படி என்னால சொல்ல முடியும்… ‘என்று மனதில் மட்டுமே பேசி வெளியில் தயக்கமாய் நிலம் பார்த்து நின்றாள்… 

“என்னாச்சு எதாவது பிரச்சனையா… “

‘நீதான் பிரச்சனை…’என்று கூவியது அவள் மனம்.. 

அவள் அமைதியை கண்டவன் மணம் பரிதவித்தது… அவள் நிலை கூட துல்லியமாய் புரிபடுவது போல் இருந்தது.. மனது அடித்துக்கொண்டது…. ஒரு புறம் சந்தோசம் மறு புறம் சின்ன பெண்ணின் மனதை சலன படுத்திய குற்றவுணர்ச்சி, அவளை விடவும் மனமில்லாமல் அவள் காதலை ஏற்கவும் முடியாமல் நெருப்பிற்கும் பனிக்கட்டிக்கும் நடுவில் இருக்கும் நிலை போல எதன் அருகிலும் நெருங்க முடியவில்லை… 

இறுதியில் ஒரு முடிவெடுத்தான் திடமாய்
“உங்க அம்மாச்சி எங்க இருக்காங்க.. “

“தோட்டத்துல… “

“அங்க போலாமா…. “

“ஹே சூப்பர்.. நானே கூட்டிட்டு போகணும்னு நினச்சேன்.. “என்று கண்கள் மின்ன கூறினாள்.. 

“சரி வா போலாம்.. வழி தெரியும் தானே “

“அதெல்லாம் தெரியும்… “

“சரி கார்த்தி பைக் எடுத்துட்டு வரேன் போலாம்.. “

“இல்லை நடந்தே போலாம்…காட்டு பாதை தான்…. வண்டில போனா சுத்தி போகணும்.. “

“சரி வா போகலாம்.. “என்று கூறி முன்னே நடக்க அவன் கால் தடத்தில் எட்டி எட்டி கால் வைத்து வர, அதில் அவள் கொலுசு எழுப்பிய ஒலியில் திரும்பி பார்த்தான்… 

தன் பாவாடையை இரு கையிலும் சற்று தூக்கி பிடித்து குதித்தாற் போல் வந்தவள் அவன் திரும்பி பார்த்ததை அறிந்து எப்பொழுதும் போல் நடந்து வந்து அவனை தாண்டி சென்றாள்… அவள் பின்னே தானும் அவள் பாத சுவட்டில் கால் வைத்து வந்தவன் பின்னர் அவளோடு இணைந்து நடந்தான்…. 

இருவரும் அமைதியாய் சிறிது தூரம் நடந்தனர்… அந்த அமைதியை கலைத்து அவளே பேச ஆரம்பித்தாள்.. 

“உங்க பேர் என்ன…என்ன பண்றீங்க ..எந்த ஊரு “என்றவளை வியப்பாய் பார்த்தான்.. ‘பேர் கூட தெரியாமையா லவ் பண்றா… ம்க்கும் எனக்கு மட்டும் அவ பேர் தெரியுமா என்ன.. எதுவுமே தெரியாம தான இவளை இவ்வளவு பிடிக்குது… ‘என்று தன் போக்கில் நினைத்து கொண்டிருந்தவனை கலைத்தாள். 

“என்னங்க உங்க பேர் உங்களுக்கே மறந்து போச்சா.. இவ்ளோ நேரம் யோசிக்கிறீங்க.. “

“இல்லல ஏதோ ஒரு யோசனை… என் பேர் ஆதிரன்… பிஇ செகண்ட் இயர்.. சென்னை…”

“சூப்பர்…. என் பேர் ஆரதி… பிளஸ்டூ எக்ஸாம் எழுதிருக்கேன்.. ஈரோடு… “

“ஆரதி.. நேம் நல்லா இருக்கு… “

“ஹ்ம்ம் அப்பா செலக்சன்…”

“எக்ஸாம் எப்படி எழுதிருக்க? “

“அதென்ன யார பார்த்தாலும் இதையே கேக்குறீங்க… நான் சுமாரா தான் எழுதிருக்கேன்.. பாஸ் பண்ணிடுவேன்.. “

“ஹாஹாஹா.. படிப்பு நம்ம அறிவை வளர்த்திக்க தான்…. நமக்கான தகுதி இல்லை.. சரி வேற என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும்.. “

“சாப்பாடு தான்… “என்று பட்டென சொல்ல, அவன் நன்றாக வாய் விட்டு சிரித்திருந்தான்… 

“செம்ம பதில் தெரியுமா… “என்று சொல்லி மீண்டும் அடக்க மாட்டாமல் சிரித்திருந்தான்.. 

“ம்க்கும் பாத்து.. பல்லு சுளுக்கிக்க போவுது.. ஏன் உங்களுக்கெல்லாம் சாப்பாடு பிடிக்காதா.. “

“ஏன் பிடிக்காம.. ஆனால் இப்படி புடிச்சது என்னனு யாராச்சும் கேட்டா டக்குனு சாப்பாடுன்னு சொல்லுற அளவுக்கு பிடிக்குமான்னு தெரில… சரி வேற என்னலாம் பிடிக்கும்… “

“மழை பிடிக்கும், வானவில் பிடிக்கும், மேகம் இல்லாத வானம் பிடிக்கும், ரஹ்மான் மியூசிக் பிடிக்கும் இப்படி நிறைய இருக்கு…”என்று பேசிக்கொண்டு இருந்தவள் “இருங்க ஒரு நிமிஷம் என்று வேலி ஓரம் சென்றவள் அங்கு படர்ந்திருந்த கொடியில் இருந்து சிவப்பாய் இருந்த ஒரு பழத்தையும் அதே கொடியில் இருந்த வெள்ளை நிற பூவின் அடிப்பகுதியில் இருந்த சிறிய பிஞ்சு சிலவற்றையும் பறித்து வந்தாள்… 

“ஹே என்ன இது “

“இந்தாங்க இதை சாப்பிட்டு பாருங்க” என்று சிவப்பாய் இருந்த பழத்தை தந்தாள்… 

அதை சாப்பிட்டு பார்த்தவன் “சூப்பரா இருக்கு ரதி.. என்ன பழம் இது.. “

“கோவைப்பழம்… இந்தாங்க இதையும் சாப்பிட்டு பாருங்க” என்று பிஞ்சை தந்தாள்… அதை சாப்பிட்டு பார்த்தவன் “சூப்பர் ரதி.. வெள்ளரிக்காய் மாதிரியே இருக்கு…. “

“ஆமாம்.. இங்கல்லாம் இது நிறைய கிடைக்கும்… கோவைப்பழம் சிலது சப்புன்னு இருக்கும். சிலது நல்லா இருக்கும்… “என்று அவள் மேலும் பறித்து கொண்டு வந்த பழங்களை உண்டவன், 

“நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்க.. இயற்கையோட இயல்பா வாழரீங்க.. “

“அது உண்மை தான்… இந்த இடம் சொர்க்கம் தான்.. இங்க வந்தா போக மனசு வராது… “

“எனக்கும் மனசே இல்லை.. ஆனால் என்ன பண்றது.. ஊருக்கு போயாகணுமே.. “

அவன் ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னதில் திகைத்து நின்றாள் “என்ன ஊருக்கு போகணுமா.. “

“பின்ன போக வேண்டாமா..திருவிழாவுக்கு போட்ட லீவு முடிஞ்சுது.. நாளைக்கு நைட் கிளம்பறோம்… “

“நாளைக்கேவா…. “என்ற அவள் குரல் நிச்சயம் உடைந்து போயிருந்தது.. 

அவள் குரலின் மாற்றத்தை உணர்ந்தாலும்  அமைதியாகவே வந்தான்…ஆரதியும் தோட்டம் வரை  அமைதியாகவே வந்தாள்…தோட்டத்தில் ரோஜா பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்வதை கவனித்துக் கொண்டிருந்த சிவகாமி இவர்கள் இருவரையும் பார்த்து அருகில் வந்தார்….

“வாடா தங்கம்…மொகம் ஏன் வாட்டமா கிடக்கு…ஒடம்புகிது சரியில்லையா…அதான் தம்பி தொணைக்கு வந்துருக்கா….”

“அதெல்லாம் இல்ல அம்மாச்சி…இவங்களுக்கு தோட்டத்தை காட்ட அழைச்சிட்டு வந்தேன்….”

“சரி சரி…வா கண்ணு “என்றவர் “ஓவ்வ்…இங்க வாங்க …”என்று முத்துசாமியை அழைத்தார் …

“தோ…..வரேன் இரு….”

இருவருக்கும் இளநியை வெட்டி குடுத்தார் சிவகாமி…”வாங்க தம்பி….”என்று வரவேற்றார் முத்துசாமி…

“சிவகாமி அந்த கொய்யா மரத்துல ரெண்டு காய் நல்லா திரண்டிருந்தது பாரு ..போய் பறிச்சுட்டு வந்து புள்ளைகளுக்கு குடு…நான் அந்த வாய்க்காலை கொஞ்சம் மாத்தி வுட்டுட்டு வரேன்…”என்று சொல்லிவிட்டு “இருங்க கண்ணுங்களா வந்துறேன்…”என்று அங்கிருந்து நகர்ந்தார்…

“பாட்டி நீங்க இருங்க நான் தோட்டத்தை சுத்தி பார்த்துட்டு அப்பிடியே பறிச்சுட்டு வரேன்….”

“சரி தம்பி…தங்கம் நீயும் கூட போய்ட்டு வா..”

“சரி அம்மாச்சி..”என்றவள் அவனுடன் சென்றாள்…

தோப்பின் ஊடே சிறிது தூரம் வந்தனர்…அவள் முக வாட்டத்தை பார்த்தவன் “என்ன ரதி அமைதியா வர….”

“அதெல்லாம் இல்ல….நீங்க நிஜமாவே நாளைக்கு ஊருக்கு போறீங்களா….”

“ஆமாம் ரதி ..”

“இங்கிருந்து போனா என்னை மறந்துருவீங்களா …”அவளின் வெளிப்படையான இந்த கேள்வியில் திகைத்து ,

“என்ன கேட்ட ரதி….”

என்று அவன் கேட்க சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் ,ஒரு முடிவெடுத்தாற் போல் பேச ஆரம்பித்தாள்…

“உங்களை எனக்கு பிடிச்சுருக்கு….உங்க பிரியத்தை எதிர் பார்த்து மனசு அடிச்சுக்குது…நீங்க போறேன்னு சொல்லும் போது வேண்டாம் சொல்லி அழணும்னு தோணுது..நான் என்ன செய்யனே எனக்கு தெரில “என்று சொல்லி கண்கள் கலங்கி அவன் முகம் நோக்க ,அதில் இருந்தது தான் என்ன…?”

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

காதல் துளிரே -6

அஸ்தமிக்கும் பொழுதுகள் 5